இதற்குப் போய் துப்பறிவதா?

ஒருமுறை லண்டனின் புகழ்பெற்ற துப்பறிபவர் ஷெர்லக் ஹோம்ஸும் அவருடைய பிரசித்தமான நண்பர் வாட்சனும் வெளியூர் சென்றனர். அங்கு அவர்கள் கூடாரம் அமைத்துத் தங்கவேண்டியிருந்தது. களைத்துப் போயிருந்த அவர்கள் கூடாரத்தில் நன்றாகத் தூங்கிவிட்டனர். விடியல் ஏறத்தாழ மூன்று மணி இருக்கும். ஹோம்ஸுக்கு விழிப்பு வந்தது. வாட்சனை எழுப்பினார். “மேலே என்ன தெரிகிறது பார்?” என்றார். வாட்சனும் நன்றாகப் பார்த்தார்.

“வானம் தெரிகிறது. கோடிகோடி நட்சத்திரங்கள் தெரிகின்றன.”

“சரி, அதிலிருந்து என்ன தெரிகிறது?”

“நிறைய கேலக்ஸிகள், ஒருவேளை அவற்றில் கிரகங்கள்கூட இருக்கலாம்.”

“சரி, வேறென்ன தெரிகிறது?”

“வானியல்படி, ரிஷபத்தில் சனி இருக்கிறது.”

“அப்புறம்?”

“நட்சத்திர நிலைப்படி பார்த்தால், நேரம் மூன்றேகால் இருக்கும்.”

“அப்புறம்?”

“கடவுள் மிகவும் சக்திவாய்ந்தவர், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறார்.”

“அப்புறம்?”

“நாளைக்கு, நாள் நல்ல வெயிலாக இருக்கும் என்று தெரிகிறது. சரி, திருப்பித் திருப்பி இவ்வளவு கேட்கிறாயே ஹோம்ஸ், உனக்கு என்ன தெரிகிறது?”

“அட முட்டாள் வாட்சன், நம் கூடாரத்தை எவனோ திருடிக்கொண்டு போய் விட்டான் என்று தெரிகிறது.”


தீபாவளி

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒளி-இருள் என்னும் இருமை எதிர்வு இருக்கவே செய்கிறது, நம் மனங்களில் ஆழமாகப் பதிந்தும் போயிருக்கிறது. பொதுவாக ஒளியிரவு நாட்களை-பவுர்ணமி நாட்களைக் கொண்டாடுவது தமிழர் இயல்பு. தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா (இளவேனில் விழா)  எனத் தமிழர் திருநாட்கள் எல்லாம் பவுர்ணமி நாட்களிலேயே வருவதைக் காணலாம். அமாவாசை அல்லது இருளிரவு நாட்களை-ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தீபாவளி எனக் கொண்டாடும் மரபு எப்போதிருந்து நுழைந்தது என்பது தெரியவில்லை.

தீபாவளி என்றால் தீபவரிசை. வடநாட்டில் தீப வரிசை வைத்துத்தான் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நமக்கு உண்மையான தீபாவளி, கார்த்திகைத் திருநாள்தான்! (அதுவும் பவுர்ணமி அன்றே வருவதைக் காணலாம்). சங்க இலக்கியத்திலேயே கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்பட்ட குறிப்பு இருக்கிறது. அன்றுதான் நாம் வீடுமுழுவதும் தீபம் ஏற்றிக் கொண்டாடுகிறோம். தீபாவளி அன்று நாம் பட்டாசுகள்தான் வெடிக்கிறோம். தீபாவளி என்றால் நினைவுக்கு வருவன மூன்று-பட்டாசு, புத்தாடை, பட்சணம்.

பழங்கதை ஒன்றின்படி, யாரோ ஒரு அரக்கன் (நரகாசுரன்) இறந்ததற்காக நாம் எல்லாரும் (திவசத்திற்குப் போல) எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம் என்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே தீபாவளிச் சமயத்தில் பட்டாசுகள் தயாரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் (இவர்கள் முறையான தொழிலாளிகள் அல்ல, முறைசாராத, எவ்விதப் பணிப் பாதுகாப்புமற்ற தொழிலாளர்கள்) இறக்கிறார்கள். அவர்களை நினைத்து எண்ணெய் வைத்து நாம் நீராடுவோம். பட்டாசுகளை வெடிக்கும் போதெல்லாம் அவற்றின் பின்னணியில் தங்கள் உயிரைக் கொடுத்த, கொடுக்கின்ற ஆயிரணக்கணக்கான மக்களை நினைத்துக் கொள்வோம். (வேறென்ன செய்வது? இந்தப் பழக்கத்தை விடுங்கள் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்? தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் போவதற்குப் பட்டாசுகள் சிவகாசியில்தான் தயாராகின்றன. சீனாவிலும் வாணவேடிக்கைகள், பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. சீனப்பட்டாசுகளும் வெடிகளும் பழங்காலத்திலிருந்தே பெயர்போனவை. ஆனால் அங்கு இந்தத் தொழிலை முறைப்படுத்தி, பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைத் திறம்படச் செய்திருக்கிறார்கள்.)


கலக்கல்!

