சுயநல அரக்கன் (சிறுகதை)

ஆஸ்கார் ஒயில்டு  –  தமிழில் க.பூரணச்சந்திரன்

garden
(சிறந்த கூர்மதியாளர். ஆஸ்கார் ஒயில்டு, டப்ளின் நகரில் 1854இல் பிறந்தார். நாவல்கள், கட்டுரைகள் முதலியன தவிர Importance of being Earnest போன்ற நாடகங்களை எழுதினார். சிறுவர்களுக்காக Happy Prince போன்ற சிறுகதைகளையும் எழுதினார். அவர் எழுதிய ஒரு சிறுகதை)

ஒவ்வொரு நாள் மாலையிலும், பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது சிறுவர்கள் அந்த அரக்கனின் தோட்டத்திற்குச் சென்று விளையாடுவது வழக்கம்.

மென்மையான பசும்புல் தரைகொண்ட பெரிய அழகான தோட்டம். ஆங்காங்கு புற்களின் மத்தியில் நட்சத்திரங்கள் போல் சிறிய பூக்கள். பன்னிரண்டு பீச் மரங்கள். வசந்த காலத்தில் இளஞ்சிவப்பிலும் முத்துநிறத்திலும் பூக்கும். இலையுதிர்காலத்தில் பழங்கள் நிறைந்திருக்கும். மரங்களில் பறவைகள் அமர்ந்து பாடுவது இனிமையாக இருக்கும். பிள்ளைகள் தங்கள் விளையாட்டையும் நிறுத்திவிட்டு அந்தப் பாட்டுகளைக் கேட்பார்கள். “ஆஹா, எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

ஒருநாள் அரக்கன் திரும்பிவந்தான். தனது நண்பனான கார்னிஷ் ராட்சஸ னைப் பார்க்கச் சென்றிருந்தான் அவன். அப்படியே ஏழாண்டுகள் அவனுடன் தங்கி விட்டான். ஏழாண்டுகளில் அவன் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டான். அவனது உரையாடுவது மிகக்குறைவு. தனது மாளிகைக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. வந்தபோது தனது தோட்டத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று சீறும் குரலில் கத்தினான். பிள்ளைகள் ஓடிப்போய்விட்டார்கள்.

“என் தோட்டம் எனக்கு மட்டும்தான்” என்றான் அரக்கன். “எல்லோருக்கும் இது புரியும். இதில் என்னைத் தவிர வேறு எவரும் விளையாட அனுமதிக்கமாட் டேன்” என்றான். அதைச் சுற்றி ஒரு உயர்ந்த சுவரை எழுப்பினான். ஒரு அறிவிப்புப் பலகையை அதில் தொங்கவிட்டான்.

அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்

மிகவும் சுயநலம்பிடித்த அரக்கன்தான் அவன்.

பிள்ளைகளுக்கு இப்போது விளையாட வேறு இடம் இல்லை. தெருக்களில் விளையாட முயற்சி செய்தார்கள். ஆனால் அவை புழுதியாகவும் கூர்கற்களோடும் இருந்தன. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. தங்கள் பாடங்கள் முடிந்தபிறகு அந்தச் சுவரைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். உள்ளேயிருக்கும் அழகான தோட்டத்தை நினைத்து ஏங்கினார்கள். “எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்” என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.

