இயல் 24இல் ஒரு பகுதி

‘இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு’ என்ற நூலின் இயல் 24இல் ஒரு பகுதி:
[ஒருநாள், பள்ளத்தெருவில் அமர்ந்தவாறு, வயதான பள்ளர்கள் குழுவிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். சாவு, கடமை, விதி, மறுபிறப்பு ஆகியவற்றைப் பற்றிச் சென்றது பேச்சு. என் அரைகுறைத் தமிழில், அவர்களிடம், "மரணத்திற்குப் பிறகு ஆன்மா எங்கு செல்கிறது" என்று கேட்டேன்...அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். சிரிப்பு, என் பேச்சினாலா, கேள்வியினாலா தெரியவில்லை. கண்ணைத் துடைத்துக் கொண்டு, ஒரு கிழவர் சொன்னார், "அம்மா, எங்களுக்குத் தெரியாது! ஒருவேளை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அங்கே போயிருக்கிறீர்களா?" "இல்லை, ஆனால், இந்த வாழ்க்கையில் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்தவர்கள் அடுத்த பிறவியில் உயர்ந்த சாதியில் பிறப்பார்கள் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்கள்" என்றேன். "பார்ப்ப னர்கள் சொன்னார்களா?" என்று கேலிசெய்தார் இன்னொரு கிழவர். "அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். அவர்கள் தலை சுற்றிக்கொண்டுதான் இருக்கும்." -கேத்லீன் கவ், 1960இல் எழுதியது.]

[பள்ளர்கள் ஆதிதிராவிடரின் ஒரு பிரிவினர். பிற இடங்களில் தலித்துகள் என்று வழங்கப்பட்டவர்களைக் குறிக்கும் தென்இந்தியச் சொல் ஆதி திராவிடர்-வெண்டி டோனிகர்]. குறிப்பு: பள்ளர்களை ஆதிதிராவிடர் என்பது சரியா என்பது கேள்விக்குரியது, இது வெண்டி டோனிகர் சொல்வது. இது முக்கியமில்லை. இந்த உரையாடலில் வெளிப்படுகிறதே, மறுபிறப்பு பற்றிய மாற்றுப் பார்வை-அதுதான் முக்கியமானது. இந்துக்கள் என்போர் ஒரேசீர்த்தன்மை உடைய ஒரு குழு போன்ற பார்வை இப்போதெல்லாம் முன்வைக்கப்படுகிறதே, அதற்குச் சொல்கிறேன்.


பதினெண்கீழ்க்கணக்கு

திருக்குறள் நாலடியார் உட்படப் பதினெட்டு திருக்குறள் நாலடியார் உட்படப் பதினெட்டு நூல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயரில் தொகுத்துவைத்திருக்கிறார்கள், இலக்கிய வரலாற்றில் சேர்த்திருக் கிறார்கள். அவற்றைப் பற்றிப் பெருமையாகவும் எழுதிவருகிறார்கள். இவற்றில் அற நூல்கள் பதினொன்று. திருக்குறள் நாலடியாரைக் கழித்துவிட்டால் ஒன்பது. இந்த ஒன்பது நூல்களிலும் அறக்கருத்துகளைக் கூறுவதில்கூட ஓர் ஒழுங்கோ, முறைப்படுத்தலோ, இலக்கியத்துககுரிய வெளியீட்டுத் தன்மையோ கிடையாது. இன்றைய கற்றுக்குட்டி இளைஞர்கள்கூட இவற்றிலுள்ள அறக்கருத்துகளையே மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தி எழுதுவார்கள், இலக்கியப்பண்போடு சொல்லுவார்கள். சங்க இலக்கியங்களும் திருக்குறளும் இலக்கியம் எனப் பாராட்டப்பட்ட நாட்டில் இவற்றை எப்படி இலக்கியம் எனக் கருதினார்கள் என்பது மிகவும் ஐயத்துக்குரியது. இதைவிட வேடிக்கை, இப்படிப்பட்ட புலவர்கள் (இவர்களை இப்படிச் சொல்வது அநியாயம்) எல்லாம் சேர்ந்துதான் திருக்குறளை இலக்கியமா என்று கேட்டிருக்கிறார்கள், அரங்கேற்ற விடாமல் தடுத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் காணும்போது உண்மையிலேயே சங்ககாலத்துக்குப் பிந்திய காலம் (களப்பிரர் காலம்) இருண்டகாலமோ என்றுதான் நினைககத் தோன்றுகிறது. இவற்றை எல்லாம் இலக்கியம் என்றால், இவற்றை எழுதியவர்களைவிட ஆயிரம் மடங்கு மேம்பட்ட அகிலனையோ, பார்த்தசாரதியையோ, அவர்கள் தரத்தில் இன்று எழுதும் பிறரையோ இகழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேட்கவும் தோன்றுகிறது.
முதலில் தமிழ்இலக்கியம் முழுவதையும் மறுபார்வைக்குள்ளாக்கி எது குப்பை, எது நல்ல பொருள் என்று நோக்கி மறுதொகுப்புச் செய்ய வேண்டும். சும்மா சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பது கேவலம்.


