நாளை மற்றுமொரு நாளே

naalai4[குறிப்பு: இந்தக் கட்டுரை 1989இல் வெளிவந்த தமிழ் நாவல் வளர்ச்சி என்ற தொகுப்பு நூலில் (தொகுத்தவர் இரா. மோகன், வெளியீட்டாளர்-மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்) என்ற நூலில் இடம் பெற்றதாகும். நாவலின் சிறப்புக் கருதியும் கட்டுரையின் மாணவர்க்கேற்ற தன்மை கருதியும் இங்கு வெளியிடப்படுகிறது.

பமேலா, கிளாரிசா போன்ற நாவல்களை வரைந்த ஆங்கில நாவலாசிரியர் சாமுவேல் ரிச்சட்ஸனிடம், ஃபிரெஞ்சுத் தத்துவஞானி டிடரோ ஒரு முறை கூறினார்: “உண்மைமிக்கது எனக் கருதப்படும் வரலாறு, பொய்ம்மைகளையே கொண்டுள்ளது; ஆனால், உங்கள் புனைகதைகளிலோ, உண்மைகள் நிறைந்துள்ளன”. இதை ஒரு தீவிரக் கூற்று என்று கொள்ளலாம். நாம் காணும் எல்லாப் புனைகதைகளும் நமக்கு உள்ளொளி தருவனவாக இல்லை. அவற்றில் பலவேறு தரங்கள் உள்ளன. தமிழ் நாவலின் பல்வேறு தரங்களுக்குள் சென்று சான்றுகள் நோக்குவது இக்கட்டுரைக்குள் சாத்தியமில்லை என்றாலும், சுருக்கமாகத் தமிழின் சிறந்த புனைகதை இலக்கியப் பகுதிக்குள் ஜி. நாகராஜன் எழுதிய ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல் குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறது என்பதைக் கூறவேண்டும். இந்த நாவல் 1973இல் ஞானரதம் என்னும் இலக்கியச் சிறுபத்திரிகையில் தொடராக வெளிவந்தது.

ஜி. நாகராஜன், ஜனரஞ்சகமாக நாவல் உலகில் அறியப்பட்டவர் அல்ல. கணிதம் பயின்றவர், மார்க்சியக் கோட்பாட்டில் ஊறியவர் என்றாலும், வாழ்க்கையும் அவருக்குச் சிதைந்த ஒன்றாகவே இருந்தது. அவர் எழுதிய முழு நாவல் இது ஒன்றுதான். ‘குறத்தி முடுக்கு’ என்ற குறுநாவல் ஒன்று உண்டு. சிறுகதைகள் பல எழுதியிருக்கிறார். அவற்றில் ‘கிழவனின் வருகை’ என்ற கதை மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.

நாவலின் கதை:

கந்தன் என்ற ஒருவனின் ஒருநாள் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகள்தான் இந்நாவலின் கதை. அவன் ஒரு ‘இழிந்த பிறவி’. தனது குடிசையில் காலையில் எழுந்திருக்கிறான், குடிக்கிறான். ஒரு நாளிலேயே மூன்று நான்குமுறை குடிக்கிறான். பெண்களோடு சாகசம் செய்கிறான். ஏமாந்தவனிடம் லாட்ஜில் பணம் பறிக்கிறான். சாராயக்கடையில் சண்டை போடுகிறான். தனது நண்பன் ஒருவனுக்கு ஒரு கைம்பெண்ணை ‘ஏற்பாடு’ செய்கிறான். ஒரு லாட்ஜில் படுத்து உறங்குகிறான். மாலை திரும்பும்போது ஒரு கொலை நடப்பதைப் பார்க்கிறான். அதிலிருந்து தப்பித்துக்கொண்டு காணாதவன்போல் போகாமல், போலீசுக்குச் சொல்லி அனுப்புகிறான். பின்னர் தானே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்படுகிறான். இதுதான் கதை-இதைக் கதை என்று சொல்லமுடியுமானால்.

முதன்மைப் பாத்திரம்:

எளிதாகச் செயல்முறைக் கொவ்வாத வகையில் ரொமாண்டி சைஸ் செய்யவோ, நீதிபோதனை செய்யவோ ஆட்படுகின்ற கதைத்திட்டம் இது. இந்த இரண்டையும் செய்வதற்கு ஆசிரியர் இக்கதையைப் பயன்படுத்தவில்லை என்பதுதான் இந்த நாவலின் முதல் சிறப்பு. இக்கதையின் நாயகன், கந்தன். கந்தனைப் பொறுத்தவரை வரன்முறையாக நாம் முதன்மைப் பாத்திரங்களுக்கோ கதாநாயகர்களுக்கோ அளித்துவரும் குணங்களில் எதையும் கொண்டவன் அல்ல. இங்கு சமூக ஏற்றத்தாழ்வை மட்டும் குறிப்பிடவில்லை. கந்தனைப் பொறுத்தவரை எந்த நாயகத்தன்மையும் கிடையாது. மேற்குநாட்டு மரபில் ஆண்ட்டி-ஹீரோ எனப்படும் வரிசையில் வைக்கத் தகுந்தவன். மூட்டை தூக்கியோ, அலுவலகத்தில் வேலை செய்தோ, வேறு எவ்வாறோ, நியாயமாகப் பிழைக்கவில்லை. மற்றவர்களுடைய பலவீனம்தான் அவன் பிழைப்புக்கு ஆதாரம். ஆனால் நித்தம் நித்தம் நியாயமா சோறு போடுகிறது? எவ்விதமேனும் வாழ்ந்தாக வேண்டும்-  கந்தனைப் போன்றவர்களுக்கு வாழ்க்கைதான் முக்கியமாகிறது.