வசந்தம் வந்தது. நாடு முழுவதும் சிறிய மலர்களும் சிறிய பறவைகளும் தென் பட்டன. சுயநல அரக்கனின் தோட்டத்தில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. சிறுவர்கள் இல்லாததால் அதில் பறவைகள் சென்று பாட அக்கறைகொள்ளவில்லை. மரங்களும் பூக்க மறந்துவிட்டன. ஒருமுறை ஓர் அழகான பூ, புற்களுக்கு மத்தியிலிருந்து தலையை நீட்டியது. அறிவிப்புப் பலகையை அது பார்த்ததும் பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டு மீண்டும் தரைக்குள் தூங்கப்போய்விட்டது. கடுங்குளிரும் உறைபனியும் மட்டுமே அங்கு சந்தோஷமாக இருந்தன. “வசந்தம் இந்தத் தோட்டத்தை மறந்து போய்விட்டது. எனவே இங்கே வருஷமுழுவதும் நாம் இன்பமாக இருக்கலாம்” என்றன அவை. உறைபனி தன் பரந்த வெண்மையான போர்வையால் புற்களை மூடியது. கடுங்குளிர் எல்லா மரங்களையும் வெள்ளி நிறமாக்கியது. பிறகு அவை வாடைக்காற்றைத் தங்களோடிருக்குமாறு அழைத்தன. அதுவும் வந்தது. அது கம்பள மேலாடையை அணிந்திருந்தது. தோட்டத்தில் நாள் முழுவதும் சுற்றிக் கூச்சலிட்டது. புகைபோக்கிகளைக் கவிழ்த்தது. “மிகவும் சந்தோஷமான இடம்”. “நாம் ஆலங்கட்டி மழையையும் ஒரு சுற்று வந்துபோகச் சொல்லலாம்” என்றது. பனிக்கட்டி மழையும் வந்தது. தினசரி மாளிகையின் கூரையில் மூன்று மணிநேரம் அடிஅடி என்று அடித்தது. பெரும்பாலான பலகைகள் பெயர்ந்தே விட்டன. பிறகு அது தோட்டத்தில் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சுற்றிச்சுற்றி ஓடியது. சாம்பல் நிற உடையை அணிந்திருந்தது அது. அதன்மூச்சே பனிக்கட்டிபோல் இருந்தது.

தன் ஜன்னலருகே அமர்ந்து குளிர்ந்த வெண்ணிறத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுயநல அரக்கன், “ஏன் வசந்தம் வர இவ்வளவு காலதாமதம் ஆகிறது என்று புரியவில்லையே” என்று சொல்லிக்கொண்டான். “அன்றாடத் தட்பவெப்ப நிலையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்.”

ஆனால் வசந்தமும் வரவில்லை, கோடையும் வரவில்லை. இலையுதிர் காலம் எல்லாத் தோட்டங்களுக்கும் பொன்னிறக் கனிகளைக் கொடுத்துச் சென்றது, ஆனால் இந்தத் தோட்டத்தில் ஒன்றுமில்லை. “ரொம்பவும் சுயநலக்காரன்” என்று அது சொல்லியது. அதனால் எப்போதுமே அங்கு பனிக்காலமாக இருந்தது. வாடைக்காற்றும் ஆலங்கட்டி மழையும் வெண்பனியும் உறைபனியும் மரங்களினூடே சந்தோஷ தாண்டவம் புரிந்தன.

snow-landscapes-
ஒருநாள் காலை. அரக்கன் தன் படுக்கையில் கண்விழித்துப் படுத்திருந்தான். ஓர் இனிய இசை கேட்டது. அரசனின் சங்கீதக் குழுவினர் அந்த வழியாகச் செல்கிறார்கள் என்று நினைத்தான். கடைசியில், அவன் ஜன்னலுக்கருகில் பாடிய சிறு லின்னட் பறவைதான் அது. ஆனால் அவன் தன் தோட்டத்தில் பறவைகளின் பாடலையே கேட்டுப் பலகாலம் ஆனதால் அவனுக்கு உலகிலேயே மிகச் சிறந்த இசை அதுதான் என்று தோன்றியது. உடனே ஆலங்கட்டி மழை அங்கு நடனமிடுவதை நிறுத்தியது. வாடைக்காற்று ஓலமிடுவதை நிறுத்தியது. திறந்த ஜன்னலின் வழியே ஒரு இனிய வாசம் வந்தது. “கடைசியாக வசந்தம் வந்துவிட்டது” என்று நினைக்கிறேன் என்றான். படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து வெளியே நோக்கினான்.

அவன் கண்ணுக்குத் தென்பட்டது என்ன?

