காமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்

love
காதல் என்பது உண்மையில் நம் யதார்த்த உலகில்-நிஜ வாழ்க்கையில் மிக அரிதாகவே காணக் கிடைப்பது. இல்லாதது என்றே சொல்லிவிடலாம். அப்படியே இளம் உள்ளங்களில் காதல் தோன்றினாலும் அதற்கடியில் எத்தனையோ கணக்கீடுகள். நிறம், அழகு, தோற்றம், பணம், படிப்பு, வருமானம், ஜாதி, அந்தஸ்து என்ற எத்தனையோ கணக்கீடுகளுக்கிடையில் அல்லவா காதல் தோன்றுகிறது? கருப்பாக, குள்ளமாக, சற்றே அழகின்றி இருப்பவர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும் காதலிக்க முன்வருபவர்கள் எத்தனை பேர்? அதனால்தான் “அழகாயில்லாததால் அவள் எனக்குத் தங்கை ஆகிவிட்டாள்” என்று பாடினான் இன்றைய புதுக்கவிஞன்.
சங்ககால வாழ்க்கையில் காதல் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருந்தது என்று கூறுகின்றனர். கற்பனையாக இருந்தாலும் காதல் நம்மை விடுவதில்லை. காதலைக் கற்பனையிலேனும் இலட்சியப்படுத்திக் காண்பதில்தான் மானிட உள்ளத்தின் நிறைவு இருக்கிறது. நம் நிஜவாழ்க்கையில் காதல் இல்லாமற் போனதால்தானே இன்று தலைப்பிலேயே காதல் என்ற சொல்லுடன் ஆயிரம் திரைப்படங்கள்! அதனால்தான் ‘காதல் போயின் சாதல்’ என்றார் கவிஞர் பாரதியும். இன்று மட்டுமல்ல, என்றைக்குமே இதுதான் உண்மை. நம்மால் எட்ட முடியாத இலட்சியத்தை அழகுபடுத்திப் பாடுவதும் கவிதைதான். எனவே வள்ளுவரும் காதலை இலட்சியப்படுத்தியே காட்டுகின்றார். அதற்காகவே காமத்துப்பால் என்ற பகுதியையும் தம் அரும்பெரு நூலில் படைத்துள்ளார்.
“காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இல்வாழ்க்கை” என்று கூறுகின்றார் ஒளவையார். காதலனும் காதலியும் பார்த்துப் பேசி மனம் ஒன்றுபட்டு அன்பை வளர்த்துப் பழகுவது களவியல் வாழ்க்கை, அது கற்பியல் என்ற இல்லறவாழ்க்கைக்கு அடிகோலுவதாகக் கற்பனை செய்தனர் பழங்காலத் தமிழர். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவர் உள்ளத்தைக் களவுகொண்டு “காதல காதல் அறியாமை உய்த்தல்” களவொழுக்கத்தின் முதற்படி.
காலங்காலமாக ஆண்டு பல ஆயினும் காதல் என்னும் உணர்வு என்றும் கவிஞர் நெஞ்சில் இளமையோடு வாழ்வது. காதல் என்னும் அன்பு அவா என்னும் வேட்கையில் விஞ்சித்து நிறையும்போது காமம் ஆகிறது. வாழ்க்கை நிறைவு பெறுகிறது. இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளுக்கு உட்படாதது காதல். மாறிவரும் சூழ்நிலைகளிலும் தொய்வின்றி வளர்வது. இடம், வழிமுறைகள் மாறினாலும் அடிப்படை உணர்வாகிய காதல் என்றும் நிலைத்து நிற்பது, காலத்தை வென்றது. இப்படி நாம் காதலை இலட்சியப்படுத்துகிறோம்.
காதலை இலட்சியப்படுத்திக் காட்டுவதோடு அல்லாமல், தமது காமத்துப்பாலை இன்றைய யதார்த்த வாழ்க்கைக்கும் வழிகாட்டுமாறு வகுத்துள்ளார் வள்ளுவர்.
