தமிழில் உலா இலக்கியங்கள்

தமிழில் உலா இலக்கியங்கள்

வரலாற்றுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இலக்கிய அமைப்பு மாறுபடுகிறது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் தொடர்ச்சியாக இலக்கியம் இருந்துவருகின்ற தமிழிலும் காலந்தோறும் இலக்கிய வகைகளும் இலக்கிய அமைப்பும் மாறி வந்திருக்கின்றன. பேரரசர்கள் ஆண்ட காலத்தில் பெரிய காவியங்கள் தோன்றியிருக்கின்றன. பேரரசர்களின் ஆட்சிக்காலம் மாறி, சிற்றரசர்கள் ஆட்சி செலுத்தியபோது தோன்றியவை சிற்றிலக்கியங்கள். சிற்றிலக்கியங்கள் என்பது இலக்கியத்தின் அளவையும் பொருளையும் குறிக்கும் சொல்லாக அமைகிறது. மேலும், பேரிலக்கியங்களான காவியங்களின் ஒவ்வொரு கூறினை மட்டும் எடுத்து விரித்துரைப்பனவாகத் தோன்றியவை சிற்றிலக்கியங்கள் எனலாம்.

உதாரணமாக, பெரும் காவியங்களில் தலைவனுக்குத் தலைவி தூதுவிடுவதாகப் பகுதிகள் அமைந்திருப்பதைக் காணலாம். அதைத் தனிப்பகுதியாக விரித்துப் பாடும்போது தூது என்னும் இலக்கியமாகிறது. அதே போலத் தலைவன் உலா வருவது பெருங்காவியத்தின் ஒரு சிறுபகுதியாக அமையும். அதை மட்டுமே தனிப்பகுதியாக எடுத்துப் பாடுகின்றபோது அது உலா என்னும் சிற்றிலக்கியமாகிறது.

சிற்றிலக்கியங்களை பிரபந்தங்கள் என்று கூறுவதும் உண்டு. பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கணவிளக்கப் பாட்டியல் போன்ற பாட்டியல் நூல்கள், சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றன. தமிழில் 96 வகைப் பிரபந்தங்கள் இருக்கின்றன எனக் கூறும் மரபு எப்படியோ உருவாகிவிட்டது. ஆனால் பேராசிரியர் ந.வீ. செயராமன், 330க்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். சிற்றிலக்கியங்களில் கலம்பகம், உலா, பிள்ளைத் தமிழ் போன்றவை முக்கியமானவை.

சிற்றிலக்கியங்களின் அமைப்பு, அவற்றின் தோற்றத்தைப் பலவிதமாகக் காண வழிவகுக்கிறது. இலக்கண அடிப்படையிலான சிற்றிலக்கியங்கள் உள்ளன. தொல்காப்பிய நூற்பாக்களின் அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் உள்ளன. மக்கள் வழக்கு அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் உள்ளன. கதைத்தொடர்ச்சி நிலையிலும் சிற்றிலக்கியங்கள் அமைகின்றன.

உதாரணமாக, மகளிர் பலர் கூடியிருந்து ஒரு தலைவன் புகழைப்பாடுகின்றனர். அப்போது அவர்கள் பலவகை விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஊசல், அம்மானை, கும்மி, ஒயில் கும்மி, குரவை, வள்ளை போன்ற இந்த விளையாட்டுகள், தனி இலக்கிய வகைகளாக மாறுகின்றன.

இப்படிப் பலவகையான விளையாட்டுகளிலும் பலவகை வயதுடைய மகளிரும் ஈடுபட்டிருக் கும்போது தலைவனின் வீதியுலா நிகழ்கிறது. அவனைப்பார்த்துப் பலர் காதல்கொள்கின்றனர். இது உலா என்னும் இலக்கியத்தின் தோற்றத்திற்கு வித்தாகிறது. அவ்வாறு வீதியில் உலா வருவது சிறு பிள்ளை ஆயின் குழமகன் என்று அந்த இலக்கியம் பெயர்பெறுகிறது.

உலாவந்த தலைவனின் உருவத்தில் மையல் கொண்ட பெண் ஒருத்தி புலம்புவது பவனிக் காதல் என்னும் இலக்கியமாகிறது. அவள் தன் ஆற்றாமையைத் தெரிவிக்கத் தூதுவிடுக்கும் செய்தி, தூது என்னும் இலக்கியமாகிறது. அவள் ஆற்றாமையில் வாடும்போது அவளுக்கு ஆறுதல்கூறக் குறத்தி வந்து சேர்கிறாள். தலைவனை அவள் விரைவில் அடைவாள் என்று அவள் கூறுவது குறவஞ்சி என்னும் இலக்கிய வகை ஆகிறது. இப்படி ஒரே நிகழ்வின் பலவேறு கூறுகள் பலவிதமான சிற்றிலக்கிய வகைகளாகியிருக்கின்றன.

