பத்மநாப ஐயர்

பத்மநாப ஐயர்

நேற்று பத்மநாப ஐயர் பற்றிய நூல் வெளியீட்டு விழா சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையிலுள்ள இக்சா அரங்கில் சிறப்புற நிறைவேறியது. ‘நூலை ஆராதித்தல்-பத்மநாப ஐயர்-75’ என்னும் அந்நூலைத் திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வம் வெளியிட திரு.எல். அய்யாசாமி பெற்றுக் கொண்டார். விழாவைச் சிறப்புற ஏற்பாடு செய்திருந்த நண்பர் அம்ஷன் குமார் தொடக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து அம்ஷன் குமார் இயக்கி, தேசிய விருது பெற்ற ஆவணப்படமான யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி திரையிடப்பட்டது. யாழ்ப் பாணம் தெட்சிணாமூர்த்தி, ஒரு தவில் வித்வான். லயஞானத்தில் தலை சிறந்தவர். தமிழகத்தின் நாதசுர வேந்தர்களாகிய காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மவுலானா போன்றவர்களாலும் பாராட்டப்பெற்ற வேகமும் திறனும் உடையவர். எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கைக்கும் தமிழகத்துக் கும் பாலமாக அமைந்த கலைஞர். (இதன் குறுவட்டுகள் திரு. அம்ஷன் குமாரிடம் கிடைக்கும். வேண்டியவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.)

பத்மநாப ஐயரும் இவரைப் போலவே இலங்கைக்கும் தமிழகத்துக்கும் பாலமாக அமைந்தவர்தான். தமிழ்ச் சிறுபத்திரிகைகள் உலகத்தோடு பரிச்சயம் உள்ளவர்களுக்கு பத்மநாப ஐயரைத் தெரிந்திருக்கலாம், பிறருக்கு அவ்வளவாகத் தெரிய வாய்ப்பில்லை. அநேகமாக 1985ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போது பத்மநாப ஐயர் திருச்சிக்கு வந்திருந்தார். பேராசிரியர் ஆல்பர்ட் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஐயர் என் வீட்டுக்கு வந்ததும் அன்றி, ஈழத்தமிழ்ப் புத்தகங்களையும் அளித்தார். மல்லிகை இதழ்த் தொகுப்பு (ஆசிரியர் டொமினிக் ஜீவா) ஏறத்தாழ முழுவதும் எனக்குக் கிடைத்தது. வேறு சில பல்கலைக்கழக வெளியீடுகளையும் தனிப்பட்ட வெளி யீடுகளையும் கொடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் ஏதோ ஓர் உயர்ந்த அரசுப் பணியில் அவர் இருந்தார் என்று ஞாபகம். அவர் கொடுத்த நூல்கள் சிலவற்றில் அவருடைய முத்திரை (ரப்பர் ஸ்டாம்ப்) இருக்கும். ஆர். பத்மநாப ஐயர், 14/15, சங்கிலியன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்று அதில் காணப்படும். இது எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.

ஆம், இதுதான் அவருடைய வாழ்நாள் பணி. ஈழத்தின் நூல்களைத் தமிழகத்துக்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்துதல். அநேகமாக எங்களைப் போன்றவர்களுக்கு அவர் வாயிலாகத்தான் ஈழத்தமிழ் இலக்கியம் அறிமுகமாயிற்று. மஹாகவி, நீலாவணன், சேரன், யேசுராசா, வ.ஐ.ச. ஜெயபாலன், சு. வில்வரத்தினம் தொடங்கிப் பல ஈழத்துக் கவிஞர்களும், மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம், புஷ்பராஜன், உமா வரதராஜன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் போன்ற எழுத்தாளர்கள் பலரும், சிவசேகரம், யமுனா ராஜேந்திரன் போன்ற விமர்சகர்களும் அறிமுகமானார்கள். அதற்குமுன்பு என்னைப் போன்றவர்களுக்குக் கைலாசபதியும் சிவத்தம்பியும் டானியலும்தான் தெரியும். வெங்கட் சாமிநாதனுக்கு பதிலளித்தது வாயிலாகவும் பலஸ்தீனத்துக் கவிதைகள் வாயிலாகவும் நுஃமானும் பரிச்சயம். சில விவாதக்களங்களால் எஸ்.பொ. அறிமுகமாகியிருந்தார். மற்ற ஈழ எழுத்தாளர்கள் உலகினை-குறிப்பாக மு. தளையசிங்கம் குழுவினரையும் பிறரையும் பத்மநாப ஐயர் எங்களுக்குத் திறந்துவிட்டார்.