If you change the sequence of letters in some English words, they give rather funny (but true) expressions. For example, See these:

DILIP VENGSARKAR
When you rearrange the letters:
SPARKLING DRIVE

PRINCESS DIANA
When you rearrange the letters:
END IS A CAR SPIN

MONICA LEWINSKY
When you rearrange the letters:
NICE SILKY WOMAN

DORMITORY:
When you rearrange the letters:
DIRTY ROOM

PRESBYTERIAN:
When you rearrange the letters:
BEST IN PRAYER

ASTRONOMER:
When you rearrange the letters:
MOON STARER

DESPERATION: When you rearrange the letters:
A ROPE ENDS IT

THE EYES:
When you rearrange the letters:
THEY SEE

GEORGE BUSH:
When you rearrange the letters:
HE BUGS GORE

THE MORSE CODE :
When you rearrange the letters:
HERE COME DOTS

SLOT MACHINES:
When you rearrange the letters:
CASH LOST IN ME

ANIMOSITY:
When you rearrange the letters:
IS NO AMITY

ELECTION RESULTS:
When you rearrange the letters:
LIES – LETS RECOUNT

SNOOZE ALARMS:
When you rearrange the letters:
ALAS! NO MORE Z S

A DECIMAL POINT:
When you rearrange the letters:
IM A DOT IN PLACE

THE EARTHQUAKES
When you rearrange the letters:
THAT QUEER SHAKE

ELEVEN PLUS TWO:
When you rearrange the letters:
TWELVE PLUS ONE

AND FOR THE GRAND FINALE:

MOTHER-IN-LAW:
When you rearrange the letters:
WOMAN HITLER


மது அருந்துதல் பற்றி

அர்த்தசாஸ்திரம், கௌடில்யரால் எழுதப்பட்டது. ஆனாலும் இன்றுள்ள வடிவத்தை அது சில நுற்றாண்டுகள் பின்னால் எய்தியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்று வைத்துக்கொள்ளலாம். மது அருந்துதல் பற்றி அது சில விஷயங்களைச் சொல்கிறது. எளிதில் இன்று புலப்படாத மதுவகைகள் சிலவற்றைத் தயாரிப்பது பற்றிய சுருக்கமான தயாரிப்பு முறைகளையும் தருகிறது.

அக்காலத்தில் மதுபான வகைகள் பல இருந்தன. அவற்றுள் சில  வருமாறு: மேதகம் – நெல்லால் வடித்த மது; பிரசன்னா – மாவால் சமைத்து வாசனைச் சரக்கிட்டுச் சுவையூட்டப்பட்ட ஒருவகைக் கள்; (பிரசன்னா என்று பெயர் வைப்போர் கவனிக்கவும்!) ஆசவம் – இது விளாம்பழச் சாற்றில் செய்த மது; மைரேயம் – இது சர்க்கரை, ஆடு தின்னாப்பாளை (மேஷஸ்ருங்கம்)ச் செடியின் பட்டை, மிளகு ஆகியவற்றைக் கொண்டு வடித்த ஒரு பானம்; சஹகார சுரா – மாம்பழ மது.

மதுபானம் அரசாங்க உற்பத்திசாலைகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவற்றின் உற்பத்தியை ஒழுங்குற நடத்துவதற்கும் குடி வகைகளின் விற்பனையையும் நுகர்வையும் கட்டுப்படுத்துவதற்கும் மதுபான மேற்பார்வையாளர் என்னும் அதிகாரி நியமிக்கப்படவேண்டும்.

தனிப்பட்டோரின் தயாரிப்பு நிலையங்களையும் மதுக்கடைகளையும் மிகவும் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். மதுக்கடைகள் வைத்திருப்போர் தங்கள் நிறுவனங்களைப் போதிய இருக்கைகள் போன்றவற்றுடன் வசதியாக வைத்திருக்க வேண்டும். அவர்கள், மது அருந்த வருவோர் அளவு கடந்து குடிப்பதைத் தடுக்கவேண்டும். மது அருந்துவோர் வெறி மயக்கத்தில் ஏதேனும் நஷ்டத்துக்கு ஆளானால், கடைக்காரர்கள் அவர்களுக்கு நஷ்ட ஈடு தருவதோடு மட்டுமன்றி, அபராதமும் கட்ட வேண்டும்.

மதுக்கடைகள் வைத்திருப்போர் தங்கள் கடைகளை ஒன்றுக்கொன்று அண்மையில் கட்டவிடலாகாது. இதனால் மக்கள் ‘மதுக்கடைகளில் ஊர்தல்’ பெரும்பாலும் தடுக்கப்படும். மதுக்கடைக்கு வெளியில் மக்கள் மது அருந்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். (அக்காலத்தில் பள்ளிக்கூடங்கள்,  கோயில்கள் போன்றவற்றின் அருகில் மதுக்கடைகள் கட்டப்படவில்லை போலும்!) மதுக்கடைகளில் குற்றவாளிகள் பெரும்பாலும் கூடுவதுண்டு, எனவே அவற்றை நன்கு கண்காணித்து வருமாறு அரசன் தன்னுடைய ஒற்றர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.

அர்த்த சாஸ்திரம் கூறும் கருத்துகளை நோக்கும்போது, மது அருந்துதல் தீமை என்பதையும்,  அதனை முற்றிலும் விலக்குதல் இயலாது என்பதையும், ஆனால் அதைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதையும் ஒப்புக்கொள்கிறது எனலாம். (ஆதாரம்-A.L. Basham, The Wonder that was India, 2nd edition, p.217.)


