பாடும் பறவையைக் கொல்லுதல்

இந்த நாவல். 1960இல் வெளியாயிற்று. இதன் ஆசிரியர் ஹார்ப்பர் லீ என்னும் அமெரிக்கப் பெண்மணி. இது நவீன அமெரிக்க இலக்கியத்தில் ஒரு முதன்மையான படைப்பு எனக் கருதப்படுகிறது.

இதன் கதை, 1933-35 காலத்தில் நிகழ்ந்தது. இதைச் சொல்பவள், ஆறுவயதுச் சிறுமி ழீன் லூயிஸா ஃபிஞ்ச் (இவளின் செல்லப் பெயர் ஸ்கவுட்). தந்தை அட்டிகஸ், ஒரு பெயர்பெற்ற வழக்கறிஞர். அண்ணன் ஜெம் (ஜெரமி). இவர்கள் நண்பன் டில். இவளது தந்தையின் அன்பும், அண்ணன் மற்றும் கோடை விடுமுறைக்கு வரும் டில்லோடு விளையாடிய விளையாட்டுகள், பள்ளியில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், அக்கம் பக்கத்தில் இருப்போரின் குணாதிசயங்கள் என பலவிதமான அனுபவங்களைக் கதை விவரிக்கிறது. இந்த மூவரும் இவர்கள் கண்ணில் படாமல் தனித்து வசிக்கும் பக்கத்து வீட்டு நபர் “பூ” ரேட்லி என்பவரைப் பார்த்து பயப்படுகின்றனர். ஆனால் பலமுறை அவர்களுக்கு பூ பரிசுகளைத் தன் வீட்டின் வெளிப்புறம் விட்டுச் செல்கிறார்.

மேயெல்லா எவல் என்ற வெள்ளைப் பெண்ணை டாம் ராபின்சன் என்ற கருப்பினத்தவன் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதாகச் செய்தி வெளியாகிறது. நகர ஷெரிஃபின் அறிவுரைப்படி அட்டிகஸ் அவனுக்கு ஆதரவாக வழக்காட முன்வருகிறார்.

இதற்காக ஜெம்மையும் ஸ்கவுட்டையும் பிற சிறார்கள் கேலி செய்கின்றனர். தன் தந்தையின் சார்பாக ஸ்கவுட் போரிடுகிறாள். இது பெருஞ்சண்டையாக மூள்கிறது. டாமைத் தாக்குவதற்காக ஒரு கும்பல் ஒரு நாளிரவு வருகிறது. அட்டிகஸ் அவர்களை எதிர்கொள்கிறார். அவர்களில் ஒருவனை- அவன் ஸ்கவுட்டின் வகுப்புத்தோழனின் தந்தை- கண்டுபிடித்து ஸ்கவுட் பேசி, கும்பல் மனப்பான்மையைத் தகர்க்கிறாள். அவர்கள் கலைந்து செல்கின்றனர்.

டாம் இடக்கை ஊனமுள்ளவன் ஆதலின், மேயெல்லாவின் வலப்புறம் காணப்படும் காயங்களை அவன் உண்டாக்கியிருக்க முடியாது என்றும், அவை அவளின் சொந்தத் தகப்பன் பாப் எவல் அவள் டாமின் மீது கொண்ட காதலைத் தடுக்கவேண்டி உருவாக்கினவை என்றும் அட்டிகஸ் நிறுவுகிறார். ஆயினும் வெள்ளையர்கள் ஆன ஜூரிகள் டாமுக்கு எதிராகத் தீர்ப்பளித்து சிறையிலடைக்கின்றனர். ஆனால் சிறையிலிருந்து தப்ப டாம் முயலும்போது வெள்ளைக் கும்பலில் உள்ளவர்கள் அவனைப் பதினேழுமுறை சுட்டுக் கொல்லுகின்றனர். ஜெம் நீதித்துறை மீதான நம்பிக்கையை அறவே இழக்கிறான்.

