இலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்

இலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்

காற்றிலிருந்தும், மேகத்திலிருந்தும், வானத்திலிருந்தும்
தேவி இறங்குகிறாள்
தன் தெய்விகக் கண்களால் ஸ்ரீலங்காவின் துயரங்களைக் காண்கிறாள்
தன் காற்சிலம்பைக் கழற்றித் தோள்மீது சுமந்துவருகிறாள்
காற்றின், மேகத்தின், பூக்களின் தெய்வமே, பத்தினியே வா!
-பஹன் பூஜாவா (தீபங்களை ஏற்றுதல்) என்னும் வழிபாட்டின் போது பாடப்படும் பாட்டு. கம்மடுவா சடங்குப் பிரதிகளிலிருந்து ஆங்கிலத்தில்: Gananath Obeyesekere, Cult of the Goddess Pattini (Chicago: 1984)

இன்று அவள் செல்வாக்கு இலங்கையில் தொடர்ந்து காணப்படுகிறது. கிழக்கிலும் வடக்கிலும் உள்ள இந்துக்களுக்கு அவள் கண்ணகி அம்மன். ஆனால் தீவின் எல்லாப்பகுதிகளிலும் உள்ள, அவர்களைவிட எண்ணிக்கையில் மிக அதிகமான சிங்கள பௌத்தர்களுக்கு அவள் ‘பத்தினி அம்மா’. (மேற்படி நூல்).
கண்ணகி வழிபாடும் சிலப்பதிகாரமும்

இந்தியாவில் இன்று ஒரே ஒரு கண்ணகி கோயில்தான் உள்ளது, அதுவும் தமிழ்நாட்டில் இல்லை, கேரளத்தில் உள்ளது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். திராவிட இயக்கம் கண்ணகியைப் போற்றிப் புதிய பூம்புகார் எழுப்பினாலும், கண்ணகிக்குச் சிலை வைத்தாலும், நாடகம் நிகழ்த்தினாலும், திரைப்படம எடுத்தாலும், கண்ணகி வழிபாடு தமிழ்நாட்டில் மறுபடியும் கால்கொள்ளவில்லை. காரணம், இங்குள்ள பார்ப்பன ஆதிக்கமே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கேரளத்தில் கண்ணகி வழிபாடு பகவதி வழிபாடாக மாறி நிலைபெற்றுள்ளது.

இலங்கையில் நிலவும் கண்ணகி கதையும் வழிபாடும் தமிழ் நாட்டிலிருந்து பரவியவை என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. ஆனால் எக்காலத்தில் பரவின என்பது பற்றி மிகுந்த கருத்து வேறுபாடு காணப்படுகிறது.

சேரநாட்டில் செங்குட்டு வன் கண்ணகிக்குக் கோயில் கட்டி விழா எடுத்தபோது, கயவாகு வேந்தன் இலங்கையிலிருந்து சேரநாடுவந்து அவ்விழாவில் கலந்துகொண்டதோடு திரும்பிச்சென்று ஈழநாட்டில் கண்ணகி வழிபாடு நிலைபெறவும் வழிவகுத்தான் என்பர். இச்சம்பவங்களைச் சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையும் உரைபெறு கட்டுரையும் குறிப்பிடுகின்றன.

சிங்கள நூல்களில் இக்கருத்து வெவ்வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாவம்சத்திலும் தீபவம்சத்திலும கயவாகு (கஜபாஹு) மன்னன் பற்றிக் குறிப்பு இருந்தபோதும், தமிழகத்திலி ருந்து கண்ணகி வழிபாட்டைக் கொண்டுவந்த செய்தி அவற்றில் சொல்லப்படவில்லை.

இராஜவழி என்னும் நூல், முதலாம் கஜபாகு சோழநாட்டின் மீது படையெடுத்தபோது சேரநாட்டில் கண்ணகி வழிபாட்டில் கலந்து கொண்டான், கண்ணகி படிமம் ஒன்றையும், கண்ணகியின் சிலம்பையும், விஷ்ணு, முருகன், சிவன் படிமங்களையும் கொண்டுவந்தான் என்பதோடு, சோழநாட் டிற்கு முன்பே பிடித்துக்கொண்டு வரப்பட்ட 12000 சிங்களரை மீட்டுக்கொண்டும், மேலும் 12000 சோழமக்களையும் பிடித்துக் கொண்டும் இலங்கைக்குக் கொண்டு வந்தான் என்று சொல்கிறது. அவர்களை அவன் இலங்கையின் பல்வேறிடங்களில் (குறிப்பாகக் கொழும்பு, கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த ஊர்களில்) குடியேற்றி னான் என்றும் தெரிகிறது. சிலர் கஜபாகு இலங்கைக்குத் திரும்பும்போது சம்புத்துறை வழியாக வந்து கந்தரோடைக்கு அண்மையிலுள்ள அங்கணாங்கடவையில் கண்ணகி கோயிலை அமைத்து அதன் முற்றத்தில் தனது உருவச் சிலையையும் நிறுவினான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். (சி. ராசநாயக முதலியார், Ancient Jaffna, ப.74)

இலங்கையை ஆண்டவர்களில் இரண்டு கஜபாகு மன்னர்கள் உள்ளனர். முதலாம் கஜபாகு காமனி, கி.பி. இரண்டாம் நூற்றாண் டைச் சேர்ந்தவன் (112-134). இவனே சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் படுபவன் என்பது வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து. இரண்டாம் கஜபாகு, பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். அவன் காலமும் சிலப்பதிகாரக் காலமும் ஒத்துவரவில்லை. சிலப்பதிகாரத்தின் காலத்தை எவ்வளவு பிற்படுத்தினாலும் பன்னி ரண்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டுவருவது இயலாது என்பதால், இவன் காலத்தில் கண்ணகிவழிபாடு இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது.

சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பு, கஜபாகு வின் தமிழ்நாட்டுப் படையெடுப்பு ஆகியவற்றைக் ‘காலனியத் தொன்மங்கள்’ என்று புறக்கணிக்கிறார், டாக்டர் கணநாத் உபயசேகர. இவர் Cult of Goddess Pattini (1984) என்னும் நூலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்தபோது உருவாக்கி யவர். இப்போது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக உள்ளார். இவருடைய கருத்துப்படி, கண் ணகி வழிபாடு, கேரளத்திலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் இலங்கையில் பரவியது.

அண்மையில் பாலா சுகுமார் (2009) என்பவர் வேறொரு வாதத்தினை முன்வைக்கிறார். பௌத்தத்தில் பத்தினிக் கடவுள் ஏற்புப் பற்றிப் பொதுவாக இராஜவழி சொல்லும் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் அவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் இயற்றியதுவரை (சங்ககாலம் உட்பட) தமிழகமும் இலங்கையும் இணைந்த நிலப்பரப்பாகவே இருந்தன; பிறகு கடல் கொந்தளிப்பினால் இரண்டும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன என்கிறார். இராமேஸ்வரப்பகுதிக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமற்ற கடற்சந்தி-அதுவும் ஏறத்தாழ முப்பது கி.மீ. தூரம் அளவே இருப்பதும், சிலப்பதிகாரத்திற்குப் பிறகு மணிமேகலையில் கடற்கோள் நடந்த குறிப்பு இடம் பெறுவதும், சங்கக் கவிஞர்களில் ஈழத்துப் பூதன்சேந்தனார் போன்றவர்கள் இடம் பெற்றிருப்பதும் எனப் பலசான்றுகள் ஒருகாலத்தில் இவை இணைந்த பகுதிகளாக இருந்திருக்கலாம் என்பதற்கு உள்ளன. இணைந்த பகுதியாக இலங்கை இருந்தபோது தமிழகத்திற்கும் அதற்குமிடையில் வழக்கமான போக்குவரத்து நிலவிய காரணத் தினால் கண்ணகிவழிபாடு எளிதில் தமிழ்நாட்டிலிருந்து பரவியிருப்பதில் ஆச்சரியமில்லை. இலங்கை பிரிந்தபின்னும் கண்ணகி கதையும் வழிபாடும் அங்கே அப்படியே நிலைத்துவிட்டன என்பது அவர் கருத்து.

இன்னும் சிலர் கயவாகு மன்னன், காரவ என்னும் கேரளக் குடும்ப வழியிலிருந்து வந்தவன் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால் சிலப்பதிகாரத்திலிருந்து கண்ணகி வழிபாடு ஏற்பட் டதா, அதற்கு முந்தியே இருந்ததா என்பது கேள்விக்குரியது. கண்ணகி கதை சிலப்பதிகாரத்திற்கு முன்பே இருந்தது என்பதில் ஐயமில்லை. சான்றாக, பேகன் மனைவி கண்ணகி, ஒருமுலை குறைத்த திருமாவுண்ணி போன்ற கதைகள் உள்ளன. இவற் றையும், இவை போல்வனவற்றையும் வைத்து (நமக்குக் கிடைக் காத பல சான்றுகளும் செய்திகளும் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவடிகளுக்குக் கிடைத்திருக்க வாய்ப்புண்டுதானே?) மிக அருமையான ஒரு காப்பியத்தை இளங்கோவடிகள் கற்பனையில உருவாக்கியிருக்கிறார் என்று கொள்ள இடமுண்டு. ஆனால் கண்ணகி வழிபாடு என்பது தொடர்ந்த ஒரு நிகழ்வாக அன்றைய தமிழகத்தில் இருந்திருக்கலாம். வைதிக சமயம் மறுமலர்ச்சி பெற்றபோது அது வழக்கற்றுப் போயிருக்கலாம்.

