பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8

 

siragu-panjathandhira-kadhaigal1

இரண்டாவது அமைச்சன்: அவன் சொன்னதில் சிறிதும் நன்மை இல்லை. பெரிய துன்பங்கள் நேர்கின்றபோது பகைவருடன் சமாதானம் செய்யக் கூடாது. நெருப்பினால் காய்ச்சிய நீர் அந்த நெருப்பை அவிக்காதா? நம்மைக் கோட்டான்கள் வருத்துகின்றன என்று அவர்களோடு நாம் சமாதானமாகப் போனாலும் அவர்கள் நம்மைக் கொல்லுவார்கள். ஆதலால் மனோபலத்தோடு எதிரிகளைக் கொல்லவேண்டும். வீரத்தினால் உயர்ந்திருப்பவனே உயிருள்ளவன். மற்றவர்கள் பிணத்துக்கு ஒப்பானவர்கள்.

அரசன் (மூன்றாம் அமைச்சனைப் பார்த்து): உன் கருத்து என்ன, சொல்.

மூன்றாம் அமைச்சன்: அரசனே, கேள். பகைவன் தன்னை விட வலிமை உடையவனாக இருந்தால், பொறுத்துக்கொண்டு போகவும் தேவையில்லை, அவனோடு சண்டையிடவும் தேவையில்லை. வேறொரு இடத்திற்குச் சென்று விடுவதே நல்லது. “இந்தச் சமயத்தில் சண்டை செய்யலாகாது” என்று எவன் தன் இடத்தைவிட்டு அந்தச் சமயத்துக்குத் துறந்து போய்விடுகிறானோ அவன் பாண்டவர்களைப் போல வெற்றியடைகிறான். எவன் செருக்குடன் போர் செய்கிறானோ அவன் குலம் அழிந்துபோகிறது.

அரசன் (நான்காம் அமைச்சனைப் பார்த்து): உன் ஆலோசனை என்ன?

நான்காம் அமைச்சன்: தன் இடத்தைவிட்டு ஒருவன் செல்லுதல் தகுதியானது அல்ல. முதலை தன் இடத்தில் (நீரில்) இருக்கும்போது மலை போன்ற யானையையும் இழுக்கமுடிகின்றது. அதுவே தன் இடத்தை விட்டுப் பெயர்ந்து சென்றால் அதை நாய்களும் இழுத்துக்கொண்டு போகின்றன. ஆகையால் தன் இடத்தில் இருந்தவாறே, நட்புள்ளவர்களின் துணையைக் கொண்டு பகைவர்களைக் கெடுக்கவேண்டும். பகைவருக்கு பயந்து தன் இடத்தைவிட்டுச் சென்றவன் திரும்பவும் அந்த இடத்துக்கு வரமுடிவதில்லை. பல்லைப் பிடுங்கிய பாம்பும், மதமில்லாத யானையும், இடம்பெயர்ந்த அரசமரமும் யாவராலும் அவமானமடையும். தன் இடத்தில் வலிமையோடு இருந்தால் ஒருவன் தக்க பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டு நூறுபேருடன் சண்டையிடலாம். அதில் வெற்றிபெற்றால் செல்வத்தை அடையலாம். தோற்றால் சுவர்க்கம் கிடைக்கும். ஆகவே எதைச் செய்வதானாலும் இங்கிருந்து செய்வதே நல்லது.

அரசன் (ஐந்தாம் அமைச்சனிடம்): உன் அபிப்பிராயம் எப்படி?

