தமிழில் அற இலக்கியங்கள்

tamilil-ara-ilakkiyam1“நீதிநூல் பயில்” என்றார் பாரதியார், தமது ஆத்திசூடியில். “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா. பழங்கால முதலாகவே இந்தியச் சிந்தனையில் புருஷார்த்தங்களாவது பொருட்பேறுகள் என்ற கருத்து உண்டு. மனிதன் வாழ்க்கையில் அடைய வேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் என்பது இதன் கருத்து. இப் புருஷார்த்தங்களே இறுதி இலக்குகள் (ends). இவற்றை அடையப் பிற யாவும் கருவிகள் (means). எனவே இலக்கியங்களும் இந்த நான்கையும் அடைய உதவும் கருவிகளே ஆகும்.

தமிழ்ச் சிந்தனைக்கும் இந்தியப் பொதுச்சிந்தனைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. இந்தியச் சிந்தனை மரபின்படி அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கும் அடையவேண்டியவை. தமிழ்ச் சிந்தனை மரபில் தொல்காப்பியர் காலந்தொட்டே அறம் பொருள் இன்பம் என்ற கருத்து மட்டுமே உண்டு. வீடு பற்றிய கருத்து கிடையாது. அறம் பொருள் இன்பம் என்று நிலைபெற்ற மூன்றினுள், நடுவணது (நடுவிலுள்ளது-அதாவது பொருள்) எய்த இருதலையும் (அதாவது அறம், இன்பம் ஆகிய இரண்டும்) எய்தும் என்பது நாலடியார். ஆயினும் பிற இந்திய மொழிகள் எல்லாவற்றையும்விட, தமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. இதனை ஜி. யூ. போப் போன்ற பிறநாட்டு அறிஞர்களும் கண்டறிந்து பாராட்டியுள்ளனர்.

உண்மையில், தமிழ் இலக்கியம் முழுவதுமே அற இலக்கியம்தான். சங்க இலக்கியம், காப்பியங்கள், அறநூல்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தாலும், அவை யாவற்றின் அடிச்சரடும் அறம் என்பதே. சான்றாக, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டாகக் கபிலர் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: சமஸ்கிருத மரபில் எண்வகை மணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் யாழோர் மணமாகிய காந்தர்வத்தை ஒத்தது தமிழர்களின் களவு. ஆனால் இரண்டிற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. சமஸ்கிருத மணமாகிய காந்தர்வத்தில், கற்பு வாழ்க்கை என்பது இல்லை. ஆசையிருக்கும் வரை சிலநாள் கூடியிருந்து பிரிந்துவிடும் வாழ்க்கை அது. அங்கே திருமணம், கற்பு வாழ்க்கை என்பது இல்லை. ஆனால் தமிழின் களவு மணமோ முறைப்படி, கற்பாகிய திருமண வாழ்க்கையிலே நிறைவெய்த வேண்டும் என்கிறார். இதனை உணர்த்துவதற்காகவே குறிஞ்சிப்பாட்டு என்ற அற்புதமான இலக்கியம் அவரால் படைக்கப்பட்டது. எனவே சங்க இலக்கியங்களும் அறம் உணர்த்துவனவே என்பதை நம்மால் காணமுடிகிறது.

காப்பியங்களும் இவ்வாறே அமைந்திருக்கின்றன. அரசியலில் தவறு செய்தவர்களுக்கு அறமே கூற்றாகும் (எமனாக அமையும்), கற்பிற் சிறந்த பெண்களைப் பலரும் போற்றி வணங்குவர், ஊழ்வினை தவறாமல் தனது பலனை அளிக்கும் என்ற மூன்று அறக்கருத்துகளை உணர்த்தவே இயற்றப்பட்டது சிலப்பதிகாரம் என்று அதன் பாயிரம் கூறுகிறது. அறம் வெல்லும்-பாவம் தோற்கும் என்ற அடிப்படைக் கருத்தினை உடையது கம்பர் எழுதிய இராமாயணம். இவ்வாறு நுணுகி நோக்கும்போது தமிழ் இலக்கியங்கள் யாவுமே அற இலக்கியங்கள் என்பதை நாம் உணரலாம்.

