சிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை

classroom
ஆதித்யா தொலைக்காட்சியில் ஒரு வேடிக்கை நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அவர் தன்னைச் சுற்றிக் கூடியிருக்கும் கூட்டத்தில் “அரிசி எங்கிருந்து வருகிறது?” என்று கேட்கிறார். பல பேர்- சுமார் இருபத்தைந்து முப்பது வயது முதல் பதினைந்து வயதுப் பிள்ளைகள் வரை கூடியிருக்கிறார்கள்-அது தொழிற்சாலையில் செய்யப்படுகிறது, மரத்தில் காய்க்கிறது, என்பது மாதிரி பதில் சொல்கிறார்கள். (கொஞ்சம் பெரியவர்கள் ஒன்றிரண்டு பேர்தான் அது நெல்லிலிருந்து வருகிறது, நெல் பயிரிடப் படுகிறது என்ற மாதிரி சரியான பதில் சொல்கிறார்கள்.)

“பாரதியார் யார்?” என்று கேட்கிறார் நம் கேள்வியாளர். இந்தியாவின் ஜனாதி பதியாக இருந்தவர் என்று பதில் வருகிறது. நம் பிள்ளைகளின் கல்வியை அளவிட இந்த நிகழ்ச்சியை விடச் சரியான ஒரு அளவுகோல் கிடையாது. நம் கல்வி முறை பற்றித் தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்படி அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.

ஏறத்தாழ ஆறாண்டுகள் பள்ளியிலும், முப்பத்திரண்டு ஆண்டுகள் கல்லூரி யிலும், ஓரிரண்டாண்டுகள் பல்கலைக்கழகத்திலும் என்று ஆசிரியப்பணி புரிந்ததன் காரணமாக இன்றைய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வித் திட்டம் போன்றவை பற்றி நன்றாகவே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை முன்னிட்டுச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, எனது ஆசிரிய வாழ்க்கையை மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறேன்.

இன்றைய கல்வி சமூகத்துக்கோ, தனிப்பட்ட மனித வாழ்க்கைக்கோ பயன் படுவதாக இல்லை. அறமதிப்புகள், வாழ்க்கை மதிப்புகள் போன்றவை பற்றி இன்றைய கல்விக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை. மனிதர்களைப் பிழைப்புக்குப் பாடுபடும் எந்திரங்களாக மாற்றவே இது உதவி செய்கிறது.

சின்னஞ்சிறுவர்களை திருச்சியைச் சேர்ந்த கிராமப்புறப் பகுதியில் ஒரு முறை கேள்வி கேட்டேன். (கொஞ்சம் செம்மைப்படுத்தியிருக்கிறேன்)

நீ என்ன ஆக விரும்புகிறாய்?

மருத்துவர் அல்லது பொறியாளராக.

எதற்காக?

நிறையப் பணம் சம்பாதிப்பதற்காக.

நிறையப் பணம் சம்பாதித்த பிறகு?

வசதியோடு சந்தோஷமாக இருப்பதற்காக.

பிறகு?

அவ்வளவுதான். அப்புறம் என்ன?

இந்தக் கூற்றுகளில் காணப்படும் சில உள் விவகாரங்களைப் பார்ப்பது அவசியம். அதெப்படி ஒருவனுக்கே மருத்துவனாகவும் பொறியியல் துறையில் செல்லவும் ஏற்புடைமை இருக்கும்? இரண்டுமே இல்லாமல் வேறு துறையில் செல்லும் பொருத்தப்பாடும் இருக்கலாம். ஒவ்வொரு மனிதனுடைய ஆளுமையும் ஒவ்வொரு விதமானது.

தனிப்பட்ட நோக்கில் பார்த்தால், ஆளுமையை உருவாக்குவதுதான் கல்வி. சமூக நோக்கில் பார்த்தால், சமூகத்தில் அமைதியாக வாழ்வதற்கு உதவுகின்ற அறமதிப்புகளை, அன்புமயமான மனப்பான்மையைத் தரவேண்டியது கல்வி. பிழைப்புக்கு வழிசெய்வது என்பது கல்வியின் ஏதோ ஒரு கூறு மட்டுமே.

உளவியலில் மனப்பாங்குகள், திறன்கள்  பற்றி நிறையப் பேசுவார்கள். ஏன் ஒருவன் தன் மனப்பாங்கிற்கும் திறமைக்கும் ஏற்ப ஓர் ஓவியனாகவோ கலைஞனாகவோ பத்திரிகைகாரனாகவோ விவசாயியாகவோ அறிவிய லாளனாகவோ தச்சனாகவோ ஆகக் கூடாது? சில சிறுவர்களுக்குக் கைவினைகளில் திறன் இருக்கலாம். சிலருக்கு அருவமான சிந்தனைத் திறன் இருக்கலாம். சிலருக்குப் பருமையான பொருட்களைச் செய்வதில் ஆர்வம் இருக்கலாம். எல்லாவற்றையும் புறக்கணித்து மனிதர்களை வெட்டிச் செதுக்கி மருத்துவராகவோ பொறியியலாளராகவோ ஆக்குவதில் என்ன லாபம்?

