திருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் திருச்சி நாடக சங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு வினாநிரல் அனுப்பியிருந்தது. அதற்கு என் பதில்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
1. குழுவின் பெயர்
திருச்சிநாடகச் சங்கம், திருச்சி மற்றும் சென்னை.
2. முகவரி
(திரு. ஜம்புநாதனின் முகவரி)
3.குழுவின் பெயருக்கான காரணம்
சிறப்பாக ஒன்றுமில்லை. பங்கேற்ற நண்பர்கள் அனைவரும் திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஆதலின் திருச்சி நாடகச் சங்கம் என்று பெயரிடப் பட்டது.
4. குழு தொடங்கப்பட்ட சூழல்
தமிழ் நவீன நாடகம் என்று பெரிதாக அப்போது எதுவும் இல்லை (ஏன், இப்போதும் இல்லை). பரீக்ஷா, நிஜநாடக இயக்கம், கூத்துப்பட்டறை போன்ற ஒரு சில இயக்கங்கள் மட்டுமே இருந்தன. ஏற்கெனவே நாங்கள் திருச்சி வாசகர் வட்டம், சினிஃபோரம் என்ற அமைப்புகளை நடத்திவந்த நிலையில் நாடகத்துக்கும் எங்கள் பங்களிப்பைச் செய்வோம் என்ற எண்ணத்தில் இது தொடங்கப்பட்டது. 1978இல் என்று நினைக்கிறேன், வங்க நாடகாசிரியர் திரு. பாதல் சர்க்கார் சென்னையில் பயிற்சிப்பணிமனை ஒன்று நடத்தினார். அதில் திரு. ஆல்பர்ட், திரு. கோவிந்தராஜ், திரு. மனோகர், திரு. சாமிநாதன் போன்று திருச்சி நண்பர்கள் சிலர் பங்கேற்றனர். அதனால் நவீன நாடக உருவாக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. சிறுபத்திரிகைகளில் அப்போது வெளிவந்திருந்த நாற்காலிக்காரர்கள், காலம் காலமாக போன்ற நாடகங்களும் அதற்கு ஊக்கம் அளித்தன. திரு. ஆல்பர்ட் அவர்கள் இளம் வயதுமுதலாகவே நாடகங்கள் நடத்தி வந்தவர். கிறித்துவச் சார்பான நாடகங்களையும் நடத்தியிருந்தார். இத்துறை பற்றி நன்கறிந்தவரும் கூட. எனவே அவர் தந்த ஊக்கம் பெரிது.
5. குழு எப்போது தொடங்கப்பட்டது?
இன்ன நாள் என்று குறிப்பாகச் சொல்லமுடியாது. 1980இல் பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித் நாடகத்தை திரு. கோ. ராஜாராம் மொழிபெயர்த்தார். அதை நாடகமாக்க வேண்டும் என்று விரும்பித் தொடங்கினோம், அரங்கேற்றினோம். அந்நிகழ்ச்சியுடன் திருச்சி நாடக சங்கம் தொடங்கியதாகக் கொள்ளலாம்.
6. தொடக்கத்தில் குழுவின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்
திரு. ஆல்பர்ட், திரு. ஜம்புநாதன், திரு. பலராம், திரு. விக்டர் போன்றவர்கள். ஆல்பர்ட் ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். ஜம்புநாதன் பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்தார். பலராம், விக்டர் பிஎச்இஎல்-இல் பணிபுரிந்தனர்.
7. தொடக்கத்தில் குழுவின் உறுப்பினர்கள் விவரம்
திருச்சி வாசகர் வட்டம். சினிஃபோரம் ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் நாடகச் சங்கத்தின் உறுப்பினர்களே. ஏறத்தாழப் பத்துப் பேர் எனலாம். மேற்கூறிய ஆல்பர்ட், ஜம்புநாதன், பலராம், கோ. ராஜாராம் தவிர, அம்ஷன் குமார், மனோகர், கோவிந்தராஜ், பூரணச்சந்திரன், ராஜன் குறை போன்ற சிலர் அதன் முக்கிய உறுப்பினர்கள் எனலாம்.
8. குழு தயாரித்து நிகழ்த்திய முதல் நாடகம்
பிறகொரு இந்திரஜித் (ஏவம் இந்திரஜித்-வங்காளி மூலம்; தமிழில் கோ. ராஜாராம்)
9. குழுவிற்கான சமூக அரசியல் பார்வை
எல்லாரும் தமிழில் நவீனத்துவப் பார்வையும், அரசியலில் பெரும்பாலும் காந்திய அல்லது இடதுசாரிப் பார்வையும் கொண்டவர்கள் எனலாம்.
10. இந்த அரசியல் பார்வையோடுதான் உங்கள் முதல் நாடகம் தேர்வுசெய்யப் பட்டதா?
ஆம். முக்கியமாக அப்போது எழுத்து இதழ் வழிவந்த தமிழின் நவீனத்துவப் (மாடர்னிஸ்ட்) பார்வை எங்களிடையில் பிரபலமாக இருந்தது என்று கூறலாம். அத்துடன் பாதல் சர்க்கார் போன்றவர்களின் மென்மையான இடதுசாரி நோக்கும், ஓரளவு காந்திய நோக்கும், முக்கியமாக சமுதாயத்தில் ஒரு அதிருப்தி நோக்கும் உள்ளார்ந்து இருந்தன.
11. இந்த அரசியல் பார்வை உங்கள் குழு தயாரித்து நிகழ்த்திய அனைத்து நாடகங்களிலும் எதிரொலித்ததா?
ஆம். எங்கள் நாடகங்கள் வெளிப்படையான அரசியல் பேசுபவை அல்ல. ஆனால் பாதல் சர்க்காரின் நாடகங்களையும் பரீக்ஷா ஞானியின் நாடகங்களையும் இன்ன பிறவற்றையும் நோக்குபவர்கள் அவற்றில் வெளிப்படும் அரசியல் பார்வையை உணரமுடியும். அதுவே ஓரளவு எங்கள் பார்வையாகவும் இருந்தது.
12. குழுவில் உள்ள நடிகர்களுக்கான அரசியல் புரிதலை உருவாக்க என்ன முயற்சிகள் மேற்கொள்கிறீர்கள்?
தனித்த அப்படிப்பட்ட முயற்சி எதுவும் கிடையாது. உறுப்பினர்கள் யாவருமே உயர் மத்தியதர, மத்தியதர வகுப்பினர். நன்றாகப் படித்தவர்கள். ஆகவே அவரவர் அரசியல் பார்வையும் விமரிசனமும் அவரவர்க்கு இருந்தன. முன்னர்க் கூறிய போதாமை நோக்கு என்பது அடிப்படையாக எல்லாரிடமும் உணரப்பட்ட ஒன்று.
13. குழுவில் உள்ள நடிகர்களுக்கான பயிற்சிகளை எவ்வாறு கொடுக்கிறீர்கள்? யார் கொடுப்பது?
ஒவ்வொரு நாடகத்துக்கும் பெரும்பாலும் ஒரு மாத அளவுக்கு ஒத்திகை நடக்கும். நடிப்புப் பற்றி ஒன்றும் அறியாதவர்களாக இருந்தாலும் ஒத்திகை வாயிலாக அவர்கள் “ஃபார்முக்கு” வந்து விடுவார்கள். திரு. ஜம்புநாதன்தான் பெரும்பாலும் ஒத்திகையைக் கவனித்துப் பயிற்சி அளிப்பவர். நடிப்பிலும், வசன உச்சரிப்பு போன்றவற்றிலும் திருத்தங்கள் செய்வார். பிறர் கூடியிருந்தால் அவர்களும் சொல்வோம்.
14.உங்கள் நாடகக் குழு இதுநாள்வரை தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்கள் எவை?
ஏறத்தாழப் பதினைந்துக்கு மேல் இருக்கும். பிறகொரு இந்திரஜித், ஹயவதனா, அமைதி-அமைதி கோர்ட் நடக்கிறது, வேடந்தாங்கல் போன்றவை தொடக்கக் கால நாடகங்கள், முக்கியமானவை. பிறகு ஜம்புநாதன் முயற்சியால் பத்து நாடகங்களுக்கு மேல் நிகழ்த்தப் பட்டிருக்கலாம். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாடகங்கள்.
15. நாடகத் தயாரிப்பிற்கான செலவினங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
ஒத்திகை வரை அதிகச் செலவில்லை. தேநீர், நாடகப் பிரதி தயாரிப்பு போன்றவற்றைத் தவிர. முக்கிய ஒத்திகை (கிராண்ட் ரிஹர்சல்)இலும், நாடக அரங்கேற்றத்திலும் தான் செலவு. முக்கியமாக ஜம்புநாதனும் பிற நண்பர்கள் சிலரும் அதைப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம்.
16. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்திய நாடகங்களை நெறியாள்கை செய்தோர் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.
தொடக்கத்தில் திரு. ஆல்பர்ட். பிறகு திரு. ஜம்புநாதன் மட்டுமே நாடக இயக்குநர். பிறர் உதவியாளர்கள்.
17. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களின் பேசுபொருள் என்ன?
முன்னமே கூறியதுபோல, அமைப்பின் மீதுள்ள அதிருப்தி. சமூக அக்கறை.
18. அந்நாடகங்களின் வடிவம் குறித்த உமது பார்வை என்ன?
பெரும்பாலும் ஆங்கில, கன்னட, மராட்டி, வங்காளி நாடகங்களின் மொழிபெயர்ப்பாக இருந்ததால், அவற்றின் வடிவங்கள் மூலப்படைப்பைச் சார்ந்திருந்தன. பிரெஹ்ட் போன்ற நாடகாசிரியர்களின் தாக்கம் ஓரளவு உண்டு. அதனால் அவற்றின் வடிவம் பிரதானமாக வேறுபட்டுத் தெரிந்தது. அது தமிழ் மரபிலிருந்து வந்ததல்ல. எனவே பொதுமக்களைச் சென்று சேர்வதில் தடையிருந்தது.
19. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களின் உடை ஒப்பனை, இசை, மேடை அமைப்பு, ஒளி, ஒலிப் பயன்பாடு குறித்துச் சொல்லுங்கள்.
உடை ஒப்பனை, மேடை அமைப்பு பற்றி நண்பர்களுக்குள் நாங்களே தீர்மானித்துக் கொள்வது வழக்கம். இசையைப் பெரும்பாலும் பல்ராம் கவனித்துக் கொள்வார். ஒளி ஒலிப் பயன்பாட்டை எங்கள் ஆலோசனையின் பேரில்,திருச்சி ரசிகரஞ்சன சபா (ஆர்ஆர் சபா)வின் பணியாளரான சாமிநாதன் என்பவர் கவனித்துக் கொள்வது வழக்கம். அந்தந்த நாடகத்துக்கேற்றவாறு இவை அமைக்கப்படும்.
20. தமிழ்மண் சார்ந்த நிகழ்த்தல் மரபுக்கூறுகளை உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களில் எவ்வாறு கையாண்டுள்ளீர்கள்?
இதுதான் பிரதானமான பிரச்சினை. தமிழ் மண்ணின் வெளிப்பாடுகளான கூத்து, அரையர் சேவை, காலட்சேபம் போன்றவற்றின் கூறுகள் கையாளப்படவே இல்லை என்று கூறலாம். ஆங்கிலம் படித்த உயர்மத்திய வகுப்பினரால் அதேபோன்ற வகுப்பினருக்காகத் தயாரிக்கப்பட்டவை இவை. முற்றிலும் அப்போதைய தமிழ்ச் சூழலுக்கு வேறுபட்டிருந்தன என்றுதான் கூறமுடியும்.
21. உங்கள் குழுவிலிருந்து உருவான நடிகர்கள் யார் யார்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?
நடிகர்கள் என்று முக்கியமாக எவரையும் சொல்லமுடியாது. எல்லாம் அமெச்சூர் நடிகர்கள்தான். திரு. அம்ஷன்குமார் கலைத்திரைப்படங்கள் இயக்கும் இயக்குநர் ஆகிவிட்டார். இடையில் அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது என்ற விஜய் டெண்டூல்கரின் நாடகத்தில் தொடங்கி ஒரு சில நாடகங்களில் நடித்தவர், பிஷப் ஹீபர் கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்த திரு. ஏ. ஆர். முருகதாஸ். இன்று பெயர்பெற்ற திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர். அவரை உங்களுக்கே தெரியும்.
22. உங்கள் குழுவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஏதேனும் நாடகக்குழுவைத் தொடங்கி நடத்தி வருகின்றனரா?
அப்படி யாரும் இல்லை. ஆனால் திருச்சி நாடகச் சங்கத்தின் பாதிப்பினால், நான் (பேரா. க. பூரணச்சந்திரன்) மட்டும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் என் சொந்த முயற்சியால், ஊர்வலம் போன்ற ஐந்தாறு பாதல் சர்க்கார் நாடகங்கள், எங்கள் சொந்த நாடகங்கள் சிலவற்றைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தேன். சிலசமயங்களில் திருச்சியின் புறநகர்ப் பகுதிகளிலும் நடத்தியுள்ளேன். கடைசியாக நான் நிகழ்த்திய நாடகம், ‘ஈடிபஸ் அரசன்’. 2007இல் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் நடத்தப்பட்டது. அதற்குத் தலைமை ஏ. ஆர் . முருகதாஸ். என் நாடகங்கள் பெரும்பாலும் சமூகப் பணி முதுகலை படித்தவர்களுக்கும், சில இதழியலாளர்களுக்கும் (சான்றாக திரு. வள்ளியப்பன், தமிழ் இந்து) மக்கள் தொடர்பில் நல்ல பயனளித்தது.
23. உங்கள் குழு எங்கெல்லாம் நாடகம் நடத்தியுள்ளது?
பெரும்பாலும் திருச்சி ஆர். ஆர். சபாவில். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் என் முயற்சியால். திருச்சியின் சில புறநகர்ப் பகுதிகளில். நான் கல்லுக்குழி, பொன்னகர் போன்ற இடங்களில் நடத்தினேன். ஏறத்தாழ 2010 முதல் ஜம்புநாதன் சென்னைக்கு வந்துவிட்ட படியால், சென்னையில், பெரும்பாலும் ஃபிரெஞ்சு கான்சலேட் (அலையாஸ் ஃப்ராங்காய்ஸ்) மன்றம், மாக்ஸ்முல்லர் பவன் போன்றவற்றில்.
24. தமிழ் நவீன நாடகங்களில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
மிகக் குறைவு. திருச்சி நாடக சங்க நாடகங்களில் பெரும்பாலும் புரஃபஷனலாக நடித்துவந்த பெண்கள் சிலரையே ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. கல்லூரியில் அந்தப் பிரச்சினை இல்லை. எனது முதுகலை மாணவியர் நல்ல ஒத்துழைப்பு நல்கினர். நன்றாக நடித்தனர்.
25. உங்கள் குழுவில் பங்குபெறும் கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணி என்ன?
முன்பேகூறியது போல யாவரும் படித்து நல்ல வேலையில் இருந்த மத்தியதர வகுப்பினர். முழுக்க முழுக்க அமெச்சூர்கள். எவ்வித ஊதியமும் கருதியவர்கள் அல்ல. ஆனால் பொழுதுபோக்கான நாடகங்களைத் தயாரிக்கவும் இல்லை.
26. வருடத்திற்கு எத்தனை நாடகங்களை உருவாக்குகிறீர்கள்?
திருச்சி நாடக சங்கத்தில் 1980இல் தொடங்கி 2000 வரை ஏறத்தாழ ஆண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் இருந்தது. திரு. ஜம்புநாதன் சென்னைக்கு வந்துவிட்ட பிறகு இயன்றபோது என்று ஆகிவிட்டது.
27. ஒவ்வொரு நாடகமும் எத்தனை நிகழ்வுகள் நடத்த முடிகிறது?
ஹயவதனா, அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது போன்ற ஒரு சிலவற்றைத் தவிரப் பெரும்பாலும் ஒரே ஒருமுறை மட்டுமே.
28. நாடக ஒத்திகைக்கான இடங்கள் கிடைப்பதில் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?
எதுவும் இல்லை. காரணம், திரு. ஜம்புநாதன் அவரது வீட்டிலேயே நாடக ஒத்திகைகளை நடத்துவது வழக்கம்.
29. உங்கள் குழுவின் நாடகங்களுக்கெனக் கட்டணம் வசூலிப்பதுண்டா?
ஆர். ஆர். சபாவில் நிகழ்த்தியவற்றுக்குக் கட்டணம் உண்டு. ஆனால் வசூல் மிகமிகக் குறைவாகவே இருக்கும். காரணம், தெரிந்தவர்கள், நண்பர்கள், குழுவினர் யாரும் கட்டணம் செலுத்திப் பார்த்ததில்லை.
30. கட்டணம் வசூலிப்பதாக இருந்தால் கட்டணத் தொகை எவ்வளவு?
ஆர். ஆர். சபாவின் அக்காலக் கட்டணத் தொகைதான். பெரும்பாலும் பத்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய்க்குள்தான் இருக்கும்.
31. பார்வையாளர்கள் கட்டணம் செலுத்தித்தான் பார்க்கிறார்களா?
வினா 29இன் விடைதான் இதற்கு.
32. உங்கள் குழுவின் நாடகங்களுக்கென தொடர் பார்வையாளர்கள் இருக்கின்றனரா?
ஓரளவு அப்படித்தான். பார்வையாளர்களில் வெகுசிலரைத் தவிர, பெரும்பாலும் மற்றவர்கள் நாடகச் சங்க நண்பர்கள் தங்கள் தங்கள் நண்பர்களை அழைத்துவருவதுதான் வழக்கம்.
33. உங்கள் குழுவில் நடிக்க வரும் கலைஞர்கள் தொடர்ந்து நாடகச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனரா?
இல்லை. ஜம்புநாதன் ஒருவர் மட்டுமே நாடகங்களை இப்போதும் தயாரித்து வருகிறார்.
34. கல்வி வளாகங்களில் உங்கள் நாடகங்கள் நிகழ்த்தப்படுவதுண்டா?
எனது நாடகங்கள் மட்டும் பிஷப் ஹீபர் கல்லூரியிலேயே தயாரிக்கப்பட்டு அங்குள்ள திறந்த வெளி அரங்கில் நடத்தப்பட்டன.
35. கல்வி வளாகங்களில் நாடகத்திற்கான தேவை குறித்த தங்கள் பார்வை என்ன?
கண்டிப்பாக மாணவர்களுக்கு நாடகங்கள் தேவை. நாடகங்கள் மாணவர்களின் கலைத்திறனையும் வாழ்க்கைப் பார்வையையும் விசாலப்படுத்துகின்றன, நல்ல குடிமக்கள் ஆக்குகின்றன என்று கூறலாம். அவர்கள் அதில் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக சோஷியல் ஒர்க் படிக்கும் மாணவர்கள் பலர் இப்பயிற்சியால் தாங்கள் மிகவும் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் பயிற்சி தரும் ஆசிரியர்கள்தான் மிகமிகக் குறைவு. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை, நான் திரு. மு. இராமசாமி, திரு. பரீட்சா ஞாநி, திரு. சண்முகராஜா போன்ற ஆர்வலர்கள் பலரை அழைத்துப் பயிற்சி தந்திருக்கிறேன். மு. இராமசாமியின் ஸ்பார்டகஸ் நாடகம் எங்கள் பிஷப் ஹீபர் கல்லூரியில் மூன்று முறை நிகழ்ந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையில் நவீன நாடகத்தைக் கொண்டு சென்றால்தான் அது வளருவதற்கான வாய்ப்பிருக்கிறது.
36. தமிழகத்தில் நாடக முயற்சிகளுக்கு அரசு சார்ந்த பங்களிப்பு எவ்வாறு உள்ளது? அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இப்போது நாடக முயற்சிகளுக்கு அரசு சார்ந்த பங்களிப்பு அறவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை பல்கலைக்கழக நாடகத் துறைகளுக்கு அரசு பணம் செலவிடக் கூடும். ஆனால் எந்தத் தனியார் குழுவுக்கும் அரசு நிதி உதவியதாகத் தெரியவில்லை. மேலும் தனி நாடகக் குழுக்கள் நடத்தும் பெருமளவு நாடகங்கள் அரசு கருத்தியலுக்கு எதிராகத்தான் அமைய இயலும். அதனால் அரசின் புறக்கணிப்புதான் இருக்குமே ஒழிய ஆதரவுக்கு வழியில்லை. தமிழக அரசு பல்வேறு தலைப்புகளில் வழங்கும் பரிசுகளும் அதன் ஆதரவாளர்களுக்கே தரப்படுகின்றன. பொதுவாக தமிழில் நாடகத்துறை அரசைச் சார்ந்து வளர இயலாது. அரசு இவற்றின் பணிகளில் குறுக்கிடாமல் இருந்தாலே போதுமானது.
37. தமிழகத்தில் நவீன நாடகத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டா?
இப்போது இல்லை. நாடகங்களைப் போட்டு வருமானம் பெற்றுக் கலைஞர்கள் வாழ முடியாது. கூத்து போன்ற பழங்கலைகளுக்கும் இதே நிலைதான். வாழ்க்கைத் தொழிலை வேறு ஒன்றாக வைத்துக்கொண்டு, அமெச்சூராகத்தான் இன்று கலைஞர்கள் இயங்க முடியும்.
38. தமிழகத்தில் கடந்த காலச் செயல்முறைகளின் மூலம் நாடகத்துறை கண்டடைந்துள்ள வளர்ச்சி எவ்வாறு உள்ளது?
பெரும்பான்மை மக்களிடையில் நவீன நாடகங்கள் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே என் கணிப்பு. பொதுமக்கள் பங்கேற்பு அதிகரிக்காமல், பரவாமல், எந்தக் கலையும் வளர முடியாது. பாமர மக்கள் பார்வையில், “இதெல்லாம் வேலையத்த வசதியான பயலுக செய்யற வேலை”.
39. நீங்கள் அறிந்துள்ள நவீன நாடகக் குழுக்கள் பற்றிச் சொல்லுங்கள்.
நான் பழைய ஆள். ந. முத்துச்சாமியின் கூத்துப்பட்டறை, மு. ராமசாமியின் நிஜநாடக இயக்கம், ஞாநியின் பரீட்சா நான் நன்கறிந்தவை. மங்கையின் நாடக அமைப்பு, முருகபூபயின் நாடக அமைப்பு, ஆறுமுகத்தின் முயற்சிகள் போன்றவற்றைக் கேள்விப்பட்டுள்ளேன். மார்க்சியக் கட்சிகள் (தமுஎச, மகஇக…) சார்ந்த நாடமுயற்சிகள் பற்றியும் அறிவேன். மற்ற பிற பற்றி எனக்குத் தெரியாது.
40. தமிழகத்தில் நவீன நாடகத்திற்கான சூழல் எவ்வாறு உள்ளது?
நன்றாக இல்லை என்பது என் கணிப்பு. சினிமா, தமிழ் நாடகத்தை முற்றிலும் அழித்துவிட்டது. அதுதான் மிகப் பெரிய எதிரி. சபாக்களில் நடத்தினாலும், மக்களிடையில் நடத்தினாலும், முதலில் பணம் தேவையாக இருக்கிறது. அரசோ, பெருமுதலாளிகளோ யாரும் இப்படிப்பட்ட நிதி உதவியில் ஆர்வம் காட்ட வாய்ப்பில்லை. அதனால்தான் நவீன நாடகக் குழுக்கள் குறுங்குழுக்களாகத் தங்கள் ஆர்வத்தைத் தணித்துக் கொள்வதாக உள்ளன. இவற்றில் சில அயல்நாட்டு, உள்நாட்டு அடிப்படை நிறுவனங்களை (Foundations) நம்பியும் உள்ளன.
41. மற்ற நாடகக் குழுவினரோடு உங்களது தொடர்பு எவ்வாறு உள்ளது?
பெருமளவு இல்லை என்றே கருதுகிறேன். நாடகம் நடத்தினால் அழைப்பு அனுப்புவது அளவில் உள்ளது எனலாம்.
42. உங்கள் குழு நடத்திய நாடகங்களின் ஒளிப்படங்களை இணைக்கவும்.
இணைக்கப் பட்டுள்ளது.
ஒப்பம்- முனைவர் க. பூரணச்சந்திரன்,
முன்னாள் பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி-17.


