lb3

அறிவைத் தடுக்கும் மதங்கள்!

arivai-1

ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகள் இருக்கலாம். ஏதோ காரணத்திற்காகக் கல்கத்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே ஒரு நிகழ்ச்சி. வங்காள மொழி நமக்கு என்ன புரிகிறது? மதம் சார்ந்ததா, இலக்கியம் சார்ந்ததா என்று நினைவில்லை. அதற்கு பூரி சங்கராச்சாரியார் அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெண்கள் சிலர் வேதப்பாடல்களைப் பாடினார்கள். வந்ததே கோபம் சங்கராச்சாரியாருக்கு! பெண்கள் எப்படி வேதத்தைப் பயிலலாம், பாடலாம் என்று மிகக் காட்டமாக உரையாற்றத் தொடங்கிவிட்டார். பெண்கள் வேதத்தைப் பயின்றதால் தான் நாடே அழிவு நிலையை எய்திவிட்டது என்றும் சொல்லிவிட்டார்.

கல்கியின் “பொன்னியின் செல்வன்” நாவலில் ஒரு நிகழ்ச்சி. ஆழ்வார்க்கடியான் என்று ஒரு வைணவன். (வைணவர்கள், முஸ்லிம்களைப் போலவே “மறந்தும் புறந்தொழா மாந்தர்” என்று பெயர்பெற்றவர்கள்.) அவன் திருவானைக்கா சிவன் கோயில் மதிலோரம் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு செங்கல் துண்டு அவன் தலையில் விழுந்து அடிபடுகிறது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு காக்கை அதை மதில்மேலிருந்து தள்ளியிருக்கிறது. உடனே அவன், “ஓ ஸ்ரீவைஷ்ணவக் காக்கையே, சிவன் கோயில் மதிலை இடித்துத் தள்ளுகிறாயா? செய்” என்று அதைப் பாராட்டுகிறான். மதம் மனிதனை வாழ்விக்க வந்தது, மனிதனுக்கு வழிகாட்ட வந்தது என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் வரலாற்றில் மத அடிப்படையிலான போர்கள் மட்டுமல்ல, தடைகளும், ஒடுக்குதல்களும் ஏராளம், ஏராளம். மதங்கள் அறிவை முக்கியமாகத் தடைசெய்யும் சக்திகளாக உள்ளன. இதற்குப் பிரமாதமான உதாரணங்கள் தேவையில்லை. நம் இந்தியாவிலேயே, முன் கூறிய உதாரணப்படி, வேதங்கள் பிராமணர்கள் மட்டுமே படிப்பதற்குரியவை, பெண்களும், பிற சாதியினரும் அவற்றைப் படிக்கலாகாது என்ற தடை இருந்தது. (இன்னும் இருக்கிறது!)

பழங்காலத்தில் கிறித்துவ மதத்தில் மதக்கொள்கைகளை மீறியவர்களாகக் கருதப்பட்டவர்களை மதவிசாரணைக்கு (இன்க்விசிஷன்) உட்படுத்தி அவர்களை கம்பத்தில் கட்டி உயிரோடு எரித்தார்கள். (Burning at stake). அதை நினைவூட்டும் விதமாக 1986இல் டெஹ்ரானிலிருந்து வெளியிடப்பட்ட ஃபத்வா (பார்த்த இடத்தில் தலையை வெட்டும் ஆணை), உலகத்தையே அதிர்ச்சியுறச் செய்தது. சல்மான் ருஷ்தீ எழுதிய சாத்தானின் செய்யுள்கள் என்ற நாவலுக்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அது. இருபதாம் நூற்றாண்டிலும் காட்டுமிரண்டித்தனமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றும் நம் நாட்டிலும், “இந்தத் திரைப்படத்தைத் தடை செய்”, “இந்த நூலைத் தடைசெய்” என்று மதவாதிகள் மத்திய, மாநில அரசாங்கங்களை அவ்வப்போது எதிர்த்துப் போராடும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மத அடிப்படைவாதிகள் என்றைக்குத் தான், எங்கேதான் இல்லை?

இவ்வாறு தடைசெய்பவர்களும், தடைசெய்ய வேண்டுபவர்களும், மற்றவர்களுக்கும் அறிவு இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள். அல்லது தங்கள் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்றோ, மற்றவர்கள் தங்களை எதுவும் செய்யக்கூடாது என்றோ பயப்படுகிறார்கள்.

arivai-7

கிறித்துவ அடிப்படைவாதத்தின் வரலாறு கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எபீசஸ் கவுன்சில் என்ற அமைப்பு, மூடநம்பிக்கைக்குரிய நூல்கள் என்று கருதியதையும், புனித பவுலின் வரலாற்றையும் (Acta Pauli) தடைசெய்தது. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் போப் ஆண்டவர், முதன்முதலாகத் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலை வெளியிட்டார். கி.பி.1450இல் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு, அதிகாரபூர்வமற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளும் மதநூல்களும் பெருகிய காரணத்தால், திருச்சபையின் தடைசெய்யும் பணியும் அதிகமாகியது. கி.பி.1559இல் போப் நான்காம் பவுல், Index Liborum prohibitorum (தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல்) என்பதை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின் போன்று அந்தந்த நாடுகளும் தங்கள் தடைப்பட்டியல்களை வெளியிட்டன. பதினாறாம் நூற்றாண்டு முதலாக சீர்திருத்தக் கிறித்துவம் பரவத் தொடங்கிய நிலையில், அவர்கள் கத்தோலிக்க நூல்களைத் தடைசெய்தார்கள்.

பழங்காலத்திலிருந்தே மதமும் அரசியலும் ஒன்றோடொன்று பிணைந்தவை. அந்தந்த அரசாங்கம் கடைப்பிடித்த மதத்தில் நம்பிக்கையற்றவன், நாட்டிற்கும் சதிகாரன், எதிரி என்று கருதப்பட்டான். தமிழ்நாட்டில் கூட, மதச் சண்டைகளின் எதிரொலிகளைப் பார்க்கிறோம். சமணர்கள், பௌத்தர்கள் போன்றவர்கள் அறிவுசார் மதம் சார்ந்தவர்கள். பக்தி விசுவாசம் போன்றவை அவர்களுக்குக் கிடையாது. பக்தி சார்ந்த சைவம், வைணவ மதங்கள் இந்த மதங்களை எதிர்த்து அவற்றை வேரறுத்ததையும் காண்கிறோம். வைணவர்கள் தங்கள் நிறுவனங்களில் சைவநூல்களை அனுமதித்ததில்லை. சைவர்கள் தங்கள் மடங்களில் வைணவ நூல்களை வைத்ததில்லை. இருவருமே புறச்சமய (சமண, பௌத்த) நூல்களைத் தங்கள் நூல்களில் சேர்த்ததில்லை. இப்படியே மதப்போரில் தமிழ் நூல்கள் பெரும்பாலானவை ஒழிந்தன.

தமிழ்நாட்டில் ஏறத்தாழப் பத்துப் பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பு வழங்கிய பலவேறு மதங்களின் கொள்கைகளின் பெரும்பகுதியை நீலகேசி என்ற சமணநூல் (குறிப்பாக வாமனர் எழுதிய அதன் உரை) கொண்டுதான் அறிந்து கொள்ள முடிகிறது. உலகாயதம் உட்படப் பலவேறு மதங்களின் கொள்கைகளை அது குறிப்பிட்டு அதற்கு எதிர்வாதங்களை நீலகேசி என்ற பெண்துறவியின் வாயிலாக முன்வைக்கிறது. அது குறிப்பிடும் அநேக நூல்கள் அழிந்து போனவை, இனி கண்டுபிடித்து அச்சிட இயலாதவை.

பதினெட்டாம் நூற்றாண்டளவில், ஐரோப்பாவில் தொடர்புச் சாதனங்கள் பெருகிய நிலையில் வெளியில் புலப்படா (அண்டர்கிரவுண்ட்) நூல்களின் பதிப்புகளும் பெருகின. அவற்றில்தான் நவீனக் கருத்துகளும் வெளியிடப்பட்டன. எனவே, (அந்தக் காலத்தில்) “அண்டர்கிரவுண்ட் நூல்களை படிக்காதவர்கள்-அரசாங்கத்தின் ஒப்புதல்பெற்ற நூல்களை மட்டுமே படித்தவர்கள்-அறிவில் ஒரு நூற்றாண்டு பின்தங்கியவர்கள்” என்று நூலாசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

திருச்சபை 1559இல் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல், நான்கு நூற்றாண்டுகள் கழித்து 1966இல் நீக்கப்பட்டது. அதற்குள் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் காரணமாக, கத்தோலிக்கத் திருச்சபைக்கு அத்தடையை நிலைநிறுத்தும் வலிமையும் வசதியும் இல்லை, அந்த நூல்களில் பலவும் காலத்திற்கு ஒவ்வாதவையாகவும் ஆயின. ஆனால் அப்பட்டியல் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்தது என்பதில் ஐயமில்லை. கத்தோலிக்கத் திருச்சபையினால் தடைசெய்யப்பட்ட நூல்களில், கார்ல் மார்க்ஸின் நூல்கள் மட்டுமல்ல, பெந்த்தாம், பெர்க்சன், காம்டி, டீஃபோ, டே கார்ட்டே, டிடரோ, ஃப்ளாபேர், கிப்பன், ஹாப்ஸ், ஹ்யூம், காண்ட், ஜான் லாக், மொண்டேய்ன், மில், மாண்டெஸ்க்யூ, பாஸ்கல், ரூஸோ, சேண்ட், ஸ்பினோசா, ஸ்டெந்தால், வால்டேர், ஜோலா போன்ற அறிஞர்களின் நூல்களும் அடக்கம். (இவர்களில் பெரும் பாலோர் தத்துவ அறிஞர்கள், பலர் அரசியல் அறிஞர்கள், இலக்கியவாதிகள்).

arivai-3-1024x772

அமெரிக்காவில்கூட, அந்தந்த மாநிலங்கள் தங்கள் தங்கள் தடைக் கொள்கைகளைப் பின்பற்றித்தான் வந்திருக்கின்றன. பொதுவாக அமெரிக்க அரசியலமைப்பு மத அடிப்படையில் நூல்களைத் தடைசெய்வது கூடாது என்று சொல்கிறது. மிகவும் புகழ்பெற்ற ரௌலிங் எழுதிய ஹேரி பாட்டர் நூல்கள்கூட இன்றும் சில மாநிலங்களில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல ரோல்டு டால் எழுதிய தி விட்சஸ் போன்ற நூல்களும். இவற்றைத் தடைசெய்யக் காரணம், இவை மதத்திற்குப் புறம்பான சூனியக்காரர்கள், மந்திரவாதிகள், அவர்களின் செயல்முறைகள் பற்றிப் பேசுகின்றன.

நம் நாட்டிலும் தஸ்லிமா நஸ்ரின் தலையை வாங்கவேண்டுமென்ற வேண்டுகோள் முஸ்லிம்களால் எழுப்பப்பட்டது. இவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் ஒரு பாபர் மசூதி இடிக்கப்பட்டதுபோல, வங்காள தேசத்தில், அது சுதந்திரம் பெற்ற பிறகு, ஆயிரக்கணக்கான இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டதையும், இந்துக் குடும்பங்கள் பாதுகாப்பற்று அழிவுக்குள்ளானதையும் அவர் தமது லஜ்ஜா என்ற நாவலில் சுட்டிக்காட்டியிருந்தார். நாடு கடத்தப்பட்ட அவர் ஸ்வீடனுக்குச் சென்றார். இப்போது மேற்குவங்க மாநிலம் அவரை அனுமதிக்காததால் தில்லிக்குள் வாழ்கிறார் என்று நினைக்கிறேன். இதேபோல ஈரானியப் பெண் நாவலாசிரியர் ஷார்னுஷ் பார்சிபூர் பலமுறை சிறையிடப்பட்டார், மிரட்டப்பட்டார், கடைசியில் நாட்டைவிட்டே வெளியேறினார்.

1979இல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி தோன்றியபிறகு, ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகைக்காரர்கள் சிறையிடப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 1990 களில், எகிப்திய நாவலாசிரியர் ஃபராக் ஃபவுதா, அல்ஜீரிய நாவலாசியரும் பத்திரிகையாளருமான தாஹர் ஜௌத் ஆகியோர் மத அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டனர். 1994இல் எகிப்திய எழுத்தாளர் நக்வீப் மகபூஸ் (நோபல் பரிசு பெற்றவர்) கத்தியால் குத்தப்பட்டு மிகமோசமாக பாதிக்கப்பட்டார். எகிப்திய நாவலாசிரியர் அலா ஹமீத் மதத்திற்கு எதிரானவர் என்று சிறையிடப்பட் டார். எகிப்தின் நவால் எல் சாத்வி, மொராக்கோவின் ஃபாதிமா மெர்னீசி போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண்களை ஒடுக்கும் இஸ்லாமியக் கொள்கைகளைக் கேள்விகேட்டதால் அரசாங்கத்தின் கோபத்திற்கும் அடிப்படைவாதிகளின் கோபத்திற்கும் ஆளானார்கள்.

2005இல் ஈரானில் மட்டுமல்ல, லெபனான், பாகிஸ்தான், எகிப்து, இந்தியாவின் சில மாநிலங்கள் போன்றவற்றில் டான் பிரவுன் எழுதிய டாவின்சி கோட் போன்ற பெருவிற்பனை நூல்களும் தடைசெய்யப்பட்டன. 2007-2008இல் புல்மன் எழுதிய அதீதகற்பனை முக்கதை (ஃபேண்டஸி டிரைலஜி) கிளாஸ் காம்பஸ், சடில் நைஃப், ஆம்பர் ஸ்பைகிளாஸ் ஆகியவையும் தடை செய்யப்பட்டன. இத்தனைக்கும் இவை அனைத்தும் இலக்கியப் பரிசுகள் பெற்றவை.

arivai-4

இங்கு உதாரணமாகச் சொல்லப்பட்டவை யாவும், பற்பல நூற்றாண்டுகளாக, உலக முழுவதும் மதங்களால் நிகழ்ந்துவரும் அறிவுத்தடையை எடுத்துக் காட்டுவதற்குத்தான், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை என்ற அளவில் மட்டுமே. காலங்காலமாகத் தடைசெய்யப்பட்டுக் கிடைக்காமல் போனவற்றில் தத்துவ நூல்கள், அரசியல் நூல்கள், நாவல்கள் போன்ற எத்தனையோ. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் போன்ற நாவல்கள் கூடத் தடைக்குள்ளாயின என்பது வியப்புதான்.

arivai-5

தடை செய்யப்பட்டவற்றில் அறிவியல் நூல்களும் அடக்கம் என்பது வேடிக்கையானது. உதாரணமாக, கெப்லர் போன்றவர்களின் வானியல் நூல்கள் தடைக்குள்ளாயின. கியோர்தானோ புரூனோ என்ற வானியல் அறிஞர் உயிருடன் கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டார். கலீலியோ கலீலி (தொலைநோக்கியைக் கண்டுபிடித்த இத்தாலிய விஞ்ஞானி) உலகம் உருண்டை என்று கூறியதால் அவர் நூல்கள் தடைசெய்யப்பட்டன. அவர் போப்பாண்டவரிடம் தாம் எழுதியவை அனைத்தும் தவறு என்று மன்னிப்புக் கேட்குமாறு ஆணையிடப்பட்டது. (இத்தனைக்கும் போப்பாண்டவர், அவருடைய இளமை நண்பர். அதனால்தான் இவ்வளவு குறைந்த தண்டனை!) கலீலியோ தாம் எழுதிய அறிவியல் கருத்துகள் அத்தனையும் தவறானவை, மதத்திற்கு மாறானவை என்று மன்னிப்புக் கேட்டபிறகு, உடனே தமது கூண்டுக்கு அருகிலிருந்த நண்பரிடம் இரகசியமான குரலில், “ஆனால் அவைதான் உண்மை!” என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை வெளியிடப்பட்ட காலத்திலிருந்தே எல்லா மதங்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.

மதவரலாற்றாசிரியர் டேவிட் கிறிஸ்தியன் மரே என்பவர், “ஒரு கையடக்க எண்ணிக்கையிலானவர்கள், மிகப் பெரும்பான்மையோரின் கருத்துகளை எதிர்த்து அவர்களை தண்டனைக்குள்ளாக்கியதைத்தான் மதத்தின் வரலாறு காட்டுகிறது” என்று சொல்கிறார். (நம் நாட்டுத் திரைப்படத் தணிக்கைக்கும் முற்றிலும் பொருந்தும் கூற்று இது. இது பற்றித் தனியே எழுதவேண்டும்.) இவ்விதம் நோக்கும்போது எவ்வளவு எவ்வளவு அறிவுச் செல்வங்கள் சிலரால் தடைசெய்யப்பட்டு உலகிற்குக் கிடைக்காமல் போயிருக்கின்றன என்ற வருத்தம் தான் ஏற்படுகிறது.

