பதிவுகள் 16-09-2016

“பண்டை இந்திய அரசுகளில் நல்ல கட்டமைப்பும் இறுக்கமான நிர்வாகமும் இருந்த போதிலும் அரசுகளுக்கிடையிலான தொடர்புகளில் அவற்றை ஒத்த ஒழுங்கான முறை எதுவும் இல்லை. அங்கு உள்ளார்ந்த அராஜகமே இயல்பாகக் காணப்பட்டது. மௌரியப் பேரரசர் ஆட்சிக்காலம் தவிர பிற காலங்களில் இந்தியாவில் அரசியல் ஒற்றுமை என்பது இருந்தததே இல்லை”
என்று ஏ. எல். பாஷம் என்னும் சரித்திரப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். (The Wonder That was India, இயல் 3 இறுதிப்பகுதி)
இதில் “பண்டை” என்பதற்கு பதிலாக “இன்றைய” என்றும் “அரசு” என்பதற்கு பதிலாக “மாநில அரசு” என்றும் போட்டுப்பாருங்கள். இன்று வரை இது உண்மைதான். பழங்காலத்தில் தன்னளவில் அரசாங்கத்தில் தங்கள் நன்மையை மட்டும் கவனித்துக் கொண்டு பக்கத்திலே இருந்த நாட்டு மக்களைக் கொடுமைப்படுத்தியதுபோன்ற அதே சம்பவங்கள்தான் இப்போதும் இந்தியாவில் நடக்கின்றன. இன்னும் இந்தியா ஒரு நாடாகவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் ஒற்றுமையை உருவாக்குவதில் இந்திய மத்திய அரசாங்கம் (காங்கிரசோ, ஜனதாவோ எதுவாயினும்) ஆதியிலிருந்தே தவறிவிட்டது. இப்போதும் தவறியே வருகிறது.
””””””””””””””””””””
ஏதோ தன் நாட்டில் தவறே நடக்காதது போலவும் தமிழ்நாட்டில்தான் கன்னடர் கொடுமைப் படுத்தப்படுவதுபோலவும் இரு நாட்களுக்கு ஒருமுறை கன்னட முதலமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு “தமிழ்நாட்டில் கன்னடரைக் காப்பாற்றுங்கள்” என்று கடிதம் விடுகிறார். இதெல்லாம் எதிர்காலத்துக்கான வரலாற்றுப் பதிவுகள். எப்போதும் கடிதம்விடும் தமிழக முதலமைச்சர் மௌனம் சாதிக்கிறார். இடையில் கன்னடர்களின் பேயாட்டம் தொடர்ந்து நடக்கிறது. உண்மையில் எங்கே என்ன நடக்கிறது என்று சித்தராமையாவுக்குத் தெரியாதா? கேட்பதற்கு ஆளில்லை.
”””””””””””””””””””””””
சுப்பிரமணியம் சுவாமி என்ற பொருளாதார மேஜை–சாரி, மேதை, தமிழ்நாடு தன் நீர்ப் பங்கீட்டு உரிமையைக் கைவிட்டுக் கடல்நீரைக் குடிக்கலாம் என்கிறார். ஏன் கர்நாடகாவில் (அரபிக்) கடல் இல்லையா? அங்கே உள்ளவர்கள் அந்த நீரைக் குடிக்க மாட்டார்களா? லண்டனில் படித்த இந்த மாமேஜைக்கு அரசுகளிடையே உள்ள நீர்ப்பங்கீட்டு விகிதாசாரம் பற்றி ஒன்றுமே தெரியாதா? பாவம்.

தினம்-ஒரு-செய்தி