எனினும் இவை அனைத்தும் சங்க இலக்கிய நோக்கில் பார்த்தால் பாடாண் திணை என்னும் ஒரே திணையின் பலவேறு கூறுகளாக அமைபவை என்பது வெளிப்படும். தமிழகத்தில், சோழ-பாண்டியப் பேரரசுகளுக்குப் பிறகு (கி.பி. பதினான்காம் நூற்றாண்டு முதலாக) தமிழ்ப்பேரரசர்கள் ஆட்சிசெய்த நிலை மாறி, அயல்நாட்டு அரசர்கள் ஆட்சிசெய்யலாயினர். அவர்களுக்குக் கீழ் தமிழர்கள் பாளையக்காரராகவோ சிற்றரசர்களாகவோ ஜமீன்தார்களாகவோ வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பெரிய காப்பியங்கள் தோன்றுவது எப்படி இயலும்? சிறுசிறு இலக்கியங்களை அந்தச் சிறுசிறு மன்னர்கள்மீது பாடிப் பரிசில் பெறுவதற்குப் புலவர்கள் முயன்றனர். மன்னனைப் பாட விருப்பமில்லை என்றால் இதே விஷயங்களைக் கடவுள்மீது ஏற்றிப்பாடினர். எனவே சிற்றிலக்கிய காலத்தினைப் பாடாண் திணைக் காலம் என்றே கூறலாம்.

கடவுளர்மீதும், அரசர்மீதும், அடியார் மீதும், ஞானாசிரியர் மீதும் வள்ளல்கள்மீதும் உலாப் பாடுவது மரபு என்பர். இதனைத்தான் சிற்றிலக்கிய வரலாறும் காட்டுகிறது. இப்படிப் பாடியவை அனைத்தும் பாடாண் திணையில் (ஒரு கடவுளை, அல்லது தலைவனைப் புகழ்ந்து பாடுதல்) அமைந்ததில் வியப்பில்லை. அதிலும் ஒருவனைப் பார்த்து, “உன்னைக் கண்டவர்கள் எல்லாம் காதலிக்கிறார்கள், அவ்வளவு பேரழகன் நீ” என்றால் அவன் உடனே அகமகிழ்ந்து போய் அதிகமாகப் பரிசளிப்பான் அல்லவா?

பாடாண்திணைப் பாட்டுகள், சிற்றிலக்கியங்கள், அரசர்களும் நாயக்கர்களும் ஆட்சிசெய்த காலத்தில் அதற்கு ஒத்ததாகத் தோன்றியவை. அதாவது அரசர்கள், ஜமீன்தார்கள் ஆட்சி செய்த ஒரு விவசாயச் சமூக, நிலவுடைமை மரபிற்கேற்பத் தோன்றியவை. அதனால் இக்கால ஜனநாயக மரபிற்கு அவை ஏற்றவை அல்ல. பாடாண் திணை என்ற பெயரே,
யாரை யார் பாடுகிறார்கள்?
பாடுவது எதற்காக அல்லது ஏன்?
பாடப்படும் விஷயம் என்ன?
பாடப்படும் முறை யாது?
போன்ற பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புகழ்ந்து பாடுவது வயிற்றுக்கொடுமை. அல்லது வஞ்சித்துப் பொருள்சேர்க்கும் தேவை. ஏற்றத்தாழ்வே நிலவும் சமூகத்தில், அல்லது ஏற்றத் தாழ்வு மாறாதது, இயல்பானது என்று ஏற்கப்பட்ட சமூகத்தில் இது சகஜம்.

ஏற்றத்தாழ்வு நிலவினாலும், மக்கள் அனைவரும் சமம் எனக் கருதும் மக்களாட்சிக் காலத்திற்கு இந்தத் திணை ஒவ்வாதது என்பது முதலில் கவனிக்கப்பட வேண்டியது.

அப்படியானால், இந்த இலக்கியங்களைப் புறக்கணித்துவிடலாமா? இவை தேவையில்லையா? என்னும் கேள்விகள் எழுகின்றன. அப்படியில்லை. நீண்ட பாரம்பரியத்தை உடைய ஒரு மொழியில் உள்ள இலக்கியங்களில் அந்தந்தக் காலச்சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.

நம் காலத்திற்கு ஒவ்வாத காலச்சுவடுகளை விலக்கி, அதன் இலக்கியச் சுவைக்கென மட்டும் படிப்பது என்பது ஒரு முறை. இதை விளக்க நாம் இரண்டாயிரம் ஆண்டுப் பழமைக்குக் கூடச் செல்லத் தேவையில்லை. அண்மைக்கால-ஒரு நூற்றாண்டு பிந்திய பாரதியாரையே எடுத்துக்கொள்வோம். அவர் சுதந்திரம் வேண்டிப் பாடிய பாக்கள் இன்று பொருந்துமா? அவர்கால நிலையை அறிந்துகொள்ள அவற்றைப் பயிலலாம் என்று சொல்வது ஒரு விடை. இலக்கியச் சுவைக்கெனப் பயிலலலாம் என்பது இன்னொன்று. மூன்றாவது, இலக்கியங்கள் காலந்தோறும் புதிதுபுதிதாகப் பொருள்கொள்கின்றன, எனவே அதற்காகப் பயிலலாம் என்று கூறலாம். இப்படிப் பலநிலைகளில் பழைய இலக்கியங்களைப் பயிலுவதற்கான காரணங்களைக் கூறிச் செல்லலாம்.