லெவி என்ற அறிஞர் குறிப்பிடுவதுபோல, “காலம் இந்த நீதிபதிகளின் நீதியைக் கேலி செய்கிறது, மக்களின் நுண்ணுணர்வை மாற்றுகிறது.” ஏரிக்கரையின் சிறிய அரிப்பிலிருந்து சிறிய தாரையாக வெளிவரத் தொடங்கிய நீர் பின்னர் பெரிய ஆறாகவே மாறிவிடுவதைப்போல, சொற்களும் சிந்தனைகளும் தணிக்கைகளையும் மீறி உலகெங்கும் பரவுகின்றன.

arivai-6

ருஷ்தீயின் நூலின் தடையைப் பற்றிக் கேள்விப்பட்டபோது மொராக்கோ பெண் எழுத்தாளர் நாடியா தாஜி கூறினார்: “புத்தகத்தை யாரும் கொல்ல முடியாது. அது தன்னிச்சையாக வாழ்கிறது, மறைகிறது.” நூல்களிலிருந்து குரல்கள் தப்பித்து அபாய வழிகளிலும் செல்கின்றன. மோதல்கள், மாறுதல்கள், மீறல்கள், கலகங்கள் கருத்துகளில் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. கருத்துகள் காலத்தால் மாறுதல்களுக்குட்படலாம், அவை அழிவதில்லை.


sutruchchoolalum8

சுற்றுச்சூழலும் வளர்ச்சியும்

sutruchchoolalum3

நம்மைச்சுற்றியுள்ள  நிலம்,   நீர்,  காற்று,  வானம்,  காடுகள்,   விலங்கினங்கள்,  செடிகொடிகள்,  மரங்கள்,  மக்கள்கூட்டம்  எல்லாம்  இடையறாத தொடர்பு கொண்டவை. அமீபா முதலான மிகச்சிறிய உயிரிகளிலிருந்து யானை, திமிங்கிலம் ஆகிய பேருயிர்கள் வரைமிகச் சிறிய தாவரங்களிலிருந்து பல்லாண்டுகள் வாழக்கூடிய மிகப்பெரிய தாவரங்கள் வரை இன்றியமையாத தொடர்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் தமக்குள் ஒன்றுக்கொன்று அனுசரணையாக வாழும் நிலையைமனிதர்கள் உள்ளிட்ட எல்லாப் பிராணிகள்விலங்குகள்தாவரங்கள் அனைத்தின் நல வாழ்வைக்கொண்ட மாசுபடாத இயற்கை நிலையைஒரு நல்ல சுற்றுச்சூழல் என்கிறோம்.

அனைத்து இயற்கைக்கூறுகளும்-அவை அஃறிணை ஆனாலும்உயர் திணை ஆனாலும்- ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் தன்மைதான் சுற்றுச்சூழலின் அடிப்படைத் தன்மையாகும்.

சான்றாகநிலத்தின் வளத்தைக் காத்துசெடிகொடி மரங்களுக்கு உணவு தயாரித்தல்ஒளிச்சேர்க்கை போன்ற பலசெயல்களுக்கு நீர் உதவுகிறது.

செடி,கொடி, தாவரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன. பிற தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் மனிதனுக்குமான உணவைத் தயாரிக்கின்றன.

நிலம் மக்களுக்கும், விலங்குகளுக்கும், காடுகளுக்கும், தாவரங்களுக்கும், பிற எல்லா உயிரினங்களுக்கும் உணவளிக்கிறது. அதற்கு ஈடாக நிலம் தனது தேவைகளை அவற்றிடமிருந்து பெற்றுக்கொள்கிறது.

இது ஒரு சுழற்சிச்செயல். இதில் ஏதேனும் ஒரு சுழற்சிக் கண்ணியில் மாறுபாடு ஏற்படுமானால் அது இயற்கையைக் கேடுறச் செய்வதுடன்

இயற்கையின் ஒரு பகுதியான (ஆனால் தாங்கள் இயற்கையின் ஒருபகுதி என்பதை மறந்து விட்ட) மக்களையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இயற்கையை வெல்ல இயலுமா?:

நமது வளங்கள்செல்வங்கள் யாவுமே இயற்கையிலிருந்துதான் வருகின்றன. இயற்கையிலிருந்து பல்வேறு வகைகளில் பயன்பெற்று வருகிறோம் நாம். ஆனால்மனிதர்களின் பேராசைக்கு எல்லையே இல்லை. தானாக இயற்கையிலிருந்து கிடைக்கும் நன்மைகளால் திருப்தி அடையாமல்அல்லது தமது சிறிய முயற்சிகளால் கிடைக்கும் பயன்களினால் திருப்தி அடையாமல்இயற்கையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து,அதைச் சுரண்டிபாழாக்கிஅதனால் மகிழ்கிறார்கள் மனிதர்கள்.

இயற்கையோடு ஒத்துவாழவேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல்இயற்கை தங்களைப் பாதுகாக்கும் பெரும் சாதனம் என்ற எண்ணமும் இல்லாமல். இயற்கையோடு போராடுவது’ ‘இயற்கையை வெல்லுவது’ தான் வாழ்க்கை என்று அலைகிறார்கள். இதனால் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் பெரும் சீர்கேடுகள் பல ஏற்படுத்தக்கூடிய பொருட்களை உருவாக்குகிறார்கள்.

புதிய வளர்ச்சிக் கொள்கை!:

“புதிய வளர்ச்சிக் கொள்கை”யை இன்று உலகநாடுகள் யாவும் பின்பற்றுகின்றன. இதன் அடித்தளம் நவீன அறிவியல் அறிவும்பொருளாதார வளர்ச்சியும்வணிகரீதியாகப் பொருள்குவித்தலும் ஆகும்.

ஆனால் இவற்றிற்காக எவ்வளவு வேகமாகவும் பரந்த அளவிலும் இப் பூவுலகின் பல்வேறுபட்ட வாழ்க்கைத்தன்மையை (Bio Diversity),உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்பொருளாதார வளர்ச்சி என்பதன் பெயரால் இயற்கையின் பல்வேறுபட்ட தன்மை பலியிடப்பட்டு விட்டது.

பெரும்பாலான நகர்ப்புற மனிதர்கள் இயற்கையிலிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் முற்றிலும் அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். அடித்தள மனிதர்களோ வாழ்க்கைக்கான மூல வளங்களை இழந்து நகர்ப்புறங்களுக்கு அடிமைகளாகக் குடிபெயர்ந்து தங்களை அன்றாடக்கூலிக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதன்விளைவாக ஏற்பட்டதே சுற்றுச்சூழல் அபாயம்மனிதனின் பேராசை இயற்கைக்குச் சாவுமணி அடிக்கிறது. பூமித்தாய் வேகமாகச் சுடுகாடுநோக்கிப் பயணம் செய்கிறாள். அவளது காடுகள் செத்துக் கொண்டிருக்கின்றன. அவளது மண் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவளது நீர் வற்றிக்கொண்டிருக்கிறது.

முதல் உலகநாடுகளின் வளர்ச்சிமாதிரி (growth model):

காடு, நிலம், நீர் இவற்றை அழிப்பதன்மூலம் நாம் நமது வாழ்வின் ஆதாரங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம். முன்னேற்றம்வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்க்கையே காணாமற் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி முறையில் (growth model) இயற்கைமீதான வன்முறை பின்னிப்பிணைந்துள்ளது.

ஐரோப்பாவில் உதித்த இந்த அறிவியல் புரட்சிஇயற்கையைச் சுரண்டுவதற்கான ஒரு உபயோகப்பொருளாக மட்டுமே பார்க்கிறது. அதனால் இயற்கையின் சீர்குலைப்புக்கும் சுரண்டுதலுக்கும் எதிரான தார்மீகக் கட்டுப்பாடுகள் உடைத்தெறியப் பட்டுவிட்டன.

பொருளாதாரத்துறை அடிப்படைத் தேவைகளின் பூர்த்திவளங்களின் நிர்வாகம் என்ற அடிப்படையில் பழங்காலத்தில் இருந்தது. தொழிற்புரட்சியும், அதற்குப் பின்வந்த வணிகப் பெருக்கமும் இலாபத்தை அதிகரிக்கக்கூடிய பொருள் உற்பத்திக்கான ஒரு துறையாக அதை மாற்றிவிட்டன. தொழில்மயப்படுத்தல் இயற்கை வளங்கள்மீது அளவற்ற தாகத்தை ஏற்படுத்தி விட்டது. நவீன அறிவியல் இத்தகைய சுரண்டலைச் சாத்தியமானதாகஏற்புடையதாகவிரும்பத்தக்கதாக ஆக்கிவிட்டது. மேற்கத்தியச்சார்பில் உருவான இத்தகைய அறிவியல்-பொருளாதாரக் கொள்கை மூன்றாம் உலகநாடுகள் போன்ற பிற கலாச்சாரங்கள் மீதும் திணிக்கப்பட்டுவிட்டது. ஐரோப்பியஅமெரிக்க முன்னேற்றத்தின் (?)வடிவமே அனைவர்க்கும் பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டு விட்டது.

காலனிய அதிகாரம் உச்சகட்டத்திலிருந்த காலத்தில் அதிகார வளர்ச்சிதொழில்மயம் ஆகியவை ஏற்பட்டபோது அவற்றை நிறைவுசெய்யும் நாடுகளாகக் காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாடுகள் பயன்பட்டன. அறிஞர் ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுவதுபோலமேற்கு ஐரோப்பாவில் தோன்றிய தொழில் வளர்ச்சிஅடிமைப்பட்டிருந்த நாடுகளின் நிலையான ஆக்கிரமிப்பையும்இயற்கைப் பொருளாதாரத்தின் அழிவையும் இன்றியமையாதது ஆக்கிவிட்டது.

மரங்களும் காடுகளும்-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு:

இதற்கு ஒரு சான்றாகஇந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தொடங்கியபோது எப்படி இயற்கைச் சீர்குலைவு ஏற்பட்டது என்பதை மட்டும் காண்போம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் ஆக்கிரமித்தது காடுகளைத் தான். காடுகள் இயற்கையில் வகிக்கும் பாத்திரம்நாட்டுநலனில் அது வகிக்கும் பங்கு பற்றி அவர்களுக்குத் துளியும் அக்கறையில்லை. காடுகள் மிகுதியாக இருந்தபோது ஆங்கில ஆதிக்கம் தன் தொழில்மயமாக்கத்திற்கு வேண்டிய தேவையை எளிதில் பெற்றது. அப்படியே எல்லையற்றுத் தொடரும் இந்தச் சுரண்டல் என்று அவர்கள் நம்பியதாகத் தெரிகிறது.

பல இடங்களில் சாலைகள் அமைக்கவும் இரயில்பாதைகள் அமைக்கவும் வேளாண்மைக்கும் காடுகள் இடைஞ்சல் என்று கருதி அழிக்கப்பட்டன. தேக்கு மரங்களுக்கு இராணுவத்தில் பயன்பாடு மிகுதி என்பதால் கிழக்கிந்தியக் கம்பெனி தேக்குமரங்களை ஒட்டுமொத்தமாக அழித்தது.

1807ஆம் ஆண்டுச் சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட கேப்டன் வாட்சன் என்னும் அதிகாரி தேக்குமரங்களைப் பத்தாயிரக் கணக்கில் கொன்று குவித்தான். ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்காலம் காடுகள் வீணாக்கப்பட்ட பிறகுதான் 1865இல் இந்தியாவில் முதல் வனச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினால் காடுகளின் “அறிவியல் பூர்வமான நிர்வாகம்”தொடங்கியது. அதாவது மக்களின் உரிமை இழப்பும் காடுகளின் வீழ்ச்சியும் சட்டபூர்வமாகத் தொடங்கியது.

பணமதிப்புமிக்க மரங்கள் மட்டுமே அரசின் கவனத்தை ஈர்த்தன. காட்டின் பல்வேறு சமுதாயங்களுக்கும் (மரங்கள்,விலங்குகள்பூச்சிகள்நீர்நிலைகள்சுருக்கமாகச் சொன்னால் காட்டின் biodiversity என இன்று வழங்கப்படுகின்ற யாவுக்கும்) உள்ள உறவுநீர்மண் போன்றவற்றிற்கிடையிலுள்ள சிக்கலான சங்கிலித்தொடர்புகள் போன்ற யாவும் புறக்கணிக்கப்பட்டன. இதனால் இந்தியநாடு சுதந்திரம் அடைவதற்குள் அதன் சுற்றுச்சூழல்காடுகள் அமைப்பு சரிசெய்ய முடியாதவாறு அழிந்தது. பழங்குடி மக்களையும் இது நேரடியாகத் தாக்கியது.

தொழில்துறைக் கண்ணோட்டத்தின்படிவணிகமதிப்பில்லாத தாவரஇனங்கள் களைகள்தான். ஆனால் உண்மையில் இந்தக் “களைகள்”தான் இயற்கையின் நீர் மற்றும் பிற சத்துச் சட்டகங்களின் ஆதாரங்களாக விளங்குபவை. 1878இலும் 1927 இலும் வனச்சட்டங்கள் புகுத்தப்பட்டதை அடுத்து இந்தியாவெங்கும் அநேக சத்தியாக்கிரகங்கள் நடைபெற்றன.

புதிதாகச் சுதந்திரம் பெற்றநாடுகளில் இந்தவகை வளர்ச்சி புதிய காலனிகளைத் தோற்றுவித்தது. வளர்ச்சி என்பது காலனியச் செயல்பாட்டின் தொடர்ச்சி ஆயிற்று. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில்வளர்ச்சிச் செயல் முறைகளை நீடிப்பதன் மூலமும் அவற்றைப் பரவலாக்குவதன் மூலமும் நாடுகளின் பொருளாதாரநிலை உயரும் என்ற எண்ணம் நேரு போன்ற தலைவர்களுக்கு மேலோங்கியிருந்தது.

ஆனால் ஒருசில பத்தாண்டுகளிலேயே உண்மையான பிரச்சினையே “வளர்ச்சி”தான் என்பது புரியத்தொடங்கியது. பொருளாதார வளர்ச்சி என்பதுஎந்த ஏழைமக்களுக்கு வளர்ச்சி மிகத்தேவையோ அவர்களிடமிருந்தே வளங்களை அபகரிக்கும் புதியகாலனிய முறை ஆயிற்று. அதனால் உள்நாட்டு மேட்டுக்குடியினர் நலன்தேசிய நலன்தேசிய மொத்த உற்பத்தி (Gross National Productபோன்றவற்றின் பெயரால் நாட்டின் சுரண்டல் செய்யப்படலாயிற்று. இதனைச் சிறப்பாகச் செய்துமுடிக்க அதிகாரத்தில் உள்ளோர்க்கு மிகவலுவானதொழில்நுட்பங்கள் கைகொடுத்தன. இதனால் ஏழைகள் இன்னும் ஏழைகளாயினர். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆயினர். தொழிலற்ற விவசாயிகள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அல்லது கொத்தடிமைகளாக மாறி அவதிக்குள்ளாயினர்.

புதிய வளர்ச்சிமாதிரி என்பது என்ன?:

sutruchchoolalum4
நவீன அறிவியலின்தொழில் வளர்ச்சியின்வணிக வளர்ச்சியின் கண்ணோட்டப்படிசுத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆறு பயனற்றது. அதை “வளர்ச்சி” யடையச் செய்யவேண்டும்.

வளர்ச்சியடையச் செய்வது என்பதற்கு ஓர் உதாரணம்அணைகட்டி அதன் நீர்வளத்தைப் பயன்படுத்துவது. அணைகட்டிமின்சாரம் எடுக்கலாம். அது முன்னேற்றம். ஆனால் அங்கு வாழும் மக்கள் இடம்பெயர்ந்து செத்தால் பரவாயில்லை. அதன் அருகிலுள்ள தொழிற்சாலையின் கழிவுப் பொருட்கள் அதில் கலந்துஅதை “முன்னேற்றினால்” தான் ஆறு பயனுள்ளதாக மாறும்.

இவ்வாறேஇயற்கையான காடுகளும் வியாபாரநோக்கில் ஓரினப்பயிர்களாக மாற்றப்படும்வரை பயனற்றவை.

இப்படி ஆதிக்கத்தின் புதியவடிவங்களோடு நவீனமயமாக்கல் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டது. நீர், உணவு, தீவனம், எரிபொருள் இவற்றின் பற்றாக்குறையோடு அதிகரிக்கிறது. சூழலியல் பேரழிவு அதனுடன் சேர்ந்து உலகத்தின் தெற்குநாடுகளில் பெரும் வறுமையை உருவாக்கியுள்ளது.

தேசியப் பொருளாதாரம்:

sutruchchoolalum5
தேசிய மொத்த உற்பத்தி (GNP-ஜிஎன்பி) உயர்ந்தால் நாட்டின் செல்வச் செழிப்பு அதற்கேற்றாற்போல் உயர்கிறது என்று பழைய பொருளாதார வல்லுநர்கள் கருதினார்கள். இன்று மரபான பொருளாதார வல்லுநர்களுக்குக்கூட அந்தக் கோட்பாடு பயனற்றுவிட்டது என்பது தெரியும். முன்னேற்றத்தின் அளவுகோல் என்ற முறையில் நாணயப் பொருளாதார உற்பத்திப் பொருட்கள்சேவை ஆகியவற்றை மட்டுமே அது கணக்கில் கொள்கிறது. இவை பெரும்பாலான மக்களுக்குப் பயன்படுவதில்லை. பணமும் அதிகாரமும் எங்கு குவிந்துள்ளதோ அங்கேயே இவை போய்ச் சேர்கின்றன.

தேசிய மொத்த உற்பத்திசூழலின் பேரழிவால் ஏற்படும் புதிய சுமைகள்அதனால் ஏற்படும் செலவுகள்மக்களின் வாழ்க்கைநிலை வீழ்ச்சி போன்றவற்றைக் கணக்கில் கொள்வதே இல்லை.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச் சிரியாரோ?” என்று பாரதியார் பாடினார். அறிவியல் வணிக தொழில் முன்னேற்றங்கள் அதைத்தான் செய்கின்றன. அதிக வளங்களையும் சக்திகளையும் பயன்படுத்தும் தீவிர உற்பத்திச் செயல்முறைகள்தொடர்ந்து அதிக வளங்களைச் சுரண்டுவதை உறுதிசெய்கின்றன. இத்தகைய வள அழிப்புகள் அடிப்படையான சூழல் செயல்முறைகளைப் பாதித்துசக்திகளை மீண்டும் புதுப்பிக்க இயலாதவாறு ஆக்கிவிடுகின்றன.

புதுப்பிக்க இயலாமை (entropy):

sutruchchoolalum2
உதாரணமாகஒரு காடுதன் நிலை சீராக இருக்கும்வரை பல்வேறு வளங்களைக் குறைவில்லாமல் அளித்துவரும் தன்மையுடையது. ஆனால் தொழில் ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் காடுகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறக்கூடிய சக்தியையும் மீறிமரங்கள் கட்டுப்பாடின்றி வெட்டிவீழ்த்தப்படுகின்றன. காடுகள் மீண்டும் புதுப்பிக்க இயலாதவாறு மாறிவிடுகின்றன.

