ஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி

அண்மையில் மறைந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி ஊடகங்களில் ஏராளமான தகவல்கள் வந்துவிட்டன. அவர் விஞ்ஞானிகளில் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’. சென்ற நூற்றாண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்து பிரபலமான விஞ்ஞானி யார் என்ற கேள்விக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதே பொதுவான பதிலாக இருக்கும்.

ஹாக்கிங்கின் 21-வது இளவயதில் “உங்களுக்கு தீர்க்க முடியாத நரம்பியல் நோய் வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் உங்களுக்கு மரணம் நிச்சயம்” என்று மருத்துவர்கள் கூறியதை சமநிலை மனதுடன் அவர் ஏற்றுக் கொண்டார். மருத்துவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி, பல்வேறு உடல் உபாதைகளை தீரத்துடன் எதிர்கொண்டு தனது மரணத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒத்தி வைத்து அதிலும் சாதனை புரிந்தவர் ஹாக்கிங். சக்கர நாற்காலியிலேயே முடங்க நேரிட்ட போதும் உடலா, மனமா என்ற கேள்வி எழுந்தபோது உடலை விட மனமே மேலானது என்ற தத்துவத்தின் சின்னமாக வாழ்ந்து காட்டிய அவர் 2018 மார்ச் 14 அன்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

அவரைப் பீடித்தது சாதாரண நோய் அல்ல. உடலின் தசைகளை இயங்கச் செய்யும் நரம்பு செல்களை படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் அரியதொரு நோய். ஒரு புறம் ஹாக்கிங்கின் உடல் செயலிழந்து கொண்டிருந்தபோது அவரது சிந்தனையும் கற்பனையும் சிறகடித்துப் பறந்த காட்சியைக் கண்டு உலகம் அதிசயித்தது. இந்தப் பேரண்டம் தற்போது இருப்பதுபோல் ஏன் இருக்கிறது.. முன்னர் என்னவாக இருந்தது.. போன்ற கேள்விகள் அவரைக் குடைந்தன. அனைத்தையும் படைத்தது கடவுளே என்ற கோட்பாட்டினை அவர் ஏற்கவில்லை. பேரண்டத்தைத் தோற்றுவிக்க ஒரு கடவுள் தேவையில்லை என்று கூறும் பகுத்தறிவுவாதியாக அவர் இருந்தார். மிகச் சிறிய துகள் இயற்பியலான குவாண்டம் மெக்கானிக்ஸ், மிகப் பெரிய பொருள்களுக்கான வானியல் இரண்டிற்கும் உள்ள சிக்கலான தொடர்புச் சங்கிலிகளை ஆய்ந்து தனது நுண்ணறிவுத் தேடலை அவர் தொடர்ந்தார்.

கருந்துளைகள்
ஹீலியம், ஹைட்ரஜன் ஆகிய எரிபொருட்கள் எரிந்து நட்சத்திரங்களுக்கு ஒளியைத் தருகின்றன. ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்து நட்சத்திரங்கள் சிறியவையாக ஆகி கருந்துளைகளாக மாறுகின்றன. மிக மிக அடர்த்தியான அவற்றிலிருந்து ஒளி கூடத் தப்பிக்க முடியாது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் கருந்துளைகள் பற்றிய பல புதிர்களுக்கு ஹாக்கிங் விடைகள் கண்டுபிடித்தார். அவற்றிலிருந்து எந்தக் கதிர்வீச்சும் தப்பிக்க முடியாது என்பது சரியல்ல, அவை வெப்பத்தை மிக மெதுவான வேகத்தில் வெளியிடக் கூடியவை என்ற ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு அறிவியல் உலகிற்கு அவர் அளித்த மிகச் சிறந்த பங்களிப்பு எனலாம். பின்னர் அந்த வெப்பத்திற்கு “ஹாக்கிங் கதிர்வீச்சு” எனப் பெயரிடப்பட்டது.

பெரு வெடிப்புக் கோட்பாடு
ரோகர் பென்ரோஸ் என்ற மற்றொரு விஞ்ஞானியோடு இணைந்து பேரண்டம் தோன்றியதற்கான பெரு வெடிப்புக் கோட்பாட்டினை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்தான். பேரண்டம் ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது என்கிறது இக்கோட்பாடு. அதற்கு முன் காற்றோ, கிரகங்களோ, பால்வெளி மண்டலங்களோ கிடையாது. பேரண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என கணிதவியல் மூலமாக நிரூபித்த எட்வர்ட் ஹபிள் என்ற விஞ்ஞானி ஹாக்கிங்கின் பெரு வெடிப்புக் கோட்பாடு உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக அதை எடுத்துக் கொண்டார். பேரண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என்றால் அது ஒரு புள்ளியிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும் என தர்க்கரீதியாக அவர் வாதிட்டார்.

வாழ்க்கையை ஹாக்கிங் உற்சாகமாக எடுத்துக் கொண்டார். பூமியின் தென்துருவச் சூழல் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அங்கு ஒரு முறை சென்றார். மேலேயிருந்து தடையின்றிக் கீழே விழும்போது கிடைக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அந்தப் பரிசோதனையை மேற்கொண்டார். ‘காலத்தின் சுருக்கமானதொரு வரலாறு’ என்ற அவரது முதல் புத்தகம் அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. 35 மொழிகளில் அது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அவரது பெயர் காலம் உறுதியாகக் கடந்து நிலைத்து நிற்கும்.

தினம்-ஒரு-செய்தி