பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-2

(குறிப்பு: பஞ்சதந்திரக் கதைகள் சொல்லப்படும் முறை, ஈசாப் கதைகளை ஒத்திருக்கிறது. அதாவது இவை எனப்படும் நீதிபுகட்டும் கட்டுக்கதைகளாக உள்ளன. ஈசாப் கதைகளில் போலவே இவற்றிலும் பிராணிகள் மனித குணங்கள் உள்ளவையாகச் சித்திரிக்கப்பட்டு, அவை பேசவும் செய்கின்றன. ஆனால் இக்கதைகளின் அமைப்பு ஈசாப் கதைகளைப் போல இல்லை. ஈசாப் கதைகள் தனித்தனிக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளின் அமைப்பு, ஒருவகையில் ஆயிரத்தோரு இரவுகள் எனப்படும் அரபிக் கதைகளைப் போல, ஒன்றினுள் ஒன்றாகத் தொடர்ந்து செல்வதாக உள்ளது.)
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

அந்தச் சிங்கத்திற்கு ஒரு மந்திரி இருந்தது. அந்த மந்திரிக்கு இரண்டு மகன்கள் – கரடகன், தமனகன் என்ற நரிகள். சிங்கத்தின் பயத்தைப் பார்த்து அவை இரண்டும் பேசத் தொடங்கின.

siragu-panja-thandhira-kadhai

 

தமனகன்: நம் அரசன் தண்ணீர் குடிக்கப்போய், குடிக்காமல் ஏன் சும்மா இருக்கிறார்?

கரடகன்: அதை நாம் ஏன் விசாரிக்க வேண்டும்? நமக்கு அதனால் இரை கிடைக்குமா? பெருமை உண்டாகுமா? கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்? அதனால் நீ சும்மா இரு. தனக்கு ஒவ்வாத காரியத்தைச் செய்பவன், ஆப்பைப் பிடுங்கிய குரங்கு போல் ஆவான்.

தமனகன்: அது என்ன கதை?

குரங்கு ஆப்பைப் பிடுங்கிய கதை

siragu-panja-thandhira-kadhai3மகத தேசத்தில் சுதத்தன் என்று ஒருவன் இருந்தான். கோயில் திருப்பணிக்காகச் சில மங்களை அவன் அறுப்பதற்காகப் போட்டிருந்தான். மரம் அறுப்பவன், ஒரு மரத்தைப் பாதி பிளந்துவிட்டு, பிளவு மூடிக்கொள்ளாமல் இருப்பதற்காக அதில் ஒரு ஆப்பைச் செருகிவிட்டுப் போனான். அந்தக் கோயில் நந்தவனத்துக் குரங்குகளில் ஒன்று அந்த மரத்தின் மேல், மிகச் சரியாக அந்தப் பிளவுக்கு நேர்மேலே வந்து உட்கார்ந்து விளையாட்டாக ஆப்பை அசைத்துப் பார்க்கலாயிற்று. பக்கத்திலிருந்த குரங்குகள், “வேண்டாம், அந்த ஆப்பை அசைக்காதே” என்று கூச்சலிட்டும் அது கேட்கவில்லை. ஆப்புமுளையை அசைத்து இழுத்தவுடனே பிளவு ஒன்று சேர்ந்துகொள்ள, அந்தக் குரங்கு உடல்நசுங்கி இறந்துபோயிற்று.
அதனால் தனக்குத் தகாத காரியத்தில் இறங்கினால் யாருக்கும் உயிர்ச்சேதம் வரும். நாம் பாட்டுக்கு நமது இரையைச் சாப்பிடுவோம் வா.
என்று கரடகன் சொன்னது.