சிலசமயங்களில் ஒரு குறிப்பிட்ட வளத்தின் சுரண்டல்அதனோடு தொடர்புடைய வேறு இயற்கை வளங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனாலும் இயற்கையின் புத்துயிர்ப்புத் தன்மைக்கு அபாயம் ஏற்படுகிறது. உதாரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மரங்கள் ஏராளமாக வெட்டப்படுதல்காட்டின் சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடுஆற்றுநீரின் வளத்தையும் பாதிக்கும். அதிக வளங்களை-அதிக மூலப்பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள்சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடுநீர்நிலம்காற்று ஆகியவற்றையும் மாசுபடுத்துகின்றன.

ஒரு சிறிய கணக்கு:

உணவு வேளாண்மைக் கழகம் நாளொன்றிற்கு ஒருவருக்கு 3600 கலோரி உணவு தேவை,என்று சொல்லுகிறது. உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் (5x8=40) உழைப்புச்சக்தியை அளிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். மரம்புதைபடிவ எரிபொருள்நீர் மின்சக்திபிற எரிபொருள்சக்திஅணுசக்தி ஆகியவற்றிலிருந்து மனிதனின் உழைப்பால் விடுவிக்கப்படும் உலகளாவிய சக்தி ஒரு நாளுக்கு தற்போது எட்டுலட்சம் கோடி வாட் ஆகும். இது உலகத்தின் உணவுத்தேவையைப்போல் இருபது மடங்கு ஆகும். ஆக இருபது மடங்கு மூலவளம் இன்று வீணாக்கப்படுகிறது.

உணவுத்தேவையேயன்றிப் பிற எரிபொருள்களும் தேவைகளும் இதே 3600 கலோரி அளவுக்கு ஒருமனிதனுக்கு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும்பத்துமடங்கு மூலவளம் வீணாக்கப்படுகிறது என்றுதான் பொருள்.

ஆனால் இங்குப் போட்ட கணக்கின்படி எல்லா மக்களுக்கும் கலோரி அளவு சராசரியாகக் கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற ஆதிக்க நாடுகளிலுள்ளவர்கள் ஒருநாளுக்கு ஒருலட்சம் கலோரிக்கு மேலும் வீணாக்கு கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளிலுள்ள எத்தனையோ ஏழைபாழைகள் 300 கலோரிக்கும் வழியின்றி எலும்புக்கூடுகளாக வாழ்கிறார்கள்.

இப்படிச் சக்தியை வீணாக்குவதற்காகத்தான் நாம் இயற்கையைத் தேவையின்றி அழித்துக்கொண்டிருக்கிறோம். இதைத்தான் வளர்ச்சி என்கிறோம்.

வளர்ச்சி நோக்கும் வறுமை நோக்கும்:

இன்றைய நவீன பொருளாதாரம் இன்னொரு விதத்திலும் தவறானது. இக்கோட்பாட்டின்படிவறுமை இருவகைப்படுகிறது.

1. இருக்கும் ஆற்றல் போதாது – ஆற்றல் கிடைக்கவில்லை என்பவர் வறுமையில் வாடுபவர்கள்.

2. இருப்பதைப் பயன்படுத்தாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு கலாச்சார ரீதியாகப் “போதுமென்ற மனமே பொன்செய்வது” என்றிருப்போரும் வறுமையில் வாடுபவர்கள் தான்.

இரண்டாவது வகை மனிதர்கள் வறியவர்கள் அல்ல. ஆனால் வளர்ச்சிக் கொள்கையாளர்கள் இவர்களையும் வறியவர்கள் என்கிறார்கள். காரணம்இவர்கள் சுயகட்டுப்பாட்டுடன் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்ட போதிலும் சந்தைமூலம் விநியோகிக்கப்படும் வணிகப்பொருட்களை நுகராமல்சந்தைப் பொருளாதாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான்.

உதாரணமாக கொக்கோகோலா குடிக்காமல் தங்கள் தோட்டத்தின் இளநீர் அல்லது பதநீரைக் குடிப்பவர்கள் வறியவர்கள். சிமெண்ட் கட்டடங்களில் வசிக்காமல் மண்மூங்கில் கட்டடங்களில் வசிப்பவர்கள் வறியவர்கள். செயற்கை இழைத்துணி அணியாமல் பருத்தியாடை அணிபவர்கள் வறியவர்கள்.

உண்மையான பொருளாதார ரீதியில் சரியான வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்கள்தான். ஆனால் போதுமென்று கருதுகின்ற இந்த நல்வாழ்க்கையை வறுமையென்று கருதுகின்ற இன்றைய “வளர்ச்சிப் போக்கு” இவர்களை யெல்லாம் வறியவர்கள் பட்டியலில் சேர்த்து வேறுவகையான “வளர்ச்சியை” அடைந்தாக வேண்டுமென நிர்ப்பந்தப்படுத்துகிறது. இந்த நிர்ப்பந்தம்தான் வறுமையை உண்மையில் உருவாக்குகிறது.

வளர்ச்சிநோக்கு உருவாக்கும் வறுமை:

sutruchchoolalum7
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுதிருப்தியுடன் வாழ்ந்து வந்த மக்களிடமிருந்து நில-நீர் வளங்களைப் பணப்பயிரின் அதிகரிப்பும்பதப்படுத்தப்பட்ட உணவின் பெருக்கமும் கைப்பற்றின.

இயற்கையின் சீற்றங்களைவிடதொழில்மயமாக்கம்உலகமயமாக்கம்தனியார் மயமாக்கல் போன்றவைதான் அதிகமான மக்களின் பட்டினிக்கும் பசிக்கும் காரணமாகியுள்ளன. ஏற்றுமதிரீதியான உயர் தொழில்நுட்பப் பயிர்கள் ஏன் பட்டினியை விளைவிக்கின்றன என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. கடன்அருகிவரும் நிலம்நீர்தொழில் நுட்பம்ஆகியவை ஏற்றுமதிக்காக ஒதுக்கப்படுகின்றன. பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கமறுத்து ஏழைகளைச் சுரண்டும் நிறுவனங்களின் கையில் இலாபம் குவிகிறது. இதற்கு நல்லதோர் உதாரணம் எதியோப்பியா.

எதியோப்பியாவில் வறுமையை (கலாச்சார நோக்கில்அங்கிருந்த “திருப்தியான எளிய வாழ்க்கையை”) ஒழிக்கத்தோன்றிய “வளர்ச்சி”தான் அங்கு உண்மையான வறுமையை உருவாக்கியது.

எதியோப்பியாவிலுள்ள ஆவாஷ் பள்ளத்தாக்கின் வளமான பாரம்பரியப் புல்வெளிகளை வர்த்தக வேளாண்மைக்கென அந்நிய நிறுவனங்களின் உதவியுடன் மாற்றியமைத்தபோது அங்கு வசித்த ஆப்பிரிக்கப் பழங்குடியினர் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு உள்ளாயினர். அதனால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அவர்களது கால்நடைகளும் பட்டினிகிடக்க நேர்ந்தது.

முதலில்காலனியாதிக்க நோக்கில் இயற்கைவளங்கள் வீணடிக்கப்பட்டாலும் தொழில் உழைப்பு முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டது. இயற்கைச்செல்வம் வீணடிக்கப்பட்டாலும் உழைப்பின் வளத்தை அதிகரிப்பது புத்திசாலித்தனமாகத் தோன்றியது. ஆனால் இந்தக் காலனியாதிக்க நோக்குஅனைத்து நாடுகளுக்கும்அனைத்துச் சூழல்களுக்கும் ஏற்றது என்று நினைப்பதுதான் அநியாயம்.

உதாரணமாகஅதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்குக் கிடைக்கும் நிலையிலும்,தொழிலாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்கத் தொழில்நுட்பங்கள் ஏன் புதிதுபுதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன?ஏற்கெனவே வளங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் அதிகமான வளங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு விட்டன. பாரம்பரியச் சமுதாயங்கள்தங்களுக்கு அவசியமற்ற தேவைகளைப் புறக்கணிக்கின்றன என்ற வகையில் “முன்னேறாமல்” இருந்தாலும்அடிப்படைத் தேவைகளைப் பொறுத்தமட்டில் அவைதான் உண்மையான வளமிக்க சமூகங்கள்.

சான்றாகஅமேசானிலுள்ள பூர்விகக் குடிமக்களின் வாழ்க்கைத்தேவைகளை நிறைவேற்ற அங்குள்ள காடுகளே போதுமானவை. அவர்களுக்குப் பாலியெஸ்டர் உடைகளும் கொக்கோகோலாக்களும் தேவையில்லை. அங்குப் புகுத்தப்பட்ட “வளர்ச்சி”தான் வறுமையை உண்டாக்கியது.

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்திலுள்ள கோண்டு பழங்குடிகளுக்கும்மலேசியாவின் ஷாரவாக் வாசிகளுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டது.

கருத்துப்புகுத்தல்:

உள்ளூர்த் தொழில்நுட்பங்கள் பிற்போக்கானவைஉற்பத்தித்திறன் அற்றவை என்று முத்திரை குத்தப்படுகின்றன. உலகளாவிய சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் சந்தைப்பொருளாதாரத்தின் மூலவளத்தேவைகள்கடும் அரிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைப் பலரும் அறிவதில்லை. அதனால் வளர்ந்துவரும் நாடுகளின் பத்திரிகைகளும்,திரைப்படங்களும்தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இப்படிப்பட்ட வளர்ச்சியை ஆதரிக்கின்றன,நியாயப்படுத்துகின்றன. சென்செக்ஸ் எண் உயர்வதில் நாடே உயர்ந்துவிட்டது என்று பெருமைப்படும் வித்தகர்கள் இவர்கள்தான்.

சூழலியல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் சமத்துவமின்மை பெருகுகின்றது. இத்தகைய சமத்துவமின்மையை முதலாளித்துவம் நியாயப்படுத்துகிறது. போட்டியில் ஈடுபடாதவர்களும் தோல்வியடைபவர்களும் வாழத் தகுதியற்றவர்கள் என்னும் டார்வின் தத்துவத்தை அது பயன்படுத்துகிறது. இந்தக் கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் “வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?”, “அதிகச் செல்வம் சேர்ப்பது எப்படி?” “அள்ள அள்ளப் பணம்” போன்ற நூல்கள்தான் இப்போது எழுதப்படுகின்றனஅவற்றை வணிக நிறுவனங்கள் வெளியிடுகின்றன. வணிகப் பத்திரிகைகளிலும் இத்தகைய கட்டுரைகள்தான் வெளியிடப்படுகின்றன (அதிக “வரவேற்பையும்” பெறுகின்றன) என்பதும் இன்று நோக்கத்தக்கது.


thaniyaar-palligal5

இந்தியாவில் கல்வியின் வி(நி)லை

indhiyaavil-kalviyin-nilai1
இந்தியாவில், தமிழகத்திலும் கல்வி எப்படி இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். குறிப்பாக மாதம் ரூ.100 கொடுக்கமுடியாமல் துன்பப்படும் கிராமத்து ஏழைக்கும், மறுநாள் காலை விண்ணப்பம் வாங்க, நள்ளிரவுக்கு முன்னிருந்தே தான் நல்ல நிறுவனம் என்று நம்பும் ஒன்றில் குழந்தையைச் சேர்க்கப் பள்ளி வாசலில் காத்துக்கிடக்கும் சென்னை மத்தியதர வகுப்பினனுக்கும் தெரியும்.

ஆனால் நமது கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் இந்தியாவின் மக்கள் தொகை ஈவைப் பற்றிப் பெருமைப்படுகிறார்கள். அதாவது இந்தியாவில் வேறுவித வளங்கள் இல்லாவிட்டாலும் உழைத்து ஆதாயம் தேடிக் கொடுக்கக்கூடிய மக்கள்தொகை இருக்கிறது என்கிறார்கள். ஆனால், நாம் இப்போது வைத்திருக்கும் உயர்கல்வி முறைப்படி, இந்த ஆதாயம், விரைவில் ஒரு சாபமாக மாறிவிடும். இந்தியாவில் உயர்கல்வி எப்படிப் பணமயமாக்கப்படுகிறது என்பதை விரைவில் அரசாங்கம் நன்கு கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது. இப்போது விட்டுவிட்டால் பின்னால் பிடிக்கமுடியாது.

thaniyaar-palligal5
இந்தப் பணத்தில் பெரும்பகுதி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும்தான் செல்கிறது. அவர்கள்தானே எல்லா நிறுவனங்களையும் கையில் வைத்திருக்கிறார்கள்?

எங்கள் காலத்தில் கல்வி என்பது மேன்மையான நற்றொழிலாக (புரொஃபெஷன்) இருந்தது. ஒரு பள்ளியையோ கல்லூரியையோ ஏற்படுத்துவது ஒரு புனிதச் செயலாகக் கருதப்பட்டது. அப்போதெல்லாம் தலைக்கூலிக் கட்டணமோ (கேபிடேஷன் ஃபீ) கட்டாய அன்பளிப்புகளோ (டொனேஷன்கள்) முதுகெலும்பை முறிக்கும் மிகுதியான கட்டணங்களோ கிடையாது. தனிப்பட்ட டியூஷன்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு போதித்த ஆசிரியர்கள் தோல்வியடைந்தவர்களாக கருதப்பட்டார்கள்.

இன்று கல்வி ஒரு பெரிய பெருவணிகமாக மாறிவிட்டது.

குழந்தை விளையாட்டுநிலை-ப்ரிகேஜி-ரூ.36,000 முதல் 60,000 வரை

கேஜி வகுப்புகள்-ரூ.30,000 முதல் 5 லட்சம் வரை டொனேஷன், ரூ.2000-10000 மாதக்கட்டணம்

11ஆம் வகுப்பு-ரூ.2 முதல் 5 லட்சம் வரை அன்பளிப்பு, கட்டணம் வேறு

மருத்துவம்-ரூ.30-60 லட்சம் டொனேஷன்

மருத்துவம்-பிஏஎம்ஸ் முதலிய பிற-ரூ.3-8 லட்சம் அன்பளிப்பு

பொறியியல்-ரூ.2-6 லட்சம் அன்பளிப்பு

நிர்வாகம் (எம்பிஏ)-ரூ.2-10 லட்சம்

மருத்துவம்-உயர்கல்வி (பிஜி)-ரூ.1-4 கோடி

நிர்வாகம் (பிஜி-உயர்கல்வி)-ரூ.10-20 லட்சம் அன்பளிப்பு

இப்படிக் கல்வி இன்று விற்கப்படுகிறது. விலைகொடுக்க முடிந்தவர்கள் இவற்றில் கல்வி பெறலாம். இல்லையென்றால் எப்படியோ போங்கள், உங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்று அரசாங்கம் சொல்கிறது. இம்மாதிரிக் கல்வி விற்கப்படுவதால் சமூகத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை சுமாராகக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

சமூகத்திற்கு ஆகும் செலவு:

பெரிய நகரங்களில் அன்பளிப்பு அதிகம். கான்வெண்டுகள், ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள், நல்ல தரமான கல்வியளிக்கும் நிறுவனங்களில் சேர்க்க எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் இம்மாதிரி நிறுவனங்கள் குறைவு, அதனால் பணத்தோடு அதிகாரமும் அரசியல் தொடர்பும் இணைந்தவர்கள் இவற்றைப் பெறுகிறார்கள். இது சமூகத்தில் ஒரு வளைந்த போக்கை (skew) ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் இப்போது 125 கோடி மக்கள்தொகை. 2013இல் 1000 பேருக்கு 2.5 குழந்தைகள் பிறக்கின்றன என்று அரசு அறிக்கை சொல்கிறது. அதாவது ஆண்டுக்கு இரண்டரைக் கோடி கூடுதலாக மக்கள் தொகையில் சேர்கிறது.

125 கோடிப்பேரில், 30% நகர்ப்புற வாசிகள். அதாவது 37.5 கோடிப்பேர் இந்தியாவில் நகரங்களில் வசிக்கிறார்கள்.

ஓராண்டில், 1000 பேருக்கு 2,5 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன என்றால் நகர்ப்புறங்களில் பிறக்கின்ற 75 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி வசதி தேவை. இவர்களில் 80% கீழ்மத்தியதர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முனிசிபல், அரசு பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு இந்த அன்பளிப்பு, தலைக்கூலி கொடுமையெல்லாம் இல்லை.

மேற்கூறிய குழந்தைகளில் 20% பேர்-15 லட்சம் பேரின் பெற்றோர்தான் டொனேஷன் தரத் தயாராக இருப்பவர்கள். சென்னையில் ரூ.30,000 முதல் 5 லட்சம் வரை அன்பளிப்புத் தரத்தயாராக இருக்கிறார்கள். அதுவும் ஆங்கிலக்கல்வி மட்டுமே தேவை, தமிழ் வேண்டாம் என்று கூறி. சராசரி ஒரு பிள்ளைக்கு ரூ.1 லட்சம் என்று வைத்துக்கொண்டால், ஆண்டுக்கு ரூ.15000 கோடி கல்விநிறுவனங்களை நடத்தும் முதலாளிகளிடம் சேர்கிறது. நாம் கொடுக்கும் பணம் நல்ல பணம்தான், ஆனால் அது முதலாளியிடம் சென்றவுடனே கருப்புப் பணமாகிவிடுகிறது. ஏனென்றால் யாரும் எந்தத் தொகைக்கும் கணக்குக் காட்டப் போவதில்லை.

2. 11ஆம் வகுப்பு அடுத்தநிலை. நல்ல கல்லூரியைத் (பிறமாநிலங்களில் தனிக் கல்லூரிகளில்தான் 11-12ஆம் வகுப்புகள் உள்ளன. தமிழகத்தில் என்றால் ஹையர் செகண்டரி பள்ளிகள். இவற்றில் நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், குறைந்தது ரூ.2-5 லட்சம் தேவை.

