கிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்

கிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்

(இக்கட்டுரை, 1981ஆம் ஆண்டு பதின்மூன்றாம் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக்கருத்தரங்கு மலரில் வெளியாயிற்று.)

உலக நாடக இலக்கியங்களில் சில பொதுவான இயல்புகள் காணப்படுகின்றன. இவ்வியல்புகள் சிலப்பதிகாரத்திலும் உள்ளன என்று நிறுவப்பட்டு, அது ஓர் அவல நாடகக் காப்பியம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிலப்பதிகார நாடக அமைப்பு முறையில் உள்ள மற்றுமொரு இயல்பு, உலகச் செவ்வியல் நாடகத்தின் ஓர் அமைப்போடு இயைந்துவருவதை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

செவ்வியல் நாடகங்களில் பின்னணிப் பாடற்குழு
கிரேக்கச் செவ்வியல் நாடகங்களில் பின்னணிப் பாடற்குழு (கோரஸ்) என்ற ஓர் அமைப்பு உண்டு. சிறந்த நாடகாசிரியர்களாகிய ஏஸ்கைலஸ், சோஃபோக்ளிஸ் போன்றோர் நாடகங்களில் இதனைக் காணலாம். ஆங்கிலச் செவ்வியல் நாடகங்களிலும பிற மேலைநாட்டுச் செவ்வியல் நாடகங்களிலும கோரஸ் பின்பற்றப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மில்டனின் சாம்சன் எகனிஸ்ட்ஸ் என்ற நாடகத்திலும், இருபதாம் நூற்றாண்டில், டி.எஸ். எலியட்டின் மர்டர் இன் தி கெதீட்ரல் என்ற நாடகத்திலும கோரஸ் முறை மிகச் சிறந்த பயன்பாடு பெற்றுள்ளது. புனைவியல் நாடகங்களில் (ரொமாண்டிக் டிராமா) இம்முறை கையாளப்படுவதில்லை.
சிலப்பதிகாரத்தில உள்ள சில அமைப்புக் கூறுகள் இந்த கோரஸ் முறையைப் பெரிதும் ஒத்துள்ளன.

கோரஸின் பணிகள்
கோரஸ் என்பது பாடகர் அல்லது உரையாடுவோர் குழு ஆகும். நாடக மேடையின் பின்னணியில் நாடகம் முழுவதும் இக்குழுவினர் இருப்பர்.
1. கோரஸ், நாடகத்தின் முக்கியக் கதை மாந்தரைப் பார்ப்போர்க்கு அறிமுகப்படுத்துகிறது. இதனைப் பழைய தமிழ் நாடக அமைப்பான கட்டியங்காரன் பாத்திரத்திற்கு ஒப்பிடலாம்.

2. கதைத் தலைவர்களையும் கதை நிகழுமிடத்தின் ஆளுவோரையும் கிரேக்க நாடகப் பின்னணிக்குழுவினர் வாழ்த்துவர். இந்த அமைப்பைச் சிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்துப் பாடலிலும் வாழ்த்துக்காதையிலும் காணலாம்.

யாரோ சிலபேர், குழுவாக, “திங்களைப் போற்றுதும்…” என்று தொடங்கி, “ஓங்கிப் பரந்தொழுகலான்” என முடியும் மூன்று பகுதிகளையும் சிலப்பதிகாரத்தில் பாடுவதாக வைத்துக்கொண்டால், இதற்கும் கிரேக்க கோரசுக்கும் வேற்றுமையில்லை. வாழ்த்துக் காதையிலோ, வஞ்சி மகளிர் ஆயம், மூவேந்தரையும், “தொல்லை வினையான்…” என்ற பாடற்பகுதி தொடங்கி வாழ்த்திப் பாடுகிறது.

3. கோரசின் மற்றுமொரு மிக முக்கியமான பணி, நாடக மாந்தரின் முற்கதையை, அவர்களின் பின்புலத்தினைப் பார்வையாளர்க்கு உணர்த்துவதாகும். எடுத்துக்காட்டாக, மில்டனின் சாம்சன் எகனிஸ்ட்ஸ் நாடகத்தில், சாம்சன் காஸா நகரச் சிறையில் கண்ணிழந்து வருந்தும் காட்சி முதற்கண் தொடங்குகிறது. அவன் அந்நிலை அடைந்ததற்கான முன்நிகழ்வுகளைக் கோரஸ் விமர்சிக்கின்றனர்.

