நகைச்சுவை இலக்கியம்

நகைச்சுவை இலக்கியம்
மனிதன் ஒருவன்தான் சிரிக்கத்தெரிந்த பிராணி என்று கூறப்படுகிறது. சிரித்தல் என்பது நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடு. உளவியலாளர்கள் பொதுவாக நகைச்சுவையைத் தூண்டுகின்ற காரணிகள், அச்சமயத்தில் ஏற்படும் நடத்தை பேதங்கள் போன்றவற்றை யெல்லாம் விட அதனால் ஏற்படும் விளைவுகளையே மிகுதியாக ஆராய்ந்துள்ளனர். தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், மெய்ப்பாட்டியலில்,
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
என்று உடலில் தோற்றமுறும் உணர்ச்சிவெளிப்பாடுகளைக் குறிக்கிறது. பரதமுனிவர் தம் நாட்டிய சாஸ்திரநூலில் ரஸங்களின் (சுவை, அதாவது மனவுணர்வு) வகைகளில் ஒன்றாக ஹாஸ்யம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியத்தில் நகை என்பது சிரிப்பு அல்லது புன்சிரிப்பைக் குறிக்கிறது. இது தோன்றுவதற்கு எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்ற நான்கு காரணங் களைக் குறிக்கிறது. இக்காரணங்கள் போதுமானவை அல்ல என்றாலும், இவை எல்லாமே தமக்குள் ஒரு பொருந்தாமையை, எதிர்பார்ப்பின் தவறுதலைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, எள்ளல் என்ற சொல்லே, எதிர்பார்த்த செய்தி நடக்காமல் போனதால் ஏற்பட்ட இகழ்ச்சி அல்லது கேலி என்பதைக் குறிக்கிறது.
அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஒரு வெளிவாசல்தான் நகைச்சுவை என்று ஃபிராய்டு கருதினார். அதேபோல் அழிவுசெய்யும் ஆற்றலுடைய நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கும் அது உதவுகிறது. அண்மைக்காலத்தில் தகவல்செயல்முறைக் கோட்பாட்டின் அடிப்படையில் நோக்கப்படுகிறது. நம் எதிர்பார்ப்புகளுக்கும் புலன்உணர்வுகளுக்குமான இடைவெளியை நாம் முரண்பாடு அல்லது பொருந்தாமை என்று கூறலாம். இந்தப் பொருந்தாமையைத்தான் நகைச்சுவை களமாகக் கொள்கிறது. பொருந்தாமையாக இருந்தாலும் அது ஏதோ ஒருவிதத்தில் அர்த்தமுள்ளதாக, பொருத்தமுள்ளதாகத்தான் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் அதன் ஒரு பகுதியேனும் தீர்வுக்குட்பட்டிருக்க வேண்டும். சமூக உறவுக்கும் மனித வளர்ச்சிக்கும் நகைச்சுவை மிக முக்கியமானது. வளர்ச்சி உளவியலாளர்கள், பிம்பங்கள், குறியீடுகள், கருத்துகள் ஆகியவற்றைக் கையாளுகின்ற ஒருவித ஆட்டத்தின் வடிவமாக நகைச்சுவையை நோக்குகிறார்கள். நகைச்சுவை புன்முறுவல், முறுவல், சிரிப்பு ஆகிய வடிவங்களில் வெளிப்படுகிறது. ஏறத்தாழ நான்கு மாதக்குழந்தையிலிருந்தே அது வெளிச்சத்தைப் பார்க்கும்போது நாம் அதன் முகத்தில் ஒருவிதச் சிரிப்பை நோக்குகிறோம்.
நகைச்சுவை சமூகப்பணிகள் பலவற்றை ஆற்றுகிறது. ஒரு சமாளிக்கும் உத்தி யாக, விசுவாசங்களை இணைப்பதாக, அல்லது உறவுகளின் தகுதியைச் சோதிப்பதாகப் பயன்படுகிறது. ஓர் ஆரோக்கியமான சுயத்திற்குள்ள முக்கியமான அடையாளம், தனது சொந்த பலவீனங்களையும் தவறுகளையும் பார்த்துத் தானே நகைக்கும் தன்மை. ஏதோ ஒருநிலையில் தடைசெய்யப்பட்ட உணர்வுகள், மனப்பாங்குகள் ஆகியவற்றிற்குச் சமூக ஏற்புத்தர நகைச்சுவை யினால் முடியும். இந்தப் பணியைத்தான் பழங்காலக் கூத்துகளின் கட்டியங் காரர்கள், கோமாளிகள், நகை வேழம்பர்கள், அரசவை விதூஷகர்கள் முதலியோர் செய்தனர். அதாவது தலைமைப் பதவிகளில் இருந்தவர்கள் பற்றிய கசப்பான உண்மைகளை வெளிப்படுத்திக் கேலி செய்ய அவர்களுக்கு உரிமை இருந்தது.