சென்னையில் ஒரு லட்சம் சீட்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நல்ல மதிப்பெண் வாங்கியவர்கள் பட்டியலில் இருப்பவர்கள் அன்பளிப்பு இன்றிச் சேர்ந்துவிடுவார்கள். பிறருக்கு மேனேஜ்மெண்ட் கோட்டா. இது இருக்கும் இடங்களில் 15% என்றால், 15000 சீட்டுகள். ரூ.2 லட்சம் சராசரி அன்பளிப்பு என்றால், 300 கோடி கருப்புப் பணம். இந்தியா முழுவதும் பம்பாய் தில்லி போன்ற பெருநகரங்கள் உள்படக் கணக்கிட்டால், இந்தத் தொகை ரூ.10,000 கோடி வரும் என்கிறார்கள்.

3. கல்லூரிகள்:

indhiyaavil-kalviyin-nilai3
மருத்துவத்திற்கு மட்டும் இந்தியாவில் 50000 இடங்கள் உள்ளன. நுழைவுத்தேர்வுகள் மூலம் 60% நிரப்பப்படுகிறது. மீதியிருக்கும் 40%, மேனேஜ்மெண்ட் இடங்கள், என்ஆர்ஐ இடங்கள். சராசரியாக ஒரு சீட்டுக்கு 40 லட்சம் அன்பளிப்பு என்று வைத்துக் கொள்வோம். 50000 மாணவர்களில் 40% இருபதாயிரம் பேர். ஓராண்டுக்கு 8000 கோடி இவர்களால் சேரும் பணம். இது எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டுமே.

BDS, MDS, BHMS, BAMS, BPT, MPT, D Pharm, B Pharm, M Pharm, B.Sc, PBC, GNM, M.Sc (Nursing)போன்ற பிற படிப்புகளுக்கு ரூ.3-8 லட்சம் வரை வாங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இங்கே கணக்கில் சேர்க்கப்படவில்லை.

பொறியியல் கல்விக்கு இந்தியா முழுவதும் ஏறத்தாழ 15 லட்சம் இடங்கள். 3350 பொறியியல் கல்லூரிகள். தமிழகத்தில் மட்டும் 2.36 லட்சம் இடங்கள். ஆந்திராவில்தான் பொறியியல் கல்லூரிகளும் இடங்களும் மிக அதிகம்-3.40 லட்சம் இடங்கள்.

இவர்களில் 20% பேர் நிச்சயமாக மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்பவர்கள்-சுமார் 3 லட்சம் இடங்கள். ஓர் இடத்திற்கு ரூ.3 லட்சம் சராசரி என்றால், ரூ.90000 கோடி.

நிர்வாகத்துறை, பிபிஏ, பிஎம்எஸ்-மொத்தம் 1,50,000 இடங்கள். நல்ல நிறுவனங்களைப் பற்றி மட்டுமே இங்குப் பேசுகிறோம். 20% மேனேஜ்மெண்ட் கோட்டா. ஒரு சீட்டுக்கு ரூ. 2 லட்சம். மொத்தம் ரூ.600 கோடி,

மேற்பட்டப்படிப்பு-எம்டி, எம்எஸ்-இவற்றிற்கு 11000 இடங்கள் உள்ளன, 300க்கு மேற்பட்ட கல்லூரிகள் இவற்றை நடத்துகின்றன.

இவற்றில் சேர்பவர்களில் 50 விழுக்காடு அகிலஇந்தியக் கோட்டா, 25 விழுக்காடு மாநிலக் கோட்டா. மீதமுள்ள 25% 2800 இடங்கள். சராசரி 1 கோடி ஒரு சீட்டுக்கு விலை வைத்தாலும் 2800 கோடி. மாநில, மத்திய கோட்டாக்களும் அரசியல் வாதிகளால் விற்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்தது. அதைப் பற்றியும் இங்கே பேசவில்லை.

நிர்வாகம்-எம்பிஏ-2 லட்சம் இடங்கள். எம்பிஏ படிப்பில் 80% இடங்கள் அவ்வளவாகப் பிரபலமாகாத கல்லூரிகளில் இருக்கின்றன. என்றாலும் இவற்றிலும் குறைந்தது இரண்டுலட்சரூபாய் கட்டணம் வசூலிக்கவேபடுகிறது.

ஐஐஎம்(IIMs-Indian Institute of Managements)களில். 20000 இடங்கள் உள்ளன. இவற்றில் டொனேஷன் கிடையாது, கட்டணம் பிறவற்றை விட அதிகம். பிற 20000 இடங்கள், இவற்றுக்கு நிகரான நிறுவனங்களில் உள்ளன. 8-20 லட்சம் ரூபாய்க்கு ஓர் இடம் வீதம் விற்கப்படுகின்றன. சராசரி 10 லட்சம் ஒரு சீட்டுக்கு அன்பளிப்பு என்றாலும் 2000கோடி.

இப்போது மொத்தத்தைக் கூட்டிப் பார்ப்போம்.

ஜூனியர் கேஜி-15000 கோடி

பதினொன்றாம் வகுப்பு-10000 கோடி

எம்பிபிஎஸ்-9000 கோடி

பிஇ/பிடெக்-9000 கோடி

நிர்வாகம்-2600 கோடி

மருத்துவம்-2800 கோடி

ஆக மொத்தம் 48400 கோடி

இது இந்திய ஜிடிபியின் அளவில் 0.8%.

இது மனிதவள மேம்பாட்டுத் துறைக்குச் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 73,5% (2013-14) சென்ற ஆண்டு மனித வள மேம்பாட்டுத் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ. 65867 கோடி.

மேலும் பல படிப்புகளிலும் அன்பளிப்பும் தலைக்கூலியும் உண்டு. அவற்றை இங்கே நாம் சேர்க்கவில்லை.

சரி, இந்தப் பணமெல்லாம் எங்கே போகிறது?

அதிகாரபூர்வமாக கல்வி நிறுவனங்கள் வாங்கும் அன்பளிப்புகளுக்கோ தலைக்கூலிப் பணத்துக்கோ கணக்குக் கிடையாது (இது முற்றிலும் கருப்புப்பணம்). ஆகவே அரசாங்கத்தின் வருமானத்திலோ கணக்கிலோ அதிகாரபூர்வமாக இந்தப்பணம் என்பதே கிடையாது.

கல்வித்துறையில் மட்டும் உருவாகும் கருப்புப் பணம் இது.

நமது கல்வித்துறை எப்படி வளர்ச்சியடைகிறது என்பதை இதுவரை எந்த அரசாங்கமும் கண்காணிக்காமல் விட்டது, நம் இந்திய சமூகத்தின் பெரும்பகுதிக்கு எப்படித் தீங்கிழைக்கிறது என்பதைக் காணலாம்.

இந்தப்போக்கு இந்திய சமூகத்தில் தாறுமாறான விலகல்களை, ஏறுமாறுகளை, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது, இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்குத் தீங்கும் ஏற்படுகிறது. முக்கியமான ஏறுமாறுகள் சிலவற்றைக் காண்போம்.

1. வரி ஏய்ப்பு-இந்தப் பெரும் பணத்திற்கு இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்படுவதில்லை. இந்தியப் பொருளாதாரம் முழுவதுமே கருப்புப் பணம் நிறைந்ததுதான். ஆனால் இந்தக் கல்வித்துறை அன்பளிப்புகள், எதிர்காலத் தலைமுறையின்மீது மிகுந்த சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடிய கருப்புப் பணம் உருவாக்கும் எந்திரம்.

2. ஒழுங்கான இடைவெளிகளில் (ஆண்டுதோறும்…) தனிமனிதர்களிடமிருந்து வாங்கப்படும் பணம் சிலரது கைகளில் குவிகிறது. தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த கல்வி அளிக்கவேண்டுமென்பது மத்தியதர வகுப்பினரின் கவலை. எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் தங்கள் எதிர்காலச் சேமிப்பிலிருந்து அன்பளிப்பாகக் கொடுத்து, பலவேறு கல்விநிறுவனங்களில் இடம்பெறத் தயாராக இருக்கிறார்கள்,

3. இந்தப் பணம் ரியல் எஸ்டேட்டில் குவிக்கப்படுகிறது. தேர்தல்களுக்குச் செலவிடப்படுகிறது. அல்லது வெளிநாட்டு வங்கிகளில் சேமிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் ஓர் ஆக்கமற்ற துறை. வளர்ச்சியற்ற துறை. (வாங்கிப்போட்டால் அவ்வளவுதான். தொழிற்சாலைகள் போல ஆக்கம், விளைவு, உற்பத்தி போன்றவை கிடையாது.) இது மட்டுமல்ல, செயற்கையாக இது நிலங்களின் விலைகளை ஏற்றி அங்கும் விலைவாசி உயர்வையும் செயற்கையாக ஏற்படுத்தி, பணவீக்கம், பணவிலகல் உருவாகும் நிலையை ஏற்படுத்துகிறது.

வெளிநாடுகளுக்கு இந்தப் பணம் சென்றாலோ, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மாறாக, அந்தந்த வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்திற்கு இது உதவிசெய்கிறது. இந்தியா ஏழைநாடாக இருக்கும்போது, நாம் ஸ்விட்சர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வளர்ச்சிக்கு உதவிசெய்ய வேண்டுமா?

5. படிப்புக்குச் செலவிடும் பணத்தை மாணவர்கள் ஒரு முதலீடாக நினைக்கிறார்கள். இதுதான் மிகப் பெரிய பாதிப்பு. இந்த முதலீட்டை எப்படியாவது உடனடியாக (பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பே) எடுத்துவிடவேண்டுமென்று நினைக்கிறார்கள். இது ஒவ்வொரு துறையிலும் ஒழுக்கமற்ற செயல்களை உருவாக்குகிறது. எப்படியாவது போட்ட பணத்தை எடுத்துவிடவேண்டுமென்று, உதாரணமாக ஒரு கட்டடக்கலைப் பொறியாளர் என்றால், அதிகக் கட்டணம் வசூலித்தல், லஞ்சம் வாங்குதல் போன்றவை நிகழ்கின்றன. (இதன் விளைவை இப்போதுகூட நாம் சென்னையில் இடிந்து விழுந்த இரண்டு பலமாடிக் கட்டடக் குடியிருப்புகளில் கண்டோம்.)

இன்று மருத்துவத்துறை முற்றிலும் இப்படித்தான் இயங்குகிறது. கட்டுப்பாடற்ற, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த முடியாத மாஃபியா கும்பல்.

6. பணத்தைக் கொடுத்துவிட்டால் மாணவன், பட்டம் என்பது தனக்குக் கட்டாயம் கிடைக்கவேண்டிய ஒன்று, தான் படித்துவாங்கவேண்டியது என்று நினைப்பதில்லை. பணம் கட்டியாயிற்று, ஆகவே மூன்றாண்டுகளோ, நான்காண்டுகளோ போனால் நமக்கு வேலை கிடைத்துவிடும் என்றும் நம்பிக்கை. அதனால் ஆசிரியர்களும் ஒழுங்காகச் சொல்லித்தருவதில்லை, மாணவர்களோ படிப்பதேயில்லை. இப்படிப்பட்ட நிலையில் கல்வித் தரம் எங்கிருக்கும்? கல்வி கேள்விக்குறியாகிறது.

7. இந்தக் கருப்புப் பணத்தில் ஓரளவு பங்குவர்த்தகத்திலும் (ஷேர் மார்க்கெட்), சந்தைப்பொருள் வர்த்தகத்திலும் (கமாடிட்டி மார்க்கெட்) முதலீடு செய்யப்படுகிறது. நம் நாட்டின் சந்தைப்பொருள் வர்த்தகம்தான் முக்கியமாக உணவுப்பொருள்களின் விலையேற்றத்துக்குக் காரணமானது. உணவுப்பொருள்களைச் சட்டத்துக்குப் புறம்பாகக் குவித்துவைப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் உணவுப்பொருள்களில் திடீர் திடீரென்று விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. நாம் வெங்காயம் இந்த மாதம் ரூ.100 கிலோ விற்கிறதே என்று கவலைப்படுகிறோம், சிலமாதங்களில் ரூ.20க்கும் வந்துவிடுகிறது. இவையாவும் மிக நுணுக்கமான அரசியல் ஆதரவுடனே செய்யப்படுகின்றன.

8. இந்தப் பணம், இந்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் பணத்தில் ஏறத்தாழ 73.5 என்று முன்பே சொன்னோம். இந்தப் பணத்தை ஒரே ஒரு ஆண்டுக்கு மட்டும் அடிப்படைக் கல்வித்துறையில் (பிரைமரி அல்லது பேசிக் கல்வி) செலவிட்டால், இந்தியாவின் எல்லா கிராமங்களிலும் நல்ல வசதியுள்ள அடிப்படைக் கல்வி நிறுவனங்களைத் திறந்து நடத்த முடியும்.

அரசாங்கத்தின் கடமைகள்:

indhiyaavil-kalviyin-nilai5
1. மனிதவள மேம்பாட்டுத்துறை-இந்தக் கொள்ளையை எப்படி நிறுத்துவது என்பதை இந்தத் துறைதான் யோசிக்கவேண்டும். கல்வியை முன்னேற்றவும், தரமான போதனையை அளிக்கவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் எப்படி கொள்கைகளை உருவாக்கி ஆற்றலை நெறிப்படுத்துவது என்பது பற்றி இவர்கள் சிந்தித்தால் நல்லது. குறிப்பாக முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட கல்வியைச் சற்றேயாவது சரிப்படுத்தியே ஆக வேண்டும். இப்போதே நம் கல்வி வெறும் மனப்பாடக் கல்வியாகி, ஆக்கபூர்வமான சிந்தனையை உருவாக்காமல் சந்தி சிரிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு இருக்கும் சிந்தனையறிவுகூட இங்கே பட்டம் வாங்கியவர்களுக்கு இருப்பதில்லை.

2. உடல்நல அமைச்சகம்-வெகுமக்களுக்கு நல்லமருத்துவத்தை அளிக்கும் விதமாக டாக்டர்களின் கொள்ளை மாஃபியாவை எப்படித் தடுப்பது, சுற்றுச்சூழலை எப்படி மேம்படுத்துவது என்பதுபற்றி இவர்கள் சிந்திக்கவேண்டும்.

3. நிதி அமைச்சகம்-மனிதவள அமைச்சகம், உடல்நல அமைச்சகம் இவற்றால் எதுவும் செய்ய இயலாவிட்டால் குறைந்தபட்சம் நிதி அமைச்சகம் இந்தக் கொள்ளையை அதிகாரபூர்வமாக்கி அதன்மீது வரியை விதிக்கவாவது செய்யட்டும். 33% கார்ப்பரேட் வரி என்றால், வருடத்துக்கு ரூ.16,000 கோடி வரி கிடைக்கும். இதனைக் கல்வித் துறை மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.

4. பிரதமர் அமைச்சரகம்-நரேந்திர மோடியோ அல்லது வேறு எவரோ, யார் பிரதமராக இருந்தாலும் அவருக்கு இந்தநிலை தலைவலிதான். இந்த ஒன்றை மட்டும் கட்டுப்படுத்தினாலே (எப்படி என்று தம் ஐஏஎஸ் அதிகாரிகளையெல்லாம் வைத்து மண்டையை உடைத்துக்கொள்ளட்டும்) சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பல ஏற்றத்தாழ்வுகளையும் சீரின்மைகளையும் கட்டுப்படுத்தலாம்.


thamil-desiyam3

தமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா? ஒரு பாமரனின் எண்ணங்கள்

thamil-desiyam3

கல்லூரியில் படிக்கும் காலத்தில் (1960களின் இடைப்பகுதி) எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் திராவிட தேசியம்தான். அப்போது தமிழ்த் தேசியம் என்ற தொடர் இப்போதுள்ள அர்த்தத்தில் வழக்கில் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கட்சி என்ற ஒன்றை ஈ.வெ.கி.சம்பத் தொடங்கியபோது நாங்கள் மகிழ்ச்சிதான் அடைந்தோம். காரணம், அவர் ஒரு நேர்மையான தலைவர் என்பது எங்கள் கணிப்பு.  திராவிடநாடு இல்லை என்பது கொஞ்ச நாளிலேயே தெரிந்துவிட்ட பிறகு, தமிழ்நாடுதான் எங்கள் சிந்தனையில் முதன்மையான அக்கறையாக நின்றது. தமிழ் நாட்டில் உள்ள அனைவரும்-ஜாதி வேறுபாடின்றிப் படிக்கவேண்டும், முன்னேற வேண்டும், தமிழகம் தொழில்வளர்ச்சி கொண்ட, எல்லாரும் வேலை வாய்ப்புப் பெறுகின்ற ஒரு நாடாகத் திகழவேண்டும், தமிழ்நாட்டில் வறுமை இருக்கலாகாது என்பது போன்ற ஆசைகள்தான் இருந்தன.

ஏறத்தாழ 1970 வாக்கில் சிப்காட் திட்டங்கள் தொடங்கப்பட்டன. பெரிய, சிறிய தொழிலகங்கள் கொண்ட அகன்ற நிலப்பகுதிகளில் வந்த தொழிற்பேட்டைகள் அவை. பெரும்பாலும் தமிழ்நாட்டு எல்லைகளிலேதான் சிப்காட்டுகள் அமைக்கப்பட்டன. உதாரணமாக இராணிப்பேட்டை (ஆந்திர எல்லை), ஓசூர் (கருநாடக எல்லை) போன்ற இடங்கள். பிஎச்இஎல் போன்றவற்றின் புதிய தொழிற்பேட்டைகளும் அப்படித்தான். ஏன் எல்லைப்புறங்களில் அமைக்கிறார்கள் இவற்றை என்று எங்களுக்குக் கவலையாக இருந்தது. அயல்மாநிலக்காரர்கள் பிழைக்கவேண்டும் என்பதற்காகவே தமிழகஅரசு தொழில்துறை நடத்துகிறதா?

அந்தக் காலத்திலேயே வேலூர் சிஎம்சி மருத்துவமனை மலையாளிகள் கையில் இருந்தது. சென்னையின் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. தென்சென்னை பணக்காரர்கள் வாழும் இடம் என்றும், வடசென்னை ஏழைகள் வாழும் இடம் என்பதும் பொதுவான கருத்து. வடசென்னையில் தமிழர்கள்தான் ஏழைகளாக, கூலிகளாக, மீன்பிடிப்பவர்களாக என்றெல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் வாழும் பகுதிகள் இன்றும் சேரிகளாக இருக்கின்றன. ஆனால் வட சென்னையில் இன்றும் தம்புசெட்டித்தெரு, லிங்கிசெட்டித்தெரு போன்றவற்றிற்குச் சென்று பாருங்கள். வடநாட்டு சேட்டுகளும், மார்வாடிகளும், குஜராத்திகளும், பிறவட மாநிலங்களின் பணக்காரர்களும் மட்டுமே கொழிக்கும் இடம் அது.