கதை ஒருமை:

துண்டுதுண்டான சம்பவங்களைக் கொண்ட இந்தக் கதையில் ஒருமைப்பாடு உண்டா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக ஒருமை உண்டு. ஒரே நாளில், ஒருவனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், அவனது நினைவுகள், சிந்தனைகள் என்பதே ஒரு மேலோட்டமான ஒருமையைக் கதைக்குத் தந்துவிடும். ஆனால், நானை மற்றுமொரு நாளே நாவலில் காரணகாரிய ரீதியாகச் சம்பவங்கள் ஒருமையும் முழுமையும் பெறுகின்றன.

காலையில் எழுந்திருக்கும் கந்தனுக்கு உடல் தள்ளாட்டம், நோய். அதனால் அவன் ஜிஞ்சர் குடித்துத்தான் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் அவன் முகம் மழித்துக்கொள்ளச் செல்லுதல், மீனாவுடன் உறவு, வெளியே முத்துச்சாமியைச் சந்தித்தல், சாராயக்கடை சண்டை, வள்ளி லாட்ஜில் பணம் பறித்தல், தேவி லாட்ஜில் ஓய்வெடுத்தல், தரகர் அந்தோணியைச் சந்தித்தல், கொலை நிகழ்ச்சியைப் பார்த்தல், போலீசுடன் சென்று லாக்கப்பில் இருத்தல் என்று காலைமுதல் மாலை வரை நிகழும் நிகழ்ச்சிகளில் ஒரு தொடர்ச்சியும் தொடர்பும் இழையோடுகின்றன. தற்செயல் நிகழ்ச்சி, தற்செயல் ஒருங்கிணைவு போன்றவை அறவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கொலை நிகழ்ச்சியில் அந்த நாளின் இறுதியில் கந்தன் மாட்டிக்கொள்வது வேண்டுமானால் தற்செயல் நிகழ்வு என்று கூறலாம். கதையை முடிக்க அந்த நிகழ்ச்சிதான் கொள்ளப்படுகிறது. ஆயினும் இதுவும் நிகழவியலாதது, நம்பவியலாதது என்று கூற இயலாது. கதையைத் தொடங்கவோ, சிக்கலாக்கவோ, முடிச்சவிழ்க்கவோ-எங்கும் தற்செயல் நிகழ்ச்சிகள் பயன்படுத்தப்படவில்லை.

இதுபோன்றதொரு நிகழ்ச்சியில் கந்தன் சிக்குவான் என்று காட்டுவதற்கான ஆயத்தங்கள் கதையில் ஏராளமாக உள்ளன. கந்தன் வெளிக்கிளம்பும் போதே கத்தியைக் கொண்டுசெல்வது, சாராயக் கடைச்சண்டையில் ஈடுபடுவது, வள்ளி லாட்ஜில் ஏமாற்றுவது போன்ற ஆயத்தங்கள். சிவானந்த முதலியார் கொலை வழக்கு அற்புதமான ஒப்பு (ஃபாயில்) ஆக இந்த இறுதி நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர் சின்னச் சின்ன விஷயங்களிலும் செலுத்தியிருக்கும் கவனம் சிறப்பானது. கதையின் தொடக்கத்தில் கந்தன், கத்தியுடன் வெளிக்கிளம்புகிறான். லாக்கப்பில் இருக்கும்போது, அவன் அடிமன ஆழத்தை வெளிப்படுத்துவதாக வரும் கனவில், மீனா, “கத்தி எதுக்கு? ஒங்ககிட்ட எதுக்கு மத்தவங்க சேட்டை பண்ணணும்” என்று விசாரித்து, “ஒங்க தலையெழுத்தில்லை, ஒங்க பயம்” என்று அவன் நிலையை எடுத்துக்காட்டுவதாக வருவது-போன்ற நிகழ்ச்சிகளில் இந்த கவனம் நன்கு வெளிப்படுகிறது.

கட்டமைப்பு:

இந்த நாவலின் கட்டமைப்பும் மிகச் சிறப்பான விஷயம். ஏறத்தாழ ஒரு பதினேழு பிரிவுகளாக வரும் இந்த நாவலின் சம்பவங்கள் பின்வருமாறு:

1. கந்தன் கனவுகண்டு விழித்துத் தூக்கத்திலிருந்து எழுதல்-மோகனா வருகை-ஜிஞ்சர் குடித்தல்
2. பரமேஸ்வரன் கதையும் ஜீவாவின் கதையும் (பின்னோக்குகள்)
3. மீனா வருகை-அவளுடன் உரையாடல்
4. மீனாவைக் கந்தன் ‘மணந்துகொண்ட’ கதை (பின்னோக்கு)
5. விறகுக்கடைச் சண்முகத்தின் கடையில் குடி, சிறுவனுடன் உரையாடல்
6. கந்தன் மகள் கீதாவின் கதை (பின்னோக்கு)
7. முடிவெட்டல், மீனாவுடன் உறவு
8. சாராயக்கடைத் தகராறு, வள்ளி லாட்ஜில் ஒரு மைனரை ஏமாற்றுதல், முத்துசாமி என்னும் நண்பனுக்கு ஒரு ‘ஆளை’ ஏற்பாடு செய்தல்
9. சுப்பையா செட்டியார்-ஐரீன் கதை (பின்னோக்கு)
10. சிவானந்த முதலியார் கொலை வழக்கு (ரிபோர்டேஜ்)
11. கந்தன் மகன் சந்திரனின் கதை (பின்னோக்கு)
12. தேவி லாட்ஜில் உறக்கமும் அவன் கவனித்த விவாதமும்
13. தரகர் அந்தோணி கதை (பின்னோக்கு)
14. பிச்சையா கொலையைப் பார்த்தல்
15. கோர்ட்டில் கந்தன் வாதாடிய நிகழ்ச்சி (பின்னோக்கு)
16. கொலை வழக்கை போலீஸ் புக் செய்யும் விதம்
17. கந்தன் லாக்கப்பில் இருத்தல்-கனவும் விழிப்பும்