உமி

இந்தியாவின் வேளாண்மைக் கழிவுகளில் உமி முக்கியமானது. நெல்லிலிருந்து அரிசி குற்றும்போது உமி கிடைக்கிறது. ஆசியாவில் உற்பத்தியாகும் 770 மில்லியன் டன் உமியில் 120 மில்லியன் டன் இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. உமியின் வர்த்தகப் பயன்பாட்டை விவசாயிகள் அறியாததால் இது வேளாண் கழிவாகக் கருதப்படுகிறது. உமியை எரிப்பது, அல்லது குப்பைக் கழிவாகக் கொட்டுவது என்ற நடைமுறையே உலகில் நிலவுகிறது. உமியை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. பருவநிலை கெடுவதற்கு இது காரணமாகிறது. உமியைத் திறந்தவெளியில் கொட்டினால், அல்லது குவித்துவைத்தால், பொது சுகாதாரம் கெடுகிறது.
உமியை வீணடிப்பதற்குப் பதிலாக கீழ்க்கண்ட வழிகளில் பயன்படுத்தலாம்.
#  உயிர்த்திரள் ஆற்றலை ( biomass power) உற்பத்தி செய்யும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை உருவாக்க உமியைப் பயன்படுத்தலாம்.
# உமியைத் தாவரங்களின் அடிப்பகுதியில் குவித்து வைத்தால் களைகள் உருவாவதைத் தடுப்பது, மண்ணின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைப்பது, மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைக் குறைப்பது போன்ற நன்மைகள் கிட்டும். அவை சிதைவடையும்போது மண் வளம் செழிக்கும்.
# உமியை வைத்து உயிரி-எதேனால் (bio-ethanol) தயாரிக்க முடியும். உயிரி-எத்தனால் எதிர்காலத்திற்கான மாற்று எரிபொருட்களில் முக்கியமானது. உமியிலிருந்து செலவு அதிகமின்றி உயிரி-கார்பன் தயாரிக்க முடியும். கழிவுநீர் சுத்திகரிப்பில் இந்தக் கார்பனைப் பயன்படுத்த முடியும். உமியைப் பல்வேறு வாயுக்களாக மாற்றும்போது கார்பன் மானாக்சைட், ஹைட்ரஜன், மீத்தேன் ஆகிய மூன்றையும் சமையல் வாயுவுக்கு மாற்றான எரிபொருட்களாகப் பயன்படுத்த முடியும்.
உமிச் சாம்பலின் பயன்கள் :
# உமியின் சாம்பலில் கணிசமாக உள்ள கார்பனிலிருந்து திறன்சேர் கரி (activated charcoal) தயாரிக்க முடியும்.
# உமிச் சாம்பலிலிருந்து பொசோலனா சிமெண்ட் தயாரிக்க முடியும். வர்த்தக சிமெண்ட் துகளின் அளவு 35 மைக்ரான்கள் (ஒரு மைக்ரான் என்பது 1/1000 மில்லிமீட்டர் ) இருக்கும். பொசோலனா சிமெண்ட் துகளின் அளவு 25 மைக்ரான்கள்தான். கான்க்ரீட் இடைவெளிகளை நிரப்ப வர்த்தக சிமெண்டைவிட பொசோலனா சிமெண்ட் மேலானது. மலிவானதும் கூட
#  எஃகுத் தொழிலில் சூடான செங்கற்கள் (furnace bricks) தயாரிக்க உமிச்சாம்பல் பயன்படுகிறது. இந்த செங்கற்கள் 1450 டிகிரி சென்டிகிரேட் வரை உள்ள மிக அதிக வெப்பநிலையைக் கூடத் தாக்குப் பிடிக்க முடியும்.
#  சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க உமிச்சாம்பலைப் பயன்படுத்த முடியும். மின்சாரத்தின் உதவியின்றி உமிச் சாம்பலைப் பயன்படுத்தி  அசுத்தமான குடிநீரைச் சுத்திகரிக்க முடியும். உமிச் சாம்பலைப் பயன்படுத்தி வளர்ப்புப் பிராணிகளுக்குப் படுக்கைகள் தயாரிக்க முடியும். உமிச்சாம்பலிலிருந்து தயாரிக்கப்படும் தட்டு, சல்பர் டையாக்சைடை உறிஞ்சக்கூடியது.  அதை நிலக்கரி கொதிகலனில்  கந்தகநீக்கியாகக் பயன்படுத்த முடியும்.
பூமி சூடேறுவதைத் தடுக்க இன்று பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய சிக்கலான காலகட்டத்தில் இருக்கும் நமக்குப் பசுமை ஆற்றலைப் பெறுவதற்கு உமியும் அதன் சாம்பலும் கைகொடுக்கத் தயாராக இருக்கின்றன. அதிகம் செலவு வைக்காத எளிதில் கிடைக்கும் இப்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்வோம்.
(ஆதாரம் : 2016 ஜூன் சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் டாக்டர் அனு பிரியா மின்ஹாஸ், டாக்டர் சஞ்சீவ்னா குமாரி எழுதிய கட்டுரை, தமிழில் பேரா. ராஜு, நன்றி முதுவை ஹிதயத்)