இவர்களைத் தவிர, ஏற்கெனவே நான் சொல்லி வருகிற மாதிரி, தமிழகம் ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்ததால்,இங்கு ஊருக்கு ஊர் தெலுங்கர்கள், கன்னடர்கள் வாழ்கிறார்கள். மலையாளிகளின் வரவு பழங்காலத்தில் குறைவுதான். டீக்கடை என்றாலே நாயர் என்பது பிரசித்தம். அங்கங்கே மலையாள ஜோசியர்கள், மந்திரவாதிகள் இருப்பார்கள். இப்போது எழுபது வருடங்களாகத்தான் கேரளத்தின் பெரிய படையெடுப்பு. முதலில் சினிமாத்துறை, பிறகு பார்த்தால் எத்தனை கேரள நகைக்கடைகள், எத்தனை முத்தூட், மணப்புரம் அடகுக்கடைகள், எவ்வளவு நிறுவனங்கள் அவர்களிடம்? இதுபோலச் சென்னையில் இருக்கும் தெலுங்குச் செட்டிகளின் கடைகளைக் கணக்கெடுத்துப் பாருங்கள். இன்று தமிழ்நாட்டின் பொருளாதாரம் தமிழர்களிடம் இல்லை. மலையாளிகளிடமும் தெலுங்கர்களிடமும் வடநாட்டவர்களிடமும் சிக்கியிருக்கிறது. இது ஒரு புறம்.

thamil-naagarigam2

இப்போது தமிழ் தேசியத்திற்கு வருவோம். தேசம் என்பது சமூகவியலில் ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஓர் இனம் வாழும் நாடு என்று சொல்லப்படுகிறது. இப்போது தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை உண்டா? தமிழ்நாட்டில் பூர்விகக் காலத்திலிருந்து வாழும் தமிழர்கள் மட்டுமே இருக்கவேண்டும், வந்தேறியவர்களெல்லாம் சென்றுவிட வேண்டும் என்று சொல்லமுடியுமா? தமிழ் தேசியம் பேசுவதில் தலையாய பிரச்சினை இதுதான். இதேபோன்ற பிரச்சினை வேறுவடிவத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்ற போது ஏற்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை மட்டும் பிரித்துக்கொண்டு பாகிஸ்தானாகப்- புதிய நாடாக மாற்றினார்கள். அங்கிருந்த இந்துக்களையும் சீக்கியர்களையும் கொடுமைப்படுத்தித் துரத்தினார்கள். ஆனால் இந்தியாவிலிருந்து நாம் முஸ்லிம்களை அப்படிக் கொடுமைப்படுத்தித் துரத்தியிருக்க முடியமா? அவர்கள்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஊருக்கு ஊர் இருக்கிறார்களே? எங்கள் நாடு எங்கள் மொழி இதுதான் என்று சொந்தம் கொண்டாடுபவர்களை என்னதான் செய்வது?

thamil-desiyam1
இந்தப் பிரச்சினைக்குத்தான் காந்தி உயிரையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரே இனம் வாழும் நாடு (பாகிஸ்தான் போன்றவை) பிழைத்துக் கொள்வது எளிது. பல இனங்கள் வாழும் தேசம் (இந்தியா), பலவற்றில் விட்டுக் கொடுத்துத்தான் போகவேண்டியிருக்கிறது. இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை நிலைமை. இதேநிலைதான் வேறுவடிவத்தில் தமிழகத்தில் இருக்கிறது. இங்கு இனம் என்பதை மதம் என்று அர்த்தப்படுத்தாமல், பிற திராவிட மொழிகள் பேசும் மக்கள் என்று கொண்டு பாருங்கள். கன்னட நாட்டில் பெங்களூர், மைசூர் தவிர கிராமப்புறங்களில் தமிழர்கள் இல்லை. இருப்பினும் மிகமிகச் சிறுபான்மை. ஆந்திர நாட்டிலும் அப்படித்தான். கேரளத்திலும் அப்படித்தான். அதனால்தான் காவிரிப்பிரச்சினை ஒருசமயம் சூடானபோது, தமிழர்களைக் கன்னட நாட்டிலிருந்து பத்தாண்டுகளுக்கு முன்பு (பாகிஸ்தான் இந்தியர்களைச் செய்ததுபோல) அடித்துத் துரத்தினார்கள். ஆனால் தமிழகத்தில் ஊருக்கு ஊர் இவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள். ஆகவே “பல இனங்கள் வாழும் தேசம் பலவற்றில் விட்டுக்கொடுத்துத்தான் போகவேண்டியிருக்கிறது. இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தின் நிலை.”

தமிழ்தேசியம் தனித்தமிழ் இயக்கத்திலிருந்தும் திராவிட இயக்கத்திலிருந்தும் தோன்றியது என்று விக்கிபீடியா முதலான அண்மைக்காலப் பதிவுகள் வரை குறிப்பிடுகின்றன. திராவிட இயக்கத்தின் சுயநல நோக்கம் முன்பே பதிவு செய்யப்பட்டது. தனித்தமிழ் இயக்கம் என்பது சாத்தியமா?

thamil-naagarigam1

தமிழ்த் தேசியம் என்ற சொல்லில் இருக்கும் தேசம் என்ற சொல்லே வடமொழிச்சொல்தான். வடமொழிக் கலப்பு ஆதிகாலத்திலிருந்து, நமது ஆதிநூலான தொல்காப்பியத்திலிருந்து இருக்கிறது. தொல்காப்பியம் செய்யுள் எழுதுவதற்கான சொற்களில் ஒன்றாக வடசொல்லைக் குறிப்பிடுகிறது. அவ்வாறானால் அந்த அளவு வடமொழியாளர்கள் தமிழகத்தில் பழங்காலத்திலேயே கலந்துவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம்?

ஆனால், பிற திராவிடமொழிகளின் தனித்தன்மை வடமொழியால் அழிந்து போன மாதிரி தமிழின் தனித்தன்மை அழியவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனால் இன்று தனித்தமிழைக் கையாள முடியாது.

முதல் காரணம், உலகத்தின் அறிவுப்பெருக்கம், ஒரு மணிக்கு ஆயிரக்கணக்கான சொற்களின், தொடர்களின் தேவையை வேண்டி நிற்கிறது. தனித் தமிழ்வாதிகள், ஆயிரம் நாட்களுக்கு ஒரு சொல்வீதம் தமிழில் சேர்க்கிறார்கள். அது பெரும்பாலும் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை, அல்லது ஏற்கப்படப் பலகாலம் ஆகிறது. மொழியின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடை தனித்தமிழ். தொல்காப்பியரே, இளங்கோவடிகளே, சங்கப்புலவர்களே தனித் தமிழைக் கையாளவில்லை, வடமொழிக் கலப்பை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்?

மொழிக்கு அடிப்படை தொடர் அமைப்பே தவிரச் சொற்கள் அல்ல என்பது மொழியியல் கற்றவர்களுக்குத் தெரியும். ஆனால் தனித்தமிழ் இயக்கம் தொடரமைப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சொற்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது.

thamil-desiyam2
இதை விளக்க ஓர் உதாரணம் சொல்லலாம். “உடுது துரடத்தைக் கருண்டது”* என்று நான் ஒரு “மடத்தனமான” தொடரை உருவாக்குகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பொருள் புரியவில்லை என்றாலும் தமிழ்த்தொடரின் அமைப்பில் இந்த மூன்று சொற்களும் உள்ளன என்று சொல்லிவிடுவீர்கள். காரணம் என்ன? முதல் சொல்லில் வரும் து-விகுதி, இறுதிச் சொல்லில் வரும் து-விகுதியோடு பொருந்தி ஏதோ அஃறிணை எழுவாய் “உடுது” என்பதான தோற்றத்தை உருவாக்குகிறது. இரண்டாவது சொல்லில் வரும் இரண்டாம் வேற்றுமைக்கான ஐ-விகுதியும், புணர்ச்சி வல்லொற்றும் (க்), தமிழுக்கே உரியவை. இரண்டாம் வேற்றுமைக்குப் பின் வல்லெழுத்து மிகும். மூன்றாவது சொல், ஓர் அஃறிணை வினைமுற்று போன்று காட்சியளிக்கிறது. (கருண்டது என்பது சுருண்டது என்பதுபோல இருக்கிறது.) ஆக, இந்த வாக்கியத்திற்குச் சொல்லளவில் பொருள் இல்லையென்றாலும், தொடரமைப்பு தமிழ் என்று உங்களுக்குப் புரிந்துவிடும். மொழி என்பது இம் மாதிரி, தொடரமைப்பில் உள்ளதே அன்றி சொற்களில் அல்ல. (இங்கு கையாளப்பட்ட மூன்று சொற்களுக்கும் அர்த்தமே இல்லை.) அதனால்தான் இடைக்காலத்தில் வெறும் சமஸ்கிருதச் சொற்களை இட்டு, ஆனால் தமிழின் வாக்கிய அமைப்பில் மணிப்பிரவாளம் என்ற ஒரு தனிநடையை உருவாக்க முடிந்தது.

இன்று நம்மிடையே முஸ்லிம்கள், கிறித்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயரெல்லாம் வட எழுத்துகள் மிகுதியாகக் கொண்டவையாக உள்ளன. வட எழுத்துகளை விலக்கவேண்டாம், சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவற்றுக்கு மட்டும் கிரந்த வடிவங்கள் (ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ) தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவற்றை விலக்கமுடியாது.

ஜார்ஜ் என்பதை சார்ச்சு என்று எழுதினால் கேலிக்கூத்துதான். நான் என் “பத்திரிகை தலையங்கம்” என்ற நூலில் இருபதாண்டுகளுக்கு முன்பே காட்டிய உதாரணம் போல, ரஷீத் என்பதை கிரந்த எழுத்துகளை நீக்கி எழுதினால் “இரசீது” என்றாகும். சொல் முக்கியமா, அர்த்தம் முக்கியமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். தனித்தமிழ் அர்த்தத்தைவிடச் சொற்களை முதன்மையாகக் கருதுகிறது.

நாட்டார் வழக்காறுகளிலும் வடசொற்கள் சேர்ந்துதான் இருக்கின்றன. அவற்றை விலக்க முடியாது. அதுபோலத்தான் தமிழகத்தில் சேர்ந்துவிட்ட பிற மாநில, பிற மொழிக்காரர்களையும் விலக்குவது சாத்தியமல்ல. நாம் செய்ய வேண்டியது, தமிழர்களை, தமிழ்மொழியை முன்னேற்றவேண்டும் என்பதைத் தான்.

தமிழகம் இன்று தனி நாடாவதும் இயலாது. “நாடா வளத்தன நாடு” என்றார் வள்ளுவர். இது தேசத்திற்கான அவரது வரையறை. ஒரு நாட்டில் பெரும்பாலும் எல்லா வளமும் இருக்க வேண்டும். தண்ணீர் முதலாக எல்லாவற்றிற்கும் பிறரிடம் கையேந்தும் நாம் (பிறரை) நாடாத வளம் கொண்டவர்களாக எப்படி இருக்க முடியும்?

இது உலகமயமாக்கல் காலம். அமெரிக்கக் கம்பெனிகள் நம் சிற்றூர்களில் வந்து கிளைகள் திறக்கின்றன. பொருளாதாரப் பிரதேசங்கள் (எகனாமிக் சோன்ஸ்) என்ற பெயரில் நிலங்கள் அயல்நாட்டவர்க்கும், அயல் மாநிலத்த வர்க்கும் எவ்வளவோ தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டன. மீதி இருக்கும் நிலம், விவசாயத்துக்கும் வேண்டாம், நிலத்தடி நீருக்கும் வேண்டாம் என்று “நகர்”களாக “பிளாட்” போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டின் தமிழர் அமைப்புகள் அரசுமயமாக்கப்படுகின்றன. (உதாரணம், பச்சையப்பன் அறக்கட்டளை, அண்ணாமலைச் செட்டியார் நிறுவனங்கள்). ஆனால் தமிழை அறவே அகற்றும், வெறுக்கும் தனியாரது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் முதலியன தமிழ்நாட்டு அரசினாலேயே வரவேற்கப்படுகின்றன.

இந்த லட்சணத்தில் என்னய்யா தமிழ்த் தேசியம்? இவற்றையெல்லாம் மாற்றுவதற்கான போராட்டங்களை உருவாக்கத்தான் தமிழ் தேசியம் பேசுகிறோம் என்றால், போராட்டக் காலங்கள் முடிந்து விட்டன. ஆனானப்பட்ட மார்க்சியர்களே (பொதுவுடைமைக்காரர்களே) பெரிய அளவிலான தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களை இனிமேல் நடத்தமுடியுமா என்று கவலைப்படுகிறார்கள். அவரவர் வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டுமே போராட்டம் நடத்திப் பிழைக்கவேண்டிய காலமாக இது மாறிவிட்டது. வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் மொழியையே தன் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறான் தமிழன். ஆங்கிலத்தையே தாய்மொழியாக ஏற்றுக்கொண்டால் என்ன என்று என்னிடம் எத்தனையோ ஆங்கிலப் பேராசிரியர்கள் சண்டை போட்டிருக்கிறார்கள்.

மக்கள் ஒன்றாக இருந்தால் மிக எளிதில் தீர்த்துவிடக்கூடிய தமிழ்நாட்டுப் பிரச்சினைகள்கூட இன்று பிரம்மாண்ட உருவெடுத்து மத்திய அரசிடம் கையேந்தும் (அல்லது “கடிதம்” ஏந்தும்) பிரச்சினைகளாக மாறிவிட்டன. முல்லைப் பெரியாறு, காவிரிநீர், மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு போன்ற அனைத்தும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் மிக எளிதில் தீர்க்கக்கூடியவை. இம்மாதிரிப் பிரச்சினைகளில் அயல் மாநிலங்களில் நடிகர்கள்கூடப் பங்கேற்று மக்களுக்கு உற்சாகம் அளிக்கிறார்கள். ஆனால் வாய்-வயிறு போராட்டத்தைத் தாண்டிச் சிந்திக்கும் தமிழ்மக்கள், இம்மாதிரிப் பொதுப் பிரச்சினைகளுக்குக் குரல் எழுப்பிப் போராடக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் எங்கிருக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. இங்கு காலங்காலமாக வாழும் தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் இந்த நாட்டின் மூலவளங்களை அனுபவிப்பதற்கு மட்டுமே தயாராக இருக்கிறார்களே தவிரப் போராடுவதற்குத் தயாராக இல்லை. அது தான் நமக்கும் தமிழ்த் தேசியத்தின் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது.

thamil-desiyam4
இன்று தமிழகம் தன்னளவில் மட்டுமே ஒரு தேசமாக வாழும் பண்பை இழந்துவிட்டது. தனித் தமிழ்நாட்டினால் தீர்க்கமுடியாத ஏராளமான சிக்கல்கள் இன்று உள்ளன.

அவ்வாறானால் இனி நாம் செய்யக்கூடியது என்ன? அமெரிக்காவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால் அவை தன்னாட்சி பெற்றவை. (நமது தமிழ்ச் சிந்தனையின்படி “மாநில சுயாட்சி” பெற்றவை.) அமெரிக்கா சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கு மட்டுமே வாஷிங்டனின் வெள்ளை மாளிகை அரசியல். பிற யாவும், அந்தந்த மாநிலங்களினால் தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. இம்மாதிரி மாநிலசுயாட்சி இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேவை. இந்தியாவுக்குப் பொதுவான இராணுவம், அயலகத்துறை, பொதுப்பொருளாதாரம், நதிகள் உட்பட்ட நில-நீர் அமைப்புகள், கல்வி போன்றவை மைய அரசிடம் இருக்கலாம், பிறதுறைகள் யாவும் மாநில அரசுகளிடமே இருக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும்,

பிற மாநிலங்களுக்கோ, மைய அரசுக்கோ தொடர்பு கொள்ளுதல் இந்த எந்திர (மொழிபெயர்ப்பு)க் காலத்தில் ஒரு பெரிய விஷயமே அல்ல. இதற்குக் கூடப் பயன்படாவிட்டால் மொழிபெயர்ப்புத் துறைதான் எதற்கு?

நாம் சுதந்திரம் பெற்றபோதே இங்கிலாந்தின் அரசியல் அமைப்பையும் நீதிமுறை அமைப்பையும் ஏற்றுப் பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை வி.ஆர். கிருஷ்ணய்யர் உட்பட்ட சிந்தனையாளர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளின் ஃபெடரல் அமைப்பினை ஏற்றிருந்தால் இந்தியாவின் பிரச்சினைகள் எத்தனையோ எளிதாகத் தீர்ந்தி ருக்கும்.

இப்போதே சர்வதேச அளவிலான புள்ளிவிவரங்கள் தமிழ் அழிகின்ற மொழி என்றுதான் குறிப்பிடுகின்றன. மேற்கண்டமாதிரிச் சில அடிப்படை மாற்றங்களைச் செய்தால் எதிர்காலத்தில் தமிழ்நாடு வாழும், தமிழ்மொழி வாழும் என்று எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் சந்தேகந்தான்.


parakkindrana-pattangal2

பறக்கின்றன பட்டங்கள்!

parakkindrana-pattangal1

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம். திருச்சியில் கல்லூரி வாழ்க்கை. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம். எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள். “மாவீரன் நெப்போலியனே வருக”. எப்போது பிரெஞ்சு மாவீரன் நெப்போ லியன் உயிர்த்தெழுந்தார் என்று எனக்குச் சந்தேகம். என் மாணவர்கள் என் அறியாமையைக் கண்டு சிரித்தார்கள். “சார்இந்த நெப்போலியன் நடிகர். நம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர். இந்த ஆண்டு விழாவுக்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் அவரை அழைத்திருக்கிறார்கள்.” நான் கேட்டேன், “இவர் நடிகர்தானேஎப்படி மாவீரன் ஆனார்?” வீரனாக நடிப்பவனெல்லாம் மாவீரனாவள்ளலாக நடித்தால் வள்ளலாசெத்துப் போவதாக ஒருவன் நடித்தால் உண்மையிலேயே செத்துப்போய்விட்டானாஇதுகூடப் புரியாமலா படம் பார்க்கிறார்கள்?தொழுநோயாளியாக ஒருவன் நடித்தால் உண்மையிலேயே தொழுநோயாளியா அவன்நடிப்புக்கும் நிஜ வாழ்க்கைக்கும் என்னதான் சம்பந்தம்?

