பதிவுகள் 19-09-2016

பதிவுகள் 19-09-2016

கன்னட நாட்டில் வெறியாட்டம் நடந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டும் உடமையிழந்தும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஓடிவந்த நிலையில் தமிழகத்தில் உலகத்துக்கே எடுத்துக்காட்டான முறையில் எந்த ஒரு அசம்பாவிமும் அற்ற அமைதியான பந்த் ஒன்று நடந்து முடிந்தது. மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து கர்நாடகாவை விசாரணைக்கு உட்படுத்தியிருப்பது மகிழ்ச்சியான செய்தி.
1991இலும் இதுபோலவே மிக மோசமான பாதிப்பு நடந்தது. ஆனால் எந்த அரசும் இது பற்றிக் கவலைப் படுவதில்லை.
மத்திய அரசு முன்வந்து காவிரிப் பிரச்சினையைத் நிரந்தரமாகத் தீர்த்தால்தான் உண்டு. எத்தனை நாளைக்குத்தான் இடைக்காலத் தீர்ப்புகளையும் ஆணையங்களின் பரிந்துரைகளையும் உச்சநீதிமன்ற வழக்குகளையும் நம்பிக் கொண்டிருக்க முடியும்? ஆனால் அவ வாழ்வுடைய அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் பயன்பட மாட்டார்கள். மீனவர் பிரச்சினை எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது? நிரந்தரமாகத் தீர்ப்பதில் யார் அக்கறை காட்டுகிறார்கள்? இன்னும் இதுபோல எத்தனையோ…
””””””””””””””””””””””””
தமிழகத்தைவிட்டு சுற்றுலாவுக்காகக் காரில் பிற மாநிலங்களுக்குச் சாதாரண, அமைதியான சமயங்களில் செல்லும்போதுகூட பகீரென்றுதான் இருக்கிறது. இதை உணராதவர்கள் இருக்க முடியாது. இதுதான் இந்திய ஒற்றுமை.
மாநில எழுத்துகள் இட்ட பதிவெண்களை (TN, AP, MH, KA இதுபோல) வாகனங்களுக்குத் தருவதற்கு பதிலாக IN என்று மட்டுமே எழுத்துகள் இட்ட, காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, அருணாசல் முதல் கட்ச் வரை, நாள் வரிசைப்படி எண்ணிட்ட பதிவெண்களை வழங்கினால் உடனடித் தாக்குதல்கள் குறையும். மேலே சொன்ன பகீர் உணர்ச்சியும் குறையும். லாரி முதலிய வாகனங்களும் அதிகத் தாக்குதலுக்கு உள்ளாகாது.கணினி வாயிலாகத் தகவல்அடிப்படைகள் பகிர்ந்து கொள்ளப்படும் இந்நாட்களில் இது ஒன்றும் கடினமல்ல.
”””””””””””

கர்நாடகாவில் தமிழ்ப்படங்களை ரிலீஸ் செய்வது பிரச்சினைதான், இப்போதோ தமிழ் சேனல்களையே தடைசெய்திருக்கிறார்கள். ஆனால் நம்மூர் பிழைப்பு கேபிள்களோ கர்நாடக சேனல்களைத் தடைசெய்யவும் இல்லை (எங்கள் ஊரிலேயே கேபிள் டிவியில் கன்னட சேனல்கள் வருகின்றன) அதைவிட மோசம், நம்மூர் பிழைப்புத் தொலைக்காட்சிகள் இப்போதுதான் மும்முரமாகக் கன்னட நடிக நடிகையர் நடித்த படங்களை தினமும் போட்டுக்கொண்டிருக்கின்றன. (மானம் சூடு சுரணை…)  எத்தனையோ நாட்களாக இந்துமய நிகழ்ச்சிகளும் மூடநம்பிக்கை நிகழ்ச்சிகளும் வடநாட்டு சீரியல்களும், பிற மொழி டப்பிங் படங்களும் இவற்றில் வாடிக்கைதான். ஆனால் சந்தர்ப்பம் அறிந்துகூட இவற்றால் நடந்துகொள்ள முடியவில்லை! தமிழர்கள் சினிமாப் பைத்தியங்கள், எது கிடைத்தாலும் அள்ளி விழுங்குவார்கள் என்ற மனப்பான்மை முக்கியமாக…கேட்டால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பார்கள், பாவம்.

தினம்-ஒரு-செய்தி