பாதல் சர்க்கார் நாடகவிழா

பாதல் சர்க்கார் நாடகவிழா

பேராசிரியர் கோவை வாணன்,
(அரசு கலைக்கல்லூரி, கோவை.)

27-09-1989 அன்று உருவாக்கிய பதிவு.

Badal Sarkar Drama Workshop Invitation - Front

Badal Sarkar Drama Workshop Invitation - Back

 

எல்லாக் கலைகளிலும் இரண்டுவிதமான போக்கு என்றும் இருந்து வருகிறது. ஒன்று மனிதனை வெறுமனே மகிழ்விப்பதையும், இருக்கும் சமுதாய அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை நியாயப்டுத்துவதையும், வியாபாரத்தையும் நோக்கமாகக் கொண்டது. மனிதனைத் தற்போது உள்ள தளத்திலிருந்த அடுத்த தளத்திற்கு உந்திச் செல்வதாயும், சமூகத்தை உன்னதமான உயர்தளத்திற்கு எடுத்துச்செல்வதாயும் பெருமைகளையும் இலாபத்தையும் எதிர்பார்க்காததாயும் சிரமங்களும் தியாகங்களும் நிறைந்ததாயும் அமைந்திருப்பது இரண்டாம் வகைக் கலைகள். இது சிறுபான்மையோரால் சிறுபான்மையோர் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் இவ்வகைக் கலைஞர்கள்தான் மனித மேன்மையையும் கலையையும் காப்பாற்ற சிலுவை தூக்கியவர்கள்.

1989 செப்டம்பர் 22, 23, 24 மூன்று தினங்கள் திருச்சி தூய வளனார் கல்லூரியில் மேற்குறித்த இரண்டாம் வகை அற்புதம் நிகழ்ந்தது. இந்திய நாடக ஆசிரியர்களில் கவனத்திற்குரியவரான வங்காள நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் நாடக விழாதான் அது. சுமார் 350 பேர் கலந்துகொண்டார்கள் என்பது தமிழனின்மீது அவநம்பிக்கை கொண்டவர்களை யோசிக்கச் செய்தது.

இவ்விழா இரண்டு தன்மைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பொருத்தமே. ஒன்று, நாடகங்களை நிகழ்த்துவது. பின்னர் அது பற்றி விவாதிப்பது. இரண்டு, நாடகத்தளம் பற்றிய கட்டுரைகளைப் படிப்பது. பின்னர் அதை விவாதிப்பது. ஒருவழிப் பாதையாய் இல்லாமல் விவாதமும் நாடகமும் நிகழ்த்தப்பட்டு அது பற்றி விவாதிப்பதும் மிகச் சரியான நிகழ்முறை. அது இவ்விழாவில் சரியாகவே கையாளப்பட்டது. விவாதங்கள் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், சிந்தனைகள் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத் துவதாக அமைந்திருந்தது. விவாதங்களில் பங்கு கொண்டோரில் பரீட்சா ஞானி, அஸ்வ கோஷ், கோ. ராஜாராம், அம்ஷன் குமார், எம். டி. முத்துக்குமாரசாமி ஆகி யோர் குறிப்பிடத்தகுந்த கருத்துகளை முன்வைத்தனர். எஸ். ஆல்பர்ட், கோ. ராஜாராம், எம். டி. முத்துக்குமாரசாமி, வீ. அரசு, மு. ராமசாமி ஆகியோர் கட்டுரை வாசித்தனர். வீ. அரசு, எம். டி. எம். ஆகியோரின் கட்டுரைகள் கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளாயின. இதுபோன்ற விமரிசனங்கள் உண்மையை நோக்கி, சரியான திசைவழியை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. சண்டைகள், உணர்ச்சிக் கொட்டல்கள், ஆவேசம், கட்சித் துதிபாடல் முதலியவற்றை விடுத்து விவாதங்கள் இன்னும் ஆரோகியமாக நடைபெறுவது தமழனுக்கு நலம் பயக்கும் என்பது கருத்தரங்க அனுபவமாயிருந்தது. ஆனாலும் சில கடுமையான விமரிசனங்களைக் கட்டுரையாளர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இது நிகழ்ந்தே தீரும். இதுபற்றிக் கட்டுரையாளர்களோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ வருத்தமோ கோபமோ கொள்ள வேண்டியதில்லை.

இவ்விழாவில் முக்கியமான பகுதி, நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதுதான். பாதல் சர்க்காரின் ஆறு நாடகங்கள் ஆறு குழுக்களால் நிகழ்த்தப்பட்டன. ஆறு நாடகங்களை யும் தமிழாக்கம் செய்திருப்பவர் கோ. ராஜாராம்.

1. ஊர்வலம்
சென்னை பரீட்சா குழுவினர் இதை வட்டமான அரங்கில் நிகழ்த்தினர். வீட்டையும் தன்னையும் தன் பையனையும் தொலைத்துவிட்டு இவைகளைத் தேடி அலைபவனுக் குக் குறுக்கே நாளரு வரிசையும் பொழுதொரு கூட்டமுமாய் ஊர்வலங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஊர்வலங்கள் யாருக்காகவோ எதற்காகவோ நடத்தப்படு கின்றன. தனக்கான ஊர்வலம் எப்போது வரும் என்று காத்திருக்கிறான் எல்லாவற் றையும் தொலைத்துவிட்டுத் தேடுபவன். சொல்லப்பட்ட விஷயத்திலும் நிகழ்த்தப்பட்ட விதத்திலும் வெகுதீவிரத்தன்மையும் உண்மையும் வெளிப்பட்டன. பரீட்சா குழுவின் உழைப்புக்கு வெற்றியே கிட்டியது.

2. பிறகொரு இந்திரஜித்
சென்னை கூத்துப்பட்டறையினர் இதை மேடைநாடகமாக நிகழ்த்தினர். அமல், விமல், கமல் என்று சராசரி வாழ்க்கையின் முகமற்று உழன்று கொண்டிருக்கும் கூட்டத்தில் நிர்மல் சுயமுகத்தோடு இந்திரஜித்தாக வாழப் போராடித் தோற்றுப்போய் அமல், விமல், கமல், பிறகு ஒரு இந்திரஜித்தாக சராசரித்தனத்திற்கு வந்து சேர்வதுதான் கதை. இந்திரஜித் தன் சுயமுகத்தைக் காப்பாற்றிக்கொள்ள நிகழ்த்தும் போராட்டம் நம் ஒவ் வொருவருக்குள்ளும் நிகழ்கிறது. நாடகம் பிசிறு இல்லாமல் சுத்தமாகக் கலைவடிவம் ஆக்கப்பட்டிருந்தது.

3. இந்திய வரலாறு
ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் இந்தியா விடுதலை பெற்ற வரலாற்றையும் அதிகாரம் தரகர்கள் கையில் மாறியதையும் அரசியல், பொருளாதாரப் பார்வையில் மிகச் சரியாகவே நாடகம் சொல்கிறது. நாடக வடிவாக்கம் செய்வதில் கடினம் நிறையவே உள்ளது. இருபபினும் கடின முயற்சியில் நாடக உருவாக்கம் தந்திருந்தார்கள், மதுரை சுதேசிகள் குழுவினர். தொடர்ந்து நீளமான வசனங்கள், கூட்டமாகச் சேர்ந்து பல உரையாடல்கள் ஒலித்தமை நாடகத்தோடு நம்மை ஒட்டாமல் செய்துவிடுகிற அபாயம் ஏற்பட்டது. வசனங்கள், உடல் அசைவுகள் முதலியவை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டதாக இல்லாமல் போனதால் கலையாக்கத்தில் குறைபட்டுப் போனது. நிதானம் தேவை. ஒரே மூச்சில் நாடகத்தைக் கொட்டிவிட வேண்டும் என்பதுபோல் பட்டது. இருப்பினும் பரீட்சா ஞானி கூறியதுபோல், தன்னளவில் இது ஒரு வெற்றிப் படைப்பு தான்.

4. போமா
சென்னை லயோலாக் கல்லு£ரி மாணவர்களால், பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் நிகழ்த்தப்பட்டது. கிராமத்தைச் சுரண்டிக் கொழுக்கும் நகரத்திற்கே மேலும் மேலும் அரசு கோடிகோடியாய்ச் செலவிடுவதையும் அதன் அபாயத்தையும் மனசில் பதட்டத்தையும் எதிர்காலம் பற்றிய அச்சத்தையும் வெளிப்படுத்தியது இந்நாடகம். வட்டமான அரங்கில் நிகழ்ந்தது. காடு, மரம், கிராமம், விவசாய அழிப்பு என்பது மனிதன் தனக்குத்தானே தோண்டிக்கொள்ளும் பிணக்குழி என்பதை எவ்வளவு அற்புதமாக உணர்த்திவிடுகிறது இந்நாடகம். பின்னணியில் கொடுக்கப்பட்ட மிருதங்க இசை இந்நாடகத்திற்கு மேலும் ஆழத்தையும் உணர்ச்சியையும் பரிமாணத்தையும் கூட்டியது.

5. மீதி சரித்திரம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியினரால் மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்டது. சமகால மனிதனின் வாழ்க்கை யதார்த்தத்தை மேடையில் நிறுத்துகிறது. தற்கொலை செய்துகொள்வதற்கான சகல காரணங்களும் நம்மிடம் உண்டு. ஆனால் அதேசமயம் உயிரோடு வாழ்ந்தே தீரவேண்டிய உயர்காரணங்களும் கூடவே உண்டு. தற்கொலை செய்துகொண்ட ஒருவனிடம் “நீ ஏன் தற்கொலை செய்துகொண்டாய்?” என்று ஒருவன் கேட்பதும், அதற்கு அவன் நீ ஏன் இன்னும் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்கிறாய்? என்று கேட்பதுமாக வாழ்வின் இருப்பு பற்றிய வினாத் தொடுக்கிறது இந்நாடகம். நிகழ்த்தப்பட்ட விதத்தில் இந்நாடகம் தோல்வி கண்டது. இந்நாடகத்தில் நடித்த நடிகர்கள் இத்தோல்விக்க இம்மி யளவும் காரணமாக மாட்டார்கள். ஒலிபெருக்கி ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்பட வில்லை என்று ஏற்பாட்டாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துவிட்டு நிம்மதி அடையமுடியாது. நீளமான, குறுகிய வசனங்களைக் கதாபாத்திரங்களிடம் பேசாமல், பார்வையாளர்களை நோக்கியே பேசிக்கொண்டிருப்பது பழைய சபா நாடகங்களில் பயன்படுத்தப்படும் தேய்ந்துபோன உத்தி. அதை இன்னும் பிடித்துத் தொங்கி நிகழ்வு களில் உயிரோட்டம் இல்லாமல் கேலிக்கூத்தாகப் போய்விட்ட அவலம் நிகழ்ந்தது. இதை சுயவிமரிசனத்தோடும் அடக்கத்தோடும் ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்த இந்நாடக இயக்குநர் அ. ராமசாமியின் மீது மதிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. இப்பள்ளியின் இயக்குநர் இந்திரா பார்த்தசாரதி என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.

6. ஸ்பார்ட்டகஸ்
மதுரை நிஜ நாடக இயக்கம் புல்வெளியில் வட்டமான அரங்கில் நிகழ்த்தியது. இந்த மூன்று நாள் நாடகத்தின் பெரிய சாதனை, கொடை இந்த நாடகம் எனலாம். உடல் மொழியை மிக ஆற்றலோடு பயன்படுத்திக் காண்போரைத் திகைக்கச் செய்துவிட்ட கலைத்தரமான படைப்பு. கி.மு. 71இல் ரோமப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த திராசிய கிளேடியேட்டர் ஸ்பார்ட்டகஸ் என்பவனைவைத்து உருவாக்கப்பட்ட நாடகம் இது. இன்னும் அடிமைகளாக இருந்துகொண்டிருக்கும் நமக்கும் இந்த அடிமைகளின் போராட்ட வரலாறு உத்வேகத்தை அளிக்கிறது. “இந்த மண்ணிலிருந்துதான் ஸ்பார்ட்ட கஸ் தோன்றினான். ஸ்பார்ட்டகஸ் அழிந்துவிட்டான். ஆனால் இந்த மண் இன்னும் இருக்கிறது” என்று நாடகமுடிவில் ஒலிக்கப்படுட்ம குரல்தான் எத்தனை அர்த்தமுள்ளது? இந்த நாடகத்திற்கு ஸ்பார்ட்டகஸ் கதாநாயகன் இல்லை. அடிமைகள் தான் கதாநாயகர்கள். ஸ்பார்ட்டகஸ் என்பது ஒரு கருத்தாக்கம், குறியீடு. ஒரு கருத்தியல் என்று கோ. ராஜாராம், அம்ஷன்குமார் ஆகியோர் சொன்ன கருத்துரைகள் மேலும் இந்த நாடகத்தை விளங்கிக்கொள்வதற்கு உதவியாய் இருந்தன. பார்த்தவர்க ளைப் பரவசப்படுத்திய ஸ்பார்ட்டகஸ் நாடகத்தின் இயக்குநர் மு. ராமசாமி நாடக முடிவில் கருத்துரை வழங்க வந்தபோது உணர்ச்சிவசப்பட்டதில் நியாயம் இருக்கிறது.

இந்த நாடகங்களில் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்முறைக் கலைஞர்கள் அல்லர். மாணவர்கள், ஆசிரியர்கள். இன்னும் பலவேறு துறைகளில் பணியாற்றி வருபவர்கள். அலுவல் நேரம் போக தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் பயிற்சி செய்து இந்த நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை முக்கியமாய் கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு ஊழியர்கள் வேலை நேரத்தையும் வேலை நாட்களையும் வேலை பளுவையும் அரசாங்கங்கள் அதிகமாக்கிக்கொண்டே வருவதன் உள்நோக்கம் என்ன என்பதைத் தற்போது நாம் நன்றாக விளங்கிக் கொள்கிறோம். ஒரு மலையடிவார கிராமத்திலிருந்து திருச்சியை நோக்கி இதற்குப் புனித யாத்திரை செய்த நான், எங்கள் பங்குத் தந்தை குழந்தை ராஜன், லயம் சுப்பிரமணியம் ஆகிய மூவருக்கும் இந்த மூன்று நாள் கவனிப்பு ஓர் இனிய அனுபவம்.
இந்த நாடக விழாவில் படிக்கப்பட்ட கட்டுரைகள், நிகழ்த்தப்பட்ட விவாதங்கள், பாதல் சர்க்கார் நாடகங்களை நிகழ்த்திய நாடகக்குழுக்கள் பற்றிய செயல்பாடுகள், பாதல் சர்க்கார் நாடகங்கள் பற்றிய குறிப்புகள் அனைத்¬த்யும் தொகுத்து நு£லாகக் கொண்டுவர விழா ஏற்பாட்டாளர்கள் எண்ணியிருப்பதாக அறிகிறேன். அப்படி வெளிவருமானால் தமிழ்நாடகம் பற்றிய புதிய ஒளிகளை அது வழங்கும். தமிழ் மூளையில் நூற்றாண்டுக் கணக்கில் ஏறியுள்ள களிம்பைக் கொஞ்சம் கழுவும்.

திருச்சி நாடகச் சங்கமும் பண்பாடு மக்கள் தொடர்பகமும் இந்த விழாவை மிகவும் ஒழுங்கான வடிவத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழ்நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையையும் தமிழ் மூளைக்குள் நாடக உணர்வைச் செழுமைப் படுத்தலை யும் செய்த இவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களின் கடுமையான உழைப்பு மரியாதைக்கும் பாராட்டுதலுக்கும் வெகுகாலம் நினைவுக்கும் உரியது. குறிப்பாக  திரு. க. பூரணச்சந்திரன்,  திரு. எஸ். ஆல்பர்ட்,  தந்தை அகுஸ்தீன் முதலியோர் இந்நிகழ்ச்சி யின் சூத்திரதாரிகள்.
27-09-1989


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 5 (இறுதிக்காட்சி)

ஈடிபஸ் அரசன் நாடகம்காட்சி 5 (இறுதிக்காட்சி)

புதிய தூதன்: தீப்ஸ் நாட்டு முதியவர்களே, நாட்டின் பெருமை வாய்ந்தவர்களே! எத்தனை பயங்கரமானவற்றை இப்போது பார்த்தீர்கள்… கேட்டீர்கள்… கால மெல்லாம் நாம் எத்தனை விசனப்படவேண்டி வந்துவிட்டது. தீப்ஸ் நாட்டு எல்லைக் கோட்டையும் புனிதமாகக் கருதும் பெரியோர்களே, இந்த நாட்டில் ஓடும் நதிகள்கூட இந்தப் பாவத்தை இனி கழுவ முடியாது….தெரியாமல் செய்த பாவங்கள் போனால் போகட்டும்! வீம்பாய்ச் செய்த பாவங்கள் இப்போது வீதிக்கு வருகின்றன….மிகப் பெரிய துயரங்கள் எவை என்றால், நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் துயரங்கள்தான்….

பா.கு.தலைவன்: நிச்சயம், நண்பரே, நிச்சயம். நாம் இதுவரை பட்ட துயரங்கள் போதும். நீ இப்போது எந்தத் துயர் பற்றிப் பேசுகிறாய்?

தூதன்: அரசியார் இறந்துவிட்டார்.

பா.கு.தலைவன்: பரிதாபத்துக்குரிய அரசி! யார் கொன்றார்கள் அவளை?

தூதன்:  தன்னைத்தானே கொன்றுகொண்டார். நடந்தது ஒன்றும் உனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு? நேரில் பார்த்த எனக்கு எப்படியிருக்கும்? எங்களைவிட் டுச் சென்றபோது துக்கம் தாளாத மனத்துடன் கூந்தலைத் தன் கைகளால் இறுகப் பற்றியவாறு அமைதியாக அறைக்குள் ஓடினார்… தாளிட்டுக்கொண்டார் அறையை…. அது ஈடிபஸ் பிறந்த அறை… தன் தந்தையைக் கொலைசெய்யப் பிறந்த குழந்தை இருந்த அறை…. லேயஸ் இறந்தபின்னும் அரசி கதறியழுத அறை… தன் கணவனால் ஒரு கணவன் கொடுக்கப்பட்ட அறை… ஈடிபஸ் அழுது கதறியவண்ணம் எங்களுடனே இருந்தார்… திடீரென்று அரசியின் அறையிலிருந்து சத்தம்…. எங்களில் ஒருவருடைய கத்தியைப் பிடுங்கிக்கொண்டு ஓடினார் அரசியின் அறையை நோக்கி… மனைவி! அவருடைய குழந்தைகளையும் அவரையும் வயிற்றில் தாங்கியிருந்த மனைவி. அங்கு இதயத்தைப் பிளக்கும் குரல் கேட்டது. கதவின் தாள்கள் முறிபட்டன. அறையில் அரசி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். கயிற்றின் முடிச்சைத் தளர்த்தி பூமியில் இறக்கியபோது மாபெரும் விம்மல் வெடித்தது அவரிடம்.

அடுத்து நடந்தவற்றை நான் மறந்துபோக முடியுமானால் நான் பேறுபெற்றவன். அரசியின் அங்கியிலிருந்து இரண்டு தங்க ஊசிகளைச் சரக்கென்று பிடுங்கித் தன் கண்களில் பாய்ச்சிக்கொண்டார் ஈடிபஸ்.

“சுற்றியிருக்கும் துயரங்களை நீ பார்த்தது போதும். என் செயலால் விளைந்த கொடுமைகள் இவை. நீ பார்க்கக்கூடாத முகங்களைப் பல நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்தாய். தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய முகங்களைப் பாராமல் குருடனாய் இருந்தாய். இந்த நேரத்திலிருந்து நீ இருண்டுபோ……” என்று சொல்லிக்கொண்டே ஒரு முறை அல்ல, பல முறை தன் கண்களில் குத்திக்கொண்டார். முகத்தில் ரத்தம் வழிந்து சொட்டியது. சிவப்பு ஊற்றாகக் கண்களிலிருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டி ருந்தது.