image descriptionஇன்றைய தமிழ்நாட்டிலும், சென்னைக் கடற்கரையில் சிலப்பதிகாரக் கற்பிற்கு எடுத்துக்காட்டான கண்ணகி சிலை அமைந்திருக்க, குமரிமுனையிலே நம் தலைசிறந்த அறநூலின் ஆசிரியரான வள்ளுவரின் சிலை அமைந்துள்ளது. ஆனால் நிகழும் நிகழ்வுகள்தான் தமிழ்நாடு அறத்தை இன்று அடியோடு மறந்து விட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

எல்லா இலக்கியங்களுமே அறநூல்கள் என்று கூறப்படும் தன்மை வாய்ந்தவை என்றால் சில நூல்களை மட்டும் அற இலக்கியங்கள் என்று கூறுவதற்குக் காரணம் என்ன? காரணம், இவை பிற நூல்களைப் போலன்றி, பெரியோர் தமது இளையோர்க்குக் கூறுவன போல, இதைச் செய், இதைச் செய்யாதே என்று நேராகவே அறிவுரை கூறும் முறையில் அமைந்துள்ளன.

அறநூல்களைச் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துப் பாராட்டுவது தமிழின் மரபு. ஆங்கிலம் முதலிய பிறமொழிகளில் அறநூல்கள் இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. இலக்கியம் என்பது மானிட அனுபவங்களை உரைப்பதாக இருக்கவேண்டும், வெறுமனே போதனை செய்வதாக இருக்கலாகாது என்பது இதற்குக் காரணம். சொல்லுதல் யார்க்கும் எளியவாம், அரியவாம் சொல்லியவண்ணம் செயல் என்று வள்ளுவரே கூறியதுபோல, போதனை செய்வது சுலபம், வாழ்ந்து காட்டுவது கடினம். வாழும்போது வரும் சோதனைகளையும் அவற்றை வென்ற சாதனைகளையும் காட்டுவதாக இலக்கியம் அமைய வேண்டும். இது ஐரோப்பிய மரபு. இந்திய மரபு இதிலிருந்து வேறுபட்டது. நாம் ஐரோப்பிய மரபினை ஏற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

போதித்தல் என்ற செயலே, உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்ற வேறுபாட்டினைக் காட்டுகிறது. உயர்ந்தோர்தானே போதிக்கமுடியும்? தாழ்ந்தோர் பிறருக்கு போதிக்க இயலாது. இவ்வாறு சமூகத்தை இரண்டாகப் பிரித்துக்காட்டுவதாலும், அற நூல்கள் மேற்கத்திய மரபில் இலக்கியமாக ஏற்கப்படுவதில்லை. கொள்கை அளவிலேனும் ஐரோப்பிய மரபு ஜனநாயக மரபு.

மேலும் அறங்களையும் நீதிகளையும் போதிக்கும் தேவை எப்போது எழுகிறது? அவை சீர்கெட்டிருப்பதனால்தானே? இப்படி நோக்கும்போது நாம் அறநூல்களைப் பற்றிப் பெருமைப்படக் காரணம் இல்லை.

தமிழில் உள்ள அற நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம்.

1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே காணப்படுகின்ற அறநூல்கள். இவை எண்ணிக்கையில் பதினொன்று. இவற்றில் திருக்குறளும் அடங்கும்.

2. பிற்கால அறநூல்கள். இவற்றுள், பிற்கால ஒளவையார், சிவப்பிரகாசர், குமர குருபரர் போன்றோர் எழுதிய அறநூல்கள் அடங்கும்.

கீழ்க்கணக்கு நூல்கள் அடிநிமிர்பில்லாத-அதாவது நீண்டு செல்லாத-வெண்பா என்ற யாப்பில் பெரும்பாலும் அமைந்துள்ளன. அடிநிமிர்ந்த-அதாவது நீண்டு செல்லக்கூடிய செய்யுள்கள், ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என்பவை. அவற்றால் ஆன நூல்கள் மேற்கணக்கு எனப்பட்டன.

