நவீனத்துவம்-சுருக்கம்

நவீனத்துவம் (மாடர்னிசம்)
மேற்கத்திய உலகில் முதல் உலகப் போருக்கு முன் தொடங்கி வளர்ச்சி பெற்ற வணிகப்போட்டிகள், அவை நாடுகளுக்கிடையில் உருவாக்கிய முரண்பாடுகள், பொருள்மயமாக்கப்பட்ட வாழ்நிலை போன்றவை நவீனத் தன்மை என்று வரையறுக்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்தம், அணு குண்டு போன்ற பேரழிவுகள் உண்டாக்கிய அதிர்ச்சிகள், தொடர்புத் தொழில் நுட்ப வளர்ச்சியினால் இந்தியப் பிரக்ஞையிலும் பேரதிர்வுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பரவியே இருந்தன. நவீனத்தன்மையை வெளிப்படுத்தக் கலைகள் உருவாக்கிக் கொண்ட வழிமுறைதான் நவீனத்துவம்.
ஒரு கருவியைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை மனித மனம் உணரும்போதே இன்னொருபுறம் அதன் போதாமைகளையும் உணர்ந்து கொள்கிறது. இந்தப் போதாமையுணர்வு புதிய புதிய கருவிகளைக் கண்டு பிடிக்கச் சொல்லி மனிதனைத் தூண்டுகிறது. புத்தம் புதிதாகக் கருவியை மாற்றியமைக்கச் சந்தர்ப்பம் இல்லாவிட்டால் புதிய பயன்பாடுகளுக்கெனப் பழைய கருவியை வடிவமைக்க முயலுகிறது. இதுபோல மொழியைப் புதிய பரிமாணங்களுக்கு விரிவாக்க முயலுகின்றபோது மொழி உடன்பட மறுக்கிறது. கடைசியில் மொழியைப் பகிர்ந்து கொள்வதே பெரிய பிரச்சினை ஆகிவிடுகிறது. இப்படிப்பட்ட மொழிச்சூழல்தான் நவீனத்துவத்தைக் கட்டமைக் கிறது.
இந்தியாவின் மொழிகளிலும் நவீனத்துவம் பரவவே செய்தது. ஒரு பெரிய இயக்கமாக அல்ல-திரும்பத் திரும்ப அந்த எழுத்தாளர்களே சொன்னது போலச் சோதனை முயற்சிகளாக-சில எழுத்தாளர்கள் மட்டுமே கொண்ட ஒரு விசித்திர, தனித்த மனப்பான்மையாகத் தோன்றியது. எலியட்டையும் ஜாய்ஸையும் படித்திருந்த புதுமைப்பித்தன் போன்ற அக்கால எழுத்தாளர் களுக்குத் தாங்களும் புதிய வெளிப்பாட்டு முறைகளைக் கையாண்டு பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்ததில் வியப்பில்லை.
தமிழில் மணிக்கொடி இதழ்க் காலம் வரை மொழி ஒரு பெரிய பிரச்சினையாக உணரப்பட்டதில்லை. “உள்ளத்திலுள்ளது கவிதை” என்றும் அதனைத் தெளிவுறவே மொழிந்திடுவதில் எந்தத் தடையுமில்லை என்றும் “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்” என்றும் படைப்பாளிகள் நம்பிவந்தனர். இதற்கு மாறாகச் சொல்லவந்ததைச் சொல்லுவதற்குப் பழைய வழிமுறைகளின் போதாமையை உணர்ந்து வேறுவித வெளிப்பாடு முறைகளைத் தேடிப் புதிய பாதைகளைப் போட்ட புதுமைப்பித்தனிலிருந்துதான் நவீனத்துவம் தமிழில் கால்கொள்கிறது. கவிதை யிலும் புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி முதல் தான் நவீனத்துவம் மலர்ந்தது.
