இயற்கையை நேசியுங்கள்

1964ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்-இடம் ஒருமுறை "நீங்கள் நாளை இறந்துபோகப் போவதென அறிந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள். அவர் பதில்: "ஒரு மரம் நடுவேன்".  மரம் வாழ்வின் குறியீடு.  "நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப் பாறுவார்கள்" என்கிறது ஒரு பழமொழி. சீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: "நிழல்தர மரமில்லையா? சூரியனைக் குற்றம் சொல்லக்கூடாது, உன்னைத் தான் சொல்லவேண்டும்". மரங்கள் இயற்கையின் பகுதி, மனிதனின் ஊட்டத்தின் மூலப் பொருள். ஆனால் இயற்கை மரங்கள் மட்டுமல்ல, அதற்கு மேலும்தான். ஞாயிறு, நிலவு, நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ள வானம்; கடல்கள், ஏரிகள், ஆறுகள், ஓடைகள், அருவிகள்; மலைகளும் குன்றுகளும்; நாம் வசிக்கும் இந்த மண்; நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று; நம்மிடையே வாழும் உயிரினங்கள்-இவை யாவும் நாம் வாழ்வதை அனுமதிக்கின்ற, நம் வாழ்க்கையைத் தொடரவிடுகின்ற இயற்கைக் கூறுகள். ஆகவே இயற்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் நம் மற்றும் நம் எதிர்காலச் சந்ததி களின் வாழ்க்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் போன்றதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாக, நம்மை எவ்விதம் மாற்றிக்கொள்வது என்று அறிவதற்கு முன்னா லேயே இன்று நம்மில் பலர் மிகவேகமாக இயற்கைச் சூழலை மாற்றிவிட்டார்கள். இயற்கைக்கு அழகாக இருக்க நம் உதவி தேவையில்லை, நமக்குத்தான் இயற்கையின் உதவி தேவை. நாம் வாழும் இந்த உலகமாகிய கிரகத்தின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால், ஒரு பறவையைப் பிடிப்பதற்கு முன்னால், ஒரு குன்றினைத் தரைமட்டமாக்குவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்கவேண்டியது இது: "இயற்கை தான் நமது வாழ்க்கை".         
ஒரு நாட்டின் தலைவர் ஒருமுறை கூறினார்: "மனிதன் நிலவுக்குப் போய்விட் டான், ஆனால் ஓர் எரிநிறப்பூக்கொண்ட மரத்தையோ, ஒரு பாடும் பறவையையோ எப்படி உருவாக்குவதென்று இன்னும் அவனுக்குத் தெரியாது. இதே மரங்களையும் பறவைகளையும் எதிர்காலத்தில் அவாவுவதற்குக் கொண்டுசெல்கின்ற, மாற்ற முடி யாத தவறுகளை நாம் செய்யாமல் நம் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்". 
மனித உறவுகளைப் போல, இயற்கைமீதான நமது நேசமும் ஆழமாகவும் காலங்காலத்துக்குத் தொடர்வதாகவும் இருக்கவேண்டும். இங்குதான் நாம் ஆஸ்திரே லியப் பழங்குடி இனத்தவர்களிடமிருந்து-அவர்கள்தான் உலகின் மிகப் பழமையான மிக நீண்ட கலாச்சாரத்தை உடையவர்கள்-கற்கவேண்டி யிருக்கிறது. ஞானத்திலும் ஆழ்நோக்கிலும் வளமான ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அவர்கள், அந்தப் பழங்குடியினர், இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்க மான தொடர்பின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்-"நாங்கள் மரங்களை வெட்டுவ தில்லை, பட்ட மரங்களைத்தான் பயன்படுத்துகிறோம்." 

“விண்ணுலகும் பூமியும் நானும் ஒன்றாய் வாழ்கிறோம்” என்று ஒரு டாவோ பொன் மொழி சொல்கிறது. டாவோ போதனையின்படி, இயற்கையின் எல்லாக் கூறுகளுக் கிடையிலும் ஒருங்கிசைவு வேண்டும். அதனால்தான் சீன நிலத்தோற்ற ஓவியங்களில் நாம் ஆறுகளையும் ஏரிகளையும் மலைகளையும் மட்டுமே காணமுடிகிறது, மனிதர்கள் அதற்குள் ஆதிக்கம் செய்வதில்லை.

இயற்கையை நேசி, அதனுடன் ஒருங்கிசைவுடன் வாழ், அதைப் பாழாக்கவோ அழிக்கவோ செய்யாதே.

வாழ்க்கை என்பது என்ன? அது இரவில் ஒளிரும் ஒரு மின்மினிப்பூச்சியின் ஒளிவீச்சு...குளிர்காலத்தில் ஓர் எருமை விடும் மூச்சு...சூரியமறைவின்போது புல்லின் மீது விரைந்து சென்று மறையும் ஒரு நிழல்.

-அமெரிக்க இந்தியப் போர்வீரர்.


இயற்கை

பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, ஒவ்வொரு நோயை குணப்படுத்தவும் ஒரு மூலிகை இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது.

-அமெரிக்க இந்திய முதியவர் ஒருவர்

நீரற்ற பாலை, நோய், பனிப்பொழிவுச் சரிவுகள், இன்னும் ஆயிரம் கடுமையான, வீழ்த்தக்கூடிய புயல் வெள்ளங்களிலிருந்தும் இந்த மரங்களைக் கடவுள் பாதுகாத்திருக்ஆறார், ஆனால் முட்டாள்களிடமிருந்து அவரால் காக்க இயல வில்லை. 

-ஜான் மூர்

இயற்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை; நம்மை நாம்தான் எப்போதும் ஏமாற்றிக்கொள்கிறோம்.

-ரூஸோ

காடுகளில் விலங்குகள் குறைந்துவருகின்றன. ஆனால் அவை நகரங்களில் அதிகரித்துக் கொண்டுள்ளன.

-மகாத்மா காந்தி

பூமியின் அழகைப் பற்றிச் சிந்திப்பவர்கள், தங்கள் உயிர் இருக்கும்வரை நீடிக்கக் கூடிய வலிமை இருப்புகளைக் கண்டறிகிறார்கள்.

-ரேச்சல் கார்சன்


தீபாவளி

“நான் சிரித்தால் தீபாவளி” ஆம், பலபேருக்கு, அவர்கள் சிரிக்கின்ற–மகிழ்ச்சியோடிருக்கின்ற ஒரு நாள் எதுவாக இருப்பினும் அதுதான் தீபாவளி.

நான் தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமில்லை. உண்மையில் தீப-ஆவளி, அல்லது தீப வரிசை என்றால் இன்னும் சில நாட்கள் கழித்துவரப்போகும் கார்த்திகை தீபம்தான். கார்த்திகையைச் சங்ககாலத்திலிருந்தே கொண்டாடி வருகிறோம். இடையில் “நான்தான் தீப வரிசை” என்று எந்தக்காலத்தில் இந்த வடநாட்டு தீபாவளி புகுந்தது என்று தெரியவில்லை. அநேகமாக நாயக்கர் காலத்தில்தான் நிகழ்ந்திருக்கக்கூடும்.

நரகாசுரன் என்பதையும் நான் நம்புவதில்லை. நம் கண்ணெதிரே ஆயிரம் நரகாசுரர்கள் இருக்கும்போது கற்பனையில் ஒரு நரகாசுரன் எதற்கு? நரக அசுரன் என்றால் அப்புறம் சுவர்க்க அசுரன் ஒருவன் இருந்தானா?

இதை வடநாட்டவர்கள் தாண்டிராஸ் என்று ஐந்துநாள் கொண்டாடுகிறார்கள். என்ன என்ன கட்டுக்கதைகளோ அதன் பின்னால்.

என்னைப் பொறுத்தவரை வருடத்தில் ஒருநாள் நான்கரை ஐந்து மணிக்குள் குளித்துவிட்டு ஏழரை மணிக்கு போளி வ‍டை தோசை என்று சாப்பிடுவது நன்றாகத்தான் இருக்கிறது. இனிப்புகள் வாங்குவது பெரும்பாலும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்களுக்காக, நண்பர்கள் உறவினர்கள் வந்தால் தருவதற்காக.