இனி, உலா இலக்கியத்திற்கு வருவோம்.
தலைவர்கள் உலா வரும் செய்தியைக் காப்பியங்களில் பாடுவது மரபு. பெருங்கதையில் நகர் வலம் கொண்டது பகுதியிலும், சீவகசிந்தாமணியில் கோவிந்தையார் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம் ஆகியவற்றிலும், கம்பராமாயணத்தில் உலாவியற் படலத்திலும் உலாக்காட்சிகள் உள்ளன. ஏறத்தாழக் காப்பிய காலத்தில் தோன்றிய முத்தொள்ளாயிரத்திலும் உலாக்காட்சிகள் அமைந்துள்ளன. சான்றாக,
திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடின் பெரிதாம் ஏதம் – உறந்தையர்கோன்
தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு.
என்பது ஒரு முத்தொள்ளாயிரப் பாடல். சோழ அரசன் உலாவருவதைப் பெண்ஒருத்தி காண முனைகிறாள். காணக்கூடாது என்று தடுக்க முனைகிறாள் தாய். “அவள் பார்த்தால் பார்த்து விட்டுப் போகட்டும், கதவைத் திறவுங்கள், பின்னால் நிகழக்கூடியதைப் பின்னாலே பார்த்துக் கொள்ளலாம், இப்போது அவள் இறந்துபோய்விடக்கூடாது” என்பது இப்பாடல் கருத்து. தலைவன் பவனி வருதல், அதனைக் கண்டு பெண்கள் காதல் கொள்ளுதல் என்னும் வித்துகள் முத்தொள்ளாயிரத்திலேயே நன்கு அமைந்துவிட்டன.
சுந்தரமூர்த்தி நாயனார் திருமணத்தின்போது உலாவந்த காட்சியைப், பெரியபுராணம் விவரிக்கிறது.
தமிழில் முதன் முதலில் தோன்றிய உலா, சேரமான் பெருமாள் நாயனார் என்னும் சேர அரசர் இயற்றிய திருக்கயிலாய ஞானவுலா எனப்படுகிறது. முதலில் தோன்றியதனால் இதனை ஆதியுலா என்பர். இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரின் காலத்தில் வாழ்ந்தவர், கி.பி. எட்டாம் நூற்றாண்டினர் என்பர். இருவரும் நண்பர்கள் என்றும், ஒன்றாகச் சிவலோகம் எய்தினர் என்றும் கூறுவர். பூமியிலிருந்து புறப்பட்டுச் சிவலோகம் செல்லும் வழியில் இது பாடப்பட்டது, இதனைக் கேட்ட சிவபெருமான், சேரமான் பெருமாளைச் சிவகணங்களுக்குத் தலைவராக்கினார் என்றும் உரைப்பர்.

சேரர்காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப் புறம்கொண்டு
நாரிபாகரும் நலமிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊரனாகிய ஆலால சுந்தரனுடன் அமர்ந்து இருவீரும்
சாரும் நங்கண நாதர் தம் தலைமையில தங்கும் என்று அருள் செய்தார்
என்று சேக்கிழாரின் பெரிய புராணம் இந்தச் செய்தியைக் கூறுகிறது.

எவ்வாறாயினும், சேரமான் இயற்றிய இந்த உலா, பின்வரும் உலா நூல்களுக்கு ஒரு நிகரற்ற முன்மாதிரியாக அமைந்துவிட்டது. சிவபுரத்தில் சிவபெருமான் வீற்றிருத்தல்-தேவர்கள் எங்க ளுக்குக் காட்சி அருள் என அவரை வேண்டுதல்-இறைவன் உலாப் புறப்படுதற் பொருட்டு இறைவி ஒப்பனை செய்தல்-தேவர்கள் பலரும் வாழ்த்துகள் உரைத்தல்-பின்தொடர்ந்து வருதல்-எழுபருவ மகளிரும் கண்டு வியத்தலும் காமுறுதலும் என இதன் அமைப்பு உள்ளது.

இதன்பின் தமிழில் தோன்றிய உலா நூல்கள் அநேகம். சிவபெருமான் முதலாக இன்றைய அரசியல் தலைவர்கள் வரை இவ்வாறு உலா வந்தவர்கள் பலர். உலா இலக்கியங்களும் ஏறத்தாழ எழுபதுக்கும் மேல் உள்ளன.

ஒட்டக்கூத்தர், மூன்று சோழ அரசர்களுக்கு ஆசிரியராக இருந்தவர். ஒவ்வொருவர் மீதும்-விக்கிரமசோழன், குலோத்துங்கசோழன், இராசராசசோழன் ஆகியவர்கள் மீது-உலாப்பாடினார். இந்த மூன்று நூல்களும் சேர்ந்து மூவர்உலா எனப்படுகிறது. Ôகோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுவிட்டார்.

ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, ஞானவிநோதன் உலா (தத்துவராயர்), சிவஞான பாலைய தேசிகர் உலா (சிவப்பிரகாசர்), சிவந்தெழுந்த பல்லவராயன் உலா எனப் பலவகை உலாக்கள் உள்ளன. ஒட்டக்கூத்தர் காலத்திற்குப் பிறகு பெரும்பாலும் இறைவன்மீது மட்டுமே
-குறிப்பாகச் சிவபெருமான்மீது மட்டுமே-உலாக்கள் மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. ஆதி உலா சைவச்சார்பானதாக அமைந்ததாலோ என்னவோ, பிறகும் சிவபெருமான்மீதே உலாக்கள் பல அமைந்தன. திருமால் மீது உலாக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில முக்கியமான நூல்கள்-
திருப்பூவணநாதர் உலா கந்தசாமிப்புலவர் இயற்றியது
மதுரைச் சொக்கநாதர் உலா திருமலைநாதர் இயற்றியது
திருவானைக்காவுலாவின் ஆசிரியர் காளமேகப் புலவர்
ஏகாம்பரநாதர் உலாவை இயற்றியவர்கள் இரட்டையர்
திருக்காளத்திநாதர் உலா சேறைக் கவிராஜபிள்ளை இயற்றியது
திருவாரூர் உலா, திருக்கழுக்குன்றத்து உலா அந்தகக் கவி வீரராகவர் இயற்றியது