இன்னும் அடிப்படையாக, எல்லாருமே பணம் சம்பாதிக்கும் வேலைகளில்(!) ஈடுபட்டுவிட்டால், உணவு எப்படி வரும்? நீர் எப்படிக் கிடைக்கும்? உணவின்றி எப்படி உயிர்வாழ முடியும்?

இவையெல்லாம் இன்றைய கல்வித்திட்டம் (curriculum என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது) பாழாகிவிட்டதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. (பாடத்திட்டம் (syllabus) என்பது வேறு. அது ஒவ்வொரு பாடத்திலும் என்ன படிக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் செயல்.)

இன்று கற்பிக்கும் முறைகள் எப்படி இருக்கின்றன?  எப்படியாவது மாணவன் 1200 மதிப்பெண்களுக்கு ஒரு 1100 மதிப்பெண்ணாவது வாங்கிவிடவேண்டும். புரிந்து கொண்டு படிக்கத் தேவையில்லை. தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடை எழுதி விட்டால போதும். அதற்கு நிறைய மனப்பாடம் செய்யவேண்டும். அதற்குப் பயிற்சி அளிக்க எத்தனையோ தனி வகுப்புகள்,  கற்பித்தல்  முறைகள். பழங்காலத்தில் பாடம் நடத்துதல், போதித்தல் (teaching) என்று சொல்வார்கள். இப்போது ‘teaching’ போய் ‘coaching’ வந்து விட்டது. ஒரு விளையாட்டு வீரனுக்கு, நடிகனுக்கு, சர்க்கஸ்காரனுக்குப் பயிற்சி அளிப்பதுபோல, பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் பிறகு கல்லூரியிலும் பல்கலைக் கழகங்களிலும் பயிற்சி (coaching).

ஒரு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் நிலையைச் சிந்தித்தால் பாவமாக இருக்கிறது. காலையில் 6 முதல் 7 வரை வேதியியலில் பயிற்சி(tuition), 7 முதல் 8 வரை இயற்பியலில், காலை எட்டு முப்பதிலிருந்து மாலை ஐந்தரை வரை பள்ளியில் ‘Coaching’. மாலை 6 மணி முதல் 8 மணிவரை கணக்கு பயிற்சி. 8 முதல் 9 வரை உயிரியலில் பயிற்சி. வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், மொழி போன்ற பிற பாடங்களைப் படிக்கத் தேவையில்லை. விளையாட்டு தேவையில்லை, உடற்பயிற்சி தேவையில்லை, உடலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டிய கல்விகள்- உணவு, சுகாதாரம் போன்றவை பற்றித் தேவையில்லை, அற மதிப்புகள் பற்றிய கல்வி தேவையில்லை.

our-education-system1
பாடத்தை நடத்துவதோ புரிந்துகொள்வதோ கிடையாது. மாதிரித் தேர்வுகள் எழுதி எழுதி என்ன கேள்வி தேர்வில் கேட்டாலும் எந்திரத்தனமாகச் சரியான விடையளிக்கும் ஒரு எந்திர மனிதனாக மாணவன் மாறிவிடவேண்டும். நிறைய மதிப்பெண் வாங்கவும் வசதியான வாழ்க்கை வாழவும் கனவு காணவேண்டும். அவற்றை வாங்கத் தயங்கினால், முடியாவிட்டால், இருக்கவே இருக்கிறது நன்மையை மட்டும் சிந்தியுங்கள்( positive thinking) -”உன்னால் முடியும் தம்பி” என்ற மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு இருக்கவே இருக்கிறார்கள் அப்துல் கலாம் முதல் நித்யானந்தா வரையிலான போதகர்கள்.

இப்படிப்பட்ட கல்வி யாருக்குப் பயன்படுகிறது? பெரிய முதலாளிகளுக்கு. அவர்கள் கொள்ளையடிப்பதற்கு. அவர்கள் தூக்கி எறியும் எச்சில்களை இந்தக் கல்வி முறையில் படித்தவர்கள் பொறுக்கித் தின்பதற்கு. உலகத்தை அழிப்பதற்கு.