இலங்கையில் கண்ணகிவழிபாடு

கண்ணகி வழிபாடு, இலங்கையில் புகுந்தபின் கண்ணகிக் கோயிலோ பத்தினிக் கோயிலோ இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்குப் பரவியிருக்கிறது. தமிழர்களிடையில் கண்ணகி அல்லது கண்ணகை வழிபாடாகவும், பௌத்தர்கள் மத்தியில் பத்தினி வழிபாடாகவும் அது விளங்குகிறது. ஐரோப்பியர் வரு கைக்குப் பின் கண்ணகி கோயில்கள் அழிக்கப்பட்டு, இந்துமத மறுமலர்ச்சிக்குப்பின் அவை உருமாற்றப்பட்ட பின்னரும், அவை மிகுதியாகவே இருந்தன. இறுதியாக உள்நாட்டுப்போரின்போது விடுதலைப் புலிகள் தங்குமிடமாக அவை இருந்ததால், சிங்கள இராணுவத்தினரால் பெரும்பகுதி அழிக்கப்பட்டன. இப்போது புதுப்பித்தற்பணி ஒருசில பகுதிகளில் நிகழ்ந்து வருவதுபோல் தோன்றுகிறது.

இத்தனைக்குப் பின்னும், நாடு முழுவதும் கண்ணகி கோயில்கள் பரவியிருந்தபோதும், கிழக்கு, வடக்கு மாகாணங்களில்தான் பல கோயில்கள் செறிந்துள்ளன. “கிழக்கு மாகாணத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் 60 கோவில்கள் உள்ளன. நாங்கள் இதுவரை 300 கோவில்களைப் பார்த்தோம். மேற்கு மாகாணத்தில் கத்தோலிக்கர்கள் வருகைதரும் கோவில் ஒன்று உள்ளது, அங்கே நிறையப் பணிகள் நடக்கவேண்டியுள்ளது” என்று மாலதி டி ஆல்விஸ் என்னும் மானிடவியல் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

அ. யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாடு
எது முதன்முதல் ஏற்பட்ட கண்ணகி கோயில் என்பதில் பல விதக் கருத்துகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் வேலம்பரையிலுள்ள கண்ணகிகோயில்தான் முதலில் ஏற்பட்டது, பின்னர் களையோ டை, அங்கணாங்கடவை முதலிய இடங்களில் ஏற்பட்டன என்பர். அனலைத்தீவு, வற்றாப்பளை, கிரிபாய், சங்கு வயல், கோலங் கிராய், உருப்பளை முதலிய இடங்களில் ஆரம்பத்தில் இருந்தன. இவை பற்றி நாட்டார் பாடல்கள் உள்ளன. சான்றாக,

சீர்கொண்ட மதுரைநகர் மானு மாந்தையடு
செம்பர் குடமொடு மாங்கனிதாகி
செழியனொடு வாதாடி சிலம்பினால் தீபரப்பி
வார்கொண்ட அனலத் தீவிலிருந்து
மைகொணாப்பதியில் வீழ்ந்து பேரிடி கொண்டிடப்
பதியை மிக்க தனதாக்கிப் பின்னரும் வாலபரால்
பேசும் தோற்றாவூர் உருப்பளை அம்பாளை ஆறத்தி
திரிபாய்யோங்கு வற்றாப்பளையில் உப்புத்
தண்ணீரை விளக்கெண்ணெய்யாக்கியே எங்கெங்கும்
அங்கதாய் நின்ற இறைவி கண்ணகை அம்மனே

என்று ஒரு நாட்டுப்பாடல் குறிப்பிடுகிறது. (வை. கனகரத்தினம்)
யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாடு பரவியமைக்குச் செவி வழிச் செய்திகளே ஆதாரமாக உள்ளன. வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஒரு செவிவழிச் செய்தி பின்வருமாறு:

கண்ணகி தன் ஆற்றலினால் வெட்டுண்டு கிடந்த கோவலனை எழுப்பினாள். அவன்,

“மாதவியோ கண்ணகியோ வந்தவர்கள் படுகளத்தில், மாதவியாள் வந்தாலே வாடி என் மடிமேல்”

என்று கூறினானாம். இதனைக் கேட்ட கண்ணகி மனம் நொந்து தன்னை ஐந்தலை நாகமாக மாற்றி, மதுரை நகரிலிருந்து தெற்குநோக்கி ஊர்ந்து சென்று முதலில் நயினாத் தீவில் தங்கினாள். பின்னர் வட்டுக்கோட்டை வழியாகப் பிற ஊர்களுக்கும் சென்று தங்கினாள்
என்பர் (சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமரிசனம்). கற்பு, வீரம் என்னும் பண்பு களைக் கொண்டிருந்த கண்ணகி, கொற்றவையின் வடிவமாக வணங்கப்பட்டாள். அவளுடைய வழிபாடு ஆரியச் சக்ரவர்த்திகள் காலத்தில் வடக்கில் மிகவும் பெருகியது என்பர்.