ஐந்தாம் அமைச்சன்: என் அபிப்பிராயமும் இதுவே, அரசே! தங்கள் சார்பை விட்டுவிட்டால் சாமர்த்தியம் உள்ளவர்களும் வீரம் குறைந்துபோகிறார்கள். ஆகவே நம் இடத்திலிருந்தே நாம் உதவியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். தன் இடத்தைவிட்டவனுக்கு யாரும் உதவி செய்வதில்லை. ஒவ்வொருவருக்கும் தக்க உதவிதான் வேண்டும். நெருப்பு சிறிதாக இருந்தாலும் சருகு முதலியவற்றின் உதவி இருக்கும்போது காற்று அதற்கு உதவி அதைப் பெரிதாக்குகிறது. அதே நெருப்பு உதவியின்றி விளக்காக இருக்கும்போது காற்று அதை அணைத்துவிடுகிறது. ஆகவே சார்பு அல்லது நட்பு இல்லாமல் எந்தக் காரியமும் ஆவதில்லை. எனவே தக்கவரை நாட வேண்டும். இதுவே என் கருத்து.

இறுதியாக மேகவர்ணன் என்னும் அக் காகஅரசன், தன் தந்தையின் வயது முதிர்ந்த மந்திரியாகிய சிரஞ்சீவியிடம் ஆலோசனை கேட்டது.

சிரஞ்சீவி: எல்லா அமைச்சர்களும் நூற் கருத்துகளையே கூறினார்கள். ஆகவே அனைத்தும் சரியானவையே. எனினும், பகைவன் பலசாலியாக இருந்தால் அவனுக்கு விசுவாசமாக நடப்பதுபோல் காட்டி, அவனைக் கெடுக்க வேண்டும். அல்லது எல்லா விஷயங்களிலும் தனக்கும் தன் பகைவனுக்கும் உள்ள தராதரங்களை ஒப்பிட்டு அறிந்து எது செய்ய வேண்டுமோ அதைச் செய்யவேண்டும். அரசன் தனக்குப் பயனுள்ளவற்றை ஒரு நாழிகை விசாரிக்காமல் இருந்தாலும் அவனுக்குக் கேடுவரும். விவசாயியின் பாதுகாப்பு இல்லாவிட்டால் பயிர் அழிகிறது அல்லவா? ஆகவே ஆள்பவன், எல்லா அமைச்சர்களின் கருத்துகளையும் அறிந்துகொண்டு எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

மேகவர்ணன்: சரி, காகங்களுக்கும் கோட்டான்களுக்கும் பகைமை எப்படி உண்டாயிற்று, சொல்லுங்கள்.

(கோட்டான்களுக்கும் காகங்களுக்கும் பகை ஏற்பட்ட கதை)

சிரஞ்சீவி: ஒருநாள் மயில் முதலிய பறவைகள் எல்லாம் காட்டில் கூடின. “நமக்கெல்லாம் கருடன் அரசனாக இருந்தும், நம்மைக் கொல்கின்ற வேடர்களிடமிருந்து அவன் நம்மைக் காப்பதில்லை. இப்படிப்பட்டவன் நமக்கு அரசனாக இருந்து பயன் என்ன? அரசனே வேண்டாம் என்றால், தலைவன் இல்லாமல் கப்பல் கரைகாணாமல் போவதுபோல நிலை கெட்டுப் போவோம். ஆகையால் எல்லாப் பறவைகளுக்கும் அரசனாகக் கோட்டானை நியமிக்க வேண்டும்” என்று நிச்சயித்தன.

அரசப் பட்டாபிஷேகத்துக்குரிய பொருள்களைச் சேகரித்து, பல வாத்தியங்களை முழக்கி, கோட்டானைச் சிங்காசனத்தில் அமரவைக்க வேண்டும் என்றிருக்கும்போது, அச்சமயத்தில் ஒரு காகம் வந்தது. மற்ற பறவைகளை அது பார்த்து, “இதென்ன காரியம், இப்படிச் செய்தீர்களே!” என்று அது கூச்சலிட்டது.

மனிதர்களில் நாவிதனும், விலங்குகளில் நரியும், மாதர்களில் பணிப் பெண்ணும், பறவைகளில் காகமும் சாமர்த்தியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆகவே இந்தச் செய்தியைக் காகத்திடமும் சொல்லி அதன் உடன்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும் என்று பறவைகள் நினைத்து, “எங்களுக்கு அரசன் இல்லாமையால் இந்தக் கூகையை அரசனாக்கியிருக்கிறோம். இதற்கு நீயும் உடன்படு” என்றன.

