நம் பண்பாட்டை அறிவோம்! – கேள்வி பதில் பகுதி – 1

597px-My_impression
கேள்வி 1. விரிச்சி கேட்டல் என்ற பண்டைய பழக்கம் இன்றைய சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒப்பானதா? காலக்கணிப்பு என்பது பிற்கால சங்க இலக்கியமான கணியன் பூங்குன்றனார் போன்றவர்களிடமும் இருநத வழக்கம் இல்லையா?

காசி விசுவநாதன், துபாய்
விரிச்சி கேட்டல் என்பதை நற்சொல் கேட்டல் என்று விளக்குவார்கள். அதாவது, நாம் ஏதாவது ஒரு செயல் நல்லபடியாக முடியவேண்டுமே என்ற கவலையோடு வீட்டு வாசற்படியை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கிறோம். தெருவில் யாரோ ஒருவன் இது முடியவே முடியாது என்று பக்கத்தில் இருப்பவனிடம் சொல்லிக்கொண்டு போகிறான். நாம் உடனே மனம் துணுக்குறுகிறோம். பதிலாக, அவன் நிச்சயமா நல்லபடியா எல்லாம் நடக்கும்பா என்று சொல்லிக்கொண்டுபோவதாக வைத்துக்கொள்ளலாம். அப்போது நம் மனம் மகிழ்ச்சிடைகிறது. இதுதான் விரிச்சி கேட்டல். இது ஒரு மூடநம்பிக்கை தான். இருந்தாலும் மிகக்குறைந்த அளவிலான மூடநம்பிக்கை என்று ஆறுதல் அடையலாம்.
இது இக்காலச் சோதிடம் பார்க்கும் பழக்கத்திற்கு ஒத்ததல்ல என்பது நான் விளக்கியபோதே தெரிந்திருக்கும். ஏனென்றால் இதில் ஜாதகம் எழுதுவது, அதை வைத்து எதிர்காலத்தைக் கணிப்பது, நல்லநாள், நட்சத்திரம், திதி போன்றவற்றைப் பார்ப்பது என்பதெல்லாம் கிடையாது.
“பிற்கால” என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரிய வில்லை. சங்க இலக்கியம்தான் தமிழில் முற்பட்டது, மூத்தது. கமில் சுவலபில் போன்ற உலகப் பேராசிரியர்கள் எல்லாம்கூட சங்க இலக்கியம் நிச்சயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சமசுகிருதம், பிராகிருதம், பாலி போன்ற மொழிகளைத் தவிர இந்தியாவில் தமிழ் மட்டுமே இருந்தது. அக்காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிட மொழிகளோ, குசராத்தி, வங்காளி போன்ற வடஇந்தியமொழிகளோ எவையும் தோன்ற வில்லை. தமிழைச் செவ்வியல் மொழி என்பதற்கு இது முக்கியக் காரணம்.
சங்க இலக்கியம் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுக்காலமாவது பரப்பளவு உடையது. அதாவது ஒரே ஆண்டிலோ, ஒரு பத்தாண்டிலோ எழுதப்பட்ட இலக்கியம் அல்ல அது. கி.மு. 300 வாக்கில் தொடங்கப்பட்டிருக்கலாம். கி.பி.200 வரை எழுதப்பட்டிருக்கலாம். அதில் கணியன் பூங்குன்றனாரை வைத்துப் பார்க்கும்போது அநேகமாக ஏசுநாதர் காலத்தை ஒட்டி இருக்கலாம். (தனித்தனிப் புலவரின் காலத்தை மதிப்பிடுவது கடினம், என்றாலும் சிலர் செய்திருக்கிறார்கள்.)
கணித்தல் என்பது கணக்கிடுதல். வானத்தின் நட்சத்திர, கோள் (கிரக) அமைப்புகளைக் கணக்கிடுபவர் என்பது இச்சொல்லின் பொருள். அதாவது இக்கால வழக்கில் சொன்னால், ஒரு வானியலாளர். சோதிடர் அல்ல. தமிழ் மக்கள் அக்காலத்தில் வானியலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதற்குப் பல சான்றுகள் உள்ளன.

