திருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் திருச்சி நாடக சங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு வினாநிரல் அனுப்பியிருந்தது. அதற்கு என் பதில்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
1. குழுவின் பெயர்
திருச்சிநாடகச் சங்கம், திருச்சி மற்றும் சென்னை.
2. முகவரி
(திரு. ஜம்புநாதனின் முகவரி)
3.குழுவின் பெயருக்கான காரணம்
சிறப்பாக ஒன்றுமில்லை. பங்கேற்ற நண்பர்கள் அனைவரும் திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஆதலின் திருச்சி நாடகச் சங்கம் என்று பெயரிடப் பட்டது.
4. குழு தொடங்கப்பட்ட சூழல்
தமிழ் நவீன நாடகம் என்று பெரிதாக அப்போது எதுவும் இல்லை (ஏன், இப்போதும் இல்லை). பரீக்ஷா, நிஜநாடக இயக்கம், கூத்துப்பட்டறை போன்ற ஒரு சில இயக்கங்கள் மட்டுமே இருந்தன. ஏற்கெனவே நாங்கள் திருச்சி வாசகர் வட்டம், சினிஃபோரம் என்ற அமைப்புகளை நடத்திவந்த நிலையில் நாடகத்துக்கும் எங்கள் பங்களிப்பைச் செய்வோம் என்ற எண்ணத்தில் இது தொடங்கப்பட்டது. 1978இல் என்று நினைக்கிறேன், வங்க நாடகாசிரியர் திரு. பாதல் சர்க்கார் சென்னையில் பயிற்சிப்பணிமனை ஒன்று நடத்தினார். அதில் திரு. ஆல்பர்ட், திரு. கோவிந்தராஜ், திரு. மனோகர், திரு. சாமிநாதன் போன்று திருச்சி நண்பர்கள் சிலர் பங்கேற்றனர். அதனால் நவீன நாடக உருவாக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. சிறுபத்திரிகைகளில் அப்போது வெளிவந்திருந்த நாற்காலிக்காரர்கள், காலம் காலமாக போன்ற நாடகங்களும் அதற்கு ஊக்கம் அளித்தன. திரு. ஆல்பர்ட் அவர்கள் இளம் வயதுமுதலாகவே நாடகங்கள் நடத்தி வந்தவர். கிறித்துவச் சார்பான நாடகங்களையும் நடத்தியிருந்தார். இத்துறை பற்றி நன்கறிந்தவரும் கூட. எனவே அவர் தந்த ஊக்கம் பெரிது.
5. குழு எப்போது தொடங்கப்பட்டது?
இன்ன நாள் என்று குறிப்பாகச் சொல்லமுடியாது. 1980இல் பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித் நாடகத்தை திரு. கோ. ராஜாராம் மொழிபெயர்த்தார். அதை நாடகமாக்க வேண்டும் என்று விரும்பித் தொடங்கினோம், அரங்கேற்றினோம். அந்நிகழ்ச்சியுடன் திருச்சி நாடக சங்கம் தொடங்கியதாகக் கொள்ளலாம்.
6. தொடக்கத்தில் குழுவின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்
திரு. ஆல்பர்ட், திரு. ஜம்புநாதன், திரு. பலராம், திரு. விக்டர் போன்றவர்கள். ஆல்பர்ட் ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். ஜம்புநாதன் பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்தார். பலராம், விக்டர் பிஎச்இஎல்-இல் பணிபுரிந்தனர்.
7. தொடக்கத்தில் குழுவின் உறுப்பினர்கள் விவரம்
திருச்சி வாசகர் வட்டம். சினிஃபோரம் ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் நாடகச் சங்கத்தின் உறுப்பினர்களே. ஏறத்தாழப் பத்துப் பேர் எனலாம். மேற்கூறிய ஆல்பர்ட், ஜம்புநாதன், பலராம், கோ. ராஜாராம் தவிர, அம்ஷன் குமார், மனோகர், கோவிந்தராஜ், பூரணச்சந்திரன், ராஜன் குறை போன்ற சிலர் அதன் முக்கிய உறுப்பினர்கள் எனலாம்.
