இரண்டு ‘பால’க் கலைஞர்கள்

திரு. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு தவிர்க்க இயலாமல் எனக்கு வீணை எஸ். பாலச்சந்தரின் நினைவுகளைக் கொண்டுவந்தது. பாலமுரளியின் அளவுக்குப் புகழும் விருதுகளும் பெறாவிட்டாலும் அவரும் ஒரு ‘வெர்சடைல்’ ஆளுமைதான். வீணை வித்வான் என்பதைத் தவிர, நடிப்பு, இசையமைப்பு, படங்களைத் தயாரித்தல், இயக்குதல் எனப் பல துறைகளிலும் ஈடுபட்டவர். குறைந்தது ‘அந்த நாள்’ படம்முதலாகப் பங்களித்தவர். “உல்லாசமாகவே உலகத்தில் வாழவே….வேண்டும் கல்யாணம் கல்யாணம்” என்று வி.கே. ராமசாமியுடன் அவர் ஆடிப்பாடும் காட்சியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்தக்கால நடிகர் நாசர் அந்தக்காலத்தில் இருந்ததுபோன்ற முகஅமைப்பும் உடலமைப்பும். ‘மிஸ்டரி த்ரில்லர்’ வகைப் படங்களைத் தயாரித்து இயக்குவதில் ஓர் ஆர்வம். ‘பொம்மை’ படம் இன்றும் நினைவில் நிற்கிறது. அதில் முதன்முதலாக கே.ஜே. ஜேசுதாசை அறிமுகப்படுத்தி, “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்று பாடவைத்தவர். அதே படத்தில் “எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனத்தைக் கவர்ந்தவராம்” போன்ற அற்புதமான இசையமைக்கப்பட்ட பாடல்களை மறக்கவும் முடியாது.
சரி, இதில் பாலமுரளி எங்கே வருகிறார் என்கிறீர்களா? ஒரு நாற்பது வருஷம் முன்னால் இரண்டுபேருக்கும் ஒரு தொடர்ந்த சண்டை-‘ஃப்யூட்’ இருந்தது. அவ்வப்போது பாலமுரளி கிருஷ்ணா ‘நான் இந்த ராகத்தைக் கண்டு பிடித்தேன், அந்த ராகத்தைக் கண்டுபிடித்தேன்’ என்று அறிக்கைவிடுவார். பாலச்சந்தர், ‘அதெல்லாம் முன்னாலேயே உள்ளதுதான், புதுசு அல்ல, விளம்பரத்திற்காக இப்படிச் செய்கிறார்’ என்று எதிர் அறிக்கைவிடுவார். ஸ்வரங்களின் பெர்ம்யூடேஷன் காம்பினேஷன்கள் தானே இராகங்கள்? இந்தக் கணக்குகளை எல்லாம் அந்தக் காலத்திலேயே போட்டு லட்சக்கணக்கான ராகங்கள் (அவற்றில் பத்துப் பதினைந்தைத் தவிர யாரும் பாடுவதில்லை) இருக்கிறதென்று நம் புத்தகங்களில் முன்னாலேயே எழுதி வைத்து விட்டார்கள். நானும் பாலச்சந்தர் கட்சிதான். இந்த வாத-எதிர்வாதங்களுடைய ஸ்வாரஸ்யமான விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதற்குப் பிறகுதான் பாலமுரளி தமிழ்ப்படங்களில் சில பாடல்கள் பாடினார். பாலச்சந்தரின் மறைவோடு இவையெல்லாம் மறைந்துபோயின.

தினம்-ஒரு-செய்தி