ஒரு சூழலின் எஜமானாக மாறி, அதனால் விளையும் கவலையை எதிர்கொள்ளக்கூடிய வழியாகவும் நகைச்சுவை இருக்கிறது. கையற்ற நிலைக்கு ஆளாகும்போது நமக்குக் கவலையும் தளர்ச்சியும் ஏற்படுகின்றன. (நகைச்சுவையை இரசிக்கவோ பயன்படுத்தவோ முடியாத நிலை மனச்சோர் வுக்கான முக்கிய அடையாளமாகும். மிகச் சிறிய அளவான நேரமாயினும், ஒரு சூழலின் பயங்கரமான கூறுகளுக்கு வெளியே விலகி நின்று, மக்கள் தங்கள் இக்கட்டான நிலையைப் பார்த்துச் சிரிப்பதால் அவற்றின்மீது ஒரு தற்காலிகமான கட்டுப்பாட்டையேனும் பெறுகிறார்கள். சுருக்கமாகச் சொன் னால், நகைச்சுவை மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது, வலியைக் குறைக் கிறது, வாழ்வதற்கு உலகத்தை மேலும் சற்று நல்ல இடம் ஆக்குகிறது.
நகைச்சுவையில் பல வகைகள் உண்டு. நகைச்சுவை இலக்கியம் என ஒரு இலக்கிய வகை தனியே இருப்பதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில் பல்வேறு கலைகளிலும் நகைச்சுவை ஒரு கூறாக இருக்கிறது. நகைச் சுவையின் பல வகைகள் என்பதைப் பலவேறு விதமான முறைகளால் உருவாக்கப்படும் நகைச்சுவை என்று நாம் கொள்ளலாம். உதாரணமாக, மிகைநவிற்சி (உயர்வு நவிற்சி), குறைநவிற்சி, பொருந்தாமை, குறிப்புமுரண், சொல் விளையாட்டு ஆகிய ஐந்து வகைகளில் நகைச்சுவை ஏற்படுவதாகக் காணலாம். இவை இயல்பான வகைகள். இவையன்றிக் குச்சியடி நகைச்சுவை (ஸ்லாப்ஸ்டிக் காமெடி), அறிவார்த்த நகைச்சுவை (விட்) என்றும் இருக்கிறது.
மிகைநவிற்சியும் குறைநவிற்சியும்
தமிழில் எழுதப்பட்ட ஏட்டிலக்கியத்திலும், எழுதப்படாத நாட்டார் இலக்கியத் திலும் நகைச்சுவை ஏராளமாக இருக்கிறது. தமிழ் இலக்கியக் கால வகைப்படி நோக்கினால், சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய கவிதை இலக்கியம், உரைநடை இலக்கியங்களான சிறுகதைகள் நாவல்கள் வரை எல்லாக்கால இலக்கியங்களிலும் நகைச்சுவை இருக்கவே செய்கிறது. தனிப்பாடல்கள் பெரும்பாலும் நகைச்சுவையையே முதன்மையாகக் கொண்டவை. உதாரணமாக, காளமேகப் புலவர், விகடராமன் என்பவனுடைய குதிரையின் வேகத்தைப்பற்றிச் சொல்கிறார் பாருங்கள்.
முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்க
பின்னிருந் திரண்டுபேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி
முன்னால் கடிவாளத்தைப் பிடித்து மூன்றுபேர் இழுக்கவேண்டும், பின்னாலிருந்து இரண்டுபேர் தள்ள வேண்டும். இப்படிச் செய்தால் அந்த விகடராமன் குதிரை, ஒருமாதத்திற்குக் காதவழி (சுமார் நான்கு மைல் என்று வைத்துக் கொள்வோமே) போகுமாம். இது உயர்வுநவிற்சி அல்லது மிகை நவிற்சியால் உருவாகின்ற நகைச்சுவை எனலாம்.