8. குழு தயாரித்து நிகழ்த்திய முதல் நாடகம்
பிறகொரு இந்திரஜித் (ஏவம் இந்திரஜித்-வங்காளி மூலம்; தமிழில் கோ. ராஜாராம்)
9. குழுவிற்கான சமூக அரசியல் பார்வை
எல்லாரும் தமிழில் நவீனத்துவப் பார்வையும், அரசியலில் பெரும்பாலும் காந்திய அல்லது இடதுசாரிப் பார்வையும் கொண்டவர்கள் எனலாம்.
10. இந்த அரசியல் பார்வையோடுதான் உங்கள் முதல் நாடகம் தேர்வுசெய்யப் பட்டதா?
ஆம். முக்கியமாக அப்போது எழுத்து இதழ் வழிவந்த தமிழின் நவீனத்துவப் (மாடர்னிஸ்ட்) பார்வை எங்களிடையில் பிரபலமாக இருந்தது என்று கூறலாம். அத்துடன் பாதல் சர்க்கார் போன்றவர்களின் மென்மையான இடதுசாரி நோக்கும், ஓரளவு காந்திய நோக்கும், முக்கியமாக சமுதாயத்தில் ஒரு அதிருப்தி நோக்கும் உள்ளார்ந்து இருந்தன.
11. இந்த அரசியல் பார்வை உங்கள் குழு தயாரித்து நிகழ்த்திய அனைத்து நாடகங்களிலும் எதிரொலித்ததா?
ஆம். எங்கள் நாடகங்கள் வெளிப்படையான அரசியல் பேசுபவை அல்ல. ஆனால் பாதல் சர்க்காரின் நாடகங்களையும் பரீக்ஷா ஞானியின் நாடகங்களையும் இன்ன பிறவற்றையும் நோக்குபவர்கள் அவற்றில் வெளிப்படும் அரசியல் பார்வையை உணரமுடியும். அதுவே ஓரளவு எங்கள் பார்வையாகவும் இருந்தது.
12. குழுவில் உள்ள நடிகர்களுக்கான அரசியல் புரிதலை உருவாக்க என்ன முயற்சிகள் மேற்கொள்கிறீர்கள்?
தனித்த அப்படிப்பட்ட முயற்சி எதுவும் கிடையாது. உறுப்பினர்கள் யாவருமே உயர் மத்தியதர, மத்தியதர வகுப்பினர். நன்றாகப் படித்தவர்கள். ஆகவே அவரவர் அரசியல் பார்வையும் விமரிசனமும் அவரவர்க்கு இருந்தன. முன்னர்க் கூறிய போதாமை நோக்கு என்பது அடிப்படையாக எல்லாரிடமும் உணரப்பட்ட ஒன்று.
13. குழுவில் உள்ள நடிகர்களுக்கான பயிற்சிகளை எவ்வாறு கொடுக்கிறீர்கள்? யார் கொடுப்பது?
ஒவ்வொரு நாடகத்துக்கும் பெரும்பாலும் ஒரு மாத அளவுக்கு ஒத்திகை நடக்கும். நடிப்புப் பற்றி ஒன்றும் அறியாதவர்களாக இருந்தாலும் ஒத்திகை வாயிலாக அவர்கள் “ஃபார்முக்கு” வந்து விடுவார்கள். திரு. ஜம்புநாதன்தான் பெரும்பாலும் ஒத்திகையைக் கவனித்துப் பயிற்சி அளிப்பவர். நடிப்பிலும், வசன உச்சரிப்பு போன்றவற்றிலும் திருத்தங்கள் செய்வார். பிறர் கூடியிருந்தால் அவர்களும் சொல்வோம்.
14.உங்கள் நாடகக் குழு இதுநாள்வரை தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்கள் எவை?
ஏறத்தாழப் பதினைந்துக்கு மேல் இருக்கும். பிறகொரு இந்திரஜித், ஹயவதனா, அமைதி-அமைதி கோர்ட் நடக்கிறது, வேடந்தாங்கல் போன்றவை தொடக்கக் கால நாடகங்கள், முக்கியமானவை. பிறகு ஜம்புநாதன் முயற்சியால் பத்து நாடகங்களுக்கு மேல் நிகழ்த்தப் பட்டிருக்கலாம். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாடகங்கள்.