ஆங்கில இலக்கியத்தில் 1910-30கள் நவீனத்துவ காலம் என்று கூறலாம். அதாவது டி. எஸ். எலியட், வர்ஜீனியா வுல்ஃப், எஸ்ரா பவுண்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், டி. எச். லாரன்ஸ் போன்ற மிகப் பெரும் எழுத்தாளர்கள் சாதனை புரிந்த காலம் நவீனத்துவக் காலம் என்று ஆங்கில இலக்கியத்தில் வரையறுக்க முடியும்.
யதர்த்தவாதத்தை எதிர்த்து எழுந்த இயக்கம்தான் நவீனத்துவம் என்ற கருத்தும் உண்டு. பதிவு நவிற்சிக் கலை, கியூபிசம், வார்ட்டிசிசம், ஃப்யூச்சரிசம், வெளிப்பாட்டியம், டாடாயிசம், சர்ரியலிசம் போன்ற கலை இயக்கங்கள் யாவுமே யதார்த்தவாதத்தை எதிர்த்து எழுந்தவைதான். இவற்றின் தொகுப்பாக நவீனத்துவத்தைக் காணஇயலும். மார்க்சியமும் யதார்த்தவாதமும் கேள்விக்குறியாகின்ற நிலையில்தான் நவீனத்துவம் தோன்றுகிறது என்பது விமரிசகர்கள் பலரின் கருத்து. ஆனால் தமிழ்ச்சூழலில் நவீனத்துவம் யதார்த்தவாதத்தை மறுக்கவில்லை என்கிறார் விமரிசகர் ஞானி.
நினைத்ததைச் சொல்லவேண்டும் என்ற வெறிக்கும் சொல்ல முடியவில் லையே என்ற ஆதங்கத்திற்கும் இடையிலுள்ள இடை வெளியில் தோன்றும் போராட்டம்தான் நவீனத்துவத்தின் தோற்றக்களம். இந்தப் போராட்டம் பாரதிக்கு ஓரளவு இருந்தது. பின்வந்த பாரதிதாசனுக்கோ பாரதிதாசன் பரம்பரைக்கோ மார்க்சியம் சார்ந்த எழுத்தாளர்களுக்கோ ஜனரஞ்சகப் படைப்பு உற்பத்தியாளர்களுக்கோ அணுவளவு கூடக் கிடையாது.
நவீனத்துவத்திற்கு மாறான கலைஞர்கள், வாழ்க்கையில் உண்மை என்று ஒன்று உண்டு என்றும் அதைச் சொல்வதே அல்லது சொல்ல முயல்வதே கலை என்றும் நினைத்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை சுயம் என்பது பிளவுபடாதது. முழுமையானது. ஒருமையுடையது. கல்கி, அகிலன், மு. வ., நா. பார்த்தசாரதி எனப் பிரபலமான எழுத்தாளர்களுக்கும் தமிழ் வாசகர் களுக்கும் ஒரு பொதுவான தளமும் இலட்சியங்களும் இருந்தன. பொதுவாகப் பிரபல எழுத்தாளர்கள் தங்களுடைய வாசகர்களுக்கும் தங்களுக்கும் பகிர்ந்து கொள்ளக்கூடிய யதார்த்தமும் மெய்ம்மைகளும் இருப்பதாக திடமாக நம்பினார்கள். அவர்களுக்கு இலக்கியத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளும் இருந்தன, தேசத்திற்கு விடுதலை வாங்கித் தருவது, மனித இனத்தை மேம்படுத்துவது, எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதான ஒரு சமுதாயத்தை உருவாக்குவது இப்படி இலக்கியத்திற்குக் கடமைகளும் இருந்தன. நவீனத்துவத்திற்கு இதுபோன்ற பிரமைகள் இல்லை.
