பக்தியும் வன்முறையும்

பக்தியும் வன்முறையும்

மதம் என்பதே வன்முறையை உள்ளடக்கியது என்ற அனுபவத்தைப் பல காலமாகக் கண்டு வருகிறோம். இருந்தாலும் இருபதாம் நூற்றாண்டில் இது மிக உச்சமான ஒரு நிலையை அடைந்தது, இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. ஆனாலும் இன்றுவரை மதங்கள் மனிதனின் நன்மைக்காக ஏற்பட்டவையே என்று அதனால் பயன்பெறுவோர் சாதித்து வருகிறார்கள்.

இங்கே நாம் மதத்தின் வன்முறையைப் பற்றிப் பேசவரவில்லை. எந்த மதத்திலும் சான்றோர்கள், பக்திமான்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பக்தியும் வன்முறைக்கு விதிவிலக்காக இல்லை. பக்தி ஆழ்ந்த அன்பு ணர்ச்சி, இறைவன்மீது கொண்ட காதல் என்று நோக்கப்படுகிறது. ஆனால் எந்த அன்பிலும் வன்முறை இருக்கவே செய்கிறது என்று உளவியல் சொல்லுகிறது. அவ்வாறானால் பக்தி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கமுடியுமா? பிறரைத் துன்புறுத்துதல், தன்னையே துன்புறுத்திக் கொள்ளுதல் (இரண்டுமே வன்முறைதான்) என்ற இரண்டையுமே பக்தியில் காண்கிறோம். இன்றும் நாக்கில் வேலைக்குத்திக் கொண்டும், முதுகில் அலகு குத்திக்கொண்டும் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்பவர் களைக் காண்கிறோம் அல்லவா?
சாதாரணமாக, விரதம் இருப்பதே ஒரு எல்லையைத் தாண்டும்போது சுய வதைத்துக் கொள்ளல் ஆகிவிடுகிறது. ஒருவேளை உணவை உண்ணாமல் இருக்கும்போது அது விரதமாகிறது. ‘சஷ்டி விரதம் இருக்கிறேன்’ என்று சொல்லி, இரண்டுநாள் முழுவதும் பட்டினி கிடக்கும்போது அதுவே சுய வதைத்தல் ஆகிறது. காந்தியடிகள் இவ்வாறு தம்மைத் தாமே சுயவதை செய்துகொண்டுதான் எல்லாரையும் தமது வழிக்குக் கொண்டு வரமுடிந்தது.

தமிழிலுள்ள பெரியபுராணத்தை எடுத்துக்கொள்வோம். அதில் அறுபத்து மூன்று நாயன்மாருடைய வரலாறு சொல்லப்படுகிறது. இந்த நாயன்மார் கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தித் தங்களை வதைப்பதையோ பிறரை வதைப்பதையோ செய்திருக்கிறார்கள். சமணர்களுடன் சண்டையில் ஈடுபடு கிறார் ஒருவர், தற்கொலை செய்துகொள்ள முனைகிறார் மற்றொருவர், தந்தையின் காலை வெட்டுகிறார் ஒருவர், மனைவியின் கையை வெட்டுகிறார் இன்னொருவர், ஒருவர் அரசியின் மூக்கை அரிகிறார், மற்றவர் வேறொருவரின் நாக்கை அறுக்கிறார், தன் கழுத்தை ஒருவர் அறுத்துக்கொள்கிறார், உறவினர்களை ஒருவர் கொலைசெய்கிறார், முழங் கையையே சந்தனமாக அரைக்கிறார் ஒருவர், தன்தலையில் தீயிட்டுக் கொள்கிறார் ஒருவர், சொந்தமகனையே கறிசமைக்கிறார் மற்றொருவர். இவையெல்லாம் வன்முறையல்லாமல் வேறு என்ன?
கண்ணப்பரின் கதையை நோக்குவோம். இறைவனின் (லிங்கவுருதான், முழுமனித உருகூட அல்ல) கண்களில் இரத்தம் பெருக்கெடுக்கிறது. கண்ணப்பர் போன்ற ஒரு வேடுவருக்கு எத்தனையோ பச்சிலைகள், மூலிகைகள் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கெல்லாம் நேரமில்லை. தன் கண்ணையே வகிர்ந்து இறைவனின் கண்ணில் அப்பிவிடுகிறார். உடனே அதில் இரத்தம் நின்றுவிடுகிறது. ஆனால் மற்றொன்றில் இரத்தம் பெருக் கெடுக்கிறது. அடையாளத்திற்கெனத் தன் காலை இறைவனின் உச்சிமீது வைத்து, மற்றொரு கண்ணையும் தோண்டி எடுத்து இறைவன் கண்ணில் வைக்கிறார்.

