தற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்

Pooranachnadran.k
(தற்கால தமிழ் இலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பு
 குறித்து சிறந்த மொழிபெயர்ப்பாளரும் பன்முகத் திறன் கொண்டவருமான பேராசிரியர் க. பூரணச் சந்திரன் அவர்களிடம் நேர்காணல் கண்டோம். பல தளங்களில் சிறப்பான ஆழ்ந்த அறிவு ஞானம் கொண்டுள்ள இவர் ஆங்கிலத்தில் இருந்து பல சிறந்த நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த ஆண்டின் (2012)சிறந்த மொழி பெயர்ப்பாளராக ஆனந்த விகடன் இவரைத் தெரிவு செய்துள்ளது. மொழி பெயர்ப்பு குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.)
சிறகு- நீங்கள் எப்போது முதல் மொழி பெயர்க்கத் தொடங்கினீர்கள்?
பூரணச்சந்திரன்-
 நான் 1982இல் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். மொழிபெயர்த்த முதல் நூல் “ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 365 நாட்கள்” என்ற மருத்துவ நூல். ஏறக்குறைய எல்லாத் துறைகளிலும் மொழிபெயர்த்திருக்கிறேன். கலைச் சொற்களையும் நிறைய உருவாக்கியிருக்கிறேன். இதைத் தமிழுக்கு நான் செய்த கொடையாக நினைக்கிறேன். உதாரணமாக இன்று தொடர்பியல் துறையில் பயன்படும் பின்னூட்டம் என்ற சொல் முதன் முதலில் 1989இல் நான் உருவாக்கியதுதான். மேலும் தமிழில் அமைப்பியம், பின் அமைப்பியம், பின் நவீனத்துவம் சார்ந்த கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். அதுவும் திறனாய்வுத்துறையில் கலைச்சொல் உருவாக்கத்திற்கு உதவியிருக்கிறது.

சிறகு- நீங்கள் மொழிபெயர்ப்புச் செய்யும் புத்தகங்களை உங்களின் விருப்பத்தின் பேரில் அல்லது கட்டாயத்தின் பேரில் தேர்வு செய்வீர்களா?

பூரணச்சந்திரன்- இதுவரை நானாகத் தேர்ந்தெடுத்ததில்லை. எனது பதிப்பாளர்கள் -அடையாளம், காலச்சுவடு, எதிர்வெளியீடு போன்றோர் எந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதைத்தான் செய்கிறேன். ஆனால் என்னுடைய கருத்தியலுக்கு உடன்பாடாக அவை இருந்தால் மட்டுமே செய்வேன் என்ற நிபந்தனையை முதலிலேயே சொல்லி விடுகிறேன். இப்படி அவர்களிடம் புத்தகத் தேர்வை விடுவதற்குக் காரணம் என்ன வென்றால், சந்தைநோக்கு அவர்களுக்கு உண்டு. எந்தப் புத்தகம் விற்கும் விற்காது என்ற கணிப்புகள் அவர்களிடம் உண்டு. அவற்றில் எனது கருத்தியலுக்கேற்ப நான் தேர்வு செய்துகொள்கிறேன்.

சிறகு- ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தால் எந்த புத்தகத்தை தேர்வு செய்வீர்கள்?

பூரணச்சந்திரன்- ஆங்கிலத்தில் உள்ள பல நல்ல இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் எண்ணம். அப்படிச் செய்யக்கூடியவர்களும் நிறைய இருக்கிறார்கள். நான் சிறப்பாகக் கவனம் செலுத்த விரும்பும் துறை, திறனாய்வும் இலக்கியமும். திறனாய்வு அதிலும் மிகப் பெரிய துறை. அதற்கான கலைச்சொற்களே தனியாக உள்ளன. ஆங்கிலத்தில் திறனாய்வாளர்கள் எழுதுவதைப் புரிந்துகொள்வதே கடினம். அந்த அளவுக்குத் தனித்த திறனாய்வு நடையை உருவாக்கியிருக்கிறார்கள். எனக்கு யாராவது தொடர்ந்து பண உதவி செய்தால் நான் ஆங்கிலத்தில் உள்ள சிறப்பான திறனாய்வு நூல்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்ப்பேன். உதாரணமாக பார்த், லக்கான், டெரிடா, ஃபூக்கோ இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவருவது தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.

சிறகு- தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் எந்தப் புத்தகத்தை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?