அவ்வாறாயின் நவீனத்துவத்திற்கு உகந்த மனப்பான்மை என்ன என்ற கேள்வி எழலாம். உளவியல் ஆழ்தன்மை என்று இதனைச் சுருக்கமாகச் சொல்லலாம். பிரபல ஜனரஞ்சக எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களை அல்லது இரசிகர்களைப் படைப்போடு ஒன்றச் செய்வதையே பெருமையாகக் கருதினார்கள். வாசகர்களை ஒன்றச் செய்யாமல் அவர்களைத் தொலைவி லேயே நிற்கச் செய்யவேண்டும், “இது படைப்புதானே தவிர வாழ்க்கையல்ல, யதார்த்தமல்ல” என்று அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது நவீனத்துவம். பிரெஹ்ட் இதனை ‘அந்நியமாதல் விளைவு’ என்றார். கலைஞர்களும் தாங்கள் படைக்கும் படைப்போடு, பாத்திரங்களோடு ஒன்றிப் படைக்கிறேன் என்று சொல்லாமல், அழகியல் தொலைவைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த இயல்புகளையெல்லாம் புதுமைப்பித்தன் படைப்புகளில் காணலாம்.
நவீனத்துவப் படைப்பாளர்கள் முழுமை என்பதிலும் நிலைத்த உண்மை என்பதிலும் நம்பிக்கை அற்றவர்கள். தங்கள் காலத்தில் தாங்கள் கண்ட உள்ளீடற்ற மனிதர்களையும் பிளவுபட்ட, சிதைந்த ஆளுமைகளையும்தான் அவர்களால் படைக்கமுடிந்தது.
இந்த மனப்பான்மைகள் சமூகத்தைச் சீர்திருத்தி அமைக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்களுக்கு எதிரானவையாக அமைந்தன. எனவே நவீனத்துவ இலக்கியங்களை மார்க்சியவாதிகள் நசிவு இலக்கியம், பாலியல் பிறழ்வு இலக்கியம், தனிமனிதச் சார்புடைய இலக்கியம், கலை கலைக்காகவே என்னும் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் என்றெல்லாம் குறைகூறினார்கள்.
போதிப்பதும் பிரச்சாரம் செய்வதுமே கலை என்ற மனப்பான்மை நமக்கு மிக நெருக்கமான ஒன்று. அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நு£ற்பயனே என்று இலக்கியத்தைக் கருவியாக மட்டுமே கண்ட பாரம்பரியம் நம்முடையது. தமிழில் முதல் நாவலை உருவாக்கிய வேதநாயகம் பிள்ளை, நவீன கதைகள் எவ்வாறு நீதி போதிப்பனவாக அமையவேண்டும் என்று பெரியதொரு இலக்கணத்தையே தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.
ஜான் ரஸ்கின் போன்றவர்களும் கலை அறத்தை போதிப்பதாக இருக்க வேண்டும் என்றே கருதினர். ஆனால் ஆஸ்கார் வைல்டு போன்ற எழுத்தாளர்கள், கலை எதனையும் போதிக்கவேண்டியதில்லை, அது கலையாக இருந்தாலே போதுமானது என்றனர். அதாவது அது அழகியல் இன்பம் பயப்பதாக அமைந்து விட்டால் போதுமானது. இதைத்தான் கலை கலைக்காகவே என்றனர். அழகியல் இயக்கம் என்றே அவர்கள் கொள்கை அறியப்பட்டது. கலை தன்னளவில் முழுமை பெற்றதாக இருககவேண்டுமே தவிர, இன்னொன்றின் கைப்பாவையாக, எடுபிடியாக இருக்கக் கூடாது என்பதே முக்கியம். இந்த அம்சங்கள் சமூக அக்கறை கொண்டவர்களுக்கு எரிச்சல் தருபவையாக இருந்தன.
வானம்பாடிகளின் ரொமாண்டிக் தன்மை வாய்ந்த பிரகடனக் கவிதைகளும் அவற்றிற்கு எதிர்வினையாக பிரமிளின் கவிதைகளும் இங்கே குறிப்பிடத்தக்கவை. எழுத்து பத்திரிகை, அதைத் தொடர்ந்து வந்த நடை, பிரக்ஞை, கசடதபற, தொடங்கித் தொண்ணூறுகள் இறுதிவரை கலை, கலைக்காகவா, மக்களுக்காகவா என்ற விவாதம் திரும்பத்திரும்ப நடை பெற்றுவந்தது.