15. நாடகத் தயாரிப்பிற்கான செலவினங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
ஒத்திகை வரை அதிகச் செலவில்லை. தேநீர், நாடகப் பிரதி தயாரிப்பு போன்றவற்றைத் தவிர. முக்கிய ஒத்திகை (கிராண்ட் ரிஹர்சல்)இலும், நாடக அரங்கேற்றத்திலும் தான் செலவு. முக்கியமாக ஜம்புநாதனும் பிற நண்பர்கள் சிலரும் அதைப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம்.
16. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்திய நாடகங்களை நெறியாள்கை செய்தோர் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.
தொடக்கத்தில் திரு. ஆல்பர்ட். பிறகு திரு. ஜம்புநாதன் மட்டுமே நாடக இயக்குநர். பிறர் உதவியாளர்கள்.
17. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களின் பேசுபொருள் என்ன?
முன்னமே கூறியதுபோல, அமைப்பின் மீதுள்ள அதிருப்தி. சமூக அக்கறை.
18. அந்நாடகங்களின் வடிவம் குறித்த உமது பார்வை என்ன?
பெரும்பாலும் ஆங்கில, கன்னட, மராட்டி, வங்காளி நாடகங்களின் மொழிபெயர்ப்பாக இருந்ததால், அவற்றின் வடிவங்கள் மூலப்படைப்பைச் சார்ந்திருந்தன. பிரெஹ்ட் போன்ற நாடகாசிரியர்களின் தாக்கம் ஓரளவு உண்டு. அதனால் அவற்றின் வடிவம் பிரதானமாக வேறுபட்டுத் தெரிந்தது. அது தமிழ் மரபிலிருந்து வந்ததல்ல. எனவே பொதுமக்களைச் சென்று சேர்வதில் தடையிருந்தது.
19. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களின் உடை ஒப்பனை, இசை, மேடை அமைப்பு, ஒளி, ஒலிப் பயன்பாடு குறித்துச் சொல்லுங்கள்.
உடை ஒப்பனை, மேடை அமைப்பு பற்றி நண்பர்களுக்குள் நாங்களே தீர்மானித்துக் கொள்வது வழக்கம். இசையைப் பெரும்பாலும் பல்ராம் கவனித்துக் கொள்வார். ஒளி ஒலிப் பயன்பாட்டை எங்கள் ஆலோசனையின் பேரில்,திருச்சி ரசிகரஞ்சன சபா (ஆர்ஆர் சபா)வின் பணியாளரான சாமிநாதன் என்பவர் கவனித்துக் கொள்வது வழக்கம். அந்தந்த நாடகத்துக்கேற்றவாறு இவை அமைக்கப்படும்.
20. தமிழ்மண் சார்ந்த நிகழ்த்தல் மரபுக்கூறுகளை உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களில் எவ்வாறு கையாண்டுள்ளீர்கள்?
இதுதான் பிரதானமான பிரச்சினை. தமிழ் மண்ணின் வெளிப்பாடுகளான கூத்து, அரையர் சேவை, காலட்சேபம் போன்றவற்றின் கூறுகள் கையாளப்படவே இல்லை என்று கூறலாம். ஆங்கிலம் படித்த உயர்மத்திய வகுப்பினரால் அதேபோன்ற வகுப்பினருக்காகத் தயாரிக்கப்பட்டவை இவை. முற்றிலும் அப்போதைய தமிழ்ச் சூழலுக்கு வேறுபட்டிருந்தன என்றுதான் கூறமுடியும்.
21. உங்கள் குழுவிலிருந்து உருவான நடிகர்கள் யார் யார்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?
நடிகர்கள் என்று முக்கியமாக எவரையும் சொல்லமுடியாது. எல்லாம் அமெச்சூர் நடிகர்கள்தான். திரு. அம்ஷன்குமார் கலைத்திரைப்படங்கள் இயக்கும் இயக்குநர் ஆகிவிட்டார். இடையில் அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது என்ற விஜய் டெண்டூல்கரின் நாடகத்தில் தொடங்கி ஒரு சில நாடகங்களில் நடித்தவர், பிஷப் ஹீபர் கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்த திரு. ஏ. ஆர். முருகதாஸ். இன்று பெயர்பெற்ற திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர். அவரை உங்களுக்கே தெரியும்.