டாமின்மீது குற்றம் சுமத்தப்பட்டாலும் விசாரணை பாப் எவலின் மரியாதையைக் குலைத்துவிடுகிறது. அவன் பழிவாங்கப் போவதாகச் சொல்லி அட்டிகஸின் முகத்தில் காறி உமிழ்கிறான். பின்னர் ஒரு நாள் நீதிபதியின் வீட்டுக்குள் உடைத்துப் புகுகிறான். டாம் ராபின்சனின் மனைவியைத் துன்புறுத்துகிறான். ஹாலோவீன் கலைநிகழ்ச்சி ஒன்றில் ஜெம்மும் ஸ்கவுட்டும் கலந்துகொண்டு இரவில் திரும்பி வரும்போது அவர்களைத் தாக்குகிறான் பாப் எவல். ஜெம்மின் கை உடைகிறது. ஆனால் நல்லவேளையாக ஒருவர் வந்து பாப் எவலை அடித்து, சிறுவர்கள் இருவரையும் காப்பாற்றுகிறார். ஜெம்மை வீட்டுக்குத் தூக்கிச் செல்கிறார். அவர்தான் பூ ரேட்லி என்று கண்டுகொள்கிறாள் ஸ்கவுட்.

நகர ஷெரிஃப் ஆன டேட் வருகிறார். கத்திக் குத்தால் பாப் எவல் இறந்துவிட்டான் என்று காண்கிறார். ஜெம் ஒருவேளை கொலைக்குக் காரணமாக இருப்பான் என்று அட்டிகஸ் கூறினாலும், ஷெரிஃப் அது பூ தான் என்று கண்டுபிடிக்கிறார். அவரைக் காப்பாற்ற வேண்டி சண்டையின் போது பாப் தன் கத்தியின்மீது தானே விழுந்து இறந்துவிட்டான் என்று அறிவிக்கிறார். பூ, ஸ்கவுட்டைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்கிறார். அவர் வீட்டு வாசலில் அவள் விட்டதும், குட் பை கூறிவிட்டு அவர் வீட்டுக்குள் செல்கிறார். பிறகு அவர் ஸ்கவுட் கண்ணில் படவேயில்லை. தனித்து வாழும் அவர் கண்ணோட்டத்தில் வாழ்க்கையைக் கற்பனை செய்கிறாள் ஸ்கவுட்.

இக்கதை அமெரிக்காவில் ஒரு பேரெழுச்சியை உண்டாக்கியது. இனவெறியின் அநீதிகளும் சிறார்ப்பருவ வெகுளித்தனத்தின் முடிவும் இக்கதையின் முக்கியக் கருப்பொருட்களாக உள்ளன. ஆங்கிலம் பேசும் பல நாடுகளில் சகிப்புத்தன்மை, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பண்பு ஆகியவற்றைக் கற்போரிடம் வளர்க்கும் விதமாக இந்தக் கதை எழுதி வெளிவந்த உடனே பல பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டது. ஆனால் இனவெறி பற்றிக் குறிப்பிடும் இடங்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களைக் காரணம் காட்டி இப்புத்தகம் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பும் எழுந்தது.

“மாக்கிங் பேர்ட்” என்பதைத் தமிழ் லெக்சிகன் “பாடும் பறவை” என்று சொல்கிறது. இது இந்த நாவலில் எளிய வெள்ளையுள்ளம் படைத்த மனிதர்களுக்கு ஒரு குறியீடாக வருகிறது.

வெள்ளையின மக்கள் இப்புதினத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டாலும் கருப்பினக் கதாபாத்திரங்கள் முழுமையாகச் சித்தரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து கருப்பின மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

மிகவும் பிரபலமான இப்புதினம்  புலிட்சர் பரிசும் பல்வேறு பரிசுகளும் பெற்றதில் வியப்பில்லை. இக்கதை 1962ல் ஆங்கிலத்தில் திரைப்படமாக்கப்பட்டு அதுவும் ஆஸ்கார் விருது பெற்றது.

இலக்கியம்