என் சின்ன வயதில் எங்கப்பாவும் நாங்களும், அவர் இரு தம்பியர் குடும்பத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடிய பல தீபாவளி தினங்கள் ஞாபகம் இருக்கின்றன. அந்தக் கூடுகை, சிரிப்பு, மகிழ்ச்சி இருந்ததே, அதுதான் தீபாவளி. ஆனால் தீபாவளி என்றாலே பெரும்பாலும் மழையும் சேர்ந்தே ஞாபகம் வரும். நான் கொண்டாடிய மழையற்ற தீபாவளிகள் குறைவு. எல்லாரும் பட்டாசு வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக்கொண்டிருப்போம்.

ஹ்ம்…ம்…இதெல்லாம் பழைய காலம். நான் பெரியவனாகி சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு குடும்பத்தோடு, என் தம்பி தங்கையரோடு கொண்டாடிய தீபாவளிகள் மிகவும் குறைவு. காரணங்கள் பல.

தீபாவளி என்றாலே ஜாலி என்றுதான் அர்த்தம்! தீபாவளி கொண்டாடக்கூடாது என்று தமிழ்நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்…ஆனால் இந்தக் குதூகலம், சிரிப்பு, மகிழ்ச்சி, ஒன்று சேர்தல் இதற்காகக் கொண்டாடுங்கள் ஐயா…ஏன் நரகாசுரனை நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு இந்துப் பண்டிகையாக தீபாளியை ஒரே ஓர் ஆண்டுகூடக் கொண்டாடியதில்லை. என் வீடும் அப்படித்தான். அது ஒரு மகிழ்ச்சித் திருநாள், அவ்வளவுதான். பிள்ளைகள் பட்டாசு வெடிக்க, மத்தாப்பு கொளுத்த, இல்லாதோர் புத்தாடை உடுத்த, ஆண்டில் ஒருநாளாவது பலபேர் இனிப்புகள் ருசிக்க…

திருச்சியில் இருந்தவரை தீபாவளிக்கு முன்னாட்களில் ஒரு நாள் சின்னக் கடைத் தெருவுக்குச் சென்று வருவோம். கூட்டம் தள்ளும். தப்பிப் பிழைத்துவருவது கடினம். (சென்னை ரங்கநாதன் தெரு அனுபவம் எனக்கு இல்லை.) ஒவ்வொன்றாக ஆண்டுகளும் அனுபவங்களும் கடந்து செல்கின்றன…

இப்போது 73 முடிந்துவிட்டது. இன்னும் எத்தனை தீபாவளிகளைப் பார்க்கப் போகிறேனோ நான்… மீண்டும் சொல்கிறேன், கட்டுக் கதைகளை, புராணங்களை விட்டு விடுங்கள்…”நாம் அனைவரும் சிரிக்கும் நாளே தீபாவளி!”


பூரணச்சந்திரன் அறக்கட்டளை-முதல் நாள் பயிலரங்கம்

29-09-2022 முதல்நாள் நிகழ்ச்சிகள்

இந்த அறக்கட்டளைப் பயிலரங்க நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியிலிருந்து பதினைந்து மாணவ-மாணவியரும், பிற கல்லூரிகளிலிருந்து பதினேழு மாணவ-மாணவியரும் என முப்பத்திரண்டு பேர் பங்கேற்றனர்.

நிகழ்வைத் தொடங்கிவைத்த கல்லூரி முதல்வர் தமிழ்த்துறையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வதாகக் கூறினார். அறக்கட்டளை அமைப்பாளர் க. பூரணச்சந்திரன் மூன்றுநாட்களிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டினார்.

திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதால் தேவையான ஏற்பாடுகளை பேராசிரியர் சாம் கிதியோன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

நேரமின்மையால் கலை இயக்கங்கள் என்ற தலைப்பில் திரு. பூரணச்சந்திரன் பேச இருந்த பேச்சு கைவிடப்பட்டது. தொடர்ந்து கலைப்பட இயக்குநரான திரு. அம்ஷன் குமார் திரைப்படத்தின் அம்சங்களை விளக்க வேண்டி முதலில் மூன்று குறும்படங்களைத் திரையிட்டார். அவற்றில் Glass என்ற திரைப்படம் சிறப்பாகக் கண்ணாடி தயாரிக்கும் முறையை விளக்கியது. மாணவர்கள் எல்லாத் திரைப்படங்களையும் கூர்ந்து கவனித்தனர்.

வாழையிலை போட்டு வழக்கமான குழம்பு-ரசம்-பொறியல்கள்-தயிர் முதலியவற்றுடன் மதிய உணவு மிகச் சிறப்பாக மூன்று நாட்களுக்கும் கல்லூரி கேண்டீனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு மிக உவப்பாக உணவு அமைந்தது.

முதல்நாள் மதிய உணவு உண்ட பிறகு, அம்ஷன்குமார் தானே தயாரித்து இயக்கிய ஒருத்தி என்ற கதைப்படத்தினைத் திரையிட்டார். இது எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் கிடை என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இருந்தாலும் படத்திற்கேற்பத் தேவையான மாறுதல்களை அம்ஷன் குமார் செய்து சிறப்பாக ஆக்கியிருந்தார். மாணவர்கள் திரைப்படத்தைப் பார்த்தபின் அது பற்றி விவாதித்தனர். அவர்களுடைய கேள்விகளுக்கும் விமரிசனங்களுக்கும் அம்ஷன்குமார் விடையளித்தார். அத்துடன் பொதுவாகத் திரைப்படத் தயாரிப்பு பற்றியும் ஓர் அறிமுக உரை நிகழ்த்தினார். ஏறத்தாழ 5.30 மணி அளவில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. பிறகு மறுநாள் மாணவர்கள் ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்ற வீட்டுவேலை அளிக்கப்பட்டது. மாணவமாணவிகள் தங்கள் இருப்பிடங்களுக்குக் கலைந்து சென்றனர்.


இன்றைய இந்தியா

பிரசாந்த் பூஷணின் நீதிமன்ற அறிக்கையை அடியொற்றி

இதுவரை எவரும் இப்படிப் பேசியதில்லை என்னும்படி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்து உண்மை பேசிய பிரசாந்த் பூஷணின் வாக்குமூலம் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. காலத்தால் அழியாத வாக்குமூலம் இது. ஒரே ஒரு வருத்தம், பிரசாந்த் பூஷணுக்கு நாடே ஆதரவாக நின்றது. நீதிபதி கர்ணனுக்கும் யாராவது ஆதரவாக நின்றிருக்கலாம்.

“சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட எனது (பிரசாந்தின்) கருத்து அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட கருத்துரிமைக்கு உட்பட்டது. நீதிபதியின் மீதான தனிப்பட்ட அவதூறு வேறு, நீதிமன்ற அவமதிப்பு வேறு. நல்லெண்ணம் கொண்டு நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உள்ளது. விமர்சனங்களை ஒடுக்குவதன் மூலம் நீதித்துறையை மதிப்பார்கள் என்பது தவறான எண்ணம்” என்றார் பூஷண். அவரது அறிக்கை இங்கே, சுருக்கமாக.

பாரதிய ஜனதா மற்றும் தொடர்புடைய சிறுசிறு காவி குழுக்களால் பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் கொல்லப் பட்டனர். காவல்துறை மிக அரிதாகவே நடவடிக்கை எடுத்தது.