அடுத்த ஆண்டு வந்தபோது அலை பத்திரிகைத் தொகுப்பையும் வேறு பல நூல்களையும் கொண்டுவந்து எனக்குக் கொடுத்தார். அதற்குப் பிறகும் அவர் நேரில் வராவிட்டாலும் சில முக்கியமான பத்திரிகைகள் எனக்கு வந்தன. நான் ஈழத்து எழுத்தாளர்கள் யாரையும் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் எல்லாரும் எனக்கு நூல்கள் வாயிலாக அறிமுகம்.

இம்மாதிரி ஈழத்துநூல்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து கொடுப்பது, இங்கிருந்து சிறுபத்திரிகைகளையும், நல்ல இலக்கிய நூல்களையும் ஈழத்துக்குக் கொண்டுசெல்வது-இதுதான் அக்காலத்தில் அவருடைய பணியாக இருந்தது. இதில் எவ்வளவு பணச்செலவு ஏற்பட்ட போதிலும் அவர் பொருட்படுத்தியதே இல்லை. இன்று உலகம் முழுவதும் ஈழத்தமிழ் இலக்கியம் பரவியிருக்கிறதென்றால் அதற்கு பத்மநாப ஐயர்தான் முழுமுதல் காரணம் என்பதில் ஐயமில்லை. தனது சொந்த விருப்பு வெறுப்புகளை அநேகமாக அவர் நூல்பரிமாற்றத்தில் காட்டியது கிடையாது.

அந்த இரண்டு ஆண்டுகளுடன் அவருடைய தொடர்பு எனக்கு அறுந்து போயிற்று. அநேகமாக அடுத்த ஆண்டு (1987) அவர் துணைவியார் காலமாகிவிட்டார் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு அவரை நான் காணவில்லை. அவர் லண்டனுக்குக் குடி பெயர்ந்து சென்றுவிட்டாதாகப் பின்னர் அறிந்தேன். ஆனாலும் எப்போதாவது ஒரு முறை, எனக்கு லண்டனிலிருந்து இலங்கை எழுத்தாளர்களின் வெளியீடுகள் அஞ்சலில் வரும். கடைசியாக இப்படி எனக்குக் கிடைத்தது கிழக்கும் மேற்கும் என்ற ஈழ எழுத்தாளர்களின் எழுத்துத் தொகுப்புநூல். அதன் பிறகு அவர் நூல்கள் அனுப்புவது முற்றிலும் நின்றுபோயிற்று. (இம்மாதிரி ஓர் இலக்கியப் பாலம், அல்ல, இலக்கியத் தூதுவர் தமிழகத்தில் ஏன் ஒருவரும் தோன்றவே இல்லை என்ற எண்ணத்தை வலுவாக இந்த விழா எனக்குள் எழுப்பியது.)