கரடகன்-தமனகன் விவாதம்

இதைக்கேட்ட தமனகன், அரசகாரியம் இருக்கும்போது இரை சாப்பிடுவதையே பெரிதாக நினைக்கலாமா? நண்பர்களுக்கு உதவியும், பகைவர்களுக்கு அபகாரமும் செய்வது ஒருவன் கடமை. அரசனது சேவையில் இருக்கும் நாம், யாவருக்கும் நன்மை செய்வதே ஏற்றதாகும். நன்மை செய்ய இடமில்லாவிட்டால் உயிர் பிழைத்திருப்பதனால் உண்டாகும் பயன் என்ன? காக்கைகூட கண்டதைத் தின்று ஆயிரம் வருஷம் உயிரோடு இருக்கும் என்கிறார்கள். நாய்கூட, வெறும் எலும்பைக் கவ்விக் கடித்துக் கடித்து, பசி தீராமல் சந்தோஷம் அடைகிறது. மேலும், தன் எஜமானன் கையிலுள்ள சோற்றுக்காக அது முகத்தில் அன்பைக் காட்டி, வயிற்றை ஒடுக்கி, வாலைக்குழைத்து ஒடுங்கி, எச்சிலை வாங்கித் தின்கிறது. அதே சமயம், யானை ஒடுங்காமலும் குழையாமலும் பாகன் வேண்டி வேண்டி ஊட்ட ஆயிரம் மடங்கு உண்கிறது. உலகில் மானம் உள்ளவர்கள் நிமிர்ந்து நிற்கிறார்கள். பலர் நாயைப் போலக் குழைந்து பொருளுக்காகவும் பதவிக்காகவும் அலைகிறார்கள். அதனால் அரச காரியத்தைச் சிறப்பாகச் செய்து வாழ்வதே நல்லது.

கரடகன் இதைக் கேட்டு, “நாம் என்ன ராஜ காரியத்திலா இருக்கிறோம்? நாமும் இரைதேடிக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றது.

தமனகன்: பெரிய மந்திரியாக இருப்பவனும் காலத்தின் கோலத்தால் சாதாரண மனிதன் ஆகிறான். தன் முயற்சியாலும் பண்பாலும் சாதாரண மனிதனும் பெரிய பதவிக்கு வருகிறான். யாரும் மேலான விஷயத்தையே யோசிக்க வேண்டும். அது கைகூடாவிட்டாலும் பெருமையேனும் கிடைக்கும். அறிவற்றவர்கள் எளிய காரியங்களைத்தான் செய்வார்கள். அறிவுள்ளவர்கள் அரிய காரியங்களைச் செய்வார்கள். பெருமையும் சிறுமையும் அவரவர் பண்பினால் வருபவை.

கரடகன்: சரி. சிங்கத்திடம் நாம் போய் எதைப் பற்றிப் பேசவேண்டும் என்கிறாய்?

தமனகன்: நமது அரசர் அறிவின்மையால் பயந்திருக்கிறார். அதை நீ எப்படி அறிந்துகொண்டாய் என்று கேட்கலாம். சொன்னை பொருளை விலங்கு, பறவைகளும் அறிந்துகொள்ளும். சொல்லாமல் அறிபவனே புத்திசாலி. நான் இங்கே இருந்தே அரசர் செய்கையை அறிந்தேன். இதை வைத்தே இப்போது போய் சிங்கத்திடம் நட்புக் கொள்கிறேன்.
கரடகன், தமனகனை நோக்கி: அரசர்களும் நெருப்பும் பாம்பும் சரி. பழகுவதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிங்கத்திடம் பழக்கமில்லாவிடில் நீ எப்படி அவனோடு தொடர்பு உண்டாக்கிக் கொள்வாய்?

தமனகன்: நான் பேசுவதில் சாமர்த்தியம் உள்ளவன். சாமர்த்தியசாலிக்கு எது பெரியது? பறக்கும் பறவைகளுக்கு எதுதான் தொலைவு? கற்றவனுக்கு அயல் நாடு எது? அன்பாகப் பேசுபவர்களுக்கு யார் பகையாவான்?

கரடகன்: அப்படியே ஆனாலும், அரசர்களிடம் அகாலத்தில் போனால் அவமானம் நேரிடும்.

தமனகன்: அவமானம் வந்தாலும் பொருட்படுத்தாமல் அரசன் அருகிலேயே இருக்கவேண்டும். யார் அண்மையில் இருக்கிறார்களோ, அவர்களிடம்தான் அரசர்கள் தங்கள் காரியங்களைச் சொல்வார்கள். கொடிகள் அருகிலிருக்கும் மரங்கள் மேல்தான் படரும். அரசர்களும், பெண்களும் தங்களைக் காப்பாற்றி இங்கிதமாக நடப்பவர்களிடம் மனமிரங்கி நடப்பார்கள்.