பொய்த் தகவல்களும் போலிச் செய்திகளும் இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பரப்பப்பட்டு அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக்கப் பட்டனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியன சிறுபான்மையினருக்கும் பட்டியல் இனத்தவருக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டம் மதத்தின் அடிப்படை யில் அரசு பாகுபாடு காட்டுவதைக் காட்டுகிறது. சிறுபான்மை யினருக்கு எதிராகச் செயல்படுகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஜாமியா கல்வி வளாகத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அத்தாக்குதலை காவல்துறையினரே முன்னின்று நடத்தினர்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் காவல்துறையினரின் பார்வையின் கீழ் அனுமதிக்கப் பட்டனர். அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அடித்து நொறுக்கினர். பின்னர் காவல்துறையினர் அவர்களை பாதுகாத்து பத்திரமாக¸ இரகசியமாக வெளியே அனுப்பினர். காணொளிக் காட்சிகள் மூலம் மாணவர்கள் மீதான மூர்க்கத்தனமான தாக்குதல்கள் நிகழ்ந்தது அம்பலமானது.

ஜம்மு-காஷ்மீரில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலம் மூன்றாக பிளக்கப்பட்டு¸ குடியாட்சியின் சிறு சிறு உரிமைகளைக் கூடப் பெறாமல் முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆறு வருடங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை இழப்பு ஆகிய இரண்டும் உச்சத்தைத் தொட்டன. கோவிட்-19 காலகட்டத்தில் 10 கோடிக்கு மேலானோர் தங்கள் வேலைகளை இழந்தனர். அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கங்களான தேர்தல் ஆணையம்¸ தலைமைக் கணக்காயர்¸ சி.பி.ஐ¸ நடுவண் விழிப்பு ணர்வு ஆணையம்¸ போன்ற பொது அமைப்புகள் சீரழிக்கப் பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக பிரதமருக்கும்¸ உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட்டனர். அதனால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையையும் சுதந்திரமும் மிகப்பெரிய கேள்விக்குறி ஆயிற்று. விதிகளைப் பிற்போக்குத்தனமாக மாற்றியதன் மூலம் ஜனநாயகம் பணநாயகமாக மாற்றப்பட்டது. முன்னர் 7.5 விழுக்காடு உச்ச வரம்பு பெருநிறுவன நன்கொடைகள் வழங்கும் நிலை மாறி எவ்விதக் கட்டுப்பாடுமற்ற இரகசிய அரசியல் நன்கொடையை ஊக்குவிக்கும் வழிகளையும் தேர்தல் பத்திரங்கள் மூலம் மறைமுகமாக நன்கொடை அளிக்கும் திட்டத்தையும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தியது. இந்தியாவில் தேர்தல் நன்கொடை மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கடந்த மூன்று வருடத்தில் பெற்றது. கட்சிகளுக்கான மொத்த நன்கொடைகளில் 90 விழுக்காட்டைப் பெற்றது.

இத்தகைய சட்ட திருத்தங்கள் மறைமுகமாகப் பண மசோதா என்ற வடிவில் கொண்டு வரப்பட்டன. பாரதிய ஜனதாவுக்குப் பெரும் பான்மை இல்லாத மாநிலங்களவையில் எவ்வித விவாதமும் இன்றி சட்டப் புறம்பான வழியில் நிறைவேற்றப்பட்டன.

ரஃபேல் ஒப்பந்தம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட குறிப்பு தலைமை கணக்காயர் அறிக்கைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அரசால் உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டது. பாராளுமன்றக் குழுவிற்கு முழு விபரங்களையும் தராமல் அரைகுறை அறிக்கை யைக் கொடுத்தது. தலைமைக் கணக்காயர் அலுவலகம் அரசுக்கு பணிந்தது.

லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் லோக்பால் பொறுப்பிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. லோக்பால் அமைப்பும் ஒரு வழக்கைக் கூட விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. லஞ்ச ஊழலை கண்டுபிடிப்பவரின் பாதுகாப்பிற் காகக் கொண்டு வரப்பட்ட விசில் புளோயர் சட்டம் என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப் படவேயில்லை. ரஃபேல் ஒப்பந்தத்தில் அலுவலக ரகசியங்களைப் பாதுகாக்கும் காலனியக் காலச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென ரஃபேல் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்கள் மிரட்டப்பட்டனர்.

சி.பி.ஐ அமைப்பின் சுதந்திரம் தரம் தாழ்ந்து போனது¸ சிபிஐ இயக்குனர் ஒருவர் ரஃபேல் ஒப்பந்தத்தை விசாரிக்க முனைந்ததால் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாகேஸ்வர ராவ் என்பவர் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் ஒரே நாளில் 40 பேரை அரசுக்கு ஆதரவாக இட மாற்றம் செய்தார்.

மத்திய விழிப்புணர்வு ஆணையத்தின் தலைமையிலிருந்து தலைமை அதிகாரி பல வருடங்களாக நடத்திய சோதனைகளில் சஹாரா மற்றும் பிர்லா குழுமங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் கணக்கில் வராத பணத்தை பெருமளவில் பெற்றதைக் காட்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டன.

தேசியப் புலனாய்வுக் குழு, இந்நாட்டின் மிக நேர்மையான மனித உரிமைப் போராளிகள் மீதும்¸ அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் கருவியாக மாறியது. எவ்விதக் கட்டுப்பாடுமற்ற பெருமுதலாளிகள் நாட்டின் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் ஏமாற்றி லட்சக்கணக்கான கோடிகளைச் சூறையாடியுள்ளனர். இவர்கள் லண்டன், ஆண்டிகுவா அல்லது பெர்முடா போன்ற வரி ஏய்ப்புச் சரணாலய நாடுகளில் குடி புகுந்தனர். அரசு அவர்களை இந்நாட்டிற்கு பிடித்து வருவதாக வெறும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

மத்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் அழிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நீக்கப்பட்டார். அவருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட உர்ஜித் பட்டேலும் வெளியேற்றப்பட்டார். ரகுராம் ராஜன் கடன் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் குறித்து விசாரிக்க முயன்றதாலும்¸ உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் ஒரு லட்சம் கோடி பணத்தை அரசுக்குத் தர மறுத்ததாலும் வெளியேற்றப்பட்டனர்.

90 விழுக்காடு வெகுஜன ஊடகங்கள் அரசின் பிரச்சார நிறுவனங்களாக மாற்றப்பட்டன. நியாயப்படுத்த முடியாத அரசின் நடவடிக்கைகள் மூடத்தனமாக நியாயப்படுத்தப்பட்டன. பணமதிப்பிழப்பு முதல் கோவிட்-19 முழுஅடைப்பு வரை அரசாங்க நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டன. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு ஊடகங்களால் விசிறி விடப்பட்டது. நூற்றுக் கணக்கான கோடி அரசு விளம்பரங்கள் மூலம் ஊடகங்கள் கைப்பற்றப் பட்டன. மறுக்கும் ஊடகங்கள் மிரட்டப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டன. பேஸ்புக்¸ டுவிட்டர்¸ இன்ஸ்டாகிராம் போன்றவை அரசால் கட்டுப்படுத்தப்பட்டன.

கடந்த நான்கு தலைமை நீதிபதிகளின் காலகட்டத்தில் மக்களு டைய உரிமைகள் நசுக்கப்பட்டன. அரசின் ஒடுக்குமுறைப் போக்கை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்தத் தவறியது. கொலிஜியம் என்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமை கொண்ட முதுநிலை நீதிபதிகள் குழு செயலிழந்தது. கொலிஜியத்தால் பரிந்துரைக்கப் பட்ட 43 பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. நீதிபதி இர்ஷாத் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப் படுவதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதி மன்றத்தின் நீதிபதி அகில்குரேஷி முதலில் பம்பாய்க்கும் பின்னர் மத்தியப் பிரதேசத் தலைமை நீதிபதியாகவும் மாற்றப்பட்டார். அதன் பின்னர் அவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

காஷ்மீரில் இன்டர்நெட் வசதிகள் தடுக்கப்பட்ட வழக்கு¸ ஆட்கொணர்வு நீதிப்பேராணை தொடர்பாகவும்¸ ஜவஹர்லால் நேரு கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும் தொடுக்கப்பட்ட வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அமித்ஷாவின் கொலைச் சதி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மான முறையில் இறந்துபோனார். ரஃபேல் ஊழல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது மூடி முத்திரை இடப்பட்ட உறையில் ஆவணங்களை நீதிமன்றத்திற்கு மட்டும் கொடுத்து எதிர்த் தரப்பிற்கு அவ்வழக்கு ஆவணங்கள் தரப்படாமலேயே அவ்வழக்குகள் முடிக்கப்பட்டன.