பூரணச்சந்திரன்- சங்க இலக்கியங்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டார்கள். ஏ.கே. இராமானுஜனின் மொழிபெயர்ப்புகள் சிறப்பானவை. ம.லெ. தங்கப்பாவும் நல்ல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். சமீபத்தில் முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வளம் குன்றாமல் பெயர்த்துள்ளார். மிகவும் கடினமான பணி இது. பிற சிலர் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்றவற்றையும் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளுக்கு ஏராளமான ஆங்கில மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஏனென்றால் இலக்கியத்தன்மையை அவை சரிவரக்  கொண்டுசெல்லவில்லை. கம்பர் மிக அற்புதமாக, உணர்வுகளுக்கு ஏற்ற சந்தத்தைக் கையாள்பவர். அதை மொழிபெயர்ப்பில் கொண்டுசெல்லவே முடியாது. எனவே மொழிபெயர்க்கும்போது கதையம்சம் சென்று சேர்கிறதே அல்லாமல் இலக்கியத்தன்மை சென்று சேர்வதில்லை. திருக்குறள் மிக அற்புதமான இலக்கியம். ஆனால் நான் சந்தித்த வடநாட்டவர்கள் எல்லாம் இதில் என்ன இருக்கிறது? வெறும் அறிவுரைதானே என்று கேட்டிருக்கிறார்கள். நான் அதிகம் உழைத்து மொழிபெயர்க்க விரும்புவது திருக்குறளை, அடுத்து குறுந்தொகையை. அண்மைக்கால இலக்கியங்களை -நாவல், சிறுகதை போன்றவற்றை ஆங்கிலத்தில் பெயர்ப்பது எளிது.

சிறகு-1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மொழிபெயர்க்கும்போது குறைந்த அளவு பக்கங்களாக வெளியிடுகிறார்கள். இது தவறில்லையா?

பூரணச்சந்திரன்- தவறில்லை. ஆங்கிலத்தில் தழுவல் பதிப்பு, சுருக்கப்பட்ட பதிப்பு (அடாப்டட் வெர்ஷன், அப்ரிட்ஜ்ட் வெர்ஷன்) என்றெல்லாம் உள்ளன. நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய டேவிட் காப்பர்ஃபீல்டு நாவலை முழுமையாகப் படித்தேன். ஆனால் அதன் தழுவிய, சுருக்கப்பட்ட பதிப்பை ஆங்கிலத்தில் ஒன்பதாம் வகுப்பிலேயே சுமார் 100 பக்க அளவில் படித்துவிட்டேன். ஆங்கிலத்தில் இப்படி புகழ்பெற்ற எல்லா நாவல்களுமே சுருக்கப்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன. குறிப்பாக ஈ.எஃப் டாட் என்பவர் பெயர், பிளாக்கி அண் சன்ஸ் என்ற பதிப்பகம் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. தமிழில் நாம் அதைப்போல் செய்ய வேண்டும். உதாரணமாக பொன்னியின் செல்வன் கல்கியின் புகழ்பெற்ற சரித்திர நாவல். இது ஏறத்தாழ 2000 பக்கம். இதை 150 பக்க அளவில் சுருக்கினால் பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக வைக்க முடியும். இப்படிப்பட்ட முயற்சிகளால் நல்ல தமிழ் உணர்வு வளரும்.

சிறகு- தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பது குறைவாக இருக்கிறதே, இதற்கு என்ன காரணம்?