முன்னரே கூறியபடி கீழ்க்கணக்கின் பதினொரு அறநூல்கள் இவை-நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி. இவற்றுள், அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளையும் கூறும் நூல்கள் திருக்குறள், நாலடியார் இரண்டு மட்டுமே. அதனால் இவையிரண்டும் பழங்கால முதலாகவே பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளன. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி போன்ற பழமொழிகளை நினைக்கலாம்.

வெறுமனே அனுபவங்களை எடுத்துரைத்தல் மட்டும் இலக்கியத்தின் பணி அல்ல. இதைவிட வேறொரு முறையில் சொல்லவே இயலாது என்ற நிலையில் மொழியைத் தனித்தன்மையோடு கையாளுதலும், சுருங்க உரைத்தலும், பொன் மொழிபோல நினைவிற் கொள்ளுமாறு உரைத்தலும் இலக்கியத்திற்குரிய பண்புகளே ஆகும். இவ்வகையில், மிகுந்த தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்த இலக்கியம் திருக்குறள். அதைப் பிற நீதிநூல்களோடு ஒப்பவைத்து நோக்க முடியாது. இதனைப் புரிந்துகொள்ளாமையால், ஐரோப்பிய மரபில் கல்வி கற்ற கமில் சுவலபில் போன்ற அறிஞர்களும், திருக்குறள் இலக்கியமாகுமா என்ற கேள்வியை எழுப்பினர். இன்று மொழிபெயர்ப்பில் திருக்குறளைப் பயிலும் இந்தியாவின் பிறமொழிக்காரர்களும், இத்தகைய கேள்வியை எழுப்புவதைக் கண்டிருக்கிறேன். இலக்கியத் தன்மைகள் பலவும் மொழிபெயர்ப்பில் காணாமற் போய்விடுகின்றன என்பதும் இதற்கு ஒரு காரணம்.

tamilil-ara-ilakkiyam4இலக்கியத்திற்குரிய பண்புகளாக இழுவிசை, பல்பொருள் தன்மை, சிற்பம் போல செதுக்கி அமைத்தல் என எத்தனையோ பண்புகளை அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் எடுத்துக்காட்டியுள்ளனர். அப்பண்புகள் யாவும் திருக்குறளில் அமைந்திருப்பதைக் காணலாம். ஆகவே நீதிநூல்கள் இலக்கியமல்ல எனக்கூறும் அதே ஐரோப்பிய-அமெரிக்க அளவுகோல்களைக் கொண்டே திருக்குறள் ஒரு சிறந்த இலக்கியம் என்ற முடிவுக்கும் வர இயலும்.

சங்ககாலத்திற்குப் பிந்திய சங்கமருவிய காலத்தில் திருக்குறளும் பிற பத்து அற நூல்களும் இயற்றப்பட்டிருக்கலாம். எனவே இக்காலத்தை அறநூல்களின் காலம் என்றே பலரும் பகுத்துள்ளனர். இதனை வரலாற்றில் களப்பிரர் காலம் என்பர்.

திருக்குறள் மூன்று பால்களைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவர். அறத்துப்பாலில் 380 குறள்களும், பொருட்பாலில் 700 குறள்களும், காமத்துப்பாலில் 250 குறள்களும் உள்ளன. எனவே நாலடியார் கூறுவதுபோல, நடுவணது (பொருள்-700 பாக்கள்) எய்த இருதலையும் (அறம், இன்பம்-630 பாக்கள்) எய்தும் என்று வள்ளுவரும் ஒருவேளை கருதியிருக்கலாம்!

tamilil-ara-ilakkiyam3திருக்குறள் ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. இலத்தீன் மொழியில் வீரமாமுனிவர், டாக்டர் கிரால் இருவரும் பெயர்த்தனர். ஜெர்மன், ஃபிரெஞ்சு மொழிகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்புகள் உண்டு. ஆங்கிலத்தில் ஜி.யு. போப், கிண்டர்ஸ்லி, எல்லிஸ், ட்ரூ, கோவர், ராபின்சன், லாசரஸ், ஸ்காட், பாப்லி போன்ற ஐரோப்பியர் பலரும், ராஜாஜி, வ.வே.சு. ஐயர் போன்ற தமிழர் பலரும் மொழிபெயர்த்துள்ளனர். இந்திய மொழிகளில் அநேகமாகத் திருக்குறள் பெயர்க்கப்பட்டுவிட்டது. (அவை சிறந்த மொழிபெயர்ப்புகளா என்பது வேறு கேள்வி.)