22. உங்கள் குழுவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஏதேனும் நாடகக்குழுவைத் தொடங்கி நடத்தி வருகின்றனரா?
அப்படி யாரும் இல்லை. ஆனால் திருச்சி நாடகச் சங்கத்தின் பாதிப்பினால், நான் (பேரா. க. பூரணச்சந்திரன்) மட்டும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் என் சொந்த முயற்சியால், ஊர்வலம் போன்ற ஐந்தாறு பாதல் சர்க்கார் நாடகங்கள், எங்கள் சொந்த நாடகங்கள் சிலவற்றைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தேன். சிலசமயங்களில் திருச்சியின் புறநகர்ப் பகுதிகளிலும் நடத்தியுள்ளேன். கடைசியாக நான் நிகழ்த்திய நாடகம், ‘ஈடிபஸ் அரசன்’. 2007இல் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் நடத்தப்பட்டது. அதற்குத் தலைமை ஏ. ஆர் . முருகதாஸ். என் நாடகங்கள் பெரும்பாலும் சமூகப் பணி முதுகலை படித்தவர்களுக்கும், சில இதழியலாளர்களுக்கும் (சான்றாக திரு. வள்ளியப்பன், தமிழ் இந்து) மக்கள் தொடர்பில் நல்ல பயனளித்தது.
23. உங்கள் குழு எங்கெல்லாம் நாடகம் நடத்தியுள்ளது?
பெரும்பாலும் திருச்சி ஆர். ஆர். சபாவில். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் என் முயற்சியால். திருச்சியின் சில புறநகர்ப் பகுதிகளில். நான் கல்லுக்குழி, பொன்னகர் போன்ற இடங்களில் நடத்தினேன். ஏறத்தாழ 2010 முதல் ஜம்புநாதன் சென்னைக்கு வந்துவிட்ட படியால், சென்னையில், பெரும்பாலும் ஃபிரெஞ்சு கான்சலேட் (அலையாஸ் ஃப்ராங்காய்ஸ்) மன்றம், மாக்ஸ்முல்லர் பவன் போன்றவற்றில்.
24. தமிழ் நவீன நாடகங்களில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
மிகக் குறைவு. திருச்சி நாடக சங்க நாடகங்களில் பெரும்பாலும் புரஃபஷனலாக நடித்துவந்த பெண்கள் சிலரையே ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. கல்லூரியில் அந்தப் பிரச்சினை இல்லை. எனது முதுகலை மாணவியர் நல்ல ஒத்துழைப்பு நல்கினர். நன்றாக நடித்தனர்.
25. உங்கள் குழுவில் பங்குபெறும் கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணி என்ன?
முன்பேகூறியது போல யாவரும் படித்து நல்ல வேலையில் இருந்த மத்தியதர வகுப்பினர். முழுக்க முழுக்க அமெச்சூர்கள். எவ்வித ஊதியமும் கருதியவர்கள் அல்ல. ஆனால் பொழுதுபோக்கான நாடகங்களைத் தயாரிக்கவும் இல்லை.
26. வருடத்திற்கு எத்தனை நாடகங்களை உருவாக்குகிறீர்கள்?
திருச்சி நாடக சங்கத்தில் 1980இல் தொடங்கி 2000 வரை ஏறத்தாழ ஆண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் இருந்தது. திரு. ஜம்புநாதன் சென்னைக்கு வந்துவிட்ட பிறகு இயன்றபோது என்று ஆகிவிட்டது.
27. ஒவ்வொரு நாடகமும் எத்தனை நிகழ்வுகள் நடத்த முடிகிறது?
ஹயவதனா, அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது போன்ற ஒரு சிலவற்றைத் தவிரப் பெரும்பாலும் ஒரே ஒருமுறை மட்டுமே.
28. நாடக ஒத்திகைக்கான இடங்கள் கிடைப்பதில் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?
எதுவும் இல்லை. காரணம், திரு. ஜம்புநாதன் அவரது வீட்டிலேயே நாடக ஒத்திகைகளை நடத்துவது வழக்கம்.