எப்படியும் காலம் அறிந்து பேசினால் எந்த அவமானமும் வராது. அரசர்கள் தங்கள் காரியம் யாரால் ஆகிறதோ, அவனிடம் சிறு குற்றங்கள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அவனை அனுசரித்து நடப்பார்கள். மலையைப் போல திடமாக இருந்தாலும் அவர்கள் சுபாவம் அறிந்து பேசி, தனக்கு இதம் செய்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு கூறி, தமனகன், சிங்கத்திடம் சென்று சற்றுத் தொலைவிலேயே வணங்கிவிட்டு, அதன் உத்தரவின்பேரில் உட்கார்ந்தது.

சிங்கமும் தமனகனும்

சிங்கம்: நீண்ட நாளாயிற்றே உன்னைப் பார்த்து?

தமனகன்: தங்களிடம் வரத்தக்க செயல் இருந்ததனால் தங்களை நாடி வந்தேன்.

சிங்கம்: இப்போது என்ன காரியமாக வந்தாய்?

தமனகன்: நான் தங்களுக்கு உதவி செய்ய வந்தேன். அரசர்கள் என்னைப் போன்ற சிறு பிராணிகளால் தங்களுக்குப் பயன் என்ன என்று நினைக்கலாம். ஆனால் சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பார்கள். மலை போல் உயர்ந்த தேரும் சிறு கடையாணியால்தான் இயங்குகிறது. நான் உங்கள் காரியத்தில் பற்று உள்ளவன். கருவியும் காலமும் அறிந்து செயலை முடிப்பவன். அருகில் சாமர்த்தியசாலி இல்லாத அரசனுக்கு அபகீர்த்தி உண்டாகும்.

சிங்கம்: தமனகா, நீ என் அமைச்சனின் மகன் அல்லவா?

தமனகன்: ஆம் சுவாமி.

சிங்கம்: அப்படியானால், ஏதாவது நீ சொல்ல வேண்டியிருந்தால் நேராகச் சொல்.

தமனகன்: தண்ணீர் குடிக்க வந்து நீங்கள் குடிக்காமல் தயங்குகிறீர்களே?

சிங்கம்: மெய்தான். நான் இத்தனை நாட்களாக இந்தக் காட்டில் சுகமாக இருந்தேன். இப்போது ஒரு சிறு பயம். என்றைக்கும் கேட்காத மேக முழக்கம் போன்ற ஒரு சப்தத்தை இன்று கேட்டேன். அந்த முழக்கம்போல் அல்லவா அதை உண்டாக்கும் விலங்கும் பெரிதாக இருக்கும்? அதற்கு என்ன செய்யலாம், சொல். வழுக்கி விழச் செல்பவனுக்கு ஊன்றுகோல் போல் நீ இப்போது இங்கு வந்தாய்.
தமனகன்: சுவாமி, வெறும் முழக்கத்தைக் கேட்டு, வெற்று ஆரவாரத்தைக் கண்டு பயப்படலாகாது. இப்படித்தான் ஒரு நரி பழைய காலத்தில் சப்தத்தைக் கேட்டு பயந்து, பிறகு நெருங்கிப் பார்க்கும்போது அது ஒன்றுமில்லை என்பதைக் கண்டது.

சிங்கம்: அது என்ன கதை?

தமனகன்: ஒரு நரி பசியால் வருந்தி இரைக்காக அலைந்து அந்த அசதியோடு செல்லும்போது, போர்க்களத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கே ஒரு பெரிய சத்தம். பயந்துபோய் திடுக்கிட்டது அது. பிறகு சற்று முன்னேறிச் சென்றது. அங்கே ஒரு மரத்தில் பெரிய பேரிகை ஒன்றை வைத்திருந்தார்கள். மரத்தின் கிளை காற்றில் அசைந்து அதில் அடிக்கும்போதெல்லாம் பெரிய சத்தம் உண்டாயிற்று.. அதன் அருகே போய்ப் பார்த்தால், பேரிகை என்பது என்ன-வெறும் தோலும் கோலும்தானே? பயமில்லை என்று தெளிந்தது. அதனால் சத்தத்தினால் மட்டும் பயப்படலாகாது. தாங்கள் உத்தரவு கொடுத்தால் இந்தச் சத்தத்தின் காரணத்தை அறிந்து வருகிறேன்.
சிங்கம் அதற்கு உத்தரவு கொடுத்து அனுப்பியது.