ஆபுத்திரன்-1

காப்பியக் கதைகள்-1
ஆபுத்திரன்
(ஆபுத்திரன் கதை மணிமேகலைக் காப்பியத்தின் ஒரு பகுதியாகும். தமிழின் முதல்சீர்திருத்தக் காப்பியம் மணிமேகலை. ஆனால் இக்காலத்தில் மணிமேகலைக் காப்பியத்தைப் படிப்பவர்கள் மிகக் குறைவு. ஆகவே வாசகர்கள் பயன்பெறும் வகையில் அதன் முக்கியப் பகுதியாகிய ஆபுத்திரன் கதையை இங்கே அளிக்கிறோம். கதையின் பயன்பாட்டை வாசகர்களே உணர்ந்துகொள்ளலாம்.)
பண்டைக்காலத்தில் காசியில் அபஞ்சிகன் என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். இளமையிலேயே வேத வேதாங்கங்களைக் கற்று ஆரண உபாத்தியாயன் என்ற பெயரையும் பெற்றான். பிரமச்சரியம் கழிந்து சாலி என்ற பெண்ணை மணந்து வாழலானான். ஆனால் அவள் கணவனுக்கு விசுவாசமாக நடக்கவில்லை. வேறு யாரோ ஒருவனிடம் கர்ப்பமுற்றாள். ஒழுக்கம் தவறிய அவள் தானாகவே அதற்காக வருந்திக் கன்னியாகுமரிக்குச் சென்று புனிதநீராடித் தன் பாவத்தைக் களைந்து கொள்ளலாம் என்று நினைத்தாள். பல தேசங்களையும இடங்களையும் கடந்து பாண்டிநாட்டை அடைந்தாள். கொற்கையின் அருகில் ஓர் ஆயர்பாடியில் கர்ப்பம் முற்றிய அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். தாய்க்கு இயல்பாகப் பிள்ளைகள் மீதுள்ள பாசம் சிறிதும் அற்ற அவள், குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுக் குமரித்துறையை நாடிச் சென்றாள்.
அக்குழந்தை பசிமிகுதியினால் அழுதபோது அத்தோட்டத்தில் புல்மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு, தானாகவே வந்து அக்குழந்தைக்குப் பால் ஊட்டியது. இவ்வாறே ஏழு நாட்கள் சென்றன.
அப்போது வயனங்கோடு என்னும் ஊரிலிருந்து பூதி என்ற பிராமணன் ஒருவன் தன் மனைவியோடு அவ்வழியாக வந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பிள்ளையில்லை. குழந்தையை அச்சோலையில் கண்ட அவன், இந்த அழகிய குழந்தை “பசுவின் மகனல்ல, என் மகனே” என்று சொல்லி அக மகிழ்ந்து, கடவுளே தனக்கு அந்தக் குழந்தையை அளித்ததாக நினைத்து, அதை வீட்டுக்குக் கொண்டுசென்றான். பசு வளர்த்ததால் பசுவின் மகன் என்று பொருள்பட ஆ-புத்திரன் என்று அவனுக்குப் பெயரிட்டு வளர்த்தான். இங்ஙனம் ஐந்தாண்டுகள் சென்றன.
மகனுக்கு உபநயனம் செய்யும் முன்னரே, அவனுக்குக் கலைகளையும் நாடகங்களையும் காவியங்களையும் கற்றுத்தந்தான் அப்பார்ப்பனன். ஆபுத்திரன் அவற்றை நன்கு கற்றதோடு மிக நல்ல பண்புடையவனாகவும் வளர்ந்துவந்தான். அச்சமயத்தில் அந்த ஊரிலிருந்த ஒரு பிராமணன் தனது யாகத்தில் பலியிடுவதற்காக ஒரு பசுவைக் கொண்டுவந்து தன் வீட்டில் கட்டி வைத்திருந்தான். அப்பசுவோ கதறியவாறு இருந்தது. இதைப் பார்த்த ஆபுத்திரன், அந்தப் பசுவை மீட்க வேண்டும் என்று நினைத்தான். தங்களை அந்தணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு ‘அம்-தண்மை’, குளிர்ந்த கருணையோ அன்போ சற்றும் இல்லையே என்று வருந்தினான். இரவில் அதைக் கட்டவிழ்த்து, எங்கேனும் அதைக் கொண்டு விடும் நோக்கத்தில், கையில் பிடித்துக்கொண்டு, பருக்கைக் கற்கள் நிரம்பிய ஒரு காட்டு வழியில் ஊருக்கு வெளியில் சிறிது தொலைவு சென்றவாறு நடந்துகொண் டிருந்தான்.
யாகப் பசுவைக் காணாத பிராமணர்கள் துணுக்குற்று, நாலாபுறத்திலும் தேடலானார்கள். பிறகு அந்தப் பையனைப் பசுவோடு கையும் களவுமாகப் பிடித்தார்கள். “புலையனே! இந்தப் பசுவை எதற்காகக் களவாடிக் கொண்டு வந்தாய்?” என்று பலவாறு இழித்துப்பேசி, அவனைக் கோல்களால் அடிக்கலானார்கள். அதைக் கண்ட பசு, ஆபுத்திரனை அடித்து வருத்திய யாக உபாத்தியாயனைத் தன் கொம்புகளால் குத்தி, குடலைச் சரித்துவிட்டு, காட்டுக்குள் ஓடிப்போய்விட்டது.
இதைப்பார்த்த பிற பிராமணர்கள் அவனை மேலும் அடிக்கலானார்கள். “அடிக்காதீர்கள், நான் சொல்லும் செய்திகளைக் கேளுங்கள்” என்று கூறி, வேத உபநிஷதங்களில் இருந்தே பசுவைக் கொல்லல் ஆகாது என்பதற்கான காரணங்களை எடுத்துக்காட்டி, கடைசியாக, “பசுக்களைக் கொன்று ஆயிரம் வேள்விகள் செய்து அடையும் பயனைக் கொல்லாமை ஆகிய அறத்தைக் கடைப்பிடித்தால் அடையலாமே, இப்படிச் செய்தால் உங்களுக்கு அந்தணர் என்ற பெயரும் ஏற்கும்” என்றான்.
ஆனால் பிராமணர்கள், அவன் சொன்ன விஷயங்களைச் சற்றும் மனத்தில் ஏற்றுக்கொள்ளாமல், “நீ வேதங்களைக் கற்றிருந்தும் வேத யாகங்களை நிந்தனை செய்யும் பேதையாக இருக்கிறாய். உன்னைப் பசுமகன் என்று சொல்வதற்குப் பொருத்தமாக நடந்துகொண்டாய்” என்று அவனை இழித்துக் கூறினார்கள்.