2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சஹாரா பிர்லா புலனாய்வு தொடர்புடைய வழக்கின் போது முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் சஹாரா குழுமத்தில் கைப்பற்றிய ஆவணங்களில் ஒன்றில் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடி கொடுத்தற்கான குறிப்பு ஒன்று கிடைத்தது. அந்த ஆவணங்களைப் பெற்ற வருமான வரித்துறை, சி.பி.ஐ-க்கு அவற்றினை கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு நடக்கவில்லை. மன்மோகன்சிங் தலைமையிலான அரசு இவ்வழக்கைச் சரிவரத் தொடராதது ஆச்சரியம் அல்ல. அதில் தொடர்புடைய அனைவரும் அவரது ஆட்சிக்கால அதிகாரிகள். ஆனால் அடுத்து வந்த அரசும்¸ அவற்றைக் கிடப்பில் போட்டது. தற்போதைய பிரதமர் தனது தேர்தல் கூட்டங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்றால் திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்களுக்கு ஜெயந்தி வரி கொடுக்க வேண்டும் என்று பேசினார். எனவே பிர்லா குழுமம் டைரி குறிப்புகள் பற்றி அவர் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய குஜராத் முதல்வருக்கு 25 கோடிகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லும் டைரிக் குறிப்பே தற்போதைய அரசு அவ்வழக்கின் விசாரணையை தொடராமல் இருப்பதற்கு காரணம்.

இது தவிர நவம்பர் 2014ஆம் ஆண்டு திரு. மோடி அரசாங்கம் அமைந்த போது வருமான வரித்துறை சஹாரா குழுமத்தைச் சோதனையிட்டது. பணமாக மட்டும் 137 கோடி கைப்பற்றப்பட்டது. 113 கோடி ரூபாய்ப் பணம், என்று,யாரால்¸ எவ்வாறு¸ எந்த இடத்தில் கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளைக் கொண்ட தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குஜராத் முதல்வர் திரு. மோடிக்கு 40 கோடி ரூபாய் 9 தடவைகளாக கொடுக்கப்பட்டதாக குறிப்புகளில் கண்டிருந்தன. காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித்¸ மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் போன்றவர்களும் பயன்பெற்ற தைக் காட்டும் குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த ஆவணங்கள் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படவில்லை. மேற்சொன்ன ஆவணங்கள் லஞ்சம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம் நடந்ததைத் தெளிவாகக் காட்டின. வழக்கில் இவ்வாறான டைரிக்குறிப்புகள் குற்றவியல் புலன் விசாரணைக்கு போதுமானவை என உச்சநீதிமன்றத்தின் முன் தீர்ப்புகள் உள்ளன. ஆனால் பிர்லா, சஹாரா தாள்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவே யில்லை. அந்த விசாரணைக்குப் பொறுப்பாக இருந்த கே.வி.சவுத்ரி என்ற வருமானவரி உறுப்பினர் தலைமைக் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்ட போது அதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கேகர், அருண் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அவ்வழக்கு நீதிபதிகள் கேகர் அமர்வில் இருந்து மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அவ்வழக்கின் தீர்ப்பு தவறானது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் துஷ்யந்தவே கட்டுரைஎழுதினார்.

நீதிபதி அருண்மிஸ்ரா தனது மருமகன் திருமணத்தை டெல்லி அரசு ஒதுக்கீடு செய்த வீட்டிலும்¸ குவாலியரிலும் நடத்திய போது மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அத்திருமண வரவேற்பு நிகழ்வில் குவாலியரில் கலந்து கொண்டார். சஹாரா வழக்குத் தீர்ப்பில் அவர் பயன்பெற்றவர்.

உச்சநீதிமன்றம் தனது நடத்தை விதிகளை வகுத்துள்ளது. அதன்படி அரசியல் வாதிகளுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறான நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது விதிகளுக்கு மாறாக தனது வீட்டுத் திருமணத்தில் பங்கு பெற்ற ஒருவரது வழக்கைக் கையாண்டது சரியல்ல.

09.08.2016 அன்று அருணாசலப் பிரதேச முதல்வர் கலிக்கோபுல் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு மூன்று வாரங்கள் முன்னதாக நீதிபதி கேகர் மற்றும் தீபக் மிஸ்ரா இருவரும் அவரை பதவி நீக்கம் செய்யும் முக்கிய தீர்ப்பை வழங்கி இருந்தனர். கலிக்கோபுல் தனது தற்கொலைக் கடிதத்தில், நீதிபதியின் கேகரின் மகன் 49 கோடி ரூபாய் கொடுத்தால் சாதகமான தீர்ப்பு எழுத முடியுமென அவரிடம் கூறியதாகவும் நீதிபதி தீபக் மிஸ்ரா 37 கோடிகள் கேட்டதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் இன்று வரை அது தொடர்பான புலனாய்வோ விசாரணையோ நடக்கவில்லை.

28.08.2017லிருந்து 01.10.2018 வரையிலான உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் பலமுரண்கள் கொண்டது.

நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலத்தில் 01.08.2017 அன்று பிரசாத் கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கில் இந்திய மருத்துவக் குழு பரிந்துரைகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

24.08.2017அன்று தீபக் மிஸ்ரா, பிரசாத் கல்வி அறக்கட்டளை தங்கள் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத் தை அணுகுமாறு உத்தரவிட்டார். இந்திய மருத்துவக் குழுவின் அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் வழக்கில் ஒரு வழக்கை மட்டும் தனியாகப் பிரித்து அனுப்பியது வழக்கத்திற்கு மாறானது.

மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்கும்படி பிரசாத் கல்வி அறக்கட்டளைக்கு உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இந்திய மருத்துவக் குழு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் மறுபடியும் பிரசாத் கல்வி அறக் கட்டளைக்கு உயர்நீதிமன்றத்தை அணுகும்வாய்ப்பு தரப்பட்டது. பிரசாத் கல்வி அறக்கட்டளை வழக்கில் சி.பி.ஐ. பதிவு செய்த நீதிபதிகள் லஞ்சம் வழங்கியது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், திரு.யாதவ் என்ற ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, குதுசி¸ பவனா பாண்டே என்பவர்களைத் தொடர்பு கொண்டதாகவும் அவர்கள் மீரட்டிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் சுதுர்கிரி என்பவர் மூலமாக இது தொடர்பான சிக்கல்களை சரி செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

19.09.2017 ஆம் ஆண்டு குற்றச்சதி மூலம் லக்னோவின் பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் தொடர்பு பற்றி விசாரிக்க திரு காமினி ஜெய்ஸ்வால் மூலம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி தீபக் மிஸ்ராவே விசாரித்து தள்ளுபடி செய்தார். இது சட்ட நீதிக்கும்¸ நியாயத்திற்கும் புறம்பானது. சி.பி.ஐ பதிவு செய்த உரையாடல் களில் பிரசாத் அறக்கட்டளை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையி லான ஐந்து நீதிபதிகளின் அமர்வில் அமர்ந்த நீதிபதிகளுக்கு வழங்க வேண்டிய லஞ்சப் பணத்தைப் பற்றி உரையாடல் நடந்தது. பிரசாத் மருத்துவ அறக்கட்டளை வழக்கில் அலகாபாத் நீதிபதி சுக்லா என்பவர் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப் பணம் பெற்றது தெள்ளத் தெளிவாகத் தெரிந்த பிறகும் அவர் மீது வழக்குப் பதிய உச்சநீதிமன்ற உள்ளரங்க நடவடிக்கை மூலம் மறுத்துவிட்டார் தீபக் மிஸ்ரா. நீதிபதி சுக்லாவை பாராளுமன்றம் மூலம் பதவி நீக்கம் செய்யவும் பரிந்துரைத்தார். ஆனால் அப்பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. 17.07.2020வில் நீதிபதி சுக்லா ஒய்வு பெற்றார்.