திருக்குறளுக்கு எழுந்துள்ள புகழுரைகளைச் சொல்லத் தேவையில்லை. திருக்குறளுக்குப் பழைய உரைகள் ஐந்து கிடைக்கின்றன. பிற்கால உரைகளுக்குக் கணக்கே இல்லை. இன்றைய ஜனரஞ்சக எழுத்தாளர் சுஜாதா, பட்டிமன்றப் பேராசிரியர் பாப்பையா வரை குறளுக்கு உரை எழுத முயலாதவர்களே இல்லை. இன்றைய உரைகளே இருநூறுக்கு மேலிருக்கும் என்றால், அதன் இலக் கியப் பெருமையை விளக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள் ளன. வள்ளுவனால் வான்புகழ் கொண்டது தமிழகம் என்று மட்டும் கூறிப் பிற நூல்களுக்குச் செல்லலாம்.

சமண முனிவர் பலர் இயற்றிய வெண்பாக்களுள் 400 வெண்பாக்களை மட்டும் பதுமனார் என்பவர் தேர்ந்தெடுத்து அவற்றை நாலடியார் என்னும் நூலாகத் தொகுத்தார். 40 அதிகாரங்கள் கொண்டது இந்நூல். எனினும் திருக்குறளின் பெருமைக்கு இது ஒப்பாகாது. துறவறத்தை மட்டும் போற்றி, பிற ஒழுக்கங்களை இழித்துரைக்கிறது இந்நூல். என்றாலும், இந்நூலின் உவமைகள் சங்க காலத்து உவமைகளைப் போலச் சிறப்புடையனவாகவும், பொருளைத் தெளிவாகப் புலப்படுத்துவனவாகவும் உள்ளன. செய்யுட்களும், படிப்போர் உள்ளத்தில் நன்கு கருத்துப் பதியுமாறு சுருங்கிய சொற்களிலே தெளிவாகக் கூறுகின்றன. நாலடியார் செய்யுட்கள் எவ்வாறிருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் காண்போம்.

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்

எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

கல்வியின் சிறப்பை விளக்குவதாக அமைந்த இச்செய்யுளில் உவமையோ பிற இலக்கியச் சிறப்புகளோ அமையாவிட்டாலும், கூறுவதைச் செறிவாக, சிறப்பாகச் சொல்லும் தன்மை அமைந்திருப்பதைக் காணலாம்.

பிற ஒன்பது அறநூல்களும் மக்கள் நல்வாழ்வுக்கு உதவக்கூடிய ஒழுக்க நெறிகளையும் ஆசாரங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முன்பே கூறியதுபோல, அக்கால்ச சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய தேவை இருந்ததனால் போலும், புலவர்கள் இந்நூல்களை இயற்றினர்.

ilakkiyam1திருக்குறள், நாலடியாருக்குப் பிறகு மூன்றாவதாக வைக்கக்கூடிய அற நூல் பழமொழி என்பது. நானூறு வெண்பாக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வெண்பாவிலும் ஒரு பழமொழி அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் முன்றுறை அரையனார் என்பவர். தம் காலத்தில் வழங்கிய பழமொழிகளைக் கருவியாகக் கொண்டு தமது அனுபவங்களைப் புலப்படுத்தியிருக்கும் வகையினை நோக்கும்போது அவர் ஒரு பெரும்புலவர் என்பது தெரிகிறது. இந் நூலின் பழமொழிகளின் உதவிகொண்டு, இந்நூல் எழுந்த காலத்தில் தமிழ் நாட்டின் பண்பாட்டு நிலையினை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். இந்நூல் செய்யுள்களுக்கு உதாரணமாக ஒன்றைக் காணலாம்.