அதற்கு ஆபுத்திரன், “பசுவின் மகன் அசல முனிவன், மானின் மகன் சிருங்கி முனிவன், நரியின் மகன் கேசகம்பள முனிவன் இவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் குலத்து முன்னோர்கள், முனிசிரேஷ்டர்கள் என்று சிறப்பித்துக் கூறவில்லையா? பசுவின் வயிற்றில் பிறந்தால் என்ன இழிவு? கள்ளியின் வயிற்றிலும் அகில் பிறக்கும் என்ற மூதுரையை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டான். அச்சமயத்தில் அங்குள்ள பிராமணர்களில் ஒருவன், “எனக்கு இவன் வரலாறு தெரியும், நான் குமரி நீராட முன்னொருநாள் சென்றிருந்தபோது, அங்கிருந்த சாலி என்னும் பார்ப்பனியைப் பார்த்தேன். அவள் தன் குழந்தையைக் கைவிட்டுவந்த கதையைக் கூறினாள். அவள் பெற்ற மகனே இவன், சந்தேகமில்லை. சொல்லி என்ன பயன் என்று சொல்லாதிருந்தேன். கற்புத்தவறிய பெண் பெற்ற இவன், அசுத்தன். ஆகவே இவனைத் தீண்டாமல் ஒதுங்கிச் செல்லுங்கள்” என்றான்.
அதைக் கேட்ட ஆபுத்திரன், “முனிவர்களில் சிறந்தவர்களான அகத்தியரும், வசிட்டரும் தேவ கணிகை(வேசி)யான திலோத்தமையின் புத்திரர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவ்வாறிருக்கும்போது என் தாய் சாலிமீது பழி சொல்லத் துணிந்தீர்களே” என்று சிரித்தான். ஆனால் இந்தப் பார்ப்பனர்கள் சொல் கேட்டு அவனை வளர்த்த பூதியும் அவனைக் கைவிட்டுத் துரத்திவிட்டான். தன்னை ஆதரிப்பார் ஒருவரும் இல்லாததால், பிச்சை எடுத்தேனும் இருப்போம் என்று கருதி ஆபுத்திரன் பிச்சை எடுக்க வீடுகள் தோறும் செல்ல, அவன் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர்ப் பார்ப்பனர்கள், “இவன் பசுதிருடிய கள்ளன்” என்று அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் கற்களை எடுத்துப் போட்டார்கள். அதனால் மனம் வெதும்பி, அலைந்து திரிந்து, கடைசியாக மதுரையை அடைந்தான் ஆபுத்திரன். அங்கு சிந்தாதேவி (சரஸ்வதி) கோயிலின் எதிரில் இருந்த அம்பலப் பீடிகை (பொது மன்றம்)யை அடைந்து அங்கேயே தங்கி வாழலானான். கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி, வீடுகள் தோறும் சென்று, பிச்சையெடுத்து, அங்கிருந்த .குருடர்கள், முடவர்கள், அகதிகள், நோயாளிகள் எல்லோரையும் “வருக வருக” என்று அழைத்து, அவர்களுக்கு இட்டு, தானும் சிறிது உண்டு வாழ்ந்து வந்தான். இரவில் அந்தப் பிச்சைப்பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கினான்.
இவ்வாறு சில நாட்கள் சென்றன. ஒரு நாள் இரவு. நல்ல மழை பெய்து கொண்டிருந்த நேரம். அப்போது அங்கே சிலர் வந்து, “எங்களுக்கு மிகுந்த பசியாக இருக்கிறது” என்று வருந்திப் பேசியவாறு இருந்தார்கள். ஆபுத்திரன், அவர்களுடைய பசியை ஆற்றும் ஆற்றல் தனக்கு இல்லையே என்று வருந்தியவாறு இருந்தான். அச்சமயத்தில் எதிரில் கோயில் கொண்டிருந்த சிந்தாதேவி, அவனுக்கு எழுந்தருளி, தன் கையிலிருந்த பாத்திரம் ஒன்றை அவனுக்குக் கொடுத்து, “வருந்தாதே! இது அட்சய (குறையாத) பாத்திரம். நாடெல்லாம் வறுமை அடைந்து வருந்தினாலும் இப்பாத்திரத்தில் உணவு என்றும் குறையாது. கொடுக்கக் கொடுக்க வளர்ந்துகொண்டே வரும்” என்று அவனிடம் கூறினாள். அவன் அவளைப் பலவாறு போற்றித் துதித்து, பணிவுடன் அந்தப் பாத்திரத்திலிருந்து பக்கத்தில் பசியால் வருந்திக் கொண்டிருந்த அவர்களுக்கு முதலில் சோறிட்டு, பிறகு அன்று முதல் ஏழைகள் பாழைகள் அனைவருக்கும் தன் பாத்திரத்திலிருந்து உணவளித்து வருவான் ஆனான். உண்பதற்காக மனிதர் பலரும் அவனை எக்காலமும் சூழ்ந்தவாறே இருக்க, பறவைகள், விலங்குகளும்கூட அவனை அன்புடன் சூழ்ந்திருந்தன.
அக்காலத்தில் பாண்டிய நாட்டில் மழையின்றிப் பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதும் தன்னிடமிருந்த அக்ஷய பாத்திரத்தினால் தன்னால் முடிந்த அளவுக்கு எல்லையற்ற பேருக்கு ஆபுத்திரன் உணவளித்து வந்தான். இவனுக்கு எல்லையற்ற புண்ணியம் இவ்வாறு வந்து சேரவே, அதனை இந்திரன் தனது பாண்டு(வெள்ளைக்) கம்பள நடுக்கத்தினால் அறிந்து கொண்டான். மக்களுக்கு அதிகப் புண்ணியம் சேர்ந்தால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று கருதி நயத்தாலோ பயத்தாலோ அவர்களைத் தடுப்பது இந்திரனின் வழக்கம். ஆகவே இவனுக்கு வரமளித்தேனும் (சாம பேத தான தண்டம் என்னும் நான்கில் தான உபாயம்) இவனைத் தடுக்கலாம் என்ற எண்ணத்துடன் இவன் முன் ஒரு முதியவனாக இந்திரன் தோன்றினான். “நான் இந்திரன், உன் புண்ணியத்தின் பலனை நீ அடைய வேண்டும், உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்!” என்று கூறினான். அதைக் கேட்ட ஆபுத்திரன், தன் விலா எலும்பும் ஒடியும்படி நகைத்தான். “கொடுப்பவரும் கொள்பவர்களும் இல்லாததால் கொடைச் செயலினால் வரும் இன்பமும் தவமும் இல்லாத தேவர் நாட்டுத் தலைவனே! வாடிய முகத்தால் வருந்தி வந்தவர்களின் அரும்பசியைத் தீர்த்து, அவர்களுடைய இனிய முகத்தை நான் காணும்படி செய்கின்ற, ஈத்துவக்கும் இன்பம் அளிக்கின்ற, இந்த தெய்வப் பாத்திரம் ஒன்றே எனக்குப் போதுமானது. நான் அறவிலை வணிகன் அல்ல. (தர்மத்தை விற்பவன் அல்ல). வேறொன்றும் எனக்கு வேண்டாம்” என்று இந்திரனிடம் கூறினான்.