மட்டக்களப்பு, திரிகோண மலைப்பகுதியிலும் கண்ணகி வழிபாடு பெருவழக்காக இருந்தது. இதனால் கண்ணகி வழிபாட்டின் தாயகமே மடடக்களப்புதானோ என்று ஐயம் பிறக்கும் அளவு உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கண்ணகி நேராகத் தமிழகத்திலிருந்து மட்டக்களப்புப் பகுதிக்கு வந்ததாகக் கதைகள் உள்ளன. சி. கணபதிப்பிள்ளை (1979) ‘பத்தினி வழிபாடு’ என்னும் நூலில் மட்டக்களப்புப்பகுதிக்குக் கண்ணகி வந்ததைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

பாண்டியன் வெற்றிவேற்செழியன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி உருவ மும் ஒரு சிலம்பும் சந்தன மரத்தாற் செய்த பேழையில் வைத்து யானை யில் ஏற்றி வேதாரணியத்தில் கொண்டுவந்து விட்டான். அங்கிருந்து கப்ப லில் காரைத்தீவுக்கும் கீரிமலைக்கும் இடையிலுள்ள திருவடிநிலையில் இறங்கினார்கள். அங்கிருந்து யானை ஊர்வலம் மாகியப்பிட்டி வழியாய் அங்கணாரைக் கடவைக்கு வந்தது. அங்கே முதலாவது ஆராதனை நடத்தப் பட்டது. அங்கிருந்து நாவற்குழியை அடுத்துள்ள வேலம்பறை என்னுமிடத் திற்கு வைகாசிப் பூரணையன்று வந்துசேர்ந்தது….
எனக் கூறி, அங்கிருந்தும் பலப்பல ஊர்களுக்குக் கண்ணகியம்மன் பெட்டி சென்றதை எடுத்துரைக்கிறார்.

ஆனால் இக்கருத்தைப் பலர் ஏற்பதில்லை. யாழ்ப்பாணம் வழி யாகவே கிழக்குப் பகுதிக்கும் தென்பகுதிக்கும் கண்ணகி வழிபாடு பரவியது என்று வலியுறுத்துவோர் மிகுதி. இன்னும் சிலர் தம்பிலுவில் கண்ணகிகோயிலே மிகப் பழமையானது என்று கூறுகின்றார்கள்.

பெருவழக்காயிருந்த கண்ணகி வழிபாடு, இரண்டு காரணங்களால் நலிவடையலாயிற்று. யாழ்ப்பா ணப்பகுதியிலும் மேற்குப் பகுதியிலுமிருந்த கண்ணகி கோயில் களையெல்லாம் போர்ச்சுகீசியர் செயின்ட் ஆன் கோவில்களாகவும், மாரியம்மன் கோயில்களையெல்லாம் செயின்ட் மேரி கோவில்களாகவும் மாற்றினர் என்று வரலாறு சொல்கிறது. இன்றும் சில கிறித்துவ மாதா கோவில்களுக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் கண்ணகியை வழிபடுகின்ற பழைய நினைவி லேயே சென்று வருகின்றனர் என்று மானிடவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Both Buddhist and Hindu devotees we met mentioned that the revered Catholic shrine to the Virgin Mary at Madhu was originally a Kannaki-Pattini shrine
என்று மாலதி டி ஆல்விஸ் குறிப்பிடுகிறார். இவர் 2013 இறுதியில் ஆய்வுநடத்தியவர்.

கண்ணகி வழிபாடு வடக்கில் நலிவடைய முக்கியமான இன்னொரு காரணம், ஆறுமுக நாவலர் தலைமையிலான ஆகம வழிபாட்டு எழுச்சி. அவர் கண்ணகியை ‘இழிந்தோர் தெய்வம்’ என் றும், ‘சமணசமயச் செட்டிச்சி’ என்றும் இழித்துரைத்து, யாழ்ப்பாணத்திலிருந்த கண்ணகி கோவில்களை துர்க்கை, ராஜராஜேஸ் வரி, புவனேஸ்வரி, பராசக்தி கோயில்களாக மாற்றச் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆ. சிங்களப்பகுதிகளில் பத்தினிவழிபாடு
தமிழ்பேசும் கேரள பௌத்த வணிகர்களும் வஞ்சிப்பகுதியிலி ருந்து இலங்கைக்குச் சென்ற பிற மக்களும்தான் இலங்கைக்குப் பத்தினிவழிபாட்டைக் கொண்டுவந்தவர்கள் என்பது டாக்டர் உபய சேகரவின் கருத்து. தென்னிலங்கையில் வழங்கும் புராணக் கதை களில் “பத்தினிவழிபாடு சேரமான் ஏற்படுத்தியது” என்று கூறப்படுகிறது. கேரளாவைச்சேர்ந்த மகாநாவரா, அழகக்கோனாரா என்னும் இரண்டு குடும்பங்கள் இலங்கைக்குச் சென்று அதன் மேற்கு, மத்தியப் பகுதிகளை ஆதிக்கம் கொண்ட போதுதான் இந்த வழிபாடு நிலைபெற்றது என்கிறார் அவர். இது ஏறத்தாழ பதினான்காம் நூற்றாண்டு முதலாக நிகழ்ந்திருக்கலாம்.

கி.பி. 1344ஐச் சேர்ந்த கல்வெட்டொன்று அழகக் கோனாரா குடும்பத்தினர் வஞ்சியிலிருந்து 1100 அளவில் வந்தார்கள் என்ற தகவலைத் தருகிறது. இந்த இரு குடும்பத்தினரும் அரசவையைச் சேர்ந்த பிரமுகர்களாக வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்.