இப்படிப்பட்ட கல்வியின் விளைவுதான் மனிதத்தன்மையற்ற பெரிய தலைவர்கள்- மன்மோகன் சிங்குகள் உருவாகுவதற்கு வழிசெய்கிறது. வெளிநாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் நாட்டை விலைபேசுவதற்கு இவர்கள் தயங்குவதில்லை. நம் நாட்டு மக்கள் செத்தாலும் சரி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழிவிட வேண்டும். அந்நிய முதலீடு வேண்டும். அதுதான் வளர்ச்சி. இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்ற கல்வி பெற்றதனால்தான் கூடங்குளம் போன்ற அணு உலைகளின் அபாயங்களைப் பற்றி நன்கறிந்த விஞ்ஞானியான அப்துல் கலாம் அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். வசதியான வாழ்க்கைக்கு கனவு காணச்சொல்லிச் சின்னஞ் சிறுவர்களைத் தூண்டுகிறார்.

ஆசிரியர்களும் இப்படிப்பட்ட பயனற்ற அறமதிப்புகளற்ற கல்விமுறைக்குப் பழக்கப்பட்டு விட்டார்கள். மாணவர்களுக்கு டியூஷன் நடத்திக், கொள்ளையடித்தது வரை லாபம் என்ற வியாபார மனப்பான்மைக்கு உட்பட்டுவிட்டார்கள்.

பழங்காலத்தைவிட இப்போது நன்றாகப் பாடம் நடத்தும் திறன் பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தனிப்பயிற்சி நடத்தும் வாழ்க்கை முறைக்கு ஒருவகையில் தள்ளப்படுகிறார்கள். அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் ஓரளவு ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் ஐந்தாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம், பத்தாயிரம் வரைதான் ஊதியம். வேறு வேலை கிடைக்காதவன்தான் இந்த வேலைக்கு வரமுடியும்.

தேர்வு, அதற்கு வினாத்தாள் தயாரிக்கும் முறை, திருத்தும் முறை போன்றவையும் சீர்கெட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துவதற்கு நல்ல ஊதியம் அளிக்கப்படுகிறது. ஆனால் பணி கேவலமானது. ஒரு நாளுக்கு ஒருவர் முப்பது விடைத்தாள் வரைதான் நியாயமாகத் திருத்தமுடியும். ஆனால் அரசுத்தேர்வு மையங்களிலேயே எழுபது முதல் நூறுவரை திருத்தச் சொல்லுகிறார்கள். திருத்தும் ஆசிரியர் படிக்காமலே எல்லாவற்றிற்கும் நாற்பது, நாற்பது, நாற்பது என்றே பெரும்பாலும் மதிப்பெண் அளித்துச் செல்கிறார். இந்தத் திருத்தும் நாடகத்தில்தான் நான் 1100 வாங்கினேன், நான் முதல் இடம் பெற்றேன், நான் 1150 வாங்கினேன் என்று பிரதாபம் வேறு.

அரசு பள்ளிகள் மேல் முற்றிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அரசு பள்ளிகளை விட மோசமாக நடத்தப்படுகின்ற நிறுவனங்களில் குழந்தையை சேர்ப்பதற்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று கட்டணம் தரத் தயாராக இருக்கிறார்கள். இது நமது மக்களின் மனக்கோளாறு.

கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டு விட்டது. இன்றைய கல்வியின் ‘தாதா’க்கள் (இதுதான் சரியான சொல்-இதை நாகரிகமாக கல்வித் தந்தை, தாளாளர் என்று சொல்லிக்கொள்வார்கள்) எல்லாம் கள்ளச்சாராய வியாபாரிகளாகவோ, கருப்பு சந்தைக்காரர்களாகவோ, கள்ளக்கடத்தல் ரவுடிகளாகவோ, கட்சிக்கு விலை போய் மலிவாக நிலங்களை வளைத்துப்போட்டவர்களாகவோ இருப்பவர்கள். இவர்களுக்கு உயர்ந்த மதிப்புகள் பற்றியோ உயர்ந்த வாழ்க்கை பற்றியோ ஒன்றும் தெரியாது. எப்படியாவது நிலங்களைக் கொள்ளையடித்து, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெரியபெரிய கட்டிடங்களைக் காட்டி நிறைய கேபிடேஷன் தொகை வசூல் செய்வார்கள். இதைத்தவிர அந்த கட்டணம் , இந்த கட்டணம் என்று ஏராளமாக மாணவர்களிடம் பிடுங்கிக்கொண்டு முன்கூறியபடி எந்திரங்களை  உருவாக்குவார்கள். இந்த மாணவர்களுக்கு நம் சமூக அமைப்பு, பொருளாதாரம், கிராமப்புற வாழ்க்கை முறைகள், கலாச்சாரம் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. சிறுவயதிலேயே வெளிநாட்டு கலாச்சாரத்தில் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அந்நியமானவர்கள் இவர்கள்.

