‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதி

‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதி – ஒரு பார்வை

கௌதம சித்தார்த்தனின் ‘பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுதியில் பதினொரு சிறுகதைகள் இருக்கின்றன. இந்த மண்ணின் அசலான சாயல் இரு கதைகளில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒரு கதை-’மண்’-இந்தப் புத்தகத்தின் மூன்றில் ஒரு பங்கினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இன்னொன்று ‘தொப்புள் கொடி’.

இரண்டுமே யதார்த்தமான கதைசொல்லல் முறையில் அமைந்தவைதான். கதைகளின் தீவிரம் உடனே வாசகரைத் தொற்றுமாறு அமைந்துள்ளது. முன்தலைமுறை விமரிசகர்கள் சொல்லுவதுபோல, ஆசிரியரின் தரிசனம் வெளிப்படுமாறு அமைந்துளளன. பிற கதைகளில் ஆசிரியருக்கு ஓர் மன நெருக்கடி இருக்கிறது-யதார்த்த முறையில் கதையைச் சொல்லலாகாது, போஸ்ட் மாடர்னிச அல்லது மந்திரயதார்த்த முறையில் என்று சொல்லலாமா-ஏதோ ஒரு செயற்கையான புதிய முறையில் ரொமாண்டிக் பாணிக் கதைகளைச் சொல்லவேண்டும் என்று நினைத்து வெளிப்படுத்தும் நெருக்கடி. பொதுவாகக் கலை என்பது-தான் செய்யப்பட்ட ஒன்று என்பது-வாசகருக்கு வெளிப்படாமல் இருக்கும்போதுதான் சிறப்புப்பெறுகிறது.

‘ஒழிக உங்கள் துப்பாக்கிகள்’-முதல் கதை. உருவச் செம்மை அமையவில்லை. அன்போ, படைப்பாற்றலோ-ஏதோ ஒன்றை மலராக உருவமைத்துக்கொண்டு அது துப்பாக்கி ஆவதாக எழுதுகிறார். ஆனால் அந்தப் பூ எப்படித் துப்பாக்கி ஆயிற்று? அதுதானே கதையாக முடியும்? ‘அவன் செத்துப்போனான்’ என்றால் அது செய்தித்தாள் செய்தி. ‘ஏன் செத்தான்’ என உணர்வுபூர்வமாக விவரித்தால் அது கதை. மேலும் இந்த மாற்றம் ஏற்படப்போகிறது என்பதற்கான முன்னறிகுறிகளும் கதையில் இல்லை. “அந்தக் குழந்தை என் அருகாமையில் வந்தது….அதைப் பிடிக்க, அது பதறி யோட….அந்தக் காட்சி ஒரு தலைசிறந்த சிருஷ்டி” என்கிறான் கதைசொல்லி. இப்படி உணர்பவனின் பூ எவ்விதம் துப்பாக்கி ஆகமுடியும்? பூ துப்பாக்கி ஆயிருந்தால் இம் மாதிரி நினைப்புக்கு இடமே இல்லை.

இரண்டாவது கதை, ‘நுனி மீசையில் திறந்துகொள்ளும் சிரிப்பு’. பால்ய காலக் காதலைப் பற்றிய சாதாரணமான கதை. “நித்யத்துவம் கவிந்த அதே முகம். வாழ்வின் அர்த்தம் பூரணத்துவம் அடைந்துவிட்ட உன்னத கணங்கள் அவள் உடம்பெங்கும் ஒளிர்ந்தன. தனது ஜீவித ரகசியத்தை மறைத்துவைத்திருக்கும் உள்முகம் நோக்கி ஓடி னான்….” இக்கதையின் இறுதியில் ஒரு பகுதி இது. நித்யத்துவம், உன்னதம், வாழ்வின் அர்த்தம், பூரணத்துவம், ஜீவித ரகசியம்….என வெற்றுச்சொற்கள். மேலும், ஆசிரியர் தான் பின்பற்றுவதாகக் கூறுகின்ற பின்நவீனத்துவத் தன்மைக்கு முற்றிலும் எதிரான வையும்கூட. இலட்சியவாதச் சிந்தனைக் குப்பை. இதுதான் கௌதமனின் சிக்கல். பச்சைப்பறவையோ, சிவப்பு வயல்களோ இம்மாதிரி வண்ண வருணனைகள் பதிவு நவிற்சித்தன்மையைக் காட்டுபவை.