இருவரின் சோகத்திலிருந்தும் ஆண்பெண் இருபாலார் மேலும் சாபம் படர்ந்துவிட்டது. தீமை எழுந்தது. லாப்டகோஸ் வம்ச அரண்மனையில் எப்போதுமே ஆனந்தம் கூத்தாடும்…. இன்று அந்த ஆனந்தம் எங்கே போய்விட்டது? இன்று அழுகை, புலம்பல், அழிவு, அவமானம், துயரம், மரணம்…. மனித குலத்தின் துயரங்கள் அத்தனையும் மொத்தமாக அவர்கள் சொத்தாகிவிட்டது…

பா.கு.தலைவன்: இன்னும் அரசரின் துயரத்துக்கு விடிவில்லையா? துயரத்தோடுதான் இருக்கிறாரா?

தூதன்: காவலாளியைக் கூப்பிட்டுக் கதவுகளை முழுதாகத் திறந்துவைக்குமாறு சொன்னார். தன்னுடைய தந்தையைக் கொலைசெய்தவனை – தாயை… இல்லை, இல்லை – என்னால் அதைச் சொல்லமுடியாது – எல்லாரும் பார்க்கும்படி இருக்கட்டும் என்றார். தீப்ஸை விட்டே செல்லப்போகிறார்.
தன் வீட்டைச் சுற்றியிருக்கும் சாபம் விலகட்டும் என்று தானே விதித்துக்கொண்ட தண்டனை இது.
பலவீனமாக இருக்கிறார். அவரை அழைத்துச் செல்லவும் ஒருவருமில்லை. துயரக் கடலில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டு…

அதோ பார்… கதவுகள் திறக்கின்றன… சில நொடிகளில் கல்லையும் உருக்கும் காட்சியைக் காண்பாய்…
(நடுக்கதவு திறக்கிறது. ஈடிபஸ் குருடனாக வருகிறான்)

பா.கு.தலைவன்: கடவுளே, மனிதர்கள் பார்க்கவே பயங்கரமான காட்சி… இதைப் போன்ற காட்சியை என் கண்கள் கண்டதே இல்லை…ஈடிபஸ், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?

மனிதன் சுமக்கவே முடியாத துயரங்களை உன் தலையில் எந்த வேதாளம் ஏற்றி வைத்தது? நீயே உன்னைப் பார்த்துக்கொள், அழிந்துபோய் நிற்கிறாய் நீ. என்னால் முடியுமானால்… பேச, கேள்வி கேட்க. சிந்திக்க… முடியும். ஆனால் உன்னைப் பார்க்க எல்லையில்லா நடுக்கம்தான் உண்டாகிறது.

ஈடிபஸ்: கடவுளே, கடவுளே…இதைவிடக் கொடிய சோகம் இருக்கிறதா? நான் எங்கு போய்ப் புகலிடம் தேடுவேன்? என் குரல் எங்கேயோ எட்டாத இடத்தில் சென்று தேய்கிறது… கடவுள் ஏன் என்னை இப்படிச் செய்துவிட்டான்?

பா.கு.தலைவன்: சிந்தித்துப் பார்க்கவும் முடியாத துயரம்.

ஈடிபஸ்: இரவு மேகங்களே! எங்கேயும் போய்விடாதீர்கள்… இரவு வருகிறது… அதை எப்படி நான் காணமுடியும்… சல்லாத்துணிபோல் மெல்ல வருகிறது… தென்றல் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தது. கண்கள் இருந்த இடத்தில் ஊசிகள் பாய்ந்த வலி. வெள்ளமாய்ப் பாயும் நினைவுகள் தரும் வேதனை.

பா.கு.தலைவன்: இது அதிசயமல்ல. இரட்டிப்பாக அனுபவிக்கிறாய் நீ. வலியினால் துன்பமும், துன்பத்தினால் வலியும்.

ஈடிபஸ்:  நண்பரே, இன்னும் என்னிடம் நீராவது நன்றியுடன் இருக்கிறீர்… என்னருகில்தானே நின்றுகொண்டிருக்கிறீர்… இந்தக் குருடன்மேல் இரக்கம் வைத்துப் பொறுமையாய் இங்கே இருப்பீரா?

குருடன்! என்னுடன் யார் இருக்கிறார்கள் என்பதைக் குரலால் மட்டுமே அறியக்கூடிய குருடன். எனக்கு வந்த புதிய இருட்டு என் நண்பரை மறைத்தாலும் அறியக்கூடிய குருடன்.

பா.கு.தலைவன்: கொடிய காரியம்! என்றைக்குமே இரவாகப் போகும்படி இதை உன்னைச் செய்யும்படி தூண்டியது எந்தக் கடவுள்?

ஈடிபஸ்: அப்போலோ! அப்போலோ! குழந்தைகளே, அந்தக் கடவுள் அப்போலோ. வியாதிபிடித்த விதியை என்மீது ஏவினான். ஆனால் என் கண்களைக் குருடாக்கிக் கொண்டது என்னமோ என் கைதான். கண்கள் முன்னால் எல்லாமே பயங்கரமாக இருக்கும்போது நான் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?

பா.கு.தலைவன்: எல்ல இடங்களிலுமே பயங்கரம்… உண்மைதான்.

ஈடிபஸ்: இப்போது எஞ்சியிருப்பது என்ன? நிழல்கள்? அன்பு? புலன்களுக்கு இனிக்கும் வாழ்த்துகள்? இன்னும் ஏதாவது இருக்கிறதா? ஆ!… இல்லை, நண்பரே… என்னைக் கூட்டிச் செல்லுங்கள். தீப்ஸிலிருந்து என்னைக் கூட்டிச் செல்லுங்கள். கடவுளே கண்டு வெறுக்கும் அழிவையும் அவலத்தையும் தாங்கிநிற்கும் ஈடிபஸை இங்கிருந்து கூட்டிச் செல்லுங்கள்.

பா.கு.தலைவன்: உனது துயரம் மகத்தானது. உண்மையை நீ அறியவே இயலாதவாறு கடவுள் செய்திருந்தால்…

ஈடிபஸ்: மலைப்பாறையில் என்னைக் காப்பாற்றி எனக்கு உயிர் கொடுத்தவன் மாண்டு போகட்டும்! என்ன வாழ்க்கை! நான் அன்றே இறந்திருந்தால்… இந்தப் பெரு நாசத்தின் சுமை என்னையும் என் கண்மணிகளையும் வீழ்த்தியிருக்காது…

பா.கு.தலைவன்: அப்படியே நடந்திருந்தால் நல்லது.

ஈடிபஸ்: என் தந்தையின் ரத்தம் பூசிய கைகளோடு இங்கே வந்து என் தாய்க்கே கணவனாகி… ஐயோ, சபிக்கப்பட்டவனே! தீமையின் குழந்தையே! நீயும் அந்தக் கட்டிலுக்குப் போனதுதான் கொடிய பாவம்… அதுதான் என்மேல் வீழ்ந்தது.

பா.கு.தலைவன்: உனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை… இப்படிக் குருட னாக உயிருடன் திரிவதைவிட மாண்டுபோயிருக்கலாம் நீ…

ஈடிபஸ்: அறிவுரை போதும். நானே எனக்குக் கொடுத்துக்கொண்ட இந்தத் தண்டனை நியாயமானதே. எனக்குக் கண்கள் இருந்தால் இறந்தவர் உலகில் தோன்றும் என் தந்தையையோ தாயையோ எப்படிப் பார்ப்பேன்? இருவர்க்கும் பழிசெய்தவன் நான். இறந்துவிடடால் சுலபமாகப் போய்விடும் என்பதால்தான் நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

பிறந்தபோது இருந்ததுபோல் என் குழந்தைகள் இப்போது என் கண்களுக்கு இனிமை யாகக் காட்சி தருவார்களா? உயர்ந்த மதில் சூழ்ந்த நகரமும் கடவுளர் சிலைகளும் முன்போல் அழகாகத் தோன்றுமா?

ஈடிபஸ்… காட்மோஸின் நகரில் பெருமை வாய்ந்த மனிதருள் முதன்மையாக இருந்தவன்… இன்று அவனது தீவினையால், லேயஸ் வீட்டின் பாவச்சின்னம் என்று முததிரையிடப்பட்டு அதல பாதாளத்தில் கிடக்கிறான். நான் புரிந்த குற்றங்களை நானே வெளிக்கொண்டு வந்தபின் என்னால் மனிதர்களை எப்படி நேருக்குநேர் பார்க்கமுடியும்?

என் கேட்கும் சக்தியையும் இழந்துவிடமுடியுமானால், துயரின் உருவமான இந்த உடலை ஒளியும் ஒலியும் பாதிக்காத கருவாய்ச் சுருட்டி வைத்துவிடுவேன். அப்போது என் மனம் தீயவைகளைத் தேடிப்போகாது. மனம் அமைதியாக இருக்கும்…

ஆ! கீதெய்ரான் மலையே! நீ ஏன் என்னைக் காப்பாற்றினாய்? உன்மீது என்னைக் கிடத்தியபோது ஏன் நான் இறந்துபோகவில்லை? இறந்திருந்தால் இந்தப் பாழாய்ப் போன ஜென்மம் இந்த உலகிற்குள் வந்திருக்காதே? ஆ! பாலிபஸ்! காரிந்த் என் மூதா தையர் நகரம் என்று நம்பியிருந்தேன். நான் உங்கள் குழந்தை என இருந்தேன். அங்கேயே தீமை புற்றாக எனக்குள் வளர்ந்துவந்திருக்கிறது…
நான் வியாதியுள்ளவன்… எனது இருப்பில்… எனது பிறப்பில்… ஆரம்பத்திலேயே வியாதியுள்ளவன்.

அந்த மூன்று சாலைகள்! முச்சந்தி! அடர்ந்த காடுகள்! சமவெளி! என் தந்தையின் ரத்தத்தைக் குடித்த இடங்கள். பேசக்கூடாத செயல்களைச் செய்த இடம். அங்கிருந்து ஆரம்பித்து நான் மற்ற காரியங்கள்! ஐயோ, திருமணம்… திருமணம்… என்னைக் குழந்தையாய் உருவாக்கிய செயல்… மகன் அதே படுக்கையிலே செய்த அந்தக் காரியம்… முறை தவறிய உறவு பின்னிய வலை…
தந்தையர், சகோதரர், மகன்களை அன்னையர், மனைவிகள், சகோதரியரோடு கூட்டிவிடும் இடம்…
மனிதர் அறிந்ததிலேயே மிகப் பாவமான செயல். நாவால் இவ்வளவு கொடியதென விளக்கமுடியாத செயல்.

(பாடற்குழுவினரை நோக்கி) இல்லை, என்னை தீப்ஸ் மக்கள் கண்களில் தோன்றாமல் எங்காவது மறைத்துவைத்து விடுங்கள். இல்லாவிட்டால் என்னைக் கொன்றுவிடுங் கள். இல்லாவிட்டால் என்னைக் கடலில் உருட்டித் தள்ளிவிடுங்கள். வாருங்கள். என்னைக் கூட்டிச் செல்லுங்கள்… என்னைத் தொடுவதற்கு பயப்படவேண்டாம். இவ்வளவு குற்றங்களையும் தாங்கும் மனிதன் நான் ஒருவன்தான்.

(கிரியோன் வருகிறான்)

பா.கு.தலைவன்: கிரியோன் வந்துவிட்டார். நீ அவரிடம் சொன்னால், என்ன செய்வதோ அவர் பொறுப்பு… உன் இடத்தில் இருந்து இந்த நகரத்தைக் காப்பாற்ற அவர் ஒருவரே எஞ்சியிருக்கிறார்…

ஈடிபஸ்: நான் அவனிடம் எப்படிப் பேசுவேன்? பெரிய கொடுமையை அவனுக்குச் செய்துவிட்டு அவனிடம் மரியாதையை எதிர்பார்க்க என்ன யோக்கியதை இருக்கிறது?

கிரியோன்: உன்னை கேலிசெய்யவோ வசைமாரி பொழியவோ வரவில்லை ஈடிபஸ்! (சேவகரிடம்) மனித கௌரவத்தின்மேல் உங்களுக்குச் சற்று மதிப்பிருந்தால்-
சூரியனின் கிரணங்களை நீங்கள் தூய்மையாக்கிவிட விரும்பினால்-
இந்தப் பாவக்கடலை இந்த உலகிற்குக் காட்டாதீர்கள். மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இவன் துயரத்தைப் பார்ப்பதே சரி.

ஈடிபஸ்: எதிர்பார்த்தற்குமேல் என்மீது கருணை காட்டிவிட்டாய் கிரியோன். கடவுள் பெயரால் ஒன்று கேட்கிறேன். எனக்காக அல்ல, உனக்காக. நான் கேட்பதைக் கொடு.

கிரியோன்: எதற்காக என்னிடம் பிச்சை கேட்கிறாய்? நீ கேட்பது என்ன?

ஈடிபஸ்: மனிதர்கள் குரலே கேட்காத ஓரிடத்திற்கு என்னை அனுப்பிவிடு, சீக்கிரம்.

கிரியோன்: நீ கேட்பதற்கு முன்னரே நான் இதைச் செய்திருக்கவேண்டும். உம்.., கடவுளின் சித்தம் எனக்கு முழுமையாகப் புலப்படவில்லை.

ஈடிபஸ்: இப்போது கடவுளின் உத்தரவு தெளிவாக இருக்கிறது. பெற்றவர்களுக்குப் பழி செய்தவன் அழிக்கப்படவேண்டும், கிரியோன்.

கிரியோன்: தெளிவான விஷயந்தான். ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதை நான் யோசித்துத்தான் முடிவுசெய்யவேண்டும்.

ஈடிபஸ்: என்போன்ற மனிதனைப் பற்றி இன்னும் என்ன தெரியவேண்டும்?

கிரியோன்: நீ இப்போது கடவுள் சித்தப்படி நடக்கத் தயாராகிவிட்டாய்…

ஈடிபஸ்: ஆம். ஆனால் உன் உதவியோடுதான் அது நடைபெற வேண்டும். இதோ…. உள்ளே கிடக்கிறாளே…அந்தப் பெண்மணியைத் தக்கபடி அடக்கம் செய். அவள் உன் சகோதரி. என்னைப் போகவிடு கிரியோன். என் தந்தையின் நாடான தீப்ஸ் மக்களுக்கு நான் இழைதத பாவங்களைக் கழுவும் வகையில் நான் போகிறேன். என்னால் பெயர்பெற்றுவிட்ட கீதெய்ரான் மலைக்குப் போகிறேன். என் தாய் தந்தை எனக்காகத் தேர்ந்தெடுத்த அந்தக் கல்லறையில் உயிர்விடுகிறேன்.

ஆனால் எந்த வியாதியினாலும் நான் மடியமாட்டேன். எனக்கு இயற்கையான மரணம் கூட இல்லை. என்னை ஏதோ நினைக்கமுடியாத ஒன்றுக்காக விதி காப்பாற்றி நிற்கிறது.

என் மகன்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் ஆண்கள். எப்படியோ பிழைத்துக்கொள்வார்கள்.
ஆனால் பாவம் என் புதல்விகள். என்னுடன் சேர்ந்து வருந்தவேண்டும். என்னை விட்டுப் பிரிந்து அறியாதவர்கள். அவர்களைக் காப்பாற்று, கிரியோன். நான் அவர்களைக் கையால் தொடவிடு. கடைசி தரம். எங்களைச் சேர்ந்து அழ அனுமதிப்பாயா?
இரக்கமாயிரு மன்னனே! கருணை காட்டு.

நான் அவர்களைத் தொட்டுவிட்டால் என் கண்களிருந்தபோது இருந்தாற்போல உணர்வேன் நான்.
(ஆண்டிகனி, இஸ்மீன் வருகின்றனர், சேவகர் சூழ)

கடவுளே, நான் கேட்பது என் அருமைக் குழந்தைகளின் அழுகையையா? கிரியோன் இரக்கப்பட்டு என் குழந்தைகளை என்னிடம் அனுப்பிவிட்டானா?

கிரியோன்: ஆமாம் ஈடிபஸ். அறிந்த நாள் முதல் அவர்கள் உன் செல்வக் குழந்தைகள். இன்னும் அவர்கள் உன் கண்மணிகள்தான்.

ஈடிபஸ்: (கிரியோனிடம்) கடவுள் இதற்காக உன்னை ஆசீர்வதிப்பார்… என்னைவிட இவர்களிடம் நேசமாயிரு… குழந்தைகளே! எங்கே இருக்கிறீர்கள் நீங்கள்…. சீக்கிரம் என் கைக்கு வாருங்கள். இந்தக் கைகள் உங்கள் சகோதரனின் கைகள்… உங்கள் தந்தையின் கண்களைப் பழுதாக்கிவிட்ட கைகள்.

என் பிரியங்களே, எனக்கு அப்போது அறிவுமில்லை, பார்வையுமில்லை. அதனால் உங்கள் அன்னையின் குழந்தையாயிருந்தவன் அவளுக்கே கணவன் ஆனேன். உங்களைப் பார்க்கும் சக்தி இயலாதவனாக, உங்களைப் பார்ப்பவர் இழிவாக உங்களைப் பேசுவார்களே என்பதை நினைத்து அழுகிறேன். எந்த விழாவுக்கும் நீங்கள் சென்றால் அழுகையின்றித் திரும்பமுடியுமா? உங்களுக்குத் திருமண வயது வரும்போது எந்த ஆடவன் மணம் முடிப்பான்? இன்னும் என்ன தீவினை பாக்கி யிருக்கிறது?

உங்கள் தந்தை அவனுடைய தந்தையைக் கொன்றவன்; தன்னைப் பெற்ற வயிற்றுக்கே கருவைக் கொடுத்தவன்; தான் உதித்த ஊற்றிலேயே உங்களை உதிக்கச் செய்தவன்… இப்படியெல்லாம் உங்களைப் பழிப்பார்களே, பிறகு யாரை நீங்கள் திருமணம் செய்ய முடியும்? வாழ்நாள் முழுவதும் சாய்ந்து கனவுகண்டே உதிர்ந்துபோக வேண்டியது தானா?

கிரியோன், இவர்களுக்கு இனி நீதான் தந்தை. அவர்கள் உன் ரத்தம்…. அவர்களை இரந்துண்ண விட்டுவிடாதே… தனிமையில் வாட விட்டுவிடாதே… என்னுடைய அவலங்கள் அவர்களை நெருங்காமல் பார்த்துக்கொள். அவர்கள் மேல் கருணை காட்டு. உன்னையன்றி யாரும் இப்போது அவர்களுக்கு உறவு இல்லை… எனக்குச் சத்தியம் செய்துகொடு. அரசனே, உன் கையால் எனக்குச் சத்தியம் செய்.

(கிரியோன் சத்தியம் செய்கிறான்)

குழந்தைகளே, என்னால் இதுமட்டும்தான் சொல்லமுடியும். எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனைதான். எங்கு வாழமுடியுமோ அங்கே வாழுங்கள். உங்களால் முடிந்த மட்டும் சந்தோஷமாக இருங்கள்.

கிரியோன்: போதும், அழுததெல்லாம் போதும். உள்ளே போ.

ஈடிபஸ்: போகத்தான் வேண்டும். ஆனால் துக்கமாக இருக்கிறது.

கிரியோன்: காலம் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும், ஈடிபஸ்.

ஈடிபஸ்: அப்படியானால், என் மனத்தில் இருக்கும் ஆசையைச் சொல்லவா?

கிரியோன்: என்ன ஆசை அது?

ஈடிபஸ்: தீப்ஸை விட்டு என்னை அனுப்பிவிடு.

கிரியோன்: கடவுள் அந்த வரத்தைத் தருவார்.

ஈடிபஸ்: கடவுள்தான் என்னை வெறுக்கிறாரே!

கிரியோன்: இல்லை, அவர் நிச்சயம் உன் ஆசையை நிறைவேற்றுவார்.

ஈடிபஸ்: சத்தியமாக?

கிரியோன்: எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.

ஈடிபஸ்: அப்படியானால், என்னை உள்ளே அழைத்துப்போங்கள்.

கிரியோன்: குழந்தைகளை விட்டு வா…

ஈடிபஸ்: ஐயோ, முடியாது… என்னை அவர்களிடமிருந்து பிரித்துவிடாதே.

கிரியோன்: இப்போது நீ அரசன் இல்லை, கட்டளையிடுவதற்கு. தெரிந்துகொள். நீ அரசனாக இருந்தபோது ஏற்பட்டுவிட்ட அழிவை எண்ணிப்பார்.

(பாடற்குழுவினரைத் தவிர அனைவரும் உள்ளே செல்கின்றனர். பாடற்குழுத் தலைவன் பார்வையாளருக்கு நேர் நின்று அவர்களைப் பார்த்துப் பேசுகிறான்)

பா.கு.தலைவன்:  தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸைப் பாருங்கள்… ஸ்பிங்ஸின் புகழ் வாய்ந்த புதிர்களின் விடைகளைக் கண்டறிந்த மன்னர். பலம் வாய்ந்த மன்னர்களை வெற்றி கண்டவர்… மானிடர்களின் கண்கள் பொறாமையோடுதான் இவரை நோக்கின… இறுதியில் விதி இவரை இப்படி அழித்து வெற்றி கண்டது! ஒவ்வொரு மனிதனும் மனித குலத்தின் பலவீனங்களின்போது தனது கடைசி நாளை எண்ணிப் பார்க்கட்டும்!

செல்வத்தால், அதிர்ஷ்டத்தால், யாரும் இறுமாந்து இருந்துவிட வேண்டாம். மரணத் தறுவாயில், துன்பங்களற்ற ஒரு நினைவுச்சரத்தை ஒருவன் கொள்ளமுடியுமானால், அவன் தன் நல் அதிர்ஷ்டத்தை அப்போது எண்ணிச் சந்தோஷப்படட்டும்!

-திரை-


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 4

ஈடிபஸ் அரசன்  நாடகம் – காட்சி 4

(ஜொகாஸ்டா வருகிறாள்)

ஜொகாஸ்டா: தீப்ஸ் மக்களே, ஆலிவ் கிளைகளைக் கைகளில் ஏந்தி நறுமணப் பொருள்களோடு கடவுளை வணங்கிவரலாம் என்று நினைக்கிறேன்.
(தனக்குள்)
இப்போது அரசர் அவராக இல்லை. அவர் மனம் விபரீத கற்பனைகளால் இருண்டு போயிருக்கிறது. பழைய ஜோசியங்களுக்குப் புதிய விளக்கங்களைத் தேடி நிற்கிறார். கொடுமையை உரைக்கும் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கிறார். நான் சொல்லும் அறிவுரைகளை அவர் கேட்பதே இல்லை.