உலா இலக்கியம், உலாப்புறம் என்றும், உலாமாலை என்றும், பவனி என்றும், பவனியுலா என்றும் வழங்கிவந்திருக்கிறது. உலாப்புறம் என்ற சொல், இந்த இலக்கியத்தைப் புறத்திணை (பாடாண்) இலக்கியமாகவே பழங்காலத்திலும் கணித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

உலா இலக்கியத்தின் மரபு அல்லது இலக்கணம் விசித்திரமானது. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல்கொள்ளும் வண்ணம் தலைவன் ஒருவன் வீதியில் உலா வந்தான் என்று கலிவெண்பாவால் இந்த இலக்கியம் பாடப்பெறுதல் வேண்டும் என்பது பாட்டியல் நூல்கள் யாவும் கூறும் இலக்கணம். அதாவது, தலைவன் ஒருவன் பவனி வருகிறான்; தெருவில் அவனைப் பார்க்கும் பெண்கள் அனைவரும் காதல் கொள்கின்றனர் என்பது இந்த இலக்கியத்தின் விஷயம்.

தெருவில் ஒரு ஆண்மகனைப் பார்க்கும் பெண்கள் அனைவரும் எப்படிக் காதல் கொள்வார்கள்? இதனைப் பழங்காலத்தில் பெண்களின் கற்புப் பிரச்சினை ஆக்கிவிட்டார்கள். முதல் உலாநூல் தோன்றியது கி.பி. எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் என்றால், இந்த விவாதம் பெருங்கதை என்னும் காப்பியம் தோன்றிய கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது.

உத்தம மகளிர் ஒழிய மற்றைக்
கன்னியர் எல்லாம் காமன் துரந்த
கணையுளம் கழியக் கவினழி வெய்தி….வருந்தினர்

என்று பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர் கூறுகின்றார். அப்படியானால் நமக்கு முதலில் எழுகின்ற வினா: ஒவ்வொரு ஊரிலும் உத்தம மகளிரைத் தவிர ஏனைமகளிர் (வேசியர்கள்) பழங்காலத்தில் அவ்வளவு மிகுதியாக இருந்தார்களா?

தொல்காப்பியப் புறத்திணையியலில், “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” (31) என்னும் சூத்திரம் வருகிறது. “கடவுள் உள்ளிட்ட தலைமக்கள் ஊரினுள் யாவர் முன்னும் தோன்றுவது உரியது” என்பது இதற்குப் பொருள். இதில் தலைவனைப் பார்த்துப் பல பெண்கள் காதல் கொள்ளுகின்ற செய்தி எதுவும் இல்லை. ஆனால் உரையாசிரியர்கள், தோற்றம் என்பதற்குக் காமத்தோற்றம் என்று பொருள் கூறியுள்ளனர். அதாவது, “ஊரில் காமப்பகுதி நிகழ்வதும் உரியது” என்று சொல்கின்றனர். நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர், இதன் உரையில், “அது பின்னுள்ளோர் எழுபருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம்” என்று கூறினார். மேலும் அடுத்த சூத்திர உரையில் “ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றி குலமகளிர்க்குக் கூறப்படாது” எனவும் கூறியுள்ளார். அதாவது காதல் கொண்ட எழுபருவப் பெண்களும் பரத்தையரே அன்றிக் கற்புடைய குலமகளிர் அல்ல என்கிறார். இதையொட்டியே இன்னும் சில ஆசிரியர்களும்,

“கணவனை மணந்து வாழும் காரிகையர் எவரும் உலாப்போதரும் தலைமகனைக் கண்டு காதல்கொண்டு மயங்குவதாக உலா நூல்கள் யாண்டும் பாடுவதில்லை. எனவே மகளிர் கற்பொழுக்கத்திற்கு மாசு கற்பிப்பதாக உலா நூல்களைப் பழித்தல் ஒரு சிறிதும் அமையாது”

என்று கூறியுள்ளனர். மேலும்

“மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்ப தொன்றே யன்றோ? இங்ஙனம் உள்ளத்துணர்ச்சிகளை ஒரோவழி உள்ளபடி எடுத்துப்பாடுதல் ஒருபெருங் குற்றமாகாது”

என்றும் கூறியுள்ளனர்.
ஏழு பருவப் பெண்கள் ஓர் ஆடவனைக் கண்டு காமுறுதலை “உள்ளபடி எடுத்துப்பாடுதல்” என்கிறார் முருகவேள் என்னும் புலவர், சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் என்னும் நூலில். நாம் இதனை அதீத கற்பனை அல்லது மிகையான புனைவு என்கிறோம்.

உலாநூல் இயற்றப்பட்டமைக்கு வேறு விதத்திலும் அறிஞர்கள் காரணம் கூறியுள்ளனர்.