சிங்கமும் எருதும்

தமனகன் சென்று பார்க்கும்போது, சஞ்சீவகன் என்ற எருதைக் கண்டது. அதனிடம் பேசி அதை நட்புக் கொண்டது. பிறகு சிங்கத்திடம் வந்து தண்டனிட்டு நின்றது.

சிங்கம்: நீ அந்தப் பிராணி எது என்று அறிந்து வந்தாயா?

தமனகன்:  தங்கள் கட்டளைப்படியே போய்ப் பார்த்தேன். அங்கிருந்தது ஒரு எருதுதான். நன்கு சாப்பிட்டு புஷ்டியாக இருக்கிறான். ஆனால் அவன் தங்கள் நட்பை விரும்புகிறான். நீங்கள் உத்தரவிட்டால் நான் அவனை அழைத்து வருகிறேன்.

சிங்கம்: நல்லது. அப்படியே ஆகட்டும்.
தமனகன் எருதிடம் சென்றது. அதை அழைத்துவந்து சிங்கத்திடம் அறிமுகப்படுத்தியது. இப்போது சிங்கத்துக்கும் எருதுக்கும் மிக நட்பு உண்டாகிவிட்டது. அதனால் சிங்க அரசனுக்குத் துணை யாரும் வேண்டியதில்லாமல் போயிற்று.

ஒருநாள் கரடகன், தமனகன், இரு நரிகளுக்கும் உணவு கிடைக்கவில்லை. இரண்டும் சேர்ந்து ஆலோசிக்கத் தொடங்கின.

கரடகன்-தமனகன் சதி

தமனகன்: நாம் சிங்கத்திடம் எருதை சிநேகம் செய்வித்தது நமக்கே தவறாகிப் போயிற்று. யானை, தன்னை அடக்கும் அங்குசத்தை தானே எடுத்து பாகனிடம் கொடுத்தாற்போலவும், ஆட்டுக்கடா சண்டையில் நரி செத்தது போலவும், ஆஷாடபூதி கூட்டுறவால் சன்யாசி பொருள் இழந்ததுபோலவும் நம் குற்றத்தினாலேயே இது நடந்தது.

கரடகன்: அது என்ன கதை?

நம்பி மோசம் போன கதை

தமனகன்: ஒரு நாட்டில் தேவசர்மா என்ற ஒரு சன்யாசி, தான் பிச்சையெடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒரு கந்தைத்துணியில் வைததுத் தைத்து அதைப் போர்த்திக் கொண்டு, மேலும் பிச்சைஎடுத்தே சாப்பிட்டு வந்தான். அதை ஆஷாடபூதி என்ற திருட்டு பிராமணன் ஒருவன் அறிந்துகொண்டான். அந்தக் கந்தையை எப்படியாயினும் அடையவேண்டும் என்று நினைத்தான்.

ஒரு பிரம்மச்சாரியைப் போல வேஷம்போட்டுக் கொண்டு, தேவசர்மாவின் காலில் விழுந்து, “எனக்கு ஞானோபதேசம் செய்து, இந்தச் சாரமற்ற உலகில் நான் வெறுமனே திரியாமல் என்னைக் கடைத்தேற்றும்படி தங்களை வேண்டிக் கொள்கிறேன்” என்று மிகவும் இரங்கி வேண்டினான்.