இந்த நிகழ்ச்சித் தொடரை மேலோட்டமாக கவனித்தாலும், ஒரே சீராக நிஜவாழ்க்கை நிகழ்ச்சிகளும், பின்னோக்கு (பிளாஷ் பேக்)களும் மாறிமாறிப் பின்னப்பட்டுள்ள முறை புலனாகும். நாவலின் மையத்தில் வரும் நீண்ட சில நிகழ்ச்சிகள் தவிர எல்லா இடங்களிலும் நிஜவாழ்க்கைச் சம்பவங்கள்-பின்னோக்குச் சம்பவங்கள் இவை மாறிமாறி அளிக்கப்படுகின்றன. இவற்றுடன் தொடக்கம்-நடு-முடிவு ஆகிய மூன்றிடங்களிலும் வரும் கனவுகள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். தொடக்கமும் முடிவும் ஒரேவித அமைப்பைப் பெற்றுள்ளன-கனவும் விழிப்பும்.

naalai1கதை நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, கந்தன் மனத்தில் நிகழும் பிளாஷ்பேக் சம்பவங்கள்கூட ஒரு இன்றியமையாத ஒருமைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. அவை வலிந்து செயற்கையாகத் தோன்ற வில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்த நாவலின் முக்கிய பலமே சர்வசாதாரணமாக, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, பிறர் கவனத்தைச் செயற்கையாக இழுக்கும் முயற்சிகள் இன்றி, நிகழ்ச்சிகளைக் கோத்துச் செல்லும் தன்மையில்தான் இருக்கிறது. இது ஒருவகையில் கத்திமேல் நடக்கும் காரியம் தான். ஒருவனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நாவலாக்கும்போது, தர்க்கரீதியான சம்பவங்களைத் தொடர்புபடுத்தி அமைக்க நாவலாசிரியனுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால் ஒரு நாளின் நிகழ்ச்சி என்று கதைப்பின்னலைத் தேர்ந்தெடுக்கும்போதே நிகழ்ச்சிகளுக்குள்ளான தர்க்கம் அறுபட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சிக்கலை ஜி. நாகராஜன் அநாயாசமாக, ஒரு தேர்ந்த படைப்பாளியின் சாதுரியத்தோடு சமாளித்திருக்கிறார்.

இந்த நாவலைப் பொறுத்தவரை சஸ்பென்ஸ்-அடுத்து என்ன நிகழப்போகிறது என்று ஆவலைத் தூண்டும் நிகழ்ச்சிகள்-ஏதும் இல்லை. வியப்புகளுக்கும் இடமில்லை. காலையில் எழும் ஒருவன், குடித்துவிட்டு மனைவியுடன் சரசமாடிவிட்டுக் கிளம்பும் ஒருவன், இனி என்ன செய்யப்போகிறான் என்ற எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் இது நிகழ்ச்சிகளால் தூண்டப்படும் எதிர்பார்ப்பல்ல. அவனது ஒரு நாள் எப்படி அமைகிறது என்று பார்க்கத் தூண்டும்-அவனது குணச்சித்திர வார்ப்பு பற்றிய எதிர் பார்ப்பு. நமது ஒழுக்கவியல் மனக்கட்டுப்பாடுகள் தூண்டும் எதிர்பார்ப்பு. ஆகவே இந்த எதிர்பார்ப்பு, வேறு பரந்த வாழ்க்கை சம்பந்தமான பிரச்சினைகளில் கொண்டு செலுத்துகிறது.

பாத்திரப்படைப்பு:

கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கந்தன் தவிர அனைவரும் கோட்டோவியங்களே, துணைப்பாத்திரங்களே. கந்தன் பாத்திரப் படைப்பினும் அதிகமான நேர்த்தி, தரகர் அந்தோணியின் பாத்திரப் படைப்பில் தெரிகிறது. அனைவரையும் கவரக்கூடிய பாத்திரம் தரகர் அந்தோணி. வாழ்க்கைப் பாலையில் தூக்கி வீசப்பட்ட உயிரின் ஜீவத் துடிப்பு. “பணமே ஒரு மானங்கெட்ட விஷயம்தானே?” என்று கந்தனுக்கு உணர்த்த அவர் கையாளும் நிகழ்வுகளும் சொல்லும் உதாரணங்களும் மிக இயற்கையான நகைச்சுவைக்குச் சான்றுகள். பணம் மானங்கெட்ட தாயினும் அதை எவ்வழியில் அடைய வேண்டும் என்ற ‘அமெரிக்க சித்தாந்தம்’ அவருக்கு அனுபவ பாடம்.

“தம்பி, ஏமாத்தறவங்களும் ஏமார்றவங்களும் இருக்கிறது தான்     உலகத்தின் தன்மை; அதன் அழகுண்ட்டுக்கூட எனக்குப்படுது.”
“சூழ்ச்சி செய்யற தெறமெதான் மனுஷனெ மனுஷனாக்குது.
அதுதான் மனிதருக்கும் மிருகங்களுக்கும் உள்ள பெரிய
வித்தியாசம்.”
“என்னை ஒருவன் ஒரு வளிலே ஏமாத்தினா, அதே வளிலே
வேறு யாரெ ஏமாத்த முடியும்னுதான் நான் யோசிப்பேன்.”