இவ்வாறே டி. எஸ். எலியட்டின் கதீட்ரல் கொலை நாடகத்திலும், தாமஸ் பெக்கெட் என்ற தலைமைமாந்தரின் முன்வரலாறு கோரஸ் மூலமாகவே தெரிகிறது. நாடக வளர்ச்சி நிலையில் நாடக மாந்தரின் முன் வரலாறு மற்றொரு பாத்திரத்தின் வாயிலாக உணர்த்தப் பெற்றால் அவரைக் ‘கோரஸ் பாத்திரம்’ எனலாம். சிலம்பில், கோசிக மாணி, மாடல மறையோன் ஆகியோர் இத்தகையவர்கள்.

4. செவ்வியல் நாடகங்களில் கொலை போன்ற வன்முறைக் காட்சிகளை மேடை யில் காட்டி நடிக்கலாகாது என்ற வரையறை உண்டு. இத்தகைய நிகழ்வுகள் கோரஸ் மூலமாகவோ தூதுவர் மூலமாகவோ உணர்த்தப்படும். ஆனால் சில நாடகங்களில் இம்முறை மீறப்பட்டுள்ளது. கதீட்ரல் கொலை நாடகத்தில நான்கு வீரர்கள் தாமஸ் பெக்கெட்டினைக் கொல்கின்றனர். இக்காட்சி நேராகவே நடிக்கப் பெறுகிறது. மில்டனின் நாடகத்தில் சாம்சன் கொலையுண்ட செய்தி ஒரு தூதுவன் வழி தெரிகிறது. சிலம்பில் இவ்விரு முறைகளும் கையாளப் பட்டுள்ளன.

கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கு ஊடு அறுத்தது

இது நேரடி முறை.

இதனைக் கண்ணகிக்குத் தெரிவிக்க வரும் பெண் ஒருத்தி சொல்லமுடியாமல் தவித்து நிற்கிறாள்.

ஓர் ஊர் அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்
அவள்தான், சொல்லாடாள், சொல்லாடாள் நின்றாள்

இது மறைமுக முறை.

5. கோரஸ் என்பது மூன்று முதல் ஏறத்தாழப் பத்து வரையிலான மக்கள் (ஆடவரோ, பெண்டிரோ, இருபாலருமோ) அடங்கிய குழு. இவர்கள் நாடகத்தில் தலைமை மாந்தருக்குப் பின்னர் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை, அவலங்களை, தம உள்ளுணர்ச்சியால் முன்னரே ஒருவாறு அறிந்து பார்வையாளர்களுக்கு உணர்த்துகின்றனர்.
இந்த முக்கியக் கூறு சிலம்பில் மிக நன்றாக இடம்பெற்றுள்ளது. ஆய்ச்சியர் குரவையும் வேட்டுவ வரியும் இதனை உணர்த்துகின்றன. ஆய்ச்சியர் குரவையில் இடை முதுமகள் மாதரி, “தீய அறிகுறிகள் தோன்றுகின்றன, குரவையாடலாம்” என்கிறாள்.

குடப்பால் உறையா குவிஇமில் ஏற்றின்
மடக்கண் நீர்சோரும் வருவதொன்று உண்டு
உறிநறு வெண்ணெய் உருகா நிற்கும்
மறிதெறித்து ஆடா வருவதொன்று உண்டு
நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும்
மான்மணி வீழும் வருவதொன்று உண்டு (ஆய்ச்சியர் குரவை)

இப்பகுதி கோரசின் முக்கிய இயல்பை உள்ளடக்கியுள்ளது.

இவளோ, கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி (வேட்டுவ வரி)

எனச் சாலினி தெய்வம் ஏறப்பெற்று உரைப்பதும் கோரசின் கணிப்புகளோடு ஒப்பீடு பெறுவதாகும்.

