மனிதன்யார்?

மனிதன்யார்?

– எஸ். என். நாகராசன்

கண்ணிலே விண்ணைக் காண்பான்

விண்ணிற்குமோர் கண்ணை வைப்பான்

கண் திறந்து உலகு இருண்டதென்பான்

கண் மூடி பேரொளிப் பெற்றேனென்பான்.

அவனைக் கண்டேனென்பான்;

இல்லையில்லை என்னையே கண்டேன் என்பான்.

 

நஞ்சினில் அமுதத்தைக் காண்பான்

அமுதத்துள் நஞ்சினைக் காண்பான்

நேற்றினில் நாளையைக் காண்பான்

நாளையில் நேற்றைக் காண்பான்

தனையனில் தந்தையைக் காண்பான்

தாரத்துள் தாயைக் காண்பான்

அவனின்றி ஓர் அணுவும் அசையாதென்பான்;

தன் கையே தனக் கென்பான்

 

ஒன்றில் ஒன்றையே காண்பது விலங்கு

ஒன்றில் மற்றதைக் காண்பவனே மனிதன்

கனவும் கற்பனையுமின்றி ஒன்றில் மற்றதைக் காண்பதெங்கே?

கனவும் கற்பனைய்மின்றி நேற்றேது நாளையேது?

கனவும் கற்பனையுமின்றி காலமேது? பின் காலத்தைக் கடத்தலேது?

 

கனவும் கற்பனையுமின்றி கலையேது;

கலையின்றி இவனேது?

இவனின்றி கலை எங்கே?

 

என்னே இவன் கற்பனை?

ஆறுமுகத்தோனை படைத்தவனுமிவனே

ஆனைமுகத்தோனை படைத்தவனுமிவனே

தில்லையில் நிலையில்லா நித்திய நடராஜனைப் படைத்து

ஆனந்தம் நிலையற்றதெனக் கூறி

அதற்கு இரு பொருள் கொடுப்பவனுமிவனே

பொய்யறியா விலங்கு மெய்யறியுமோ?

பொய்யுறைக்கும் இவனுக்கன்றோ மெய்யுண்டு

மெய்யோ கற்பனை

பொய்யோ கற்பனையிலும் கற்பனை

பொய்யான ஆனைமுகத்தோன் மறைந்திட்டால்

மெய்யான E=MC2 மட்டும் மிஞ்சுமோ?

 

மிஞ்சுவது என்ன?

காணாத விலங்கும் வேண்டாத கடவுளுமின்றி வேறென்ன?

கனவும் கற்பனையும் காண்பவனும் இவனே

கனவிலும் கற்பனையிலும் தோன்றி விளைந்தவனும் இவனே.

இவனே மனிதன்!

 

 

 

 

தினம்-ஒரு-செய்தி