ஆனால் காகம் குலுக்கென்று சிரித்து, தலையை அசைத்துச் சொல்லியது.

“இது முழுவதும் கெட்ட காரியம். அழகும் வல்லமையும் உடைய மயில் முதலிய அநேகம் பறவைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது பகல் குருடனாகிய இந்தக் கோட்டான்தான் உங்களைக் காப்பவனோ? குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளலாமா? இதற்கு நான் உடன்பட மாட்டேன். கருட ராஜன் இருக்கும்போது பயங்கர சுபாவமும், வலிமையின்மையும் உள்ள இவனை அரசனாக்கி என்ன பயன்? பராக்கிரமும் குணமும் உள்ள அரசன் ஒருவன் இருந்தாலே போதுமானது. பல பேர் தலைமைப் பதவியில் இருந்தால் நமக்குத் துன்பம்தான். கருடனை வழிபட்டு எல்லா வரங்களும் பெற்று மனிதர்கள் பறவைகளிடம் மதிப்பு வைத்திருக்கிறார்கள். வலியவர்களின் பெயரால் எளியவர்களுக்குக் காரியம் ஆகிறது. முன்னொருகால் முயல் சந்திரனின் பிம்பத்தைக் காட்டி சுகமடைந்தது உங்களுக்குத் தெரியாததா?”

பறவைகள்: முயல் எப்படி சுகம் அடைந்தது? சொல்லவேண்டும்.

(முயலும் யானைகளும் கதை)

Siragu-panchadhandhira-kadhaigal3

காகம்: ஒரு காட்டில் சதுரதந்தன் என்னும் யானை பிற யானைகளுக்குத் தலைமை தாங்கிவந்தது. அங்கே மழை பெய்யாததால் குளம் குட்டை கசங்கள் யாவும் வற்றிப்போயின. மற்ற யானைகள், “சுவாமி, நாங்கள் தண்ணீர் இன்மையால் செத்தாற்போல் ஆயினோம். தண்ணீர் கிடைக்கும் இடத்தைத் தேடிச் சென்றால் எல்லாரும் நலமாக இருக்கலாம்” என்றன. அப்போது ஒரு முதிர்ந்த யானை, “இங்கிருந்து ஐந்து நாள் நடைப்பயணத் தொலைவில் பாதாளகங்கை என்ற நதி இருக்கிறது. அங்கே போனால் எல்லார்க்கும் மிகவும் நீர் கிடைக்கும்” என்றது. அப்படியே எல்லா யானைகளும் அங்கு சென்றன. நல்ல தெளிந்த நீரைக் கண்டதும், அவை ஆரவாரத்தோடு ஓடிச் சென்று நீரில் பாய்ந்தன. அப்போது அங்கே வசித்துக் கொண்டிருந்த முயல்களில் சில யானைகளின் காலின்கீழ் அகப்பட்டு இறந்தன. பல முயல்களுக்குக் கால்கள் ஒடிந்தன. சில மிதிபட்டுக் கூழாயின. சிலவற்றின் குடல்கள் சரிந்தன. இப்படியொரு எதிர்பாராத் துன்பம் நேரிட்ட உடனே சில முயல்கள் ஒன்றுகூடி, “இந்த யானைக் கூட்டம் இன்று வந்து நம்மில் பலரை அழித்துவிட்டது. இதனால் நமக்குப் பெரிய சங்கடம் நேரிட்டு விட்டது. அதனால் இதற்கு ஏதாவது உபாயம் செய்ய வேண்டும்” என்றன.

சில முயல்கள்: இந்த இடத்தைவிட்டு நாம் போய்விடலாம்.

வேறு சில முயல்கள்: நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் போவது சரியில்லை. ஏதாவது தந்திரம் செய்து யானைகளை விரட்ட வேண்டும்.

அப்போது ஒரு முயல்: யானைகள் பயப்படும்படி நான் ஒரு உபாயம் செய்து அவற்றை விரட்டுகிறேன்.