இவை அவரது வாழ்க்கைத் தத்துவங்கள். அவற்றைக் கந்தனுக்கு உபதேசிக்கிறார். தரகர் அந்தோணி பாத்திரத்துக்கு நேர் எதிரான ஃபாயில். இந்த இரு பாத்திரங்களின் நடத்தைகளும் நம்மைப் பல இருத்தலியல் பிரச்சினைகளுக்குள் கொண்டு செல்கின்றன. அந்தோணியிடமிருந்து திரும்பும் கந்தன் யோசிக்கிறான்:

எங்கு பார்த்தாலும் வளர்ச்சி; எங்கு பார்த்தாலும் மாறுதல்.     ஆனால் கந்தனின் வாழ்க்கையில் மட்டும் மாறுதலே இல்லை போல் பட்டது. எல்லாரும் அவனை விட்டுவிட்டு எங்கேயோ சென்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் எங்குச்செல்ல வேண்டும், எப்படிச் செல்லவேண்டும் என்று தெரிந்திருந்தது.

அவனுக்கு மட்டும் தெரியவில்லை…மீனாவுக்கும் தெரியவில்லை….அவனுக்கும் அவளுக்கும் இருந்ததெல்லாம் இன்று மட்டும்தான்; நாளை கூடப் பிடிபடவில்லை….

ஒருவகையில் இது நாவலாசிரியரின் இலட்சிய நோக்கு. நாளை மற்றும் ஒரு நாள்தான் என்று அவர் யோசித்தாலும் எங்கோ ஏதோ இருக்கிறது என்ற இலட்சிய மாயை அவரை விட்டுவிட வில்லை. கனவும் விழிப்பும் என்ற பகுதியில் இது கனவு.

பிற பாத்திரங்களும் போதுமான அளவு நாடகப் பாங்குடன் அமைக்கப்பட்டுள்ளனர். ஏட்டு ‘பொடியன்’ பொன்னுச்சாமி வேண்டுமானால் ஒரு ‘ஸ்டாக் கேரக்டர்’. பாத்திரங்களின் காரியங்கள் யாவும் அவர்களுடைய இயல்புக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன.

கந்தன் இருபரிமாண மனிதன்தான். ஒருநாள் வாழ்க்கையில் பிரமாதமான பாத்திர வளர்ச்சி என்ன ஏற்பட்டுவிடும்? முப்பரிமாணப் பாத்திரங்கள் மட்டுமே உயர்ந்தவை, இருபரிமாணப் பாத்திரங்கள் தாழ்ந்தவை என்றும், இருபரிமாணப் பாத்திரங்களைப் படைக்கும் நாவலாசிரியர்கள் மோசமானவர்கள் என்றும் ஒரு அபிப்பிராயம் நம்மிடம் நிலவிவருகிறது. இன்றும் சுவாரசியமாகப் படிக்கப்படும் சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற பல நாவலாசிரியர்கள் அதிக அளவில் இருபரிமாணப் பாத்திரங்களைப் படைத்தவர்களே. மேலும், இரு பரிமாணப் பாத்திரங்களைப் படைக்கும்தன்மை, ஒருவகையில் கூர்மையான சமூக விமரிசனத்துக்கு உதவி செய்வதாகவும் தோன்றுகிறது.

இருபரிமாணமோ, முப்பரிமாணமோ கதையின் இயல்பும் தேவையும்தான் அப்பாத்திரத்தை உருவாக்குகிறது. அல்லது ஆசிரியனின் நோக்கம் என்று சொல்லலாமா? இருபரிமாணப் பாத்திரங்களிலும் நெஞ்சைவிட்டு நீங்காத உயிர்த் துடிப்புள்ள படைப்புகள் எத்தனையோ உண்டு. கந்தனைப் பொறுத்தவரை, முபபரிமாணத்திற்குரிய இயல்புகள் அவன் காணும் கனவுகள் வாயிலாகக் கோடி காட்டப்படுகின்றன. ஆனால் முழுமை பெறவில்லை.

பாத்திரப் படைப்புக்கு வழக்கமான பேச்சு, நடத்தை, ஆசிரியக் கருத்துரை ஆகிய மூன்றையுமே நாகராஜன் கையாள்கிறார். பேச்சைவிடப் பாத்திர நடத்தை வாயிலாகவே குணச்சித்திரம் சிறப்பாக வெளிப்படுத்தப் படுகிறது. கந்தன் ஒரு ரவுடி, போலீசுக்குத் துணையாகவும் எதிராகவும் சந்தர்ப்பங்களில் செயல்படுகிறவன், நல்ல மனிதாபிமானி, நல்ல கணவன், குடிகாரன்,…இப்படிப் பன்முக நிலைகளையும் காட்டும் அளவில் பாத்திர வார்ப்பு அமைகிறது. பாத்திர முரண்கள் சிறப்பான முறையில் இந்நாவலில் அமைந்துள்ளன. பாத்திரப் பேச்சு, சிந்தனை, பின்னோக்குக் காட்சிகள் முதலியவை சற்றும் உறுத்தாமல் பாத்திர இயல்புக் கேற்றவாறு அமைந்துள்ளன. இதனைத் தனியே சொல்லிப் பாராட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும், ஆசிரியர்கள் மிக எளிதாகக் கோட்டைவிடும் விஷயங்கள் இவை.

கந்தன் தன் முதல் பின்னோக்கில் இடப்பக்கவீட்டுப் பரமேஸ்வரனை நினைத்துக் கொள்கிறான். பின்னர் வலப்புறவீட்டு ஜீவா-வைப் பற்றி நினைக்கிறான். நிலப்பிரபுத்துவப் போலி மதிப்புகளால் தாக்கப்பட்டு இறந்துபோன பரமேஸ்வரனுக்காக போலீஸின் சார்பாக, வயிற்றுவலி தாங்காமல் அவன் தற்கொலை செய்துகொண்டான் என்ற முடிவுக்குவர கந்தன்தான் சாட்சியம் தருகிறான். அதே கந்தன்தான், லாரியில் அடிபட்டு, கபே கபே என உளறிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டுப் பெண் ஜீவா குணமடையத் தன்னாலான உதவியும் செய்கிறான்.