தன்னை எதிர்த்துப் பேசிய ஆபுத்திரன்மீது இந்திரன் கோபம் கொண்டான். மனிதர்கள் புண்ணியம் செய்தால் அது அதிகரித்து அதனால் தன் பதவிக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து உடனுக்குடன் அவற்றின் பலனைக் கொடுத்துவிடுவது அவன் வழக்கம். அதனால் பயந்த இந்திரன், ‘இவன் கையிலுள்ள பாத்திரமே உபயோகமற்றுப் போகும்படி செய்கிறேன்’ என்று கறுவியவாறு சென்றான். நாடு முழுவதும் வளத்தால் செழிக்குமாறு மேகங்களை ஏவி மழைபொழியச் செய்தான். அதனால் மாநிலம் முழுவதும் செழிப்பதாயிற்று. பசித்துவந்தவர்கள் தங்கிய அம்பலத்தில் இப்போது உணவு உண்ணும் ஓசை இல்லாமல் போய், தூர்த்தர்கள், வேழம்பர், பிரயாணிகள் முதலியோர் கூடி சூதாடி ஆரவாரிக்கின்ற இடமாகப் போய்விட்டது.
அதனால் ஆபுத்திரன் ஊர் ஊராகச் சென்று “உணவு வேண்டுவோர் யாரேனும் உண்டோ?” என்று கேட்டவாறே செல்லலானான். செல்வத்தினால் இறுமாப்பு உற்ற மக்கள் யாவரும், “இவன் என்ன பைத்தியமா!” என்று கேலிசெய்தனர். கடைசியாக அலைந்துதிரிந்து கொற்கைத் துறைமுகத்துக்கே வந்து சேர்ந்தான். அங்கே, மரக்கலத்திலிருந்து இறங்கி வந்த பயணிகள் சிலர், “சாவக நாட்டில் பெரும் பஞ்சம் நிலவுகிறது, மக்கள் மிக வறுமையுற்று, உயிர்கள் பசியால் வாடி வருந்துகின்றன; அங்கு நீ சென்று உதவி செய்வாயாக” என்று கூறினர். ஆபுத்திரனும் சாவகம் செல்லும் மரக்கலம் ஒன்றில் ஏறினான். அது புறப்பட்டுச் சென்றது. சில காதங்கள் சென்றதும் காற்றினால் கடல் கொந்தளிக்க, அந்த மரக்கலம் பாய் இறக்கி, மணிபல்லவம் என்னும் தீவின் அருகில் ஒரு நாள் தங்கியது.
அத்தீவின் காட்சிகளைக் கண்டுவர எண்ணி ஆபுத்திரன் கப்பலில் இருந்து இறங்கினான். அவன் திரும்பவும் ஏறிவிட்டான் என்று கருதி, கப்பல் தலைவன், இரவில் அக்கப்பலைச் செலுத்திக்கொண்டு போய்விட்டான். ‘நான் நினைத்தவாறு சாவகம் செல்ல முடியவில்லையே என்ன செய்வது’ என்று ஆபுத்திரன் வருந்தினான். ‘ஒரு தெய்வப் பாத்திரத்தைப் பெறுகின்ற அளவுக்குப் புண்ணியத்தை முற்பிறவியில் செய்த நான், மிகுதியாகத் தீவினையையும் செய்தேன் போலும். அதனால்தான் இந்தத் தீவில் தனியாகத் துன்பப்படலானேன்’ என்று நினைத்தான். ‘தனியாக இந்தத் தீவில் இருந்து பயன் என்ன’ என்று துயரம் மிகுந்த அவன், தன் கையிலிருந்த பாத்திரத்தைத் தொழுது, “வருடத்திற்கு ஒரு முறை நீ வெளிப்படுவாயாக” என்று கூறி, பக்கத்திலிருந்த கோமுகி என்னும் பொய்கையில் அதை விட்டான். அப்பாத்திரம் அமிழ்ந்து போயிற்று. அங்கேயே அவன் உண்ணாநோன்பிருந்து உயிர்விடலாம் என்று கருதி விரதம் இருக்கலானான். அச்சமயத்தில் அங்கே வந்த அறவண அடிகள் என்னும் பௌத்தத் துறவியிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டுத், தனக்குப் பாலூட்டிய பசுவை நினைத்தவாறே தனது உயிரை விட்டான்.
இதற்கிடையில், முன்னர் குழந்தை ஆபுத்திரனுக்கு ஏழு நாட்கள் வரை பால் ஊட்டிய பசு, அந்தப் புண்ணியத்தால் பொன்மயமான கொம்புகளையும் குளம்புகளையும் பெற்று மறுபிறவி எடுத்தது. சாவக நாட்டில் தவள மலையில் தவம் செய்துகொண்டிருந்த மண்முக முனிவனிடம் சென்று, கன்று போடும் முன்பே பால் சுரந்து எல்லா உயிர்களுக்கும் ஊட்டியவாறு இருந்தது. அதைப் பார்த்த முக்காலமும் உணர்ந்த அம்முனிவன், இப்பசுவின் வயிற்றில், ஒரு விசேஷ புருஷன் தோன்றுவான். ஆண்பெண் சம்பந்தமின்றி, ஒரு பொன்முட்டை வாயிலாக அவன் பிறப்பான் என்று யோசித்தான்.
அவன் நினைத்ததற்குத் தக்கவாறு ஆபுத்திரன் மறுபிறவி எடுத்து சாவக நாட்டில் இந்தப் பசுவின் வயிற்றில் ஒரு பொன் முட்டையில் வந்து தோன்றினான். அவன் உதித்த காலம், புத்தர் அவதரித்த வைகாசி மாதத்து புத்தபூர்ணிமையாகும். இவன் உதித்த காலத்திலும் பல நல் நிமித்தங்கள் தோன்றின. இந்நன்னிமித்தங்களைக் கண்ட முனிவர்கள் “ஓர் உத்தம புருஷன் இவ்வுலகில் அவதரித்திருக்க வேண்டுமே, அவன் யார் தெரியவில்லையே” என்று தங்களுக்குள் ஆலோசித்தவாறு இருந்தனர்.
இக்குழந்தையைப் பற்றி அந்நாட்டரசன் பூமிசந்திரன் என்பவன் கேள்விப் பட்டான். அவனுக்குக் குழந்தை இல்லை. அவன் மண்முக முனிவரைச் சந்தித்து, அவரிடம் இக்குழந்தையை வாங்கிக் கொண்டுபோய், புண்ணிய ராஜன் என்று இதற்குப் பெயரிட்டு வளர்த்தான். புண்ணிய ராஜனும் வளர்ந்து தன் வளர்ப்புத் தந்தைக்குப் பின் நாட்டை ஆளலானான். (தொடரும்)