“வீரத்தில் விழுப்பம் பெறக் காதலை மறந்து கடமையிற் கருத்துச் சிறந்து ஓயாது போர்மேற் செல்லும் விருப்பமிக்க மன்னவனுக்கு, அவன் இளமையின் எழில் தோன்ற, உலாப்போந்த காலத்து அவன் எழில்கண்டு காதல் கொண்டனர் மாதர் பலர் என்று கூறினால் மன்னனுக்குப் போர்மேற் சென்ற கருத்துமாறித் தன் கற்புடைய தலைவிமேற் காதல் சிறந்து இன்பம் துய்ப்பான், மறம் குறையும் அறம் பெருகும், இன்பம் நிலவும்” என்கிறார் செ. வேங்கடராமச் செட்டியார். அதாவது அரசனைப் போரிலிருந்து திருப்பிக் காதல் வாழ்க்கை யில் ஈடுபடுத்த அவன்மீது உலாப்பாடுவது ஒன்றுதான் வழியாம்!

உலா இலக்கியத்தை வேறு வகையிலும் சிலர் நோக்கியுள்ளனர். சான்றாக, திருக்கயிலாய ஞானவுலாவில், பேதை என்பது சேரமான் பெருமாளைக் குறிக்கும் (கடவுட்காதலின் ஆரம்பப் பருவத்தில் உள்ளவர்) என்றும், பேரிளம்பெண் என்பது சுந்தரமூர்த்தி நாயனாரைக் குறிக்கும் (முற்றிய பக்தியில் ஊன்றியவர்) என்றும் உருவகப் பொருள் சொல்வார்கள். இதேபோல, எழுபருவமாதர் என்பது எழுவகையாக வேறுபட்ட-அதாவது பக்குவநிலையில் சிறிது சிறிது வேறுபாடு உடைய பக்தர்களையே என்றும், அவர்கள் காதலித்ததாகக் கூறியது இறைவன்பால் அவர்கள் அன்புகொண்டதையே என்றும் உரைப்பார்கள். ஆனால், கடவுளர் மீதும், அரசர்மீதும், அடியார் மீதும், ஞானாசிரியர் மீதும் வள்ளல்கள்மீதும் உலாப்பாடுவது மரபாக இருந்துள்ளது. மேற்கண்ட உருவக விளக்கத்தை இறைவன்மீதான உலாவுக்குப் பயன் படுத்தினாலும், பிறர்மீது பாடிய உலாக்களுக்கு எப்படிப் பொருத்திப் பார்க்க இயலும்?

மகளிரைப் பருவ வகையால் பிரித்து நோக்கும் வழக்கம் சங்ககாலத்திலேயே தோன்றிவிட்டது என்று கூறுவார்கள்.
பேதையல்லை மேதையங் குறுமகள்
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து (அகம்.7)
என்ற அகநானூற்று அடியால் இம்மாதிரிப் பருவப் பகுப்பு இருந்தது என்பதை உணரலாம். ஆனால் எழு பருவப் பெண்களும் காதல் கொண்டனர் என்பதை நாம் (குழந்தைகளையும் மூதாட்டிகளையும் தவிர) அனைத்துப் பெண்களும் காதல் கொண்டனர் என்பதாகவே கொள்ளவேண்டும்.
5-7 வயதுள்ளவள் பேதை, 8-11 வயதுள்ளவள் பெதும்பை, 12-13 வயது மங்கை,
14-29 ஆண்டுகள் மடந்தை, 20-25 ஆண்டுகள் அரிவை, 26-32 தெரிவை, 33-40 பேரிளம்பெண் என்பது தமிழிலக்கியங்கள் காட்டும் பெண்களின் பருவப் பகுப்பு. முதல் இரண்டு வகையினரை (பேதை, பெதும்பை) விட்டுவிட்டால் பெண்கள் பருவமடைந்த காலம் முதல் பூப்புநிற்கும் காலம்வரை உள்ள பகுதி என்று கூறிவிடலாம். இப்படி அனைத்துப் பெண்களும் ஒரு ஆண்மகனைப் பார்த்துக் காதல் கொள்வதாகப் பாடுவதைவிடப் பெண்களை அவமானப்படுத்தும் அல்லது அசிங்கப்படுத்தும் முறை வேறு எதுவும் இருக்க இயலாது என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

ஒவ்வொரு பருவ வருணிப்பும் பெண்களை போகப்பொருளாகவே பழங்காலத்தில் நோக்கியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அவர்களை வாழ்க்கைத் துணைவர்களாகவோ, அறிவுள்ள மனித ஜீவிகளாகவோ புலவர்கள் எண்ணவில்லை.

மேலும் உலா இலக்கியத்தின் அமைப்பினை நோக்குவோம்.
தசாங்கம் எனப்படுவன, பாட்டுடைத் தலைவனது மலை ஆறு நாடு நகர் யானை குதிரை மாலை முரசு கொடி செங்கோல் என்னும் பத்து உறுப்புகள். இவற்றைப் புகழ்ந்துபாடுதல் உலா இலக்கிய மரபு. திருவானைக்கா உலாவில் தலைவனின் தசாங்கம் கூறப்படவில்லை.

பாட்டுடைத் தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் பகுதிகள் உலாநூலின் முதற்பகுதியில் இடம்பெறும். இவை முன்னிலை எனப்படும்.

எழுபருவ மாதரும் குழுமி நின்றும், தனித்தனியாக நின்றும், காதல் வயப்பட்டுக் கூறுவன பின்னிலை எனப்படும்.