மூன்றாவது கதை, ‘முகம்’. நல்ல நவீனத்துவப் பிரதி ஆகும் தன்மைகள் இதில் உள்ளன. ஆனால் இதுவும் சரிவர உருப்பெறவில்லை. ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே ந. முத்துசாமியின் கதை ஒன்றில், ஒருவன் திடீரெனத் தன்னை ஒரு spectre ஆக உணர்கிறான். தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அவ்வாறே கண்டு ஒரு விபத்தில் சிக்கி இறந்தும் போகிறான். அக்கதையின் நவீனத்துவமும் முழுமையும் வாய்ப்பது அரிது. காரணம், நவீன வாழ்க்கையான நகர வாழ்க்கை, இம்மாதிரி சிதிலமான பிரமைகளை உருவாக்க முடியும். ‘முகம்’ கதையின் நாயகன், தனது கிராமத்திற்கு (ரஜனிகாந்த், விஜய்காந்த் பாணியில் கிராமத்தில் நிறைய சேவை வேறு செய்திருக்கிறான்) சென்றவுடனே அவனது இழந்த முகம் திரும்பக்கிடைத்துவிடுகிறது. ‘இயற்கைக்குத் திரும்பு’ அல்லது ‘கிராமத்திற்குத் திரும்பு’ என்ற எளிய செய்தியைக் கொண்ட கதை இது.

‘தரிசனம்’ அடுத்த கதை. ஒரு தப்பிப்புப் பாணிக் கதை. சாதாரணமாகக் கணவர்களின் தான் எப்படி மனைவிமார்களை மிரட்டுகிறது என்பதை ஓரளவு இயல்பாகச் சொல்லு கிறது. ஆனால் ஜெயித்தால் முத்தம் தருவது போன்ற சினிமாத்தனமான செயல்கள் இதைக் கெடுக்கின்றன.

‘கனவு-ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்’ என்பது ஐந்தாவது கதை. நான்கு கனவுகள். ஃப்ராய்டிய மணம் மாறாமல் எல்லாமே ஆண்குறி மையப்பட்டவையாக அமைந்திருக் கின்றன.

ஆறாம், ஏழாம் கதைகள்தான் முன்பே கூறிய ‘மண்’ணும் ‘தொப்புள்கொடி’யும். தொப்புளான் என்ற ஆட்டக்கலை வாத்தியார். அவருடைய கலை பிடிக்காமல் முதல் மனைவி ஓடிப்போய்விடுகிறாள். இரண்டாவது மனைவி வாயிலாகப் பிறந்த பிள்ளை யிடம் பாரம்பரியமாக வந்துவிட்ட அந்தத் திறமையைப் பார்த்துவிட்டு நெஞ்சு துடிக்கிறார் அவர். கதை நன்றாக வந்திருக்கிறது.

‘மண்’ என்றுதான் இந்தச் சிறுகதைத் தொகுதிக்குப் பெயர் வைத்திருக்கவேண்டும். அண்மைக்காலத்தில் படித்த சிறந்த கதைகளில் ஒன்று ‘மண்’ என்று எளிதாகவே சொல்லி விடலாம். கிராமப்புறங்களில் நமது பெண்களுக்குச் சாதிக்கட்டுப்பாடுகளின் பெயரால் இழைக்கப்படும் எத்தனையோ கொடுமைகளில் ஒன்றை மிக அழகாக ஆவேசத்தோடு சொல்கிற கதை இது.

எட்டாவது கதை ‘பலிபீடம்’. ஒருவகையில் ஏழாவது கதையின் தொடர்ச்சி. ‘மண்’ கதையில் ஆணாதிக்க மமதையின் உருவமாகப் படைக்கப்பட்ட ஜமதக்னி முனிவர்; பலிபீடத்தில் ரேணுகா, தேவியாக மாறிய தொன்மம்; கதையாகியிருக்கிறது. கதையின் ஆகிருதியை மீறிய சொல்நடை பெரிய இடறலாக அமைகிறது.

‘சாத்தாவு’ (குட்டிச்சாத்தான்) அடுத்த கதை. சாத்தானை அடிமைப்படுத்தி வைத்திருந்த மூதாதையின் முடிவு பற்றியது.

” ‘மூன்றாவது சிருஷ்டி’ தொகுப்பில் ‘சாபம்’ கதையில் மூட நம்பிக்கை எனக் கிண்டலடித்திருந்த என் அம்மாவின் குறிசொல்லலை, ஐந்து வருடங்களுக்குப் பின்னான என் எழுத்து வீச்சு அற்புத மரபாகக் கணித்தது” என்கிறது சித்தார்த்தனின் முன்னுரை. இது பார்வைக்கோளாறுதான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு மூடநம்பிக்கையாக இருந்தது, இப்போது அப்படி இல்லாமல் போய்விடமுடியுமா? அக்கால சமய, சமூகப் பின்னணியில் இப்படித்தான் மக்கள் வாழ்ந்திருக்கமுடியும் என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியுமா? அற்புத மரபாகக் கணிக்க முடியுமா? இம்மாதிரி நிலவுடைமைக்கால சமூக மதிப்புகள் தங்கள் ஆதிக்கத்தினால் நம்மை எவ்வளவு சீரழித்துள்ளன? அவற்றைக் கட்டுடைக்காமல், ஏற்றுக்கொண்டு பாராட்டுவது ஒரு பிற்போக்கு வாதியாகவே ஆசிரியரைக் காட்டுகிறது.

