நம்பிக்கை

பொழுதும் விடியும் பூவும் மலரும்

பொறுத்திருப்பாய் கண்ணா…

இது ஒரு திரைப்படப் பாடலின் பல்லவி. இது காட்டுகின்ற வாழ்க்கை நம்பிக்கை அசாத்தியமானது. கண்ணதாசன் பாடல் என்றே நினைக்கிறேன். கடவுள் அடிப்படையிலான அழகிய நம்பிக்கை இது. மனம் தளர்ந்திருக்கும் ஒரு நாயகனுக்கு நாயகி நம்பிக்கை தரும் பகுதி.

நாளைய உலகை நமக்கெனத் தர ஓர் நாயகன் இருக்கின்றான்… என்று அடுத்த பகுதி தொடங்குகிறது. அவன் நல்லவர் வாழும் இடங்களில் எல்லாம் காவல் இருக்கின்றான். இப்படிப்பட்ட அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்துபவள் ஒரு பெண். என் தாயிடமும் இம்மாதிரி அழுத்தமான நம்பிக்கை இருந்தது. ஆனால் என் காலத்தில் இந்த நம்பிக்கை பல காரணங்களால் இல்லாமல் ‍போயிற்று என்பது வருத்தத்திற்குரிய உண்மை. என் தாயிடமிருந்து இந்த நம்பிக்கை என் மனைவிக்கு வந்திருக்க வேண்டும். இப்படி வழிவழியாக வாழ்க்கையில் தொடரும் நம்பிக்கை இது. இந்த நம்பிக்கை அழுத்தமாக இருந்தால் வாழ்க்கையில் எதையும் ஜெயிக்கலாமே?

அந்தக் காலத்தில் அதிகமாகப் படிக்காவிட்டாலும் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தார்கள். இப்போது அது இல்லை என்பதை நடைமுறையில் பார்க்கிறேன்.


பூரணச்சந்திரன் அறக்கட்டளை – மூன்றாம் நாள் பயிலரங்கம்

முதலில் தமிழ்க் கவிதை பற்றிப் பேரா. இராமசாமியின் உரை சிறப்புற அமைந்தது.

பிறகு இன்றைக்குத் தேவையான எழுத்து என்ற குழு விவாதம் நடைபெற்றது. இதில் திரு. கிராமியன், பிஎச்இஎல் பொறியாளர் திரு. விவேக், திரு. விக்டர் ஆல்பர்ட் மூவரும் பிறரும் சிறந்த முறையில் பங்கேற்றனர்.

பிறகு சமகாலத் திரைப்படம் பற்றியும் அதை நோக்கும் விதம் பற்றியும் திரு. இராமசாமி சுவையாக எடுத்துரைத்தார். இடையில் மாணவர்கள் நேற்று எழுதிவந்த கவிதைகளையும் மதிப்பீடு செய்தார்.

மதிய உணவுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரிப் பேராசிரியர் ராமராஜ் மாணவர்களைத் திறம்பட நடிக்க வைத்துத் தம் நாடகத் திறனை வெளிப் படுத்தினார். அகஸ்ட் போவாலின் கருத்துகள் அடிப்படையில் (இன்விசிபிள் தியேட்டர்) அந்த நாடக ஆக்கம் அமைந்தது சிறப்பாகும்.

தேநீருக்குப் பிறகு நிறைவு விழா. முதல்வர் வர இயலாததால் தமிழ்த்துறைத் தலைவர் திரு. இராஜ்குமாரே மாணவர்களுக்குப் பரிமாற்ற முறையில் சான்றிதழ்களை வழங்கினார். திரு. சிவசெல்வன் நன்றிகூற மூன்றுநாள் படைப்பாக்க நிகழ்ச்சி நன்கு நடந்தேறியது.

மூன்று நாள் அமர்வுகளையும் சிறப்புற ஏற்பாடு செய்தவர் பேரா. சாம் கிதியோன். உணவு உட்பட, உட்காரும் இடங்கள், அறைகள் உட்பட கவனித்துக் கொண்டார். அவருக்குத் துணையாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உதவி செய்தனர். திரு. சாம் கிதியோனுக்கும் அவருக்குத் துணையாக அமைந்த பேராசிரியர்களுக்கும் தனிப்பட நமது நன்றிகள் உரியன.