மகாநாவரா என்ற சொல், மாநாய்கன் என்ற சொல்லை நினைவூட்டுகிறது. மகா என்பது மா என்று தமிழில் ஆகும். நாய்கன் என்பவன் நாவாய்களின் தலைவன். நாவரா என்பதன் பொருளும் அதுவே. அழகக்கோன் என்ற பெயரும் தூய தமிழ்ப் பெயராகவே காணப்படுகிறது. ஒருவேளை இந்த இரு குடும்பங் களும் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்குச் சென்று அதன்பின் இலங்கைக்குச் சென்றவர்கள் ஆகலாம்.

மகாநாவராக்கள் தடிகாமவிலும், கண்டியருகிலுள்ள கம்போலா விலும் செல்வாக்கு மிகுந்திருந்தனர். அழகக்கோனாராக்கள் தங்க ளை ரய்கமவில் இருத்திக் கொண்டு, தெற்கிலும் தென்மேற்கிலும் உள்ள பெருவெல, தேவுந்தர, வெலிகம என்ற துறைமுகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இப்போது மேற்கில் சபரகமுவ எனப்படும் பகுதியும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது என்றும், வெள்ளை யானை அவர்களின் சின்னமாக இருந்தது என்றும் இபின் பதூதா குறிப்பிடுகிறான். இந்த இரு குடும்பத்தினருமே பௌத்தர்கள். ஆகவே பத்தினியை ஒரு போதிசத்துவர் நிலைக்கு உயர்த்தினார்கள்.

ஸ்ரீலங்காவின் பௌத்தக் கடவுளர்களான போதி சத்துவர் வரிசையில் உள்ள ஒரே பெண் கண்ணகிதான். பிறகு அவள் இலங்கையின் காவல் தெய்வமாகவும் ஆனாள்.

At Dalada Maligawa in Kandy, Sharni presents a procession of the deity. “The fact that she found a place in Dalada Maligawa, most important site for the Buddhists as it stores his tooth relic, implies her significance and acceptance within the Sinhalese Buddhist pantheon,”

இக்குறிப்பைத் தருகின்ற ஷார்னி ஜெயவர்த்தனா என்பவர் இலங்கையைச் சேர்ந்த நிழற்படக்காரர்.
பதினைந்தாம் நூற்றாண்டில் ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட் சியில் முறைப்படி பத்தினி, இலங்கையின் பொது தெய்வமாக அங்கீகாரம் பெற்றாள். பராக் கிரமபாகு, மகாநாவரா குடும்பத்தின் உறவினன் என்று சொல்லப்படுகிறது.

பத்தினி வழிபாட்டுக்கான சிங்களப் பாடல்கள் முதலில் தமிழிலேயே இருந்தன என்று உபயசேகர குறிப்பிடுகிறார். மாத்தளை மாவட்டத்தில் water cutting எனப்படும் சடங்கில் பாடப்படும் பாடல்களில் இது வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. ஒரு பாட்டில், “புலவர் இளங்கோ இந்தப் பாக்களைத் தமிழில் யாத்தார்” என்று வருகிறது.

கண்ணகி வழிபாடு முன்பே கூறியதுபோல, கிழக்குப் பகுதியில் மட்டக்களப்புப் பகுதியிலிருந்துதான் மிகுதியாக உள்ளது. இப்பகுதிக்கு ஆரம்பத்திலிருந்தே கேரளத் தொடர்பு காணப்படுகிறது என்பது ஒரு காரணம். இன்றும் அம்பாறை, மட்டக்களப்புப் பகுதியிலிருக்கும் தமிழர்கள், முஸ்லிம்கள் யாவரிடமும் கேரளச் செல்வாக்கு உள்ளது. இவர்கள் வடக்குக் கேரளத்திலிருந்து வந்த வர்கள் என்கிறார் உபயசேகர. கேரளத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூக அமைப்பு இன்றும் இங்கு உள்ளது. இத்தாய்வழிச் சமூகத்தினர் குடி எனப்படுகின்றனர். மட்டக்களப்பு முஸ்லிம்களில் இன்றும் பெண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு சொத்துரிமை உள்ளது, அது திருமணத்தின்போது வரதட்சிணையாக அளிக்கப் படுகிறது. கணவனும் மனைவியின் குடும்பத்தில் வாழ்வதே வழக்கமாக உள்ளது.

மத்தியப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இவ்விதம் தாய்வழிச் சமூக அமைப்பு வெளிப்படையாகக் காணப்படவில்லை என்றா லும், சடங்குகளில் அது வெளிப்படுகிறது என்கிறார்கள். இத் தாய் வழி அமைப்புகள், வழிபாட்டிலும் கோயில்களிலும் பங்குவகிக் கின்றன. கோயில்களின் தலைவர்கள் வண்ணக்கர் எனப்படுகிறார் கள். முஸ்லிம்களாயின் மரைக்கார் எனப்படுகிறார்கள். கோயில் சடங்குகளில் இவர்களுக்குப் பங்கிருக்கிறது.