இக்கதை பல சுவையான தலைகீழ் மாற்றங்களைச் செய்கிறது, அது நமக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சான்றாக, கண்ணைத் தாமரைக்கு ஒப்பிடு வார்கள். தாமரையை இறைவனுக்கு அர்ப்பணிப்பார்கள். கண்ணப்பரோ கண் ணையே தாமரையாக அர்ப்பணிக்கிறார். இறைவனுக்கு மாமிச உணவு ஆகுமா? (இப்போதும் இதற்காகத்தான் வடநாட்டில் பெரிய சண்டைகளை எழுப்புகிறார்கள்). ஆனால் கண்ணப்பரோ தான் கொண்டுவந்த எந்தெந்த (மாட்டுக்கறியை விட்டு விடுவோம்) மாமிசங்களையோ இறைவனுக்குப் படைக்கிறார். தான் வாயில் நிரப்பிவந்த நீரையே இறைவனுக்கு அபிஷேக மாகச் செய்கிறார். இதையெல்லாம்விட, சாதாரணமாக நாம் என்ன செய்வோம்? இறைவனின் பாதங்களில் நம் தலையை வைத்து வணங்கு வோம். கண்ணப்பர், தன் பாதத்தை இறைவன் தலைமீது வைக்கிறார். ஒரு வேடுவரின் பக்திக்கு அந்தக்காலப் பனுவல் ஒன்று இத்தகைய மரியாதையை அளித்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், வன்முறை வன்முறை தான். கண்ணப்பர் செய்துகொள்ளும் சுயவதை-இரு கண்களையும் இழத்தல் -மிகப் பெரியது. (உடனே அவர் இறைவன் திருவடி நிழலை அடைந்து விட்டார் என்று சமாதானம் சொல்லிவிட வேண்டாம். அப்படிச் செத்துப் போனால் அதுவும் சுயவதைதான்.) இந்த மாதிரி சுயவதையோ பிறர்வதை யோ எல்லாவற்றிற்கும் இறைவன் “சோதனைகளே” காரணமாக அமைகின் றன என்பதுதான் மிகப் பெரிய வேடிக்கை.
சிறுத்தொண்டரின் பிறர்வதையும் சுயவதையும் இதைவிடப் பெரியவை. இறைவன் காபாலிக வடிவத்தில் வருகிறானாம். சிறுத்தொண்டரிடம் ‘எனக்கு உன் பிள்ளைக்கறிதான் வேண்டும்’ என்கிறானாம். பிள்ளையைக் கொல்வது பிறவதை. அதை நேரில் செய்து, பிறகு பிள்ளையின் உடலைச் சமையல் செய்து கறியாகப் படைப்பதைப் போன்ற பெரிய மனவேதனை பெற்றோருக்கு வேறு ஏதேனும் இருக்கமுடியுமா? இதைவிடச் சுய வேதனை வேறு என்ன இருக்க இயலும்? (பிறகு இறைவன் உணவுண்ண அமரும்போது பிள்ளையைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்கிறானாம், பிள்ளை உயிரோடு ஓடிவருகிறானாம் – இவை உண்மையெனவே வைத்துக் கொண்டாலும், அதற்கு முன்பு பிள்ளையைக் கொன்றதும், கறிசமைத்ததும், படைத்ததும் நிஜமான மனவேதனை அளிக்கும் செயல்களே அல்லவா?) பக்தியின் காரணமாக விளையும் பிறர்வேதனைக்கும் சுயவேதனைக்கும் (வன்முறைக்குப்) பெரிய உதாரணங்கள் இவை.