புனைவின் அடிப்படைகள்

புனைதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம் உள்ள சக்தி – எவரும் புனைய முடியும். ஆனால் புனைதலுக்கு நாம் முனைவதில்லை.

(புனைதல் – முனைதல்). முனைகின்றவர்கள் புனைகதையாளர்களாகவோ கவிஞர்களாகவோ ஆகின்றனர்.

எழுத ஆரம்பியுங்கள்!

புனைதலும் கலையே, புதிதாக இங்கு சற்றே

முனைதலும் கலையே, மழையில் சற்றே

நனைதலும் கலையே, புதிதாக எதையும்

வனைதலும் கலையே

என்று எழுதிக் கொண்டே போய்விடலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக்குணம்.

சுருக்கம்தான் கவிதைக்கு அடிப்படை. ஹைக்கூ வடிவம் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். சுருக்கமாக, படிமங்களை நெஞ்சில் உருவாக்குவதாக இருக்கவேண்டும். சுஜாதாவின் ஹைக்கூ ஒன்று.   

‘விண்வெளிக்கு சென்று திரும்பினான்

வயதாகிவிட்டது  காதலிக்கு’

இதை அடிப்படையாக வைத்தே ஒரு கதை எழுதிவிடலாமே.

இருமை எதிர்வுகளைக் கையாளுதல் கவிதையின் அமைப்புக்கு அடிப்படை. உதாரணமாக அருணகிரிநாதர் எவ்வளவு இயல்பாக- இறைவனை வருணிப்பதில்- இருமைகளைக் கையாளுகிறார் பாருங்கள். (ஆனால் எல்லாமே எதிர்வுகள் அல்ல) 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே.

உடனே நீங்கள் எழுதத் தொடங்கலாம்–

தருவாய் தருவாய் என்று அரசாங்கம் எனைப் பிடுங்க

வருவாய் மொத்தமும் தந்து ஓட்டாண்டியாய் நிற்கிறேன்

குருவாய் நீ வரவேண்டாம் இடமில்லை வீட்டில்

தருவாய் வரியற்ற வருவாய் முருகா.

என்று எழுதிக் கொண்டே செல்லலாம்.

அண்மைகளை நிறுத்திக் கவிதை ஆக்குவதற்கு மற்றொரு உதாரணம்–

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி

உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக்

கூத்தாட்டுவானாகி நின்றாய்…

வெறுமனே எதிர்வுகள் அல்லது அண்மைகளை நிறுத்துவதை விட ஒரு சூழலுக்கேற்ப நிறுத்துவது மிக நல்ல கவிதையாகிறது. கூடவே ஒரு சந்தம் அமைந்துவிட்டால், ஆஹா, அற்புதம்தான்.

லிமரிக் என்ற கவிதை வடிவத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா பேசியிருக்கிறார்.

ஓர் ஆங்கில உதாரணம் பார்க்கலாம்.

There was a young lady named Bright
Who travelled much faster than light,
She started one day
In the relative way
And returned on the previous night

இங்கே ஒளியைவிட வேகமாகச் செல்லக்கூடிய பொருளோ அலையோ எதுவும் இல்லை என்ற பெளதிகம் தெரிந்திருந்தால் இதன் பொருள் எளிதில் தெரியும். ரிலடிவ் வே என்பது ஐன்ஸ்டீனின் ரிலடிவிடி தியரியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. சுஜாதாவுடைய லிமரிக் ஒன்று.

வள்ளுவரும் மாணவராய் ஆனார்

திருக்குறளில் தேர்வெழுதப் போனார்

முடிவு வெளியாச்சு

ஃபெயிலாகிப் போச்சு

பாவம் அவர் படிக்கவில்லை கோனார்.   

நமக்குக் கவிதை எழுத குறுந்தொகை நல்ல முன்மாதிரியாக அமையும். 

யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்…

குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென்றது என் தூஉ நெஞ்சம்…

இம்மாதிரி ஒருமாதிரி சொற்களைத் தேர்ந்தெடுத்தல் கவிதைக்கு அடிப்படை. அத்துடன் உங்கள் உள்ளத்திலும் கனன்றுகொண்டிருக்கும் ஒரு நெருப்பு இருந்தால் அங்கே உயர்ந்த கவிதையே பிறந்துவிடும்.

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…

கவிதைக்கு யாப்பு கண்டிப்பாகத் தேவை. ஆனால் அது கவிதைக்கு இசைந்ததாகத் தானாக வரவேண்டும். உதாரணமாக ஞானக்கூத்தன் கவிதை ஒன்று. வழக்கமான நான்குசீர் பாணியிலிருந்து மாறி மூன்று சீர் அடி என்ற பாணியை எவ்வளவு ஜாலியாகக் கையாளுகிறார் பாருங்கள்.   

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

யாப்பு என்பதற்காக மட்டும் இதை மேற்கோள் காட்டவில்லை. இதிலுள்ள நயமான அங்கதத்தை இரசிக்க வேண்டும்.

இப்போது கவிதைக்கு மிகவும் அடிப்படையாகத் தேவையான மற்றொரு பண்பை அடைகிறோம். அங்கதம்.

அலெக்சாண்டர் போப் என்று ஒரு ஆங்கிலக் கவிஞர். The Rape of the Lock என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு சிறு விஷயத்தைக் காவிய நடையில் எழுதிய கவிதை இது. பெலிண்டா என்ற உயர்குலப் பெண்ணின் தலைமுடிச் சிறுகற்றை ஒன்றை ஒரு பிரபு வெட்டித்திருட முயற்சி செய்கிறான். அதுதான் ரேப் ஆஃப் தி லாக்.

அதனால் கவிதைகள் எல்லாமே அங்கதமாகத்தான் இ்ருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஞானக்கூத்தன் அப்படிப்பட்ட கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். பொதுவாக ஒரு நல்ல மனச்சித்திரம் இருந்தாலே ஒரு கவிதை ஆகிவிடும். உதாரணம். கிணற்றில் விழுந்த நிலவு. வைத்தீஸ்வரனுடைய கவிதை. முதல் கவிதை.

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு

நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு

மணக்கும் அவள் உடலை மணல்மீது தோயவிடு… என்று செல்கிறது அந்தக் கவிதை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், யாப்பு, எதுகை, மோனை, சந்தம் எவ்வளவு இயல்பாக அமைகின்றன என்பது.

இதைச் சொல்லும்போது கவிஞர் சி. மணி எழுதிய நரகம் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. மூன்று மூன்று அசையாக அவர் எழுதும் காட்சி சுவையானது.

உள்ளங்கைக் கோடுகள் / இருளில் மறையும் வேளை / தந்த துணிவு செங்கையை / உந்த நின்ற தையலர் / தலைவன் வரவும் சற்றே / உயரும் தலைவி விழியாக / மறைக்கும் சேலை சாண்தூக்கி / காக்கும் செருப்பை உதறிவிட்டு…

இப்படி இயல்பான யாப்புடன் எழுதுவதுதான் நமது பாரம்பரியம். ஆனால், பாவம் சி.சு. செல்லப்பா பாராட்டிய நல்ல கவிஞர்கள் பெரும் இழித்துரைப்புக்கு ஆளானார்கள். மாறாக ராஜவீணை ராஜ ராகம் இசைக்கிறது என்றெல்லாம் அடுக்கிய வெற்றுச் சொற்றொடர்கள் கவிதைகளாகக் கருதப்பட்டு அந்தப் பாரம்பரியம் வைரமுத்து வரை தொடர்கிறது.

கவிதை எழுதுவது ஈசியா, உரைநடை–சிறுகதை எழுதுவது ஈசியா? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிவம் கைவருகிறது. இந்த இரண்டுமே கைவந்தவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் கவிதைகளை அநேகமாக யாரும் கண்டுகொள்வதில்லை.