குளிர்த்தி எனப்படும் வழிபாட்டு முறையில் (தெய்வத்தைக் குளிர்ச்சி செய்தல்) தமிழர்களாயினும் சிங்களர்களாயினும் அபாய கரமான வீரவிளையாட்டுகளிலும் போட்டிகளிலும் ஈடுபடுகிறார் கள். நோய்களைப் போக்கும் தெய்வம் என்று கண்ணகி நம்பப்படு கிறாள். எனவே சிங்களர்களும் முஸ்லிம்களும்கூடக் குளிர்த்தி வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.

தமிழ்பேசும் கிழக்குப் பகுதிக்கும் தெற்குச் சிங்களர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துவந்திருக்கிறது. வெறும் வணிகத் தொடர்பு மட்டுமல்லாமல், பிந்தணப் பகுதியின் உயர் சிங்களக் குடியினர், தமிழ் முக்குவர் குலத்தோடு மணத்தொடர்பு வைத்தி ருந்தார்கள், இதனால் அவர்கள் கண்டி ராஜ்யத்தில் பெருந் தலைவர்களாகவும் இருந்தார்கள். 1815இல் கண்டி ராஜ்யத்தை அழித்து பிரிட்டிஷ்காரர் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். இந்த இழப்பினை இன்றும் கண்டி ராஜ நாடகம் என்ற நாட்டார் கூத்தின் வழி வெளிப்படுத்துகிறார்கள் என்று ரெக்ஸ் காசிநாதர் என்னும் ஆய்வாளர் தெரிவிக்கிறார். இதனாலும் தமிழர்கள் வழிபாடான கண்ணகி வழிபாடு சிங்களர்களுக்கிடையே பரவியது.

தமிழ் மக்களை விட சிங்களர்கள் பத்தினித் தெய்வத்தின்மீது கொண்ட பக்தியும் ஈடுபாடும் மிகுதி. வைதிக பௌத்தர் களும் குருமார்களும் பீதியடையும் அளவிற்கு சிங்கள மக்களிடத்தே பத்தினித் தெய்வ வழிபாடு சிறப்புற்று விளங்கிவந்தது என்பர்.

கண்ணகி வழிபாட்டு நூல்கள்
தமிழ்நாட்டைவிட, ஈழநாட்டில் கண்ணகி வழிபாடு மிகுதி என்பதால் அங்குத் தோன்றிய நூல்களும் மிகுதி.
தமிழ் நூல்கள்
தமிழில் சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு பலவித மான மாற்றங்களுடன் மூன்று கண்ணகை அம்மன் காதைகள் ஈழத்தில் நிலவுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணகை வழக்குரை காவியம், யாழ்ப்பாணத்தில் கோவலனார் கதை, வன்னி மாவட்டத்தில் சிலம்புகூறல் காவியம் ஆகியன இருப்ப தாகக் கூறப்படுகிறது. (இரா. வை. கனகரத்தினம், ஈழநாட்டிற் கண்ணகி வழிபாடு ஓர் ஆய்வு, 1986) கண்ணகி வழக்குரை என்ற நூல், பண்டிதர் வி. சீ. கந்தையாவால் பதிக்கப்பெற்று, காரைத்தீவு இந்துசமய விருத்திச் சங்க வெளியீடாக, 1968இல் வெளிவந்துள் ளது எனத் தெரிகிறது. கோவலனார் கதை என்ற நூல் பருத்தித் துறையில் அச்சிடப்பட்டு, 1962இல் வெளிவந்துள்ளது. சிலம்பு கூறல் காவியம் என்பது ஏட்டுப் பிரதியாகவே வழக்கில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. 1979இல் வற்றாப்பளை கண்ணகை அம்மன் மலரில் இது உரைநடை வடிவில் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. சி. கணபதிப்பிள்ளை 1971இல் யாழ்ப்பாணத்தில் மகா மாரித் தேவி திவ்வியகரணி என்னும் நூலில் இவை அனைத் தையும் ஒருங்கே சேர்த்து வெளியிட்டார். அவரே 1979இல் பத்தினிவழிபாடு என்ற நூலிலும் பல காவியங்களை வெளி யிட்டுள்ளார்.

இவை அனைத்தும் ஈழத்தமிழர்கள் பாராயணம் செய்யும் நூல்களாக விளங்குகின்றன. வைகாசி மாதம் கண்ணகை அம்மனின் ஒவ்வொரு கோவிலிலும் இவை படிக்கப்படுகின்றன. மேலும் காவியம் என்ற பெயரில் பல சிற்றிலக்கியங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவை வாய்மொழி மரபில் வந்து அச்சேறி யவை ஆகும். தம்பிலுவில் கண்ணகை அம்மன் காவியம், வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் காவியம், பட்டிமேட்டுக் கண்ணகை அம்மன் காவியம், பட்டிமேட்டுக் கண்ணகை அம்மன் மழைக் காவியம், பொற்புறா வந்த காவியம், தாண்டவன் வெளி கண்ணகை அம்மன் காவியம், ஊர்சுற்றுக் காவியம், தம்பிலுவில் மழைக்காவியம், காரைத்துவ கண்ணகை அம்மன் காவியம், மண்முனைக் கண்ணகை அம்மன் காவியம், செட்டிப் பாளையம் கண்ணகை அம்மன் காவியம், மழைக்காவியம் போன்ற நூல்கள் இப்படிப்பட்டவை.