தமிழில் நவீனத்துவம் சார்ந்த முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன் பலவிதமான சிறுகதைகளை எழுதிப்பார்த்தவர். அவர் எழுத்துகள் பலதன்மைகளை ஒரேசமயத்தில் உள்ளடக்கியிருக்கின்றன. அவர் எழுத்துகளில் ஒரு மாந்திரீக/தொன்மக் கவிதையியல் ஊடுருவி யிருக்கிறது. அவருடைய எழுத்துப் பண்புகளில் ஒவ்வொரு பண்பை ஏற்றுக் கொண்டுதான் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், வண்ணநிலவன் போன்ற பல படைப்பாளிகள் பின்னனால் உருவாக முடிந்தது. இன்று பின்நவீனத்துவப் படைப்புமுறை சார்ந்து பேசப்படும் மேனிலை நாவல், தொடர்ச்சியறு எழுத்து, மாந்திரீக யதார்த்தம் முதலிய கூறுகளையும் புதுமைப்பித்தன் எழுத்துகளில் காணலாம். உளளத்தின் சிக்கலான தன்மைகளை வெளிப்படுத்த முயன்றதன் காரணமாக கு. ப. ரா.வின் எழுத்துகளில் நவீனத்துவம் இடம் பெற்றது. ஓர் அயலான் போலத் தமிழ்மொழியைக் கையாள முயன்றதனால் மௌனிக்கு நவீனத்துவம் கைவந்தது.
மணிக்கொடிக்காலத்தின் பார்வையாளர்களாக இருந்து சற்றே பின்னிட்டு எழுதத் தொடங்கிய லா.ச.ரா., எம்.வி. வெங்கட்ராம் இருவரது எழுத்துகளிலும் நவீனத்துவம் உண்டு. எம்.வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலில் நிகழும் விவாதங்களும் எதிர்விவாதங்களும் கூடிய மனப்போராட்டம் நவீனத்துவப் படைப்புகளுக்கே உரியது.
தமிழ் நவீனத்துவப் படைப்புகள் புரியவில்லை என்றும் ஜனரஞ்சக எழுத்தாளர்கள் கூறினர். “யாருக்காக எழுதுகிறார்கள் இவர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்கள். இதன் விளைவாக வாசகர்களை முன்னிருத்தி ஒரு எழுத்தாளன் எழுத வேண்டுமா, அன்றி வாசகனைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னிச்சையாக எழுதவேண்டுமா என்ற விவாதம் எழுந்தது. வாசக ரசனைக்குத் தீனிபோடுவது மட்டுமே இலக்கியமல்ல, வாசகர்களைக் கருத்தில் கொள்ளாமல் எழுதினால்தான் நல்ல இலக்கியங்கள் உருவாகும் என்று க. நா. சு., சுந்தர ராமசாமி போன்றோர் கூறினர். அமைப்பியத்தின் அறிமுகம் இந்த விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
இதைத் தொடர்ந்து உள்வட்டக் கலைதான் சிறந்தது, வெளிவட்டக்கலை சிறந்ததல்ல என்ற கருத்து எழுந்தது. இதற்கு மார்க்சியத் தளங்களிலிருந்து எதிர்ப்புக்கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இலக்கிய முயற்சிகள் பலவகை. அவற்றிற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இலக்கிய மனப்பான்மைகளும், இலக்கியக் கொள்கைகளும் பலவகை. ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை மட்டும் பாராட்டி, இலக்கியத்தை வளர்ப்பது உள்வட்டமே என்ற முடிவுக்கு வருவது தவறு என்று இதற்கு விடையளிக்கப்பட்டது. அக்காலத்தில் நவீனத்துவ முயற்சிகள் செய்தவர்களுக்கு இக்கருத்துகள் மிக உற்சாகம் தருவனவாக இருந்தன.