அற நூல்கள் இலக்கியங்கள் ஆகமாட்டா என்பது பெரும்பான்மை இலக்கிய விமரிசகர்கள் கருத்து. அப்படிப்பட்ட விமரிசகர்களும் இலக்கியமாக ஏற்கக்கூடிய அற்புதமான நூல் நம் தமிழிலுள்ள திருக்குறள். இதன் பெருமையை அயல்நாட்டினரும் பாராட்டிப் போற்றுகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பால்கொண்ட நூல். அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும் பொருட்பாலில் 70 அதிகாரங்களும் காமத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன. குறைந்த எண்ணிக்கையில் பாக்களைக் கொண்டதாயினும் சுவையில் நிறைந்து நிற்பது காமத்துப்பால். அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் நேர்முகமாக இப்படிச் செய், இப்படி நடப்பது நல்லது என்று அறம் உரைக்கும் வள்ளுவர், காமத்துப் பாலில் அவ்வாறு அறம் உரைக்கவில்லை. மாறாக, தமிழ் மரபுப்படி களவு கற்பு என்னும் இரு துறைகளிலும் நாடகக் காட்சிகளாகவே வரைந்து காட்டியிருக்கிறார். ஆனால் முற்றிலும் அறத்தை அவர் தவிர்க்கவும் இல்லை.
பரத்தையரை நாடுவதும் கள்ளுண்பதும் தனிப்பட்ட அற வாழ்க்கைக்கு மட்டும் கேடு பயப்பன அல்ல, பொதுவாழ்க்கைக்கும் பெருங்கேடு பயப்பவை என்பது திருவள்ளுவர் கருத்து. பொருட்பாலில் இவை இரண்டையும் கடிந்துரைக்கிறார்.
சங்ககாலச் சமுதாயத்தில் கள்ளுக்கும் வரைவின் மகளிர்க்கும் சிறப்புவாய்ந்த இடம் இருந்தது. கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே. ஆண்கள் பரத்தையர்களாகிய பொதுமகளிருடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என அனுமதித்ததோடு அத்தகு காதற்காட்சிகளை வரைய மருதத்திணை என்ற ஒன்றைத் தனியே வகுத்திருந்தனர்.
“மருதத்திணையைச் சங்க நூல்களாகிய அகநானூறு முதலியவை கூறும் முறை வேறு, திருவள்ளுவரின் நூல்கூறும் முறை வேறு. திருவள்ளுவர் கூறும் மருதத்தில் பரத்தை என ஒருத்தி இல்லை. தலைவன் பரத்தையை நாடிச் செல்வதும் இல்லை. அக்காலத்து நூல்களில் எல்லாம் இடம்பெற்றுவந்த பரத்தையர்க்குத் திருக்குறளில் நல்ல இடம் இல்லை. வேண்டா என்று கடியப்படும் இடமே கிடைத்தது. திருவள்ளுவர் மருதத்திணைக்கு முன்னோர் வகுத்தோதிய இலக்கணத்தைப் புறக்கணித்து பரத்தையர்க்குக் காமத்துப்பாலில் இடம் இல்லாமல் செய்தார். நூலோர் மரபைக் கடந்து புதுவழி வகுத்தார்”- என்று அறிஞர் மு. வரதராசனார் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் கூறியுள்ளார்.
சங்ககாலத்தில் மக்கள் அன்றாடம் பருகும் பொருளாகக் கள்ளும் வழங்கியது. ஆனால் கள்ளும் பரத்தமையும் நல்லவை ஆகாது என்பது வள்ளுவரின் உறுதிப்பாடு. எனவே இவற்றைக் காமத்துப்பாலிலும் விலக்குகின்றார்.
“காமத்துப்பால் ஓர் இலட்சிய இல்லற உலகைப் படைக்கிறது. அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் எவற்றையெல்லாம் கடிந்தாரோ அவற்றை விலக்கிய வகையிலேயே காமத்துப்பால் காட்சிகளை வரைகின்றார் வள்ளுவர். சான்றாக பொருட்பாலில் வரைவின் மகளிரோடு உறவு கொள்வதை வன்மையாகக் கண்டிக்கும் வள்ளுவர், அதே அறநெஞ்சத் தோடு காமத்துப்பாலையும் வரைகின்றார். கற்பனைச் சிறகுகள் கொண்டு காதல்வானில் பறந்துபாடும் பறவையின் கீதம்போல விளங்கும் காமத்துப்பாலிலும் மருதத்திணையில் ஊடல் பற்றிய பேச்சில் மரபுக்காகவும் வரைவின் மகளிர் உறவை அவர் வாழவைக்கவில்லை” என்கிறார் சி.இலக்குவனார்.