ஆனால் இப்படித்தான் அரசியல்வாதிகளும், நடிகர்களும் தங்கள் பிம்பத்தைக் கட்டுகிறார்கள். போலியை நிஜம் என்று நம்பவைக்கிறார்கள்.

மிகைப்படுத்தல் நம் வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் ஊறிக்கிடக்கிறது. (தமிழர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம்.) இல்லாவிட்டால் வெள்ளைத்தோல் இருந்ததாலேயே நம் நாட்டுக்குள் நுழைந்த ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரர் போன்றவர்களை துரை என்று அழைத்திருப்பார்களா?அவர்களுக்கு அடிமைப்பட்டிருப்பார்களாசாதாரணப்

பூசாரிகளைக் கூட சாமி என்று அழைப்பவர்கள்தானே நாம்?

பொது அரங்கில் தோன்றி விட்டால் சாதாரணமானவர்களைக்கூட மிகப்பெரிய அடைமொழிகள் தந்து அழைப்பது அதனால்தான் சாத்தியமாகிறது. மேடையில் அமர்ந்திருப்பவர் ஓரிரு கவிதைகள் எழுதியிருப்பார். வரவேற்பவர் கூசாமல் அவரைத் தமிழ்நாட்டின் மாபெரும் கவிஞர்எழுத்தாளர் என்பார். மேடையில் மட்டும்தான் என்றல்ல,பத்திரிகைகளும் இதற்குத் துணைபோகின்றன. அடுத்த நாள் செய்தி வெளியிடும் உள்ளூர் செய்தித்தாள் மாபெரும் கவிஞர் இன்னார் ….தலைமை தாங்கினார் என்றே செய்தி வெளியிடும். பிறகு அவரே எல்லா இடங்களிலும் அதைப் போட்டுக் கொள்வார்.

இப்படித்தான் ஒருகாலத்தில் டாக்டர் என்ற பட்டத்தைக் (கௌரவத்திற்காக அளிக்கப்படுவது) கொஞ்சமும் படிக்காதவர்களெல்லாம் போட்டுக்கொண்டு சிரிப்பாய்ச் சிரித்தது. அரசியல்வாதிகளும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்களும் எவ்விதத் தகுதியும் இல்லாமல் டாக்டர் என்று தங்கள் பெயருக்கு முன்னால் கூசாமல் போட்டுக்கொள்வதைப் பார்த்ததனால்ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் முனைவர் என்றே தங்களை அழைத்துக்கொள்ளலானார்கள். (நல்லவேளைஇதில் மருத்துவத்தொழில் சார்ந்தவர்களைச் சேர்த்துக் குழப்ப வில்லை.)

நல்ல கவிதைகளே எழுத அறியாத ஒருவர் தன்னைப் பெருங்கவிக்கோ என்று தானே அழைத்துக்கொண்டது மிக நன்றாக எனக்குத் தெரியும். கூசாமல் தன் நூல்களிலும் அப்படியே போட்டுக் கொள்வார். பிறகு எல்லாரும் அப்படியே அவரை அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

திரைப்பட நடிகர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. எனக்கு ஏற்படும் வியப்புயார் இந்த அடைமொழிகளை எப்போது தருகிறார்கள் என்பதுதான். திடீர் திடீரெனப் பட்டங்கள். அடைமொழிகள் சேர்க்கப்பட்டு விடுகின்றன. உதாரணமாகஎந்தப் படத்திலிருந்துதான் வைகைப் புயல்,இளைய தளபதி போன்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டனஒருவேளை இவர்களின் இரசிகர் மன்றங்களைக் கேட்டால் தெரியவரும் போலும். ஏன் சேர்க்கிறார்கள்என்ன பலன் இவர்களுக்கு என்பதெல்லாம் என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு எளிதில் புரிவதில்லை.

ஒருவேளை நடிகர்களும் அரசியல்வாதிகளும் (முன்பு உதாரணம் காட்டிய கவிஞரைப்போலத்) தாங்களே சொல்லி ஏற்பாடு செய்து இம்மாதிரி பட்டங் களையும் அடைமொழிகளையும் போடச்செய்கிறார்கள் என்றுதான் தோன்று கிறது. அவரவர்களுக்கு என எழுதப்படும் திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போதும் (சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்..உலகநாயகனே….) அந்தந்தப் பட்டப்பெயராலே நடத்தப்படும் தொலைக் காட்சிச் சேனல்களைப் (கேப்டன் டிவி…) பார்க்கும்போதும் இது ஊர்சிதமாகிறது.

இந்த வியாதி அநேகமாகத் திரைப்படங்களில் சிவாஜி கணேசன்எம்.ஜி.ஆர். காலத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. அரசியலில் எம்.ஜி.ஆரின் காலத்திலிருந்து என்று உறுதியாகவே சொல்லலாம். ஏறத்தாழ 1968-70 காலம் வரை அநேகமாக எம்.ஜி.ஆரின் எல்லாத் திரைப்படங்களிலும் புரட்சி நடிகர் என்ற அடை மொழியை மட்டுமே காணலாம். பிறகு திடீரெனப் புற்றீசல்போலபுரட்சித் தலைவர்மக்கள் திலகம்,பொன்மனச் செம்மல்கொடை வள்ளல் இப்படிப் பெருகிப்போயின. நல்ல வேளையாக சிவாஜி கணேசனுக்கு இப்படிப் பெருக வில்லை. நடிகர் திலகம் ஒன்றுதான் நிலைத்தது.

parakkindrana-pattangal6

புரட்சித்தலைவர்புரட்சித்தலைவி இதெல்லாம் பழையவை. இதுவே சிந்திக்கும் மனத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாகத்தான் இருக்கும். எந்தப் புரட்சியை இவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்எந்தப் புரட்சியைப் பற்றியாவது குறைந்தபட்சம் படித்தாவது இருப்பார்களா?புரட்சி என்றால் படித்தவர்களுக்கு ரஷ்யப் புரட்சிசீனப்புரட்சி,பிரெஞ்சுப்புரட்சி என்றுதான் நினைவுக்கு வரும். பட்டம் தருபவர்களுக்கோ (பெறுபவர்களுக்கும்தான்) சாரதாஸ் புரட்சிஜெயச் சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் புரட்சிலலிதாஸ் ஜுவல்லரி புரட்சிக்குமேல் மனக் கண்முன் தோன்றாது என்று நினைக்கிறேன். இன்று போடப்படும் பட்டங்கள்,அடைமொழிகளைப் பார்த்தால் கேலிக்கூத்தாக இருக்கிறது.

parakkindrana-pattangal3

காதல் இளவரசன்சூப்பர் ஸ்டார்இயக்குநர் சிகரம் என்றெல்லாம் பட்டங்கள் சந்தி சிரிக்கின்றன. உலகின் மிகச் சிறந்த கலைத் திரைப்படங்களை எடுத்த இங்மார் பெர்க்மன்அகிரா குரோசேவா,ஃபெலினிஅவ்வளவு ஏன்சார்லி சாப்லின் முதல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வரைஇன்றைய சிறந்த இயக்குநர்கள் வரை-இவர்களைப் போன்றவர்களையெல்லாம் இயக்குநர் சிகரங்கள் என்று யாரும் போட்டதில்லை. (அவர்களும் போடச் சொன்னதில்லை). இதற்குமேல் கேப்டன்தளபதிஇளைய தளபதி என்றெல்லாம் வேறு. எந்தப் படைக்கு அல்லது (குறைந்தபட்சம்) விளையாட்டு அணிக்குத் தலைமை தாங்கினார் இந்தக் கேப்டன்எந்தப் படைக்குத் தலைமை தாங்கி தளபதிஇளைய தளபதி ஆனார்கள் இவர்கள்சொந்தப் பெயர்களே மறைந்துபோகும் அளவுக்கு இந்தப் பட்டங்கள் ஆட்சி செய்கின்றன.

parakkindrana-pattangal5

இதைவிடக் கொடுமைஅன்னைதாய்அம்மா போன்ற பொதுப் பெயர்களும் கலைஞர் போன்ற சிறப்பு அடைமொழிகளும் பட்டங்களாக மாற்றப்படுவது. என் நண்பர் ஒருவர் இலயோலா கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட சிலம்பு என்ற பத்திரிகையில ஒருமுறை எழுதினார். “ஆழமான கருத்துகள் இல்லாமல் அலங்கார வார்த்தைகளோடும் அணிகளோடும் ஒருவர் பேசினால் அவரில் பலர் மயங்கிவிடுகின்றனர். கீழ்த்தட்டு மக்களிடம் ரொம்பவும் இயல்பாக உள்ள அழகியல் கூறுகளின் வெளிப்பாடுதான் அலங்கார வார்த்தைகளும் அணிகளும் ஆகும்.

parakkindrana-pattangal4

உதாரணமாகவிஜயகாந்த் சண்டைபோடும்போதுவில்லனை சும்மா தோசைமாதிரி புரட்டியெடுக்கிறானுல்ல என்று இயல்பாக வெளிப்படும் வார்த்தைகள்தான் இலாபம் சம்பாதிக்க முயலும் ஊடகங்களால் புரட்சிக் கலைஞர் என்று மாற்றப்படுகிறது.” இரண்டு இடங்களிலும் கோளாறு. புரட்டியெடுக்கிறான் என்று பாராட்டும் நம் சாதாரண மக்களுக்கு புரட்டியெடுப்பதும்புரட்டப் படுவதும் நடிப்பு என்று தெரியாமல் போனதென்னஅடுத்த கோளாறுஇந்தப் பாராட்டை அடைமொழியாக மாற்றும் ஊடகங்கள்,நடிகர்கள்இரசிகர் மன்றங்கள்… (இன்னும் வேறு யார் யார்?)

அந்த நண்பரே மேலும் சொன்னார்: “போலித்தன்மைகளைப் பலநிலைகளில் கொண்ட மனித அனுபவமானது,சினிமா நாயகர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பேச்சிலுள்ள அப்பட்டமான போலித்தன்மைகளோடு கைகுலுக்கிக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது.” மெய்யாகவே இருக்கலாம். ஆனால் இந்தத் தன்மை ஏன் தமிழ்நாட்டுக்கு மட்டும் (சில சந்தர்ப்பங்களில் இந்தியா முழுமைக் கும்) சொந்தமாகப் போனதுஏன் பக்கத்திலுள்ள ஈழத்தில்கூட இந்தத் தன்மை இல்லைபோலித்தனம் என்பதென்ன தமிழனுக்கு மட்டும் தனிச்சொத்தா?

நமது நிலவுடைமைசார்ந்த அடிமை மனப்பான்மை இதற்குக் காரணம் என்றும் தோன்றுகிறது. கீழ்சாதிக்காரன் மேல்சாதிக்காரனைச் சாமி என்று கும்பிடுவதற்கும்இடுப்பில் துண்டைக் கட்டி நடப்பதற்கும் இதுதான் காரணம். கீழ்சாதியினரிடம் மட்டுமல்லதமிழர் எல்லாரிடமுமே இந்த மனப்பான்மை இருக்கிறது. இல்லாவிட்டால் சாதாரணமாக நீதிபதி அல்லது நடுவர் என்று அழைக்கப்பட வேண்டியவர் நீதியரசர் ஆவானேன்எல்லாரையும் அரசராகவும் அரசியாகவும் மந்திரியாகவும் பார்த்தே நமக்குப் பழக்கம். அரசாங்கச் சேவை (அதாவது மக்கள் சேவை) யிலிருக்கும் ஒருவரைக்கூட அரசர் என்று தூக்கிவைத்தால் அப்புறம் என்ன இருக்கிறது?

அரசியல்திரைப்படம் இவற்றிற்கு அடுத்தபடியாக மக்கள் மிகவும் உயரத்தில் வைத்துப் பார்ப்பது கிரிக்கெட் நாயகர்களை. கிரிக்கெட் ஒரு சூதாட்டம். (அன்றைக்கும்தான்இன்றைக்கும்தான். இது ஏதோ ஐபிஎல் காரணமாக ஏற்பட்ட வியாதி அல்ல. அந்தக் காலத்தில் சரியாகப் பந்தை அடிக்காமல் கவாஸ்கர் போன்ற கட்டைபோட்ட நாயகர்களே காசுவாங்கிவிட்டு அப்படிச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. பலபேர் மீது வழக்கும் உண்டு.) பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறுவது தெரியாமல்கிரிக்கெட் நாயகர்களைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுவது கேலிக் கூத்து.

தலைமை வழிபாட்டை உருவாக்கும் பெருவியாதி பட்டங்களையும் அடைமொழி களையும் சேர்ப்பது. அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்கள் நம்மால்நம் சேவைக்காகச் சில ஆண்டுகள் பதவியில் வைக்கப்படுபவர்கள். (பிரதமர் மோடியாக இருந்தாலும் சரிஉள்ளூர்க் கவுன்சிலராக இருந்தாலும் சரி.) அதிகாரிகள் என்றால் மக்களுக்குப் பணிசெய்ய (ஆங்கிலத்தில் கவுரவமாக சிவில் சர்வீஸ்பப்ளிக் சர்வீஸ் என்று சொல்லிக்கொள்வார்கள்) ஏற்பட்டவர்கள். (யூனியன் அல்லது ஸ்டேட்) பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி வேலைக்கு வந்தவர்கள் வேலையில் சேர்ந்தவுடனே பப்ளிக்கை மறந்துபோவது நம் நாட்டின் துரதிருஷ்டம்.

இந்தத் தலைமை வழிபாட்டினால்தான் எங்கு பார்த்தாலும் லஞ்சமும் ஊழலும் தாண்டவமாடுகின்றன. தொழிலைக் குறித்த அடைமொழிகளைச் சேர்ப்பதில் தவறில்லை. பிரதமர் மன்மோகன்பொறியாளர் நமச்சிவாயம்மின்வாரியத் தலைவர் சிவராமன் என்பதுபோல. ஆனால் மக்கள் நாயகன் பொறியாளர் நமச்சிவாயம் என்று சேர்க்காதீர்கள். அங்குதான் ஏற்படுகிறது தவறு. இனி மேலாவது இந்த நிலை மாறினால் நன்றாக இருக்கும். (மாறுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.) படித்தவர்களுக்கும்ஊடகங்களுக்கும்செய்தித் தாள்களைச் சேர்ந்தவர்களுக்கும்திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். யாராக இருந்தாலும்தயவுசெய்து யாருக்கு முன்னும் எந்த அடைமொழியையும்பட்டத்தையும் சேர்க்காதீர்கள்.


mozhippirachchanai-4

மொழிப்பிரச்சினை-ஒரு நோக்கு

mozhippirachchanai-3
இந்தியா பலமொழிகள் பேசப்படும் ஒரு தேசம் என்கிறார்கள். (இந்தக் கூற்று சற்றே விவாதிக்கப்பட வேண்டியது.) ஒரு தேசம் என்பதற்கு ஒரு மொழிஒரு கலாச்சாரம்ஓர் இனம் என்பது அடிப்படைத் தேவை. இந்தியாவிலோ பல மொழிகள்பல கலாச்சாரங்கள்பல இனங்கள். வேண்டுமானால்பல கலாச்சாரங்கள் சேர்ந்த ஒரு நாடாக (தேசமாக அல்ல) அமைந்தது இந்தியா என்று கூறலாம். தேசம் என்பதை “நேஷன்” என்போம்நாடு என்பதை “கண்ட்ரி” என்போம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. உதாரணமாகசிலப்பதிகாரக் காலத்தில்சேரநாடு இருந்தது,சோழநாடு இருந்ததுபாண்டியநாடு இருந்தது. ஆனால் இவையனைத்தும் சேர்ந்தது தமிழ் தேசம்‘. இந்தக் கருத்து சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ளதனால்தான் அதை தேசியக் காப்பியம் என்கிறார்கள்.

இந்தியா ஒரு தேசம் என்று ஏற்காவிட்டாலும்கூடபழங்காலத்திலிருந்தே அருகருகில் இருப்பதன் காரணமாகஒரு மொழி பேசுபவர்கள்இன்னாரு மொழி பேசுபவரிடம் கலந்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயம் மிகப் பழங்காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது. இன்னும்கேட்டால் காலப்போக்கில் மிகுதியாகியிருக்கிறது. இந்தியாவில் அரசியலமைப்புப்படி ஆட்சிமொழிகளாகப் பதினெட்டு மொழிகளும் சாகித்திய அகாதெமியின் அங்கீகாரப்படி இலக்கிய வளமுள்ள மொழிகளாக இருபத்திரண்டு மொழிகளும் ஏற்கப்பட்டுள்ளன.

இன்று இந்தியாவில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு-நதிப்பிரச்சினைவேலை வாய்ப்புப் பிரச்சினைவளர்ச்சிப் பிரச்சினை போன்ற பலவற்றிற்கு அடிப்படை மொழிப்பிரச்சினை. பெல்காம் மராட்டியர்களுக்குச் சொந்தமானதா,கன்னடர்களுக்குச் சொந்தமானதா போன்ற இடப்பிரச்சினைகள் உட்படப் பலவற்றிற்கும் அதுதான் காரணம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து போன்ற ஒரே மொழி பேசப்படுகின்ற நாடுகளில்கூடஅவர்கள் தங்கள் தேவைக்கேற்ப பிரெஞ்சுஜெர்மன்லத்தீன்கிரேக்கம் போன்ற பல மொழிகளைப் பயிலுகிறார்கள். இருபத்திரண்டு மொழிகள் இருக்கின்ற நம் நாட்டில் பிறமொழிகளைப் பற்றிய அறிவு எவ்வளவு இன்றியமையாதது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே இந்தியர் ஒவ்வொருவருக்கும் மூன்று நான்கு மொழியறிவு இருப்பது நன்மையே தரும். அவற்றை முறையாகப் படிப்பதும் நல்லதுதான்.