இந்தக் கதையின் முடிவு மகிழ்ச்சியானதா, துக்கமானதா-எது என்று சொல்வது கடினம்தான். லாக்கப்பில் சென்று அடைபட்ட கந்தன் வெறுமனே ‘பார்த்தவன்’ என்ற முறையில் விடுதலை பெற்றாலும் பெறலாம்; அன்றி முன்னால் இருக்கும் போலீஸ் ரெகார்டுகளுக்காக மாட்டப்பட்டாலும் படலாம். இப்போது அவன் மாட்டிக் கொண்டிருப்பது முன்பகை என்ற காரணத்தினால்தான். அதற்காகக் கந்தன் கவலைப் படவில்லை, கவலைப்படும் ஆசாமியும் அல்ல அவன். கதையின் இறுதியில் “நிகழ்ச்சிகளைக் கவனத்தில் கொண்டுவருவதற்கு” முயற்சி மட்டுமே செய்துகொண்டிருக்கிறான் கந்தன்.

சிவராஜ் கொலை வழக்கில் சிவானந்த முதலியார் கைது செய்யப்பட்ட போதிலும், மெய்யான குற்றவாளி அவர் அல்ல என்று தோன்றுமாறு அந்நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. கதை முடிவில் வெத்திலைக் கடைப் பிச்சையாவின் கொலையில் கந்தனின் பங்கு என்ன என்பது சந்தேகத்திற்குரிய கேள்வியாகவே விடப்படுகிறது. கந்தனின் நேசமிக்க-அணில்களைப்போல் ‘ரொங் கிக்’ கிடக்கும்-இல்வாழ்க்கைக்கும் அன்புக்கும், சுப்பையா செட்டி யார் ஐரீன் காதல் நிகழ்ச்சி சரியான முரண் இணையாகக் கையாளப்பட்டிருக்கிறது. சின்னச்சின்ன நிகழ்ச்சிகளைச் சொல்வதிலும் இந்த முறை அமைப்பழகோடு ஆளப்படுகிறது. கந்தனின் குழந்தைகளான கீதா-சந்திரன் இவர்களின் பிரிவு நிகழ்ச்சிகளே நல்ல முரணாக இருப்பது மட்டுமல்ல, சரியான எதிரெதிர் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய மோதல்:

போராட்டம் அல்லது சிக்கல் இல்லாமல் இலக்கியம் கிடையாது. நன்மைக்கும் தீமைக்குமான முரண் என்பது எளிமையானது-ஒரு கற்றுக்குட்டி ஆசிரியனும் படைத்துவிடக்கூடியது. ஆனால் மக்கள் எவரும் முழு அளவில் நல்லவர்களாகவும் இல்லை, கெட்டவர்களாகவும் இல்லை. அதனால் நன்மைக்கும் தீமைக்குமான முரண் என்பது வாழ்க்கையில் யதார்த்தமாக இல்லை. செயற்கையாகப் போய்விடுகிறது. தேர்ந்த ஆசிரியர்கள் நன்மை-தீமை முரண் என்று பார்ப்பதில்லை, இன்னும் சிக்கலான விஷயங்களில் அவர்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள்.

இந்த நாவலின் சிக்கல்கள் எளிமையானவைதான். கந்தனுக்கு மனத்தளவில் எதிரி என்றால் அது வெத்திலைப்பேட்டை சோலைப்பிள்ளைதான். இவனை ஏமாற்றியவன்; இவன் பணத்தைத் ‘தாப்பாப் போட்டவன்’; ஆகவே அவனைக் கொன்று விடலாம் என்ற ஆத்திரமும் கந்தனுக்குச் சிலசமயம் வருகிறது. ஆனால் நாவலில் பிளாஷ்பேக்கில் மட்டுமே சோலைப்பிள்ளை வருகிறான். நேரடியாக வருவதில்லை. கந்தன் ஒருசமயம் பொடியன் பொன்னுச்சாமி என்னும் ஏட்டிடம் மோத நேர்கிறது. மற்றொரு சமயம், கந்தன் சாராயக்கடையில் கலாட்டா செய்த சுருளித் தேவன் என்பவனை மடக்கிப் பிடிக்கிறான். இவற்றைத்தான் மோதல் என்று சொல்ல வேண்டும். இறுதிக் கொலைக்காட்சியில், சோலைப் பிள்ளை குத்தப்படுவதாக நினைத்து உதவிக்குப் போகிறான் கந்தன். ஆனால் குத்தப்பட்டவன் பிச்சையா. அதை விசாரணை செய்ய வருபவன் ஏட்டு பொன்னுச்சாமி. இப்படிப் பழைய முரண்கள் தலைதூக்க இருக்கின்றன நாவலின் இறுதியில்.

இந்த நாவலின் முக்கிய மோதல் முன் சொன்ன மூன்றிலும் இல்லை. மனிதன்(கந்தன்)-விதி என்பது முக்கிய முரணாகலாம். மனிதனுக்கு வாழ்க்கையில் தேர்வு உண்டா? உன் வாழ்க்கையை நீயே தீர்மானிக்க முடியுமா, முடியாதா? “தீர்மானிக்க முடியாமல் விதியிடம் தோற்றுப்போகிறோம்” என்று காலம்காலமாகச் சொல்லப்பட்ட தீர்விலே மிக எளிதாக ஆசிரியர் சரணடைந்து விடுவது போல் உள்ளது. கந்தன் தன் ஆப்த சகியான மீனாவைப் பிரிந்தாக வேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து  கொண்டவர்கள், ஆனால் இருவரும் ஒன்றிவாழ முடியாது. கந்தனின் உடல்நிலை, அவளுக்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்வதில் அவனை ஈடுபட வைக்கிறது. அவன் ஒரு டாக்சி டிரைவராகவோ, அல்லது வேறு ஏதேனும் ஒரு தொழிலிலோ ஈடுபட்டு நிலைத்த வாழ்க்கை வாழ விரும்புகிறான்-ஆனால் இதுவரை இயலவில்லை. தன்னை விரும்பியவாறு வாழவிடாத சமூக அமைப்பை மாற்ற வேண்டும் என்று இவனுடைய நண்பன் முத்துச்சாமி இவனிடம் விவாதிக்கிறான். கந்தன் அந்த விவாதத்தைப் புரிந்து கொண்டதாகத் தோன்றவில்லை. மாறாக,