அறம் பொருள் இன்பம் வீடு என்பது தமிழ் மரபு. உலகியல் வாழ்வை அறம்பொருள் இன்பம் என்று மூன்று வகையாகச் சமநிலைப்படுத்தி ஆராய்வது திருக்குறளின் சிறப்பு. இவற்றுள் எதை முன்னிலைப்படுத்துவது என்பதைவிட ஒன்றுடன் மற்றவை இயைந்து செயல்படுவதே பெருமைதரவல்லது என்பது வள்ளுவர் கருத்து. அறவழியில் பொருள் ஈட்டி இல்வாழ்க்கையில் தக்க முறையில் இன்பம் துய்ப்பவர்களுக்கு வீட்டைப் பற்றிய அச்சம் தேவையில்லை. அதனால் திருக்குறள் வீட்டைப் பற்றி எதுவும் கூறவில்லை.
இன்பம் என்பதைக் காமம் என்பதால் அதன் சிறப்பு குன்றும் அல்லவா? இன்று தமிழில் இன்பம் என்பது மனம்சார்ந்த நிறைமகிழ்ச்சி என்னும் பொருளிலும், காமம் என்பது உடல்சார்ந்த பொருளிலும் வழங்கிவருவதைக் காண்கிறோம். இதனால் மு. வரதராசனார், இன்பத்துப்பால் என்றே வள்ளுவர் வகுத்திருப்பார் என்று கூறியதோடு, முதலில் இன்பத்தையும் பிறகு பொருளையும் பிறகு அறத்தையும் வைத்து ஆராய்ந்தார். ஆனால் அவ்வாறன்று.
வள்ளுவர் பயன்படுத்தும் காமம் என்னும் சொல் காதலர் இருவரின் மன ஒருமையைக் குறிப்பதாகும். தொல்காப்பியம், கமம் என்றால் ‘நிறைவு’ என்று அர்த்தம் என்கிறது. கமம் என்பதிலிருந்து தோன்றுவது ‘காமம்’ என்ற சொல். தனித்து வாழும் ஆடவன், பெண் ஆகியவர்களின் வாழ்க்கை நிறைவு பெறுவது திருமண உறவிலே. எனவே மனித வாழ்க்கை யை நிறைவுபடுத்துகின்ற உறவினைக் காமம் என்று குறிக்கின்றார் வள்ளுவர்.
துறவுவாழ்க்கை மேற்கொள்பவனும் அரசாள்பவனும் பொருள்தேடி அலைபவனும் சாதாரணக் குடிமகனும் ஆகிய யாரும் வாழவேண்டிய நெறியறிந்து வாழ்ந்தால் தெய்வநிலை பெறலாம் என்பது வள்ளுவர் துணிபு. அவ்வாறு முறையறிந்து வாழும் வழிகளையே வள்ளுவர் தமது நூலில் கூறுகின்றார். அதனால்தான் முதலில் அறத்துப்பாலைக் கூறி, பின்னர் பொருட்பாலைக் கூறி, பிறகு இல்லற வாழ்க்கைக்கான காமத்துப்பாலையும் கூறி முடிக்கின்றார். காமத்துப்பால் அக இலக்கியங்களில் உயர்வான இடத்தைப் பெறுவது. உயிரினும் மேலான காதல் என்னும் இலட்சிய உணர்வின் மென்மையும் பண்பும் நயமும் உறுதியும் சுவையான ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
காமத்துப்பால் களவு-கற்பு என்னும் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் எட்டு அதிகாரங்கள் களவு. பின்வரும் பதினேழு அதிகாரங்கள் கற்பு. திருமணத்திற்கு முந்திய பகுதியும் பிந்திய பகுதியும் என இவற்றைக் காணலாம். இவற்றில் வள்ளுவர் வகுத்துரைக்கும் காதற்காட்சிகள் சிலவற்றைக் காணலாம்.