கேள்வி 2: பார்ப்பனர்கள் என்ற சொல் பிராமணர்களை மரியாதை குறைவாக குறிக்கும் சொல்லா? பண்டைய காலங்களில் இந்த சொல் வழக்கத்தில் இருந்ததா?

கதிரேசன், சென்னை

இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக் குறிக்க வழங்குகின்றன. இவற்றில் பிராமணர் என்பது வட மொழி சொல். பார்ப்பனர் என்பது தமிழ் சொல்.

இதில் இழிவுக்குறிப்போ, வசையோ, ஏளனமோ எதுவும் இல்லை. பழைய தமிழில் பிராமணர்களை இருபிறப்பாளர் என்பார்கள். அதே அர்த்தமுள்ள சொல்தான் பார்ப்பான், பார்ப்பனர் என்பவை.
பார்ப்பு + அ(ன்)அன் = பார்ப்பனன். பார்ப்பு என்பது பறவைக்குஞ்சு. பறவைக் குஞ்சு இருமுறை பிறக்கிறது. முட்டையாக ஒரு முறை, முட்டையிலிருந்து குஞ்சாக இன்னொரு முறை. ஆகவே இருபிறப்புடையது அது. அதுபோலவே பார்ப்பனரும் தாய் வயிற்றிலிருந்து ஒரு முறை, பிறகு உபநயனத்தின்போது மறு முறை என இருமுறை பிறக்கிறார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே பார்ப்பனன் அல்லது பார்ப்பான் என்றால் பறவை போல இருமுறை பிறப்பவன் என்று பொருள். இதில் தவறு என்ன இருக்கிறது?
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்” கண்ணகி கோவலன் தீவலஞ்செய்து காண்பார் தம் கண் செய்த பாக்கியம் என்ன?” என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். அவர் என்ன பார்ப்பனர்களை இழிவுபடுத் தவா செய்தார்? ஆனால் காலத்தின் கோலம், பயன்படுத்துபவருக்கும்,  யன்படுத்தப்படுபவர்களுக்
கும் அந்தச் சொல்லின் பொருளே தெரியாமல் போய்விட்டது. உண்மையில் பிராமணர்கள் பிறரைக்குறிக்கப் பயன்படுத்தும் சூத்திரன் போன்ற சொற்களைவிடப் பார்ப்பனர் என்றசொல் மிக உயர்வுடையது.
அந்தணன் என்ற சொல் ஏற்புடையதல்ல. “அந்தணர் என்போர் அறவோர்”  என்றார் திருவள்ளுவர். அறவோர் எந்த மதத்தில், எந்த ஜாதியில் இல்லை? இந்தச் சொல் ஜாதிமத பேதங்களை மீறிய சொல். தயவுசெய்து இதை ஒரு ஜாதிக் குரிய சொல்லாகக் குறுக்கிவிட வேண்டாம். பார்ப்பனர்கள் என்ற சொல்லை தவிர்க்க வேண்டுமானால், பிரம்மத்தைத் தேடுகிறார்களோ இல்லையோ, பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி 3. தமிழிசை இயக்கம் தவற விட்ட பாதை என்ன? ஏன் தமிழர்களின் செவ்வியல் இசை வடிவமான கருநாடக இசை என்பதை-கர்நாடிக் என்ற இசைத்திருட்டினை மீட்டெடுக்க முடியவில்லை? 
கார்த்திகேயன், கலிபோர்னியா
சங்கஇலக்கியம், சிலப்பதிகாரம் தொட்டே தமிழ் இசைக் குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற நூல்கள் தமிழ்ப் பண்கள் (இராகங்கள்) பலவற்றைக் குறித்துள்ளன. பழந்தமிழ் நாட்டில் குழல், யாழ், தண்ணுமை (மிருதங்கம்) உட்படப் பல இசைக்கருவிகள் வழக்கில் இருந்திருக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் இலக்கிய, கல்வெட்டு, பிற உரைநடைக்குறிப்புகள் சான்றுகளாக இருக்கின்றன.