மிக ஆச்சரியமான ஒரு காட்சி. சுவரிலிருந்த ஒரு சிறிய ஓட்டையின் வழியாகச் சிறார்கள்  உள்ளே வந்துவிட்டார்கள். மரக்கிளைகளின் மீது அவர் கள் உட்கார்ந்திருந்தார்கள். காணமுடிந்த ஒவ்வொரு மரத்தின் கிளையிலும் ஒரு குழந்தை. மரங்களுக்குத் திரும்பக் குழந்தைகள் வந்தது பெரும் சந்தோஷம். அவை தங்களைப் பூக்களால் அலங்கரித்துக் கொண்டன. தங்கள் கிளைகளைக் குழந்தைகளின் தலைகளைச் சுற்றி மென்மையாக வீசின. மகிழ்ச்சியோடு பறவைகள் சுற்றிப்பறந்து கூச்சலிட்டன. புற்களின் இடையே இருந்து சிறுபூக்கள் சிரித்தன. மிக அழகான காட்சி, ஆனால் ஒரு மூலையில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. தோட்டத்தின் தொலைதூர மூலை அது. அங்கே ஒரு சிறுபையன் நின்றிருந்தான். மிகச்சிறியவனாக இருந்ததால் மரத்தின்மீது அவனால் ஏறமுடியவில்லை. அழுதுகொண்டே அதைச் சுற்றிச்சுற்றி வந்தான். பாவம், அந்த மரத்தில் மட்டும் வெண்பனியும் உறைபனியும் தங்கியிருந்தன. வாடைக்காற்று அதைச் சுற்றி வீசி ஓலமிட்டது. “சின்னப் பையா, ஏறு” என்றது மரம். தன்னால் இயன்ற அளவு கிளைகளைத் தாழ்த்தியது. ஆனால் பையன் மிகச் சின்னவன்.

அதைப் பார்த்து அரக்கனின் உள்ளம் நெகிழ்ந்தது. “எவ்வளவு சுயநலத்தோடு இருந்துவிட்டேன்” என்றான். “ஏன் இங்கே வசந்தம் வரவில்லை என்று இப்போது புரிகிறது. அந்தப் பையனை மரத்தில் அமர்த்துவேன். சுவரை இடித்துத் தள்ளுவேன். இந்தத் தோட்டம் என்றைக்கும் என்றைக்குமாகப் பிள்ளைகளின் விளையாட்டுக் களமாக இருக்கும்.” தான் செய்ததற்கு உண்மையிலேயே மனம் வருந்தினான் அவன்.

கீழே இறங்கிவந்து மிக மெதுவாகக் கதவைத் திறந்து தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் அவனைப் பார்த்ததும் சிறுவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். மீண்டும் தோட்டத்தில் வாடைக்காலம்தான். அந்தச் சின்னஞ் சிறுவன் மட்டுமே ஓடவில்லை. அவன் கண்களில் நீர்நிறைந்து பார்வையை மறைத்திருந்தது. மெதுவாக அவன் பின்னால் சென்ற அரக்கன் கையில் மென்மையாக அவனைத் தூக்கி ஒரு கிளையில் அமரவைத்தான். மரம் உடனே பூத்துக்குலுங்கியது. பறவைகள் அதில் அமர்ந்து பாடின. சிறுவன் தன் இருகைகளையும் அரக்கனின் கழுத்தைச்சுற்றி வீசிக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான். அரக்கன் முன்போல் இல்லாததைக் கண்ட பிற சிறார்களும் திரும்ப ஓடிவந்தார்கள். அவர்களுடன் வசந்தமும் வந்தது. “சின்னப் பசங் களே, இனிமேல் இது உங்கள் தோட்டம்” என்றான் அரக்கன். பெரிய கடப்பாறை எடுத்துச் சுவரை இடித்துத் தள்ளினான். பகல் பன்னிரண்டு மணிக்கும், மக்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லும்போது, மிக அழகான தோட்டத்தில் அரக்கன் சிறுவர் களோடு விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.

நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடினார்கள். இருட்டும் நேரத்தில் அரக்கனிடம் விடைசொல்லிக்கொண்டுபோகச் சிறுவர்கள் வந்தார்கள்.

“உங்கள் சின்னஞ்சிறு தோழன் எங்கே? நான் மரத்தில் ஏற்றி உட்கார வைத்தேனே, அவன்” தன்னை முத்தமிட்டதால் அந்தச் சிறுவனை அரக்கனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

“எங்களுக்குத் தெரியாது” என்றார்கள் அவர்கள். “அவன் போய்விட்டிருப்பான்.”