      “வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்

                சாதத்துக் காகச் சங்கரனை விற்றிடுவோம்!

                ஆத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதைபேசி

                வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்!

என்று அந்தக் காலத்திலேயே பாடியவர் புதுமைப்பித்தன். வேளூர் கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் எழுதிய அவரது மகாகாவியம், ஓடாதீர், இருட்டு போன்ற கவிதைகளைப் படித்தால் ஏளனமும் கிண்டலும் எப்படி யாப்புடன் வந்து அணி செய்கின்றன என்பதைக் காணலாம். உதாரணமாக, ஓடாதீர் என்ற கவிதை.

சொல்லுக்குச் சோர்வேது, சோகக் கதை என்றால் சோடி இரண்டு ரூபாய் காதல் கதை என்றால் கைநிறையத் தரவேணும் ஆசாரக் கதை என்றால் ஆளுக்கு ஏற்றது போல், பேரம் குறையாது–பேச்சுக்கு மாற்றில்லை…

என்று வளர்த்துக் கொண்டுபோய், “காசை வையும் கீழே, பின் கனவுதனை வாங்கும்” என்று கொண்டுசெல்கிறார்.

அது என்னவோ, சிறுகதையாசிரியர்கள் பலருக்கும் கவிதைமீது ஒரு காதல். ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் போல சிறு கவிதைகளை முயன்றுள்ளார். உதாரணமாக, ஒரு சிறிய கவிதை இது.

கைகேயி கெட்டவள் அல்ல, கூனிகூடக் கெட்டவள் அல்ல,

காடுவரை போனவனைப் பாதிவழிபோய் மறித்து

பாதுகையைப் பறித்துவந்தான் பரதனே பாவி…

கடைசியாக, கதை எழுதுவதைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா? அதைப் பற்றியும் ஒரு சிறு மேற்கோளோடு முடித்துக்கொள்கிறேன்.        

சிறுகதை எழுதுவது எப்படி என்பதைப் பற்றி சுஜாதா சொன்னார்.    

முதல் வரியிலேயே  வாசகனை கவருங்கள். தலையில்லாத ஒரு ஆள் தெருவில் நடந்து வந்தான் என்று ஆரம்பியுங்கள். அடுத்தவரியில் தலை என்றா சொன்னேன்.. தப்பு.. ஒரு விரல்தான் இல்லைஎன்று மாற்றிக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, ‘சார் தபால் என்ற குரலைக் கேட்ட சர்மா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு…’ என்று ஆரம்பித்தால், படிப்பவன் அடுத்தபக்கத்துக்குத் தாவிவிடுவான்.

எதிர்ப்படும் எல்லாரிடமும் கதை உண்டு. அதை உணருங்கள். உங்களைப் பார்த்ததும் சௌக்கியமா என்று கேட்கிறான். முழுசாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன சௌக்கியமா என்று கேள்வி என்று யோசித்து நூல் பிடித்தால், கதை பிறந்துவிடும்.

கடைசியாக, இதோ சிறுகதை எழுதுவதைப் பற்றி–எதை எழுத வேண்டும் என்பதைப் பற்றிப் புதுமைப்பித்தன் சொல்கிறார் கேளுங்கள்.

“இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”  ஆகவே நேராக மனத்தில் பட்ட உங்கள் அனுபவங்களை அப்படியே எழுதுங்கள். செயற்கையாகக் கதையையோ கவிதையையோ செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு முடித்துவிடுகிறேன்.


உழைப்பாளர் தினம்!

எல்லா முதலாளிகளும் கையில் சாட்டையை வைத்துக் கொண்டு ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் முதல் பதினாலு மணி நேரம் (ஐடி தொழிலாளர்கள் உள்பட) வேலை வாங்கும்போது, எட்டு மணிநேர உழைப்பைக் கொண்டுவந்த தினம் என்று எல்லா மடத் தலைவன்களும் பாராட்டுகிறார்கள். போங்கடா நீங்களும் உங்கள் மே தினமும். பொய், பொய், எங்கும் கலப்படமற்ற பொய். அம்பானிகளிடமும் எலான் மஸ்குகளிடமும் உலகத்தை விற்றுவிட்டு உழைப்பாளர் தினம் பற்றிப் பேசக் கேவலமாக இல்லை?