ஏறத்தாழ பதிநான்காம் நூற்றாண்டில் சாரங்க தேவர், பின்னர் வேங்கட மகி காலம் தொடங்கி, தமிழிசை கர்நாடக இசையாக மாறியது. இவர்கள் எல்லாம் கன்னடர்கள், தெலுங்கர்கள். அவர்கள் தமிழ் இசையைக் கர்நாடக இசையாக மாற்றி, இராகங்களுக்கு வடமொழிப் பெயர்கள் கொடுத்து, நூல்கள் எழுதிவிட்டார்கள். ஏனென்றால் அது விஜயநகரப் பேரரசின் காலம். தமிழ் ஆட்சியாளர்கள் இல்லை. இருந்த குறுநிலத் தமிழ் மன்னர்களாவது அபாயத்தை உணர்ந்து தமிழ் இசை பற்றிய நூல்களைத் தமிழ்இசை வாணர்களை வைத்து எழுதச் செய்திருக்கவேண்டும். அவ்வளவு நோக்கம் அவர்களுக்கு இல்லை. இடைக்கால வரலாற்றை விரிப்பது பதிலைப் பெரிதாக்கும் என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.
1930களில் தமிழிசை இயக்கம், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் போன்ற பெருமக்கள் பலரால் உருவாக்கப் பட்டது. தமிழிலும் இசையிலும் ஆர்வமுள்ள பலர்-தண்டபாணி தேசிகர், இலக்குமணப் பிள்ளை போன்ற பலர் இதில் இணைந்தனர்.
ஆனால் தமிழிசை இயக்கம் ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே மறைந்து விட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
1. தமிழிசை இயக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீதிக்கட்சியைச் சேர்ந்த வர்கள். பச்சையாகச் சொன்னால், செட்டியார்கள், பிள்ளைமார்கள், முக்குலத் தோர் இத்தியாதி. அக்காலத்தில் காங்கிரஸ் இயக்கம் செல்வாக்குப் பெற்ற நிலையில், நீதிக்கட்சி செய்யும் எந்த முயற்சியும் காங்கிரஸுக்கும், இந்திய தேசியத்திற்கும் எதிரானதாகவே நோக்கப்பட்டது. அதனால் இந்த இயக்கம் பெரிய ஆதரவு பெறவில்லை. குறிப்பாகப் பார்ப்பனர்கள் எதிர்த்தனர். காங்கிரஸ் பெரிய அளவில் பார்ப்பன இயக்கம்தான். இதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், கல்கியும் சத்தியமூர்த்தியும் மட்டுமே. பாரதியாருக்குத் தமிழ் இசையில் ஆர்வம் உண்டு. ஆனால் அவர் 1921இலேயே மறைந்துவிட்டார்.
2. இதை ஏற்ற நீதிக்கட்சிப் பெரும்தனக்காரர்கள், அடித்தட்டுவரை தமிழிசை இயக்கம் பரவுவதற்கான முயற்சி எதிலும் ஈடுபடவில்லை. மாநாடுகள் போட்டார்கள், சில கச்சேரிகள் நடத்தினார்கள், பத்திரிகைகளில் ஆதரவுக்கட்டுரைகள் எழுதினார்கள்-அவ்வளவுதான். உண்மையில் தமிழிசை சற்றேனும் பரவியது என்றால் காரணம் தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் போன்ற நடிகர்களால்தான். அவர்கள்தான் பொதுமக்களிடம் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு சென்றார்கள். பொதுமக்களுக்கு இசையின் வரலாற்றிலோ, கோட்பாடுகளிலோ என்ன அக்கறை இருக்கமுடியும்?
3. மிக முக்கியமான கோளாறு, திராவிட இயக்கத்தவர் இதில் அதிக அக்கறை காட்டவில்லை. தி.க. எந்தக் கலையிலுமே ஆர்வம் காட்டியதில்லை. தி.மு.க. திரைப்படத்திலும், நாடகத்திலும் ஆர்வம் காட்டியதுபோல, தமிழிசையிலும் ஆர்வம் காட்டியிருந்தால் ஓரளவேனும் அது பிழைத்திருக்கும். ஆனால் அவர்கள் தொடக்கத்தில் பாரதிதாசன் போன்றோர் பாடல்களைப் பயன்படுத்தினார்கள். பின்னர் கைவிட்டுவிட்டார்கள். திரைப்படப் பாடல்களின் திசை வேறாகப் போய்விட்டது. பொதுவுடைமை இயக்கத்திலும் பட்டுக்கோட்டை ஒருவர் மட்டுமே இதில் ஆர்வம் காட்டி நல்ல பாடல்கள் எழுதியவர். வேறு ஒருவரும் கிடையாது.
4. பாரதிக்குப் பின் தமிழ்நாட்டில் ஆற்றல் வாய்ந்த கவிஞனாக வந்தவர் கண்ணதாசன். ஆனால் அவருக்குக் கொள்கை எதுவும் கிடையாது. அதிகபட்சம், அவர் கண்ணனுக்கு தாசன்தான். கண்ணா கண்ணா என்று மறுபடியும் தெய்வப் புலம்பல்.
இப்படி எத்தனையோ காரணங்கள்.

