மனைவி-1

மனைவி என்பவள் வாழ்க்கையில் ஆணுக்கு அமையும் துணைவி. வெளிநாடுகளில் எப்படியோ, நம் நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மனைவிக்கு மிகச் சிறப்பான இடம் இருப்பதாகவே கருதுகிறேன். அநேகமாக எல்லாக் குடும்பங்களிலும் ஆண்களைக் கவனித்துக் கொள்பவர்கள் மனைவியர்தான். என்னதான் பத்திரிகைகளில் கிண்டல்கேலி செய்தாலும், இன்னும் பெரும்பான்மை வீடுகளில் வீட்டைப் பராமரிப்பது, துணிதுவைப்பது, குழந்தைகளை கவனிப்பது, கணவன்மாருக்கு உணவிடுவது உட்பட்ட வேலைகளை எல்லாம் பெண்கள்தான் செய்துவருகிறார்கள். அதனால் ஒவ்வோர் ஆணுக்குமே தன் மனைவி முதலில் இறந்துவிட்டால், தான் தனியாக இருந்தால், என்ன நடக்குமோ என்ற அச்சம் மனத்தில் இருக்கிறது.
ஏனென்றால் ஆண்களில் பெரும்பாலோருக்குத் தனக்காகச் சமைத்துக் கொள்ளவோ, துணி துவைத்துக் கொள்ளவோ, தன்னளவில் வீட்டைப் பராமரித்துக் கொள்ளவோ சத்தியமாகத் தெரியாது. இன்னும் கேட்டால் தானாகச் சென்று சமையலறையில் தண்ணீர் குடிக்கக்கூடத் தெரியாது. மனைவி பிறந்த வீட்டுக்குப் போய்விட்டால், அலுவலகம் சென்றுவந்து கணவன் அன்றாடம் கழற்றிப்போட்ட துணிகள் மூலைக்கு மூலை கிடப்பதை நான் பல வீடுகளில் கண்டிருக்கிறேன். எத்தனை நாள் கழிந்தாலும் மனைவி வரும்வரை அவை அப்படியே கிடக்கும். என்னதான் வாஷிங் மெஷின் வந்தாலும் கணவன் மார் துணி துவைப்பது துர்லபம். ஃப்ரிட்ஜ் இருந்தாலும் தானே போட்டுக் கொண்டு சாப்பிடவும் இங்குள்ளவர்களுக்குத் தெரியாது (அயல்நாடுகளில் இந்த நிலை இல்லை).
இவையெல்லாம் சுத்தமான ஆணாதிக்கம்தான் என்பது இன்றைக்கு எவருக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் கணவன்மாருக்கு இது வசதியான ஒன்றாக இருக்கிறது. நமது பெண்களும் பெரும்பாலும் வீட்டைப் பேணுவதிலேயே சந்தோஷமாக இருக்கிறார்களோ (வேலைக்குப் போய்வந்தாலும்கூட) என்றும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது.

சமூகம்