சிற்றில், பாவை, கழங்கு, அம்மானை, ஊசல், கிளி, யாழ், புனலாட்டு, பொழில் விளையாட்டு முதலியன ஏழுவகைப் பருவமகளிர்க்கும் உரிய விளையாட்டுகளாகப் பன்னிருபடலத்தில் (137) கூறப்பட்டுள்ளன. உலாக்காண வருங்கால், இன்னின்னார் இன்னின்ன விளையாட்டை மேற் கொண்டிருந்தனர் என்று அவரவர் பருவத்திற்கேற்றவாறு அமைத்துப்பாடுதல் வேண்டும்.

உலகியல் ஒன்றும் அறியாத பேதைப்பருவத்தையும், அறிவறிந்த மங்கை முதலிய பருவங் களையும் பாடுதல் எளிது. அறிவும் அறியாமையும் கலந்த பெதும்பைப் பருவத்தின் இயல்புகளைப் பாடுதல் அரிது. பேசும் உலாவில் பெதும்பை புலி என்று பெதும்பைப் பருவத்தாள் செயல்களைப் பாடுவதன் அருமையைக் குறிப்பிடுவார்கள்.

கடவுளர் எழுந்தருளிவரும் நாளில், ஏழுபருவ மாதரும் முறையே கண்டு காமுற்றதாகக் கூறுதலே எல்லா உலாக்களிலும் காணப்படும் செய்தி. மாறாக, மதுரைச் சொக்கநாதர் உலாவில் மட்டும், மதுரையில் ஏழுநாள் விழா நடைபெற்றது என்றும், அந்த ஏழு நாளிலும் அழகியசொக்கநாதர் வெவ்வேறு ஊர்திகளில் ஏறி உலாப்போந்தார் என்றும், ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பருவப்பெண் மட்டும் காதல்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலா நூல்களில் இறைவனது பெருமை மிகச் சிறப்பானமுறையில் சொல்லப்படும். சான்றாக, திருக்கயிலாய ஞான உலாவில்,

பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் – முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் (சிவபிரான்)

என்று வருணிப்பது சிறப்பாக அமைகிறது.

மேலும் உலா நூல்களில் பலவித வரலாற்றுச செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. சான்றாகத்
திருக்காளத்திநாதர் உலாவில்,

மதிவிக்ரமச் சோழன் வண் குலோத்துங்கன்
துதிபெற்ற ராசேந்த்ர சோழன் – கதிபெற்ற
செம்மையர்களாகத் திருப்பணிகளாற் பணியும்
மும்முடிச் சோழபுர மூர்த்தியான்

என்னும் பகுதியில், விக்கிரமசோழன், குலோத்துங்கசோழன், ராசேந்திரசோழன் ஆகியவர்கள்
மும்முடிச்சோழபுரக் கோயிலுக்குத் திருப்பணி செய்தனர் என்னும் செய்தி வருகிறது. திருப் பூவணநாதர் உலாவில் (இறைவன்)

மன்போசன் முத்துவடுக நாதேந்த்ரன் அருள்
பொன்போலும் ஆடை புனைந்தருளி

என வரும்பகுதியால், முத்துவடுகநாதன் இறைவனுக்கு விலையுயர்ந்த ஆடை அளித்த செய்தி தெரிகிறது.

புராணக்கதைகள் இறைவனைப் பற்றிய நூல்களில் இடம்பெறுவதில் வியப்பில்லை. திருவானைக்கா வுலாவில், சிவபெருமான் சித்தராக எழுந்தருளி, திருநீற்றையே கூலியாகக் கொடுத்தார் என்ற செய்தி கூறப்படுகிறது. திருவானைக்கா கோவிலின் வெளிமதில் திருநீற்று மதில் என்று அழைக்கப்படுகிறது.

எல்லா உலாநூல்களிலும் பெரும்பகுதியாக இடம்பெறுவது ஏழு பருவப் பெண்களின் வருணனை. அதிலும் பெண்களின் கண்ணையும், மார்பையும் வைத்தே அவர்களை வருணிக்கும் போக்கு மிகுதியாகக் காணப்படுகிறது. தங்கள் தங்கள் கற்பனைத் திறனுக்கேற்பப் புலவர்கள் ஏழு பருவப் பெண்களின் வருணிப்பிலும், அவர்கள்தம் விளையாட்டு வருணிப்பிலும் கவனத்தைச் செலுத்தியுள்ளனர். சான்றாகச் சிலபகுதிகளைக் காணலாம்.

பேதைப் பருவத்தாள் தெருவிற் சென்று சிற்றில் இழைத்துச் சிறுசோறு ஆக்கி விளையாடும் சிறுமி. இவள் “பொய்வாழ்வு அடைந்தோர் புலன்கள்போல் ஒன்றோடொன்று ஒவ்வாது அலைகின்ற ஓதியாள்” என்றும், “உலக மயக்கம் ஒழிந்தோர் மனம்போல் கலகம் சிறிதறியாக் கண்ணாள்” என்றும் மதுரைச்சொக்கநாதர் உலா வருணிக்கிறது. இதே பேதைப் பெண்ணைத், “தாயிற் சிறந்தபிரான் அல்லாத தெய்வங்கள் போலே இறந்து பிறக்கும் எயிற்றாள்” என்று திருவானைக்கா உலா வருணிப்பதும் ரசமாக உள்ளது.