ஜனவரி 2018ல் நான்கு முதுநிலை நீதிபதிகள் செல்லமேஸ்வர்¸ குரியன் ஜோசப்¸ மதன் லோகூர்¸ ரஞ்சன் கோகாய் ஆகியோர் நீதிபதி தீபக் மிஸ்ராவின் சர்வதிகாரப் போக்கை கண்டித்தும்¸ மிக முக்கிய வழக்குகளை அவரே கையாளுவதைப் பற்றியும்¸ குறிப்பிட்ட சில அமர்வு நீதிபதிகளின் அமர்வில் மட்டுமே அவற்றை ஒப்படைப்பது குறித்தும்¸ மருத்துவ ஊழல்¸ நீதிபதி லோயா இறப்பிற்கான புலன் விசாரணை வழக்கு¸ ஆதார் வழக்கு¸ நீதிபதிகள் நியமன தொடர்பான வழக்கு போன்ற வழக்குகள் கையாளப்பட்ட விதம் குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்த போது பீமா கொரேகாவ்ன் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக போராளிகள் மீது புனே காவல்துறையால் புனையப்பட்ட வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு மாற்றம் செய்ய மறுத்தது உச்சநீதிமன்றம். மகாராஷ்ராவில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்தவுடன் தானாகவே முன்வந்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சமூகப் போராளிகளும்¸ அறவழியில் நம்பிக்கைடையவர்களுக்கும் பிணை வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலத்தில் அஸ்ஸாம் தேசிய குடியுரிமை வழக்கு¸ ரபேல் வழக்கு¸ சி.பி.ஐ இயக்குநர் வழக்கு போன்றவற்றை அவர் கையாண்ட விதம் சரியில்லை. அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடுகள் தொடர்பாக நீதிபதி கோகாய் கையாண்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்விதப் பரிகாரமும் பெற முடியாத சூழல் ஏற்படும் விதத்தில் நீதிமன்றமே குடியுரிமைப் பதிவேட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பான வழக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரைகளில் பெற்றதன் அடிப்படையில் அவ்வழக்கை கையாண்ட முறையும் கவலையாக உள்ளது. தேர்தல் பத்திர நடைமுறைக்கு மத்திய ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்தும்¸ விதிகள் வளைக்கப் பட்டு 95 விழுக்காடு தேர்தல் பத்திரங்களை ஆளுங்கட்சி மட்டுமே பெற்றது.

காஷ்மீரில் ஒரு வருடம் முழு அடைப்பு நிகழ்ந்தது. உறுப்பு 370 நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் காஷ்மீர் மூன்றாகத் துண்டாப்பட்டது. அதன்மூலம் அமைதி திரும்பும் என்பது அரசின் வாதம். ஆனால் காஷ்மீரில் 4ஜி அலைக்கற்றையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வழக்கில் காஷ்மீரில் வன்முறை நிலவுகிறது என்று அரசு முரண்பாடாக வாதம் செய்தது.

காஷ்மீர் தொடர்பான ஆட்கொணர்வு நீதிப்போராணைகளில் மெத்தன போக்கை உச்சநீதிமன்றம் கடைபிடித்ததையும்¸ கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்த வழக்கில் அவசர மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் யூசுப் தாரிகமி தாமதமாக விடுதலை செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பாபர் மசூதியை இடித்தமை சட்ட விரோதம் என தங்கள் 09.11.2019ஆம் ஆண்டு தீர்ப்பில் குறிப்பிட்டனர். பாபர் மசூதி வழக்கில் அவசரம் காட்டிய கோகாய் 40 நாட்கள் தொடர்ச்சியாக அவ்வழக்கை விசாரித்து¸ நீதிமன்ற அவமதிப்பு ஏற்படுத்தி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அளித்த தீர்ப்பின் மூலம் சட்ட விரோத மசூதி இடிப்பை நியாயப்படுத்தினார். அது சட்டத்தின் ஆட்சிக்கு முரணான தீர்ப்பு ஆகியது.

பாபர் மசூதி தீர்ப்பில் தீர்ப்பு அளித்த நீதிபதியின் பெயர் குறிப்பிடப் படவில்லை. சட்ட விரோதமான பின்னிணைப்பு ஒன்று 116 பக்கங்களுக்கு வழங்கப்பட்டது. இவை கேள்விக்குரியவை. ஒருமித்த ஆனால் ஒளிந்து கொள்ளும் தீர்ப்பு unanimous but anonymous என நீதிபதி ஏ.பி.ஷா எழுதிய கட்டுரை இதில் குறிப்பிடத்தக்கது.

நீதிபதி கோகாய் மீது நீதிமன்ற இளநிலை உதவியாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு புரிந்தாக குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டிய பெண்மணி மூன்று முறை பணிமாற்றம் செய்யப்பட்டு இடைக் காலப் பணிநீக்கம் செய்யப்பட்டார். டெல்லி காவல்துறையில் பணிபுரிந்த அப்பெண்மணியின் கணவரும்¸ மைத்துனரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்பெண்மணியின்
இன்னோரு மைத்துனர், ஒரு மாற்றுதிறனாளி, நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டார். அப்பெண்மணி தாக்கல் செய்த உறுதிமொழித் தாள் குறித்த வழக்கில் நீதிபதி கோகாய் தன் மீதான வழக்கைத் தானே அமர்ந்து முடிவு செய்தது அடிப்படை சட்டக்கருத்தான ‘தனது வழக்கில் தானே தீர்ப்பளிக்கக் கூடாது’ என்ற சட்ட மீறல் ஆகியது. பாலியல் தொந்தரவு வழக்கில் அமைக்கப்பட்ட குழுவின் நீதிபதிகள் அரவிந்த போப்டே¸ இந்து மல்ஹோத்ரா¸ மற்றும் இந்திராபானர்ஜி ஆகியோர் இடம்பெற்ற போதிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வழக்கறிஞர் முன்னிலையாக அனுமதிக்காததால் புகார் கொடுத்த பெண்மணி அக்குழுவின் முன் முன்னிலையாக விரும்பவில்லை. நீதிபதி கோகாய் மீதான குற்றச்சாட்டு மூன்று நீதிபதிகள் குழுவினால் முடித்துவைக்கப்பட்டாலும் அதன் இறுதி அறிக்கை வெளியிடப்படவேயில்லை. அப்பெண்மணி மறுபடியும் பணி அமர்த்தப்பட்டார். அவரது மைத்துனர்களுக்குப் பணி வழங்கப்பட்டன. ஆனால் கோகாய் விவகாரம் திரை மூடிய மர்மமாகவே இன்றும் இருக்கிறது.

நீதிபதி கோகாய் தலைமையிலான கொலிஜியம் என்ற முதுநிலை நீதிபதிகள் குழுவின் பரிந்துரையால், குஜராத் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அகில் குரேஷி பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக்கப்பட்டார்.

ஓய்வு பெற்ற நான்கு மாதங்களில் நீதிபதி கோகாய் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றார். இதனால் சாமானிய மனிதர்களுக்கு நீதித்துறை அமைப்பின் மீது உள்ள நம்பிக்கை சிதைந்து போயிற்று. ‘உதவிக்குப் பதவி’ என்ற அடிப்படையில் நீதிபதியும்¸ அரசும் கைகோர்த்துக் கொண்டனர்.

நீதிபதி போப்டே, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்குகளில் மக்களைக் காப்பாற்றத் தவறினார். டெல்லி கலவரத்தில் டெல்லி எரிந்த போது நீதிபதி முரளிதரன் 26.02.2020 முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்டதனால் நள்ளிரவே அவர் மாற்றம் செய்யப்பட்டார். இது தவிர புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வழக்கு¸ காஷ்மீர் வழக்கு 4ஜி அலைக்கற்றை வழக்கு ஆகியவற்றில் நீதிபதியின் போப்டேயின் உத்தரவுகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக இல்லை.

