தீபாவளி

“நான் சிரித்தால் தீபாவளி” ஆம், பலபேருக்கு, அவர்கள் சிரிக்கின்ற–மகிழ்ச்சியோடிருக்கின்ற ஒரு நாள் எதுவாக இருப்பினும் அதுதான் தீபாவளி.

நான் தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமில்லை. உண்மையில் தீப-ஆவளி, அல்லது தீப வரிசை என்றால் இன்னும் சில நாட்கள் கழித்துவரப்போகும் கார்த்திகை தீபம்தான். கார்த்திகையைச் சங்ககாலத்திலிருந்தே கொண்டாடி வருகிறோம். இடையில் “நான்தான் தீப வரிசை” என்று எந்தக்காலத்தில் இந்த வடநாட்டு தீபாவளி புகுந்தது என்று தெரியவில்லை. அநேகமாக நாயக்கர் காலத்தில்தான் நிகழ்ந்திருக்கக்கூடும்.

நரகாசுரன் என்பதையும் நான் நம்புவதில்லை. நம் கண்ணெதிரே ஆயிரம் நரகாசுரர்கள் இருக்கும்போது கற்பனையில் ஒரு நரகாசுரன் எதற்கு? நரக அசுரன் என்றால் அப்புறம் சுவர்க்க அசுரன் ஒருவன் இருந்தானா?

இதை வடநாட்டவர்கள் தாண்டிராஸ் என்று ஐந்துநாள் கொண்டாடுகிறார்கள். என்ன என்ன கட்டுக்கதைகளோ அதன் பின்னால்.

என்னைப் பொறுத்தவரை வருடத்தில் ஒருநாள் நான்கரை ஐந்து மணிக்குள் குளித்துவிட்டு ஏழரை மணிக்கு போளி வ‍டை தோசை என்று சாப்பிடுவது நன்றாகத்தான் இருக்கிறது. இனிப்புகள் வாங்குவது பெரும்பாலும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்களுக்காக, நண்பர்கள் உறவினர்கள் வந்தால் தருவதற்காக.

என் சின்ன வயதில் எங்கப்பாவும் நாங்களும், அவர் இரு தம்பியர் குடும்பத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடிய பல தீபாவளி தினங்கள் ஞாபகம் இருக்கின்றன. அந்தக் கூடுகை, சிரிப்பு, மகிழ்ச்சி இருந்ததே, அதுதான் தீபாவளி. ஆனால் தீபாவளி என்றாலே பெரும்பாலும் மழையும் சேர்ந்தே ஞாபகம் வரும். நான் கொண்டாடிய மழையற்ற தீபாவளிகள் குறைவு. எல்லாரும் பட்டாசு வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக்கொண்டிருப்போம்.

ஹ்ம்…ம்…இதெல்லாம் பழைய காலம். நான் பெரியவனாகி சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு குடும்பத்தோடு, என் தம்பி தங்கையரோடு கொண்டாடிய தீபாவளிகள் மிகவும் குறைவு. காரணங்கள் பல.

தீபாவளி என்றாலே ஜாலி என்றுதான் அர்த்தம்! தீபாவளி கொண்டாடக்கூடாது என்று தமிழ்நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்…ஆனால் இந்தக் குதூகலம், சிரிப்பு, மகிழ்ச்சி, ஒன்று சேர்தல் இதற்காகக் கொண்டாடுங்கள் ஐயா…ஏன் நரகாசுரனை நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு இந்துப் பண்டிகையாக தீபாளியை ஒரே ஓர் ஆண்டுகூடக் கொண்டாடியதில்லை. என் வீடும் அப்படித்தான். அது ஒரு மகிழ்ச்சித் திருநாள், அவ்வளவுதான். பிள்ளைகள் பட்டாசு வெடிக்க, மத்தாப்பு கொளுத்த, இல்லாதோர் புத்தாடை உடுத்த, ஆண்டில் ஒருநாளாவது பலபேர் இனிப்புகள் ருசிக்க…

திருச்சியில் இருந்தவரை தீபாவளிக்கு முன்னாட்களில் ஒரு நாள் சின்னக் கடைத் தெருவுக்குச் சென்று வருவோம். கூட்டம் தள்ளும். தப்பிப் பிழைத்துவருவது கடினம். (சென்னை ரங்கநாதன் தெரு அனுபவம் எனக்கு இல்லை.) ஒவ்வொன்றாக ஆண்டுகளும் அனுபவங்களும் கடந்து செல்கின்றன…

இப்போது 73 முடிந்துவிட்டது. இன்னும் எத்தனை தீபாவளிகளைப் பார்க்கப் போகிறேனோ நான்… மீண்டும் சொல்கிறேன், கட்டுக் கதைகளை, புராணங்களை விட்டு விடுங்கள்…”நாம் அனைவரும் சிரிக்கும் நாளே தீபாவளி!”

சமூகம்