திரும்ப உயிர்பெறும் மால்தூஸ்

அண்மையில் வெளிவந்த செய்தி ஒன்று, இன்னும் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளில் நாம் மக்கள்தொகையில் சீனாவை மிஞ்சிவிடுவோம் என்று சொல்கிறது. இப்போதே சீனாவைவிட நம் நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி அதிகம். பூச்சிய அதிகரிப்பு நிலைக்கு மக்கள்தொகையைக் கொண்டுவரவேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு மிக உடனடியாக இருக்கிறது. எப்படிச் செய்வார்கள் எனத் தெரியவில்லை.
மக்களுக்கான உணவு கிடைப்பது (‘சப்ளை’) கூட்டல் விகிதத்தில் அதிகரிக்கிறது, மக்கள் தொகைப் பெருக்கம் பெருக்கல் விகிதத்தில் அதிகரிக்கிறது என்பது ஏறத்தாழ இருநூறாண்டுகளுக்கு முன்பு மால்தூஸ் (1766-1834) என்ற பொருளதாரவாதி “மக்கள் தொகை மீதான ஒரு கட்டுரை” என்ற தம் நூலில் (1798) கூறிய கருத்து. இதற்கு எத்தனையோ விதமான தர்க்கரீதியான எதிர்க்கருத்துகள் முன் வைக்கப்பட்டன. இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை மால்தூஸுக்கே வெற்றி. முக்கியமாக, குழந்தை பிறக்கும்போது ஒரு வயிறுடன் மட்டுமல்ல, உழைப்பதற்கான இரண்டு கைகளுடனே பிறக்கிறது என்று ஒரு வாதம். ஆனால் இந்தியா மாதிரி மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டில் வேலைக்குக் கிடைப்போர் எப்போதுமே மிகையாக (சர்ப்ளஸ்) ஆக இருப்பதால், வேலையைவிட்டு எந்த நிலையிலும் அனுப்புவதற்கோ, குறைந்த கூலி தருவதற்கோ முதலாளிகள் தயங்குவதே இல்லை. அதுவும் இப்போது எல்லாம் தனியார் மயம். தனிமுதலாளிகளுக்கு எவ்வித விதிகளும் ஒழுக்கமும் ஒழுங்கும் கிடையாது. கட்டுப்படுத்தும் அரசின் திறன் பூச்சியம்.
என்ன செய்யலாம் நாம்?


அதிகாரிகள், அலுவலகங்கள்

இந்தியாவின் அதிகாரிகள், அலுவலகங்கள்
திரு. குன்னர் மிர்தால், 1968இல் ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பரந்த வீச்சுள்ள ஒரு நூலை எழுதினார். அதில் நம் நாட்டில் அலுவலகங்களில் காரியங்கள் எப்படி நடக்கின்றன என்பதை விவரிக்கிறார்.
“பலநேரங்களில் காரியங்கள், அவை வரிசை முறையில் உடனே செய்யப்பட வேண்டியவையாக இருப்பதனால் செய்யப்படுவதில்லை, அவை மிகக் கடுமையாகி விடுகின்றன என்பதனால்தான் செய்யப்படுகின்றன. முடிவுகள் காலதாமதமாக நடந்தாலும், இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்ற நிலையில்தான் காரியங்கள் நடக்கின்றன. இம்மாதிரியான “பிரச்சினை நேர்ந்தால்தான் நிர்வாகம்” என்ற நிலை, ஓர் ஆரோக்கியமற்ற சமூகத்தின் வெளிப்படையான அறிகுறியாகும்.
சமூக அல்லது பொதுமக்கள் தளத்திலும் செய்திகள் நன்றாக இல்லை. “பணியில் ஒழுங்கின்மை, மிகக் கீழான நிலைமை, காலதாமதம், ஒழுங்கின்மை; மூடநம்பிக்கை, பகுத்தறிவற்ற பார்வை; மாற்றம் சோதனை ஆகியவற்றை மேற்கொள்வதில் விழிப்புணர்வோ, தகஅமைதலோ, ஆர்வமோ சற்றும் இன்மை, உடலுழைப்பில் வெறுப்பு, அதிகாரத்துக்கும் பணத்துக்கும் கீழ்ப்படிதல் மற்றும் சுரண்டல்…”
1968இல் இருப்பதாக மிர்தால் வருணிக்கின்ற இந்த நிலை, இன்று நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியிருக்கிறது? சிந்தியுங்கள்.


பூனையும் புலியும்

அடைத்துவைக்கப்பட்ட பூனையும் ஒரு புலியாக மாறிவிடும் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. எப்போதுமே ஆட்சியாளர்கள் கவனத்தில் வைக்கவேண்டிய பொன்மொழி இது. பாவம், அவர்கள்தான் பூனைகளைப் புலி களாக்குகிறார்கள், பிறகு வருத்தப்படுகிறார்கள்.