என்னதான் தீர்வு? யோசியுங்கள் உழைக்கும் பெருமக்களே. முதலாளிகள் நீங்கள் யோசிக்க அவகாசம் தர மாட்டார்கள். இருந்தாலும் உண்ணும்போது, சிலவேளை ஓய்வுகளின் போதாவது உங்கள் நிலை பற்றி யோசியுங்கள்.

(இங்கு எட்டுமணி நேர உழைப்புக்குக் கூலி வாங்கி இரண்டுமணி நேர உழைப்பை அளிக்கவும் மேல்கூலி வாங்கும் அரசு கைக்கூலிகளைப் பற்றிப் பேசவில்லை!)


கணினி யுக இலக்கியம்

இலக்கியம் முதலில் எப்படி உருவாயிற்று என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் உருவானதிலிருந்து அது எண்ணற்ற மாறுதல்களைச் சந்தித்துள்ளது என்பது நமக்குத் தெரிகிறது. பல காலங்களைக் கடந்தும் அது செழிப்பாக வளர்ந்துள்ளது. அவ்வப்போது, அந்தந்தக் காலங்களுக்குரிய மக்களின் தேவைக்கேற்ப அது ஒவ்வொருவிதமாக வரையறுக்கவும் படுகிறது. உதாரணமாகச் செவ்வியல் காலத்தில் அது செம்மையாகச் செய்யப்பட்ட ஒரு பொருளாக பாவிக்கப்பட்டது. ரொமாண்டிக் காலத்திலோ அது தன்னெழுச்சியின் வெளிப்பாடாக, தானாகப் பீறிட்டு வருவதாக நோக்கப் பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக அது வர்க்கப் போராட்டக் கருவியாகவும், இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையிலுள்ள ஒரு சமனியாகவும் நோக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கவிதை மட்டுமே இலக்கியமாக இருந்தது. இப்போதோ கவிதை தன் சிறப்புகளை எல்லாம் இழந்து நிர்க்கத்தியாக நிற்க, உரைநடை செங்கோல் ஓச்சுகிறது. விமரிசகர்களின் கருத்துப்படி இது உரைநடைப் புதினங்களின் காலம். 

காலம் மிகவும் முன்னேறிவிட்டது. இப்போது கதைகளை 150 சொற்களில் எழுதிவிடலாம் என்று சொல்கிறார்கள். ஃப்ளாஷ் ஃபிக்-ஷன், மைக்ரோ ஃபிக்-ஷன் போன்ற சொற்கள் உருவாகியுள்ளன. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. முன்பெல்லாம் ஒரு தேடலுக்காகக் கன்னிமரா போன்ற நூலகங்களுக்குச் சென்று மணிக்கணக்காகச் செலவிட வேண்டியிருந்தது. இப்போதோ உங்களிடம் கணினி அல்லது இன்றைய அலைபேசி யிருந்தால், நீங்கள் “கூகுள்” செய்தால் போதும். ஒரு காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பேரகராதி போன்றவற்றை எடுத்துப் புரட்டுவதே பெருஞ் சுமையாக இருக்கும். இன்று எல்லாமே ஒரு “எலி”யின் விரல் அழுத்தத்தில் கிடைக்கின்றன.       

ஆங்கிலத்தில் 6 சொற்களில் நாவல்கள் எழுதலாம் என்று சொல்கிறார்கள். ரெபக்கா ஜேம்ஸ் என்பவர் எழுதிய அறுசொல் நாவல் இது: After she died, he came alive. (“அவள் இறந்தபிறகு அவன் உயிருடன் வந்தான்” வந்தான் என்பதற்கு பதிலாக மீண்டான் அல்லது புத்துயிர் பெற்றான் என்று போடலாமா? இது மொழிபெயர்ப்பின் பிரச்சினை.)