மற்றொரு தனிப்பாடல் காட்சி. ஓர் அரசனிடம் (வாணனிடம்) தோற்ற அரசர்கள் தங்கள் மணிமுடியிலிருந்து மிக உயர்ந்த திறைப் பொருள்கள் வரை அவனிடம் சமர்ப்பிக்கின்றனர். அவனோ எல்லாவற்றையும் புலவர்களுக்கு வழங்கிவிடுகிறான். அவர்கள் அந்த ஆபரணங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு அந்த அரசர்களைத் தாண்டிச் செல்லும்போது, “ஐயையோ, இது என் மணி முடியாயிற்றே, இது என் கடகமாயிற்றே, இது என் கழலாயிற்றே, இப்படி வாரிக் கொண்டு போகிறார்களே”, என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அந்த அரசர்கள் புலம்புகிறார்களாம். மிகைநவிற்சியினால் உருவாகும் நகைச்சுவைக்கு நல்ல உதாரணம் இது. இதுபோன்ற காட்சிகளை முத்தொள்ளாயிரத்தில் மிகுதியாகக் காணலாம். நந்திக்கலம்பகம் போன்ற நூல்களிலும் இவ்வித நகைச்சுவையைக் காணலாம்.
மிகச் சிறிய பாடல் ஒன்று. தலைவனைப் பிரிந்த தலைவி புலம்புகிறாளாம். “பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போல வரும் வெண்ணிலாவே இந்த வேகம் உனக்கு ஆகாதே”. இயற்கைப்போக்குடன் மிகை நவிற்சியை இணைத்த அழகான கற்பனை.
குறைநவிற்சி, குறிப்புமுரண் இரண்டினாலும் உருவாகும் ஓர் இருண்ட நகைச்சுவையைப் புதுமைப்பித்தன் கதைகளில் மிக அதிகமாகக் காணலாம். உதாரணமாகப், பொன்னகரம் கதை இப்படி முடிகிறது: “இருவரும் இருளில் மறைந்தார்கள். அம்மாளு முக்கால்ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம், புருஷனுக்குப் பால்கஞ்சி வார்க்கத்தான்!” இது குறைநவிற்சியாகும். கணவனைக் காக்கக் கண்ணகி வழக்குரைத்த நாட்டில், ஒருத்தி அவனைக் காப்பாற்ற இன்று எவ்விதம் நடந்துகொள்ளவேண்டியிருக்கிறது என்பதை மிக அளவாக-அளவாகக் கூட அல்ல, மிகக் குறைத்து அதன் பயங்கரத்தை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார் ஆசிரியர். இதேபோல், நியாயம் என்னும் கதையில், ஒரு நடுவர், குதிரையின் கால்புண்ணாக இருக்கும்போது வண்டிக்காரன் அதைப் பயன்படுத்தினான் என்று மிக உச்சபட்சமான தண்டனையை அவனுக்கு வழங்கிவிட்டு, இறுதியில் “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களிடம் கடன்பட்டவர்களுக்கு மன்னிக்கிறோமே, ஆமென்” என்று பிரார்த்திப்பது குறைநவிற்சிமுறையினால் வரும் உச்சபட்ச நகைச்சுவை.
பொருந்தாமை காரணமாக ஏற்படும் நகைச்சுவை
நாம் ஒன்றை எதிர்பார்க்கும்போது, அந்த எதிர்பார்ப்பின் கவிழ்ப்பு நிகழ்வதால் தான் பெரும்பாலும் நகைச்சுவை ஏற்படுகிறது. அதிலும் ஒரு பொருந்தாமை இருக்கும்போது அந்த நகைச்சுவை கூடுகிறது. சான்றாக, இராமச்சந்திரக் கவிராயர் பாடிய இந்தத் தனிப்பாடலைப் பாருங்கள்:
வஞ்சகர்பால் நடந்தலைந்த காலில் புண்ணும்,
வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும்,
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில் புண்ணும்
தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தேனப்பா
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும் கோபமாகப்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
பாரென்றே காட்டி நின்றான் பரமன்தானே.
தனது புண்களினால் ஏற்பட்ட வருத்தத்தைத் தீர்த்துக் கொள்ளக் கவிஞர் இறைவனை நாடுகிறார். அவனோ “உன்னைவிட எனக்கு அதிகமான புண்கள் இருக்கின்றன பார்” என்று காட்டுகின்றானாம். இதுதான் இங்குக் காணப்படும் பொருந்தாமை. பிறகு அவனிடம் என்ன கேட்கமுடியும்?