தம்பீ, நீ ரொம்ப படிச்சவன்மாதிரி பேசறே. எனக்கு என்னையே மாத்திக்க முடியலே; நான் எப்படி சமுதாயத்தை மாத்த முடியும்?….இன்னைக்கு சொரண்டறவனெ ஒளிச்சா, நாளைக்குச் சொரண்ட இன்னொருவன் வருவான். அவ்வளவுதான் என்கிறான். ஆனால் தனது மனிதாபிமானத்தால், கூலி உயர்வுக்காக வேலை நிறுத்தம் செய்வதை மட்டும் ஏற்றுக்கொள்கிறான். தேவி லாட்ஜில் மானேஜரும் வேறு மூன்று இளைஞர்களும் அரசியல், சமூகம் பற்றி விவாதிக்கிறார்கள். இந்த விவாதமும் கந்தனுக்குள் எவ்வித உணர்ச்சியையும் தூண்டவில்லை.

இம்மாதிரி இடங்களில், கதைச்சிக்கல், பாத்திரமுரண் வாயிலாகவே செயல்படுகிறது. இந்த முரண் ஓர் எள்ளல் இலக்கியத்துக்குப் போதும். வாழ்க்கையின் பன்முக அர்த்தங்களைக் காட்டவிரும்பும் ஒரு நாவலாசிரியனுக்குப் போதாது.

உணர்ச்சி விளைவும் நோக்கு நிலையும்:

இக்கதையின் உணர்ச்சிவிளைவு, கந்தன்மேல் மதிப்பு ஏற்படுத்துவதுதான். இது ஏமாற்றுவதன்மூலம் செய்யப்படவில்லை. அதாவது அவனது கம்பீரமான, வீரதீரமான குணங்களைக் காட்டிச் செய்யப்படவில்லை. யதார்த்தத்தை உணர்த்தியே செய்யப்படுகிறது. அவனது பலவீனங்களும் காட்டப்படுகின்றன. கந்தன் ஒரு போலியல்ல, உண்மையான மனிதன் என்ற விளைவு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த நாவல் வரையறுத்த சர்வஞான நோக்குநிலை (லிமிடெட் ஆம்னீசியண்ட்) என்பதிலிருந்து சொல்லப்படுகிறது. கந்தனை ஒட்டியே நமது பார்வையைக் கொண்டு செல்ல இந்த நோக்கு நிலை நன்கு உதவுகிறது. பின்னோக்குகள் மட்டும் கந்தனின் எண்ணங்களாக வருகின்றன. அவையும் வெறும் நிகழ்ச்சிகளாகச் சொல்லப்படுகின்றனவே அன்றி நனவோட்டங்களாக அல்ல. கிட்டத்தட்ட நாடகப்பாங்கான நோக்கு நிலை அளவுக்கு நம்பகத்தன்மையையும் பொதுநோக்கையும் இது கொண்டுள்ளது.

நகைச்சுவை:

நாவலில் நகைச்சுவை வெளிப்படையானது, குறிப்பானதல்ல. எனினும் நன்றாக இருக்கிறது. இன்னும் நுணுக்கமாக அமைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். உதாரணமாக கந்தனின் மகன் சந்திரன், “இனிமேலும் கற்றுக்கொள்ளக் கெட்ட வார்த்தைகள் பள்ளிக்கூடத்தில் கிடைக்கவில்லை என்பதை அறிந்ததும், பள்ளிக் கூடத்துக்குப் போவதை நிறுத்திக்கொண்டான்” என்பதுபோல வரும் பகுதிகள்.

அரசியல் வாதிகள் வெளிப்படையாகவே சாடப்படுகிறார்கள்:
“தொழிலாளர் வர்க்கத்தை யாராலும் அடக்கி ஒடுக்கமுடியாது. ஹிட்லர் அடக்கி ஒடுக்கப் பார்த்தான்; முடியலே. முசோலினி பார்த்தான்; முடியலே. சர்ச்சில் பார்த்தான்;     முடியலே” என்று அடுக்கிக்கொண்டு போனான் கண்ணாடிக்கார இளைஞன்.     “ஆனா, ஸ்டாலின் பாத்தான், முடிஞ்சது” என்றான் பரட்டைத்     தலையன் சிரித்துக்கொண்டே.

“உங்க கட்சிலே உங்க மாதிரி சோஷலிசத்துலே உண்மையான நம்பிக்கை வச்சிருக்கற சாதாரண ஊழியர் இல்லேன்னு நாங்க சொல்லலே” என்று இளைஞன்     கூறவும், ஜிப்பாக்காரர் தனக்குச் சேராத சட்டையை யாரோ மாட்டிவிட்டது போல விழித்தார். அடுத்த விநாடி, ஜனநாயகத்துலே இதெல்லாம் சகஜம் என்றுணர்ந்தவர்போல் சமாளித்துக்கொண்டார்.