இதைப் பாசாங்கு என்று அறியாத அந்த சன்யாசி, பயப்படாதே என்று அவனுக்கு ஆறுதல் சொன்னான். அன்று முதல் ஆஷாடபூதி பயபக்தியுடன் அவன் காலால் இட்ட வேலையைத் தன் கையால் செய்துகொண்டு, கந்தையை அபகரிக்கச் சமயம் நோக்கியிருந்தான். ஒருநாள் ஒரு பிராமணன் வீட்டு திவச போஜனத்தில் இருவரும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டனர். வெகுதொலைவு வந்த பிறகு, ஆஷாடபூதி, ஒரு சிறு சிமிழை எடுத்துத் தன்னிடம் வைத்துக்கொண்டு, அதைப் பார்த்து, “ஐயோ, அந்த பிராமணன் வீட்டுப் பொருள் என்னோடு எப்படியோ வந்துவிட்டதே, அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா? உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும் அல்லவா?” என்று நடுங்குவதுபோல் நடித்தான். பிறகு “இதை அந்த பிராமணன் வீட்டிலேயே கொண்டுகொடுத்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, செல்வதுபோல் போக்குக்காட்டி சிறிது தூரம் சென்று மறைவாக அமர்ந்தான். சற்றுநேரம் கழித்து, வெகுவேகமா இரைக்க இரைக்க ஓடிவந்து சன்யாசி காலில் விழுந்து, “உங்கள் அனுக்கிரகத்தினால்தான் இந்தப் பாவம் ஏற்படாமல் தப்பினேன்” என்று கூறினான்.

இதைக்கண்ட சன்யாசி, “இவன் மிக நல்லவன், பிறர் பொருளுக்கு ஆசைப்படாத பரமாத்மா” என்று நம்பிவிட்டான். அதனால் மறுநாள் தான் குளிக்கச் செல்லும்போது தன்னிடம் இருந்த கந்தையை இவனிடம் கொடுத்துப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றான்.

அப்போது சீடன், “இதுதான் நல்லசமயம். காற்றுள்ளபோதே துற்றிக் கொள்ள வேண்டும்” என்று சொல்லியவாறே, கந்தையை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டான். சன்யாசி, திரும்பிவந்து சீடனைக் காணாமல், “ஓஹோ, நம்மை ஆஷாடபூதி ஏமாற்றிவிட்டான், நாம் மோசம் போய்விட்டோம்” என்று மனம் தளர்ந்து ஒருவரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டான்.

கரடகன்: இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

தமனகன்: எது நம்மைவிட்டுப் போயிற்றோ, அதை மீண்டும் சேர்க்க வேண்டும். எது கிடைக்கவில்லையோ, அதைச் சம்பாதிக்க வேண்டும். எதிராக வரும் துன்பங்களைத் தடுக்கவேண்டும். இப்போது பிங்கலனும் (சிங்கமும்) சஞ்சீவகனும் (எருதும்) நட்பானதால் நமக்குச் சங்கடம். இவர்களுடைய நட்பை நாம் பிரிக்கவேண்டும்.

கரடகன்: அவர்கள் நல்ல நண்பர்களாக அல்லவா இருக்கிறார்கள்? அவர்கள் நட்பைப் பிரிப்பது முடியாத காரியம் அல்லவா?

தமனகன்: என்ன சொல்கிறாய்? உபாயத்தால் ஆகாதது என்ன? ஒரு காகம் தனக்கு எதிரியான பாம்பைக் கொன்ற கதை தெரியாதா உனக்கு?

கரடகன்: அது எப்படி?

காகம் தந்திரத்தால் பாம்பைக் கொன்ற கதை

ஒரு பெரிய மரத்தின் கிளைகளில் கூடுகட்டிக்கொண்டு ஆணும் பெண்ணுமாகிய இரு காகங்கள் நெடுநாட்களாக வாழ்ந்தன. அந்த மரப்பொந்தில் ஒரு நாகம் வந்து சேர்ந்தது. அந்தக்  காக்கை இடும் முட்டை களை எல்லாம் அது குடித்துவிட்டது. இதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்ட ஆண் காகம், தனக்கு நண்பனான நரி ஒன்றிடம்போய், “இனிமேலாவது முட்டைகளைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்யலாம்?” என்றது.

நரி: நண்டு ஆசைகாட்டிக் கொக்கினைக் கொன்றாற்போல ஒரு உபாயத்தினால் தான் அப்படிச் செய்யவேண்டும்.

காக்கை: நண்டு கொக்கை எப்படிக் கொன்றது?