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதை தன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய்

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலும் தன் வாயால் கெடும்.

தவளையும் தன் வாயாலே கெடும் என்ற பழமொழி இங்கு அமைந்துள்ளது.

அறநூல்கள் எழுந்த சங்கமருவிய காலத்தில் தமிழிலக்கியத்தில் வடமொழியின் சாயல் மிகுதியாகப் படியத் தொடங்கியது. இதனைப் பிற அற நூல்கள் காட்டுகின்றன. மேற்கண்ட மூன்று அறநூல்களுக்கும் பிற அற நூல்கள் இணையாக மாட்டா என்பதில் ஐயமில்லை.

இவற்றினுள், ஆசாரக்கோவை என்னும் நூலை எழுதியவர் பெருவாயின் முள்ளியார் என்பவர். ஆசாரம் என்பது ஒழுக்கம். ஒழுக்கங்களைத் தொகுத்துக் கூறும் நூல் என்பது இதற்குப் பொருள். இவர் கூறும் ஆசாரங்கள் பல வடமொழி மரபைத் தழுவியவையாகவும், இன்றைக்குப் பொருந்தாதவையாகவும் உள்ளன.

அறநூல்-நீதிநூல் என்ற வேறுபாடு இங்குதான் எழுகிறது. அறங்கள் எல்லாக் காலத்திற்கும் உலகினர் யாவர்க்கும் பொதுவாகப் பொருந்தும் கருத்துகளைக் கூறுபவை. நீதிநூல்கள் சிலர் பின்பற்றவேண்டிய அந்தந்தக்கால, இட ஒழுக்கங்களைக் கூறுகின்றன. சான்றாக, மக்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்பது அறக்கருத்து. ஆனால் காலை ஐந்து மணிக்குத்தான் எழவேண்டும் என்பதோ கிழக்கில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்பதோ அறக்கருத்து அல்ல, சிலருக்குரிய ஒழுக்கம்-அதாவது நடத்தைமுறை.

பதினெண்கீழ்க்கணக்குக் காலப்பகுதிக்குப் பின் தோன்றிய நூல்களை அற நூல்கள் என்பதில்லை. நீதிநூல்கள் என்பதே வழக்கு.

பிற்காலத்தில் வாழ்ந்த ஒளவையார் ஒருவரோ, அப்பெயருடைய சிலரோ, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இவை 1950கள் வரை சிறுவர்க்குத் தொடக்கத்தில் சொல்லித் தரப்படுபவையாக அமைந்திருந்தன.

ஆத்திசூடி என்ற நூல், நூலின் முதல் தொடரால் பெயர்பெற்றது. “ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” என்பது அத்தொடர். ஆத்திசூடி என்றால் ஆத்தி மாலையைச் சூடிய சிவபெருமான் என்பது பொருள். தனித்தனி ஒற்றை அடிகளாக அமைந்த 109 பாட்டுகள் இதில் உள்ளன. அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல் எனப் பெரும்பாலும் அகரவரிசைப்படி இவ் ஓரடிச் செய்யுள்கள் அமைந்துள்ளன. இந்நூல் பெற்ற பெருவரவேற்பால் பிற்காலப்புலவர்கள் பலரும் அவரவர் பாணியில் புதிய ஆத்திசூடிகளை இயற்றியுள்ளனர். குறிப்பாக, பாரதியாரும், பாரதிதாசனும் இயற்றிய புதிய ஆத்திசூடிகள் புகழ்பெற்றவை.

கொன்றைவேந்தன் என்ற நூலும் முதல் தொடரால் பெயர்பெற்ற நூலே. “கொன்றைவேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” என்பது இதன் முதல் செய்யுள். கொன்றை வேய்ந்தவன் என்ற தொடர் கொன்றை வேந்தன் ஆகிறது. சிவபெருமானைக் குறிக்கும். இந்நூலிலும் 91 ஓரடிப்பாக்கள் உள்ளன. சந்தத்தோடு சிறுவர் சிறுமியர் தமிழையும் ஒழுக்கத்தையும் கற்பதற்கு உகந்த நூல் இது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

இல்லறம் அல்லது நல்லறம் அன்று

என இப்பாக்கள் செல்கின்றன. திருக்குறளின் பிரதிபலிப்பாக அதிகமும் இவ் ஓரடிச் செய்யுட்கள் அமைந்துள்ளன.