கேள்வி 4. பரதவர் கலை என்ற பரதக்கலை, பின் நாட்களில் எவ்வாறு பரத நாட்டியம் என மாற்றம் பெற்று, ஒரு சாதி அமைப்பிற்கு மட்டுமே சொந்த மானது? அதனைப் பரத்தையர் கலை என்ற அவலம் வந்ததற்குக் காரணம் என்ன?

காந்திராஜ், வட கரோலினா 
அ. எல்லாச் சொற்களையும் வடமொழிச் சொற்கள் என்றாக்கி, அதற்கு ஒரு காரணத்தை அல்லது கட்டுக்கதையைச் சொல்லிவிடுவதில் பார்ப்பனர்களுக்கு நிகர் இல்லை. அப்படித்தான் பரதவர் கலை (பேச்சுத் தமிழில் பரதவக் கலை>பரதக்கலை) என்பதற்கும் ப-என்றால் பாவம், ர-ராகம், த-என்றால் தாளம், “பாவமும் ராகமும் தாளமும் நிரம்பியது பரதம்” என்றாக்கிவிட்டார்கள். உண்மையில் அப்படித்தான் என்றாலும், அது பாராதாக் கலை என்றல்லவா ஆகியிருக்க வேண்டும்? (ஒருவேளை வடமொழியில் நெடில்களை எல்லாம் விட்டுவிடவேண்டுமா?)
ஆ. இதெல்லாம் பின்னால்தான். இம்மாதிரிக் காரணங்கள் கண்டுபிடிக்கும் முன்பே அது பார்ப்பனர்க் கலையாக உருமாற்றம் அடைந்துவிட்டது. அதற்கு முன்பு அதை இசைவேளாளர்களும் தாசிகளும்தான் காப்பாற்றிவந்தார்கள். இராஜராஜ சோழன் சோழநாட்டில் பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதும், அவற்றில் கணிகையர்களைப் பாட்டுப்பாடுவதற்கும் நாட்டியமாடுவதற்கும் நியமித்தான். அதற்காகவே முன்பு சிற்றளவில் இருந்த பரத்தையர்களை தேவதாசிகள் (தேவரடியார்கள்-இது இப்போது வழக்கில் தேவடியா என்று வசைச்சொல்லாக மாறிவிட்டது) என்று பெரியதொரு சாதியாக மாற்றிக் கோயிலுக்குக் கோயில் அனுப்பினான். இது நடந்தது கி.பி. பதினோரம் நூற்றாண்டில்.
இ. இவர்கள் தேவர் அடியார்களாக இருந்ததெல்லாம் சிறுகாலம்தான். பிறகு இயல்பாகவே அவர்கள் பெரியமனிதர்களுடைய, அதிகாரிகளுடைய, ஆதிக்க சாதியினருடைய (பார்ப்பனர், பிள்ளைமார்கள், செட்டியார்கள், இத்தியாதி) வைப்புகளானார்கள். (1950கள்வரை கும்பகோணத்துப் பார்ப்பனர்கள் ஒவ்வொருவருக்கும் வைப்பாட்டிகளாக தாசிகள் உண்டு. அவர்களுக்கு அதில் மிகவும் பெருமை. அக்காலத்து ஜமீன்தார், மைனர்களுக்கும் தாசிகளிடம் போய்வருவது மிகப் பெருமை.) ஆகவே இறைவனுக்குரிய கலை, பெரிய மனிதர்களை மகிழ்விக்கும் கலையாக மாறியது. அதற்குப் பெயரும் பரதவர் கலை என்பதிலி ருந்து சதிர்க்கச்சேரியாக மாறியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பரதநாட்டியம், சதிர் என்ற பெயரில்தான் அறியப்பட்டது.
ஈ. இசை, நாட்டியக் கலையோடு அன்றிலிருந்து சம்பந்தப்பட்டது நாதசுரமும் பெரிய மேளம் எனப்படும் தவிலும். நாதசுரத்தை ஊத மூச்சுப்பிடிக்கவேண்டும். தவில் அடிக்க கைகளில் வலு வேண்டும். அந்த ‘தம்’-மும், வலுவும் இல்லாததால் அவற்றை மட்டும் பார்ப்பனர்கள் விட்டுவிட்டார்கள்.