நண்டு கொக்கைக் கொன்ற கதை

 

siragu-panja-thandhira-kadhai2மீன்களை மிகுதியாகத் தின்ற கொக்கு ஒன்று, வழக்கமான தனது குளக் கரையில் வந்து சோகமாக நின்றுகொண்டிருந்தது. அதைக் கண்ட மீன்கள், “நீ ஏன் வழக்கம்போல் உன் ஆகாரத்தைப் பிடித்துத் தின்னாமல் சும்மா இருக்கிறாய்? சொல்” என்றன.

கொக்கு: நான் மீன்களைத் தின்பது மெய்தான். ஆனால் இன்றைக்கே வந்து இங்குள்ள மீன்களை எல்லாம் பிடித்துக்கொண்டு போகப் போவதாக ஒரு மீனவன் சொன்னான். என் இரைகள் எல்லாம் அழிந்துபோகப் போகிறதே, நாளை ஒன்றும் கிடைக்காதே என்று நான் சோகமாக இருக்கிறேன்.

இதைக் கேட்டு மீன்கள் கூட்டமாகக் கூடி ஆலோசித்தன. கடைசியில் கொக்கிடமே வந்து, “நீதான் எங்களை இன்று எப்படியாவது காப்பாற்ற வேண்டும்” என்றன.

கொக்கு: நான் போய் மீனவனோடு சண்டையிட முடியுமா?  மேலும் நான் கிழவன் அல்லவா?

மீன்கள்: ஐயோ, எங்களை எப்படியாவது காப்பாற்று.

கொக்கு: உங்களை வேறோர் இடத்திற்குக் கொண்டுபோய் நான் சேர்க்கிறேன். அதனால் எனக்கு உதவிசெய்பவன் என்ற பெயர் கிட்டும். நீங்களும் வெகுகாலம் பிழைத்திருக்கலாம்.

கொக்கின் பேச்சை முட்டாள் மீன்கள் அப்படியே நம்பிவிட்டன. “சரி அப்படியே எங்களைக் கொண்டுசென்று காப்பாற்று” என்று கேட்டன. அந்த வஞ்சகக் கொக்கு, நடைக்கு ஒன்றாக, குளத்திலிருந்த மீன்களை எல்லாம் அலகில் கவ்விச் சென்று, சில மீன்களை மட்டும் தின்றுவிட்டு, பிறவற்றை ஒரு பெரிய பாறைமேல் உலர வைத்தது. அச்சமயத்தில் குளத்திலிருந்த ஒரு நண்டு, “என்னையும் நீ காப்பாற்றி அந்த இடத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்” என்றது. வருகின்ற காலத்தில் எல்லாம் வலிய வரும் என்று எண்ணிய கொக்கு, அந்த நண்டை எடுத்துக்கொண்டு சென்றது. வழியில் மீன்கள் செத்துக்கிடப்பதையும், மீன்முட்கள் சிந்திக்கிடப்பதையும், பாறைமேல் பலமீன்கள் உலர்கின்றதையும் பார்த்தது நண்டு. ஐயோ, இந்தக் கொக்கு இதே போல் நம்மையும் கொன்றுவிடும் என்று நினைத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு உபாயத்தை எண்ணியது. கொக்கைப் பார்த்து, “நீ மிகவும் கஷ்டப்பட்டு என்னைக் கொண்டுவந்தாய். ஆனால், குளத்திலே என் சுற்றத்தார்கள் எல்லாம் இருக்கிறார்கள். அங்கே நீ என்னை மறுபடியும் கொண்டுசென்றால் அவர்களையும் நான் காட்டுவேன். நீ அவர்களையும் காப்பாற்றலாம்” என்றது.

அதைக் கேட்டுக் கொக்கு, பேராசையால் திரும்பி அந்தக் குளத்திற்கு வந்தது. குளத்தின் சமீபத்தில் அது வந்தபோது, நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை நறுக்கி இரு துண்டுகளாக்கி அதைக் கொன்றது. தான் குளத்தில் பழையபடியே சென்று சுகமாக இருந்தது.

“அந்த நண்டைப் போல சூழ்ச்சிசெய்து பாம்பைக் கொல்லவேண்டும்” என்று அந்த நரி காக்கையிடம் கூறியது.

(தொடரும்)

 

இலக்கியம்