“நாளைக்கு நிச்சயமாக அவனை வரச் சொன்னேன் என்று சொல்லுங்கள்” என்றான் அரக்கன். ஆனால் பிள்ளைகளுக்கு அவன் எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. அவனை இதற்குமுன்னால் பார்த்ததும் கிடையாது. அரக்கனுக்கு வருத்தமாக இருந்தது.

ஒவ்வொரு மாலையும், பள்ளிக்கூடம் விட்டபிறகு, பிள்ளைகள் வந்து அரக்கனோடு விளையாடினார்கள். ஆனால் அரக்கன் நேசித்த அந்தச் சின்னஞ்சிறு வன் வரவேயில்லை. எல்லாச் சிறுவர்களுடனும் அரக்கன் மிக அன்பாக இருந்தான். என்றாலும் தன் முதல் தோழனுக்காக அவன் ஏங்கினான். அவனைப்பற்றி அடிக்கடி பேசினான். “அவனைப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கூறிவந்தான்.

ஆண்டுகள் சென்றன. அரக்கனுக்குத் தள்ளாமல் போய்விட்டது. வலிமை குறைந்துவிட்டது. சுற்றிவிளையாட முடியவில்லை. பெரிய சாய்வுநாற்காலியில் அமர்ந்து சிறார்கள் தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். தனது தோட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டான். “என்னைச்சுற்றி அழகான பூக்கள் பல இருக்கின்றன. ஆனால் சிறுவர்கள்தான் மிக அழகான பூக்கள்.”

ஒரு பனிக்காலத்தில் காலை எழுந்து உடை உடுத்திக்கொண்டிருந்தபோது ஜன்னனலின் வழியே பார்த்தான். இப்போது அவனுக்குப் பனிக்காலம் என்றால் வெறுப்பு இல்லை. வசந்தம் ஓய்வெடுக்கும் காலம் அது, அவ்வளவுதான். பூக்களும் ஓய்வெடுக்கின்றன.

திடீரெனக் கண்களைத் தேய்த்துக்கொண்டு பார்த்தான், மறுபடி பார்த்தான். மிக ஆச்சரியகரமான காட்சிதான் அது. தூரத்து மூலையில் தோட்டத்தில் ஒரு மரம் மட்டும் பூத்துக்குலுங்கியது. அதன் கிளைகள் பொன்னிறம். வெண்நிறப் பழங்கள் அவற்றிலிருந்து தொங்கின. அவன் நேசித்த சின்னஞ்சிறுவன் அதன்கீழ் நின்றுகொண்டிருந்தான்.

பெரும் சந்தோஷம் கவிய, அரக்கன் படிகளில் இறங்கி தோட்டத்திற்குள் புல்தரையில் விரைந்து ஓடினான். சிறுவன் அருகில் சென்றான். மிகநெருக்கத்தில் வந்ததும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது. “உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” குழந்தையின் இரண்டு கைகளிலும் ஆணிகள் குத்திய காயங்கள். அதேபோல் இரு பாதங்களிலும்.

“உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” கத்தினான் அரக்கன். “சொல். என் பெரிய வாளை எடுத்துச் சென்று அவனைக் கொன்றுபோடுகிறேன்.”

“இல்லை” என்றான் குழந்தை. “இவை அன்பின் காயங்கள்.”

“யார் நீ?” என்றான் அரக்கன். ஒரு விசித்திரமான பயம் அவனுக்குள் ஏற்பட்டது. குழந்தையின் முன்னால் மண்டியிட்டான்.

சிறுவன் அரக்கனைப் பார்த்து முறுவல் செய்தான். “ஒருசமயம் உன் தோட்டத்தில் என்னை விளையாட அனுமதித்தாய் நீ. இப்போது என்னுடன் என் தோட்டத்திற்கு- விண்ணுலகிற்கு நீ வா” என்றான்.

மாலையில் சிறுவர்கள் விளையாடத் தோட்டத்திற்குள் ஓடிவந்தபோது, அரக்க னின் உடல் அந்த மரத்தடியில் வெண்ணிறப் பூக்களின் போர்வையில் கிடப்பதைப் பார்த்தார்கள்.

மொழிபெயர்த்த_சிறுகதை