தமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை

தமிழகம் என்றைக்குமே பொதுவாக வறண்ட நாடாகத்தான் இருந்துவந்துள்ளது. சங்ககாலம் தொட்டு நமது அரசர்கள் ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், கல்லணைகள் போன்ற அணைகள் ஆகியவற்றைக் கட்டிப் பராமரித்ததன் காரணம் இதுதான். ஆனால் இன்றைய நிலை என்ன?

தமிழ்நாட்டில் விவசாய நீர்த்தேவை ஏறத்தாழ 1500 டிஎம்சி என்றும் தொழிற்சாலைகளின் நீர்த்தேவை 200 டிஎம்சி என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் காவிரியிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீர் சட்டப்படி 192 டிஎம்சி. (சுமார் 200 டிஎம்சி) மீதி 1500 டிஎம்சி நீரை நாம்தான் சமாளித்தாக வேண்டும்!

தமிழகத்தில் சராசரி மழைப் பொழிவு 100 செ.மீ. இது 4343 டிஎம்சி நீருக்குச் சமம். (இந்த ஆண்டு வேண்டுமானால் குறைவு).
இதைக் காப்பாற்ற நாம் என்ன செய்தோம்? தமிழகத்தின் மொத்தத் தேவையே இதில் மூன்றில் ஒரு பங்குதானே?

தமிழக அரசு ஏரிகள் குளங்களைப் பராமரிப்பதில் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை. இதைத்தான் இன்றைய பாஜக நமக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

இன்று தமிழக ஏரிகுளங்களின் நிலை நமக்கு நன்றாகவே தெரியும். பெரும்பாலும் வீட்டுமனைகள், தொழிற்சாலைக்கான இடங்கள் என ஏரிகள் மாற்றப்பட்டன. குளங்கள் வெறும் குப்பைத்தொட்டிக்ளாக மாற்றப்பட்டுத் தூர்ந்து போயிருக்கின்றன. ஆற்றுமணல் திட்டமிட்ட கொள்ளைக்குள்ளாகி ஆறுகள் கட்டாந்தரைக ளாக்கப்பட்டன.

ஆறுகளின் நிலையோ சொல்லத் தரமில்லை. காவிரிக்கு நீர் வரத்து அறவே இல்லாமல் போயிற்று. வைகை வறண்டு போனது.
பாலாறு தோல்கழிவுகளின் புகலிடமானது.
நொய்யலாறு சாயக்குட்டையாக மாறியது.
தாமிரபரணியின் நீர் தனியார் கொள்ளைக்கு அரசினால் விடப்பட்டது.
நியூட்ரினோ திட்டத்திற்குப் பெரியாற்றிலிருந்து தனம் 12 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது.

இதற்கெல்லாம் யார் காரணம்? நமது தமிழக அரசுதானே? இந்த நீர்வளங்களைக் காப்பாற்றாமல் அம்மா குடிநீர் விற்பனை ஜோராக நடக்கிறது.
இதற்கிடையில் நமது நிலவளத்தை மீத்தேன் திட்டம் போன்றவை கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளன. பெப்சி கம்பெனிக்கு 1லி பத்துபைசாவுக்கு விற்பனை செய்யும் தமிழக அரசு விவசாயிகள் பிரச்சினையைக் கண்டுகொள்வதில்லை. அவர்களைச் சந்தித்துப் பேசுவதும் இல்லை. நீர்ப்பாசனத்துக்கு வேண்டி அவர்களுக்கு எவ்வித உதவிகளும் செய்வதில்லை.

மாறாக உலகவங்கியின் திட்டப்படி, பாசனம் பெறும் விவசாயி ஒரு ஹெக்டேருக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தி நீரைப் பெறும் விதமாக Farmers’ Management Irrigation System Act என்பதைத் தமிழக அரசு கொண்டுவர இருக்கிறது.

இந்த நிலையில் நாம் என்ன செய்யப்போகிறோம்? நண்பர்களே, சிந்தியுங்கள். தக்க நடவடிக்கைக்கு ஆவன செய்யுங்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் எந்த ஒரு தேவைக்கும் தமிழகம் நீரின்றி முற்றிலும் பாலைவனமாகும் அபாயம் இருக்கிறது. இதைத் தவிர்ப்பதும் நமது கையில்தான் இருக்கிறது.

சமூகம்