மணிக்கொடிக் காலத்திற்குப் பிறகு நவீனத்துவ எழுத்திற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையின் தோற்றம், நவீனத்துவ வாதிகளுக்கும் சோதனை முயற்சியாளர்களுக்கும் ஒரு நல்ல களம் அமைத்துத் தந்தது. சுந்தர ராமசாமியின் ‘உன் கை நகம்’ போன்ற கவிதைகள் நவீனத்துவக் கவிதைக்கு நல்ல எடுத்துக்காட்டுகள். பிருமீள், சி. மணி போன்றோரும் எழுத்து இதழில் எழுதினர். அவை பெரும்பாலும் நவீனத்துவ தொனி கொண்டிருந்தன. பிறகு ‘நடை’ இதழ் முதலாக ஞானக்கூத்தன் எழுதலானார். பிறகு கசடதபற, ஞானரதம், பிரக்ஞை என்று நவீனத்துவ முயற்சிகளுக்கு ஆதரவளித்த இதழ்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தங்களை நவீனத்துவவாதிகளாக முதலில் வெளிக்காட்டிக் கொண்டவர்கள், பின்னர் அதே பாணி எழுத்தைப் பின்பற்றினார்கள் என்று கூற முடியாது. உதாரணமாக, பசுவய்யாவின் உபயம், சவால் போன்ற கவிதைகள் நவீனத்துவ பாணியைச் சேர்ந்தவை அல்ல. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைகள் பல அங்கதம், நையாண்டி என்னும் வகைகளில் அடங்குபவை.
நவீனத்துவம் என்பது ஒரே பாணி அல்ல. பெரும்பாலும் தமிழ்க் கவிஞர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளை ரொமாண்டிக் தன்மை கலந்த நவீனத்துவ எழுத்துகள் என்றே மதிப்பிட முடியும். அபி, பசுவய்யா போன்றவர்களின் கவிதைகளும் பிருமீளின் கவிதைகளும் பொதுவாக இத்தன்மையைப் பலவேறு அளவுகளில் பெற்றிருந்தன. சா. கந்தசாமியின் சாயாவனம் நாவலும் இத்தன்மை உடையது. இவை மனித ஆளுமையின் சிதைவைச் சொல்லக்கூடியவை அல்ல. மேற்கத்திய நவீனத்துவத்தின் ஒரு முக்கியப் போக்கு மனித ஆளுமையின் சிதைவைச் சொல்லுதல். இத்தன்மையை ஓரளவு சித்திரித்தவர்கள் என்று ஜி. நாகராஜனையும் நகுலனையும் குறிப்பிட முடியும்.
சி. சு. செல்லப்பா வெளியிட்ட புதுக்குரல்கள் கவிதைத் தொகுப்பும் நகுலனின் குருக்ஷேத்திரம் தொகுப்பும் நவீனத்துவ இலக்கியப் போக்கிற்கு உந்துதல் அளிப்பவையாக இருந்தன. சிறுகதையில் நவீனத்துவப் பாணியைக் கையாளப் பலரால் முடிந்தது. குருக்ஷேத்திரம் தொகுப்பில் சிறுகதை எழுதிய சுஜாதாவின் சில சிறுகதைகள் நவீனத்துவப் பாணியில் அமைந்தவை. ஜி. நாகராஜன், நகுலன் எழுதிய சிறுகதைகள் சிறப்பானவை. ந. முத்துசாமியின் சிறுகதைகள் பல நவீனத்துவமானவை. நாற்காலிக்காரர்கள், காலம் காலமாகி போன்ற நாடகங்களும் நவீனத்துவத் தன்மை பெற்றவை. ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதினாலும் ஜெயகாந்தனின் பல படைப்புகளில் நவீனத்துவம் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. ‘பாரிஸுக்குப் போ’ நாவல் முழுதுமே நவீனத்துவத்திற்கு மாறான, மரபான கலைப்போக்குகளையும் நவீனத்துவப் போக்கையும் ஒப்பிட்டு விவாதிக்கும் ஒரு விவாதக்களம்தான்.