பெதும்பையினை, “வேட்டவர்தம் புந்திகவர் வஞ்சனையும் பொய்யும் கொலையும் இடம் வந்துவந்து பார்க்கும் மதர்விழியாள்” என ஏகாம்பரநாதர் உலா வருணிப்பதும் சுவையானது.
மங்கைப் பருவத்தாளை, “வாட்கைக் குமரருக்கு மையற்பிணி கொடுத்து மீட்கத் தெரியும் விழியினாள்” என்று திருப்பூவண நாதர் உலா வருணிப்பது, பிணியும் அதற்கு மருந்தும் ஆயிழையே (பிணிக்கு மருந்து பிறமன் ஆயிழைத் தன்நோய்க்குத் தானே மருந்து) என்று திருக்குறள் கூறுவனை நினைவுபடுத்துகிறது.

மடந்தை “செங்கோல் ஒழித்தெவர்க்கும் தீங்குபுரிவேந்தர் வெங்கோலினும் கொடிய வேற்கண் ணாள்” என்கிறது மதுரைச்சொக்கநாதர் உலா.

அரிவை-தெரிவைப் பருவப் பெண்களைக், காமப்பயிற்சி மிக்குள்ளவர்களாக வருணிப்பதும் மரபு. திருப்பூவண நாதர் உலாவில், பேதை, தன்னகத்தில் சிற்றில் இழைத்துச் சிறுசோறு அட்டு அயர்கிறாள் என்றும், பெதும்பைப் பருவத்தாள் தான் வளர்த்த முல்லைக்கொடி அரும்பு எடுக்கக் கண்டு அதற்காகப் போதவிழ் புதுவிழா கொண்டாடுவதாகவும் வருகிறது. மங்கைப் பருவத்தாள் சித்திரமண்டபத்தில், சேடியரோடு அம்மானை ஆடிக்கொண்டிருந்ததாக வும், மடந்தை நிலாமுற்றத்தில் இருந்து விறலி பாடிய திருத்தலப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அரிவை, ஓங்கிய செய்குன்றிலிருந்து தோழியைத் தூது அனுப்ப விரும்பியிருந்ததாகவும், தெரிவை, மணமிக்க பூஞ்சோலையிலிருந்து ஓவியப் புலவன் வரைந்த பொன்னனையாளின் படங்களைக் கண்டு விரகவேதனை கொண்டதாகவும், பேரிளம்பெண் ஓங்குமணிமாடத்துள் ஒப்பற்ற அரியணையிலிருந்து முதற்பருவப் பெண்டிர்க்கு மோகநூலைக் கற்பிப்பதாகவும் கூறுகிறது திருப்பூவணநாதர் உலா. இத்தகைய காட்சிகளைக் காணும் நமக்கு மனத்தில் எழும் கேள்வி-பரத்தையர் குலப்பெண்கள் என்றாலும் இவர்களுக்கு வேறு வேலையே இல்லையோ?

உலா நூல்களின் பிற இயல்புகளாக நாம் கூறத்தக்கவை, அவற்றின் மிதமிஞ்சிய கற்பனை, அதன் விளைவாக எழும் பல்வேறு அணிகளும் வருணனைகளும். உலா இலக்கியத்தின் முன்னிலை, பின்னிலைக் கூறுகள் யாவற்றிற்கும் பொதுவாயினும், அந்த அந்த உலாப்பிரபந்தத்தின் நூலாசிரியரின் புலமைத்திறனுக்கு ஏற்றபடி கருத்துகளும் நடையும் கற்பனைகளும் காலப்போக்கில் உண்டான மாறுபாடுகளும் காணப்படும். அதனால் எவ்வளவு உலாக்கள் படித்தாலும் சலிப்புண்டாவதில்லை என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

காளமேகப் புலவரை ஒரு நகைச்சுவைத் தனிப்பாடற் புலவராகப் பலரும் அறிவர். அவர் திருவானைக்கா உலா பாடியுள்ளார். மங்கையின் கூந்தலை வருணிக்க வந்தவர், காவிரியாற்றின் அறல்போலும் ஓதியாள் என்கிறார். மாதவி, சண்பகம், பாலை, புன்னை, எழிற்பாடலி, கொண்மா, மகிழம், மரா, அசோகு, குரா என்னும் பத்து மரங்களும் மலராவிடில் இளம்பெண்கள் பண்பாடல், நிழல்படல், நட்டல், ஆடல் முதலியவற்றைச் செய்தால் மலரும் என்பர். ஆனால் அரிவைப் பெண் செஞ்சொல் பேசினாலே பட்டமரமும், மலையும் சித்திரமும் உயிர்பெற்றெழும் என்கிறார் காளமேகம்.

அம்மானை ஆடுதலைக் குறிக்கும்போது, அது எவ்வாறு வரும் எனத் தயங்கவேண்டாம், தானாகவே வரும் என்பதைப் புராணக்கதைகளினால் விளக்குகிறார்.
காவை அரனார்க்கு அன்று
நீர்விழுந்த ஆரம்போல் நேருங்காண், நாவலர்
அன்று ஆற்றில் இட்டபொருள் ஆரூர்க் குளத்துவர
என்றார்க்கு இதுவும் எளிது என்ன

இங்கு விருத்தாசலத்தில் பெற்ற பொன்னைத் திருமணிமுத்தா நதியில் இட்டு திருவாரூர் கமலாலயக் குளத்தில் சுந்தரர் அதனைப் பெற்ற செய்தி சொல்லப்படுகிறது. இம்மாதிரிப் புராணச் செய்திகளைப் பெய்து பாடப் பெரும் அறிவும் வேண்டுமன்றோ?

சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகள் திருவானைக்கா உலாவில் உள்ளன என்று நாம் கூற முடியும். ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு தலவிருட்சம்-மரம் உண்டென்றும் அதன்கீழ் இறைவன் உறைகிறான் என்றும் கூறுவது மரபு. மக்கள் இக்காலத்திற்போல அக்காலத்தில் மரங்களை வெட்டவில்லை, வழிபட்டனர். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு ஈசனுக்கு அடையாளம் அல்லவா?

நீணிலத்து,
ஐந்து நிலமும் அமைந்து கிளர்காவின்
வந்து வளர் தேமாவை மாமகிழை-முந்தியகல்
லாலை வடத்தை அருச்சுனத்தை ஆத்திதனைப்
பாலையை வேயைப் பலாத் தன்னை-நீலியை
புன்னையைக் கூவிளையைப் புன்கைப் புனக்கடம்பை
வன்னியைக் கொன்றையை மாதளையைத்-தன்னைச்
சினைதரு பாதிரியைத் தில்லையைக் காயாப்
பனையை இலந்தையைப் பராரையைப்-புனைகுருந்தை
நெல்லியை நோக்கினாள் நித்தருறை நீழலெனச்
சொல்லி யவற்றைத் தொழுதிட்டாள்

என்று ஒரு தலைவியின் செயல் கூறப்படுகிறது. இவ்வாறே கடம்பர்கோயில் உலாவிலும் சொக்கநாதர் உலாவிலும் மரங்களின் சிறப்பும் வழிபாடும் சொல்லப்பட்டுள்ளன. இன்று மக்கள் இவ்வாறு மரங்களை வழிபட்டால் போதுமே? சுற்றுச்சூழல் மாசுபாடும் வெப்பமும் பசுமைஇல்ல விளைவும் ஓசோன் ஓட்டையும் இருக்குமா? எவ்வித நூலிலும் நாம் காணக்கூடிய நற்கருத்துகள் பல இருக்கவே செய்யும்.

இறைவனை வழிபடும் பெண்ணொருத்தி சொல்கிறாள்-”யானும் நெடுமாலுடனே வந்தேன் மலைவேளைப் பெற்றேன்” என்று. “இறைவனாகிய உன் மனைவி மீனாட்சிதான் திருமாலுடன் பிறந்தவள், செவ்வேளாகிய முருகனைப் பெற்றவள் என்பது அல்ல, நானும் நெடுமாலுடனே வந்தேன் (நீண்ட மயக்கத்துடனே வந்தேன்), மலைவேளைப் பெற்றேன் (என்னோடு மலைக்கின்ற மன்மதனைப் பெற்றேன்)” என்று சிலேடையாகக் கூறுகிறாள். இத்தகைய சொற்சுவை எல்லா உலா இலக்கியங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது.

தலசம்பந்தமான உலாக்களில் தலசம்பந்தமான செய்திகளும் தலப்பெருமையும் புராணக் கதைகளும் வரலாற்றுக் குறிப்புகளும் காணப்படுகின்றன. தெய்வத்தின்மீது இயற்றப்படும் உலாக்களில் பக்திச் சுவையும் ததும்பிநிற்கிறது. கவிஞர்கள் தத்தம் கல்வியறிவின் ஆழத்திற் கேற்ப யமகம், திரிபு, சிலேடை, மடக்கு, முரண், எண்ணணி முதலியவைகளை அமைத்துச் சொற்சுவையும் பொருட்சுவையும் ததும்பப் பாடியுள்ளனர் ஆதலின் அமைப்பு முறை ஒன்றாயினும் ஒவ்வொரு உலாவும் ஒவ்வொரு வகையிற் சிறந்து இன்பம் பயப்பதாகும் என்பது உலா இலக்கியம் பற்றிப் பழங்கால அறிஞர் கருத்து.

ஆயினும் காலத்துக்கு ஒவ்வாக் கற்பனையைக் கொண்டிருப்பதாலும் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கு உள்ளடங்கியிருப்பதனாலும் உலா இலக்கியங்களைக் கற்பார் எண்ணிக்கை இருபதாம் நூற்றாண்டிலேயே குறைந்துபோயிற்று. பிள்ளைத் தமிழ், தூது, கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்கள் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டபோதும் உலாவுக்கு அச்சிறப்பும் கிடைக்கவில்லை. சைவசமயம் தழைத்தோங்கி இருந்த ஒரு காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட இம்மாதிரி நூல்கள், இன்று பழங்கால இலக்கியங்களைக் கற்கவேண்டும் என்று எண்ணும் சிலருடைய வாசிப்புக்கு உட்பட்டவை ஆகிவிட்டன. நாடுகளுக்கும், ஏன், கோயில்களுக்கும் கூடக் காலத்தின்பாற்பட்ட எழுச்சியும் தாழ்ச்சியும் வருவதைக் காண்கிறோம். அவ்வாறிருக்கும்போது இலக்கியங்களுக்கும் அவ்வக் காலத்திற்கேற்ற உயர்வும் தாழ்வும் இருக்கத்தானே செய்யும்?

இலக்கியம்