கல்வித் திருநாள்

இன்று கலைமகள் நாள். (சரஸ்வதி பூசை அல்லது ஆயுத பூசை). கலைமகள் என்பவள் கல்விக்கும் கலைகளுக்கும் (both process and the products) உருவகம். கலைமகள் நாளான இன்று பலரும் தங்கள் நூல்களை பூசையில் வைத்துப் படைக்கின்றனர். அவற்றைப் படிக்கலாகாது என்றும் சொல்கின்றனர். மறுநாள்தான் அவற்றை எடுக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இது தவறான கருத்து. கலைமகள் நாளன்றுகூடக் கல்வி பயிலாதவன், நூல்களைப் படிக்காதவன், வேறு என்று படிக்கப் போகிறான்? ஆகவே தவறாமல் இன்றேனும் உங்களுக்குத் தேவையான அல்லது மனத்துக்குப் பிடித்த நூலைப் படியுங்கள்.

தவளத் தாமரை தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே.

(சகலகலாவல்லி மாலை)

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந்நாவில் நின்று
காக்கும் கருணைக்கடலே சகலகலா வல்லியே.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய் உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
நாட்டும் வெள்ளோதிமப்பேடே சகலகலா வல்லியே.

சொல்விற்பனமும் அவதானமும் கல்விசொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய் நளினாசனம்சேர்
செல்விக்கரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப்பெருஞ்செல்வப் பேறே சகலகலா வல்லியே.

வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்-வெள்ளை
அரியாசனத்தில் அரசரோடென்னைச்
சரியாக வைத்த சரசுவதி தாயே. (கம்பர்)


கீழடி அகழ்வாய்வு

எழுத்தாளர் சு. வேங்கடேசனிடமிருந்த வந்த ஒரு மின்னஞ்சலை ஆதாரமாகக் கொண்டு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 5300 தொல்பொருட்களுடன் இரண்டு லாரிகள் மைசூருக்குச் செல்லப்போவதாக திரு. வேங்கடேசன் தெரிவித்துள்ளார். அவருடைய கூற்று பின்வருமாறு.

“அந்த இடமும், பொருட்களும்தான் இனி தமிழகத்தின் வரலாற்றுக் கால நிர்ணயத்தை அளவிடும் அடிப்படைத் தரவுகள். அந்தத் தரவுகள், தமிழக நாகரிகத்தின் காலத்தை இன்னும் பின்னோக்கித் தள்ளுவதாக இருக்கும். இன்றைய அரசியல் சூழலில் இந்தச் செய்தி பலருக்கு ஏற்புடையதல்ல. தரவுகளைத் தன்னழிவுக்கு விடும் அரசியல் ஒன்றும் புதிதல்ல. எல்லாக் காலங்களிலும் அது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழுச் சமூகமாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் போல ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை.

“இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவற்றைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அந்தக் கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால் இன்று கீழடியில் கண்டறியப்பட்ட தரவுகள் அந்தக் கருத்தைத் தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கிறது. கீழடியில் இருப்பது அழிந்துபோன ஒரு பெரும் நகரம். நகர நாகரிகத்தின் அனைத்துத் தடயங்களும் முதன்முறையாக அங்கு கண்டறியப்பட்டுள்ளன. எண்ணற்ற கட்டிடங்களின் தரைத்தளங்கள், நீண்டு செல்லும் மதில் சுவர்கள், முத்துக்கள், தந்தத்தால்ஆன பல்வேறு பொருட்கள், சதுரங்கக் காய்கள், எண்ணிலடங்கா மணிகள், வணிகர்களின் எடைக் கற்கள், நெசவுக்கான தக்கை என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதுவரை 71 தமிழ் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழிப் பெயர்களும் உள்ளன.