கண்ணகை அம்மன் பற்றிப் பிரபந்த வடிவங்கள் பல எழுந்துள் ளன. பதிகம், ஊஞ்சல், பராக்கு, எச்சரிக்கை, வாலி, வாழி, விருத்தம், அகவல், கும்மி, தோத்திரம், அம்மானை முதலியவை. குளிர்த்தி, சிந்து வடிவங்களும் உள்ளன. இவற்றுள், பராக்கு, எச்சரிக்கை, வாலி, வாழி முதலியவை தமிழ்நாட்டில் நாம் கேள்விப்படாதவை. வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் பேரில் பதிகம், தோத்திரம், சிந்து, கும்மி, குளிர்த்தி ஆகியவை உள்ளன. ஊர் சுட்டாமல் பாடப்பட்டவையாக, கண்ணகை அம்மன் அகவல்,

கண்ணகை அம்மன் குளிர்த்தி போன்றவை உள்ளன., ஒவ்வொரு கண்ணகை அம்மன் கோவிலுக்கும் ஊஞ்சல் பாடலும் குளிர்த்திப் பாடலும் உண்டு.

பெருந்தெய்வங்களுக்கு எழுந்த இலக்கிய வடிவங்களுக்குச் சம மான காப்பிய சிற்றிலக்கிய வடிவங்களைக் கண்ணகை அம்ம னும் பெற்றிருக்கிறாள் என்பர்.

சிங்கள நூல்கள்
சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு சிங்கள இலக்கியத்தை மிகவும் வளப்படுத்தியுள்ளது என்று வரலாற்றுப் பேராசிரியர் நா. சுப்பிர மணியன் எடுத்துக்காட்டுகிறார். கம்பளைக்காலம், கோட்டைக் காலம், கண்டிக்காலம் என்ற காலப்பகுதிகளில் சிங்கள இலக்கி யங்கள் வளர்ச்சியடைந்தன. கோள்முற எனப்படும் சாகித்தியங் கள் உள்ளன. இவை பத்தினி ஆலயங்களிலே பாடுவதற்காக சிங்கள மொழியிலே இயற்றப்பட்ட காவியங்கள் என்பர் (நா. சுப்பிரமணியன், சிலம்புச் செல்வியும் சிங்கள இலக்கியமும், இரண்டாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு மலர், சென்னை).

வயந்திமாதேவி கத்தாவா, பஸ்கிஸ் கோள்முற (முப்பத் தைந்து நூல்கள் அடங்கியது), பாண்டி நுளுவ, மெரிம, வேசிமடம், பாளங்க ஹெல்ல, பத்தினி ஹெல்ல, வித்திய சத்பத்தினி கத்தாவ, அம்பபத்தினி உபத்த, அம்பவதுமன, பத்தினி யாதின்ன, தெதரத்தின மாலய, தொளஸ்தெஸ சாந்திய, பாண்டி நெத்த சுமக்கு உபத்த, கண்ணூரகத்தாவன், தெத்பத்தினி, சிலம்பகதா, பத்தினி படிமா போன்ற நூல்கள் பத்தினி தெய்வத்தின் தெய்வாம்சத்தை விளக்குவன.

4. கண்ணகி ஓர் இலட்சிய வடிவம்

மெரிலின் கிரைசில் என்ற அமெரிக்கப் பெண்மணி சிறுகதைத் தொகுதிகளுக்காகப் பல பரிசுகள் பெற்றவர். அவர் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை வைத்து The Fire Inside என்னும் கதையை எழுதியுள்ளார். அதற்காக 2008இன் ரிச்சட் சலிவன் பரிசைப் பெற்றிருக்கிறார். மட்டக்களப்பில் வாழ்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணைப் பற்றியது அந்தக் கதை.

இரவு உணவு உண்டபின்னர், நண்பனோடு காலாறச் சென்றுவரலாம் என்று போன கணவன் காணாமற் போனான். இரண்டு பெண்குழந்தைகளை முஸ்லிம் ஹோம்கார்டுகள் இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஒரு பையன் காணா மற்போனான்-புலிகள் கொண்டு போனார்களோ, சிங்களக் காடை யர் கொண்டுபோனார்களோ, இராணுவத்தினர் கொன்று போட்டார் களோ-எதுவும் தெரியாது. ஒரே கதியென நம்பியிருந்த, படித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு வயதான இரண்டாவது மகனை சிங்கள இராணுவத்தினர் கண்ணெதிரே காலில் கயிறுகட்டி ஜீப்பின் பின்னால் உருட்டி இழுத்துக் கொண்டு சென்று பிணமாகக் கொண்டுவந்து வீட்டெதிரே போட்டார்கள். இவ்வளவையும் தாங் கிக் கொண்டு உயிர் வாழ்ந்தவள் அந்தப் பெண். கண்ணகி கதையை மெரிலினுக்குச் சொல்லிவிட்டுச் சொல்கிறாள்:

“Kannahi goes to the king and throws down her other anklet. It breaks and spills out emeralds. Because the queen’s anklet had been filled with pearls, the king realizes his mistake. He’s sorry, but Kannahi is angry. She tears off her left breast, which burns with spiritual heat and hurls it at the king. The breast chases him through the palace pounding him like a fist. Then this breast sets fire to the city, sparing only the young, the old, and the innocent.” She smiled. “I will not do suicide. I will throw Kannahi’s burning breast.”