இதே கருத்தை விரிவுபடுத்தினாற்போல ஒருவர் பிற்காலத்தில் ஒரு நூல் எழுதியுள்ளார். சிற்றிலக்கியத்தில் சேர்ந்தது இது. 1899இல் பஞ்சலட்சணத் திருமுக விலாசம் என்னும் நூல் ஒன்று வெளியாயிற்று. 1876-78 ஆண்டுகளில் சென்னையில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. (இதை தாதுவருடப் பஞ்சம் என்று நினைவுகூர்வார்கள்). அப்பஞ்சகாலத்தில் மக்கள் பட்ட அவஸ்தைகளை எல்லாம் நகைச்சுவையுடன் விவரிக்கிறார் வில்லியப்ப பிள்ளை என்ற அந்த ஆசிரியர். பின்னர் யாவரும் மதுரை சுந்தரேஸ்வரக் கடவுளிடம் சென்று தங்கள் குறைகளைத் தீர்க்குமாறு முறையிடுகிறார்கள். கடவுள், பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்களைத் தன்னால் தீர்க்க இயலாது என்று கைவிரித்து அவர்களை சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்கத் தேவரிடம் முறையிடுமாறு அனுப்புவதாகப் பாடல் முடிகிறது. நூலாசிரியர் அந்த ஜமீன்தாரிடம் கணக்குப் பிள்ளை வேலை பார்த்தவர் என்பதனால் இவ்வாறு ஒரு நூல் எழுதிவிட்டார்.
குறிப்புமுரண்
ஓர் அர்த்தப் பொருந்தாமையை அல்லது அர்த்த இடைவெளியை உள்ளடக்கிய சொல் அல்லது தொடரைக் குறிப்பு முரண் கொண்டது எனலாம். பொதுவாக குறிப்பு முரண், தான் வெளிப்படையாகக் கூறுவதற்கு எதிரான பொருளைக் கொண்டிருக்கும். குறிப்பு முரண் வேறு, அங்கதம் அல்லது எள்ளல் வேறு. மேற்காட்டிய பஞ்ச லட்சணத் திருமுக விலாசம் நூலிலும் அங்கதம் உள்ளது. அங்கதம் என்பது பழிப்பதுபோலப் புகழ்தலும் புகழ்வது போலப் பழித்தலும் ஆகும்.
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய்தொழுகலான்.
இது அங்கதம். தேவர் போன்றவர் கயவர் என்ற வெளிப்படையான ஒப்புமை, அங்கத விளைவை ஏற்படுத்துகிறது. இது கயவர்களைப் பாராட்டுவது போன்று உள்ளது. ஆனால் பாராட்டல்ல என்பது நமக்குத் தெரியும். ஆனால் எதிர்மறைக்குறிப்பு இல்லை. இருவரும் தாங்கள் விரும்புவனவற்றை எல்லாம் செய்வதால் ஒரேமாதிரியானவர்கள் என்ற செய்திதான் உள்ளது.
மற்றொரு குறள்:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரியாம் கண்டதில்
இது குறிப்பு முரண். காரணம், இங்கு “கயவர் மக்களைப் போன்றவர்கள்” என்று வள்ளுவர் கூறவரவில்லை, “கயவர் மக்களைப் போன்றவர்கள் அல்ல” என்பதுதான் அவர் சொல்ல முன்வரும் பொருள். ஆனால் அவர் சொல்லுவதோ, “கயவர் மக்களைப் போலவே இருக்கிறார்களே!” என்பது. இதுதான் சொல்முரண் (வெர்பல் ஐரனி) என்பது.
தேவர் அனையர் கயவர் – காரணம், இருவரும் தாங்கள் விரும்புவனவற்றை எல்லாம் செய்கிறார்கள்.
மக்களே போல்வர் கயவர் – காரணம் கூறப்படவில்லை, தோற்றத்தில் கயவர்கள் மக்களைப் போன்றே இருக்கிறார்களே என்ற வியப்புணர்ச்சி வெளிப்படுகிறது. ஏனெனில் கயவர்கள் மக்கள் அல்ல என்பதுதான் கருத்து. இம்மாதிரி எதிர்க்கருத்தை தேவர் அனையர் கயவர் என்பதில் வருவிக்க இயலாது. ஆகவே அது அங்கதமாகிறது, மக்களே போல்வர் கயவர் என்பது குறிப்பு முரண் ஆகிறது.
