தமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி

தமிழ்  நாவல்களில் ஒரு  முன்னோடி -மண்ணாசை
சங்கரராம் என்ற புனைபெயரை ஏற்றுக்கொண்ட டி.எல். நடேசன் என்பவர் எழுதிய நாவல் ‘மண்ணாசை’. திருச்சி மாவட்டத்துக்காரர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் Love of Dust என்று ஒரு நாவல் எழுதினார். அதுதான் பிறகு தமிழில் அவராலேயே ‘மண்ணாசை’ என்று ஆக்கப்பட்டது (1940). அக்காலத்தில் ஆங்கிலத்தில் முதலில் எழுதிவிட்டுப் பிறகு தமிழிலும் எழுதிப்பார்ப்பது வழக்கமாக இருந்தது. கா. சி. வேங்கடரமணியும் இப்படிச் செய்தவர்தான். முதன்முதலில் எழுதப்பட்ட வட்டார நாவல் என்று இதைச் சொல்லலாம் (நாகம்மாளுக்கும் முன்னால்). தேசியப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட நாவல் என்பதும் இதன் சிறப்புகளில் ஒன்று. (அக்காலத்தில் வை.மு. கோதைநாயகி அம்மாள் தனக்கே உரிய குடும்ப-தேசியக் கலப்புக் கற்பனைக் கதைகளை எழுதிவந்தார். கல்கியும் எழுதத் தொடங்கியிருந்தார்.)

அந்தக் காலத்தில் உரையாடல் அமைப்பு வட்டாரவழக்கில் அமைவது புதுமையானது. திருச்சி மாவட்டத்தில் எந்த நெடுஞ்சாலையும் தொடர்வண்டியும் தொடாத வீரமங்கலம் என்ற கிராமம் இதன் கதைக்களம். வெங்கடாசலம் என்ற விவசாயி புதியவகைக் கடலைப் பயிர்செய்யக் கடன் வாங்குகிறான். தற்செயலாக ஏற்பட்ட தீவிபத்தில் இந்தப் பயிர் நாசமாகிவிடுகிறது. கடனைத் தீர்க்கமுடியாத நிலை. கொஞ்சம் நிலத்தை விற்றுக் கடனைத் தீர்க்குமாறு நண்பர்கள் வேங்கடாசலத்துக்குச் சொல்கின்றனர். வேங்கடாசலத்தின் மண்ணாசை இந்த யோசனையை ஏற்கத் தடைபோடுகிறது. இந்நிலையில் அவனுடைய வளர்ப்புமகன் வேலு மீது அநியாயமாகக் கொலைக் குற்றம் ஏற்படுகிறது. இந்த வழக்குக்கென அவன் தன் நிலத்தை விற்கவேண்டி வருகிறது. இறுதியில் மாயாண்டியின் மகன் தானே கொலைசெய்ததாக ஒப்புக் கொள்ள, அவன் மகளை வேலு மணக்கிறான். வேலுவின் சொந்தத் தகப்பன் பினாங்கில் சொத்துச் சேர்த்து அதை வெங்கடாசலத்திற்கும் வேலுவுக்கும் விட்டுவிட்டு இறந்த செய்தி வருகிறது. ஆனால் இங்கும் வாழ்நாள் முழுவதும் தொல்லை அனுபவித்த வேங்கடாசலம் இறந்துவிடுகிறான். சற்றே ஏறுமாறான திருப்பங்களும் தற்செயல் நிகழ்ச்சிகளும் கலந்த கதை.

என்றாலும், “தமிழ்நாட்டு கிராம வாழ்க்கையின் வரலாறு, தன் கொள்கைக்காக இறுதியளவும் போராடிய பழமையான குடியானவனின் வீரத்தை வருணிக்கும் காவியம், ஆற்றலும் ஆழமும் தெளிவும் ஓட்டமும் எழிலும் இனிமையும் ஆகிய இலக்கியப் பண்புகள் வாய்ந்த உன்னதமான சமூகநாவல்” என்று இதை மதிப்பிட்டுள்ளனர். இதில் “காவிரி ஆற்றங்கரை மாமரத்தின் மணம் வீசுகிறது. காற்றில் தொப்பு தொப்பு என்று விழும் தேங்காயின் ஒலி கேட்கிறது. அருவிகளின் இன்னிசை காதில் விழுகிறது. வடிகால்கரைமேல் கிடக்கிற ஈரக்களி பிசுக்குப் பிசுக்கென ஒட்டிக் கொள்கிறது. கிராமவாசிகளின் பேச்சுகள் உள்ளபடி காதில் விழுகின்றன” என்று பாராட்டுகிறார் பெ. நா. அப்புஸ்வாமி. பின்னாட்களில் உருவான மண்வாசனை நாவல்களுக்கு முன்னோடி இந்த நாவல்.

தினம்-ஒரு-செய்தி