போர்நிறுத்தத்திற்குப் பிறகு 2011இல், பல ஆண்டு இடை வெளிக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் கண்ணகிக்கூத்து நிகழ்த்தப் பெற்றது. அதனைக் கண்ணுற்ற மக்கள் அந்த சோகக் கதையைக் கண்டவாறே கண்ணீர் விட்டனர். ஆனால் அது அவர்களுக்கு ஒரு புதிய சக்தியை அளித்தது என்று குறிப்பிடுகிறார் ஷார்னி ஜெயவர்தனா என்ற நிழற்படைக்கலைஞரான பெண்மணி. இந்நிகழ்ச்சிகள் யாவும் கண்ணகி கதை ஒரு புதிய உந்துசக்தியாக பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
கலாச்சார அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கை

சென்ற ஆண்டு (2014)இல் மே 14 முதல் 24 வரை தில்லியில் மாக்ஸ்முல்லர் சாலையிலுள்ள இந்திய சர்வதேச மையத்தில், அந்த மையமும், ரீது மேனோன் என்பவருடைய விமன் அன் லிமிடெட் என்ற அமைப்பும் சேர்ந்து ஒரு கண்காட்சியை நடத் தின. கண்காட்சியின் தலைப்பு Invoking the Goddess – Pattini Kannaki Devotion in Srilanka என்பது. போரினாலும் இனப்படுகொலையாலும் பிளவுபட்டுக் கிடக்கும் சிங்களர்களையும் தமிழர்களையும் அவர்க ளிருவருவருக்குமே ஒரு பொதுவான பண்பாடு இருக்கிறது என்று சுட்டிக் காட்டி அவர்களை ஒன்றுசேர்ப்பதுதான் இந்தக் கண்காட்சி யின் நோக்கம்.

“The idea is to talk about the shared heritage between Tamil Hindus and Sinhala Buddhists and the syncretic nature of our culture. We are also looking at it in a post-war context. A lot of these sites have been revived and become more accessible after the war. A lot of people go to these shrines to meet soothsayers and find out about the beloved ones who disappeared during the conflict. I know of a woman whose husband disappeared during the war and now she predicts future at one of these shrines. People relate to the goddess as to how a human being became a goddess and fought for justice”

என்று சமூக மானிடவியல் ஆய்வாளரும் இக்கண்காட்சியை நிகழ்த்தியவர்களில் ஒருவருமான மாலதி டி ஆல்விஸ் கூறுகி றார். அவருக்குத் துணையாக நிழற்படக்காரராகச் சென்றவர்தான் மேலே குறிப்பிட்ட ஷார்னி ஜெயவர்தனா.

இதற்கு invokingthegoddess.lk என்ற இணைய தளமும், அதற்குப் படைப்புகளும் கருத்துரைகளும் அனுப்ப pattinikannaki@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் சென்று அவற்றை நோக்கலாம், தொடர்பு கொள்ளலாம்.

இம்மாதிரி மக்களைப் பண்பாட்டினால் ஒன்றிணைக்கும்ஆவல் சிறுபிள்ளைத் தனமான செயல்களிலும் வெளிப்படுகிறது. சான்றாக, யூ ட்யூபில் ‘சுராங்கனி’ என்ற பாட்டைக் கேட்ட சிலர், இது இரு பண்பாடுகளுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது, அவர்கள் நட்புடன் இணைய வேண்டும் என்று கருத்துரை எழுதி யிருக்கிறார்கள்.

இலட்சக்கணக்கான மக்கள் அழிந்துபோய் இன்னும் பல இலட் சக்கணக்கான மக்கள் உலகமுழுவதும் வீசிஎறியப்பட்டிருக்கும் நிலையில் ஓர் ஆதிக்கஇனத்தவரையும் அழிந்த இனத்தவரையும் ஒன்றுசேர்ப்பது இயலுமா என்ற கேள்வி மனத்தில் எழுகிறது. (இப்போதைய அரசியல் மாற்றம் இதற்கு வித்திடுமா என்ற கேள்வியும் உள்ளது.) பொதுவாக வென்ற  இனத்தினர், தோற்ற இனத்தினரின் பண்பாட்டைத்
தாங்கள் ஏற்றுக்கொண்டதாகக் காட்டிக்கொள்ளவோ,  ஒப்புக்கொள்ளவோ
மாட்டார்கள். எனவே இத்தகைய முயற்சிகள் எந்த அளவு பயன்படும்
என்று கூற முடியாது.

 

இலக்கியம்