பருவமடைந்த ஆணும் பெண்ணும் ஒருவரையருவர் காணும் போது காதல் பிறக்கிறது. அவள் வருத்தும் தெய்வமகளோ, அழகு மயிலோ சாதாரணப் பெண் தானோ என்று அவன் மயங்குகிறான். அவள் கண்களோ மானின் கண்கள், மதுவை விட மயக்கம் தரும் கண்கள். உயிரையே உண்ணும் கண்கள்.
அவன் பெரிய போர்வீரன்தான். என்றாலும் அவன் கூற்றுவனைச் சந்தித்ததில்லை. பயந்ததுமில்லை. இந்தப்பெண்ணைக் கண்டபோதுதான் உயிர்கொல்லும் ஆற்றல் என்பது அழகியபெண் வடிவில், அமர்த்த விழிகளால் வேல்கொண்டு எறியும் என்பதை அறிந்தானாம்.
அவன் அவளை நோக்குகிறான், அவளோ நிலம் நோக்கி மெல்லச் சிரிக்கின்றாள். இருவர் கண்களும் சந்தித்துவிட்டாலோ பேச்சுக்கே இடமில்லை. இவளிடம் இரண்டு வகையான பார்வைகளும் இருக்கின்றனவே அது எப்படி என்று திகைக்கிறான். இவளுடைய ஒரு நோக்கு நோய் தருகிறது, இன்னொரு நோக்கோ அதற்கு மருந்தாக அமைந்து விடுகிறதே என்று வியக்கிறான்.
இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.
ஏனென்றால் அவள் உண்டாக்குகின்ற காதல் நோய்க்கு மருந்து அவளே அல்லவா?
கண்ணும் கண்ணும் சேர்ந்து காதல் கவிதை வடிக்கும். வாய்பேசச் சொற்கள் இருக்காது. அவை பயனற்று மௌனமாகும். வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல என்கிறான் காதலன்.
ஐம்புலன்களுக்கான நிறைவும் பெண்ணிடமே உள்ளது. பிரிந்திருக்கும்போது சுடுகின்றது, நெருங்கியிருக்கும்போதோ தண்ணென்றிருக்கிறது- இப்படிப்பட்ட புதுமையான தீயை எங்கிருந்து பெற்றாள் இவள் என்று வியக்கிறான் அவன்.
நீங்கின் தெறு£உம் குறுகுங்கால் தண்என்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
அவர்கள் உடம்பும் உயிரும் என வாழ நினைக்கின்றனர். அவர்கள் சேர்ந்து வாழ்தல் என்றும் புதுமை நல்குவது-அரிய நூல்களைப் படிக்கப்படிக்க அறியாமை வெளிப்படுவது போல என்றும் புதுமை தருவது.
அவன், அவள் நலத்தைப் பாராட்டுகின்றான். அனிச்சமலரைக் காம்பு களையாமல் அவள் சூடிக்கொண்டதால் இடையே ஒடிந்துவிட்டது என்கிறான். நிலவும் அவள் முகத்திற்கு ஒப்பில்லை. குவளையோ, அவளைக் கண்டால் தான் அவளுக்கு ஒப்பில்லை என்று தலையைக் கவிழ்த்துக் கொள்ளும்.
அவள் வாயில் ஊறிய நீர், பால் கலந்த தேன் போன்றது. அவளுக்கும் எனக்கும் உள்ள நட்பு, உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்புப் போன்றது என்கிறான் அவன்.
அவளோ, இன்னும் ஒருபடி மேலே சென்று தன் காதற்சிறப்பை உரைக்கிறாள். நெஞ்சில் அவன் இருப்பதால் அவள் வெப்பமான உணவையும் உண்ணமாட்டாளாம். கண்ணில் அவன் இருப்பதால் கண்ணுக்கு மையிடவும் மாட்டாளாம். இப்படிப்பட்ட காதல் வாழ்வில் இருவர் மனமும் ஒன்றுபட்ட நிலையைக் காண்கிறோம்.