கேள்வி 5. சங்க இலக்கியங்களின் காலநிலை குறித்து விளக்கம் தேவை.

சுப்பிரமணி, சென்னை 
முதல் கேள்வியிலேயே இதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை இயற்றப் பட்டது சங்க இலக்கியம். இதற்கு ஆதாரங்களை எந்த இலக்கிய வரலாற்று நூலிலும் (மு.வ. எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றில்) காணலாம். அகச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. புறச்சான்றுகளாகக் கிடைப்பவைதான் முக்கியமானவை. அவற்றில் ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன்.
அ. சங்ககாலத்தில் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல்) கிரேக்கர், ரோமானியர் பெரிய அளவில் தமிழகத்தோடு கப்பல்களில் வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ், பிளைனி, தாலமி எழுதிய நூல்கள் ஆகியவற்றில் இதற்கான குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் கிரேக்க, ரோமானியக் (இவர்களை யவனர் என்பது தமிழ் வழக்கம்) காசுகள்-குறிப்பாக கி.மு.வில் இருந்த அகஸ்டஸ் சீஸரின் காசுகள் புதுச்சேரி அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களுக்கு யவனர் குற்றேவல் செய்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஆ. தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்பவை தமிழகம் முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் சொற்றொடர் அமைப்புகள், செய்திகள் ஆகியவை அக்காலத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் மொழிநடை, செய்திகள் ஆகியவற்றுடன் ஒத்துச் செல்கின்றன.
இ. சங்ககால நகரமான பூம்புகார் கடலடியில் இன்றும் மறைந்து கிடக்கிறது. 1980 கள்வரை கடலில் அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் காவிரி கடலில் கலக்குமிடத்துக்கு அருகில் கடலுக்கடியில் மிகப்பெரிய நகரம் ஒன்று இருப்பதைக் கண்டு பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் பணம் இல்லை என்ற நொள்ளைச் சாக்கு காட்டி அந்த ஆய்வு நிறுத்தப்பட்டது.
இதுபோல இன்னும் ஏராளமாகக் கூறலாம். எதற்கும் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைப் படிப்பது நல்லது.

கேள்வி பதில்