திரும்ப உயிர்பெறும் மால்தூஸ்

அண்மையில் வெளிவந்த செய்தி ஒன்று, இன்னும் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளில் நாம் மக்கள்தொகையில் சீனாவை மிஞ்சிவிடுவோம் என்று சொல்கிறது. இப்போதே சீனாவைவிட நம் நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி அதிகம். பூச்சிய அதிகரிப்பு நிலைக்கு மக்கள்தொகையைக் கொண்டுவரவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு மிக உடனடியாக இருக்கிறது. எப்படிச் செய்வார்கள் எனத் தெரியவில்லை.
மக்களுக்கான உணவு கிடைப்பது (‘சப்ளை’) கூட்டல் விகிதத்தில் அதிகரிக்கிறது, மக்கள் தொகைப் பெருக்கம் பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கிறது என்பது ஏறத்தாழ இருநூறாண்டுகளுக்கு முன்பு மால்தூஸ் (1766-1834) என்ற பொருளதாரவாதி “மக்கள் தொகை மீதான ஒரு கட்டுரை” என்ற தம் நூலில் (1798) கூறிய கருத்து. இதற்கு எத்தனையோ விதமான தர்க்கரீதியான எதிர்க்கருத்துகள் முன் வைக்கப்பட்டன. இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை மால்தூஸுக்கே வெற்றி. முக்கியமாக, குழந்தை பிறக்கும்போது ஒரு வயிறுடன் மட்டுமல்ல, உழைப்பதற்கான இரண்டு கைகளுடனே பிறக்கிறது என்று ஒரு வாதம். ஆனால் இந்தியா மாதிரி மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டில் வேலைக்குக் கிடைப்போர் எப்போதுமே மிகையாக (சர்ப்ளஸ்) ஆக இருப்பதால், வேலையைவிட்டு எந்த நிலையிலும் அனுப்புவதற்கோ, குறைந்த கூலி தருவதற்கோ முதலாளிகள் தயங்குவதே இல்லை. அதுவும் இப்போது எல்லாம் தனியார் மயம். தனிமுதலாளிகளுக்கு எவ்வித விதிகளும் ஒழுக்கமும் ஒழுங்கும் கிடையாது. கட்டுப்படுத்தும் அரசின் திறன் பூச்சியம்.
என்ன செய்யலாம் நாம்?

தினம்-ஒரு-செய்தி