முக்தி பவன்

இந்த இந்திப் படத்தின் தலைப்பிலேயே அதன் அர்த்தம் இ்ருக்கிறது. மிக எளிய  கதை. ‘மோட்சத்துக்கான விடுதி’. தயானந்த குமார், ஒரு எழுத்தாளர்-கவிஞர், 77 வயது(தான்). ஒரு நாள் இரவு தனது அந்திம நாள் வந்துவிட்டதாகக் கனவு காண்கிறார். தன் மகன் ராஜீவிடம் தான் காசியில் (வாராணசி) தான் இறக்க வேண்டும் என்று கூறி தன்னை அழைத்துச் செல்ல வேண்டுகிறார். ராஜீவின் ஆபீஸ் வேலை அதிகம். பெண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படிப் பல வேலைகள் இருந்தாலும் தந்தையின் சொல்லைத் தட்டமுடியாமல் காசிக்குப் போகிறார். இருவரும் கங்கைக் கரையிலுள்ள முக்தி பவன் என்ற தங்கும்விடுதியில் சென்று ஓர் இருண்ட சிறிய அறையில் தங்குகிறார்கள். அங்கே 15 நாள்தான் தங்க முடியும். அதற்குள் உயிர் போனால் சரி, இல்லை என்றால் திரும்பிப் போய்விட வேண்டும். (வேடிக்கை என்னவெனில், காசிக்குச் சாக வேண்டும் என்று வருபவர்கள் யாரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது. எங்கேயாவது அநாதையாகத்தான் போக வேண்டும், இல்லை தற்கொலைதான். இதுதான் பழைய மரபு.) 15 நாட்கள் கழிகிறது. தயாவுக்கு ஒருமுறை காய்ச்சல் வந்து அவர் போய்விடுவார் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். மருமகளும் பேத்தியும்கூட வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர் வாழ்க்கையின்மீது மிகப்பெரிய அளவு பற்றுக் கொண்டவர். பிழைத்துக் கொள்கிறார். விடுதி உரிமையாளர் அவர் பெயரை மாற்றி(!) மீண்டும் தங்குவதற்கு அனுமதி தருகிறார். தயாவுக்கு அங்கே வாழ்க்கைமீது பெரும் பற்று வருவதற்குக் காரணம் அங்கே 18 ஆண்டுகளாகத் தங்கி சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் விமல் என்ற பெண்மணி. ராஜீவினால் இருபது நாட்களுக்கு மேல் தங்க முடியாத நிலை. அலுவலகம் அழைக்கிறது. மிகுந்த மனவருத்தத் துடன் தந்தையை விட்டுச் செல்கிறார். அவர் சென்ற சில நாட்களில் தயா இறந்து விடுகிறார். அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள்.

குடும்பத்தில் ஒருவராக இல்லாமல் இருந்தாலும், வந்தவுடனே தயாவுக்கு ருசியான உணவளிக்கும் விமல் முதிர்ச்சி உடையவராகக் காண்கிறார். தயாவை விட நன்கு சிந்திக்கிறார். தயாவின் பேத்தி யாரோ ஒருவனைக் காதலிக்கிறாள். ராஜீவ் தான் பார்க்கும் மாப்பிள்ளைக்கு மணமுடிப்பதாக இருக்கிறார். விமல் சொல்கிறார்-“அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் வாழவேண்டும்.” தந்தை இறக்குமுன் வீட்டில் அவரது நோட்டிலும் இதே குறிப்பைத்தான் ராஜீவ் காண்கிறார். “அவரவர் தங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். அதன்படி நடங்கள்”.

பாத்திரப் படைப்புகள் அற்புதம். ஓரிரண்டு காட்சிகளிலேயே பேத்திக்கும் தாத்தாவுக்குமான பிணைப்பு அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்போ, அற்புதமோ அற்புதம். மிகச் சாதாரணமான சந்தர்ப்பங்களில் மிக இயல்பான நடிப்பில் (நம் தமிழ்ப்படங்களை நினைக்கும்  போது எரிச்சல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை). யாரும் நடிப்பதாகவே தோன்றவில்லை. அவ்வளவாக ஒட்டாத கேரக்டர் லதா (ராஜீவின் மனைவி, மாமனாரின் இறப்பைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருக்கிறார்! அதைப் பற்றி கணவன் மனைவிக்குள் வரும் சிறுசண்டை பிரமாதம்). இறப்பைப் பற்றி இருந்தாலும் வாழ்க்கையை மிக இயல்பாக ரசிக்கும் படம். தயாகூட, முக்தி பவனுக்குச் சென்றவுடனே அங்கிருப்போரோடு ராம பஜன் செய்கிறார், டிவி பார்க்கிறார். ஆனால் வேலைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கும் ராஜீவ்தான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தத்தளிக்கிறார்.

