அறிமுகம்

அறிஞர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றில் அடிப்படைத் தேர்ச்சி உண்டு. இவை யாவும் அவருடைய ஆய்வுகளுக்குப் பெரும் உதவியாக அமைந்தன. மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

காலச்சுவடு, நிகழ், தமிழ்நேயம் போன்ற சிற்றிதழ்கள் சிலவற்றில் கட்டுரைகள் வரைந்துள்ளார். திருச்சியில் (1989) முதன்முதலில் பாதல்சர்க்காரின் பெயரால் நாடகப்பட்டறை நடத்தியவர். திருச்சியில் வாசகர் அரங்கம், திருச்சி நாடக சங்கம், சினிஃபோரம் (கலைத் திரைப்படங்களைக் காண்பதற்கான திரைப்படக் கழகம்) ஆகியவற்றில் பங்கேற்று, இத்துறைகளில் இளைஞர்களை முன்னேற்ற முயற்சி எடுத்தவர். பணிநிறைவுக்குப் பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எமரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர். 2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. பத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். அவற்றில் சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய குறிப்பிடத் தக்க நூல்கள்.

1, அமைப்புமைய வாதமும், பின்னமைப்புவாதமும்
2. பத்திரிகை, தலையங்கம், கருத்துரை
3. செய்தித் தொடர்பியல் கொள்கைகள்
4. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு (1980வரை)
-தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு
5. இந்திய மொழிகள் ஓர் அறிமுகம்
6. நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்
7. இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்
8. கவிதையியல்
9. கதையியல்
10, கவிதைமொழி தகர்ப்பும் அமைப்பும்

இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும் செய்துள்ளார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, சல்மான் ருஷ்தியின் “நள்ளிரவின் குழந்தைகள்”  (மிட்நைட்ஸ் சில்ட்ரன்). இந்த நூலுக்கு நாமக்கலில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும் அளித்துள்ளது.

பல கருத்தரங்குகளை நடத்தி, நூல்களையும் தொகுத்துள்ளார்.
சமுதாயத்தின்பால் தெளிந்த சிந்தனையோடு, அதன் வளர்ச்சிக்கு முற்போக்குச் சிந்தனைகளுடன் தன் முழு உழைப்பையும் ஓயாது அளித்து வருபவர். கல்லூரி வகுப்பறைகளாக இருப்பினும், கருத்தரங்குகளாக இருப்பினும் இவரது சொற்பொழிவுகள் தேர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு. தக்க தகவுடைய சான்றுகளுடன் ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர்.

பேராசிரியர் அவர்களின் சுயசரிதை »