நாலடியார்

நாலடியார் என்னும் நீதிநூலைச் சமண முனிவர் பலர் இயற்றினர் போலும்.
அவற்றில் கிடைத்த பாடல்கள் நானூற்றைப் பதுமனார் என்பவர் தொகுத்து வைத்தாராம்.
இதன் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள்.
திருக்குறளோடு ஒப்பிட இயலாத நூலாக இருப்பினும், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற பிரிவு இதில் இருக்குமாறு தொகுக்கவே பலசமயங்களில் குறளோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 401 பாட்டுகளைக் கொண்டுள்ளது. குறள்போலன்றி, கடவுள் என்ற சொல்லையே இது ஆள்கிறது.
“நான் எண்ணிய காரியம் முடிவதற்குக் கடவுளைத் தொழுகிறேன்” என்கிறார் இயற்றியவர். இவை யாவுமே குறள் மரபுக்கு மாறானவை. மேலும், திருக்குறள் பொருட்பால் என்பதில் செல்வத்தைப் போற்றுகிறதே ஒழிய இழித்துக்கூறவில்லை. நாலடியாரோ செல்வம் நிலையாதது என்பதில்தான் (முதல் அதிகாரம்-செல்வ நிலையாமை) தொடங்குகிறது. சமண முனிவர்கள் இயற்றியதாலோ என்னவோ நிலையாமைதான் நாலடியாரின் மையக்கரு. (செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை…).
ஆனால் இலக்கியச் சிறப்பு-அதாவது கருத்துணர்த்தல் சிறப்பு இந்நூலில் நன்கு அமைந்துள்ளது. சான்றாகக் கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே, நிலம் என்பதை அளக்கும் மையமாக வைக்கிறார் ஆசிரியர். கடவுள் கால்கள் நிலத்தில் தோயா இயல்பு கொண்டவன். ஆகவே நாங்கள் எங்கள் தலையை நிலத்தில் படியவைத்து அவனைப் போற்றுகிறோம் என்ற முரண் சிறப்பாக உள்ளது.
மேலும் நோக்குவோம்.


கலப்பு

தமிழில் மாதப் பெயர்கள் பாதி சமஸ்கிருத அல்லது பிராகிருதத் திரிபுகளாகவும் பாதி தமிழ்ப்பெயர்களாகவும் உள்ளன. சைத்ர, வைசாக என்று தொடங்கி பால்குன வரை செல்வன வடநாட்டு மாதப் பெயர்கள். சித்திரை, வைகாசி எனத் தொடங்கி பங்குனி வரை தமிழ்மாதப் பெயர்கள் செல்கின்றன. சித்திரை என்பது சைத்ர என்பதன் திரிபு, வைசாக என்பது வைகாசி ஆயிற்று, பால்குன என்பது பங்குனி ஆயிற்று, ஆஷாட என்பது ஆடி ஆயிற்று என்பவற்றை ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் ஆனி, தை, மாசி போன்ற பெயர்கள் தூயதமிழ்ப் பெயர்களாக உள்ளன. மேலும் வடமொழியிலிருந்து ஏற்கப்பட்ட பெயர்களும் நன்கு தமிழ்வடிவப் படுத்தப்பட்டுள்ளன. பூர்வபாத்ரபத என்பது புரட்டாசி என அழகான தமிழ் வடிவம் கொண்டிருக்கிறது. ஸ்ராவண என்பது ஆவணி என அழகான தமிழ்ப் பெயராகக் காட்சியளிக்கிறது.மிருகசீரிஷ என்ற பெயர் மிக அழகாக மார்கழி ஆகியிருக்கிறது.
எவ்விதம் ஒருமொழி பிற மொழிகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துவைத்திருந்தனர். இப்போதோ தலைகீழாக நடக்கிறது. எவ்வித மரபுமின்றி மனம்போன போக்கில் மொழியைக் கையாளுகிறார்கள். ஈச்வர என்ற வடசொல் அழகாக ஈசுவரன் என்றே தமிழில் எழுதப்பட்டு, சொல்லப்பட்டு வந்தபோதிலும் இன்று வேண்டுமென்றே தமிழ் மரபுக்கு மாறாக ஈஷ்வர் என்று எழுதுகின்ற, பேசுகின்ற திமிரைக் காண்கிறோம்.


குடியைக் கெடுக்கும்

குடி தீயதென்று முன்பே ஒருமுறை சுட்டிக்காட்டினோம். இப்போது அதற்காக ஒருவர் தியாகி ஆகவேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது. அரசாங்கமே தீய செயல்களுக்கு ஆதரவாக இருப்பதும், அதை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும் மிக மோசமான நடவடிக்கைகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காவல் துறையும் இவ்விஷயத்தில் எந்திரத்தனமாக நடந்துகொண்டிருக்கிறது. குடியை எதிர்ப்பவர்களைத் துன்புறுத்துவது அதன் பணி என்றால், ஆதரிப்பது தான் அதன் வேலை என்று ஆகிறதல்லவா? அதனால் எந்திரத்தனமாக நடக்காமல் நன்மை தீமைகளைச் சீர்து£க்கிப் பார்த்து நடந்தால் நல்லது. நல்லனவற்றை வலியுறுத்தும் ஒவ்வொரு செயலுக்கும் ஒருவர் உயிரைத் தரவேண்டுமா?