29. உங்கள் குழுவின் நாடகங்களுக்கெனக் கட்டணம் வசூலிப்பதுண்டா?
ஆர். ஆர். சபாவில் நிகழ்த்தியவற்றுக்குக் கட்டணம் உண்டு. ஆனால் வசூல் மிகமிகக் குறைவாகவே இருக்கும். காரணம், தெரிந்தவர்கள், நண்பர்கள், குழுவினர் யாரும் கட்டணம் செலுத்திப் பார்த்ததில்லை.
30. கட்டணம் வசூலிப்பதாக இருந்தால் கட்டணத் தொகை எவ்வளவு?
ஆர். ஆர். சபாவின் அக்காலக் கட்டணத் தொகைதான். பெரும்பாலும் பத்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய்க்குள்தான் இருக்கும்.
31. பார்வையாளர்கள் கட்டணம் செலுத்தித்தான் பார்க்கிறார்களா?
வினா 29இன் விடைதான் இதற்கு.
32. உங்கள் குழுவின் நாடகங்களுக்கென தொடர் பார்வையாளர்கள் இருக்கின்றனரா?
ஓரளவு அப்படித்தான். பார்வையாளர்களில் வெகுசிலரைத் தவிர, பெரும்பாலும் மற்றவர்கள் நாடகச் சங்க நண்பர்கள் தங்கள் தங்கள் நண்பர்களை அழைத்துவருவதுதான் வழக்கம்.
33. உங்கள் குழுவில் நடிக்க வரும் கலைஞர்கள் தொடர்ந்து நாடகச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனரா?
இல்லை. ஜம்புநாதன் ஒருவர் மட்டுமே நாடகங்களை இப்போதும் தயாரித்து வருகிறார்.
34. கல்வி வளாகங்களில் உங்கள் நாடகங்கள் நிகழ்த்தப்படுவதுண்டா?
எனது நாடகங்கள் மட்டும் பிஷப் ஹீபர் கல்லூரியிலேயே தயாரிக்கப்பட்டு அங்குள்ள திறந்த வெளி அரங்கில் நடத்தப்பட்டன.
35. கல்வி வளாகங்களில் நாடகத்திற்கான தேவை குறித்த தங்கள் பார்வை என்ன?
கண்டிப்பாக மாணவர்களுக்கு நாடகங்கள் தேவை. நாடகங்கள் மாணவர்களின் கலைத்திறனையும் வாழ்க்கைப் பார்வையையும் விசாலப்படுத்துகின்றன, நல்ல குடிமக்கள் ஆக்குகின்றன என்று கூறலாம். அவர்கள் அதில் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக சோஷியல் ஒர்க் படிக்கும் மாணவர்கள் பலர் இப்பயிற்சியால் தாங்கள் மிகவும் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் பயிற்சி தரும் ஆசிரியர்கள்தான் மிகமிகக் குறைவு. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை, நான் திரு. மு. இராமசாமி, திரு. பரீட்சா ஞாநி, திரு. சண்முகராஜா போன்ற ஆர்வலர்கள் பலரை அழைத்துப் பயிற்சி தந்திருக்கிறேன். மு. இராமசாமியின் ஸ்பார்டகஸ் நாடகம் எங்கள் பிஷப் ஹீபர் கல்லூரியில் மூன்று முறை நிகழ்ந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையில் நவீன நாடகத்தைக் கொண்டு சென்றால்தான் அது வளருவதற்கான வாய்ப்பிருக்கிறது.
36. தமிழகத்தில் நாடக முயற்சிகளுக்கு அரசு சார்ந்த பங்களிப்பு எவ்வாறு உள்ளது? அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இப்போது நாடக முயற்சிகளுக்கு அரசு சார்ந்த பங்களிப்பு அறவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை பல்கலைக்கழக நாடகத் துறைகளுக்கு அரசு பணம் செலவிடக் கூடும். ஆனால் எந்தத் தனியார் குழுவுக்கும் அரசு நிதி உதவியதாகத் தெரியவில்லை. மேலும் தனி நாடகக் குழுக்கள் நடத்தும் பெருமளவு நாடகங்கள் அரசு கருத்தியலுக்கு எதிராகத்தான் அமைய இயலும். அதனால் அரசின் புறக்கணிப்புதான் இருக்குமே ஒழிய ஆதரவுக்கு வழியில்லை. தமிழக அரசு பல்வேறு தலைப்புகளில் வழங்கும் பரிசுகளும் அதன் ஆதரவாளர்களுக்கே தரப்படுகின்றன. பொதுவாக தமிழில் நாடகத்துறை அரசைச் சார்ந்து வளர இயலாது. அரசு இவற்றின் பணிகளில் குறுக்கிடாமல் இருந்தாலே போதுமானது.