மூதுரை என்ற நூலின் பிரபலமான பெயர், வாக்குண்டாம் என்பது. இதுவும் முதற்செய்யுளான “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” எனத் தொடங்கும் பிள்ளையார் வாழ்த்தின் முதல்தொடரைக் கொண்டு அமைந்தது. இதில் 91 வெண்பாக்கள் உள்ளன.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.

என்பது இதில் ஒரு செய்யுள். அதாவது குளத்தில் நீர் அற்றவுடனே பறந்துபோய் விடுகின்றனவே, அப்படிப்பட்ட பறவைகள் போன்றவர்கள் உறவினர் ஆகமாட்டார்கள். நீர் அற்றாலும் அந்தக் குளத்திலேயே இருக்கின்றனவே, கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற தாவரங்கள், அப்படிப்பட்டவர்கள்தான் நல்ல உறவினர்கள்.

நல்வழியில் கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்கள் உள்ளன.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந்திடப் பறந்துபோம்.

என்பது இதிலுள்ள ஒரு செய்யுள். பசிவந்தால் மேற்கண்ட பத்தும் இருக்காதாம்!

அருங்கலச் செப்பு என்ற நூல் சமணர் ஒருவரால் இயற்றப்பட்டது எனத் தெரிகிறது. இதில் அருகன் துதி உட்பட 182 குறள் வெண்பாக்கள் உள்ளன. இதுவும் நல்லதோர் அறநூலாகும்.

மெய்ப்பொருள் காட்டி, உயிர்கட்கு அரணாகித்

துக்கம் கெடுப்பது நூல்

என்பது இதிலுள்ள ஓர் குறட்பா. ஒரு நல்ல நூல் என்பது மெய்ப்பொருளை விளக்குவதாகவும், உயிர்களுக்கு உறுதிப் பொருளை உணர்த்துவதாகவும், துக்கத்தைக் கெடுப்பதாகவும் அமையவேண்டும் என்பது கருத்து.

அறநெறிச்சாரம் என்பது முனைப்பாடியார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் மொத்தம் 266 வெண்பாக்கள்.

பலகற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு

அச்சாணி அன்னதோர் சொல்.

என்பது இதிலுள்ள ஒரு செய்யுள்.

பதினாறாம் நூற்றாண்டில் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அதிவீரராம பாண்டியர், வெற்றிவேற்கை என்னும் நூலை எழுதினார். இதற்கு நறுந்தொகை என்றும் பெயர். இதில் ஓரடி அறிவுரைகளாக 82 உள்ளன.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

கல்விக்கழகு கசடற மொழிதல்

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்

போன்ற நல்ல அறிவுரைகள் இதில் உள்ளன. சில அறிவுரைகள் இரண்டு அடிகளாகவும் அமைந்துள்ளன. சான்றாக,

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும

அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.

பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

மெய்போலும்மே, மெய்போலும்மே.

உயர்ந்த அறிவுரைகள் அடங்கிய நூல் இது.

காசிக்குச் சென்று மடம் அமைத்துத் தமிழ்பரப்பிய குமரகுருபரர் இயற்றிய நூல் நீதிநெறி விளக்கம் ஆகும். கடவுள் வாழ்த்து உட்பட 101 வெண்பாக்கள் இதில் உள்ளன.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்.

என்பது இதிலுள்ள நன்கு அறியப்பட்ட செய்யுள்.