இவ்வளவெல்லாம் சிறப்புகள் இருந்தாலும், தயாவின் வாழ்க்கைப் பார்வை சுத்தமான இந்துத்துவப் பார்வை. ஒரு கவிஞரால் எப்படி ஓர் இருண்ட அறையில் தங்கி கங்கையில் போவதற்கான நாளை எதிர்பார்க்க முடிகிறது? ஒரு சுதந்திரமான ஆத்மாவைக் கொண்ட எழுத்தாளன், “என்னைக் கொண்டுபோய் ஒரு காட்டில், இயற்கைக் கிடையில், பசுந்தரையில், பறவைகளுக்கிடையில், மான்களுக் கிடையில் விட்டுவிடு” என்று கேட்பானே ஒழிய குகை போன்றதொரு அறையில் ராம்ராம் பஜனையோடு அந்திம நாளை எதிர்பார்த்துக் கிடக்க மாட்டான். இந்தப் பார்வை ஒன்றுதான் கதையோடு நான் ஒட்டவிடாமல் இடித்தது. இன்னும் படிமங்கள் குறியீடுகள்… போன்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசலாம். உதாரணமாக, தனது சொந்தப் பெயருடன்கூட தயாவால் இறக்கமுடியவில்லை என்ற உண்மை. பிறகு, சாகச் செல்லும் தயா, போகும் வழியில் குட்டையில் நீந்தும் வாத்துகளுக்கு உணவு போடுவது. காசியில் நுழைந்தவுடனே (சாவியின் பாணியில் “அங்கே போயிருக்கிறீர்களா?” எனக் கேட்கலாம். ) அதன் புகழ்பெற்ற சந்துகள், இடித்துக் கொண்டுசெல்லும் மக்கள் (நல்லவேளை, எங்கும் வியாபித்திருக்கும் பசுக்களைக் காட்டவில்லை)–இவர்களைத் தாண்டி முக்தி பவனுக்குச் செல்லும் இவர்கள் வந்த ரிகஷா ஒரு சந்துக்குள் செல்லமுடியாமல் (தண்டவாள அ‍ரைக் கம்ப அடைப்பு) நிற்கும் முன்பாக ஒரு இறங்கு பாதையில் செல்கிறது. அதிலிருந்து வெளியேறுபவர்கள் ரிகஷாவைத் தள்ளிக் கொண்டு மேலே சென்றுதான் ஏற வேண்டும். இந்த மோசமான இறக்கம் தான் முக்தி–பாதையின் ஏற்றம்தான் வாழ்க்கை என்கிறமாதிரி ஒரு பிம்பம் கிடைக்கிறது. காசியின் அரிச்சந்திர காட், எரிக்கும் மயானம். அதன் கரையிலேயே பசுக்களை நிறுத்திவைக்கும் இடம், எரிக்கும் விறகுகள் குவித்துவைக்கப் பட்டிருப்பது…இப்படிப் பல.

படம் ஏறத்தாழ 1 மணி 40 நிமிடம். தயாவின் கேரக்டரைவிட மனத்தில் நிலைத்து நிற்பது மகன் ராஜீவின் (அதில் ஹுசேன்) கேரக்டர் தான். இயக்குநர் யாரோ ஒரு சிந்தி நபர். பெயர் பூட்டியானி. இசை இடறவில்லை. காட்சிப்படுத்தலும் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளன.
இந்தப் படத்தை நான் பார்க்க அனுப்பிவைத்த நண்பர் திரு.மனோகரன் (மனோ) அவர்களுக்கும், செவ்வேளுக்கும் நன்றி.

தினம்-ஒரு-செய்தி