பலமொழியறிவு வேலைவாய்ப்புக்கு மட்டுமல்லபண்பாட்டு வளர்ச்சிக்கும் பரந்த மனப்பான்மைக்கும் பிறரைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் அவசியம். தன் ஊருக்குள்ளாகவே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவனுக்கும்அதே ஊரில் பிறந்தாலும் பலமொழியறிவு பெற்றவனுக்கும்அந்த ஊரிலிருந்து பலவேறு பிரதேசங்களுக்கும்அயல்நாடுகளுக்கும் சென்று சுற்றிவந்தவனுக்கும் நிச்சயமாகப் பண்பாட்டு நோக்கில் பாரதூரமான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு மொழியறிவு என்பது மொழியை அறிவது மட்டுமல்ல,ஒரு கலாச்சாரத்தையும்பண்பாட்டையும் புரியவைப்பது அது. மற்றொருவித வாழ்க்கை முறையைச் சொல்லித் தருவதுமற்றவன் ஏன் நம்மைவிட வேறுபட்டு இருக்கிறான்வாழ்க்கை நடத்துகிறான்வேறுபட்டுச் சிந்திக்கிறான். அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லித் தருவது.

ஆகவே என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் நான்கு மொழிகளேனும் கற்கவேண்டும் என்று பரிந்துரை செய்வேன். அது அவரவர் தேவைக்கும் தொழிலுக்கும் ஏற்ப அமையலாம். உதாரணமாகதமிழில் பக்தி இலக்கியத்தைச் சொல்லித் தருகின்ற ஒரு பேராசிரியர்தமிழுடன் ஆங்கிலம்சமஸ்கிருதம்இந்தி ஆகிய மூன்றையும் படிப்பது பயனுடையதாக இருக்கும். நவீன சமூகவியல் தத்துவக் கருத்துகளைக் கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தால் பிரெஞ்சுஜெர்மன் படிப்பது பயனுடையது. திருச்சியில் ஜாபர்ஷா தெரு முழுவதும் செயற்கைக் கற்கள் உற்பத்தியும் வியாபாரமும் நடப்பது எனக்குத் தெரியும். அவர்கள் வியாபாரத்துக்கென சூரத்,பம்பாய் என்று அலைபவர்கள். அவர்களுக்கு மராட்டிகுஜராத்தி தெரிந்தால் நல்லது. எதுவுமே இல்லைநான் விவசாயி என்பவன்கூட சமஸ்கிருதத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது நல்லது. மனத்தை விரிவுபடுத்த பலமொழிக்கல்வி ஒரு பயனுள்ள சாதனம்.

ஆனால் இங்கே ஒரு தெளிவைச் சொல்லிவிட வேண்டும். எத்தனை மொழிகள் படித்தாலும்முதலில் தாய்மொழியே முதன்மையானது. தாய்மொழி வழிக்கல்விதான் உண்மையான படைப்பாற்றலையும் கண்டுபிடிப்பறிவையும் ஆக்கசக்தியையும் உருவாக்கக்கூடியது. இது இன்று சரிவர இல்லாததனால்தான் தமிழ்நாட்டில் வெறும் மனப்பாடப் பொம்மைகள் உருவாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து இருநூற்றுக்கு ஆயிரத்துநூற்றுத் தொண்ணூறுக்கு மேல் மதிப்பெண் வாங்கி வெளிவருபவர்களையும் பார்க்கிறோம். ஒரு பதினைந்து இருபதாண்டுகளாகப் படித்து வெளியில்வந்த மாணவர் கணக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி மதிப்பெண் வாங்கியவர்களெல்லாம் வெறும் வயிற்றுப் பிழைப்புப் பொறியியலாளர்களாகவும் மருத்துவர்களாகவும் ஆனதன்றி வேறு என்ன ஆனார்கள்இதுவே போதும்இதற்குமேல் சமூகம் வேண்டாம்,நாடு வேண்டாம்இனம் வேண்டாம்படைப்பாற்றல் வேண்டாம் என்று தமிழ் நாட்டவர் நினைப்பதனால்தான் ஆங்கிலத்துக்கு முதன்மையும்மனப்பாடக் கல்விமுறையும் நடைமுறையாகிவிட்டன.

mozhippirachchanai-4
இன்னொரு தெளிவையும் சொல்லவேண்டும். பல மொழிகள் கற்பது ஆரோக்கியமானது. ஆனால் பிறமொழிகள் ஓர் இனத்தின்மீது ஆதிக்கம் செய்ய விடலாகாது. இந்தியைக் கற்கவேண்டும் என்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒன்றுஅது தமிழைவிட மேம்பட்டது என்ற கருத்து உருவாகக்கூடாதுஅது தேசியமொழி என்று கூறக்கூடாது. இரண்டாவதுதாய்மொழியைத் தவிர வேறு எந்தமொழியைக் கற்பதும் தன்ஆர்வத்தினால் (வாலண்டரியாக) இருக்க வேண்டுமே தவிரக் கட்டாயமாக்கக்கூடாது.

mozhippirachchanai-5
வடமாநிலத்தவர்கள்-குறிப்பாக மையமாநிலத்தவர்கள் எனப்படுவோர் (மத்தியப்பிரதேசம்ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம்பிஹார் போன்றவை இதில் அடங்கும்) இந்தியை மட்டும் படித்தால் போதும்தாங்கள் வேறு எந்த மொழியையும் உள்படப் படிக்கமாட்டோம் என்கிறார்கள். இந்த மனப்பான்மைதான் பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. இந்தியா ஒரே தேசமாம்ஆனால் உ.பி.க்காரன் ஒரே மொழிதான் படிப்பானாம்ஆனால் தமிழ்நாட்டுக்காரன் தாய்மொழியாகத் தமிழ்வேலைக்காக ஆங்கிலம்தேசபாஷை என்பதற்காக இந்தி,வேலைக்காக இன்னும் ஏதாவது ஒரு மொழி என்று படிக்கவேண்டுமாம். ஏன் இந்த வேற்றுமைபாரபட்சம்?தமிழன் இந்தி படித்தால்இந்திக்காரன் நான்கில் ஒரு தென்னாட்டு மொழியாவது படிக்கட்டுமேஆந்திராக்காரன் வங்காளி படித்தால்வங்காளத்தவன் மலையாளமாவது படிக்கட்டுமேஇன்று லக்னோவில் இருப்பவன் இந்தியில்-தன் தாய்மொழியில்-ஐஏஎஸ் எழுதி எளிதில் வெற்றி பெறமுடியும். ஆனால் தமிழன் ஆங்கிலத்திலோ,இந்தியிலோ எழுதியாக வேண்டும். இரண்டுமே அவனுக்குத் தாய்மொழியல்லபிறமொழிகள்.

மும்மொழித்திட்டம் என்பதை நடைமுறைப்படுத்தினால்இந்தியா முழுவதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு சில மாநிலங்களில் ஒரு மொழி படித்தால் போதும்இன்னும் சில மாநிலங்களில் இருமொழி படித்தால் போதும்வேறுசிலவற்றில் மூன்று மொழிகள் படிக்கவேண்டும் என்பது சரியான முறை அன்று. இதற்குக் கல்வி மத்தியஅரசின் பொறுப்பில் இருக்கவேண்டும். மாநில அரசு இதில் தலையிடக்கூடாது. ஒரு மலையாளி மலையாளம்இந்திஆங்கிலம் என மூன்று மொழி படித்தால்ஒரு மத்தியப்பிரதேசக்காரனும் இந்தி,ஆங்கிலம்தென்னாட்டு மொழி ஒன்று என மூன்றுமொழிகள் படிக்கவேண்டும். கண்டிப்பாக வடக்கிலுள்ளவர்களுக்குத் தென்னகத்து மொழி ஒன்று கற்பிக்கப்பட வேண்டும். தெற்கில் இருப்பவர்கள் இந்தியோ,வேறு எந்த வட மாநிலத்து மொழியோ ஒன்று கண்டிப்பாகக் கற்கவேண்டும்.

இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. மூன்று தலைமுறைகளுக்குமேல் ஒரு பகுதியில் தங்கினால் அந்தப் பகுதியின் மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டியதும் அவசியம். மூன்று தலைமுறைகள் என்பது ஏறத்தாழ நூறாண்டுகள். உதாரணமாகமூன்று தலைமுறைக்கு மேல் நிலையாக மைசூரிலோ பெங்களூரிலோ நிலையாகத் தங்கி வீடுவாசலோடு வாழும் தமிழர்கள் கன்னடத்தைத்தான் தாய்மொழியாகக் கொள்ளவேண்டும். பம்பாயில் ஐந்து தலைமுறையாக வாழும் பிஹார்க்காரன்மராட்டியையே தன் தாய்மொழி எனக் கற்கவேண்டும்,குறிப்பிட வேண்டும். இதில் போய்ப்போய் வருபவர்கள் (floating population) பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நிலையான சொத்து-பழைய காலச் சொற்படி ஸ்தாவர ஆஸ்தி என்பதின்றி அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் பணிக்காக அலைபவர்களை இதில் சேர்க்கத் தேவையில்லை. ஒரு தமிழன் அசாமுக்குப் போய் அரசுப்பணி செய்யலாம். அவன் தன் பணிக்காலம் முழுவதையும் அங்கே கழிததுவிட்டுபிறகு தமிழகத்திற்குத் திரும்பிவந்தால் அவனை அசாமிப் பட்டியலில் சேர்க்கமுடியுமாஆனால் அங்கேயே வீடு வாங்கி,பிள்ளைகளுக்கும் அங்கேயே வேலைவாங்கிக்கொடுத்துஅங்கேயே நிலையாகத் தங்கிஅவன் தலைமுறையினர் அங்கு வாழத்தொடங்கினால் அவர்களை அசாமியர்களாகவே கருதவேண்டும்.

இன்றைய மக்கள் கணக்கெடுப்பு முறையில் இந்தக் கணக்கீட்டைச் செய்வது எளியது. இது தேசிய இனப்பிரச்சினைச் சவாலுக்கு ஒரு தீர்வாகவும் அமையும்.


sirippum1

சிரிப்பும் பெயர்ப்பும்

sirippum2

தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. காரணம், ஆங்கிலத்தில் humour, joke என்றெல்லாம் வழங்கப்படும் சொற்களுக்குத் தமிழில் ஏற்றதாக எதுவும் கிடையாது. அவனுக்கு அழுகை வருகிறது, இவனுக்கு அச்சம் தோன்றுகிறது, அவருக்குப் பெருமிதம் அதிகம் என்றெல்லாம் சொல்கிறாற் போல், இவனுக்கு நகை தோன்றுகிறது என்று சொல்லமுடியாது. குறைந்த பட்சம், இன்றைய தமிழில் சொல்லமுடியாது. சொன்னால் எங்கே நகை என்று ஓடுவார்கள். நகைப்பு என்று சொல்லலாமே என்கிறீர்களா? அது நகைக்கும் செயலைக் குறிக்குமே (தொழிற்பெயர்) தவிர, நகைப்பை ஏற்படுத்தும் ஒரு செயலையோ சொற்கூட்டத் தையோ குறிக்காது. இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தமிழ்க்கவிதையைப்பார்த்தால் நகைச்சுவையை மட்டும் அதிகம் காணமுடியவில்லை. காளமேகப் புலவர் ஒருவர்தான் கவனத்திற்கு வருகிறார். அதற்குப்பின் கவிமணி தேசிகவிநாயகம்தான். மொழியியலாளர்களின் கருத்துப்படி ஓர் இனம் எந்த எந்தப் பொருள்களை அல்லது சிந்தனைகளைப் பயன்படுத்துகிறதோ அதற்கு நிறைய சொற்கள் மொழியில் காணப்படும். எது அந்த இனத்தின் பயன்பாட்டில் இல்லையோ அதற்கான சொற்களும் இருக்காது. அந்த அடிப்படையில், தமிழினத்திற்கு நகைச்சுவைத்துறையில் சொற்பஞ்சம். அப்படியானால் மொழியாளர்கள் கருத்துப்படி தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி கிடையாது என்று தானே அர்த்தம்?

மரபில் வந்துவிட்ட சொற்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தமிழில் விதிஇருப்பதால், தக்கசொற்கள் கிடைக்கும் வரை humour என்பதற்கு ஹாஸ்யம் என்றும், joke என்பதற்கு நகை(ச்சுவைத்)துணுக்கு என்றும் வைத்துக்கொள்வோம். நகைச்சுவைத்துணுக்கு என்பதில் இடையில் சுவை என்பது வேறு சுவைக்கேடாகக் குறுக்கிடுகிறது. நகைத்துணுக்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நகை என்றால் தமிழர்களுக்குத் தங்கநகைதான் ஞாபகத்திற்கு வரும். நகைத்துணுக்கு என்றால் யாராவது துண்டாகிப்போன நகை என்றுநினைப்பார்கள். நகைத்துணுக்கு என்பதைவிட சிரிப்புத்துணுக்கு என்பது பொருத்தமாகஇருக்கும் என்று தோன்றுகிறது. நகை என்பது அத்தியாவசியமான சொல்லாக இல்லாமல் ஆபரணம், சிரிப்பு என்ற இரண்டையும் குறிக்கும்போதே மொழியியலாளர் கருத்து சரி என்று படவில்லையா?

ஆங்கிலத்தில் நகைச்சுவை சம்பந்தமான பேச்சு அல்லது எழுத்துச் சொற் கோவையைக் குறிக்கப் பலசொற்கள் இருக்கின்றன. wit என்பது அறிவுத்திறன் வாய்ந்த நகைச்சுவை எழுத்து அல்லது பேச்சு. humour என்பதும் உயர்ந்தவகையில் சிரிப்பினை உண்டாக்க வல்லதே. joke என்பது மட்டமானது. ஹாஸ்யம் என்பது உலகளாவியது, ஜோக் என்பது மாறுவது” என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. Repartee (சாதுரியமான பதில்) என்பது ஒருவருடைய தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினை செய்து மட்டம் தட்டுமாறும் சிரிப்புவருமாறும் பேசுதல். இவற்றிற்குச்சான்றுகள் தரலாம்.

ஒருவர் பிரார்த்தனை செய்கிறார்: “Lead me not into temptation. I can find the way myself”. இது wit எனப்படுவதில் அடங்கும்.

“மகளே, உன் வீட்டுக்காரர் மிகவும் லேட்டாக இரவில் வீட்டுக்கு வருகிறாரே. உங்கம்மா இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையா?”

“சொன்னாங்கப்பா. ஆம்பிளைங்க எந்தக் காலத்திலும் மாறுகிறதே இல்லைன்னாங்க”

இது ஹாஸ்யம் அல்லது humour என்ற வகையைச் சேர்ந்தது.

“அடுத்தவீட்டுக்காரர் அவர் வேலைக்குச் செல்லும் முன்னால் அவருடைய மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டுச் செல்கிறார். நீங்களும் ஏன் அப்படிச் செய்யக் கூடாது?”

“எனக்கு விருப்பந்தான். ஆனால் எனக்கு அந்தம்மா யாரென்றே தெரியாதே”

இது joke அல்லது சிரிப்புத்துணுக்கு என்ற வகை.

Repartee என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்: அறிஞர் அண்ணாதுரையிடம் சட்டசபையில் (அவரை இழிவுபடுத்துவதற்காக) “உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புண்டா?” என்று கேட்டார்கள். அவர் சொன்னார்: “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவர் படி தாண்டாப் பத்தினியும் அல்ல”.

சிரிப்புத்துணுக்குகளை பன்னிரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்று கருதுகிறேன்.

1. குறிப்பிட்ட இனத்தை அல்லது குழுவைப்பற்றிய துணுக்குகள். சர்தார்ஜி ஜோக்குகள் இப்படிப்பட்டவை. கருமிகள், ஊமைகள், அசுத்தமானவர்கள், குருட்டுத்தனமான விசுவாசத்தைக் காட்டுபவர்கள், மொழியைச் சிதைத்துப் பேசுபவர் கள், தந்திரசாலிகள் போன்றவர்களைப் பற்றிய துணுக்குகளையும் இதில் சேர்க்கலாம். இந்திப் படங்களில் தமிழர்களைக் கேலிசெய்ய பட்டையாக விபூதி தரித்த, குடுமி வைத்த ஒருவனைக்காட்டி, அவன் வாக்கியத்திற்கு வாக்கியம் ஐயோ என்று கூறி இந்தியைக் கொச்சையாகப் பேசுவதாகக் காட்டுவார்கள். இது போன்றவை. (“ஐயோ, மை க்யா கரூம்? ஐயோ, முஜே மாலும் ஹீ நஹீந் த்தா யா இஸ் தரஃப் ஹோகா”). இதேபோல தமிழில் வடநாட்டவரை – குறிப்பாகப் பட்டாணியரை அடையாளப் படுத்த, “நம்பள் சொல்றான், நிம்பள் கேக்கிறானில்ல. ஜல்தி பத்தாய்ரம் தர்றான்” என்பதுபோல உரையாடல் அமைப்பார்கள்.

2. அரசியல் துணுக்குகள். அரசியல் சூழல்கள், அரசாங்க நடைமுறைகள், தேசிய குணங்கள், அரசியல் தலைவர்கள், எம்எல்ஏ-எம்.பிக்கள் போன்றவர்களை எள்ளி நகையாடுதல் போன்றவை இப்படிப்பட்டவை. அரசியல் தேசமுழுவதற்கும் பொதுவா னதால் இவை ஜனரஞ்சகமான பிரபலமான சிரிப்புத்துணுக்குகளாக இருக்கின்றன. தமிழ்ப் பத்திரிகைகளில் இவற்றை மிகுதியாகக் காணலாம்.