இம்மாதிரிப்பகுதிகளில், ‘குறிப்பான’ ஹியூமர் என்ற எல்லையைத் தாண்டிவிடுகிறது.
கனவுகளில் குறியீடு

இக்கதையில் கனவுகள் வாயிலாகக் குறியீடுகள் சிலஇடங்களில் செயல்படுகின்றன. சிலை, அம்மா முகம் போலத் தோன்றுவதும், அது சிரிப்பதும், பிறகு அழுவதும் கந்தனின் வாழ்க்கை நிலையைப் பார்த்து அவன் தாய் என்ன மதிப்பீடு கொள்வாள் என்ற அவன் நினைப்பைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. கந்தன் பிறரை ஏமாற்றியும் பெண்களை வைத்தும் பிழைப்பவனாயினும் பிள்ளைக்குணம் கொண்டவன் அவன் என்று கருதலாம். சிலையின் மார்பிலிருந்து ஏதோ விழுவதும் வெடிப்பதும் பின்னர் அன்றைக்கு அவன் மாட்டிக்கொள்ளப்போகும் சிக்கலின் குறியீடு ஆகலாம். மணற் சிகரங்களின்மீது தாவிச் செல்வதுபோலவும் வானிலிருந்த நட்சத்திரங்களை அவாவு வது போலவும் கனவு காண்கிறான், ஆனால் பாதாளத்தில் விழுவது போலவே இருமுறையும் உணர்கிறான். அவனது உள்ளார்ந்த அடிமனத்திலுள்ள இலட்சியத்தையும் யதார்த்த நிலையையும் இவை காட்டுகின்றன என்று நோக்கலாம். (கனவும் விழிப்பும்).  கனவில் அதீதக் காட்சிகள் இடம் பெறுகின்றன. கந்தன் வாத்தைப் போல நடத்தல், சோலைப் பிள்ளை எருதோடு எட்டிப்பார்த்தல் முதலியன சான்றுகள். இவை யாவும் அடிமன விளக்கங்களாகக் காணவேண்டியவை. குழந்தைகள் இருவரும் அவனைப் பிரிந்து சென்றது அவனை பாதித்துள்ள நிலையைக் கனவுகள்தான் தெரிவிக்கின்றன.

கதைக்கரு:

மேம்போக்காகப் பார்த்தால், இந்த நாவல் நம் ஆர்வத்தை ஈர்ப்பது கதைக்கருவில் என்று தோன்றுகிறது. கந்தன் என்ற கதாபாத்திரத்தின் வாழ்ககையிலும் பிற கதைமாந்தர்களிலும் நாகராஜன் சிறப்பாக ஈடுபட்டாலும், கருதான் முக்கியம் என்று தோன்றுகிறது. நாளை மற்றுமொரு நாளே என்ற தலைப்பும் அதையே தெரிவிப்பதாகத் தோன்றுகிறது.

பலவிதமான வாழ்க்கைகள். பரமேசுவரனின், ஜீவாவின், சந்திரனின், மீனாவின், சோலைப் பிள்ளையின், அந்தோணியின், சுப்பையா செட்டியாரின், ஐரீனின்….எனப் பலர் வாழ்க்கைகள். பாத்திர வார்ப்பு ஒற்றைத்தன்மை கொண்டது. இவர்கள் அனைவரும் (சமூக நோக்கில்) கேவலமான பிழைப்பு நடத்துபவர்கள். ஆனால் ஏன் இந்த வாழ்க்கை இவர்களுக்கு வாய்த்தது என்ற ஆழமான கேள்வி எழுகிறது. அதைவிட, இந்த அத்தனைபேர் வாழ்க்கையிலும் ஏதோ ஓர் உன்னதமும் இருக்கத்தான் செய்கிறது. கந்தனும் வாழ்க்கை இப்படித்தான் என்று ஓர் இலக்கை வகுத்துக்கொண்டு அதை நோக்கி நடக்கவில்லை. அந்தத் தெளிவு எந்த விதத்திலாவது அவனுக்குக் கிடைத்திருந்தால் அவன் முப்பரிமாண மனிதன் ஆகியிருப்பான். ஆனால் நாகராஜன் காட்டும் உலகம் ஒரே மாதிரியானதுதான்.

ஜி. நாகராஜனைப் புதுமைப்பித்தன் வழியில் வந்த மூர்க்கமான யதார்த்தவாதி என்று சொல்லவேண்டும். இவருடைய உலகம் வெளிஉலகத்தின் இருள் உலகம். மதிப்பீ்டுகளுக்கும் ஒழுக்கங்களுக்கும் அப்பால் தள்ளப்பட்டு விட்ட ஜீவன்களோடு தன்னை இணைத்துக்கொண்டவர் இவர். இயற்கையின் அகலமான வீச்சை விட்டுவிட்டு, பிறழ்வுகளையும் சரிவுகளையும் கண்டு சொன்னவர்….நாகராஜனின் கதாபாத்திரங்களுக்கு விமோசனம் இல்லை. சீரழிவும் தத்தளிப்புமே உள்ளன. அதற்கான காரணங்களும் அவர்களுக்குத் தெரியவில்லை, விமோசனங்களும் தெரிவதில்லை. என்று நாகராஜனின் பாத்திரத்தன்மை பற்றி மதிப்பிட்டுள்ளார் சுந்தரராமசாமி. (கொல்லிப்பாவை-16, 1986). இருப்பினும் இந்த விமரிசனம், கந்தன் போன்றோருக்கு மதிப்புகள் இல்லை என்று மதிப்பிட்டுத் தனது மேட்டிமைத் தன்மையைக் காட்டுவதாகவும் அமைகிறது. புதுமைப்பித்தன் பலவகைப் பாத்திரங்களையும் படைத்து, வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கத்தையும் காட்டியவர். அவ்வாறு நாகராஜன் செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனாலும் கனவுகள் காட்டும் ஒரு பக்கம் இருக்கிறதே…

வாழ்க்கைப் பார்வை:

naalai3நாகராஜன் வாழ்க்கை பற்றிக் கொண்டிருக்கும் கருத்து அல்லது அவரது வாழ்க்கைப் பார்வை, கதைக்குள் புகுவதற்கு முன்னாலேயே இரண்டு விதங்களில் முன்வைக்கப்பட்டு விடுகிறது.