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே-எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பல்கலைக்கழகம்-அந்தக்கால விலைவாசிப்படி இருபதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவப் படிப்புக்கு இடம் அளித்தது. அப்புறம் நான்காண்டுகள் அந்தப் பையன் படிப்பதே இல்லை. பயிற்சி மருத்துவர் ஆக இருக்கும் சமயத்தில் கட்டு போடவும் ஊசிபோடவும் ஸ்டெதாஸ்கோப்பில் துடிப்புப் பார்க்கவும் கற்றுக் கொண்டால் தீர்ந்தது. வெளிவந்த பிறகு, இருக்கவே இருக்கிறார்கள்-மருத்துவப் பிரதிநிதிகள்-தலைவலி முதலாக புற்று நோய் வரை என்ன மருந்துகள் கொடுப்பது என்று பட்டியலைக் காட்டி சாம்பிளும் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். பிறகு இருக்கவே இருக்கிறார்கள் பொதுமக்கள், அவர்கள் மீது மாற்றி மாற்றி மருந்துகொடுத்துச் சோதனை செய்துவிட்டால் போயிற்று. நோயாளி செத்துப்போனால், எல்லாம் கடவுள் செயல், விதி, மருத்துவர் என்ன கடவுளா-எத்தனை தப்பிப்பு சாத்தியங்கள்? அப்புறம் இருக்கவே இருக்கின்றன, இன்றோ, மருத்துவத்தை விலைபேசும் பெரிய பெரிய மருத்துவமனைகள். நீங்கள் சாதாரணத் தலைவலி என்று போனாலும் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு மருத்துவச் சோதனைகள் நடத்திவிடுவார்கள்.

நமது மருத்துவக் கல்லூரிகளில் விடுதிகளில் போய்ப்பார்த்தால் டாக்டர்கள்மீது உள்ள நம்பிக்கை முற்றிலும் போய்விடும். குடித்துவிட்டு, போதைமருந்து ஏற்றிக் கொண்டு உருண்டு கிடப்பவர்கள் சிலர். பெண்களோடு சுற்றுபவர்கள்…எல்லோருமே இப்படியா என்று தயவு செய்து உருப்படாத கேள்வி கேட்காதீர்கள். இப்படிப்பட்ட கேள்விகேட்டுத்தான் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை ஒன்றுமே செய்ய இயலாமல்போய் இன்றைக்கு ஊழல் என்றால் பதினைந்து லட்சம்கோடி, இருபத்தைந்து லட்சம் கோடி என்றுபோய் நிற்கிறது.

ஒரு ஊரில் இப்போது இருபது பொறியியல் கல்லூரி இருந்தால், நான்கு கலைக்கல்லூரிகள் இருக்கின்றன. இப்போது பி.ஏ. பொருளாதாரம், வரலாறு போன்ற படிப்புகள் காணாமல் போய்விட்டதைப்போல, எதிர்காலத்தில் கலைக் கல்லூரிகளே காணாமல் போய்விடலாம். கலைக்கல்லூரிகளும்-பெயர்தான் அப்படி-எல்லாம் கணிப்பொறித்துறையிலும் எம்.பி.ஏ. படிப்பிலும்தான் மாணவர் களை ஈர்க்கின்றன. நமது பல்கலைக்கழகங்கள், அவற்றில் அளிக்கப்படும் மேல்படிப்புகள், பிஎச்.டி. ஆராய்ச்சிகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதற்குத் தனிக்கட்டுரையே எழுதவேண்டும். அவற்றைப்பற்றிப் பிறகு பார்க்கலாம்.

இந்த மாதிரிக் கல்வி முறையில், சமூக அக்கறை, நமது கலாச்சாரத்தைப் பற்றிய அக்கறை, தாய்மொழி மீதான அக்கறை இவற்றிற்கெல்லாம் எங்கே இடம் இருக்கிறது?  ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் கம்பெனிப் பொறியியலாளருக்குச் சுற்றுச்சூழல் மாசுபாடு, உலகம் வெப்பமாதல் பற்றி ஒன்றுமே தெரியாது. அவருக்கு அது தேவையுமில்லை. போனவருடத்தைவிட இந்த வருடம் வெப்பம் கூடுதலா? வீட்டில் குளிர்சாதன போட்டுக்கொள். அவ்வளவுதான் அவருக்குத் தெரியும்.

முற்றிலும் வாழ்க்கை வணிகமயமாக்கப்பட்டு வீணாகப்போனது ஓரிரண்டு தலைமுறைகளின் வரலாறு.

சமூகம்