3. பாலியல் சிரிப்புத்துணுக்குகள்-விபசாரம், ஆபாசம், பாலியல் அறியாமை, பாலியல் திறன்,  கவர்ச்சி, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சிரிப்புத்துணுக்குகள் இவ்விதம். உதாரணத்திற்கு ஒன்று:

முதலிரவுப் படுக்கையில் கணவன் மனைவியிடம்:: “டார்லிங், உன் வாழ்க்கையில் நான்தான் முதல் ஆண்மகன் என்று சொல்வாயா?”

மனைவி (கூர்ந்து பார்க்கிறாள்): “இருக்கலாம்.. உங்கள் முகம் பரிச்சயமாகத்தான் தெரிகிறது”

4. மதசம்பந்தமான சிரிப்புத்துணுக்குகள். சமயசம்பந்தமான விஷயங்கள், மூட நம்பிக்கைகள், சாமியார்கள், கடவுளர்கள் போன்ற விஷயங்களைப் பற்றிய சிரிப்புத்துணுக்குகள்.

5. பொருளாதார நிலை பற்றிய சிரிப்புத்துணுக்குகள். பற்றாக்குறை, ஏழ்மை, பிச்சைக் காரத்தனம் போன்றவை பற்றிய துணுக்குகள் இவ்வகை. ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களின் பொருளாதாரப் பழக்கவழக்கங்களும் இவற்றில் கேலிக்குள்ளாகும். உதாரணத்திற்கு ஒன்று:

துயர்நோக்காளன்: “என் டம்ளரில் பாதி காலியாக இருக்கிறது”.

மகிழ்நோக்காளன்: “என் டம்ளரில் பாதி நிரம்பியிருக்கிறது”.

பன்னாட்டுக்கம்பெனி வேலைக்குறைப்பு ஆலோசகன்: “தேவைக்கு அதிகமாக ஒரு டம்ளர் இருக்கிறது”.

6. முட்டாள்தனம் பற்றிய, அல்லது வயதானதால் ஏற்படும் மறதி போன்றவை பற்றிய சிரிப்புத் துணுக்குகள்.

7. ரிபார்ட்டி எனப்படும் சாதுரியமான பதிலடிகள். (முன்பே உதாரணம் தரப்பட்டது. என்றாலும் இன்னொன்று பார்க்கலாம்):

பெர்னாட்ஷாவிடம் ஒரு நடிகை கூறினாள்: “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்கள் அறிவும், என் அழகும் சேர்ந்த குழந்தைகள் பிறப்பார்கள் இல்லையா?” அவர் சொன்னார்:”அம்மணி, மாறிப் பிறந்துவிட்டால் என்ன செய்வது?”

இதை quickwit என்று சொல்பவர்கள் உண்டு.

8. சமூகத்திற்கு எதிரான குடி, திருட்டு, பயங்கரவாதம் போன்ற குற்றங்கள் பற்றிய சிரிப்புத் துணுக்குகள். இவையும் தமிழ் இதழ்களில் மிகுதியாகவே வருகின்றன.

9. சீருடை நகைச்சுவை பற்றிய சிரிப்புத்துணுக்குகள். போலீஸ், இராணுவம், முதலானவர்கள் முதல், சீருடை அணிந்த ஹோட்டல் சர்வர்கள் வரை இது செல்லும். உதாரணம் ஒன்று:

என்நண்பன் நேவி(கடற்படை)யில் சேர்வதற்காக மருத்துவச்சோதனைக்கு உட்பட வேண்டியிருந்தது. அவன் தோள்பட்டை சரியாக இல்லாததால் முழுதும் உயரமாகக் கையைத்தூக்க இயலவில்லை. “என்ன செய்யலாம்” என்று கீழ்நிலை மருத்துவர் கேட்டார். “ஒன்றும் பாதகமில்லை. பாசாக்கிவிடுங்கள். சரணடையும் போது தவிர அவனுக்கு ஒன்றும் பிரச்சினை ஏற்படாது” என்றார் உயர்மருத்துவர்.

10. வேலைகள் பற்றிய சிரிப்புத்துணுக்குகள். இதில் ஆசிரியர்-மாணவர், கல்விநிறுவனங்கள், மாணவர்களுக்குள்ளான நகைச்சுவை, வக்கீல்கள், மருத்துவர்கள், தொழில்செய்வோர், வணிகர்கள், எழுத்தர்கள், அதிகாரிகள் போன்றோர்பற்றிய நகைத்துணுக்குகள் அடங்கும். சான்று,

என் மகன் எல்கேஜி வகுப்பிலிருந்து மாறி யுகேஜி வகுப்புக்கு வந்தான். வகுப்பு மாறியது ஏன் என்று அவனுக்கு விளங்கவில்லை. அவன் பாஸாகிவிட்டதால் அந்த வகுப்புக்கு மாறியிருப்பதாக நான் விளக்கினேன். “பாவம் மம்மி, அப்ப எங்க மிஸ் ஃபெயிலாயிட்டாங்க” என்றான். “அவங்க அதே கிளாஸ்ல தானே இருக்காங்க”.

11. குடும்பத்துணுக்குகள். தாத்தா, பாட்டி, பெற்றோர், பிள்ளைகள், மாமன், மைத்துனன் போன்ற உறவு முறைகள் பற்றிய சிரிப்புத்துணுக்குகள்.

12. மொழியியல் சார்ந்த துணுக்குகள். சொற்பிழைகள், அச்சுப்பிழைகள், சிலேடைகள், கேலிகள், நையாண்டிகள், உச்சரிப்பு, சொல் அல்லது வாக்கியம் சார்ந்த தவறுகள் யாவும் இவ்வகையில் அடங்கும்.

இவற்றுடன் இப்போது பிரபலமாயிருக்கிற ‘கடி’களையும் ஒருவகையாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒன்று:

“காதைப் பொத்திக்கொண்டிருக்கும் கொரில்லாவை(மனிதக் குரங்கை) என்னவென்று அழைக்கலாம்?”

“எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். நீ என்ன அழைத்தாலும் அதற்குக் கேட்கப் போவதில்லை”.

மொழியியல்சார்ந்த சிரிப்புத்துணுக்குகளை மொழிபெயர்ப்பதுதான் மிகவும் கடினம். பிற எல்லாவகைத்துணுக்குகளையும் ஒருவாறு எளிதாக மொழிபெயர்த்து விடலாம். ஆனால் ஒரேமாதிரி உச்சரிப்புகொண்ட சொற்கள்(homonyms), பல அர்த்தங்கொண்ட சொற்கள்(polysemy), பொருள்மயக்கம், சிலேடை, உருவகம் போன்ற வை அமைந்த சிரிப்புத்துணுக்குகளை எளிதில் மொழிபெயர்க்க முடியாது. உதாரணத் திற்கு ஒன்று-

Boy: Here, honey. Sweets to the sweet.

Girl: Oh, thank you. Won’t you have some of these nuts?

இங்கு nuts என்றசொல்லில் அமைந்திருக்கும் சிலேடையை மொழிபெயர்க்கமுடியாது. நட்ஸ் என்ற சொல்லுக்கு கடலை, பட்டாணி போன்ற முழுப்பருப்புகள் என்ற அர்த்தம் மட்டுமல்ல, பைத்தியம் என்ற பொருளும் உண்டு. மொழிபெயர்ப்பில் இந்த அர்த்தத்தைக் கொண்டுவர முடியாததால் அது தோல்வியடைகிறது.

மொழிபெயர்க்கும்போது மூல(இங்கு ஆங்கில)ப் பிரதியில் உண்டான அதே விளைவு உண்டாக வேண்டுமானால் இரட்டை அர்த்தம், கேலி, நையாண்டி, ஒரேவடிவம் கொண்ட சொல், பலபொருள் கொண்ட சொல், உருவகப்பாங்கான சொல் போன்றவற்றை எழுத்துமாற்றம்தான் (transliteration) செய்யவேண்டும். அதாவது அந்த ஆங்கில வார்த்தையைத் தமிழில் அப்படியே எழுதிவிட வேண்டும். உதார ணமாக, பின்வரும் துணுக்கினைப் பாருங்கள்,

பில்கேட்ஸ் இறந்து சொர்க்கத்திற்குப்போகிறார். அவருக்குச் சிறிய வீடொன்று மட்டும்தான் அளிக்கப்படுகிறது. காலை வாக்கிங் போகும்போது அழகான சூட் அணிந்த ஒருவனைச் சந்திக்கிறார். அந்த சூட் அவரை மிகவும் கவர்கிறது. எங்கே கிடைத்தது என்று விசாரிக்கிறார். அவன் சொர்க்கத்தில் தனக்கு அந்தமாதிரி சூட்டுகள் ஐம்பது, இரண்டு மாளிகைகள், படகுகள், கார் போன்றவசதிகள் கிடைத்திருப்பதாகக் கூறுகிறான். இவையெல்லாம் கிடைக்க, அப்படி நீ என்ன செய்தாய் என்றுஅவனை விசாரிக்கிறார். அவன் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக இருந்ததாகக் கூறுகிறான். உடனே எரிச்சலோடு செயிண்ட் பீட்டரை (சொர்க்கத்தின் வாயிற்காவலர்)ப் பார்க்க ஓடுகிறார் பில்கேட்ஸ்.

“இதென்ன அநியாயம்? டைட்டானிக் கப்பல் தலைவனுக்கு இவ்வளவு வசதி, விண்டோஸ் கண்டுபிடித்த எனக்கு ஒரு சிறிய இடம்தானா?”

“நாங்களும் விண்டோஸைப் பயன்படுத்துகிறோம்” என்கிறார் பீட்டர். “டைட்டானிக் ஒரு முறைதானே கிராஷ் ஆகியது?”

இதில் எத்தனை சொற்கள் அப்படியே எழுத்துப் பெயர்ப்புசெய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கவும். குறிப்பாக punch line ஆகிய கிராஷ் என்பது மிக முக்கிய மானது. இதற்குப் பதிலாக உடைதல், நொறுங்குதல், போன்ற தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால் இதன் நகைச்சுவை போய்விடும்.

சிலேடையும் மேற்கூறியது போலத்தான். உதாரணமாக,

Why did the Pope cross the road?

Why, he crosses everything…

இங்கு கிராஸ் எனப்படும் சொல்லின் சிலேடைதான் முக்கியம். he crosses everything என்பது முக்கியவரி(punch line).

மிக அதிகமாகக் கலாச்சாரத்தன்மை கொண்ட துணுக்குகளையும் மொழி பெயர்க்க ஆவதில்லை. உதாரணமாகக் கீழ்வரும் ஆங்கிலத் துணுக்கைப் பாருங்கள்:

As I was hugging my teenage son goodnight, he said, “you are my favourite mum in the whole world”. “I am your only mum, silly” I replied smiling. “OK” he said matter-of-factly. “You are my most favourite woman”.

“What’ll happen when you get a girlfriend?” I teased.

“Then there’ll be a tie”, he decided.

இத்துணுக்கில் வரும் சொற்கள், பழக்கவழக்கங்கள் யாவும் ஆங்கிலக் கலாச்சாரத்திற்கே உகப்பானவையாக இருப்பதால், இதனை அவ்வளவு எளிதில் தமிழில் மொழி பெயர்த்துவிடமுடியாது. பெயர்த்தால் ஒருவித அருவருப்புதான் ஏற்படும். சான்றாக, அதன் மொழிபெயர்ப்பைத்தான் பாருங்களேன்.

குட்நைட் சொல்வதற்காக என் டீனேஜ் மகனைத் தழுவியபோது அவன் சொன்னான்: “இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்தமான அம்மா நீ ஒருத்திதான்”. “உன் ஒரே அம்மா நான்தான்” சிரித்துக்கொண்டே திருத்தினேன். “சரிதான்” என்று யதார்த்தமாகச் சொன்னவன், பிறகு

“நீதான் எனக்கு மிகவும் பிடித்தமான பெண்” என்றான்.

“உனக்கு ஒரு கேர்ல்-பிரண்ட் கிடைத்தால் என்ன சொல்வாய்?” என்று விளையாட்டாகக் கேட்டேன். “அப்படியானால் ஒரு டை (tie – சம எண்கள் பெற்ற இரு விளையாட்டுக் குழுக்களிடையே ஏற்படும் போட்டி) ஏற்படும்” என்று முடித்தான்.

சில சமயங்களில் பழமொழிகள்கூட சிரிப்பூட்டுவதாக அமையலாம். இது ஆங்கில வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சீனப் பழமொழி. “விளக்குச் செலவைக் குறைக்க சீக்கிரம் படுத்தால், இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாம்”.

மேற்கண்ட துணுக்குகள் எல்லாமே ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகளிலிருந்து (ஆங்கிலத்திலிருந்து) தமிழுக்குப் பெயர்க்கப்பட்டவை. இம்மாதிரி நிறைய ஜோக்குகளை மொழிபெயர்த்த அனுபவத்திலிருந்து வெளிப்படும் சில கருத்துகளைத் தொகுத்துப்பார்க்கலாம்.

1. எல்லாவகையான சிரிப்புத்துணுக்குகளையும் மொழிபெயர்க்க இயலும். ஆனால் சிலவகைத் துணுக்குகளை மொழிபெயர்க்கும்போதுதான் மூலமொழியில் உண்டானது போன்ற  நகைச்சுவை விளைவு ஏற்படுகிறது.

2. இவ்வகை மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது மொழிபெயர்ப்பாளர்கள் சுதந்திரமான மொழிபெயர்ப்பு முறையையோ, அல்லது மிக விசுவாசமான சொல்லுக் குச் சொல் முறையையோ கையாளுவதில்லை. இயங்கியல் நிகர்மை (dynamic equivalence) காணும் முறையே கையாளப்படுகிறது.

3. ஒரே ஜோக்கை வெவ்வேறு ஆட்கள் மொழிபெயர்க்கும்போது அவை வெவ்வேறு வகையாக, இருவேறு வடிவங்களாக மாறிவிடுகின்றன.

4. துணுக்குகளை மொழிபெயர்க்கும்போது பஞ்ச்லைன் எனப்படும் நகைச்சுவை விளைவை உண்டாக்கக்கூடிய வாக்கியம்தான் முக்கியம். அதனை வெற்றிகரமாக மொழிபெயர்ப்பதில் தான் ஜோக்கின் வெற்றி அடங்கியிருக்கிறது. அப்படி பஞ்ச் லைனை மொழிபெயர்க்கும்போது, மூலமொழியில் என்ன விளைவு ஏற்பட்டதோ அதேபோன்ற விளைவு இலக்குமொழியிலும் ஏற்படுமாறு பெயர்க்கவேண்டும்.

5. பிரச்சினைக்குரிய சிரிப்புத்துணுக்குகள் எனப்படுபவை, மொழியியல் ரீதியான சிரிப்புத் துணுக்குகள்தான். இவற்றை மொழிபெயர்க்கும்போது பலவகை உத்திகள் தேவைப்படுகின்றன. அப்படியும் சரியான விளைவு ஏற்படும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் விரிவாக மொழிபெயர்ப்பதும் பயன்தரும்.

6. உருவகங்கள், மரபுத்தொடர்கள்போன்றவை துணுக்கில் இருந்தால் அவற்றின் பொருளைத்தான் மொழிபெயர்க்கவேண்டும்.

7. எந்த வகை இரசிகர்களுக்குரியது, எந்தச் சூழலுக்குரியது என்பது துணுக்கின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போதே விளங்கவேண்டும். அந்தமுறையில் மொழி பெயர்ப்பு அமைய வேண்டும்.

sirippum1

8. சிரிப்புத்துணுக்குகளின் மொழிபெயர்ப்புகளை நாம்எளிதில் மதிப்பிடலாம். அப்படி மதிப்பிடும்போது பொதுவாக மூலமொழியில் அதன் விளைவை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடவேண்டும். அப்படித்தான் மதிப்பிடுகிறார்கள். வேறுவகையில் சொன்னால், எந்த அளவு நகைச்சுவை உண்டாக்கும் திறன் மூலமொழித்துணுக்கிற்கு இருக்கிறதோ அந்தத் தன்மையே இலக்குமொழியிலும் அளவுகோலாகச் செயல்படு கிறது. ஏனெனில் துணுக்குகள் பெயர்ப்புகளாக இருந்தாலும் மூலமொழியில் படிப்பதைப் போன்ற விளைவுக்காகவே வாசிக்கப்படுகின்றன. ஆகவே துணுக்குகளின் மொழிபெயர்ப்பு, அவைசரியான விளைவைஅல்லது நகைச்சுவையை உண்டாக்குவத னால்தான் நியாயம்செய்யப்படும். பிற மொழிபெயர்ப்புகள் பொதுவாக மூலமொழிக் குள்ள விசுவாசத்தை வைத்து மதிப்பிடப்படும். ஆனால் சிரிப்புத் துணுக்குகளை மதிப்பிடுவது அப்படி அல்ல.

நகைச்சுவைத் துணுக்குகளையும் ஒருவித நாட்டுப்புற இலக்கிய வகையாக மதிக்கவேண்டும். தன்னிச்சையாக, முன்னேற்பாடின்றி, இலகுவாகத் தோன்றுகின்ற தன்மை அவற்றிற்கு இருக்கிறது. ஏற்பாட்டோடு செய்யப்படும் இலக்கிய வகை அல்ல இது. ஏற்பாட்டோடு எழுதும்போது சுவை காணாமற்போய்விடுகிறது. அயல்நாட்டு அல்லது அயல் கலாச்சாரத்தைச் சேர்ந்த துணுக்குகளை மொழிபெயர்ப்பது, அவர்களைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள- குறிப்பாக அவர்கள் வைத்திருக்கும் நல்ல/மோசமான பழக்கவழக்கங்கள், சமூக விலக்கங்கள்(taboos) போன்றவற்றையெல்லாம் எளிதில் அறிந்துகொள்ள உதவுகின்றது. குறிப்பாக, மொழிரீதியான துணுக்குகளை மொழிபெயர்ப்பது இருமொழிகளிலும் ஆற்றல்பெற உகந்த நல்ல பயிற்சி. பலசமயங்களில் அயல் கலாச்சாரத்தினரின் பேச்சுமொழியை விரைவில் அறிந்துகொள்ளவும் நல்ல பயிற்சியாகும்.