காதலென்றாலும் எப்போதுமே சந்தித்துக்கொண்டிருக்க இயலுமா? பிரிவின்போது தங்கள் வலிமையின்மையை இருவருமே உணர்கின்றனர். எனவே காமம் என்னும் பேராற்றில் என் ஆண்மை அடித்துக்கொண்டு போய்விட்டதே என்று வருந்துகிறான் அவன். என் காதல் வேட்கை, நான் எளியவள் என்றும் கருதாமல் அவ்வப்போது வெளியில் வெளிப்பட்டுவிடுகிறதே என்று அஞ்சுகிறாள் அவள். ஊரார் சற்றே அறிந்ததால் அவள் காதலைப் பற்றி அலரும் தோன்றிவிடுகிறது. ஆனால் அதுவும் நல்லதுதான்! தன் காதல் நோய்க்கு ஊரார் பேச்சு எருவாகவும், அன்னையின் ஏச்சு நீராகவும் உதவுகிறது என்கிறாள் அவள்.
பின்னர் திருமணம் நிகழ்கிறது. அவனும் அவளும் திருமணம் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கை கற்பியல் என்று சொல்லப்படுகிறது. திருமணம் புரிந்துகொண்டபின் என்றைக்குமே ஒன்றாக இருக்கமுடிவதில்லை. உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றும் ஒரு பொருள் இருக்குமல்லவா? அவன் பொருள்தேடவோ, கல்வி கற்கவோ, அரசுப் பணி காரணமாகவோ பிரிந்து செல்ல நேரிட்டால் அவள் வருந்துகிறாள். காதலன் பிரிகின்ற தருணத்தில் காதலியின் மனநிலை, பிரிந்தபின் காதலனை நினைத்து அவள் உறுகின்ற துன்பம், அவள் கண்கள் அவனைச் சந்திக்க விரைந்து துன்புறுவது, உடலில் பசலை பரவுவது, அழகு குலைவது, தனிமையில் அவளுக்கு ஏற்படும் வாட்டம், தன் காதலனை நினைத்துப் புலம்புவது, கனவில் தோன்றும் எண்ணங்கள், மாலைப்பொழுதின் மயக்கம், மனத்துடன் பேசி ஆறுதல் தேடுவது, அடக்கம் கெடுவது, ஆசையில் துடிப்பது, பிறருக்குத் தன் துன்பங்களைக் குறிப்பினால் தெரிவிப்பது, காதலனுடன் கூடி மகிழத் துடிப்பது என்ற எல்லா நிலைகளும் வள்ளுவரால் சிறப்பாகச் சொல்லோவியங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
அவன் சென்று வருகிறேன் என்கிறான். அவளோ நீ வரும் வரை யார் உயிரோடு இருக்கிறாளோ அவளுக்கு உன் வரவைச் சொல் என்கிறாள்.
தொட்டால் மட்டுமே சுடவல்லது தீ. ஆனால் தொடாமல் இருந்தாலே சுட வல்லது காமத்தீ என்று ஒப்பிட்டுப் பார்க்கிறாள் அவள்.
காமமும் நாணமும் ஒத்துச் செல்லாதவை. நாணத்தை விட்டால்தான் இன்பம் துய்க்க முடியும். காமத்தைவிட்டால்தான் நாணத்தோடு இருக்கமுடியும். பெண்களுக்கு மட்டுமல்ல, நற் குடிப்பிறந்த ஆண்களுக்கும் நாணம் உண்டு. அதனால்தான் சங்ககாலத் தோழன் தலைவனிடம் காமத்தினால் நீ உன் நிறையை விட்டுவிட்டாய் என்று கடிந்துகொள்வதைக் காண்கிறோம். சங்ககாலத் தலைவனும், தன் தோழனிடம், என் குடிப்பிறப்பையும் மீறிக் காமநோய் வெயிலில் காயும் பாறைமேலிட்ட வெண்ணெய் போலப் பரந்துசெல்கிறதே என்று வருந்துவதையும் காண்கிறோம். ஆண்களுக்கே இப்படி என்றால் பெண்களுக்கு எப்படி என்று சொல்லவும் வேண்டுமோ? அதனால், ஒருபுறம் காமம் என்னை இழுக்கின்றது, மறுபுறம் நாணம் என்னை இழுக்கின்றது. இப்படிக் காவடியின் இரு குடங்கள்போல என்னை இருபுறம் இழுத்து என் உயிரை வாங்குகின்றனவே என்று துன்புறுகின்றாள் தலைவி.