(கடவுள் முன்னால்)
அப்போலோ தேவனே! என் கைகளுக்கருகில் நிற்பவன் நீ. இந்தக் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு, கலங்கிப்போய் நிற்கும் எங்கள் மன்னனுக்கு விமோசனம் தா. குழம்பிப்போன கப்பல்தலைவனைக் கவலையுடன் பார்க்கும் பிரயாணிகளாய் நாங்கள் இருக்கிறோம்.

(தூதுவன் ஒருவன் வருகிறான்)
தூதுவன்: (பாடற்குழுவினரைப் பார்த்து) நண்பர்களே, யாராவது ஈடிபஸ் அரசனது அரண்மனைக்கு வழிகாட்டுங்கள். மன்னரை நான் எங்கு காணமுடியும்?

பா.கு.தலைவன்: இதே இடம்தான் புதியவரே! அரசர் உள்ளே இருககிறார். இவள் அரசருடைய மனைவி. அவருடைய குழந்தைகளுக்கு அன்னை.

தூதுவன்: இந்த இல்லத்தில் இன்பம் பொங்குமாக! வணக்கம் அரசி!

ஜொகாஸ்டா: நானும் அதையேதான் விரும்புகிறேன். நீ யார்? வந்திருக்கும் காரணம்?

தூதுவன்: நல்ல செய்திதான் அரசி, உங்கள் இல்லத்திற்கும், உங்கள் அனைவருக்கும்.

ஜொகாஸ்டா: என்ன செய்தி? யார் உன்னை அனுப்பியது?

தூதுவன்: நான் காரிந்த் நகரிலிருந்து வருகிறேன். என் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதேசமயம் அதில் துயரமும் இருக்கிறது.

ஜொகாஸ்டா: என்ன புதிர் இது? சந்தோஷமான செய்தி, ஆனால் துன்பம் கலந்தது?

தூதுவன்: காரிந்து நாட்டு மக்களுக்கும் இன்றிலிருந்து ஈடிபஸ் அரசராகிறார்.

ஜொகாஸ்டா: அங்கே ஆண்டுகொண்டிருந்த மன்னர் பாலிபஸ் என்ன ஆனார்?

தூதுவன்: மரணம் அவரைக் கல்லறையில் உறங்கவைத்துவிட்டது.

ஜொகாஸ்டா: என்ன சொல்கிறாய்? பாலிபஸ் இறந்துவிட்டாரா?

தூதுவன்: ஆம், உண்மை. இல்லையெனில் என்னைத் தண்டிக்கலாம் நீங்கள்.

ஜொகாஸ்டா: (சேவகனிடம்) போ, உடனே இதை மன்னரிடம் சொல்.
(தனக்குள்) கடவுள் சித்தத்தை அறியாது புதிர் போடுபவர்களே, இப்போது எங்கே போனீர்கள் நீங்கள்?
நீண்ட நாட்களுக்கு முன்னர் மன்னர் ஈடிபஸ் இன்று இறந்துபோனவருக்காக, எங்கே அவரைக் கொன்றுவிடுவோமோ என்று பயந்து இங்கே ஓடிவந்தார். இன்று அது பொய்யாகிவிட்டது.

(ஈடிபஸ் வருகிறான்)

ஈடிபஸ்: என்னருமை ஜொகாஸ்டா, எதற்காக என்னைக் கூப்பிட்டனுப்பினாய்?

ஜொகாஸ்டா: இந்தத் து£துவன் என்ன சொல்கிறான் என்பதைக் கேள். பிறகு புனிதமான ஜோசியர்களின் கதி என்ன என்று சொல்.

ஈடிபஸ்: யார் இவன்? எனக்கு என்ன செய்தி கொண்டுவந்திருக்கிறான்?

ஜொகாஸ்டா: காரிந்திலிருந்து உன் தந்தையின் மரணச் செய்தி.

ஈடிபஸ்: இது மெய்தானா து£துவனே? எங்கே, உன் வாயால் சொல்.

தூதுவன்: இன்னும் தெளிவாக எப்படிச் சொல்வது? மன்னர் பாலிபஸ் இறந்து விட்டார்.

ஈடிபஸ்: எப்படி இறந்தார்? சதியா, உடல்நலக் குறைவா, ………

தூதுவன்: முதுமை அடைந்தோ இறப்பது எளிது.

ஈடிபஸ்: அப்படியானால், உடல்நலமில்லாமல் இருந்தாரா?

தூதுவன்: ஆம், பல வருடங்களாக.

ஈடிபஸ்: ஆ, டெல்ஃபியை இனி ஏன் மதிக்கவேண்டும்? இனி ஜோசியப் பறவைகளை யாரும் நம்பத்தேவையில்லை. நான் பாலிபஸைக் கொல்வேன் என்று ஜோசியம் சொல்லிற்று. என் விரல்கூட அவர்மேல் பட்டதில்லை. என் பிரிவுத் துயர் தாங்காது அவர் இறந்திருந்தால் ஒருவேளை என்னால் அவர் இறந்தார் என்று சொல்லலாம். அதுவும்கூட இல்லை. பாலிபஸின் மரணம் அசரீரி வாக்கைப் பொய்யாக்கிவிட்டது.

ஜொகாஸ்டா: நான் சொன்னேன், பார்த்தாயா?

ஈடிபஸ்: ஆமாம், நீ சொன்னாய். ஆனால் என் பலவீனமான இதயம் என்னைக் கைவிட்டுவிட்டது.

ஜொகாஸ்டா: இனிமேல் ஒருபோதும் அவற்றை நினைத்தும் பார்க்கவேண்டாம்.

ஈடிபஸ்: இன்னும் அந்த ஜோசியம் பாக்கியிருக்கிறதே! என் அன்னையின் படுக்கை யறை என்னை பயமுறுத்துகிறதே!

ஜொகாஸ்டா: விதிப்படி யாவும் நடக்கும்போது இந்த உலகில் ஒருவர் ஏன் பயப்பட வேண்டும்? ஒவ்வொருவனும் அன்றைய நாளை வாழ்ந்தால் போதும். உன் அன்னையின் பள்ளியறை பற்றி பயம் வேண்டாம். எத்தனை மனிதர்கள் கனவில் தம் அன்னையரோடு கட்டிலில் கிடக்கிறார்கள்? விவேகம் உள்ளவர்கள் அதற்காகக் கலங்கிவிடப் போவதில்லை.

ஈடிபஸ்: உண்மைதான். ஆனால் இன்னும் அன்னை உயிரோடு இருக்கிறாரே! பயப்படாமல் இருக்கமுடியவில்லையே.

ஜொகாஸ்டா: உன் தந்தையின் மரணச்செய்தி ஆச்சரியமான விஷயம்தான்.

ஈடிபஸ்: ஆனால் உயிருடன் இருக்கும் அவளைக் கண்டல்லவா பயப்படுகிறேன்.

தூதுவன்: நீங்கள் யாரைக் கண்டு பயப்படுகிறீர்கள்?

ஈடிபஸ்: மெரோபே. மன்னர் பாலிபஸின் மனைவி. என் தாய். அவளைக் கண்டு.

தூதுவன்: அவர்களைக் கண்டு நீங்கள் ஏன் பயப்படவேண்டும்?

ஈடிபஸ்: கடவுளின் அசரீரி. பயங்கரமான செய்தி.

தூதுவன்: சொல்லக்கூடியதென்றால், கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் அரசே.

ஈடிபஸ்: சொல்கிறேன். அப்போலோ தெய்வத்தின் அசரீரி சொல்லியது-நான் என் தந்தையை அழிப்பேன், என் தாயை மணப்பேன்-என்று. இதற்காக பயந்து காரிந்த்தை விட்டு ஓடிவந்தேன். பெற்றோர்களைக் காண மனம் துடித்தது, இருந்தும்.

தூதுவன் : இந்த பயத்தாலா இங்கே வந்து இருந்தீர்கள்?

ஈடிபஸ்: நான் அங்கிருந்தால்…. என் தந்தை என்னால் மரணமுற நேர்ந்தால்?

தூதுவன்: உங்கள் பயம் வீணானது.

ஈடிபஸ்: வீணானதா? எப்படி என்று நிரூபித்தால் பரிசளிப்பேன்.

தூதுவன்: பாலிபஸ் உங்கள் தந்தை அல்ல. மெரோபெ உங்கள் தாயும் அல்ல.

ஈடிபஸ்: அவர்கள் என்னை அன்போடு மகனே என்றுதானே அழைத்தார்கள்.

தூதுவன்: நீண்ட நாட்களாக அவர்களுக்கு குழந்தை இல்லை. என்னிடம் குழந்தையாக இருந்த உங்களை அவர் பரிசாகப் பெற்றுச் சென்றார்.

ஈடிபஸ்: ஈடு இணையற்று என்னை நேசித்தாரே?

தூதுவன்: இருக்கலாம். குழந்தைகள் இல்லாதவர். அதனால் உங்கள்மேல் அன்புமழை பொழிந்திருக்கலாம்.

ஈடிபஸ்: அப்படியானால் நீ யார்? என்னை எங்கு பெற்றாய்? விலைக்கு வாங்கினாயா? கண்டெடுத்தாயா?

தூதுவன்: கீதெய்ரான் காட்டில் கண்டெடுத்தேன். ஆடுமேய்ப்பவன் நான்.

ஈடிபஸ்: ஆடு மேய்ப்பவனா?

தூதுவன்: ஆம், ஆடு மேய்ப்பவன்தான். ஆனால் அன்று உங்களைக் காப்பாற்றியவன்.

ஈடிபஸ்: எதிலிருந்து காப்பாற்றினாய்?

தூதுவன்: உங்கள் கணுக்கால் சொல்லும் அதை.

ஈடிபஸ்: தூதுவனே, குழந்தைப் பருவ வலியை இப்போது ஏன் கிளறுகிறாய்?

தூதுவன்: உங்கள் இரு கணுக்கால்களையும் இணைத்திருந்த கூரம்பைப் பிடுங்கி உங்களைச் சாவிலிருந்து காத்தேன்.

ஈடிபஸ்: ஆம். என் கணுக்கால்களில் அத் தழும்புகள் இன்னமும் இருக்கின்றன.

தூதுவன்: குழந்தையாக இருந்த உங்களுக்குப் பெயரே அதனால்தானே வைத்தேன்? ஈடிபஸ் என்ற பெயருக்கு அதுதான் அர்த்தம்.

ஈடிபஸ்: கடவுளே, என் தாய் தந்தையர் ஏன் அப்படிச் செய்தார்கள் என்னை?

தூதுவன்: அது எனக்குத் தெரியாது. உங்களை என்னிடம் கொடுத்தவன் ஒருவன்ந. அவனுக்கு ஒருவேளை அது தெரிந்திருக்கும்.

ஈடிபஸ்: யார் அவன்? சொல்லுங்கள், யார் அவன்?

தூதுவன்: லேயஸ் மன்னரின் ஆட்களில் ஒருவன் அவன்.

ஈடிபஸ்: நீண்ட நாட்களுக்கு முன் இந்த ஊரை ஆட்சி செய்துவந்த லேயஸ் மன்னரா?

தூதுவன்: ஆமாம். மன்னரின் ஆட்டுமந்தையை மேய்க்கும் ஒருவன்தான் அவன்.

ஈடிபஸ்: அவர் இப்போது உயிரோடு இருக்கிறாரா? அவரைப் பார்க்க முடியுமா?

தூதுவன்: அது இங்குள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

ஈடிபஸ் (பாடற்குழுவினரை நோக்கி) இவர் இப்போது சொன்ன இடையன் பற்றி இங்குள்ளவர்களில் எவருக்காவது தெரியுமா? தெரிந்திருந்தால் சொல்லுங்கள். விஷயங்கள் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது.

பா.கு.தலைவன்: நீ முன்பே பார்க்கவேண்டும் என்று சொன்ன அதே இடையன்தான் ஈடிபஸ்! ஜொகாஸ்டாவுக்கு ஒருவேளை அவனது இருப்பிடம் தெரியும்.

ஈடிபஸ்: (ஜொகாஸ்டாவிடம்) பெண்ணே, உனக்கு அவனைப் பற்றித் தெரியுமா? நாம் கூப்பிட்டு அனுப்பச் சொன்ன ஆள் அவன்தானா? இந்தத் தூதுவன் சொல்லுவது அவனைத்தானா?

ஜொகாஸ்டா: நீ அவனைப் பற்றி நினைக்கவேண்டாம் ஈடிபஸ். அந்த இடையன் விஷயத்தை மறந்துவிடு. இந்தத் தூதுவன் சொன்னவற்றையும் மறந்துவிடு. இந்தப் பேச்சுகளால் நேரம்தான் வீணாகிப் போகும்.

ஈடிபஸ்: அவ்வாறு எவ்விதம் நீ சொல்லமுடியும்? ஒரே ஒரு துப்புக் கிடைத்தாலும் உண்மை வெளியாகலாம்.

ஜொகாஸ்டா: கடவுளே, கேள்விகள் போதும். தெரிந்த உண்மைகளும் போதும். உன் வாழ்க்கை உனக்குப் பெரிதில்லையா ஈடிபஸ்? நான் ஏற்கெனவே தாங்கிநிற்கும் வேதனைகளே என்னைக் கொல்லுகின்றன.

ஈடிபஸ்: கவலைப்படாதே. நான் யாரோ ஒரு அரண்மனை அடிமையாயிருக்கலாம் என்றுதானே கவலைப்படுகிறாய். நான் ஓர் அடிமையின் மகன் என்று தெரியவருவதால் உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது.

ஜொகாஸ்டா: நான் சொல்வதைக் கேள், ஈடிபஸ். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேலையை இதோடு விட்டுவிடு.

ஈடிபஸ்: கேட்கமாட்டேன். உண்மை எனக்குத் தெரிந்தாக வேண்டும்.

ஜொகாஸ்டா: உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.

ஈடிபஸ்: என் நல்லது! என் பொறுமையைச் சோதிக்கிறது.

ஜொகாஸ்டா: நீ நினைப்பது முற்றிலும் தப்பு. நீ யார் என்று உனக்குத் தெரியாமல் போவதே நல்லது.

ஈடிபஸ்: எங்கே… யாராவது ஒருவர் சென்று அந்த இடையனை அழைத்து வா. அரச வம்சத்தைப் பற்றித் தற்பெருமைத் தம்பட்டமடித்துக்கொண்டு இவள் தனியே இருக்கட்டும்.

ஜொகாஸ்டா: ஐயோ, மாளாத் துயரம்… மாளாத் துயரம் வந்ததே! இதைவிடச் சொல்வதற்கு எனக்கு இனி ஒன்றுமில்லை.
(போகிறாள்)

பா.கு.தலைவன்: அவள் ஏன் நம்மைவிட்டுப் போகிறாள் ஈடிபஸ்? அவள் எல்லை யில்லா வருத்தப்படுவதற்கு என்ன நேர்ந்தது? அவளது இந்தத் துன்பம் எனக்கு அச்சத்தை ஊட்டுகிறது. ஏதோ பயங்கரமான ஒன்று நடக்கப்போகிறது.

ஈடிபஸ்: நடக்கட்டும். எத்தனை இழிந்த பிறப்பென்றாலும் நான் யார் என்பதைத் தெரிந்துகொண்டே ஆகவேண்டும்.
அரசியும் ஒரு பெண்தானே…. நான் அடிமைக் குலத்தைச் சேர்ந்தவன் என்றால் அவள் அளவிட முடியாத துன்பம் அடைவாள்.
ஆனால் நான் அதிர்ஷ்டத்தின் செல்லப்பிள்ளை… எந்த அவமானமும் எனக்கு நேராது. அதிர்ஷ்டம்தான் என் தாய்! ஏழ்மையும் செல்வமும் என் வாழ்க் கையில் மாறி மாறி வந்திருக்கின்றன…. இப்படியும் ஒரு சேதி வந்துவிட்டுப் போகிறது… நான் ஏன் கவலைப்படவேண்டும்?

கோ1- ஈடிபஸைக் கண்டெடுத்த கீதெய்ரான் மலையில் கூத்தும் கும்மாளமும!

கோ2- காக்கும் கடவுள் அப்போலோ-நம்மை அம்மலைக்குக் கூட்டிச்செல்லட்டும்.

கோ3- கடவுளால் விதிக்கப்பட்ட அற்புதக் குழந்தையே!

கோ4- கீதெய்ரான் மலையில் கண்டெடுக்கப்பட்ட அரசனே! ஈடிபஸ் குழந்தையே!

கோ5- டயனீசியஸ் தேவனோ உன்னைக் கண்டெடுத்தான், அன்று?

கோ6- நீ விதியைப் பார்த்துச் சிரிப்பதற்காக உன்னைத் தன் கரங்களில் ஏந்தினானா?

ஈடிபஸ்: (பாடற்குழுவினரைப் பார்த்து) ஐயா, இதோ வருகிறான் அந்த இடையன். இவன்தானே நான் தேடும் அந்த ஆள்? எனக்கு இவனைத் தெரியாது. இருந்தாலும் இவன்தான் என்று நினைக்கிறேன். காரிந்த்தின் து£தன் போலவே இவனும் மூத்துத் தளர்ந்திருக்கிறான். நீங்கள் இவனை முன்னால் பார்த்திருந்தால் சொல்லுங்கள்.

(இடையனைச் சேவகர்கள் அழைத்துவருகின்றனர்)

பா.கு.தலைவன்: தெரியும் இவனை. லேயஸின் ஆள்தான்… நீங்கள் நம்பலாம் இவனை.

ஈடிபஸ்: காரிந்த்திலிருந்து வந்திருக்கும் து£துவரே, நாம் பேசிக்கொண்டிருந்தது இவனைப் பற்றித்தானா?

தூதுவன்: இவனே, இதே ஆள்தான்.

ஈடிபஸ்: (இடையனிடம்) இங்கே வா… இல்லை… என்னைப் பார். நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். நீ லேயஸின் ஆள்தானே?

இடையன்: ஆம். அவருடைய அடிமையாகப் பிறந்தது அவர் வீட்டிலேயே வளர்ந்தவன்.

ஈடிபஸ்: அவர் வீட்டில் என்ன வேலை செய்துகொண்டிருந்தாய்?

இடையன்: அவருடைய ஆடுகளை மேய்பபவன் நான்.

ஈடிபஸ்: ஆடுகளை வழக்கமாக எங்கே கொண்டு மேய்ப்பாய்?

இடையன்: வழக்கமாக கீதெய்ரான் மலைக்கு. சிலசமயம் பக்கத்திலுள்ள குன்றுகள்.

ஈடிபஸ்: இதோ இங்கே நிற்கும் இந்த மனிதரைப் பார்த்திருக்கிறாயா?

இடையன்: இவனா? இவன் இங்கே என்ன செய்கிறான்?

ஈடிபஸ்: இவரேதான். உன் எதிரில் நிற்பவர். முன்னால் இவரைப் பார்த்திருக்கிறாயா?

இடையன்: இல்லை… ஞாபகமில்லை.

தூதுவன்: ஆச்சரியமில்லை. பல வருஷங்கள் ஆகிவிட்டன அல்லவா? ஆனாலும் நினைவிருக்க வேண்டுமே? ஒவ்வொரு வருடமும் ஒன்பது மாதங்கள் நாங்கள் ஒன்றாக ஆடுமேய்த்தோம். இவனிடம் இரண்டு கிடைகள். என்னிடம் ஒன்றே ஒன்று தான் இருந்தது. இலையுதிர் காலத்தில் நான் என் வீட்டுக்குத் திரும்புவேன். இவன் லேயஸ் அரண்மனைக்குத் திரும்புவான்.

ஏன் ஐயா, நான் இப்போது சொன்னதெல்லாம் உண்மைதானா? ஞாபகத்துக்கு வருகிறதா?

இடையன்: ஆமாம், இதெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு முன்னால்.

தூதுவன்: அப்படியானால், இது ஞாபகமிருக்கிறதா? ஒரு குழந்தையை ஒருநாள் என்னிடம் நீ வளர்க்கக் கொடுத்தாயே?

இடையன்: கொடுத்திருக்கலாம். அதற்கென்ன இப்போது?

தூதுவன்: அரசர் ஈடிபஸ்தான் அந்தக் குழந்தை.

இடையன்: நீ பாழாய்ப்போக. நாக்கை அடக்கிப் பேசு.

ஈடிபஸ்: போதும், போதும். நீதான் நாக்கை அடக்கிப் பேசவேண்டும்.

இடையன்: மகாராஜா, நான் என்ன தப்புப் பண்ணினேன்?

ஈடிபஸ்: குழந்தையைப் பற்றி அவன் கேட்ட கேள்விக்கு இன்னும் நீ பதில்சொல்லவில்லை.

இடையன்: இவனுக்கு ஒன்றும் தெரியாது. என்னைத் தொந்தரவில் மாட்டிவிடுகிறான். எனக்கு ஒன்றும் தெரியாது.

ஈடிபஸ்: மறைக்காமல் சொல். இல்லாவிட்டால் நீ கஷ்டப்படுவாய்.

இடையன்: கடவுள்மீது ஆணையா…என்னை ஒன்றும் துன்புறுத்தாதீர்கள். இந்தக் கிழவன்மீது பரிதாபப் படுங்கள்.

ஈடிபஸ்: யாரங்கே… இந்தக் கிழவன் கைகளைப் பின்னால் சேர்த்துக் கட்டுங்கள்.

இடையன்: ஏற்கெனவே அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் ராஜாவே, இன்னும் ஏன் மனத்தை வாட்டிக்கொள்ள முற்படுகிறாய்?

ஈடிபஸ்: நீ இவனுக்கு… இந்த ஆளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தது உண்மையா?

இடையன்: கொடுத்தேன்… நான் அன்னிக்கே செத்துப்போயிருந்தா நல்லாயிருக்கும்.

ஈடிபஸ்: உண்மையைச் சொல்லாவிட்டால் நீ இன்னிக்கே செத்துப்போவாய்… உண்மையைச் சொல்.

இடையன்: உண்மையைச் சொன்னா, சாவதைவிட மோசமான நிலைக்கு நான் ஆளாயிடுவேன்.

ஈடிபஸ்: (சேவகனிடம்) எதுவும் சொல்லாமல் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறான்.