தன் ஆலோசனைப்படி, அது யானைகள் வரும் வழியில் ஓர் உயர்ந்த மேட்டில் உட்கார்ந்திருந்தது.

(யானைகள் வந்தபோது, சதுரதந்தனைப் பார்த்து)

முயல்: அட துஷ்ட யானையே, நீ உன் இடத்தைவிட்டு இந்த மடுவில் வந்து பலவகைப்பட்ட விளையாட்டுகளை விளையாடுகிறாய். நான் உங்கள் எல்லாரையும் மரணமடையச் செய்வேன்.

யானை (ஆச்சரியப்பட்டு): நீ யார்?

முயல்: நான் நிலவில் இருக்கும் முயலாகிய விஜய ராஜனுடைய தூதன். சந்திரனுடைய கட்டளைப்படிதான் இங்கே வந்தேன்.

(இதைக் கேட்டு ஏமாந்த யானை): சந்திரனுடைய கட்டளை என்ன?

முயல்: நீ இங்கே வந்து நாணமில்லாமல் நீரில் குதித்துவிளையாடி எங்கள் இனத்தில் பலபேரைக் கொன்றுவிட்டாய். அதனால் விஜய ராஜன் கோபமாக இருக்கிறான். இந்த ஒருமுறை இதைப் பொறுத்துக் கொண்டான். இனிமேல் நீ இங்கே வரலாகாது. நீ இதற்கு பதிலளித்தால் எங்கள் தலைவனிடம் சொல்வேன்.

யானை: அவன் இடத்திற்கு என்னை அழைத்துக் கொண்டுபோ.

முயல்: நீ தனியாக என்னோடு வா, எங்கள் அரசனைக் காண்பிக்கிறேன். இரண்டும் சென்றன. அருகிலுள்ள மடுவிற்குச் சென்று,

முயல்: சந்திரன் இந்தத் தண்ணீருக்குள் வந்திருக்கிறான். அவனை வணங்கிச் சொல்.

யானை பயந்து, நீரில் காணப்பட்ட சந்திரனின் பிம்பத்திற்கு வணக்கம் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டது. அது முதலாக முயல்கள் எந்தத் தொல்லையும் இன்றிச் சுகமாக அங்கே இருந்தன. அப்படியே, பெரியவர்களை அடுத்திருந்தால் மலைபோல் வரும் துன்பங்களும் பனிபோல் நீங்கிவிடும். கொல்லையில் மரத்தைச் சார்ந்திருக்கும் கொடி, உழவன் உழுபடைக்கு அஞ்சுவதில்லை. மாறாக துஷ்டர்களின் உறவு கணப்போது இருப்பினும் கெடுதியே வரும். முன்பு ஒரு முயலும் ஆந்தையும் சண்டையிட்டு இரண்டும் இறந்த செய்தி அறியீரோ?

பறவைகள் காகத்தைப் பார்த்து: அது எப்படி?

காகம் சொல்லலாயிற்று. (முயலும் குருவியும் வழக்கிட்ட கதை)

Siragu-panchadhandhira-kadhaigal5

சில காலம் முன்னால் நான் ஒரு முதிய மரப் பொந்தில் குடியிருந்தேன். அப்போது கபிஞ்சலன் என்னும் குருவியும் அங்கே வசித்தது. நாங்கள் நண்பர்களாக, மாலைப்போதுகளில் அளவளாவி, சுகமாக இருந்தோம். ஒருநாள் அது வேறொரு பறவையோடு இரைக்குச் சென்றது. மாலையாகியும் அது வராததால், நான் “ஐயோ, அவன் வலையில் பட்டானோ? யாராவது கொன்றார்களோ? தெரியவில்லை. எப்போதும் வேறொரு இடத்திலும் அவன் தங்கமாட்டானே” என்று விசனத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றாம் நாள், அவன் இருந்த பொந்தில் ஒரு முயல் வந்து குடிபுகுந்தது. நான் பலவிதமாகத் தடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இப்படியிருக்க, கபிஞ்சலன் சிலநாள் கழித்து எப்படியோ திரும்பிவந்தது. தன் இடத்துக்கு அது வந்து பார்த்தபோது முயல் இருந்ததைக் கண்டு,

குருவி: அட முயலே! என் இடத்தை நீ ஆக்கிரமித்தது நல்லதல்ல. இது என் வீடு. உடனே புறப்பட்டுப் போய் விடு.