 வீரசைவத் துறவியான சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நூல் நன்னெறி. கடவுள் வாழ்த்துடன் 41 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

பிற்காலப் புலவரான உலகநாத பண்டிதர் என்பார் இயற்றிய நூல் உலகநீதி. 13 விருத்தப்பாக்களை உடைய நூல் இது. வேண்டாம் என எதிர்மறையாகவே அறிவுரை புகலும் நூல் இது. எல்லாப் பாடல்களும் முருகனை வாழ்த்துபவை.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் சொல்வாரோடு இணங்கவேண்டாம்

போகாத இடந்தனிலே போகவேண்டாம்

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

பல சிறந்த கருத்துகள் அடங்கிய நூல் இது.

நீதிவெண்பா என்ற நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அதில் சிறந்த கருத்துகளை உடைய செய்யுள்கள் பல உள்ளன.

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின

வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் – நன்மொழியே

ஓதுகுயில் ஏதங்கு உதவியது கர்த்தபந்தான்

ஏது அபராதம் செய்ததின்று.

(கர்த்தபம்-கழுதை, அபராதம்-தீமை)

என்பது இந்நூலிலுள்ள ஒரு பாட்டு. இனிமையாகப் பேசுவதின் நன்மையை இது சொல்லுகிறது. இன்னொரு பாட்டு சாதியால் இழுக்கில்லை என்பதை உணர்த்துகிறது. தாமரை, முத்து, கோரோசனை, பால், தேன், பட்டு, புனுகு, சவ்வாது, அழல் ஆகியவை எங்கே பிறந்தன என்று யாரும் நோக்குவதில்லை, எள்ளுவதில்லை. ஆகவே “நல்லோர்கள் எங்கே பிறந்தாலும் என்?” என்று கேள்வி எழுப்புகிறது.

இவற்றைத் தவிர சிறந்த நீதி ஒழுக்கங்கள் அடங்கிய நூல்கள் இன்னும் பல உள்ளன. சான்றாக

முத்துராமலிங்க சேதுபதி இயற்றிய நீதிபோத வெண்பா

செழியதரையன் என்பார் இயற்றிய நன்னெறி

திருத்தக்க தேவர் இயற்றிய நரிவிருத்தம்

கபிலர் அகவல்

இராசகோபால மாலை

மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதிநூல், பெண்மதி மாலை

ஆத்திசூடி வெண்பா

ஆத்திசூடி புராணம்

போன்ற பல நூல்களைக் குறிப்பிடலாம்.

இடைக்காலத்தில் இவை தவிரச் சதகங்கள் எனப்படும் நூல்கள் எழுந்தன. சதகம் என்றால் நூறுபாடல்களைக் கொண்டது என்று பொருள். சதகங்களின் பாடல் ஒவ்வொன்றும் இறைவனைப் போற்றுவதாக இருந்தாலும், அது இறுதி அரையடியில் மட்டுமே இடம்பெறும். பிற மூன்றரை அடிகளும் பல அறக்கருத்துகளையும் நீதிக்கருத் துகளையும் உணர்த்தும்.

குருபாத தாசர் இயற்றிய குமரேச சதகம்

அம்பலவாண கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்

சேலம் சிதம்பரப் பிள்ளை இயற்றிய கயிலாசநாதர் சதகம்

திருச்சிற்றம்பல நாவலர் இயற்றிய திருவேங்கட சதகம்

படிக்காசுப் புலவர் இயற்றிய தண்டலையார் சதகம்

நாராயண பாரதியார் இயற்றிய கோவிந்த சதகம்

முத்தப்ப செட்டியார் இயற்றிய செயங்கொண்டார் சதகம்

யோகீச்வர ராமன் பிள்ளை இயற்றிய நம்பி சதகம்

வித்வான் கே. அருணாசலம் இயற்றிய திருவேரக சதகம்

பொன்னுசாமி சோதிடர் இயற்றிய கரிவரதப் பெருமாள் சதகம்

எனப் பல சதக நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றில் நீதிசதகம், குமரேச சதகம், அறப்பளீசுர சதகம் ஆகியவை அதிகம் பாராட்டப்பட்ட நூல்கள்.

மேலே சாதியில்லை என்றுரைத்த நீதி வெண்பாவின் கருத்தையே கூறும் குமரேச சதகப் பாடல் ஒன்றினை இங்குக் காணலாம்.