மார்சி என்பார் எழுதிய நாவல் இது: “One gun, two shots, three dead”. இதுதான் நாவல் எழுதுவதில் புதிய ஃபேஷன். இப்படி எழுதுவது சவாலுக் குரியதாகவும், புத்தாக்கத் திறனுடனும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழில் இப்படிப்பட்ட புத்தாக்கத் திறனுடன் கூடிய புதினத் தலைப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. உதாரணமாக, “அகம் புறம் அந்தப்புரம்” (முகில்) என்பது ஒரு நாவலின் தலைப்பு. மேற்கண்ட அறுசொல் நாவல் கணக்குப்படி பார்த்தால் இது ஒரு முச்சொல் நாவலாக ஆகக்கூடும். இம்மாதிரி புத்தாக்கத் தலைப்புகள் வைப்பதில் சிறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். (உதாரணமாக சுஜாதா, ராஜேஷ் குமார், இந்திரா சவுந்தரராஜன். ஆனால் அவர்கள் எழுதியது நாவல் என்றால் அது பல்ப் ஃபிக்-ஷன் வகையறா என்று சிலர் என்னை அடிக்கவரக் கூடும். ஆனால் ஜெயமோகனும் இப்படிப்பட்ட தலைப்புகள் பலவற்றை வைத்திருக்கிறார்.)

ஒரு நீண்ட கதையை எழுதுவது எளிய விஷயமாக இருக்கலாம், ஆனால் ஆறு சொற்களில் நாவல் எழுதுவது மிகுந்த புத்தாக்கத் திறனை வேண்டுவது என்று மேற்கண்ட ஒரு அறுசொல் நாவல் அறிமுகப் படுத்தப்படுகிறது. பிரதாப முதலியார் கதை எழுதிய காலத்தில் வேதநாயகர் இப்படி யோசித்திருக்கவும் முடியுமா? இம்மாதிரி 100 அல்லது 150 எழுத்துகளில் எழுதப்படும் பனுவல்களின் ஊடே அதிக இடைவெளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாசகன் தனது யூகத்தினால் பலவித அர்த்தங்களை உருவாக்க முடிவதால் இதுதான் எழுத்தாள நாவல் (writerly novel) என்றும் கூட சிலர் மதிப்பிடலாம். இந்த நோக்குப்படி நாம் ஒருகாலத்தில் நாவலாக மதிக்காதவை எல்லாம் (ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள்…) இப்போது நாவல்கள் ஆகின்றன.

ட்விட்டர் கதைகள் என்றே ஒரு தனிப்பிரிவு உருவாகியுள்ளது. இதற்கெனவே தனிப் பெயர்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். உதாரணமாக, ட்விட்டரில் வரும் த்ரில்லர்கள், ட்வில்லர்கள் எனப்படுகின்றன, ஹைக்கூ-கள் ட்வைக்கூகள் ஆகின்றன. இம்மாதிரிக் கதைகள் பின்நவீனத்துவ நாவலின் ஒரு வகை என்றும் கூறப்படுகின்றன. இவற்றில் சுருக்கம், பன்முக அர்த்தங்கள், பனுவலின் ஊடான தொடர்புகள் எல்லாம் இருப்பதாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த அவசரக் காலத்தில் இவற்றுக்கு வரவேற்பு மிகுதியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கலையை இது மாற்றியமைக்கிறது என்கிறார்கள். இப்படிப் பார்த்தால் நமது தனிப்பாடல்கள் (காளமேகப் புலவர், அவ்வை போன்றோர் இயற்றியவை) ஒவ்வொன்றையும் உரைநடையில் கூறினால் ஒரு மைக்ரோ-ஃபிக் ஷனாக ஆக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. அவை மட்டுமல்ல, யூ-ட்யூபில் சென்று உலவிப் பாருங்கள், 5 நிமிடங்களில் படிக்கக்கூடிய குட்டிக் கதைகள் எத்தனை எத்தனை? வாட்சப் பதிவுகளில் வருகின்ற சின்னச் சின்னக் கதைகள் எத்தனை எத்தனை? முகநூலில் எழுதப்படும் “சிறு-கதைகள்” எத்தனை? திடீரென ஒரு பெரிய இலக்கிய வெள்ளம் வந்து நம்மை எல்லாம் அடித்துச் செல்வது போலத் தோன்றுகிறது. ப்ளாகு(blogs)கள், வலைத்தளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பேரிலக்கியவாதி என்று சொல்லிவிடலாம்.   