[இவை தவிர ஏராளமான தரவுகளைத் தான் தர முடியும் என்றார் பூஷண். மேற்சொன்ன நிகழ்வுகளின் அடிப்படையிலேயே அவர் கடந்த ஆறு ஆண்டுகளில் குடியாட்சி சிதைக்கப்பட்டதையும் அதில் நான்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பங்கு குறித்தும் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டதாகவும், அவ்வாறு கூற அரசியலமைப்பு சட்டம் 19(1)(ஏ)யின் படி தனக்கு கருத்துரிமை யுள்ளது எனவும்¸ 02-08-2020 அன்று தனது வாக்குமூலத்தை அளித்தார். மேற்சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.]


இன்றைய செய்தி

இன்று வையவன் என்ற எழுத்தாளர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். என்னை விட வயதில் பத்தாண்டுகள் மூத்தவர். அடையாறு வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நூலை வெளியிட்டது பற்றியும் அவர் அனுப்பிய பிடிஎஃப் கோப்பில் தகவல்கள் இருந்தன. பேச்சிலேயே பிராமணர் என்பது தெரிந்தது. வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் (பள்ளிகொண்டாவில் பணி செய்தவர்). அவர் சொன்னதில் என்னை உறுத்திய விஷயம் ஒன்றே ஒன்று. தான் உறுதியான மாறாத சலனமற்ற மனநிலையை அடைந்து விட்டதாகக் கூறினார். அதில் வெளியான “நான்” என்பது என்னை உறுத்தியது. நான் என்ற விஷயத்தைத் தகர்க்காமல் எதை அடைய முடியும்? உறுதி என்பது மரணம்தான். அதுவரை மாறிக் கொண்டுதான் இருக்கிறோம். அதைத்தான் க்ஷணபங்க நியாயம் என்பதன் வாயிலாக புத்தர் கூறினார்.
முதலில் அவர் தமது அமைப்பில் என்னை அழைத்துப் பாராட்டுவதாகக் கூறினார். பேச்சின் போக்கில் நான் கடவுளை நம்பாதவன் என்று தெரிவித்தேன், ஆனால் அவரோ பகவத்கீதையை மொழிபெயர்த்தவர், ஆழ்ந்த பக்திமான் என்பதற்குமேல் இந்து என்பதில் பெருமை கொண்டவர். அவர் கருத்துகளுக்கு உடன்படாதவன் நான் என்றதும் தனது பேச்சை மாற்றிக் கொண்டார். சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அவருடன் உரையாடினேன். ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பார்ப்பனியத்தை நம் நாட்டிலிருந்து ஒழிக்க முடியாது என்பதும் புரிந்தது.
பேசிய பிறகு அவருக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பினேன். அதன் சாராம்சம் இதுதான். சலனமின்றி இருப்பது, தியானம், ஏன் முக்தியடைதல் எல்லாம் ஒருவருடைய நன்மைக்கு உதவலாம். சமுதாயத்திற்கு அதனால் என்ன பயன்? ஆதிகாலத்திலிருந்து அதைத்தானே இந்தியாவில் வலியுறுத்தினார்கள்? அதனால் சமூக அவலங்கள் ஏதேனும் தீர்ந்ததா? “சமூகத்திற்கு நம்மாலான பணியைச் செய்தால் அது போதும் எனக்கு” என்று எழுதினேன். என்னைப் பொறுத்தவரை உரையாடல் இறுதியில் கசப்புதான் மிஞ்சியது. பார்ப்பனர்கள் யாரோடு கருத்தியல் ரீதியாகப் பேசினாலும் ஏற்படுவது அதுதான். (இதற்கு ஒரே விதிவிலக்காக நான் கண்டவர் ஈழத்து பத்மநாப ஐயர்.)


உலக புத்தக தின விழா – திருச்சி

உலக புத்தக தின விழா திருச்சியில் 23-Apr-2017 அன்று மாலை நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக பேரா.க.பூரணச்சந்திரன் அழைக்கப்பட்டு அவரது வாசிப்பு அனுபவங்களைப் பற்றியும் அவர் எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ள புத்தகங்களைப் பற்றியும் பேருரை ஆற்றினார். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில் குமார், வாசகர் வட்டத் தலைவர் திரு.கோவிந்தசாமி, முதல் நிலை நூலகர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் அதில் கலந்துக் கொண்டு உரை ஆற்றினர்.20170423_162728 20170423_174428 20170423_173345


உலக புத்தக தின விழா – புதுக்கோட்டை

உலக புத்தக தின விழா புதுக்கோட்டையில் 23-Apr-2017 அன்று காலை நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக பேரா.க.பூரணச்சந்திரன் அழைக்கப்பட்டு புத்தகங்களின் சிறப்பு பற்றியும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி உரை ஆற்றினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திரு.கணேஷ், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.சாந்தி, வாசகர் வட்ட தலைவர் திரு.தங்கம் மூர்த்தி, மாவட்ட நூலக அலுவலர் திரு.காத்திகேயன் மற்றும் பலர் அதில் கலந்துக் கொண்டு பேசினர்.

20170423_121954 20170423_112836 20170423_112831(0)


என் குறிப்பு

சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு எனக்கு நூற்றுக்கணக்கான வாழ்த்துகள் தொலைபேசி வாயிலாகவும், முகநூல் வாயிலாகவும் வந்தன. சிலர் நேரில் வந்தும் வாழ்த்துத் தெரிவித்தார்கள். அனைத்து அன்பு  நெஞ்சங்களுக்கும் என் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் சிலர் என் biodataவை இணையதளத்தில் வெளியிடுமாறு கேட்டார்கள். அதனால், சாகித்திய அகாதெமி நிறுவனத்துக்கு நான் அனுப்பிய என்னைப் பற்றிய குறிப்புகளை அப்படியே இங்கு வெளியிடுகிறேன்.

Prof. Dr.G. Poornachandran

Prof. G. Poornachandran was born on 14th May 1949 in Arcot, Vellore District, Tamilnadu. He started his career as a physics teacher in schools. After getting his post-graduate degree in Tamil, he joined as a Lecturer in Tamil in Bishop Heber College, Tiruchirappalli, in 1975. He has been contributing to little (literary) magazines in Tamil from 1980. In 1983 he did his project on the History of Tamil Literary Criticism for the Tamil University, Thanjavur. From then he has been writing books on Literary Theory and Criticism in Tamil. He got his Ph.D. from the Madras University in 1987. He has taken part in several conferences and seminars, including workshops conducted by the Central Institute of English and Foreign Languages, Hyderabad. He has also been a Visiting Professor  and a Research Fellow in the School of Tamil, Central University, Puducherry from 2009 to 2012.

He has written 17 books on Literature and Tamil society, and translated 32 books from English to Tamil in various fields. He has also edited a few books.

 

He has been awarded the best translator award by Ananda Vikatan Magazine twice, in 2011 and 2016. He has also been awarded the Chinnappa Bharati Literary Endowment Award for his translation of Salmon Rushdie’s ‘Midnight’s Children’ in 2015.

A list of his own books and translations is attached in separate sheets. He runs a website for the benefit of Tamil students, www.poornachandran.com. He has instituted an endowment for Tamil critical studies in Bishop Heber College, where he served for 32 years.

Annexure 1: List of Dr.G. Poornachandran’s books

Annexure 2: List of Translations done by Dr. G. Poornachandran

Annexure 1: List of Books written by Prof. G. Poornachandran (all in Tamil).

1) அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும் 1990

(An Introduction to Structuralism and Post-structuralism, Published by Adaiyaalam)

2) செய்தித் தொடர்பியல் கொள்கைகள் 1991

(Contemporary Communication Theories, my own publication)

3) பத்திரிகை-தலையங்கம்-கருத்துரை 1993

(How to write Editorials and Opinions in Newspapers and Journals. published by Tamil Literary Society, Tiruchirappalli)

4) கவிதைமொழி-தகர்ப்பும் அமைப்பும் 1995

(Construction and Deconstruction in Tamil poetry, own publication)

5) இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் 1998

(A few Encounters in Tamil Literary Journey, published by Agaram Pathippagam, Thanjavur)

6) நவீன மொழிபெயர்ப்புக் கொள்கைகள் 2003

(Modern Theories of Translation, published by Agaram pathippagam, Thanjavur)

7) இந்திய மொழிகள் 2005

(An Introduction to Indian Languages and Literatures, published by Agaram Pathippagam, Thanjavur)

8) தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு (1900-1980) 2005

(A History of Tamil Literary Criticism, from 1900 to 1980, submitted as a Thesis in Tamil University, in 1983 but published by the Tamil University only in 2005)

9) கவிதையியல் 2008

(Modern Tamil Poetic Theories, published by the International Institute of Tamil Studies, Chennai)

10) கதையியல் 2011

(Theories on Fictional Writing, Published by Adaiyaalam)

11) தொடர்பியல்-சமூகம்-வாழ்க்கை 2012

(Communication, Society and Life, published by Adaiyaalam)

12) பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம் 2016

(A Hermeneutical Approach to Tolkappiam, published by the International Institute of Tamil Studies)

13) தமிழிலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் 2016

(Impact of Western Literary Theories in Tamil, published by Kaavya, Chennai)

14) தமிழகத்தின் தற்காலிகத் தலைவலிகள் 2014

(Temporary problems in the Tamil Land, published as an ebook in my website)

15) சான்றோர் தமிழ் 2014

(Tamil of the Sangam Poets, published as an ebook in my website )

16) அறிவியல் தமிழ் 2006

(Scientific Discourses in Tamil, published by the NCBH, Tamilnadu)

17) க. நா. சுப்ரமண்யம் 2008

(A Reader of the renowned Tamil Critic Ka Naa Subramanyam’s works, published by the Dravidian University, Kuppam)

முக்கியப் பதிப்பு நூல்கள்

தமிழிலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும் 2006

(The Condition of the Oppressed and their Empowerment in Tamil Literature, published by Bishop Heber College, Tiruchi)

அமுதம் 1999

(A Memoire on the Contribution of Fr. Amudhan, Secretary of Tamil Literary Society, Tiruchi)

உரசல்கள் 1985

(Essays on Comparative Literature in Tamil, published by the Tamil Department, Bishop Heber College)

நாற்றுகள் 1990

(A collection of Literary Articles in Tamil, published by the Tamil Department, Bishop Heber College)

 

Annexure 2

Important Translations by Prof. G. Poornachandran (All from English to Tamil)

This list is not exclusive, as the translation works done before 1995 by Prof.Poorachandran are not available now, in any publication. A Few books include the Handbooks on Indian Society by Vision Foundation. Translations done, especially after 2005 are included here. All these books are available in Adaiyaalam and Ethir Veliyedu.

Adaiyaalam, 1205/1, Karuppur Salai, Puthanatham, Tiruchi District, 621310. 04332-273444

Ethir Veliyedu, 96, New Scheme Road, Pollachi-2. 04259-226012  

A. ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்தின் மிகச் சுருக்கமான அறிமுக நூல்கள்

(Translation of a few books from the Very Short Introduction Series published by the Oxford Univesity Press. These were all published by Adaiyaalam Pathippagam, Tamilnadu)

1) உலகமயமாக்கல் (Globalization) 2006

2) இறையியல் (Theology) 2007

3) நீட்சே (Nietzche) 2008

4) பயங்கரவாதம் (Terrorism) 2009

5) இசை (Music) 2010

6) சமூகவியல் (Sociology) 2011

B. இலக்கிய நூல்கள் (Translations of Literary Works)

7) சிறைப்பட்ட கற்பனை (Captive Imagination by the Telugu Poet Vara Vara Rao, Penguin. published by Ethir Veliyedu, Pollachi. 2010)

Received the Best Translation Award by Ananda Vikatan Magazine in 2011)

8) ஊரடங்கு இரவு (The Curfewed Night, by Basharat Peer. Published by Kalachuvadu Publications, Nagercoil)

9) பொறுப்புமிக்க மனிதர்கள் (Serious Men, Novel by Manu Joseph, published by Ethir Veliyedu, Pollachi)

Selected for Sahitya Akademi Award for Translation into Tamil.

10) நள்ளிரவின் குழந்தைகள் (Midnight’s Children, Novel by Salmon Rushdie, published by Ethir Veliyedu, Pollachi.)

Received the Best Translation Award by Chinnappa Bharati Literary Endowment Trust, Namakkal.

11) நில அமைப்பும் தமிழ்க் கவிதையும் (Landscape and Poetry, by Dr.Xavier S. Thaninayagam)

12) பின்னமைப்பியம் (Post-modernism, An Introduction. For Beginners Series. Published by Adaiyaalam)

C. சமூகம் பற்றிய நூல்கள் (Translations of Books on Social Themes)

13) நொறுங்கிய குடியரசு (The Broken Republic by Arundati Rai, published by Kalachuvadu Publication)

14) மூன்றாம் சரபோஜி (Contributions made by Sarfoji III, A Maratta King who ruled in Thanjavur)

15) இந்தியா சுதந்திரமடைகிறது (மௌலானா அபுல் கலாம் ஆசாத்) (Translation of India Wins Freedom, by Maulana Abul Kalam Azad. Published by Adaiyaalam pathippagam 2012)

16) சமூகவியல் (Sociology by P.Gisbert, Orient Blackswan)

(Published by the National Translation Mission, CIIL, Mysore in 2016)

17) வியப்புக்குரிய இந்தியா (The Wonder that was India, by Prof. A. L. Basham)

(Published by Adaiyaalam Pathippagam, 2017)

18) கடவுள் சந்தை (God Market, by Meera Nanda)

(Published by Adaiyaalam Pathippagam, 2017)

D. அரசியல் நூல்கள் (Translations of Books on Political Themes)

19) காந்தியைக் கொன்றவர்கள் (The Men Who Killed Gandhi, by Manohar Malgaonkar)

(Published by Ethir Veliyedu, Pollachi, 2014)

20) அரசியலின் இலக்கணம் (A Grammar of Politics, by Harold J. Laski)

(To be published by Ethir Veliyedu, within this year)

E. அறிவியல் நூல்கள் (Translations of Books on Contemporary Science)

All these have been published by Adaiyaalam)

21) புவி வெப்பமயமாதல் (Global Warming by Dean Goodwin, For Beginners Series, published by Adaiyaalam pathippagam)

22) மரபணு மாற்றிய உணவுகள் (Genertically Modified Foods)

23) இயற்கை ஞானம் (Natural Wisdom)

F. தத்துவ நூல்கள் (Translations of Books on Philosophy)

24) கீழைத் தத்துவம் (Eastern Philosophy, For Beginners Series, by Jim Powel. Published by Adaiyaalam Pathippagam)

25) இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு  (Hindus- An Alternative History, by Wendy Doniger, Penguin, New York, 2000. Published by Ethir Veliyedu, Pollachi, 2015)

G. மருத்துவம் பற்றிய நூல்கள் (Translations of Books on Medical Discipline)

26) டாக்டர் இல்லாத இடத்தில் (Translation of Where there is no Doctor, by David Werner, Hesperian  Foundation) – One of the translators.

27) டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் (Translation of Where there is no Doctor for Women, Hesperian Foundation and then Published by Voluntary Health Association India)

28) பேற்றுச் செவிலியர் கையேடு (Translation of Handbook for Midwives, Published by Hesperial Foundation)

29) தலைமுடிஇழப்பு மருத்துவம் (Treatment of Hair Loss)

30) மூலநோய் (Treatment of Haemerrhoids)

31) ஐம்பது உடல்நலக் குறிப்புகள் (Fifty Health Tips)

32) மேயோ கிளினிக் (Mayo Clinic)

இவையன்றி என்னைப் பற்றிய குறிப்புகள் 26/02/2007 தமிழ் இந்து நாளிதழிலும், 3/3/2007 ஆங்கில இந்து நாளிதழிலும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாகப் பின்னதில் எனது தொலைபேசி வாயிலான நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.