இறுதியாக, ‘பச்சைப் பறவை’, ‘வெற்றுவெளி’ ஆகிய இருகதைகள் இருக்கின்றன. ‘வெற்றுவெளி’, புதுமைப்பித்தனின் ‘ஞானக்குகை’ கதையை நினைவூட்டுகிறது. அதன் அர்த்த விசாலமில்லை. முற்றுப்புள்ளியில்லாமல் எழுதிச் செல்வது ஒரு விளையாட்டு. இந்த மாதிரி விளையாட்டுகளுக்குப் பழங்கவிதைகளில் பஞ்சமா என்ன? நாகபந்தம் ரதபந்தத்திலிருந்து யமகம் திரிபு மடக்கிலிருந்து நிரோட்டகப் பாக்கள் வரை எத்தனை விளையாட்டுகள்? இம்மாதிரி விளையாட்டுகளை இலக்கியமாகக் கணிக்கமுடிந்தால், ‘வெற்றுவெளி’யும் அப்படியே.

தமிழில் தொன்மங்கள் குறைவு. அதனாலேயே சமஸ்கிருதப் புராணக்கதைகள் இங்கே ஆட்சிசெய்கின்றன என்று தோன்றுகிறது. பச்சைப் பறவையிலும் ஒரு தொன்மம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு புராணிகமும், ஒரு காதல் கதையும். எந்த விதத்திலும் வாசகருக்கு எவ்வித சலனத்தையும் உருவாக்க இயலாத கதைகள் இறுதி இரண்டும் என்று சொல்லலாம்.

நம் நாட்டில் யதார்த்தப்பாணியில் மிக நன்றாக எழுதக்கூடியவர்கள், ஏனோ ஃபேஷன் எனக்கருதி வேறு பாணிகளைப் பின்பற்றி வீணாகிவிடுகிறார்கள். இதற்குக் கோணங்கியை நல்ல உதாரணமாகச் சொல்லமுடியும். அவரது ‘மதினிமார்கள் கதை’ எழுப்பிய பாதிப்பினைப் பிறகுவந்த சிறுகதைத்தொகுதிகள் எழுப்பமுடியவில்லை. சித்தார்த்தனும் அவரைப்போலவே செயல்படுகிறார். மேலும் இந்தப் புத்தகத்தின் முன்னுரை ஒரு மிதமிஞ்சிய ‘தானை’ (ஈகோவைக்) காட்டுகிறது. ‘உரையாடலுக்கப்பால்’ எனக் காணப்படும் தலைப்பில் வரிக்கு வரி, நான், நான், நான், …. “பத்துவருடங்களுக் குப் பிறகு தொகுப்பாக வெளிவரும் என் எழுத்துகளினூடே துலங்கிநிற்கும் காலப் பிரக்ஞையை கவனிக்கவேண்டும்…”  “சரித்திரத்தின் திருகுவழிப் பாதையினூடே உள்ளோடிய என் கதைமொழி தமிழின் புதுமலர்ச்சியை வெளிப்படுத்தவல்ல ஜீவத் துடிப்புடன் விரிவுபெற்றது….”  பத்தாயிரம் பாட்டெழுதித் தமிழில் பாரகாவியம் படைத்த கம்பர்கூட இப்படிப் பெருமை பேசியதில்லை.

உண்மையில் இக்கதைகள் யாவற்றிலும் திரும்பத் திரும்பவரும் ஒரே மாதிரிப் படிமங் கள், வரிகள், சொற்கள் ஆகியவை நமக்கு அலுப்பூட்டுகின்றன. திரும்பத் திரும்ப வரும் சொற்கள், எழுத்துகள் பற்றி வரும் குறிப்புகள்… எழுத்தும் ஒருவகையில் நடிப்பைப் போன்றதுதான். ஒரு நல்ல நகைச்சுவை நடிகன், தான் சிரிக்காமல், பார்வையாளர்களைச் சிரிக்கவைக்கிறான். அதுபோலத்தான், ஒரு நல்ல எழுத்தாளனும் ‘என் எழுத்து இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. மாறாக, அவன் எழுத்து செய்யவேண்டிய பணியைச் செய்கிறது. செய்யவேண்டும்.

கடைசியாக, கௌதம சித்தார்த்தனின் கதைப் பொருள்கள் யாவும் ரொமாண்டிக் தன்மை கொண்டவை. பழமையைப் பாராட்டுவது, கிராம வாழ்க்கையின் மூடத்தன்ங்களையும் பாராட்டுவது போன்றவை வெற்றுக்கனவுத் தன்மை கூடியவை. இம்மாதிரிக் கனவுத்தன்மை, நவீன எழுத்துமுறைக்கு முற்றிலும் மாறானது. இதனை அவர் விட்டு வெளியேறினால், பிறகு நாம் அவரது “அக்குளில் முளைக்க இருக்கும் புதுவிதச் சிறகு எழுத்தைப்” பற்றிப் பேசலாம்.