சொல்விளையாட்டினால் வரும் நகைச்சுவை
காளமேகப் புலவரின் இந்தப் பாடலைப் பாருங்கள்:
செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில்
வெற்றிபுரியும் வாளே வீரவாள் – மற்றையவாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவாள் இவாள் அவாளாம்.
இப்பாடலின் நகைச்சுவை முழுக்க முழுக்க வாள் என்ற சொல்லை வைத்து விளையாடும் ஆட்டத்தில்தான் இருக்கிறது.
சிலேடை காரணமாக வரும் நகைச்சுவையும் சொல்விளையாட்டிலே அடங்கும். உதாரணமாக அந்தகக்கவி வீரராகவர் எழுதிய பழம்பாடல் ஒன்றைக் காணலாம்.
இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்புசீர் வேழம் என்றேன் தின்னும் என்றாள்
பகடென்றேன் உழும் என்றாள் பழனம் தன்னை
கம்பமா என்றேன் நற்களியாம் என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.
யானையைக் குறிக்கும் பல்வேறு சொற்கள் இப்பாட்டில் இடம் பெறுகின்றன. பாடினி, பாணனிடம் “நீ அரசனைப்பாடி என்ன வாங்கிவந்தாய்?” என்கிறாள். அவன் வாங்கி வந்தது யானை. முதலில் ‘களபம்’ என்கிறான். களபம் என்பதற்குச் சந்தனம் என்ற அர்த்தமும் உள்ளதால், “பூசிக் கொள்ளும்” என்கிறாள் மனைவி. ‘மாதங்கம்’ என்கிறான். மா+தங்கம் என்று பொருள் கொண்டு, “அடடா, நமக்கு நல்வாழ்நாள் வந்துவிட்டது” என்கிறாள். ‘வேழம்’ என்கிறான். அதற்குக் கரும்பு என்று மற்றொரு பொருள். அதனால் “தின்னுங்கள்” என்கிறாள். பிறகு அவன் ‘பகடு’ என்கிறான். அச்சொல்லுக்கும் எருது என்று மற்றொரு பொருள் உள்ளது. அதனால், “கழனியை உழுங்கள்” என்கிறாள். ‘கம்பமா’ என்கிறான். கம்பினது மாவு எனப் பொருள்கொண்டு “களிசெய்ய ஆகும்” என்கிறாள். கடைசியாக அவன் ‘கைம்மா’ என்கிறான். அதற்கு வேறு அர்த்தம் கொள்ள வாய்ப்பு இல்லாததால் அவள் சும்மா கலங்கினாள் என்று முடிக்கிறார் ஆசிரியர்.
குச்சியடி நகைச்சுவை
பொதுவாக சர்க்கஸ் போன்றவற்றின் கோமாளிகள் சிரிப்புமூட்டுவதற்காக ஒருவரை ஒருவர் குச்சியில் அடித்துக் கொள்வதையும் விழுவதையும் தள்ளுவதையும் பார்த்திருப்பீர்கள். இதுதான் குச்சியடி நகைச்சுவை. தமிழ்த் திரைப்படங்களில் கவுண்டமணி, சந்தானம் நகைச்சுவை இதுதான். எதிரில் இருப்பவனையெல்லாம் அவனுடைய தோற்றத்தை, முகத்தை, தலையை, உடல் உறுப்புகளை வைத்து அல்லது நாயே, பேயே என்றெல்லாம் கேவலமாகத் திட்டுவது, உதைப்பது, அடிப்பது – இவ்வளவுதான் காமெடி. எழுத்துவகை நகைச்சுவையிலும் பின்வருவது போன்றவற்றைக் குச்சியடி நகைச்சுவை என்பதில்தான் அடக்கமுடியும்.
“அப்பா, அடுத்த வீட்டு மாமா ஒவ்வொருநாள் காலையிலும் வேலைக்குப் புறப்படும்போது அந்த மாமிக்கு முத்தம் கொடுத்துவிட்டுப் போகிறாரே, நீங்கள் ஏன் அப்படிச் செய்வதில்லை?”