இன்னோரிடத்திலும், “என் பொன்னான மனமே, நான் காதலில் கட்டுண்டு ஆசை வலையில் வீழ்ந்து விட்டேன், எனவே ஒன்று நீ நாணத்தை விடு அல்லது காமத்தைவிடு, இரண்டையும் ஒன்றாக வைத்துக் கொள்ள முடியாதே” என்கிறாள் தலைவி.
காமம் கடல்போலப் பொங்கிச் சூழ்ந்துள்ளது. ஆனால் அதில் பாதுகாப்பாகப் பயணம் செய்யும் துணை இல்லையே என்று வருந்துகிறாள்.
காமக் கடல் மன்னும் உண்டே, அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்.
காதலில் முதல்வேலை கண்களுக்குத்தானே! “வாராக்கால் துஞ்சா, வரின் துஞ்சா ஆயிடை ஆரமர் உற்றன கண்” என்று தன் கண்களையே நினைத்து வருத்தப்படுகிறாள் தலைவி. “இல்லாத சமயத்தில் அவர் வரும் வழிபார்த்து விழிகள் மூடாமல் காத்துக் கிடக்கின்றன. வந்துவிட்டாலோ அவரைப் பார்த்துக்கொண்டே தூக்கத்தை விட்டுவிட்டன. இப்படித் துன்பப்படுகின்றனவே என் கண்கள், ஐயோ பாவம்” என்கிறாள்.
காதலன் பிரிந்தால் பசலை நோய் வந்து விடுகிறது. உடல் வெளுத்து மெலிந்து போகிறது. காதலிலே மயங்கித் தலைவனைத் தழுவியிருந்தேன், தழுவலை விலக்கிச் சற்றே புரண்டுபடுத்தேன், அதற்குள் பசலை வந்து என் உடம்பை அள்ளிக்கொண்டுவிட்டதே என்று வியக்கிறாள்.
புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொள்வற்றே பசப்பு.
காதலன் பிரிந்துபோய்விட்டான். அதனால் அவளுக்குத் துயரம் மிகுதியாகிறது.
தமிழில் வாழ்தல் என்னும் சொல்லுக்கு மக்கள் மத்தியில் தனி அர்த்தம் உண்டு. கணவனோடு நன்கு இணைந்து வாழ்பவளை வாழ்வரசி என்பார்கள். கணவனோடு சேராமல் இருப்பவளை வாழாவெட்டி என்பார்கள். வாழ்தல் என்றாலே கணவனோடு இருத்தல் என்று மக்கள் அகராதியில் பொருள். வள்ளுவர் இந்த அர்த்தத்திலும் அச்சொல்லைக் கையாள்கிறார்.
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
என்று நினைக்கிறாள் வள்ளுவத் தலைவி. தாம் விரும்பும் காதலரின் அன்பில் படிந்து இணைந்திருப்பவர்களுக்கே வாழ்கிறோம் என்னும் பெருமிதம் நிலைக்கும் என்கிறாள்.
கள்ளையும் காமத்தையும் ஒப்பிடும் குறட்பாக்கள் பல உள்ளன. கள்ளை விலக்கச் சொல்லும் வள்ளுவர் காமத்தை விலக்கச் சொல்லவில்லை. கள் மனித உணர்வை மழுங்கச் செய்வது. ஆனால் காதல் உணர்வுடன் அறிவின் பாற்பட்டதும்கூட. எனவே அது கள்ளைப் போல் மயக்கத்தைத் தருவது மட்டுமன்றிக் காதலர் ஒருவரை ஒருவர் கண்டபொழுதே பெரு மகிழ்ச்சியை ஊட்டுகிறது. அதனால் கள்ளைவிடச் சிறப்புமிக்கது காமம்.
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
கள் உண்டவர்க்கே மகிழ்ச்சி செய்யும். காமம் பார்த்தவர்களுக்கே மகிழ்வூட்டும்.
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
மது உண்பவர்களுக்கு மேலும் உண்ண உண்ண விருப்பம் கூடுகிறது. காமமும் அலர் வாயிலாக வெளிப்படும்போது இனிதாகிறது.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
ஒருவகையில் கள்ளைவிட இனியது காமம்தான். உட்கொண்டபோது மட்டுமே களிப்புத் தருவது கள். உள்ளத்தில் நினைத்தபோதெல்லாம் இனிமை தருவது காதலே அல்லவோ?