பிறமதத்தினரைத் துன்புறுத்துவது எல்லா மதங்களிலுமே காணப்படும் வன்முறை. தங்கள் மதத்தினைரையும் கூட தீவிர மதவாதிகள் வதைக்கவே செய்கிறார்கள். இருநாளுக்கு முன்புகூட காதலனை நாடிச் சென்ற ஒரு பெண்ணைக் கல்லால் அடித்தே தாலிபன் தீவிரவாதிகள் கொன்றிருக் கிறார்கள். மாணிக்க வாசகரின் கதையில், இலங்கையிலிருந்து பௌத் தர்கள் அவருடன் வாதிட வருகிறார்கள். மூவாயிரம் பேர். அவர்களுடைய வாதத்தில் உண்மையில்லை என்றால் ‘அவர்கள் ஊமையாகப் போகட்டும்’ என்று சரஸ்வதியிடம் வேண்டுகிறார் மாணிக்கவாசகர். அவ்வாறே அவர் கள் ஊமையாகிப் போகிறார்கள். உடல்சார்ந்த பிறர்மீதான, தன்மீதான வன்முறைகள் ஒருபுறம் இருக்க, மற்றவர்கள் தங்கள் கருத்தைச் சொல்ல விடாமலே ஊமையாக்கிவிடுவது எவ்வளவு பெரிய வன்முறை? இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு நல்ல முன்னுதாரணமாக இதைத்தான் சொல்ல முடியும்.

திருஞான சம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் மூன்று போட்டிகளில் ஈடுபட்டார் என்பது பிரசித்தம். திருஞான சம்பந்தர் என்ன சொன்னாரோ தெரியாது, சமணர்கள், போட்டியில் நாங்கள் தோற்றுப்போனால் கழுவேறிச் சாவோம் என்கின்றனர். அவ்விதமே அவர்கள் தோற்றுப்போய் கழுவேறினர். இது வரலாறா, புராணக்கதை மட்டுமா என்பது நமக்குத் தெரியாது. இப்படிச் சொல்வதற்குக் காரணம், சமணப் பிரதிகள் எதிலும் இக்கழுவேறிய கதை காணப்படவில்லை. வெற்றிபெற்றவர்கள் மட்டும்தான் இதை எழுதி வைத்தி ருக்கிறார்கள். பொய்யாகத் தங்கள் பெருமையைக் கொண்டாடும் விஷயமாகவும் இருக்கலாம் அல்லவா?

பெண்நாயன்மார்களும் பக்திமான்களும் இதற்கு விதிவிலக்கில்லை. அவர்களும் சுயவதையில் ஈடுபடவே செய்கிறார்கள். காரைக்காலம்மையார், தன் உடல் சதையை எல்லாம் நீக்கிவிட்டு எலும்புக்கூடாகிறார். ஒளவையார், இளமை வேண்டாம், முதுமையே வேண்டும் என வேண்டிக் கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்.
இதெல்லாவற்றையும் விடப் பெரிய நகைச்சுவை இருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தான் செய்தவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால், சைவத்தையே விட்டு விடுவேன் என்று இறைவனையே பிளாக்மெயில் செய்கிறார்!
கன்னடநாட்டில், வீரசைவர்கள் சுவேதாம்பர (வெள்ளை உடை அணிந்த) ஜைனர்களைத் தேடித்தேடி தலையை வெட்டினார்கள் என்று பெருமிதத் தோடு கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஜைனர்களின் ஐந்து கோயில்களை சிவன் கோயில்களாக மாற்றினார்கள் என்றும் சொல்கின்றன. இந்தவேலை நம் நாட்டில் மிகவும் பிரசித்தமானது. வென்ற மதத்தினர்கள் (இஸ்லாமியர் கிறித்துவர் உட்பட) எல்லாரும் தோற்ற மதத்தினர் கோயில்களைத் தங்கள் கோயில்களாக மாற்றியிருக்கிறார்கள், கொள்ளையடித்திருக்கிறார்கள். இவற்றை வேண்டுமானால் நாம் பக்திமான்கள் செயல் அல்ல, மத தீவிர வாதிகள் செயல்கள் என்று சொல்லிவிடலாம்.
வேடிக்கை என்னவெனில், பசுக்கள்மீதும் பிற விலங்குகள் மீதும் காட்டும் அகிம்சையைக் கூட சகமனிதர்கள் மீதும் தங்கள்மீதும் மதவாதிகளும் பக்திமான்களும் காட்டுவதில்லை என்றால், மதத்தினால் பயன்தான் என்ன? அது (யானைக்குப் பிடிப்பதுபோன்ற) “மதம்”தான். அதனால்தான் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று வேண்டினாரோ வள்ளலார்?

சமூகம்