முயல்: அட பேதையே! இது உன் வீடு அல்ல, என் வீடுதான். வீணாக ஏன் கத்துகிறாய்? வாவி கிணறு குளம் கோயில் சத்திரம் காலியிடம் போன்ற சொத்துகள், அவற்றை விட்டு நீங்கிப் போய்விட்டவனிடம் இருக்காது. அதை யார் அனுபவிக்கிறார்களோ அவர்களுக்கே அது சொந்தமாகி விடுகிறது. இப்படித்தான் மனிதர்களும் நடந்துகொள்கிறார்கள். பறவைகளிலும் எது வலியதோ அது பிறவற்றின் இடத்தைக் கைக்கொள்ளுகிறது. எனவே இது என் வீடே!

கபிஞ்சலன்: நான் தர்மத்தைப் பற்றிப் பேச, நீ வழக்கத்தைப் பற்றிப் பேசுகிறாய். அதனால் நல்லறிவுள்ளவர்களிடம் சென்று நாம் இதுபற்றி வழக்குத் தீர்த்துக்கொள்ளலாம்.

இப்படி இவர்கள் விவாதம் செய்துகொண்டு போகும்போது, நானும் அவர்களைத் தொடர்ந்து போனேன். அங்கே கூர்ம்பல்லன் என்னும் பூனை ஒன்று இருந்தது. “இவர்கள் வழக்குத் தீர்ப்புக்குப் போகிறார்கள். இவர்களை மோசம் செய்ய வேண்டும்” என்று அது நிச்சயம் செய்துகொண்டது. அதனால் ஆற்றங்கரையில் உட்கார்ந்து சூரியனைப் பார்ப்பதுபோல் பாவனை செய்துகொண்டு, அங்கிருந்த பிராணிகளிடம் பின்வருமாறு சொல்லிக்கொண்டிருந்தது:

இந்த நிலையற்ற உலகில் ஏற்படுகின்ற இன்பம் கணப்போதில் அழிந்து கனவுபோல் பொய்யாகப் போய்விடுகிறது. அதனால் நமக்கு தருமத்தைவிட வேறு கதி இல்லை. அறத்தைவிட்டு நாள்களைக் கழிப்பவன் மரப்பாவை போன்றவன். அவன் மூச்சுவிடுகின்ற பிணத்திற்கு ஒப்பாவான். தயிரில் சாரமாக நெய்யும், எள்ளில் சாரமாக எண்ணெயும் இருப்பதுபோல எல்லாவற்றிலும் சாரமாக தருமம் இருக்கிறது. இதைத் துறந்து வெறும் சோற்றைத் தின்றுகொண்டு மக்கள் காலம் கழிக்கிறார்களே என்று நான் மிகவும் துயரப்படுகிறேன். சுருக்கமாகச் சொல்லுகிறேன்: ஓ மக்களே! பிறருக்கு உதவி செய்வதற்கு ஒத்த புண்ணியமும், பிறரை வருத்துவதற்கு ஒத்த பாவமும் வேறில்லை. மேலும் தனக்குத் துன்பம் தருவது மற்றவர்களுக்கும் துன்பம் தரும் என்பதை உணர்ந்து யாருக்கும் கஷ்டம் நேரிடாமல் நடந்துகொள்ள வேண்டும்.

இப்படி அதன் வாசகத்தைக் கேட்டு முயல், “இவன் நமக்கு நல்ல தீர்ப்புச் சொல்லுவான் வா” என்று கபிஞ்சலனை அழைத்தது. “இவன் நமக்கு இயற்கையில் பகைவன் ஆகவே சற்று தொலைவிலேயே இருப்போம்” என்று எண்ணி, குருவி சொல்கிறது:

தவமுனிவனே, நீ அறம் உணர்ந்தவன் ஆகையால், எங்கள் இருவர் வழக்கைக் கேட்டு, தர்மத்தின்படி நியாயம் சொல்லி, பொய்சொல்கிறவனை தண்டிக்க வேண்டும்.