அவருடைய பணிகள் பலதரப்பட்டவை. நூல்களைப் பரப்புவது முதல் பணி என்றால், பத்திரிகைகள் வெளியீடு, நூல்கள் வெளியீடு, ஆவணப் படங்கள் வெளியீடு போன்ற பல விஷயங்களுக்கு அவர் துணைபுரிந்திருக்கிறார். காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். புராஜக்ட் மதுரை என்ற திட்டத்தின் வாயிலாகச் சங்க இலக்கியம் முதல் பழந்தமிழ் நூல்களையும் சில நவீன இலக்கிய நூல்களையும் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும்படியாக இலவசமாக வெளியிட்டிருக்கிறார். நூலகம் என்ற திட்டத்தின் வாயிலாக இதேபோல ஈழத்தமிழ் நூல்களையும் ஆன்லைன் மூலமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். நூல்களை ஆராதிப்பவர்களுக்கு இந்த இரண்டு இணைய தளங்களும் நிச்சயமாகப் பரிச்சயமாகியிருக்கும். தமிழ்ப் பதிப்புத் துறையிலும் தடம் பதித்திருக்கிறார். ஆகவே அவருக்குப் பரிச்சயமாக முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

அவருடைய எளிமையும் தன்னடக்கமும் சுயவிளம்பரமற்ற தன்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும். தான் ஒரு மேல்சாதிக்காரன் என்ற நோக்கும் இறுமாப்பும் அவரிடம் அறவே கிடையாது. எல்லாரிடமும் மிக இசைந்து பழகக்கூடியவர். தமிழ்ப்புத்தகம், குறிப்பாக இலக்கியம் என்றால் உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டார் என்பது எனது அனுபவம்.

அவருடைய பண்பையும் வாழ்நாள் பணிகள் அனைத்தையும் அறிய வேண்டுவோர் நூலை ஆராதித்தல்-பத்மநாப ஐயர் 75 என்ற இந்த நூலின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அதனாலேயே நான் இந்தக் கட்டுரையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். இந்த நூல் ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அறுபத்தைந்தாம் ஆண்டு நிறைவிலேயே வந்திருக்கவேண்டிய இது, இப்போது அவருடைய எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவுக்கு வெளியாகிறது. நண்பர்கள் அனைவரும் இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நூலில் ஏழுபகுதிகள் உள்ளன. முதல்பகுதியில் இலங்கை, இந்தியா, ஐக்கியநாடு, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற, அவரை அறிந்த எழுத்தாளர்கள் அவரைப் பாராட்டியும் வாழ்த்தியும் கூறிய சொற்கள் அடங்கியிருக்கின்றன. (இதுவே அவருடைய பரந்த பரிச்சயத்தையும் பணியையும் காட்டப் போதுமானது.) இரண்டாம் பகுதி, பத்மநாப ஐயரின் எதிர்வினையும் நேர்காணலும். மூன்றாவது பகுதியில் சில நூல்களின் மதிப்பீடுகள் அடங்கியுள்ளன. நான்காம் பகுதியில் தமிழ்ப்பதிப்புத்துறை பற்றிச் சில கட்டுரைகள் உள்ளன. ஐந்தாம் பகுதியில் ஆவணப்பட நாயகர்களான மணக்கால் ரங்கராஜன், தவில் தெட்சிணாமூர்த்தி பற்றிய சில கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஆறாம் பகுதியில் ஐயரின் சாதனைகளின் பட்டியல், அவரோடு தொடர்புடைய சில பதிப்பகங்களின் வெளியீடுகள், ஈழத்து எழுத்தாளர்களின் நூல் தொகுப்புகள் பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளன. ஏழாவது பகுதியில் அவரைப் பலரோடும் சேர்ந்து எடுத்த ஒளிப்படங்களின் தொகுப்பு உள்ளது.

நேற்றைய விழாவில் நூல் வெளியீடு, ஆவணப்படத் திரையிடல் ஆகியவற்றுக்குப் பிறகு, வெளி ரங்கராஜன், ரவி சுப்பிரமணியன், பாரவி, அழகிய சிங்கர் நால்வரும் பத்மநாப ஐயரையும் அவரது பணியையும் பாராட்டிப் பேசினார்கள். பிறகு விழா இனிது நிறைவெய்தியது. இந்த நல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் அம்ஷன் குமார் அவர்களுக்கு என் நன்றி மிகவும் உரியது. பத்மநாப ஐயர் இன்னும் நீண்டகாலம் வாழ்ந்து தமது நற்பணியைத் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

இலக்கியம்