பூரணச்சந்திரன்- முக்கியமாக இரண்டு காரணங்கள். தமிழ் பழமை வாய்ந்த மொழி. அதன் இலக்கியங்களை-கம்பராமாயணம் போன்றவற்றை- சுவை குன்றாமல் மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான காரியம். நம் தமிழருக்கே பழந்தமிழ் இலக்கியம் புரிவதில்லை. அப்படியானால் மொழிபெயர்ப்பதை பற்றி நினைத்துப்பாருங்கள். பிறமொழிக்காரர்கள் தான் தமிழிலுள்ள இலக்கியத்தை அவரவர் மொழியில் பெயர்க்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேற்கத்திய அறிஞர்கள் தமிழ் செம்மொழி சிறந்த மொழி என்று ஏற்றுக்கொண்டார்கள் என்றால், இலக்கியத்தைப் படித்து அவ்விதமாக ஏற்கவில்லை, திராவிட மொழிகளில் மூத்தமொழி தமிழ் என்பதால் ஏற்றார்கள். இடைக்கால, பிற்கால, சிற்றிலக்கியங்கள் யாவும் வடமொழிக் கதைகளை உட்கொண்டவை. அவற்றை மொழிபெயர்த்தால் என்ன பயனளிக்கும் என்பதும் சந்தேகம். அண்மைக்கால இலக்கியங்களை மொழி பெயர்ப்பதில் பெரிய சிக்கல் இருக்கிறது. யார் யார் பரிசு வாங்குகிறார்களோ அவர்களை எல்லாம் சிறந்த ஆசிரியர்கள் என்று கருதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்கள். உதாரணமாக அகிலன் ஞானபீட பரிசு வாங்கினார். அவருடைய நூல்களை எல்லாம் மொழிபெயர்த்தார்கள். அதுபோல பிற சாகித்திய அகாடெமி போன்ற பரிசு வாங்கியவர்களின் நூல்களையும் மொழிபெயர்க்கிறார்கள். பரிசுபெறாத நல்ல ஆசிரியர்களின் நூல்களை விட்டுவிடுகிறார்கள். இது தமிழில் இருக்கும் பிரச்சினை. பழந்தமிழ் இலக்கியத்தை இலக்கியச்சுவையோடு மொழிபெயர்ப்பதற்கோ சரியான ஆட்கள் இல்லை.

அண்மைக்கால இலக்கியத்தில் தமிழிலிருந்து தரமுள்ளவர்களைவிட தரமற்றவர்களை அதிகமாக மொழி பெயர்க்கிறார்கள். இது பிறமொழியாளர்கள் மத்தியில் தமிழைப் பற்றி ஒரு இழிவான எண்ணத்தை ஏற்படுத்தும்.

ஒரு வங்காளி நாவலை நான் தமிழில் மொழிபெயர்க்கிறேன் என்றால் எனக்கு வங்காளம் தெரியவேண்டும். தமிழ் தெரியவேண்டும். மேலும் மொழி பெயர்ப்பவன் இலக்குமொழியாளனாக இருக்கவேண்டும். அப்போதுதான் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும். தமிழிலிருந்து வங்காளிக்குப் பெயர்க்க வேண்டும் என்றால் பெயர்ப்பவன் வங்காளியாக இருக்கவேண்டும். ஆனால் வங்காளிக்குத் தங்கள் மொழிதான் உயர்வு, பிற தாழ்ந்தவை என்ற எண்ணம். அதனால் அவர்கள் மொழிபெயர்க்க வருவதில்லை. தமிழிலிருந்து இந்திக்குப் பெயர்க்கவேண்டும் என்றால் இந்தி மொழிக்காரர்களாக இருந்தால்தான் சிறப்பாகச் செய்வார்கள். ஆனால் அவர்கள் முன்வருவதில்லை. காரணம், இந்தி தேசிய மொழி. நாம் பிறமொழிகளைப் படிக்கவேண்டியதில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு. நாம்தான் இந்தி, மராட்டி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு என்றெல்லாம் நல்ல இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் செய்திருக்கிறோமே தவிர அவர்கள் அப்படிச் செய்யவில்லை. (சாகித்திய அகாதெமி மொழி பெயர்ப்புகளை பார்த்துவிட்டுத்தான் இதைச் சொல்கிறேன்), இதனால் தமிழின் சிறந்த படைப்புகள் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லை. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கோளாறு. இந்தியாவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள் 22. இவற்றில் ஒன்றை மட்டும் தேசியமொழி என்ற தகுதி கொடுத்துப் பிறவற்றை கவனியாதுவிட்டால், அவை வளர்வதில்லை. குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளைப் படிக்கத் தேவையில்லை என்ற மனப்பான்மையை அரசியல் சட்டம் உருவாக்கி இருக்கிறது. அதனால் வடநாட்டுக்காரர்கள் தென்னிந்திய மொழிகளைப் படிப்பது குறைவு. அதிலும் தமிழ்தான் வடமொழிச் சார்பு மிகக் குறைவானது. அதனால் இதைப் படிப்பது மிகவும் குறைவு. மலையாளம் போன்ற மொழிகளில் சமசுகிருதக் கலப்பு ஏராளம். நாலு க, நாலு ச, நாலு ட, நாலு த, நாலு ப போன்றவற்றை ஏற்றதோடு சம்புகாவியம் போன்ற வடமொழி இலக்கிய வகைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். தமிழ் சமஸ்கிருதத்திற்கு அயலான மொழி. இந்திய மொழிகளிலேயே வடநாட்டுக்கு மிகக்குறைவாக மொழிபெயர்க்கப்பட்டது தமிழ்தான். இதற்குக் காரணம் வடநாட்டவரின் குறுகியநோக்கம்.