Siragu-panchadhandhira-kadhaigal4

இதைக் கேட்ட பூனை, காதில் கையை வைத்துக் கொண்டு:

எனக்கு வயதாகிவிட்டது, அதனால் தூரத்துச் சொல் கேளாது. அருகில் வந்து உங்கள் கதையைச் சொன்னால் இம்மைக்கும் மறுமைக்கும் நலம் தருவதாகிய நடுநிலையோடு நான் வழக்குத் தீர்ப்பேன். பேராசையினாலும், கோபத்தாலும் தீர்ப்புச் சொல்பவன் நரகத்திற்குத்தான் போவான். ஆகையால் நீங்கள் என் காதருகே வந்து வழக்கைத் தெரிவியுங்கள். அவை பூனையின் பசப்பு வார்த்தையில் நம்பிக்கை வைத்து அருகில் வந்தவுடனே, அந்தப்பூனை இரண்டையும் இரண்டு கைகளால் ஒருமிக்கச் சேர்த்துப் பிடித்துத் தின்றுவிட்டது. ஆகையால் தீயவர்களைச் சேர்ந்தால் இப்படிப்பட்ட தீங்கே நேரிடும்.

இப்படிக் காகம் சொன்னவற்றைக் கேட்ட பறவைகள் எல்லாம்:

இப்போது சேகரித்த பொருள்களை அப்படியப்படியே வைத்துச் செல்வோம். வேறொரு பறவையை அரசனாக்குவது பற்றி மீண்டும் கூடி யோசிப்போம் என்று தங்கள் தங்கள் இடத்திற்குப் போயின. அப்போது சிங்காதனத்தின் அருகே தன் மனைவியோடு உட்கார்ந்திருந்த கோட்டான்:

பெண்ணே, மங்கல நீராட்டு ஆகியும் இப்போது ஏன் அரசனாக அபிஷேகம் செய்யாதிருக்கிறார்கள்?

பெட்டை: உன் ராஜ்யாபிஷேகத்துக்குக் காகம் இடையூறு செய்துவிட்டது. அதனால் பறவைகள் எல்லாம் தங்கள் இடத்துக்குப் போய்விட்டன. காகம் மாத்திரமே இருக்கிறது.

கோட்டான்: அடே துஷ்டனே, நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? நீ என் காரியத்தை ஏன் கெடுத்தாய்? இதனால் இன்று முதல் உன் குலத்துக்கும் என் குலத்துக்கும் தீராப்பகை உண்டாகிவிட்டது. வாளினால் வெட்டினாலும் அம்பினால் எய்தாலும் அந்தக் காயம் ஆறிவிடும். சொல்லினால் ஏற்பட்ட காயம் ஆறாது.

என்று சொல்லியவாறே கோட்டான் தன் இடத்துக்குப் பெட்டையுடன் சென்றது. காகமும், பயந்தவாறே தன் மனத்திற்குள்:

நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு ஒப்ப, நான் என் பேச்சினால் வீண்பகை சம்பாதித்துக் கொண்டேன். சாமர்த்தியசாலி, சபையில் பிறரை நிந்திக்க மாட்டான். எதையும் யோசித்துச் செய்யவேண்டும். அப்படிச் செய்யாமையினால் நானும் சங்கடத்தில் அகப்பட்டேன்!

என்று பச்சாத்தாபப் பட்டவாறு தன் இடத்திற்குப் போயிற்று. அது முதற்கொண்டு கோட்டான்களுக்கும் நமக்கும் தலைமுறை தலைமுறையாகப் பகை இருந்து வருகிறது என்று கிழமந்திரி கூறியது.

மேகவர்ணன்: ஐயா! அப்படியானால், நாம் இப்போது என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

(தொடரும்)     

இலக்கியம்