பதினாறும் பதினேழும்

சென்ற ஆண்டு (2016) பலவகைகளிலும் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் (விளையாட்டுத் துறை ஒன்றைத் தவிர) துயரம் மிக்க ஆண்டாகவே சென்றது. சென்னை வெள்ளம் தொடங்கி, ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு வரை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரை எல்லாம் துயரங்களே. குறிப்பாக அனைவர்க்கும் உணவளிக்கும் உலகத்தின் அச்சாணியாகிய விவசாயிகளின் எண்ணற்ற தற்கொலைகளும், சொந்தப் பணத்திற்காகக் கியூவில் நின்று உயிரிழந்தோரின் மரணங்களும் இதுவரை உலகம் காணாதவை.
இந்த 2017ஆம் ஆண்டேனும் உலக மக்களாகிய நமக்கு நன்மைகளைக் கொண்டுவரும் என்று நம்பிக்கையுடன் “ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா, உறுதி கொண்ட நெஞ்சினாய் வா, வா” என்று பாரதியைப் போல வரவேற்போம்.


விருது

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது. நன்றி சாகித்ய அகாதெமிக்கு.


இது எப்படி நிகழ்கிறது?

இரண்டாயிரம் ரூபாய் பெறுவதற்காகக் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் நீண்ட வரிசைகளில் வங்கிகளுக்கும், செயல்படுகின்ற ஒருசில ஏடிஎம்களுக்கும் முன்னால் நிற்கிறார்கள். ஆனால் இந்தியா முழுவதிலுமே ஒரு சில பணமுதலைகளின் வீட்டில் பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் புதிய நோட்டுகளாகக் கைப்பற்றப்படுகின்றன. எப்படி நிகழ்ந்தது இது? இதுவும் கள்ளநோட்டுகளையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கின்ற முயற்சிதானா?