இடையன்: அந்தக் குழந்தையைக் கொடுத்ததைத்தான் சொல்லிவிட்டேனே.

ஈடிபஸ்: அது எங்கே கிடைத்தது? யார் வீட்டில் எடுத்தாய்?

இடையன்: ஒரு மனிதன்தான் கொடுத்தான்.

ஈடிபஸ்: அந்த மனிதர் இங்கிருககிறாரா? அவர் எந்த வீட்டைச் சேர்ந்தவர்?

இடையன்: கருணை காட்டுங்க மகாராஜா. இதுக்குமேல என்னை எதுவும் கேக்காதீங்க.

ஈடிபஸ்: சொல், அந்தக் குழந்தையை எங்கிருந்து கொண்டுவந்தாய்? இதற்குமேல் நீ எதுவும் சொல்லவேண்டாம்.

இடையன்: அந்தக் குழந்தையை லேயஸ் அரண்மனையிலிருந்துதான் கொண்டு வந்தாங்க.

ஈடிபஸ்: அது யாருடைய குழந்தை? அடிமைகளுடைய குழந்தையா?

இடையன்: அது பயங்கரமான ரகசியம் மகாராஜா. நான் எப்படிச் சொல்வேன்?

ஈடிபஸ்: எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும் நான் கேட்கத் தயார். சொல்.

இடையன்: ஐயோ, சொல்லித்தான் ஆகணுமா? சரி… அது லேயஸ் மகாராஜாவோட குழந்தைன்னுதான் சொன்னாங்க…. ராணி அம்மாவைக் கூப்பிட்டுக் கேளுங்க…. அவங்க எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லுவாங்க.

ஈடிபஸ்: என் மனைவி… அவளா அந்தக் குழந்தையை உன்னிடம் கொடுத்தாள்?

இடையன்: ஆமாம் மகாராஜா… அவங்கதான் கொடுத்தாங்க.

ஈடிபஸ்: ஏன்னு உனக்குத் தெரியுமா?

இடையன்: குழந்தையை எப்படியாவது கொன்னுடச் சொன்னாங்க.

ஈடிபஸ்: கடுகளவும் கருணையற்ற இதயம்….

இடையன்: ஜோசியர்கள் சொன்னதுக்கு பயந்துபோய்….

ஈடிபஸ்: சொல், உனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்.

இடையன்: இந்தக் குழந்தை அவங்க அப்பாவைக் கொன்னுடும்ன்னு ஜோசியம்.

ஈடிபஸ்: பிறகு ஏன் அந்தக் குழந்தையை இவரிடம் கொடுத்தாய்?

இடையன்: குழந்தையைப் பாத்து… அந்தப் பச்சை மண்ணைப் பார்த்து மனசு இளகிடுச்சு மகாராஜா…. கொல்ல மனசு வரல்லே… இந்த ஆள்கிட்ட கொடுத்தேன், அவன் காட்டுக்கு எடுத்துப்போய் வளப்பான்னு நெனைச்சி….காப்பாத்தினான்….ஆனா விதி எப்படி விளையாடியிருக்கு….இவன் சொல்லும் அந்தக் குழந்தை நீங்கதான்னா, ஈடிபஸைவிட மோசமானவன் இநத உலகத்திலேயே கிடையாது….

ஈடிபஸ்: கடவுளே, அது உண்மைதான்… எல்லா ஜோசியர்களுமே சொன்ன உண்மை. இப்பொழுது எல்லாம் வெட்ட வெளிச்சம்.
வெளிச்சமே! உன்னை இப்போது கடைசியாகப் பார்த்துக்கொள்கிறேன். ஈடிபஸ்! பிறக்கும்போதே சபிக்கப்பட்டுவிட்ட ஈடிபஸ்!
ஐயோ, ஐயோ! நாசமாய்ப் போன திருமணம்!…. நாசமாய்ப்போன உறவு!….தான் கொன்ற ரத்தத்தில் மிதந்து, சபிக்கப்பட்ட ஈடிபஸ்! ஐயோ,…ஈடிபஸ்!

கோ1- பாவப்பட்ட சந்ததிகள்… வெற்றிடத்தில் குடியேறிவிட்ட பாவப்பட்ட சந்ததிகள்…

கோ2- இருந்தும் இல்லாத பாவப்பட்ட சந்ததிகள்…

கோ3- அவர்களுக்கு நாம் என்ன கொடுக்கமுடியும்?

கோ4- நிழல்களை மாற்றிக்கொண்டு செல்லும் சூரியஒளியைக் கண்டு யார் மகிழ்ச்சி அடைகிறார்கள்?

கோ5- ஓடுகின்ற காலத்தைப் பார்த்து உவகை கொள்ளும் மனிதன் யார்?

கோ6- உன் பெருமை சீரழிந்துவிட்டது ஈடிபஸ்.

கோ1- கோபமும் அழுகையும் பொங்கும் விழிகளோடு ஈடிபஸ்.

கோ2- எல்லாம் மாறிவிட்டது. எல்லாம் அழிந்துபோயிற்று.

கோ3- ஈடிபஸின் உன்னதமான நாட்கள் சிறிதுசிறிதாக மங்கிக் காணாமல் போய் விட்டன.

கோ4- உன் மனம் திடமான வில்லாக இருந்தது அப்போது.

கோ5- அதில் நாணேற்றிப் புகழைக் கைப்பற்றினாய்.

கோ6- சிங்கத்தின் நகங்களோடு கூடிய அந்தக் கன்னியை வெற்றிகொண்டாய்.

கோ1- தீப்ஸ் மக்களின் கவலையைப் போக்கும் காவற்கோட்டை ஆனாய்.

கோ2- ஈடு இணையற்ற புகழோடு விளங்கினாய்.

கோ3- மனிதனின் கதை துயரமானது.

கோ4- அக்கதைகள் எல்லாவற்றிலும் உன்கதை துயரமானது….

கோ5- உன் அதிர்ஷ்டம் அடியோடு மாறிவிட்டது…

கோ6- நாடு கேவலமான அடிமைகளின் இருப்பிடமாய்ப் போனது…

கோ1- திறந்த கதவிலிருந்து உன்னை வெளியேற்றிய அந்த ஒளி…

கோ2- இரவில் கிடைத்த அந்த ஒளி….அது மன்னனை அடைந்தது…

கோ3- தந்தையிடமிருந்து மகனுக்குக் கிடைத்தது….

கோ4- எல்லாம் காலம் தாழ்த்தியபின்னர்தான் தெரியவந்தது….

கோ5- லேயஸ் மன்னன் வெற்றிகொண்டு கைப்பற்றிய அந்த அழகுப் பூந்தோட்டம்…

கோ6- அவள் எப்படி அமைதியாக இருந்தாள், அந்தக் காரியம் நடந்தபோது?

கோ1- காலத்தின் கண்கள் முன்னால்….

கோ2- நம் கண்கள் பழுதாகிவிடுகின்றன.

கோ3- நம் எல்லாச் செயல்களுக்கும்

கோ4- நீதி வழங்கப்பட்டுவிடுகிறது

கோ5- துயரம் அதிகமோ குறைவோ விருப்பம் உண்டோ இல்லையோ

கோ6- உன் சகல கணக்குகளும் புத்தகத்தில் ஏறிவிடுகின்றன.


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 3

ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 3

கிரியோன்: தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸ் என்மேல் குற்றச்சாட்டுகளை மழையாகப் பொழிந்து வருகிறான். இவற்றை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கநான் கோழை அல்ல. என் கௌரவம் பாதிக்கப்படும்போது கத்தி உறையில் உறங்கிக் கொண்டிருக்காது. அரசுக்கு, சக மனிதர்களுக்கு, என் நண்பர்களுக்கு, நான் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன்.

பா.கு.தலைவன்:  இவை கோபத்தில் சொன்னதாக இருக்கலாம். உதட்டிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள். உள்ளத்திலிருந்து அல்ல.

கிரியோன்: பூசாரியைப் பொய்சொல்லச் சொன்னது நான் என்று ஈடிபஸ் குற்றம் சாட்டியது உங்கள் காதில் விழவில்லை?

பா.கு.தலைவன்:  விழுந்தது. ஆனால் அது கடுமையாகச் சொல்லப்பட்டதல்ல.

கிரியோன்: அவன் கண்களை நீ கவனித்தாயா? குழப்பத்தில் தவித்துக்கொண்டு பைத்தியக்காரன் போல் இல்லையா?

பா.கு.தலைவன்: தெரியவில்லை. பெரியோர்களின் நடத்தையை எடைபோடக்கூடிய தகுதி எனக்கில்லை. அதோ அரசர் வருகிறார்.

(ஈடிபஸ் நுழைகிறான்)

ஈடிபஸ்:  திரும்பி இங்கே நுழைய உனக்கு என்ன தைரியம்? கொலைகாரா! வெட்க மில்லாமல் என் வீட்டுக்கு வருகிறாய். சதி செய்து என்னைக் கொன்று அரியணையை நீ கைப்பற்ற நினைப்பது எனக்குத் தெரியாதா? உன் மாய்மால ஜாலங்களைப் புரிந்து கொள்ளாமல் போக நான் என்ன மடையனா? என்னால் அரியணைகளை வெற்றி கொள்ளமுடியும். விலைக்கு வாங்கவும் முடியும். உன்னால் இந்த இரண்டுமே முடியா தவை.

கிரியோன்:  நீ பேசி முடித்துவிட்டாய் அல்லவா? நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். உண்மை என்ன என்று தெரியாமல் எந்த முடிவுக்கும் வரவேண்டாம்.

ஈடிபஸ்:  நன்றாகப் பேசுகிறாய். ஒரே ஒரு உண்மைதான் உண்டு. அதை உன் போன்ற எதிரியிடமிருந்து அறிந்துகொள்ள முடியாது.

கிரியோன்:  இதை நான் அல்லவா சொல்ல வேண்டும்!

ஈடிபஸ்:  என் குற்றச்சாட்டை உன்னால் மறுக்கவியலாது.

கிரியோன்:  அறிவுக்கு எதிராகப் பிடிவாதமாக இருப்பது என்று தீர்மானித்துவிட்டாய்.

ஈடிபஸ்:  உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாம், ஆனால் தண்டிக்கப்படக்கூடாது என்று நினைத்தால் நீ முட்டாள்.

கிரியோன்: சரியாகச் சொல், நான் என்ன துரோகம் செய்தேன்?

ஈடிபஸ்:  அந்த சூனியக்காரப் பூசாரியை அழைத்துவந்தாய்.

கிரியோன்:  ஆம், அவர் வந்தது நல்லதுதான்.

ஈடிபஸ்: சரி, இப்போது லேயஸ் பற்றிச் சொல். லேயஸ் எப்போது…..?

கிரியோன்: லேயஸ் பற்றி இப்போது எதற்கு?

ஈடிபஸ்: லேயஸ் மறைந்துபோய் எவ்வளவு நாளாகிறது?

கிரியோன்: நீண்ட நெடுங்காலம்.

ஈடிபஸ்:  இந்தப் பூசாரி அப்போதும் இருந்தானா?

கிரியோன்:  இருந்தார், அப்போதுமே பெருமை மிக்க ஞானியாய்.

ஈடிபஸ்:  அப்போது என்னைப் பற்றி அவன் என்ன சொன்னான்?

கிரியோன்:  எதுவுமே சொல்லவில்லை. அதுவும், என்னிடம்.

ஈடிபஸ்:  லேயஸ் இறப்புப் பற்றி நீ ஒரு விசாரணை நடத்தினாயாமே?

கிரியோன்: ஆனால் அதில் ஒன்றும் தெரியவரவில்லை.

ஈடிபஸ்:  என்னைப் பற்றி அப்போது எதுவும் பேசாத பூசாரி, இப்போது மட்டும் ஏன் உளறுகிறான்?

கிரியோன்: தெரியாது. நான் தெரியாத விஷயங்களில் தலையிடுவதில்லை.

ஈடிபஸ்:  உனக்கு ஒரு விஷயம் நிச்சயம் தெரியும், அதை மட்டும் சொல்லிவிடு.

கிரியோன்:  என்ன அது? எனக்குத் தெரிந்த விஷயம் உனக்கும் உரியதுதான்.

ஈடிபஸ்:  அந்தப் பூசாரி உன்னைச் சேர்ந்தவன் இல்லை என்றால், லேயஸைக் கொன்றவன் நான் என்று குற்றம் சாட்டமாட்டான்.

கிரியோன்:  அப்படி அவர் சொல்வதன் நியாயம் உனக்குத்தான் தெரியும், என்னைவிட. இப்போது நான் சில கேள்விகளைக் கேட்கலாமா?

ஈடிபஸ்:  கேள், நான் ஒன்றும் கொலைகாரன் இல்லை.

கிரியோன்:  அப்படியானால், இதோ என் கேள்விகள். நீ என் சகோதரியை மணந்தாய் அல்லவா?

ஈடிபஸ்:  உண்மைதான்.

கிரியோன்: அவளோடு சேர்ந்து இந்த நாட்டை ஆள்கிறாய் அல்லவா?

ஈடிபஸ்:  அவளது தேவைகளுக்கு நான் என்றுமே குறைவைத்ததில்லை.

கிரியோன்:  இந்த நாட்டில் உனக்கும் அவளுக்கும் அடுத்தநிலையில் இருப்பவன் நான்தானே? பிறப்பால், தகுதியால், உங்களிருவருக்கும் சமமானவன்தானே? சந்தேகமில்லையே?

ஈடிபஸ்:  அதனால்தான் நீ சதிகாரன் ஆனாய் என்கிறேன்.

கிரியோன்:  இல்லை. எனது கோணத்திலிருந்து சற்றே சிந்தித்துப் பார். என்னைப்போல் சக்திபடைத்தவன் எவனாவது பதவி வெறிபிடித்து, து£க்கத்தை இழப்பதற்கு அலைவானா? எனக்கு உன்னளவு மதிப்பும் அதிகாரமும் உள்ளது. ஆனால் பொறுப்புகள் எதுவுமே இல்லை. நான் ஏன் உன்னை அழிக்கவேண்டும்?  பொறுப்புகளற்ற, தொல்லை கலவாத இன்பம் எனக்கிருக்கிறது. நான் பைத்தியக்காரனல்ல, அவற்றை இழக்க.
இப்போதுள்ளதைவிட, எனக்கு கௌரவங்கள் எதுவும் தேவையில்லை.
என்னை யாவரும் போற்றுகிறார்கள், வணங்குகிறார்கள்.
உன்னிடம் காரியம் ஆகவேண்டியவர்களும் என்னையே அணுகுகிறார்கள்.
இந்தக் கவலையற்ற இன்பத்தைவிட்டு, அரசனாகி, உன்போல் அவதிப்படவா விரும்பு வேன் நான்?
மேலும் ஒன்று – தெளிந்த உள்ளம் தீமை செய்யாது. நான் கலகக்காரனல்ல.
நான் சொல்பவற்றை நீ வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்.
டெல்ஃபியின் செய்தியை நான் சரியாகத்தான் தந்தேனா என்று கேட்டுக்கொள்.
டைரீசியஸுடன் சேர்ந்து சதிசெய்ததாக ருசுவானால், எனக்கு மரண தண்டனையே விதி. ஆனால் அதற்குமுன் சான்றுகளோடு நிரூபி.
நல்லவர்களைப் புரிந்துகொள்ள நாட்கள் பல ஆகும். சதி புரிபவர்கள் இரண்டொரு நாட்களில் பிடிபடுவார்கள்.

பா.கு.தலைவன்:  நன்றாகச் சொன்னாய். அவசரப்பட்டு முடிவெடுப்பது புத்திசாலித் தனமல்ல.

ஈடிபஸ்:  ஈடு இணையற்ற இரட்டை வேடம். இவன் என்னைவிட்டுத் தொலைந்தால் நல்லது. இங்கு நின்று என் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருப்பதைச் சகித்துக் கொள்ள வேண்டுமா?

கிரியோன்:  சரி, உனக்கு என்னதான் வேண்டும்? என்னை நாடுகடத்த வேண்டுமா?

ஈடிபஸ்:  இல்லை, எனக்குத் தேவை உன் மரணம். ராஜத் துரோகத்தின் பரிசு என்ன என்று மக்கள் அறியவேண்டும்.

கிரியோன்:  என்மேல் நம்பிக்கை இல்லையா?

ஈடிபஸ்:  எதற்காக நம்புவது உன்னை?

கிரியோன்:  அப்படியானால் நீ ஒரு முட்டாள். நியாயம் என்பதை நினைத்துப் பார்க்காதவன்.

ஈடிபஸ்: பரவாயில்லை. ஆனால், நீ தீமையின் முழுவடிவம்.

கிரியோன்: நீ சொல்வது தவறாக இருந்தால்?

ஈடிபஸ்: அப்போதும் அரசன் நான்தான்.

கிரியோன்: மோசமாக ஆட்சிசெய்பவனை விலக்கிவிடலாம்.

ஈடிபஸ்:  ஐயோ, இது என் நகரம். நகரம் என்னவாகும்?

கிரியோன்:  இது என்னுடைய நகரமும்தான்.

பா.கு.தலைவன்:  மேன்மை தாங்கிய அரசர்களே! சற்று அமைதியாக இருங்கள். அரசி ஜொகாஸ்டா அந்தப்புரத்திலிருந்து வருகிறாள். உங்களிருவரையும் தேடித்தான். உங்கள் சண்டை அவளால் தீரும்.

(ஜொகாஸ்டா வருகிறாள்)

ஜொகாஸ்டா:  அறிவு குழம்பிய மனிதர்களே! இதென்ன கூச்சலும் குழப்பமும்? நம் தீப்ஸ் நாட்டை நரகம் விழுங்கிக் கொண்டிருக்கும்பொழுது, சொந்தப் பிரச்சினைக் காகச் சண்டையும் சச்சரவும்!

(ஈடிபஸிடம்) வா, உள்ளே போகலாம்.

(கிரியோனிடம்) கிரியோன், நீ போ. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு இப்படி ஒரு உலக மகா யுத்தம் வேண்டாம்.

கிரியோன்:  ஒன்றுமில்லாததா? சகோதரி, உன் கணவன் என்னை நாடுகடத்த அல்லது சாகடிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.

ஈடிபஸ்:  பெண்ணே, அவன் சொல்வது சரிதான். என்னைக் கொலைசெய்யும் முயற்சி யில் அவன் பிடிபட்டுச் சரியாக மாட்டிக்கொண்டிருக்கிறான்.

கிரியோன்:  இல்லை, உண்மையில் உனக்கு நான் கெடுதல் நினைத்திருந்தால் எனக்குக் கொடுமையான சாவு வரட்டும்!

ஜொகாஸ்டா:  ஈடிபஸ், இவனை நம்பு. இவன் இட்ட சத்தியத்தை நம்பு. எனக்காக, இந்த மக்களுக்காக.

பா.கு.தலைவன்:  மன்னா, உன் அரசி சொல்வதைக் கேள். உன் மனத்தை அவளுக்குச் சொல்.

ஈடிபஸ்:  நான் இப்போது என்னதான் செய்ய?

பா.கு.தலைவன்:  கிரியோனை மதி, நம்பு. அவர் என்றும் முட்டாள்தனமாகப் பேசிய தில்லை. இப்போதோ சத்தியமே செய்திருக்கிறார்.

ஈடிபஸ்:  நீங்கள் கேட்பதன் விளைவென்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

பா.கு.தலைவன்: தெரியும்.

ஈடிபஸ்: அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

பா.கு.தலைவன்:  இந்த அளவு சத்தியம் செய்யும் நண்பனை, வெறுப்பினால், ஆதாரமின்றி, தண்டிக்கலாகாது.

ஈடிபஸ்:  உங்கள் இந்த முடிவு, எனக்குத் தீமையைத்தான் உண்டாக்கும்.

பா.கு.தலைவன்:   உனக்கு நாங்கள் தீமை நினைத்தால் வானில் எரியும் கதிரவன் சாட்சியாக நாங்கள் அழிந்துபோவோமாக! தீப்ஸ் நாட்டு வறண்ட நிலங்கள் எங்கள் உள்ளங்களை வலிவிழக்கச் செய்திருக்கின்றன. இப்போது உங்கள் இருவர் கெட்ட ரத்தமும்.

ஈடிபஸ்:  சரி, போகட்டும். உங்கள் வருத்தத்திற்காக அவனை நான் விட்டுவிடுகிறேன். சாக வேண்டுமெனில் நானே சாகிறேன். அல்லது தீப்ஸை விட்டுப் போகிறேன். உங்கள் வருத்தமே அவனது பேச்சைவிட என்னை பாதிக்கிறது.

கிரியோன்: கோபத்தில் கோரம். விட்டுக்கொடுப்பதில் அதைவிட மகா கோரம்.

ஈடிபஸ்:  இங்கிருந்து போகிறாயா, இல்லையா?

கிரியோன்:  உனக்குத்தான் உண்மை தெரியவில்லை. இந்த நகரம், இந்த மக்கள் என்னை நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் நான்நேர்மையானவன். நீ மட்டும்தான்….

(கிரியோன் போகிறான்)

பா.கு.தலைவன்: அரசியே, நீ ஈடிபஸை உள்ளே போகச் சொல்லவில்லையா?

ஜொகாஸ்டா: முதலில் என்ன நடந்தது இங்கே என்று சொல்லுங்கள்.

பா.கு.தலைவன்: சாட்சியங்களின்றி, மனத்தில் சந்தேகம். முடிவு, பொய்யான குற்றச் சாட்டுகள்.

ஜொகாஸ்டா:  இருவர் பக்கத்திலுமா?

பா.கு.தலைவன்: இருவர் தரப்பிலும்தான்.

ஜொகாஸ்டா:  என்ன பேசிக்கொண்டார்கள்?

பா.கு.தலைவன்:  நடந்தது நடந்துபோயிற்று. நாம் பட்ட துன்பங்கள் போதாதா?

ஈடிபஸ்:  இந்த உங்கள் அமைதி எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது நாட்டை?

பா.கு.தலைவன்:  நாங்கள் உன்னை மதிக்காவிட்டால் எங்களைப் பைத்தியங்கள் என்றே கருதவேண்டும். முன்பு ஒருமுறை புயல்வீசியபோது உன் வலிமை எங்களைக் காப்பாற்றியது. இப்போதும் அடிக்கும் புயலிலிருந்து எங்களைக் காப்பாற்று.