சேற்றில் பிறந்திடும் கமலமலர் கடவுளது திருமுடியின் மேலிருக்கும்

திகழ் சிப்பியுடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேலிருக்கும்

போற்றியிடு பூச்சியின் வாயின்நூல் பட்டென்று பூசைக்கு நேசமாகும்

புகலரிய வண்டெச்சிலான தேன் தேவர்கொள் புனித அபிடேகமாகும்

சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவ்வாது புனுகு அனைவர்க்குமாம்

சாதி ஈனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல் வட்டமன்றோ

மாற்றிச் சரத்தினை விபூதியால் உடல்குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே

மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு மலைமேவு குமரேசனே.

தனிப்பாடல் திரட்டிலும் நீதிக்கருத்துகள் கொண்ட செய்யுள்கள் பல உள்ளன. சான்றாகப் பிற்கால ஒளவையார் ஒருவர் பாடிய வெண்பா இது.

நிட்டூரமாக நிதி திரட்டும் மன்னவனும்

இட்டதனை மெச்சா இரவலனும் – முட்டவே

கூசிநிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய

வேசியும் கெட்டுவிடும்.

இவற்றைத்தவிர, பிறமொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட மொழி பெயர்ப்பு நீதி நூல்கள் பல உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை-

வீரமார்த்தாண்ட தேவர் இயற்றிய பஞ்சதந்திரச் செய்யுள்

செழியதரையன் பஞ்சதந்திரம்

சாணக்கிய நீதிவெண்பா

நன்மதி சதகம் அல்லது சுமதி சதகம்

மனுநீதி சதகம்

மனுநீதி சாத்திரம், விதுரநீதி, பீஷ்மநீதி, சுக்கிரநீதி,

அர்த்தசாத்திரம், நீதிசாத்திரம்,

பர்த்ருஹரி நீதி சதகம், நீதிசாரம்

ஆகியவை. இவையே அன்றித் தமிழில் தொகை நூல்கள் (அதாவது பிற நூல்களிலிருந்து பாக்களை எடுத்துத் தொகுக்கப்பட்ட நூல்கள்) பல உண்டு. இம்மாதிரி நீதித் தொகை நூல்களாக, விவேக சிந்தாமணி, தனிப்பாடல் திரட்டு, நீதித் திரட்டு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். விவேக சிந்தாமணியின் ஒரு பாட்டு இது.

கற்பூரப் பாத்தி கட்டி கத்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி

பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும்

சொற்பேதையர்க்கு இங்கு அறிவு இனிதாக வருமெனவே சொல்லினாலும்

நற்போதம் வாராது அங்கவர் குணமே மேலாக நடக்குந்தானே.

இவ்வாறே, சித்தர் பாடல்கள், திருமூலரின் திருமந்திரம், தாயுமானவர், வள்ளலார், மஸ்தான் சாகிபு போன்ற பல கவிஞர்களின் பாடல்களையும் நோக்கும் போது அவற்றுள் அறக்கருத்துகள் நிறைந்து கிடப்பதனைக் காணலாம். அதனால்தான் முன்பு தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதுமே அறநூல்களால் நிறைந்துள்ளது என்று சொல்லப்பட்டது. அறநூல்களைப் பயிலுவதும் பாடமாக வைப்பதும் பயன்படுத்து வதும் இன்று குறைந்துவிட்டது என்பது வருந்தத்தக்கது. வாழ்க்கையின் நிலைகெடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தக்க அறிவுரை அளித்துக் காக்கக்கூடியவை இந்த நூல்கள். பழைய அனுபவங்களின் சாரங்கள். தமிழர்கள் இவற்றை மறக்காமல் பயின்று போற்ற வேண்டும், வெறும் வாழ்க்கைப் பயனும் பணமும் கருதி ஆங்கிலத்தை மட்டுமே கற்பிக்காமல், நம் தமிழ்ச் சிறுவர்சிறுமியர்க்கு இவற்றைக் கட்டாயம் கற்பிக்கவேண்டும், தொகுதியாக்கி வெளியிட்டுக் காப்பாற்ற வேண்டும்.

இலக்கியம்