“சின்னக்குட்டி, அந்த மாமியை எனக்குத் தெரியாதே”
இந்த நகைச்சுவையில், ஓர் எதிர்பார்ப்பின் கவிழ்ப்பு அல்லது தலைகீழாக்கல் உள்ளது. இதுதான் பொருந்தாமைக்குரிய பண்பு. தன் மனைவிக்கு ஏன் முத்தமளித்துவிட்டுப் போவதில்லை என்ற விளக்கத்தை மேல் துணுக்கின் ஆணிடம் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவனோ அடுத்தவீட்டான் மனைவிக்குத் தான் ஏன் முத்தமளிப்பதில்லை என்பதற்குக் காரணம் சொல்கிறான். இதுதான் குச்சியடியின் தன்மை.
அறிவார்த்த நகைச்சுவை
இதனை ‘விட்’ என்பது வழக்கம். ஒருவர் தனது புத்திக்கூர்மையால் உடனடியாகச் சூழலுக்கு எதிர்வினை புரிவதையும் இது குறிக்கும். சான்றாக, பெர்னாட் ஷாவிடம் வந்த ஒரு நடிகை, “நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே, பிறக்கும் குழந்தை எனது அழகையும் உங்கள் அறிவையும் கொண்டதாக இருக்கும்” என்றாள். உடனே பெர்னாட் ஷா, “வேண்டாம் அம்மணி, மாறி அமைந்துவிட்டால் என்ன செய்வது” என்றாராம். (அதாவது உனது அறிவும் எனது அழகும் இருக்குமாறு குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது என்று பொருள்.)
சர்ச்சிலைப் பார்த்து ஒரு பெண்மணி சொன்னாள்: “வின்ஸ்டன், நீங்கள் என் கணவராக இருந்தால் உடனடியாக விஷம் வைத்துவிடுவேன்!” சர்ச்சில் சொன்னார்: “ஆமாம் அம்மா, நீங்கள் என் மனைவியாக இருந்தால் நான் உடனே அதைக் குடித்துவிடுவேன்”. தமிழகத்தில் அறிஞர் அண்ணா இம்மாதிரி உடனடி நகைச்சுவையில் தலைசிறந்தவர் என்று எடுத்துக்காட்டுகள் பல தருவார்கள்.
ஆஸ்கார் வைல்டின் ஒரு கூற்று இது: “ஃபேஷன் (மோஸ்தர்) என்பது ரொம்பவும் குரூபியாக (அழகற்றதாக) இருப்பதால்தான் அதை நாம் மாற்றிக் கொண்டே இருக்கிறோம்”.
இதுவரை நகைச்சுவையின் வகைகளைப் பார்த்தோம். தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவைக்கெனவே எழுதப்பட்ட இலக்கியங்களாகப் பெரும்பாலும் தனிப்பாடல்கள் மட்டுமே உள்ளன. கலிங்கத்துப் பரணியின் சில பகுதிகள், குறிப்பாகப் பேய்கள் பசியால் வருந்துவது, கூழடுவது, தோற்ற கலிங்கத்து வீரர்கள் ஓடுவது போன்றவை நகைச்சுவையுடன் அமைந்துள்ளன. முற்றிலும் நகைச்சுவைக்கெனவே எழுதப்பட்ட முதல் இலக்கியமாகப் பரமார்த்த குரு கதையைக் கூறலாம். தமிழில் இது முதல் உரைநடை இலக்கியமாகவும் உள்ளது. வீரமாமுனிவர் இதனை இயற்றினார். பரமார்த்த குரு என்ற அறிவற்ற குருவுக்கு முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன் என்ற ஐந்து சீடர்கள் வாய்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் பெறும் சில அனுபவங்கள் இந்தக் கதையாக அமைகின்றன.
பிறகு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைதான் நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்னும் நகைச்சுவைச் செய்யுள் நூலை 1918இல் எழுதினார். நாஞ்சில் நாட்டில் நிலவிய மருமக்கள்தாய முறையைச் சீர்திருத்த வேண்டி ஆக்கப்பட்ட நூல் இது. பாரதிதாசன் எழுத்தறியாமை எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்க இருண்ட வீடு என்ற நகைச்சுவைச் சிறுநூலை எழுதினார். ஆனாலும் பெருந்தமிழ் இலக்கியப் பரப்பை நோக்க, தனி நகைச்சுவை இலக்கியங்கள் மிகவும் குறைவென்றே சொல்லவேண்டும்.

இலக்கியம்