ஜொகாஸ்டா:  கடவுள் சாட்சியாக எனக்குச் சொல், ஈடிபஸ். ஏன் இந்த ஏராளமான கோபம்?

ஈடிபஸ்:  இந்த ஜனங்கள்மேல் நம்பிக்கை வைத்துப் பயனில்லை. நீ ஒருத்திதான் என் நம்பிக்கைக்கு உரியவள். அதனால் சொல்கிறேன். கிரியோன் எனக்கு எதிராகச் சதி செய்கிறான்.

ஜொகாஸ்டா: விளக்கமாகச் சொல்லேன்.

ஈடிபஸ்:  லேயஸைக் கொன்றவன் நான் என்று பழிபோடுகிறான்.

ஜொகாஸ்டா: ஆதாரம் இருக்கிறதா? அல்லது வெறும் செவிவழிச் செய்திதானா?

ஈடிபஸ்:  யாரோ ஒரு பாழும் பூசாரியைக் கொண்டுவந்து ஏதோ ஒரு கதைகட்டுகிறான்.

ஜொகாஸ்டா:  அமைதியாக இரு ஈடிபஸ். இதற்கு அலட்டிக்கொள்ளாதே. ஜோசியத் துக்கு அவ்வளவு மதிப்பு ஒன்றும் இல்லை. பலவேளைகளில் ஜோசியம் பொய்தான். ஓர் ஆதாரம் சொல்கிறேன் கேள்.
லேயஸுக்கு அசரீரி ஒன்று கேட்டது. தனது மகனாலேயே கொல்லப்படுவான் என்று. ஆனால் நடந்தது என்ன?
லேயஸ் ஒரு முச்சந்தியில் யாரோ முகம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டார். அவரது குழந்தையோ பிறந்த மூன்றாம் நாளே கணுக்கால்களில் துளையிடப்பட்டு தனியாக மலைப்பகுதியில் சாகுமாறு விடப்பட்டது.
ஆக, அப்போலோ சொன்ன மாதிரி, அசரீரி சொன்ன மாதிரி, தன் குழந்தையால் லேயஸ் இறக்கவில்லை. இதுதான் ஜோசியம், இதுதான் பூசாரியின் தகுதி!
இவர்களுக்குப் போய் நாம் பயப்படவேண்டாம். கடவுளுக்கு மட்டுமே நாம் அஞ்ச வேண்டும்.
(ஈடிபஸை உற்றுநோக்கி)   ஆமாம், ஏன் இப்படி முகம் வியர்க்கிறாய் நீ?

ஈடிபஸ்:  இரு இரு. நிழலாடும் ஏதோ நினைவுகள் என்னை வழிமறிக்கின்றன. நீ இப்போது சொன்னவை என் இதயத்தை உறைய வைக்கின்றன.

ஜொகாஸ்டா:  எந்த நினைவுகளைச் சொல்கிறாய் நீ, ஈடிபஸ்?

ஈடிபஸ்:  லேயஸ் மூன்று சாலைகள் கூடுமிடத்தில்-முச்சந்தியில் கொல்லப்பட்டார் என்றா சொன்னாய்?

ஜொகாஸ்டா: ஆம், அப்படித்தான் மற்றவர்கள் சொல்லிக்கொண்டார்கள். அதுதானே எனக்குத் தெரியும்?

ஈடிபஸ்:  இது நடந்தது எங்கே?

ஜொகாஸ்டா:  அந்த இடத்தை ஃபோகிஸ் என்கிறார்கள். டெல்ஃபிக்கும் டாலியாவுக்கும் தீப்ஸ் நகரச் சாலை பிரியும் இடம்.

ஈடிபஸ்: எப்போது நடந்தது?

ஜொகாஸ்டா:  நீ இங்கு வந்து அரியணையில் அமர்வதற்குக் கொஞ்சகாலம் முன்னால்.

ஈடிபஸ்:  ஆஹா, கடவுள் பின்னும் வலை விநோதமானது.

ஜொகாஸ்டா:  நீ ஏன் அதற்கு வருத்தப்படுகிறாய், ஈடிபஸ்?

ஈடிபஸ்:  இரு இரு சொல்கிறேன். கொலை நடந்தபோது அவருக்கு என்ன வயது? பார்க்க எப்படி இருப்பார் அவர்?

ஜொகாஸ்டா:  நல்ல உயரம் அவர். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலையில் வெள்ளைமுடி தோன்றியிருந்தது. உருவத்தில் உனது சாயலும் இருந்தது.

ஈடிபஸ்:  எனது அறியாமைக்காக நான் சபிக்கப்பட வேண்டும்!

ஜொகாஸ்டா: என்ன என்னவோ பேசுகிறாயே, உன்னைப் பார்க்கவே என் உடல் நடுங்குகிறது அரசே!

ஈடிபஸ்:  குருட்டுப் பூசாரி குருடன் இல்லையென்று தோன்றுகிறது. எனக்கு இன்னும் சில விஷயங்கள் தெரியவேண்டும்….

ஜொகாஸ்டா:  என்ன தெரியவேண்டும்? என்றாலும் நீ கேட்பது பயமாக இருக்கிறது.

ஈடிபஸ்: லேயஸுக்குப் பாதுகாப்பாக எத்தனைபேர் சென்றார்கள்? கொஞ்சம் பேர்தானா?

ஜொகாஸ்டா:  ஐந்துபேர் போனார்கள். அதில் ஒருவன் தண்டோரா போடும் அறிவிப்பாளன். தன் ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றார் அவர்.

ஈடிபஸ்:  ஐயோ, எனக்கு இப்போது புரிகிறது எல்லாம். இப்படி நடந்த செய்தி உனக்கு எவ்வாறு கிடைத்தது?

ஜொகாஸ்டா: தப்பிவந்த சேவகன் ஒருவனால். தப்பிவந்தது அவன் ஒருவன்தான்.

ஈடிபஸ்: இன்னும் அவன் இங்கு இருக்கிறானா?

ஜொகாஸ்டா:  நீ அரசனாகப் பதவி ஏற்ற சமயம்தான் அவனைக் கடைசியாகப் பார்த்தது. உன்னைப் பார்த்துவிட்டு அவன் என்னிடம் ஓடிவந்தான். என் கைகளைப் பற்றி அழுதான். தன்னை எங்காவது தொலைது£ரத்திற்கு அனுப்பிவிடுமாறு மன்றாடி னான். நானும் கருணையினால் அவன் கேட்டதை நிறைவேற்றினேன்.

ஈடிபஸ்: அவனை இப்போது உடனே அழைக்கமுடியுமா?

ஜொகாஸ்டா: முடியும். ஆனால் எதற்காக?

ஈடிபஸ்:  எதையும் யோசிக்காமல் நான் என்னென்னவோ செய்திருக்கிறேன். அவனோடு கொஞ்சம் பேசவேண்டும்.

ஜொகாஸ்டா:  உனக்குத் தேவையென்றால் வரச்சொல்கிறேன். ஆனால் உனது பயம் என்ன? எனக்குச் சொல்லக்கூடாதா?

ஈடிபஸ்:  உன் உரிமையல்லவா அது? ஆனால் இப்போது தீய சகுனங்கள் புலப்படு கின்றன. நான் மனக்கிளர்ச்சியின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கிறேன். யாரோடாவது நான் பேசித் தெளிவு பெற்றாகவேண்டும்.

காரிந்த் அரசர் பாலிபோஸ் என் தந்தை. தாய் டோரிய இனம். மெரோபே என்று பெயர். ஒருநாள் ஒரு விசித்திரம் நடந்தது. என் அரண்மனை விருந்தில் ஒரு குடிகாரன், “நீ உன் தந்தையின் மகன் அல்ல” என்று ஏளனம் செய்தான். கோபம் குமுறும் நெஞ்சத்தோடு என் பெற்றோர்களை இதுபற்றிக் கேட்டேன்.
“போடா முட்டாள்!” என்று கேலி செய்தார்கள் என்னை.

எனினும் மனதின் ஒரு மூலையில் இந்தச் சந்தேகம் உறுத்திக்கொண்டே இருந்தது. கொந்தளிப்பு அடங்காமல் ஒருநாள் டெல்ஃபி கோயிலுக்குச் சென்றேன். என் கேள்விக்குப் பதில் சொல்லாத கடவுள், அந்த அசரீரி, வேறு எதையோ உளறிக்கொட் டிற்று. “என் தந்தையை நானே கொல்வேன்….” “என்னுடைய தாயுடன் நான் மலர் மஞ்சத்தைப் பகிர்ந்துகொள்வேன்…” “எவரும் வெறுக்கும் பிள்ளைகளைப் பெறு வேன்…,” இப்படி.

ஜொகாஸ்டா: அப்புறம்?

ஈடிபஸ்:  காதைப் பொத்திக்கொண்டு இத்தீமைகள் நிகழமுடியாத எந்த நாட்டிற்குப் போகலாம் எனத் தவித்து ஓடினேன். தீப்ஸின் வரவேற்கும் கை வானில் தெரிந்தது. வழியில் நடந்ததைச் சொல்கிறேன் கேள்.

மூன்று சாலைகள் சந்திக்கும் ஓரிடத்தில், தண்டோரா போடுபவன் ஒருவன் ரதத்தின் வருகையை அறிவித்தான்.
ரதத்தில் நீ கூறிய அதே தோற்றமுடைய ஒரு மனிதரைக் கண்டேன். அவருடைய குதிரைக்காரன் இழிவான மொழிபேசி என்னை ஒதுங்கச் சொன்னான். கோபமுற்று எழுந்த நான், கையிலிருந்த கழியால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவனையும், ரதத்தில் அமர்ந்திருந்தவரையும், மற்றவர்களையும் அடித்து சொர்க்கத்திற்கு அனுப்பிவைத்தேன்.

ரதத்தில் வந்தது லேயஸாக இருந்தால்…?
என்னைவிட மனம் மறுகுபவன் வேறு யார்?
அத்தனை கடவுள்களும் என்னைச் சபிக்கும்.
இது உண்மையான பட்சத்தில் யாவரும் என்னை வெறுத்து ஒதுக்குவார்கள்.
இது நானே எனக்கு வருவித்துக்கொண்ட தீமை.
நினைத்துப் பார், ஜொகாஸ்டா.
உன் கணவரைக் கொன்ற கைகளினாலேயே உன்னைத் தொட்டிருக்கிறேன்.
என்ன அவலம் இது? நான்தான் தீமையின் உருவம். ஐயோ, என் தந்தையைக் கொல்லக்கூடாது, தாயை விட்டு ஓடிப்போகவேண்டும் என்று நினைத்து வந்து இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டேனே….
என்னைப் படைத்த கடவுள், எனக்கு இப்படி விதித்த கடவுள்…. கொடுமையானவன்.
கடவுளே, நான் தண்டனை பெறும் நாளை என் கண்ணில் காட்டிவிடாதே. மாறாக என்னை மனித குலமே காணாமல் போக்கிவிடு.

பா.கு.தலைவன்:  அரசே, இந்தச் செய்தி கேட்டு நாங்களும் துயரம் கொள்கிறோம். எனினும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. தப்பிவந்த சேவகனைக் கேட்கவேண்டியது பாக்கியிருக்கிறதே.

ஈடிபஸ்:  எனக்கும் அது ஒன்றைத் தவிர வேறு நம்பிக்கை இல்லை.

ஜொகாஸ்டா:  அவன் வந்தால் என்ன? அதனால் உன் நம்பிக்கை எப்படி பலம்பெறும்?

ஈடிபஸ்:  இந்தக் கொலையைப் பற்றி நீ சொன்னதும் அவன் சொன்னதும் ஒத்திருந்தால் நான் தொலைந்தேன். இல்லையென்றால்….

ஜொகாஸ்டா: கொலையைப் பற்றி நான் என்ன சொன்னேன்?

ஈடிபஸ்:  யாரோ முகம் தெரியாதவர்கள் பலரால் லேயஸ் கொல்லப்பட்டார் என்றாய். அந்த இடையனும் அதையே சொன்னால் அரசரைக் கொன்றவன் நானல்ல. ஆனால் ஒரே ஒருவன்தான் எல்லோரையும் தாக்கிக் கொன்றான் என்று அவன் சொன்னால் சாட்சியம் என்னைப் பார்த்து விரல் நீட்டும்….

ஜொகாஸ்டா:  நிச்சயம் அவன் பலபேர் என்றுதான் சொன்னான். ஆனால் அவனுக்கு இப்போது அதெல்லாம் ஞாபகம் இருக்குமா? செய்திகளைச் சற்று மாற்றிச் சொல்லி விட்டால்….?

அப்போதும் ஜோசியம் பொய்யே. தன் குழந்தையாலேயே லேயஸ் இறப்பார் என்ற அசரீரி வாக்கு அபபோதும் நிரூபிக்கப்படாது. யாரோ ஒருவனான…காரிந்த் நகரத்தவ னான நீ…லேயஸைக் கொன்றாய் என்றுதானே ஆகிறது?
பாவம்…என் முதல் குழந்தைதான் செத்துப்போயிற்று.
இனிமேல் நான் ஒருகணமும் ஜோசியம், குறி, அசரீரி இவற்றை நம்பமாட்டேன்.

ஈடிபஸ்:  நீ சொல்வது சரிதான். என்றாலும் யாராவது போய் அந்த உன் பழைய சேவகனை-ஆடுமேய்ப்பவனை அழைத்துவந்தால் இந்த விஷயம் முடிந்துவிடும்.

ஜொகாஸ்டா:  இதோ யாரையாவது அனுப்புகிறேன். உன் சஞ்சலங்களில் குறுக்கிட்டு நான் அதிகப்படுத்த மாட்டேன். நிச்சயமாக இந்த விஷயத்தில் உன் எண்ணப்படிதான் நடக்கும்.
(இருவரும் அரண்மனைக்குள் போகின்றனர்)

கோ1- நாம் பயணம் செய்யும் பாதை தனிவழிப்பாதை

கோ2- சரியான வழிகள் இங்கே வணங்கப்படுமாக

கோ3- பிரபஞ்சத்தின் நியாயங்கள் சொர்க்கத்திலிருந்து கிடைத்தவை

கோ4- அவை வெறும் ஞாபகங்களின் அடிமை அல்ல

கோ5- அவை து£க்கத்தில் தொலைந்துபோய்விடுபவை அல்ல

கோ6- காலத்தைக் கடந்து நிற்பவை, மறைவானவை

கோ1- தற்பெருமையில் பிறப்பதுதான் கொடுங்கோல்

கோ2- பொறுப்பில்லாத்தனம் கொடுங்கோலனின் இலக்கணம்

கோ3- படாடோபம் அவன் நம்பிக்கைக்கு உருத்தருவது

கோ4- அப்படிப்பட்டவன் உண்மையில் பலசாலி அல்ல:

கோ5- அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி எழும்

கோ6- நாட்டிற்குப் போராடுபவரைக் கடவுள் காத்து நிற்பார்

கோ1- வெறுப்பும் அடங்காமையும் பணிவின்மையும் உலகில் மிகுந்தன

கோ2- அவை கடவுளின் புனித சட்டத்தைக் குலைக்கின்றன

கோ3- தன்னிடமே அனைத்துச் சக்திகளும் இருப்பதாகக் கருதுகிறார்கள்

கோ4- அந்த மனிதர்கள் விதியின் வலையில் வீழ்ந்து துன்புறுவார்கள்

கோ5- புனிதமான விஷயங்களில் எவரும் குறுக்கிடாமல் இருப்பாராக!

கோ6- இல்லையெனில் கடவுளின் வீழ்த்தும் இடி அவர்களைக் கொல்லும்

கோ1- டெல்ஃபியின் மந்திரச் சொற்கள் பொய்யாகிப் போகுமா?

கோ2- கடவுளர்கள் இனிமேல் புகழப்படப் போவதில்லையா?

கோ3- நீ உலகுக்குத் தலைவன் எனில், கடவுளே! உன் தராசில் இதை எடையிட்டுப் பார்!

கோ4- எங்கள் தலைவர்கள் உன் ஆணையை, டெல்ஃபியின் தீர்க்கதரிசனத்தை இகழ்கிறார்கள்

கோ5- அவர்களது இதயங்கள் அறியாமையில் மூழ்கியிருக்கின்றன

கோ6- கடவுளர்மீது மரியாதை செத்துப்போனது.


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 2

ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 2

[குழுப்பாடகர்கள் ஆறுபேர் (கோரஸ் எனப்படுவோர்) இரண்டு கதவுகள் வழியாகவும் வருகின்றனர்]

கோ1- தங்கமும் நிழலும் பூரணமாகத் ததும்பும் டெல்ஃபி நாட்டில் கடவுள் பாடும் பாடல்தான் என்ன?

கோ2- சூரிய ஒளிக்கற்றை வீசும் நாடு தீப்ஸுக்கு அசரீரி சொன்னதுதான் என்ன?

கோ3- பயம் என்னைப் பல கூறுகளாக்குகிறது. இதயத்தின் வேர்கள் விதிர்விதிர்க்கின்றன.

கோ4- ஓ குணமாக்கும் கடவுளே, உன் சக்தி என் நினைவுக்கு வருகிறது. உன் தண்டனை எவ்விதம் வரும்?

கோ5- சட்டென மாறும் மேகம் போலவா? இல்லை, நீடித்த இரவின் இருள் போலவா?

கோ6- சொல், எங்களிடம் சொல், நன்னம்பிக்கையின் குழந்தையே, அசரீரியே, தங்கக் குரலே, சொல்.

கோ1- அறிவுக் கடவுள் அதீனாவைப் பிரார்த்திப்போம். அவளது சகோதரி ஆர்ட்டெமிஸை வணங்குவோம். அப்போலோவையும் துதிப்போம்.

கோ2- எங்கள் துயர்களுக்கு எதிராகப் பாய்ந்து இருளை அகற்றி விரைவில் அமைதியைக் கொடுங்கள்.

கோ3- எங்கள் கஷ்டங்களுக்கு எல்லை எல்லாமல் போய்விட்டது.

கோ4- பாதிக்கப்பட்ட எம்மை உறவினர்கள், எம் மக்கள் பாராமலே போகின்றனர்.

கோ5- மரணத்தோடு போராடுபவன் எந்தச் சுயநினைவுமே இல்லாமல் ஆகிவிடுகிறான்.

கோ6- செழுமையான நிலங்களில் விளைச்சலே இல்லை.

கோ1- தாங்க முடியாத வலியால் துடிக்கிறது தாய்க்குலம்.

கோ2- நெருப்புத் துண்டங்களிலிருந்து பறக்கும் பொறிகள்போல், வானில் சிறகடித்துப் பறக்கம் பறவைகள்போல், எங்கள் வாழ்க்கை மரணத்தில், மாலைக்கடவுள் நாட்டின் விளிம்பில், நிற்கிறது.

கோ3- கொள்ளை நோய் தீயாய்க் கொழுந்துவிட்டு எரிகிறது.

கோ4- கல்லில் அடித்த சிலைகளாக இறந்து கிடக்கும் குழந்தைகள்.

கோ5- மாரடித்துப் பிலாக்கணம் சொல்லிக் கதறியழும் கிழவிகள்.

கோ6- கடவுளின் பொன்னிறக் குழந்தையே! சூரிய தேவனே! நீயேனும் எங்களுக்குக் கருணை காட்டு.

கோ1- கத்தியின்றி நடக்கும் யுத்தம் இது. நாங்களோ கேடயமின்றி இருக்கிறோம்.

கோ2- அழுகைக்குரல் மட்டும் என்றைக்கும் அடங்குவதே இல்லை, கடவுளே!

கோ3- எங்களைக் கொள்ளையிடும் முற்றுகையால் முழுகடிப்பவனை அப்படியே தூக்கிக் கடலில் எறி, கடவுளே!

கோ4- இடிக்கடவுளே, எங்கள எதிரியின் தலையில் ஆயிரம் இடிகளைச் செலுத்து.

கோ5- சூரிய தேவனே, உன் ஒளிக்கணைகளை எங்கள் எதிரிமேல் செலுத்து.

கோ6- ஆர்ட்டெமிஸ் தேவியே, உன்னால் அவன் வேட்டையாடப் படட்டும். எங்கும் மகிழ்ச்சி பிறக்கட்டும்.

(ஈடிபஸ் வருகிறான்)

ஈடிபஸ்: இதுதான் உங்கள் பிரார்த்தனை என்றால் நிறைவேறட்டும், அது. நான் சொல்வதற்குச் சற்றுச் செவிசாயுங்கள். இந்த நெருக்கடிகள், தீமைகள், விரைவில் தீரப்போகின்றன. இதுவரை நடைபெற்ற கதைகள் எனக்குத் தெரியாதது போலவே குற்றங்களும் எனக்குத் தெரியாமல் போய்விட்டன. கொலையாளியைக் காட்டும் துப்பு சீக்கிரம் துலங்கிவிடுமா? நண்பர்களே, இவையெல்லாம் நடந்து முடிந்தபின் வந்தவன் நான். இதன்மூலம் தீப்ஸ் நாட்டு மக்கள் எல்லோருக்கும் நான் அறிவிக்கிறேன்: “லேயஸ் எப்படி இறந்தார் என்பது தெரிந்தவர் எவராயினும் பயமில்லாமல் தபன்வாரிசு இல்லாமல் போயிற்றே!

நான் லேயஸுக்கு மகனாக இருந்து பழிவாங்குவேன். அவருக்காகப் போராடுவேன். இந்தப் போராட்டத்தில் என்னோடு சேர்ந்துகொள்ளாத சிறிய உள்ளங்கள் இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க முடியாது. அவர்களும் பிள்ளையின்றித் தவிப்பவர்கள் ஆகட்டும்! பெருந்துயரில் விழுந்து மீளாது அவர்கள் துனபுறட்டும்!

பாடற்குழுத் தலைவன்: மன்னா, சத்தியப் பிரமாணம் எடுத்தவன் நான். மன்னரின் மரணத்திற்கு நான் காரணமில்லை என்பதால் மன்னரைக் கொலைசெய்தவன் யார் என்று எனக்குத் தெரியாது.
தேடு என விதித்தான் கடவுள். ஏன் கொலைசெய்தவனின் பெயரை அவன் தெரிவிக்கவில்லை?