இது மட்டுமல்ல, நவீனங்களை எல்லாம் ஓரிருவரிகளில் சுருக்கிச் சொல்லும் முயற்சிகளும் உள்ளன. உதாரணமாக, பிரபல நாவலாசிரியர் ஜே.டி.சாலிங்கர் எழுதிய Catcher in the Rye நாவலை ஒருவர் ட்விட்டரில் இப்படி மொழிபெயர்க்கிறார் (இதுவும் ஒருவகை மொழிபெயர்ப்புதான்): Rich kid thinks everyone is fake except for his little sister. Has breakdown. அவ்வளவுதான். நாம் கூட கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை இப்படிச் சுருக்கிவிடலாம்: “(சீதையை இராவணன் தூக்கிச் சென்றதுபோல) சிவகாமியை நாகநந்தி தூக்கிச் செல்கிறான். இடையில் பரஞ்சோதி (அனுமன்போல) தூது செல்கிறான். வர மறுத்த சிவகாமியை, நரசிம்ம பல்லவன் (இராமன்) வந்து மீட்டுவருகிறான்.” கதைச் சுருக்கத்துடன் இப்படி ஒப்பீடுகளும் நிகழ்த்திவிடலாம்!

ஆனால் இம்மாதிரி எழுத்துகளுக்கு எதிர்ப்பும் மிகுதியாகவே உள்ளது. இவை முறைசாரா நடையில் (informal style) உள்ளன; இவற்றில் இலக்கணப் பிழைகள் மிகுதி; மோசமான நடை; கொச்சை மொழியையும் சேரிமொழியையும் பாலியல் தொடர்களையும் (I’ll pen you in; asshole…) மிகுதியாகப் பயன்படுத்துகின்றன; சற்றும் மரியாதை அற்ற வெளிப்பாடுகள் (Zombie Jesus). ஒரு சரியான (valid), நளினமான நடை என்பதில்லை. இவர்களிடம் இலக்கணம் செத்துப்போனது; எல்லாம் எஸ்எம்எஸ் பாஷைதான்! (I c u என்பது போல) ஆங்கிலத்தில் உயிரெழுத்துகளை நீக்கிவிட்டுச் சுருக்கி எழுதும் போக்கு மிகுதியாகி வருகிறது. (நல்லவேளை! தமிழில் இப்படிச் சுருக்கமுடியாது என்று நினைக்கிறேன். மெய்யெழுத்துகளாகச் சுருக்க முடியாது, ஏனெனில் புள்ளியிட வேண்டும். வேண்டுமானால் ஓலைச்சுவடி பாஷையைக் காப்பியடித்துப் பார்க்கலாம்!) மொழிவளம் குன்றிவிட்டது. எழுத்துச் சேர்ப்பு, புணர்ச்சி முறை எல்லாம் போய்விட்டது. பங்ச்சுவேஷன் அறவே தேவையில்லை. இந்த வேகவாழ்க்கை நடை இலக்கியப் படைப்புக்கு ஒத்துவருமா? சுருக்கமாக ஆர்வமூட்டுவதாக மட்டும் மொழி இருந்தால் போதுமா?


நம்பிக்கை

நட்சத்திரங்களைப் பார், பாதங்களை அல்ல

பார்ப்பனவற்றின் பொருளை உணர முயற்சி செய்

பிரபஞ்சத்தை இயக்குகிற சக்தியை நினைத்து வியப்படை

ஆர்வத்தோடிரு.

வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீ செய்து வெற்றியடைய முடிகின்ற ஏதாவது ஒன்று உண்டு.

விட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே முக்கியம். (ஸ்டீபன் ஹாக்கிங்)