சா. கந்தசாமியின் மூன்று நாவல்கள்-அவன் ஆனது, சூரிய வம்சம், தொலைந்து போனவர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சற்றும் மிகையான உணர்ச்சி வெளிப்பாடற்ற நவீனத்துவப் பண்பு அசோகமித்திரனின் பல நாவல்களிலும் சிறுகதைகளிலும் காணக் கிடக்கிறது. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் ஒரு நவீனத்துவப் பாணி நாவலே என்றாலும், எழுததமைப்பில் அது வெளிப்படுகிறதே ஒழிய உள்ளடக்கத்தில் வெளிப்பட வில்லை. அம்பை, சில்வியா ஆகியோரின் சில சிறுகதைகள் நவீனத்துவப் பாணியில் அமைந்தவை.
பிரம்மராஜன் கவிதைகள் யாவுமே நவீனத்துவப் பாணிக் கவிதைகள். ஆனால் அவரது பெரும்பாலான கவிதைகள் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்புகள் போலவோ கம்ப்யூட்டர் கவிதைகள் போலவோ அமைந்து சலிப்பூட்டுகின்றன. ‘அறிந்த நிரந்தரம்’ தொகுதியைவிடப் பின்வந்த தொகுதிகளிலுள்ள பல கவிதைகள் நன்றாக உள்ளன எனத் தோன்றுகிறது. ‘அறிந்த நிரந்தரம்’ கவிதை, பலவித உருவகங்களைச் சிறப்பாக உருக்கி இணைத்துப படிமப்படுத்துவதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தேவதச்சன் ஆனந்த் போன்ற பலரை நவீனத்துவக் கவிஞர்களாகக் குறிப்பிட முடியும்.
மார்க்சியவாதிகள் இத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்க இயலும். அவர்கள் பாராட்டிப் பேசும் மயகாவ்ஸ்கி, பாப்லோ நெரூடா இருவருமே நவீனத்துவவாதிகள்தான். கார்க்கியின் தாய் நாவலிலேயே நவீனத்துவக் கூறுகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ் நவீனத்துவப் படைப்புகளை பிறழ்வு இலக்கியம் என்று ஒதுக்கிவிட்டதனால் சோதனை முயற்சிகள் யாவும் இங்கு ஒரு குறிப்பிட்ட குழுவினரின் அல்லது சாதியின்ரின் சாதனை என்று சொல்லும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டன. மார்க்சியர்கள் அவ்வப்போது மொழி பெயர்த்து வெளியிட்ட பன்னாட்டுக் கவிதைகள் அநேகமாக நவீனத்துவப் பண்பு கொண்டவையாகவே இருந்தன. இருப்பினும் அவற்றை அவர்கள் சிரத்தையோடு உள்வாங்கிக் கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் பிரக்ஞை பத்திரிகையின் முயற்சிகள் முன்னோடியானவை. இலங்கையிலிருநது வெளிவந்த அலை பத்திரிகையும் இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது. நாடகத்துறையில் ஆறுமுகத்தின் கருஞ்சுழி போன்ற நாடகங்களைக் குறிப்பிடலாம்.
உலக நவீனத்துவ இயக்கத்தின் ஒரு பகுதியான தமிழ் நவீனத்துவப் படைப்பாளிகளின் சில சாதனைகளை இங்கே குறிப்பிடலாம்.
நவீனத்துவ எழுத்தாளர்கள்தான் யதார்த்தவாதத்தின் சிக்கல்களை முதன் முதலாக எதிர்கொண்டவர்கள். மொழி என்னும் ஊடகமே இந்தச் சிக்கலான தன்மைகளின் ஒரு பகுதியாகவேனும் அமையக்கூடும் என்று உணர்த்திய வர்கள். இந்த உணர்த்தல்தான் அமைப்பியம், பின்நவீனத்துவம் போன்ற மொழிமையப்பட்ட இயக்கங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தினை உருவாக்கியது.
நவீனத்துவக் கலை என்பது வடிவத்திலும் மொழியமைப்பிலும் எதிர்பாராத அல்லது முன்னுதாரணமற்ற நவீனமான சூழல்களைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவது. இவ்வகையில் இன்றைய சூழல்களால் ஏற்படும் ஆளுமைச் சிதைவையும் உளவியல் சிக்கல்களையும் ஓரளவுக்கேனும் நேர்த்தியாக எடுத்துரைத்த பாங்கு நவீனத்துவக் கலைஞர்களுக்குரியது. மேலும் நவீனத்துவக் கலை உணர்ச்சியை மட்டாக வெளிப்படுத்துவதில் தனித்த பாங்கினை உடையது. மிகையுணர்ச்சியை அறவே வெறுப்பது. இத்தகைய படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்தவர்கள் நவீனத்துவப் படைப்பாளர்களே.