ஈடிபஸ்: நல்ல கேள்வி. ஆனால், கடவுள், மனிதனுக்கு இவ்வளவுதான் என்று கருணையைப் படியளக்கிறான். அதற்குமேல் ஒரு துளிகூட நம்மால் அடையமுடியுமா?

பா.கு.தலைவன்: இதற்கு இன்னொரு வழி இருக்கிறதே.

ஈடிபஸ்: சொல் உடனே. எந்த வழியானாலும் சரி.

பா.கு.தலைவன்: அப்போலோவின் கோவிலில் முக்காலமும் அறிந்த ஞானி, ஜோசியம் சொல்லுபவர், கடவுளின் பூரண அருள் பெற்றவர் டைரீசியஸ். அவரை அணுகினால் அனைத்து விஷயமும் தெரிந்துவிடும் ஈடிபஸ்.

ஈடிபஸ்: இது தெரியாமல் நான் நேரத்தை வீணடிக்கவில்லை. கிரியோன் இதைப்பற்றிச் சொன்னான். டைரீசியஸை அழைத்துவர நான் ஆட்களை அனுப்பி யிருக்கிறேன். இரண்டு முறை. ஆச்சரியம், அவர் இன்னும் வந்து சேரவில்லை.

பா.கு.தலைவன்: அப்படியானால், அந்த இன்னொரு செய்தி-பழைய செய்தி-இனிமேல் பயனற்றது.

ஈடிபஸ்: என்ன செய்தி அது? நான் எல்லாச் செய்திகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

பா.கு.தலைவன்: மன்னர் சில வழிப்பறிக் கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்டார் என்ற செய்தி.

ஈடிபஸ்: தெரியும், ஆனால் அதற்குச் சாட்சி இல்லை.

பா.கு.தலைவன்: கொலை செய்தவனுக்குத் துளி பயமிருந்தாலும், இத்தனை நேரம் உன் சாபங்கள் அவனைச் சரணடைய வைத்திருக்கும்.

ஈடிபஸ்: இந்தப் படுகொலையைச் செய்தவன் சாபங்களுக்குப் பயப்படுவான் என்று எனக்குத் தோன்றவில்லை.

(குருட்டு ஞானி டைரீசியஸைக் காவலாளி ஒருவன் அழைத்துவருகிறான்)

பா.கு.தலைவன்: மனிதர்களிலே மனத்தில் உண்மை ஒளி கொண்டவன், புனிதமான ஞானி, டைரீசியஸ். இவரால் மட்டுமே மன்னரைக் கொன்ற குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியும்.

ஈடிபஸ்: டைரீசியஸ்! மண்ணுலகம், விண்ணுலகம் இவ்விரண்டின் இரகசியங்களையும் அறிந்து கற்றடங்கிய மெய்ஞ்ஞானியே! உங்கள் கண்கள் பழுதுபட்டிருந்தாலும் இந்த நகரம் கொள்ளை நோயால் நாறிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கொள்ளை நோயிலிருந்து எங்களை உங்களால் மட்டுமே காக்க முடியும்.

தூதுவர்கள் சொன்னதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். லேயஸ் மன்னரைக் கொன்றவனைக் கண்டுபிடித்து தண்டித்தால் நாட்டைப் பீடித்த கறை நீங்கும் என்று அப்போலோ கோயில் அசரீரி சொன்னது.

பறவைகளை வானில் பறக்கவிட்டோ, வேறு எந்தத் தீர்க்கதரிசனத்தாலோ, இந்த நாட்டைக் கொள்ளைநோயிலிருந்து காப்பாற்ற முடியுமா?
எங்களை நான் உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டேன். துயரில் துவண்டு கிடப்பவர்க ளுக்கு உதவிசெய்வதைவிட வேறு ஒரு பெரிய கடமை இருக்கிறதா?

டைரீசியஸ்: உண்மையை அறிவதால் உதவியற்றபோது, அவ்வுண்மையின் ஒளி பயங்கரமாகவே தெரியும். அதனால்தான் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உம்…. நான் வந்திருக்கவே கூடாது.

ஈடிபஸ்: நீங்கள் ஏன் இப்படி வருத்தம் கொள்கிறீர்கள்? உங்கள் கண்கள் ஏன் இப்படி இரக்கமற்றுப் போகவேண்டும்?

டைரீசியஸ்: என்னைத் திரும்பிப் போகவிடு…. உன் விதியை நீ அனுபவி. என் விதியை நான் அனுபவிக்கிறேன். அதுதான் நல்லது. நான் சொல்வதை ஏற்றுக்கொள்.

ஈடிபஸ்: உங்கள் நாட்டின்மீது இரக்கம் அற்றிருக்கிறது உங்கள் செய்கை. பேசமாட்டேன் என்று சொல்லாதீர்கள்.

டைரீசியஸ்: பேச்சு என்று வந்தால்-உன் பேச்சுதான் சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாகவும் இல்லை, மென்மையாகவும் இல்லை. இருந்தாலும் நான் தெளிவோடு இருக்க விரும்புகிறேன்.

ஈடிபஸ்: கடவுளின் பெயரால் நாங்கள் உங்களிடம் மன்றாடுகிறோம்….

டைரீசியஸ்: நீங்கள் அனைவரும் அறியாமையில் உழல்பவர்கள். நான் அறிந்ததை உங்களிடம் சொல்லக் கூடாது. என் மனத்தில் கிடந்து என்னை வாட்டும் அது அப்படியே இருக்கட்டும்.

ஈடிபஸ்: என்ன! உங்களுக்குத் தெரியும், ஆனால் சொல்ல மாட்டீர்களா? நாடு எக்கேடு கெட்டால் என்ன என்று போய்விடுவீர்களா?

டைரீசியஸ்: என்னை வருத்திக்கொள்வதோ, உன்னையும் வருத்துவதோ என் விருப்ப மல்ல. ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறாய்? உன்ன என்னை வற்புறுத்த இயலாது.

ஈடிபஸ்: பொல்லாத கெட்ட கிழவர் நீங்கள்! உங்கள் மனம் கல்லைவிட இறுகிப் பாறையாகக் கிடக்கிறது. கல்லும் இளகும், மனத்தில் உங்களுக்கு உணர்ச்சிகளே இல்லையா?

டைரீசியஸ்: என்னை உணர்ச்சிகள் அற்றவன் என்கிறாய், உன் உணர்ச்சிகளை நீ அறிந்தால்…..

ஈடிபஸ்: ஏன், என்னைப்போல யார் மக்களுக்காக உணர்ச்சியில் தத்தளித்து அழுவார்கள்? நகரம் நாறிக் கொண்டிருக்கிறது, நீங்கள் தலைக்கனம் பிடித்து ஆடுகிறீர்கள்!

டைரீசியஸ்: நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், ஒன்று நடந்தே தீரவேண்டும் எனில் அது ஆகவேண்டியதுதான்…. நான் சொல்லாவிட்டால்தான் என்ன?

ஈடிபஸ்: உண்மையை நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்.

டைரீசியஸ்: இல்லை, நான் சொல்லுவதற்கில்லை. நீ எவ்வளவு கோபம் கொண்டாலும் சரி.

ஈடிபஸ்: கோபம் கொள்வதா? கோபம் வராமல் என்ன செய்யும்? எனக்கு இப்போது புரிகிறது…. நீங்கள்தான் இதை திட்டமிட்டுச் செய்தீர்கள். நீங்கள்தான் இந்தக் கொலையைச் செய்த ஆள். அல்லது இந்தக் கொலையைச் செய்ய வைத்தீர்கள். நீங்கள்தான் இந்த நாட்டின் மாசு, விஷம், பாவமூட்டை…..

டைரீசியஸ்: அப்படியா, மிகவும் சரி. நான் உண்மையைச் சொல்வதானால், நீ உன் வாக்கைக் காப்பாற்ற வேண்டும். இன்றுமுதல் நீ என்னுடனோ, வேறு யாருடனோ பேசக்கூடாது….. சரி, சொல்லிவிடுகிறேன்…. இந்த நாடு இப்படி நாறிக் கொண்டிருப்பது உன் செயலினால்தான்.

ஈடிபஸ்: என்ன துணிச்சல் உனக்கு? இப்படித் துடுக்குத் தனமாகப் பேசிவிட்டு நீ தப்பிக்கமுடியும் என்று நினைக்கிறாயா?

டைரீசியஸ்: நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன். ஆனால் உண்மைதான் என்னை இந்நேரம் இங்கே கட்டிப்போட்டு வைத்திருந்தது.

ஈடிபஸ்: உங்களுக்கு வெட்கமாக இல்லை? உங்கள் முட்டாள் தந்திரமில்லையா இது?

டைரீசியஸ்: என்னைப் பேசவைத்தது நீ. நான் சொல்லவே கூடாது என்றுதான் இருந்தேன்.

ஈடிபஸ்: அதற்காக, என்ன சொல்லுகிறீர்கள்? சொல்வதை இன்னும் ஒருமுறை தெளிவாகச் சொல்லுங்கள்.

டைரீசியஸ்: ஏற்கெனவே சொன்னது தெளிவாக இல்லை? மறுபடியும் வேறு சொல்ல வேண்டுமா?

ஈடிபஸ்: புரியவில்லை எனக்கு. சொல்லுங்கள் இன்னொரு முறை.

டைரீசியஸ்: நான் சொல்கிறேன், நாம் தேடிக்கொண்டிருக்கிற அந்தக் கொலைகாரன் நீதான்.

ஈடிபஸ்: இருமுறை அவமானப் படுத்திவிட்டீர்கள். அதற்கு தண்டனை இல்லாமல் போகாது.

டைரீசியஸ்: நீ இன்னும் கொஞ்சம் நிதானமாகப் பேசு. கோபம் கொள்ளும் அளவுக்குத் துணிவிருக்கிறதா உனக்கு?

ஈடிபஸ்: நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லை.

டைரீசியஸ்: உனக்கு நெருக்கமானவர்களோடு மகா பாவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஈடிபஸ்! தீமையை உன்னால் காணமுடியவில்லை….

ஈடிபஸ்: உங்களால் எவ்வளவு நேரம் இப்படி உளறிக் கொண்டிருக்க முடியும்?

டைரீசியஸ்: உண்மைக்குச் சக்தி இருக்குமானால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்.

ஈடிபஸ்: உண்மைக்குச் சக்தி இருக்கிறது, ஆனால் உங்களுக்கு இல்லை. உங்களுக்குப் பார்வையில்லை, அறிவில்லை, புத்தியில்லை, பைத்தியக்காரக் கிழவர் நீங்கள்.

டைரீசியஸ்: நீதான் பைத்தியக்காரன். என்னை நீ சபிக்கிறாற்போல், உன்னை வெகுசீக்கிரம் எல்லாரும் சபிக்கப்போகிறார்கள்.

ஈடிபஸ்: அமாவாசையில் பிறந்தவரே! உம்மை நான் தண்டிக்காமல் விடுகிறேன். இந்தச் சூரியனறிய, பூமியறிய உம்மை ஒரு நாய்கூடச் சீண்டாது.

டைரீசியஸ்: சரிதான், நீ எனது விதியைச் சமைப்பவன் அல்ல. என் வாழ்வு உலகை ஆட்டுவிக்கும் அப்போலோ விதிக்கும் விதி.

ஈடிபஸ்: சொல்லும்! நீர் இப்போது சொன்ன அற்புதமான கண்டுபிடிப்புகளுக்குக் காரணகர்த்தா யார்? கிரியோனா, அல்லது வேறு யாராவதா?

டைரீசியஸ்: கிரியோனைக் கண்டு நீ பயப்படத் தேவையில்லை. உனது அழிவை நீயே பின்னிக்கொண்டிருக்கிறாய்.

ஈடிபஸ்: செல்வம், பலம், அரசதந்திரம், அரியணை! இன்றைக்கு எல்லாரும் கண்டு ஆசைப்படுகிறார்கள். ஒரு காலத்தில் அரியணை நான் கேட்காமலே எனக்குக் கிடைத்தது. ஆனால் இன்று இதற்காகப் போட்டி, பொறாமை. கிரியோன் பதவிக்காக என்னை அழிக்கப் பார்க்கிறான். ஒரு உதவாக்கரை ஜோசியனை, காசு பொறுக்கியை, நயவஞ்சகப் பூசாரியை, என்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறான் கிரியோன். இவனைவிட என்னால் நல்லபடியாகவே ஜோசியம் சொல்லமுடியும்.

சொல்லும், உம் உதடுகள் முணுமுணுக்கும் மந்திரங்கள் எப்போதேனும் உண்மையை நெருங்கியிருக்கின்றனவா? ஸ்பிங்ஸ் இந்த நாட்டைச் சின்னாபின்னம் செய்துகொண்டி ருந்தபோது நீர் எங்கிருந்தீர்? ஸ்பிங்ஸின் புதிர்கள் எவனோ ஒரு வழிப்போக்கனால் தீர்க்கப்படுவதற்கு உரியவை அல்ல. அதற்கு ஆற்றல் வாய்ந்த நான் தேவைப்பட்டேன்.

உம்முடைய பறவைச் சகுனமும், பயனற்ற மந்திரங்களும் அதை அசைக்கக்கூட முடியவில்லையே!

அந்த நேரம் ஈடிபஸ் என்ற எளிய மனிதன் நான் வந்தேன். பறவைகள் மந்திரங்கள் எவையுமே இல்லாமல், ஸ்பிங்ஸை வெற்றிகொண்டேன். என்னைநீரும் உம் தோழன் கிரியோனும் அழிக்கப் பார்க்கிறீர்கள். நீர் வயதானவர் ஆனதால் உம்மை விட்டுவிடு கிறேன்.

பா.கு.தலைவன்: இருவர் பேசியவையும் கோபத்தில் எழுந்த வார்த்தைகள். கோபம் நமக்குத் தேவையில்லை, ஈடிபஸ்! கடவுள் சித்தத்தை நாம் நிறைவேற்றுவது எப்படி? அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

டைரீசியஸ்: நீ அரசன். ஆனால் விவாதம் என்று வந்தபிறகு நானும் மனிதன்-நீயும் மனிதன். நான் கடவுள் அப்போலோவின் அடிமை. உன் கூலியாள் அல்ல. எனக்குக் கிரியோனும் தேவையில்லை, எவனும் தேவையில்லை. கேள்:

நான் குருடன் என்று கிண்டல் செய்கிறாய். இரண்டு கண்ணிருந்தும் நீதான் குருடன். உன் வாழ்வின் அவலத்தை அறிய உன்னால் இயலவில்லை. யார் வீட்டில் யாரோடு வாழ்கிறாய் என்ற அவலத்தை அ றிய உன்னால் முடியவில்லை. உன் தந்தை யார்? தாய் யார்? சொல்ல முடியுமா? நீ அவர்களுக்குச் செய்த குருட்டுத்தனமான பாவங்கள் சாட்டைகளாக மாறி உன்னை உயிருள்ளவரை அடித்துக் கொல்லும்.
அப்போது நீ அழும் கூக்குரல் ஒலி உலகமுழுவதும் கேட்கும்.

நீ குழந்தையாகத் தவழ்ந்த கீதெய்ரான் மலை அந்தக் கூக்குரலை எதிரொலிக்கும்.

நீ தீப்ஸுக்குள் நுழையும்போது பாடினார்களே, திருமணப்பாடல்-அதன் அர்த்தத்தை நீ அப்போது அறிவாய். இன்னும் இனிமேல் நீ அறியப்போவது-இப்போது புரிந்து கொள்ள முடியாதது-உன்னை உன் குழந்தைகளின் மத்தியிலே ஒருவனாகக் கொண்டு நிறுத்தும்.
சபி. கிரியோனைச் சபி. என்னைச் சபி. வெகு சரி. கோபப்படு. உயரத்திற்குச் சென்று விட்ட நீ அதல பாதாளத்தில் தூக்கி எறியப்படப் போகிறாய்.

ஈடிபஸ்: உன்னிடமிருந்து இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு சும்மாயிருக்க வேண்டுமா? அழிந்து போ! இந்த இடத்தைவிட்டுப் போய்விடு! என் கண் முன்னால் நிற்காதே.

டைரீசியஸ்: நீ கூப்பிட்டாய், நான் வந்தேன். இல்லாவிட்டால் நான் வந்தே இருக்க மாட்டேன்.

ஈடிபஸ்: கூப்பிட்டேன், ஆமாம். இப்படிப் பிதற்றிக் கொட்டவா? இப்படி உளறி நீ என்னையும் உன்னையும் முட்டாளாக்கவா?

டைரீசியஸ்: முட்டாளா? உன் பெற்றோர் என்னைப் பற்றி மிக உயர்வான அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள்.

ஈடிபஸ்: மறுபடியும் என் பெற்றோர்கள்! நில்லும், என் பெற்றோர்கள் யார்?

டைரீசியஸ்: இன்று உனக்கு ஒரு தகப்பனார் கிடைப்பார். இதே நாள் உன் இதயத்தையும் உடைத்தெறியும்.

ஈடிபஸ்: சிறுபிள்ளைத்தனமான புதிர்கள். மீண்டும் அர்த்தமற்ற உளறல்கள்.

டைரீசியஸ்: ஒரு காலத்தில் புதிர்களுக்கு விடை காண்பதில் ஈடு இணையற்றவனே நீதானே!

ஈடிபஸ்: உம் விருப்பப்படி கேலி செய்யும், ஆனால் உண்மை என்னவோ அதுதான்.

டைரீசியஸ்: உண்மை! அதுதான் உன் அழிவைக் கொண்டுவருவது.

ஈடிபஸ்: உண்மை-அதுதான் இந்த நகரத்தைக் காப்பாற்றக்கூடும் என்றால்?

டைரீசியஸ்: (சேவகனிடம்) தம்பி! கொஞ்சம் கையைக்கொடு. போகலாம்.

ஈடிபஸ்: (சேவகனிடம்) ஆமாம், இந்த ஆளைக் கூட்டிப்போ.
(டைரீசியஸிடம்) நீர் இங்கிருக்கும்வரை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. போம்! எங்களை அமைதியாக இருக்கவிடும்!

டைரீசியஸ்: சொல்லவந்ததைச் சொல்லிவிட்டுத்தான் போவேன் நான். உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?
(பாடற்குழுவை நோக்கி) நான் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் இந்த மனிதன்-மகா பாவி, லேயஸைக் கொன்றவன், தீப்ஸில்தான் இருக்கிறான். நீங்கள் வேறுநாட்டவன் எவனோ என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் அவன் தீப்ஸைச் சேர்ந்தவனே என்பது தெரியவரும்.
தெரியவரும் விஷயத்தால் உங்கள் மனம் இன்னும் அல்லல்படும்.
இன்று பார்வையுள்ளவன் அவன், ஆனாலும் அவன் குருடாகப் போவான்.
பணக்காரன் இன்று அவன். ஆனால் பரம தரித்திரனாகப் போவான்.
இந்த விநோத உலகத்தைக் கைத்தடியால் தட்டித்தட்டிச் சப்தம் எழுப்பியவாறே வளையவரப் போகிறான்.
தன்னைப் பெற்றவளுக்கே கணவனாகவும் ஆகப்போகிறான்.
கைகளில் தந்தையின் ரத்தத்துடன் அவள் படுக்கைக்கே வந்தவன் அவன்.

இவை போதும். நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். நான் கூறியவற்றில் தவறு கண்டால் எனக்கு தீர்க்கதரிசனம் இல்லை என்று நீங்கள் இகழலாம்.

(சேவகன் முன் செல்ல, டைரீசியஸ் வெளியேறுகிறான். ஈடிபஸ் அரண்மனைக்குள் செல்கிறான்.)

கோ1- டெல்ஃபி நகர மலைப் பாறைகள் என்றோ நடந்த அரசப் படுகொலையை இன்று கிளறுகின்றன. ரத்தம் படிந்த கையை இன்னும் மறந்துவிடவில்லை.

கோ2- கொலையாளியின் நேரம் வந்துவிட்டது. இடிமுழக்கங்களோடு, மின்னல்களின் சாட்டையோடு, பெருங்காற்றுகளோடு. அப்போலோ அவனைத்துரத்துகிறான்.

கோ3- ஐயோ, பெருங்காற்றுகள்! ஓலமிடும் காற்றுகள் அவனைத் தேடுகின்றன.

கோ4- பார்னாசஸ் மலையில் பனிப்புயல் தொடங்கிவிட்டது. அது அந்த ரகசிய மனிதனின் கண்களை வேட்டையாடுகிறது.

கோ5- அவன் காட்டில் அலைந்தாலும், எல்லாம் அவனைத் துரத்துகின்றன. பேரழிவு அவனைத் தேடுகிறது. ஓடுவது எதற்கு உதவும்?

கோ6- பூசாரியின் பறவைகள் சொல்லிய உண்மை….

கோ1- குருட்டு ஞானி சொல்லிச் சென்றவை….

கோ2- கறைபடிந்த கையைக் கழுவுவது எங்கே….

கோ3- கழுவினால் ஆறுகள்கூட அசுத்தமாகிவிடுமே….

கோ4- எங்கள் மனங்கள் கலங்குகின்றன….

கோ5- ஆன்மாக்கள் வழிதவறிய பறவைகள் போல….

கோ6- நியாயமும் அறியாது நிலையும் தெரியாது கலங்குகின்றன….

கோ1- சொல்லப்பட்ட கதைகளின் உண்மையைக் கடவுளர்கள் மட்டுமே அறிவர்.

கோ2- இந்த ஞானி ஒளியை தரிசித்தாலும் இருட்டையே உரைக்கிறான்.

கோ3- அறியப்படாத நெருடல்களுக்கு நீதி வழங்குவது எங்ஙனம்? அவன் கூறிய வற்றில் நம்பிக்கை வைப்பது எங்ஙனம்?

கோ4- ஞானிகளின் கைகள் ஊடாகவே ஞானம் மாறிமாறிச் சென்று கண்ணாமூச்சி காட்டுகிறது.

கோ5- இந்த ஞானி சொல்லிவிட்டதால் எங்கள் தலைவன் குற்றவாளி என நாங்கள் நம்பவேண்டுமா?

கோ6- எங்கள் தலைவன் அந்தப் பிணப்பாடகியை எதிர்கொண்ட விதம் அறிவோம். இவன் கூறுவதெல்லாம் பொய்கள்.