சிறகு– மொழிபெயர்ப்புத் துறை இணைய தளத்திற்குப் போகிறதா? அதற்குத் தனியான இணைய தளம் இருக்கிறதா?

பூரணச்சந்திரன்- இருக்கிறது…

சிறகு- மொழி பெயர்க்கும்போது ஒரு படைப்பின் மூலம் சிதைந்து விட வாய்ப்பு உண்டல்லவா?

பூரணச்சந்திரன்- மொழிபெயர்ப்பாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும். மூலமொழியைப் போலவே இலக்குமொழியும் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். நல்ல ரசனை வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தால்தான் நல்ல மொழிபெயர்ப்பு கிடைக்கும். இன்றைக்கு இருககும் பல மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூலமொழி அறிவும் ரசனை யும் போதிய அளவு இருப்பதில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் ஸ்பானிய மொழிக் கதைகளை ஆங்கில வாயிலாகத் தமிழில் மொழிபெயர்க்கிறார், ஆனால் அவருடைய ஆங்கிலத்தகுதி, மேற்கத்திய கலாச்சார அறிவு பற்றி எனக்குச் சந்தேகம். அதனால் சரிவர இல்லை எனத் தோன்றுகிறது. ஜெர்மானிய இலக்கியங்களை-முக்கியமாக பிரெஹ்டின் நாடகங்களை 1970களிலேயே தமிழில் மொழிபெயர்த்தார்கள். ஆனால் எந்த மொழிபெயர்ப்புமே சரியாக வாசிக்கப்படும் அளவுக்கு இல்லை. இலக்கியமாகத் தமிழில் வரவில்லை. இந்தக் குறைபாடுகள் இன்றி மொழிபெயர்க்கவேண்டும்.

சிறகு- மொழிபெயர்க்கும் போது ஒவ்வொரு வார்த்தையாக அல்லது ஒரு பத்தியை படித்துவிட்டு அதன் கருத்தை உள்வாங்கி மொழிபெயர்ப்பீர்களா? எப்படி?

பூரணச்சந்திரன்- ஒவ்வொரு வார்த்தையாக மொழிபெயர்ப்பது முடியவே முடியாத காரியம். ஆங்கிலத்தில் கருத்துகள் வாக்கியமாக இடம்பெறும் முறை வேறு, தமிழில் வேறு. இந்தியில் வேறு. ‘The man who is there’  என்ற ஆங்கிலத் தொடரை அங்கே உள்ள மனிதர் என்று தமிழில் பெயர்க்கலாம். வார்த்தை வார்த்தையாக மனிதர் யார் இருக்கிறார் அங்கு என்று பெயர்க்க முடியாது. பொதுவாக மொழி பெயர்ப்பாளர்களாகிய நாங்கள் நூல்முழுவதையும் படித்துவிடுவோம். பிறகு பெயர்க்க வேண்டிய பகுதியை மறுபடியும் ஒருமுறை படித்துவிட்டு, வாக்கியம் வாக்கியமாக மொழிபெயர்ப்போம். சிலபேர் கடினமான வாக்கியங்களைத் தாண்டிப்போய்விடுவார்கள். நான் அப்படிச் செய்வதில்லை. முழுவதையுமே மொழிபெயர்ப்பதுதான் என் வழக்கம்.

சிறகு- ஆங்கிலத்தில் இருந்து மட்டுமா அல்லது வேறு மொழிகளில் இருந்தும் நீங்கள் மொழி பெயர்க்கிறீர்களா?

பூரணச்சந்திரன்- பொதுவாக இதுவரை பதிப்பகத்தார்கள் என்னிடம் ஆங்கிலத்திலிருந்துதான் மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டார்கள். எனக்கு இந்தி நன்றாகத் தெரியும். மற்ற மொழிகள் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். நிறைய மொழிகளைப் படிக்க முயற்சித்துப் பாதியில் விட்டுவிட்டேன். தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகியவற்றில் எதில்வேண்டுமானாலும் பெயர்க்க இயலும்.

மொழிபெயர்த்த_கட்டுரைகள்