கல்வி-கேள்விகள். கேள்வி 11

(11) யாவற்றையும் மனப்பாடம் செய்து எழுதும் பரீட்சை முறை, மாணவர்களின் மேல் அதீத மன அழுத்தத்தைச் சுமத்துகிறது. இதை ஏன் நாம் மேலை நாடுகளில் இருப்பது போல மாற்றக்கூடாது?

இன்றைய கல்விமுறை, நீட் தேர்வு, இந்தப் போட்டித் தேர்வு, அந்தப் போட்டித் தேர்வு என்று குழந்தைகளை இடையறாது மனப்பாடம் செய்பவர்களாக ஆக்குகிறது. உண்மையில் பெரும்பாலான பள்ளிகளில் இடைநிலைக் கல்வியில் மாணவர்கள் (குறிப்பாகப் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு) “இந்த இந்தக் கேள்விகள் மட்டுமே தேர்வில் வரும், இவற்றை மட்டுமே மனப்பாடம் செய்து எழுத்துப் பிசகாமல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்” என்று மட்டுமே கற்பிக்கப் படுகிறார்கள். அவர்கள் கற்கும் கொள்கைகள், செயல்முறைகள் எப்படி வந்தன என்றோ, அவற்றின் பயன் என்ன என்றோ அவர்களுக்குத் தெரியாது. ஆனால் மதிப்பெண் அதிகமாக வாங்கிவிட்டால் பாராட்டப் படுகிறார்கள்.

ஆண்டுதோறும் இப்படி அதிக மதிப்பெண் வாங்கிப் பாராட்டுப் பெற்றவர்கள் எல்லாம் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்றும் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் விசாரித்துப் பாருங்கள், உண்மை தெரியும்.

பாடச்சுமையை ஏற்றுவதாலும் சிறு குழந்தைகளைப் புத்தக மூட்டைகளைச் சுமக்க வைப்பதாலும் மனப்பாடத் திறனாலும் வாழ்க்கை வளர்வதில்லை, ஆளுமை சிதையவே செய்கிறது. நல்ல மொழித்திறன், சிந்தனையை உருவாக்கும் கல்வி, தினந்தோறும் ஏதேனும் ஒரு தொழிற்பயிற்சி, தக்க நேரத்தில் விளையாட்டு போன்ற அனைத்தும் தக்க விகிதத்தில் அமையும்போதுதான் சரியான கல்வி முறை என்று கூறமுடியும்.

ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்பு, பணம் மிகுதியாகச் சேர்த்து வாழ்வது மட்டுமே சிறந்த வாழ்க்கை என்ற கற்பிதம் பரப்பப் பட்டு நம் நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேற்கு நாடுகளிலிருந்து “365 நாட்களில் செல்வம் சேர்ப்பது எப்படி”, “பணக்காரனாவது எப்படி”, “பிறரை வெற்றி கொள்வது எப்படி” என்பது போன்ற மானிடப் பண்பை அழிக்கும் நூல்கள் இறக்குமதி ஆயின. அவை பெருகின. தொழிலில் வெற்றிபெறப் “பிறரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பது நடைமுறை ஆயிற்று. பிறரை மனிதர்களாக அன்றிக் கருவிகளாக நோக்கும் நோக்கு ஏற்பட்டது. இதனால் நமது கல்விமுறை அறவே கெட்டொழிந்தது.

எப்படியாவது மகன்/மகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் >> அதன் வாயிலாக எம்பிபிஎஸ், பிஇ என்று ஏதேனும் உயர்கல்வியைப் பெறவேண்டும் >> அதன் வாயிலாக நல்லதொரு வேலையைப் பெறவேண்டும் >> பிறகு நல்லதொரு வாழ்க்கைத் துணை, இல்லறம் >> பிறகு நல்லதொரு வீடு, செல்வம் கொழிக்கும் முதுமை வாழ்க்கை என்பதாக இலட்சியம் உருவாயிற்று. இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இது தான் அதீத மன அழுத்தத்தைத் தருகின்ற மனப்பாடச் செயல்முறையை உருவாக்குகிறது.

அதற்காக மேற்கு நாடுகளைக் காப்பி அடிக்காதீர்கள். ஊழல் குறைவாக இருப்பதாலும், கல்வி அடிப்படை உரிமை என்ற சட்டத்திற்கு மதிப்பிருப்பதாலும், மக்கள் தொகை குறைவாகவும் வளம் அதிகமாகவும் இருப்பதாலும் அவர்கள் கொண்ட கல்விமுறை பயனளிக்கிறது. நமக்கு இவை எல்லாம் எதிர்மறைகள். அவர்களைப் போன்ற செல்வமும் வளமும் நமக்கிருக்குமாயின் நல்ல கல்வி முறையை, மனப்பாடமற்ற கல்வியை நம்மாலும் அளிக்கமுடியும். அவர்களால் ஏற்பட்ட வினைதான் மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல் பொருள்களைப் போலப் “பயன்படுத்திக் கொள்ளுதல்” என்ற நோக்கு. அதனால் நமது வாழ்க்கை முறையே சிதைந்து போயிருக்கிறது.

கேள்வி பதில்