37. தமிழகத்தில் நவீன நாடகத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டா?
இப்போது இல்லை. நாடகங்களைப் போட்டு வருமானம் பெற்றுக் கலைஞர்கள் வாழ முடியாது. கூத்து போன்ற பழங்கலைகளுக்கும் இதே நிலைதான். வாழ்க்கைத் தொழிலை வேறு ஒன்றாக வைத்துக்கொண்டு, அமெச்சூராகத்தான் இன்று கலைஞர்கள் இயங்க முடியும்.
38. தமிழகத்தில் கடந்த காலச் செயல்முறைகளின் மூலம் நாடகத்துறை கண்டடைந்துள்ள வளர்ச்சி எவ்வாறு உள்ளது?
பெரும்பான்மை மக்களிடையில் நவீன நாடகங்கள் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே என் கணிப்பு. பொதுமக்கள் பங்கேற்பு அதிகரிக்காமல், பரவாமல், எந்தக் கலையும் வளர முடியாது. பாமர மக்கள் பார்வையில், “இதெல்லாம் வேலையத்த வசதியான பயலுக செய்யற வேலை”.
39. நீங்கள் அறிந்துள்ள நவீன நாடகக் குழுக்கள் பற்றிச் சொல்லுங்கள்.
நான் பழைய ஆள். ந. முத்துச்சாமியின் கூத்துப்பட்டறை, மு. ராமசாமியின் நிஜநாடக இயக்கம், ஞாநியின் பரீட்சா நான் நன்கறிந்தவை. மங்கையின் நாடக அமைப்பு, முருகபூபயின் நாடக அமைப்பு, ஆறுமுகத்தின் முயற்சிகள் போன்றவற்றைக் கேள்விப்பட்டுள்ளேன். மார்க்சியக் கட்சிகள் (தமுஎச, மகஇக…) சார்ந்த நாடமுயற்சிகள் பற்றியும் அறிவேன். மற்ற பிற பற்றி எனக்குத் தெரியாது.
40. தமிழகத்தில் நவீன நாடகத்திற்கான சூழல் எவ்வாறு உள்ளது?
நன்றாக இல்லை என்பது என் கணிப்பு. சினிமா, தமிழ் நாடகத்தை முற்றிலும் அழித்துவிட்டது. அதுதான் மிகப் பெரிய எதிரி. சபாக்களில் நடத்தினாலும், மக்களிடையில் நடத்தினாலும், முதலில் பணம் தேவையாக இருக்கிறது. அரசோ, பெருமுதலாளிகளோ யாரும் இப்படிப்பட்ட நிதி உதவியில் ஆர்வம் காட்ட வாய்ப்பில்லை. அதனால்தான் நவீன நாடகக் குழுக்கள் குறுங்குழுக்களாகத் தங்கள் ஆர்வத்தைத் தணித்துக் கொள்வதாக உள்ளன. இவற்றில் சில அயல்நாட்டு, உள்நாட்டு அடிப்படை நிறுவனங்களை (Foundations) நம்பியும் உள்ளன.
41. மற்ற நாடகக் குழுவினரோடு உங்களது தொடர்பு எவ்வாறு உள்ளது?
பெருமளவு இல்லை என்றே கருதுகிறேன். நாடகம் நடத்தினால் அழைப்பு அனுப்புவது அளவில் உள்ளது எனலாம்.
42. உங்கள் குழு நடத்திய நாடகங்களின் ஒளிப்படங்களை இணைக்கவும்.
இணைக்கப் பட்டுள்ளது.
ஒப்பம்- முனைவர் க. பூரணச்சந்திரன்,
முன்னாள் பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி-17.

நாடகம்