ஈடிபஸ் அரசன் நாடகம் – காட்சி 1

ஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1

[ஈடிபஸின் அரண்மனை வாயில். வாயிலுக்கு எதிரில் சீயூஸ் தெய்வத்தின் பலிபீடம். இருபுறமும் மேடைகள், ஒன்றில் கடவுளரின் சிலைகள் இருக்கலாம். இன்னொன்றில் மூன்று வாயில்கள். இருபுறமும் இரு வாயில்கள். நடுவாயில் தான் அரண்மனை வாயில். இருபுற வாயிற்படிகளில் ஆலிவ் கிளைகளை ஏந்தி இரங்கிநிற்கும் மக்கள். துக்கத்தின் பாதிப்பில் பலநிலைகளில் படிகளில் சாய்ந்து ஓய்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். நடுவாயிலின் வழியே ஈடிபஸ் வருகிறான்.]

ஈடிபஸ்: குழந்தைகளே, என் செல்வங்களே! காட்மோஸ் மன்னனின் வழிவந்த கருணை உள்ளங்களே! ஏன் கடவுளின் சிலை முன்னர் ஆலிவ் கிளைகளை ஏந்தித் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள்? கைகளில் மலர்மாலைகள், பூச்செண்டுகள். மாலைகளிலிருந்து எழும் நறுமணம், நகரத்தின் நான்குபக்கமும் பிரார்த்தனைக ளாகவும், ஒப்பாரிகளாகவும் உலாவுகிறது!

ஈடிபஸ்-இந்தப் புகழ்வாய்ந்த பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கும் நான் உங்களோடு நேரடியாகப் பேசவே விரும்பி வந்திருக்கிறேன். தூதர்கள் மூலம் உங்களோடு பேசவிரும்பவில்லை.

(பூசாரியிடம்) ஆ, இங்குள்ளவர்களில் வயதுமுதிர்ந்தவர் நீங்கள்தான். இவர்களுக்காக என்னிடம் பேசுங்கள். உங்களைப் பிய்த்தெடுக்கும் துயரம்தான் என்ன? பயந்துபோய் வந்தீர்களா, அல்லது என்னிடம் ஆசிகள்பெற என்னை அணுகினீர் களா? என்னால் இயன்ற அளவில் உங்களுக்கு உதவி செய்வேன். சொல்லுங் கள். இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். இரங்கிவந்தோர்க்கு நெகிழாவிட்டால் எனக்கு இதயம் என்ற ஒன்று எதற்கு?

பூசாரி: ஈடு இணையற்ற ஈடிபஸ்! பராக்கிரமும் பலமும் மிக்க தீப்ஸ் நாட்டு மன்னனே! இன்று குழந்தைகளிலிருந்து முதியவர்கள்வரை உன் அரண்மனை வாயிலில் பழியாகக் கிடக்கிறார்கள். நிற்கக்கூட இயலாத சின்னஞ்சிறு குழந்தை கள், முதுமை எய்தித் தளர்ந்துபோன என்னைப் போன்றவர்கள், இல்லற வாழ்வு எய்தாதவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு என்னோடு வந்திருக்கும் இளைஞர்கள். இன்னும் பலர். தீப்பொறிகளில் கனன்று பேசும் அப்போலோ தெய்வம் வாழும் பல்லாசின் இரு பலிபீடங்களிலும் ஆலிவ் மரக்கிளைகளை ஏந்திநிற்கும் இன்னும் ஆயிரக்கணக்கானோர்.

உன் கண்களே உனக்குச் சொல்லும்-மரணக்கடலில் வீழ்ந்து தவிக்கிறது தீப்ஸ் நாடு. மரண அலைகளிலிருந்து தலையைத் தூக்க முடியாமல் மயங்கிக்கிடக்கிறது. பூமியில் மலர்ந்துள்ள மொட்டுக்களையும் பழங்களையும் ஒரு ராட்சஸப் புழு கபளீகரம் செய்துகொண்டிருக்கிறது. கால்நடைகள் வியாதியால் கஷ்டப்படுகின் றன. குழந்தைகள் பிறவாமலே வயிற்றில் உயிர்விடுகின்றன. இங்கே பிள்ளைகளைச் சுமத்தலே வீணாகிப்போனது. கொள்ளை வியாதியும் சிதைநெருப்பும் கொடிய மின்னல்களாக நகரத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. காட்மோஸின் நகரத்தில் இன்று வீடுகளில் எல்லாம் இருள் சூழ்ந்துள்ளது. இந்தத் துயரம் மிகுந்த தீப்ஸில் சாவு ஒன்று தான் சந்தோஷமாயிருக்கிறது.

நீ மரணத்தை வென்ற கடவுளல்ல, தெரியும் எங்களுக்கு. நிலையான முறைகளில், மனிதனின் அறிவு மிக்க வழிகளில் தேர்ந்தவனும், கடவுளின் வழிகளில் ஞானம் நிரம்பியவனும் நீ. கடவுளின் வரப்பிரசாதம் பெற்றவன் நீ.

அன்று கனல் உமிழும் கொடிய பாடகி ஸ்பிங்ஸிடமிருந்து, அவளுக்கு நாங்கள் செலுத்திவந்த கொடும் திறையிலிருந்து எங்களைக் காப்பாற்றினாய். எனினும் நீ எங்களைவிட எல்லாம் அறிந்தவனும் அல்ல. ஏதோ தெய்வந்தான் எங்களுக்கு உதவ உன்னை அனுப்பி வைத்தது போலும்!

ஆகவே, அதிபராக்கிரம ஈடிபஸ், நாங்கள் தஞ்சமாக உன்னிடம் வந்துள்ளோம். கடவுள்களின் அறிவுரையை ஏற்றோ, அல்லது மனிதர்களின் வழியாகவோ, எங்களுக்குப் பாதுகாப்பைத் தா. பரிகாரத்தைத் தா. நிரூபிக்கப்பட்ட ஞானம் வாய்ந்த மன்னன் நீ. எங்கள் கஷ்டகாலத்தில் எங்களுக்காகச் செயல்படு. இறந்து கிடக்கும் உன் நகரத்திற்கு உயிர்கொடு.

அன்று எல்லோரும் உன்னை ‘நாட்டிற்கு விமோசனம் அளித்தவன்’ என்று போற்றினார்கள். இன்னும் அதை யாரும் மறந்துவிடவில்லை. “நாங்கள் எழுச்சி பெற்றோம், ஆனால் உடனே வீழ்ந்துவிட்டோம்” என்று அவர்கள் சொல்லும்படி ஆகிவிட வேண்டாம். இந்தப் புயலில் நாடு அழிந்துவிடாமல் காப்பாயாக!
பலவருடங்களுக்கு முன்பு இந்த நாட்டின் நல்ல நிமித்தமாக, எங்களுக்கு ஈடிணையற்ற செல்வமாக வந்தவன் நீ. இன்றும் அப்படியே நீ இருப்பாயாக. உன் சக்தியை இன்று எதிர்க்கும் துணிவு பெற்றவன் யாரும் இல்லை. ஆனால் மக்களை ஆட்சிசெய்! மரணத்தால் அழிந்த நகரத்தை ஆட்சி செய்ய வேண்டாம். மனிதர்கள் நடமாடாத போது கப்பல்கள் வெறும் தகரக்கூடுகளே. காவல் மதில்கள் வெறும் குட்டிச் சுவர்களே!

ஈடிபஸ்:  என் அருமை மக்களே, நீங்கள் இங்குவர ஆசைப்பட்ட காரணங்கள் அனைத் தையும் அறிவேன் நான். மரணத்தை விளைவிக்கும் வியாதிகளால் துடித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதைவிட அதிகமான மனத்துயரத்தில் மூழ்கியிருக்கிறீர்கள். அவரவ ருடைய கஷ்டங்களிலும் கவலைகளிலும் மூழ்கி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள். என் ஆத்மாவோ, இந்த நகரத்திற்காக, எனக்காக, உங்களுக்காக முனகிக் கொண்டிருக்கிறது. நான் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் என்னை எழுப்பவுமில்லை. என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிந்தனைப் பாதைகள் எண்ணிலடங்கா. தேடித் தேடி ஒரு தீர்வைக் கண்டுபிடித்தேன். என்னுடைய எந்தச் செயலால், அல்லது சபதத்தால் இந்த நாட்டினைக் காக்க முடியும்-இதை அப்போலோவிடமிருந்து அறிந்துவர என் மைத்துனன்-அரசி ஜொகாஸ்டாவின் சகோதரன்-கிரியோனை டெல்ஃபிக்கு அனுப்பி யிருக்கிறேன். சென்றவன் எப்போது திரும்பி வருவான் என்று நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விநாடியும் துடித்துக்கொண்டிருக்கிறேன். சென்றவன் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறான்? இத்தனை நாட்கள் அங்கு என்ன வேலை அவனுக்கு? திரும்பிவந்தவுடன் கடவுள் ஆணையிட்ட எந்தச் செயலையும் செய்வதில் நான் குறைவைக்க மாட்டேன்.

பூசாரி: காலத்தினால் செய்த உதவி! கிரியோன் வந்துகொண்டிருப்பதாகச் சொன் னார்கள்.

ஈடிபஸ்: அப்போலோ தெய்வமே! ஒளிவீசும் அவன் முகம்போல அவன் கொண்டு வரும் செய்தியும் ஒளியைக் கொண்டுவரட்டும்.

பூசாரி: புன்னை மகுடம் அணிந்து வருகிறார் அவர். பலிபீடங்கள் பழங்களால் நிறைந் துள்ளன. நல்ல செய்தி கொண்டுவருகிறார் என்றே நினைக்கிறேன்.

ஈடிபஸ்: சீக்கிரமே தெரிந்து போகும்.

(கிரியோன் வருகிறான்)

ஈடிபஸ்: மைத்துனனே, கடவுளிடமிருந்து நீ கொண்டுவந்த செய்தி என்ன?

கிரியோன்:  அழுத்தமான செய்தி. நல்லபடியாக நிறைவேற்றினால் துயரங்கள் தூர ஓடிப்போகும்.

ஈடிபஸ்:  அசரீரி என்ன சொல்லிற்று? அதன் மறைமுகமான வார்த்தைகள் எப்போதுமே பயத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில் என்னை ஊசலாட வைத்துள்ளன.

கிரியோன்: இத்தனைபேருக்கும் மத்தியில் நான் அதைச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறாயா?

ஈடிபஸ்: எல்லோரிடமும் அதைக் கூறு. எனக்காக உழல்வதைவிட நான் அவர்களுக்காக ஆயிரம் மடங்கு கவலையில் உழன்றுகொண்டிருக்கிறேன்.

கிரியோன்  (மக்களை நோக்கி) : அப்படியானால், நான் டெல்ஃபியில் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன். தெளிவான சொற்களில், செய்தி இதுதான்: இந்த தீப்ஸ் நாட்டில் நாம் ஒரு கொடிய விஷத்தை, ஒரு பெரிய பாவமூட்டையைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறோம். அதனை உடனே வெளியேற்றுமாறு கடவுள் கட்டளை இட்டார்.

ஈடிபஸ்: என்ன விஷம் அது? என்ன பாவமூட்டை? எப்படி அதிலிருந்து விடுபடுவது?

கிரியோன்: ஒரு கொலைபாதகம்தான் நாட்டை இந்தக் கதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கொள்ளைநோயைக் காற்றில் உலவவிட்டிருக்கிறது. கொலைசெய்த குற்றவாளியை நாட்டைவிட்டுக் கடத்த வேண்டும் அல்லது கொன்றுவிடவேண்டும்.

ஈடிபஸ்: யார், யாரைக் கொலைசெய்தார்கள்? கடவுள் கொலைகாரனின் பெயரைக் கட்டாயம் சொல்லியிருக்க வேண்டுமே?

கிரியோன்: மன்னா, நீ இந்த நாட்டை ஆளும் முன்பு லேயஸ் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்.

ஈடிபஸ்: தெரியும் அது எனக்கு. அவரைப் பற்றிப் பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக் கிறேன். பார்த்ததில்லை.

கிரியோன்: அவர் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவனைப் பழிக்குப் பழிவாங்க உத்தரவிடுகிறது அப்போலோ தெய்வம்.

ஈடிபஸ்: யார் அவரைக் கொன்றவன்? எங்கிருக்கிறான் அவன்? இத்தனை வருடங்கள் கழித்துக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆதாரங்களுக்கு எங்கே போவேன் நான்?

கிரியோன்: அந்தப் படுகொலை இந்த நாட்டில்தான் நடந்தது. “கவனக்குறைவால் பார்வைக்குத் தப்பியவை எல்லாம் கடுமையான தேடலால் கைக்குள் வரக்கூடும்” என்று அசரீரி சொன்னது.

ஈடிபஸ்: சொல் கிரியோன், லேயஸ் எங்கு கொலை செய்யப்பட்டார்? வீட்டிலா? வயல் வெளியிலா? காட்டிலா? அல்லது, அயல்நாட்டிலா?

கிரியோன்: கடவுள்கள் வாழும் க்ஷேத்திரங்களைக் காணத் திட்டமிட்டுப் புறப்பட்டார் அவர். சென்றவர் திரும்பவேயில்லை.

ஈடிபஸ்: என்ன நடந்தது என்று சொல்லச் சாட்சிகள்-உடன் சென்றவர்கள் – ஒருவரேனும் இல்லாமலா போனார்கள்?

கிரியோன்: சென்றவர்கள் யாவரும் கொல்லப்பட்டார்கள், ஒருவனைத் தவிர. அந்த ஒருவனும் அரண்டுபோய் மனம் பேதலித்துப்போனான். அவனுக்கு ஒன்றே ஒன்றுதான் நினைவில் இருந்தது.

ஈடிபஸ்: என்ன, அந்த ஒன்று? ஒரே ஒரு விஷயம், பலவற்றிற்குத் திறவுகோல் ஆகலாம், நாம் அதைச் சரிவரப் பயன்படுத்தினால்.

கிரியோன்: வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் சிலர் எல்லோரையும் சூழ்ந்துகொண்டு தாக்கினார்களாம். எண்ணிக்கையில் அவர்கள் பலராக இருந்ததால், மன்னர் அவர்கள் பிடியிலிருந்து தப்ப முடியாமல் மாண்டுபோனார் என்று அவன் சொன்னான்.

ஈடிபஸ்: ஆச்சரியம்! கொள்ளைக்காரர்கள் மன்னரைத் தாக்குவதா? யாராவது லஞ்சம் கொடுத்துத் தூண்டியிருக்க வேண்டும்.

கிரியோன்: அப்படித்தான் நினைத்தோம். மன்னர் மரணத்திற்குக் காரணமானவர் களைக் கண்டுபிடித்துப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கும் முன்பாக, புதிய துயரங்கள் எங்களுக்குச் சுமை ஏற்றிவிட்டன. பழிவாங்க ஆளில்லை.

ஈடிபஸ்: புதிய துயரங்களா?

கிரியோன்: ஆம், புதிய துயரங்கள்தான். புதிர்போடும் ஸ்பிங்ஸின் பழிவாங்கும் பாடல்கள். அவை காதில் விழுந்தபின் பழைய துனபம் எதையும் அது காதில் விழாது அடித்துச்சென்றுவிட்டது.

ஈடிபஸ்: முதல்முறை உங்களை ஸ்பிங்ஸிடமிருந்து மீட்டேன். இரண்டாவதாக இப்போது நான் இருள் சூழ்ந்து கிடக்கும் இந்நாட்டிற்கு ஒளியூட்டுவேன். அப்போலோ வின் தீர்ப்பினால், இறந்தவர் நம் நெஞ்சை உறுத்தியிருக்கிறார்.

நான் என்றென்றைக்கும் உங்களைக் காத்து நிற்பேன். உறுதி இது. கண்காணா ஒரு நண்பரின் மரணத்திற்குப் பழிவாங்குவது மட்டுமல்ல, இந்நாட்டை அலைக்கழிக்கும் தீ வினையைப் பனியாய் உருகிப்போகச் செய்யும் செயல் இது. லேயஸ் மன்னரைக் கொன்றவன் யார்? யாருக்குத் தெரியும்? அவனது குரூரமான கைகள் என் கழுத்தைத் தேடிக்கூட விரைவில் நகரலாம்.

நான் அவனைப் பழிவாங்கியே தீருவேன். இறந்த மன்னருக்காகச் செயல்படுவதில் என் சுயநலமும் கலந்தே இருக்கிறது, பாருங்கள்! செல்வங்களே,

ஆலிவ் கிளைகளை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். உங்களில் ஒருவர் நமது பிரஜைகளை அழைத்து, இங்கு எல்லோரையும் கூட்டிவைத்து, என்னால் இயன்றதை அவர்களுக்குச் செய்வேன் என்பதைச் சொல்லுங்கள்.

(ஒரு காவலாளி வெளியே செல்கிறான்)

கடவுள் கருணை உதவியால் நாம் காப்பாற்றப்படுவோம். இல்லாவிட்டால் நாம் காணாமற் போய்விடுவோம்.

பூசாரி: எழுந்திருங்கள் மக்களே, நாம் வந்த காரியம் முடிந்துவிட்டது. மன்னர் நமக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டார். அப்போலோ தெய்வமும் அசரீரி மூலம் செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறது. அந்தக் கடவுளே வந்து இந்தக் கொள்ளை நோயை விரட்டியடிப்பார்.

[ஈடிபஸ், கிரியோன் இருவரும் நடுக்கதவு வழியாக வெளியேறுகின்றனர். பூசாரியும் இரங்கிநின்றவர்களும் இடது வலது கதவுகள் வழியாக வெளியேறுகின்றனர். சிறிது நேரத்திற்குப் பின் கோரஸ் (குழுப்பாடகர்கள், தீப்ஸ் நகர மக்கள்) வரவேண்டும். குழுப்பாடகர்கள் மீதி நாடகம் முழுவதும் மேடையிலேயே இருப்பார்கள்.]


ஈடிபஸ் அரசன் – சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்

ஈடிபஸ் அரசன்

(சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்)
“தீப்ஸ் நாட்டு மக்களே! ஈடிபஸைப் பாருங்கள்… ஸ்பிங்ஸின் புகழ் வாய்ந்த புதிர்களின் விடைகளைக் கண்டறிந்த மன்னர். பலம் வாய்ந்த மன்னர்களை வெற்றி கண்டவர்… மானிடர்களின் கண்கள் பொறாமையோடுதான் இவரை நோக்கின… இறுதியில் விதி இவரை இப்படி அழித்து வெற்றி கண்டது!
ஒவ்வொரு மனிதனும் மனித குலத்தின் பலவீனங்களின்போது தனது கடைசி நாளை எண்ணிப் பார்க்கட்டும்!
பதவியால், செல்வத்தால், அதிர்ஷ்டத்தால், யாரும் இறுமாந்து இருந்துவிட வேண்டாம்.
மரணத் தறுவாயில், துன்பங்களற்ற ஒரு நினைவுச்சரத்தை ஒருவன் கொள்ளமுடியுமானால்,
அவன் தன் நல்அதிர்ஷ்டத்தை அப்போது எண்ணிச் சந்தோஷப்படட்டும்!” (நாடகத்தின் இறுதி வரிகள்)

ஈடிபஸ் அரசன் –  நாடகம்

ஆங்கிலவழித் தமிழாக்கம்:  க. பூரணச்சந்திரன்; உதவி-திருச்சி நாடகச்சங்கம் ஜம்புநாதன்

காட்சியமைப்பு, பிற பணிகள், இசை, இயக்கம்: க. பூரணச்சந்திரன்
இயக்கத்தில் உதவி: நாடகச் சங்க நண்பர்கள் கோவிந்தராஜ், மனோகர்.

[இந்த நாடகம், 2007ஆம் ஆண்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முத்தமிழ் விழாவின் போது மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.
அதில் நடித்தவர்களுக்கு-தமிழ் முதுகலை மாணவர்களுக்கும், குறிப்பாக ஈடிபஸாக நடித்த நவசக்திவேலுக்கும், அரசி ஜொகாஸ்டாவாக நடித்த மோகனப்ரியாவுக்கும் என் நன்றிகள் உரியன.

அந்த ஆண்டு நான் தமிழ்த்துறைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஆண்டு. அதற்கென என் மாணவர் (இன்று மிகப் பிரபலமாக விளங்கும்) இயக்குநர் திரு. ஏ.ஆர். முருகதாஸ் நாடக விழாவில் பங்குகொள்ளவும், முத்தமிழ்விழாவின் இறுதி உரையாற்றவும் வந்து பங்கேற்றார்.]

நாடக அறிமுகம்

கிரேக்க மொழியில் மிகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் சோஃபோக்ளிஸ் எழுதிய பிரசித்தமான அவல நாடகம் (tragedy) இது. உளப்பகுப்பாய்வில் (சைக்கோ-அனாலிசிஸில்), இக்கதையின் அடிப்படையில்தான் ‘ஈடிபஸ் சிக்கல்’ என்ற சொல்லை உருவாக்கினார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டு. உலகின் முதன்மையான, தலைசிறந்த நாடகங்களில் இது ஒன்று. அழுத்தமான, செறிவான கதையமைப்பும், சஸ்பென்ஸும், விறுவிறுப்பும் கொண்ட இந்த நாடகம் உலகமொழிகள் பலவற்றில் பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் கதையை உலகின் எத்துறை சார்ந்த அறிஞர்களும் அறிவர்.

நாடகக் கதைமாந்தர்

ஈடிபஸ் -தீப்ஸ் நாட்டு அரசன்
ஜொகாஸ்டா -ஈடிபஸின் மனைவி
கிரியோன் -ஜொகாஸ்டாவின் சகோதரன்
டைரீசியஸ் -குருட்டு ஞானி; அப்போலோ கோவிலின் பூசாரி
பாடற்குழு (கோரஸ்)த் தலைவன்
ஆண்டிகனி -ஈடிபஸின் மகள்
இஸ்மீன் -ஈடிபஸின் மற்றொரு மகள்
தூதன் 1
தூதன் 2
ஆடுமேய்ப்பவன்
கோரஸ் (பாடற்குழுவினர்)- ஆறுபேர். இவர்கள் தீப்ஸ் நகரப் பிரதிநிதிகள்.
இரங்கிநிற்போர் -தீப்ஸ் நகர மக்கள்
காவலாளிகள்
சேவகர்கள்