“ஆப்கானிஸ்தானத்து பகுதியைச் சேர்ந்த சூது பவழத்தாலான மணிகளும், ரோமாபுரியைச் சேர்ந்த மட்பாண்டங்களும், வட இந்தியப் பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் ஊடறுத்துப் பாயும் பெருநகரமாக இது இருந்துள்ளது. தொழிற்சாலை. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அகழ்வாய்வு முடிவுறும் தறுவாயில் அதுவரை கிடைத்த பொருட்களை வைத்து இது நகரத்தின் குடியிருப்புப் பகுதியென எல்லாரும் உறுதிசெய்தனர். ஆனால் இந்த ஆண்டு அகழ்வாய்வுப் பணி அதற்குச் சில அடி துரத்திலேதான் நடந்துள்ளது. அங்கு கிடைத்துள்ள தடயங்கள் எல்லாம் பெரும் தொழிற்சாலை இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

“வரிசைவரிசையான கால்வாய்கள், அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள். அந்தத் தொட்டிகளுக்குள் தண்ணீர் உள்செல்லவும் வெளிச்செல்லவுமான அமைப்புகள். அந்த கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறிதும் பெரிதுமான ஆறு உலைகள். கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள், மூன்று விதமான வடிகால் அமைப்பு, மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் இவையெல்லாம் முதன்முறையாகக் கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்குத் தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை. கீழடியில் இருக்கும் தொல்லியல் மேடு சுமார் 110 ஏக்கர் பரப்பைக் கொண்டது. அதில் அகழ்வாய்வு நடந்திருப்பது வெறும் 50 சென்ட் நிலப்பரப்பளவுதான்.

“மீதமிருக்கும் பெரும்பகுதியில் ஆய்வுகள் தொடருமேயானால், இந்த நகரத்தில் இருந்த பல்வேறு பகுதிகளை நம்மால் கண்டறிய முடியும் என்கின்றனர், இவ்வாய்வை நடத்திக் கொண்டிருக்கிற அம்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர்.

“1964இல்பத்துப்பாட்டு ஆராய்ச்சியை மிக விரிவாகச் செய்து முடித்த தமிழ்ப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார், பழந்தமிழ் இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, சிலப்பதிகாரம் மற்றும் திருவிளையாடல் புராணம் ஆகியவற்றின் அடிப்படையில், “சங்ககால மதுரை என்பது இன்றுள்ள மதுரையல்ல, நமது இலக்கியக் குறிப்புகளின்படி அது திருப்பூவணத்துக்கு நேர் மேற்கிலும் திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கிலும் அமைந்திருக்கவேண்டும். அதனை ஆய்வுகளின்மூலம்தான் கண்டறிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“அவரது குறிப்பு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெரும் உண்மையை நெருங்க வழிகாட்டுகிறது. சங்க இலக்கியம் சொல்லும் அதே புவியியல் அமைப்பில்தான் இன்று அகழ்வாய்வு நடக்கும் இடம் இருக்கிறது. இவ்வளவு துல்லியமான புவியியல் ஆதாரமும், எண்ணிலடங்கா தொல்லியல் ஆதாரங்களையும் இணைத்துப் பார்க்கையில் இதுவே சங்ககால மதுரையாக இருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாக என்னைப்போன்ற பலரும் கருதுகிறோம்.

என்ன செய்ய வேண்டும்?

“110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், பழந்தமிழ் நாகரிகத்தின் பேரடையாளங்களைத் தனது மார்போடு இறுக அணைத்து வைத்திருக்கிறது. அவற்றை இழந்து விடாமல் இவ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும். மாநில அரசும் இங்கு அகழ்வாய்வுப் பணியைத் தொடங்க வேண்டும். இவற்றையெல்லாம் விட மிக அவசரமாகச் செய்யவேண்டிய ஒரு பணி, கள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்குவது. அது உருவானால்தான், இங்கு கண்டறியப்பட்டுள்ள இந்தத் தொல்பொருட்கள் எல்லாம் பார்வைக்கு வைக்கவும் பாதுகாக்கவும் படும். இல்லையென்றால் மத்திய அகழ்வாய்வுப் பிரிவின் கிட்டங்கி இருக்கிற மைசூருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, சாக்கு மூட்டைகளுக்குள் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்க வேண்டி வரும். கள அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய தொல்லியல் துறை தயாராக இருக்கிறது.

“அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. இந்தக் கசப்பான உண்மையைச் சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு கூட்டததில் நான் பேசினேன்.

“கூட்டம் முடிந்ததும் என்னருகே வந்த ஒரு இளைஞர், “அய்யா, நான் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். என் பெயர் கரு. முருகேசன். தமிழ்தான் எனக்குச்சோறு போடுகிறது. அகழ்வாய்வு நடக்கும் அதே கிராமத்தில் எனக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. நான் அதனை மனமுவந்து தர முன்வருகிறேன். இவ்வரலாற்று பொக்கிஷத்தை எப்படியாவது காப்பாற்றி இங்கு காட்சிப்படுத்துங்கள்” என்று கண்கலங்கக் கூறினார்.

“ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களோ, அல்லது இருந்தவர்களோ, யாரேனும் தமிழ் தங்களுக்குச் சோறு போட்டது என்று நம்பினால் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முன்வாருங்கள். மைசூரை நோக்க லாரிகள் புறப்பட இன்னும் சில நாட்களே இருக்கின்றன.”


சாதுரியம்

பெரியோர்களின் வாழ்க்கையையும் கொள்கைகளையும் உதட்டளவில் வெகுவாகப் புகழ்ந்து பேசி, தங்கள் வாழ்க்கையில் அவற்றை ஒரு சிறிதும் பின்பற்றாமல் வாழ்கின்ற இந்திய மக்களின் நடைமுறைக்கு காந்தி ஜெயந்தி ஒரு நல்ல உதாரணம். கொள்கைகளை மதிப்பிட்டு ஏற்று நடப்பதோ புறக்கணிப்பதோ அன்றி வெறும் சொல்லளவு மரியாதையினாலும் ஊருக்கு ஊர் சந்திக்குச் சந்தி வைக்கப்படும் பொம்மைகளாலும் அவற்றிற்கு ஆண்டுக்கு ஒருமுறை இடப்படும் மாலைகளாலும் பயன் என்ன?