படைப்புகளில் காலத்தின் இயக்கம் யதார்த்தத் தன்மையில் அமைவதில்லை. காலம் மிக விசித்திரமானது. நம்மால் உள்வாங்கிக் கொள்ள இயலாததாகப் பல சந்தர்ப்பங்களில் இயங்கக்கூடியது என்பதை நவீனத்துவவாதிகள் காட்டியிருக்கிறார்கள்.
நவீனத்துவக் கலை என்பது ஒருங்கமைத்தல் இன்மை அன்று. மாறாக அகவடிவம் எனப்படும் உள்ளிருந்து எழும் ஒருங்கமைப்பைக் கொண்டது என்ற தெளிவை அளித்திருக்கிறார்கள்.
கலையின் பிரச்சினை பற்றிய பிரக்ஞை ஓர் இடைவிடாத உள்ளுணர்வு என்பதை நவீனத்துவத்தின் குறிப்பிடவேண்டிய சிறப்பியல்பாக உணரச் செய்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் நல்ல சாதனைகள். பெரிதும் பாராட்டி முனனெடுத்துச் செல்ல வேண்டியவை. ஆனால் நவீனத்துவ இயக்கம் தமிழில் தான் பெறவேண்டிய சிறப்பான இடத்தைப் பெறவில்லை. இதற்கான அடிப்படைக் காரணங்கள் வருமாறு.
கலை அல்லது இலக்கியம் எதையேனும் போதித்ததே தீரவேண்டும் என்ற ஜனரஞ்சக மனப்பான்மை.
இந்த மனப்பான்மைக்குத் தீனிபோட்டு வளர்க்கக்கூடிய கல்வித் துறை யினரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி, வலைப்பின்னல் தளங்கள் போன்ற ஊடகங்களும்.
இந்த இயக்கத்தில் ஈடுபட்ட எழுத்தாளர்கள் அனைவருமே பெருமளவு தங்களுக்கிருந்த ஆங்கிலப் பரிச்சயத்தால் ஈடுபட்டவர்கள். இவர்களின் ஆங்கில மனப்பான்மையைத் தமிழ்வழி மட்டுமே இலக்கியத்தில் ஈடுபட்ட வர்களாலும் தமிழ் வாசகர்களாலும் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.
மேற்கு நாடுகளில் ஏற்பட்டிருப்பது போன்ற குடும்பச் சிதைவு, ஆளுமைச் சிதைவு, உளவியல் சிக்கல்கள் போன்றவை இன்னும் முற்று முழுதாகத் தமிழகத்தில் ஏற்படவில்லை. இதற்கு நமது பாரம்பரியக் குடும்ப அமைப்பு முக்கியக் காரணம். மேலும் இங்குள்ள முக்கியப் பிரச்சினைகளான வறுமை, ஊழல் போன்றவை சமூகம் சார்ந்தவை.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒடுக்கப்பட்டவர்கள், போலி ஒழுக்கங்களைப் பேணும் மத்தியதர வர்க்கத்தினர், வசதி படைத்தவர்கள் என நமது சமூகம் பிளவுபட்டுக் கிடக்கின்ற தன்மை, அதன் தேவைகள்.
என்றாலும், காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளாகவே உலகமயமாக்கலின் விளைவாகவும் கேபிள் தொலைக்காட்சி, இண்டர்நெட் போன்றவற்றாலும் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. இலக்கிய இயக்கங்களும் பாணிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எழுத்தை வாசிக்கும் கலாச்சாரம் மாறி, பிம்பங்களைக் காணும், வாசிக்கும் பார்வைக் கலாச்சாரம் ஒன்று வேகமாக உருவாகிவிட்டது.

இலக்கியம்