கீழடி அகழ்வாய்வு

எழுத்தாளர் சு. வேங்கடேசனிடமிருந்த வந்த ஒரு மின்னஞ்சலை ஆதாரமாகக் கொண்டு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 5300 தொல்பொருட்களுடன் இரண்டு லாரிகள் மைசூருக்குச் செல்லப்போவதாக திரு. வேங்கடேசன் தெரிவித்துள்ளார். அவருடைய கூற்று பின்வருமாறு.

“அந்த இடமும், பொருட்களும்தான் இனி தமிழகத்தின் வரலாற்றுக் கால நிர்ணயத்தை அளவிடும் அடிப்படைத் தரவுகள். அந்தத் தரவுகள், தமிழக நாகரிகத்தின் காலத்தை இன்னும் பின்னோக்கித் தள்ளுவதாக இருக்கும். இன்றைய அரசியல் சூழலில் இந்தச் செய்தி பலருக்கு ஏற்புடையதல்ல. தரவுகளைத் தன்னழிவுக்கு விடும் அரசியல் ஒன்றும் புதிதல்ல. எல்லாக் காலங்களிலும் அது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழுச் சமூகமாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துச் சமவெளி நாகரிகத்தைப் போல ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை.

“இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அவற்றைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அந்தக் கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால் இன்று கீழடியில் கண்டறியப்பட்ட தரவுகள் அந்தக் கருத்தைத் தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கிறது. கீழடியில் இருப்பது அழிந்துபோன ஒரு பெரும் நகரம். நகர நாகரிகத்தின் அனைத்துத் தடயங்களும் முதன்முறையாக அங்கு கண்டறியப்பட்டுள்ளன. எண்ணற்ற கட்டிடங்களின் தரைத்தளங்கள், நீண்டு செல்லும் மதில் சுவர்கள், முத்துக்கள், தந்தத்தால்ஆன பல்வேறு பொருட்கள், சதுரங்கக் காய்கள், எண்ணிலடங்கா மணிகள், வணிகர்களின் எடைக் கற்கள், நெசவுக்கான தக்கை என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதுவரை 71 தமிழ் பிராமி எழுத்துகள் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழிப் பெயர்களும் உள்ளன.

“ஆப்கானிஸ்தானத்து பகுதியைச் சேர்ந்த சூது பவழத்தாலான மணிகளும், ரோமாபுரியைச் சேர்ந்த மட்பாண்டங்களும், வட இந்தியப் பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் ஊடறுத்துப் பாயும் பெருநகரமாக இது இருந்துள்ளது. தொழிற்சாலை. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அகழ்வாய்வு முடிவுறும் தறுவாயில் அதுவரை கிடைத்த பொருட்களை வைத்து இது நகரத்தின் குடியிருப்புப் பகுதியென எல்லாரும் உறுதிசெய்தனர். ஆனால் இந்த ஆண்டு அகழ்வாய்வுப் பணி அதற்குச் சில அடி துரத்திலேதான் நடந்துள்ளது. அங்கு கிடைத்துள்ள தடயங்கள் எல்லாம் பெரும் தொழிற்சாலை இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.

“வரிசைவரிசையான கால்வாய்கள், அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள். அந்தத் தொட்டிகளுக்குள் தண்ணீர் உள்செல்லவும் வெளிச்செல்லவுமான அமைப்புகள். அந்த கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறிதும் பெரிதுமான ஆறு உலைகள். கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள், மூன்று விதமான வடிகால் அமைப்பு, மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் இவையெல்லாம் முதன்முறையாகக் கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்குத் தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை. கீழடியில் இருக்கும் தொல்லியல் மேடு சுமார் 110 ஏக்கர் பரப்பைக் கொண்டது. அதில் அகழ்வாய்வு நடந்திருப்பது வெறும் 50 சென்ட் நிலப்பரப்பளவுதான்.

“மீதமிருக்கும் பெரும்பகுதியில் ஆய்வுகள் தொடருமேயானால், இந்த நகரத்தில் இருந்த பல்வேறு பகுதிகளை நம்மால் கண்டறிய முடியும் என்கின்றனர், இவ்வாய்வை நடத்திக் கொண்டிருக்கிற அம்நாத் இராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர்.

“1964இல்பத்துப்பாட்டு ஆராய்ச்சியை மிக விரிவாகச் செய்து முடித்த தமிழ்ப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார், பழந்தமிழ் இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, சிலப்பதிகாரம் மற்றும் திருவிளையாடல் புராணம் ஆகியவற்றின் அடிப்படையில், “சங்ககால மதுரை என்பது இன்றுள்ள மதுரையல்ல, நமது இலக்கியக் குறிப்புகளின்படி அது திருப்பூவணத்துக்கு நேர் மேற்கிலும் திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கிலும் அமைந்திருக்கவேண்டும். அதனை ஆய்வுகளின்மூலம்தான் கண்டறிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“அவரது குறிப்பு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெரும் உண்மையை நெருங்க வழிகாட்டுகிறது. சங்க இலக்கியம் சொல்லும் அதே புவியியல் அமைப்பில்தான் இன்று அகழ்வாய்வு நடக்கும் இடம் இருக்கிறது. இவ்வளவு துல்லியமான புவியியல் ஆதாரமும், எண்ணிலடங்கா தொல்லியல் ஆதாரங்களையும் இணைத்துப் பார்க்கையில் இதுவே சங்ககால மதுரையாக இருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாக என்னைப்போன்ற பலரும் கருதுகிறோம்.

என்ன செய்ய வேண்டும்?

“110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம், பழந்தமிழ் நாகரிகத்தின் பேரடையாளங்களைத் தனது மார்போடு இறுக அணைத்து வைத்திருக்கிறது. அவற்றை இழந்து விடாமல் இவ்விடத்தைப் பாதுகாக்க வேண்டும். மாநில அரசும் இங்கு அகழ்வாய்வுப் பணியைத் தொடங்க வேண்டும். இவற்றையெல்லாம் விட மிக அவசரமாகச் செய்யவேண்டிய ஒரு பணி, கள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்குவது. அது உருவானால்தான், இங்கு கண்டறியப்பட்டுள்ள இந்தத் தொல்பொருட்கள் எல்லாம் பார்வைக்கு வைக்கவும் பாதுகாக்கவும் படும். இல்லையென்றால் மத்திய அகழ்வாய்வுப் பிரிவின் கிட்டங்கி இருக்கிற மைசூருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, சாக்கு மூட்டைகளுக்குள் இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இருக்க வேண்டி வரும். கள அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய தொல்லியல் துறை தயாராக இருக்கிறது.

“அதற்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. இந்தக் கசப்பான உண்மையைச் சில நாட்களுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு கூட்டததில் நான் பேசினேன்.

“கூட்டம் முடிந்ததும் என்னருகே வந்த ஒரு இளைஞர், “அய்யா, நான் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். என் பெயர் கரு. முருகேசன். தமிழ்தான் எனக்குச்சோறு போடுகிறது. அகழ்வாய்வு நடக்கும் அதே கிராமத்தில் எனக்குச் சொந்தமான நிலம் இருக்கிறது. நான் அதனை மனமுவந்து தர முன்வருகிறேன். இவ்வரலாற்று பொக்கிஷத்தை எப்படியாவது காப்பாற்றி இங்கு காட்சிப்படுத்துங்கள்” என்று கண்கலங்கக் கூறினார்.

“ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களோ, அல்லது இருந்தவர்களோ, யாரேனும் தமிழ் தங்களுக்குச் சோறு போட்டது என்று நம்பினால் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முன்வாருங்கள். மைசூரை நோக்க லாரிகள் புறப்பட இன்னும் சில நாட்களே இருக்கின்றன.”