முதலில் இதன் தலைப்பு. அமெரிக்க நாவலாசிரியர் எர்னஸ்ட் ஹெமிங்வே-யின் For whom the bell tolls என்ற நாவலின் இறுதி வரிகள், “நாளை மற்றுமொரு நாளே” என்று அர்த்தபூர்வமாக முடிகின்றன. கதையின் உள்ளேயும் சொல்கிறார் நாகராஜன்: “கந்தன் வாழ்க்கை நம் அனைவருடைய வாழ்க்கையையும் போன்றதுதான். நம்மில் பலருக்கும் போலவே நாளை மற்றுமொரு நாளே!”

இன்னொரு கருத்தையும் நாகராஜன் முன்னாலேயே தந்து விடுகிறார். தாமஸ் வுல்ஃப் என்னும் பிரபல அமெரிக்க நாவலாசிரியருடைய ஒரு மேற்கோள் மூலமாக. “எல்லாம் அழகானவையாகவும் இல்லை, எல்லாம் மோசமானவையாகவும் இல்லை, வாழ்க்கைதான் முக்கியமானது-வாழ்க்கையைத்தான் நான் அறிந்துகொள்ளவும் முயல்கிறேன்” என்று அது சொல்கிறது. ஆனால் நம்மைப்போன்ற பலபேர் வாழ்க்கையைப் பற்றி வைத்திருக்கும் பலவிதமான கருத்துகளை உறுதிப்படுத்துவதாக இந்தக் கதைக்கரு இல்லை. ஆனால் வாழ்க்கையின் மற்றொரு மாறுதலான பக்கத்தைக் காட்டுவதன் மூலம், நாம் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டிருக்கும் பார்வையை ஆழப்படுத்துகிறது. நம்மைப் போன்றவர்களும் வேஷங்களைக் களைந்தால் கந்தனைப் போன்றவர்களே என்று காட்டுவதே ஒரு புதிய உள்ளொளி அல்லவா?

இந்த வாழ்க்கைப் பார்வை ஒரு பலவீனமான அடிப்படையிலிருந்து எழுவதே என்றும் தோன்றுகிறது. நம்மை பாதிக்கும் அளவுக்கு இந்தப் பார்வை நாவலில் வலுக் கொள்ளவில்லை. முன்பே கூறியது போல கனவும் விழிப்பும்; வாழ்க்கை பற்றிய மிக ஆழமான இருத்தலியல் கண்ணோட்டத்தை முன்வைக்கும் ஓர் ஆசிரியன், அதற்குத் தக பாத்திரங்களை உருவாக்கவேண்டும். பன்முகப் பரிமாணங்கள், தன்மைகள் கொண்ட பாத்திரங்கள் வேண்டும். அந்நியன் நாவலில் முதன்மைப்பாத்திரம் ஒரேவிதத் தன்மை கொண்டிருப்பதுபோல இதில் கந்தன் அமையவில்லை. இலட்சியவாதத்திற்கும் நடப்புநிலைக்கும் இடையில் ஊசலாடுபவனாகவே இருக்கிறான். நாளை மற்றும் ஒரு நாள்தான் என்று நிரூபிக்க முனையும் இருத்தலியல் பார்வைக்கு இலட்சியவாதம் ஒத்துவராது. மேலும் ஒரேவிதமான பாத்திரங்களே நாவலில் நிறைந்திருப்பதால், இவ்வளவுதான் வாழ்க்கையா, இவ்வளவு எளியதா, சிறியதா என்ற கேள்விகளும் எழுகின்றன. அல்லது இலட்சியப் போக்கினை அவனிடம் சற்றே நிலைநிறுத்துவதாயின், கந்தனுக்கு ஏதேனும் ஒரு நியாயப் போராட்டமேனும் வேண்டும். இப்பிரச்சினைகளைச் சற்றே மீறியிருந்தால் நாவலும் நாவல் காட்டும் வாழ்க்கையும் முழுமை பெற்றிருக்கும்.

முடிவாக…

மேற்கண்ட சிறு குறையின் காரணமாக, எழுச்சியற்ற நிறமற்ற ஒரு நடை இந்த நாவலில் வாய்த்திருக்கிறது. அன்றி, இருத்தலியல் நோக்கிற்கு இதுவே பொருத்தமானது என்றும் கூறலாம். சுழிப்புகளற்ற நேரான நடை. சொல்ல வந்ததை மறைக்காது வெளிப்படையாகச் சொல்லும் நடை. உள்ளர்த்தங்கள் கொள்ளாது, தளர்ச்சியாகச் செல்லும் நடை. சற்றே உணர்ச்சிச் சுழிப்புடன் கூடிய நடை இருந்திருப்பின் கந்தனின் செயல்கள் மட்டுமின்றி, அவற்றின் மூலங்களும் ஓரளவேனும் குறிப்பாக நம் யூகத்திற்குத் தரப்பட்டிருப்பின் இந்த நாவல் மேலும் பலமடங்கு உயர்வான ஒன்றாகியிருக்கும்.

ஆயினும் இக்குறைகளால் நாவலின் தரம் முற்றிலும் சிதைந்துபோய்விடாமல் பார்த்துக்கொண்டது நாகராஜனின் சிறப்பு. இந்தக் குறைகளெல்லாம் இதனை ஒரு ஜனரஞ்சக நாவலோடு ஒப்பிடும் நிலைக்குத் தாழ்த்திவிடமுடியாது. இப்படிப்பட்ட நாவல்களில் இது ஒரு முதல் முயற்சி. தமிழில் நல்ல தரமிக்க நாவல்கள் என்று தேர்ந்தெடுத்தால் இருபது இருபத்தைந்து நாவல்களுக்குள் இது நிச்சயம் நிற்கும் என்பது உறுதி.

 

இலக்கியம்