6. அவல நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததும், அதனால் ஆற்றாமை கொள்ளாது, பார்ப்போர், “இது உலகியல்பு, எனவே இவ்விதம் நிகழ்ந்தது, நாம் இதனை அமைதியுடன் ஏற்கவேண்டும்” என்ற சலிப்பற்ற உளப்பாங்கினைப் பெறுமாறு அறிவுறுத்துவது கோரசின் இன்னொரு முக்கியப் பணியாகும். சாம்சன் இறந்தபின் மற்றவர்கள்  Calm of mind, All passion spent  என மன அமைதியுடன் திரும்பவேண்டும் என்ற கோரப்படுகின்றனர்.

சிலம்பின் இறுதிக்காதையான வரந்தரு காதையில் மாடலன் இப்பங்கேற்கிறான்.

பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை

என ஆறுதல் உரைக்கிறான்.

மேலும் இளங்கோவடிகளே, பின்னணிக்குழுவின் பங்கினை இறுதியில் ஏற்கிறார். “யானும் சென்றேன், என் எதிர் எழுந்து…” என்று தம்மைக் கதையில் ஈடுபடுத்திக் கொள்ளும் அவர்,

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்…
… … … ….
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்

என்று கூறுவது, மேற்குநாட்டுக் கோரசின் இயல்பினை ஒத்ததாகும்.

மேற்கத்தியச் செவ்வியல் நாடகங்களில் கோரஸ் என்பது ஒரு பின்னணிக் குழுவினர். இசைப்பாடல் இசைக்கவும் ஆடலியற்றவும் தகுதிபெற்றது. சிலப்பதிகாரத்திலும், வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை, வாழ்த்துக்காதை, வரந்தருகாதை ஆகியவற்றில் ஆடல்பாடல் குழுவினரைக் காண்கிறோம்.

சிலம்பிற்கும் மேற்கத்தியக் கோரசுக்கும் சில வேற்றுமைகள் உள்ளன.

1. செவ்வியல் நாடகங்களில் கோரஸ் ஆரம்பமுதல் இறுதிவரை எல்லாக் காட்சிகளிலும் இடம்பெறும். அது நாடக அமைப்பின் தவிர்க்கமுடியாக் கூறு. பிற பாத்திரங்கள் உரையாடும் இடங்களிலும் கோரஸ் அமைதியாகச் செவிமடுப்போராக நாடகக்களத்தில் இடம்பெற்றிருக்கும்.
சிலப்பதிகாரம் ஒரு காவியம். (நாடகமாகவே இருப்பினும் இம்மேற்கத்திய முறை இங்கு முழுவதும் பயின்றுவந்திருக்க வேண்டும் என்பதில்லை.) ஆகவே இங்கு குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை, வேட்டுவ வரி, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை ஆகிய சில காட்சிகளில் மட்டுமே இடம் பெறுகிறது.

2. மேற்கத்தியச் செவ்வியல் நாடகங்களில் கோரசின் இடமும் பங்கும் மிகுதி. பாத்திரங்களின் செயல்கள் பற்றி மதிப்புரை கூறுவது அதன் முக்கியப் பணிகளில் ஒன்று. இதனை நாம் சிலப்பதிகாரத்தில் காணமுடியாது.

3. கதை மாந்தர உரையாடலுக்கு இடையிலும் கோரஸ் பங்குபெற இயலும். சிலப்பதிகாரத்தில் அவ்வாறு இல்லை.

இவ்வாறு கிழக்கில் ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்திற்கும், மேற்கில் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நாடக இலக்கியங்களுக்கும் ஒருபுடை அமைப்பொற்றுமை காணப்படுவது விந்தையாக உள்ளது. ஒப்பிலக்கிய ஆய்வில் ஆழ்ந்து ஈடுபடுபவர் கள் இங்ஙனம் தற்செயலாக எதிர்ப்படும் ஒப்புமைகளைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர், மகிழ்ச்சியடைகின்றனர். அவற்றை உலக இலக்கியப் பொதுக்கூறுகளாகப் பார்வைக்கு நம் முன் வைக்கின்றனர்.