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு.
களிப்பு என்றாலே, கள்-இப்பு, கள்ளால் உண்டாகும் இளிப்பு என்று பொருள். பிற பொருள்களால் உண்டாகும் இன்பத்தைக் களிப்பு என்று பழங்காலத்தில் சொல்வதில்லை. ஆனால் எண்ண எண்ண இனிப்பது, காணக்காண மகிழ்வது ஆகிய காமம், கள்ளைவிட மிஞ்சிய களிப்புத் தருகிறது என்கிறார் வள்ளுவர்.
காதலன் கனவில் வந்தாலும் கனவுக்கே விருந்து படைப்பேன் என்கிறாள் தலைவி. என் காதலர் வேடிக்கையானவர். நான் உறங்கும்போது கனவில் என்னைத் தழுவிக்கொண்டிருக்கிறார், ஆனால் கண்விழித்துப் பார்க்கிறேன், என் நெஞ்சிற்குள் விரைந்து புகுந்துகொண் டாரே-இது என்ன விளையாட்டு என்கிறாள்.
மாலைநேரத்திற்கு என்மேல் என்ன மாளாக்கோபம்? என்னை நெருப்பாய் எரிக்கிறதே என்கிறாள். காதலரைப் பிரிந்து நான் தவிக்கும் ஒவ்வொரு நாளும் மாலைப்பொழுது கொலைக்களத்தில் கொடியவர் ஓங்கும் வாள் போல வாட்டுகிறதே என்கிறாள்.
அவன் வந்தால் ஊடல் கொள்வேனோ, இல்லை கூடுவேனோ என்று நினைக்கிறாள். வழிமேல் விழிவைத்து அவன் வரவை எதிர்பார்த்து ஏமாற்றமுற்றுக் கண்களும் ஒளியிழந்து போயின. அவனைப் பிரிந்த நாட்களை எண்ணி விரல்களும் தேய்ந்தன என்கிறாள்.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாளற்றித் தேய்ந்த விரல்.
அவரைக் காணும்போது அவருடைய குறைகள் தெரிவதில்லை. காணாதபோது அவைகளே தெரிகின்றன. பிரிந்திருந்து வந்தவரிடம் பிணங்கி என் வருத்தத்தை உணர்த்தத்தான் சென்றேன், ஆனால் தோழி, அவரைக் கண்டவுடன் எல்லாம் மறந்து என் மனம் அவரைச் சென்று அடைந்துவிட்டது என்று தோழியிடம் வெளிப்படுத்துகிறாள். பிறகு தன் நெஞ்சையே வைத்து கொள்கிறாள்.
உறாஅதவர்க் கண்ட கண்ணும் அவரைச்
செறாஅர் சேறி என் நெஞ்சு.
என்மேல் உரிய அன்பு கொள்ளாதவர் என்று தெரிந்திருந்தும், எந்த நம்பிக்கையில், அவர் வெறுக்கமாட்டார் என்று கருதி, என் நெஞ்சே, நீ அவரை நாடிச் செல்கின்றாய் என்று கேட்கி றாள்.
காதலர்கள் சிறு சண்டையிடுவது-ஊடுவது, பின்னர் இன்பமுறக் கூடுவதற்கே. எனவே ஊடல் என்பது அளவோடு இருத்தல் வேண்டும். உணவில் உப்பு போல. அன்பு நிறைந்த நெஞ்சங்களில் ஊடல் மிகுந்த இன்பம் தருவது. நீரும் நிழலும் அடுத்தடுத்து இருப்பதைப்போல்தான் ஊடலும் கூடலும்.
அவள் எதற்கெடுத்தாலும் ஊடுகிறாள். அவளைக் கூர்ந்து பார்த்து அழகை இரசித்தால், யாரை நினைத்து என்னை ஒப்புநோக்குகிறாய் என்கிறாள். ஆனால் அவன் தும்மிவிட்டாலோ ஏதேனும் நேர்ந்துவிடப்போகிறது என்று உடனே பயந்து ஊடலை மறந்து நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறாள். பின்னர் யாரை நினைத்துத் தும்மினாய் என்று ஊடல் கொள்கிறாள். அவன் பாவம், தும்மக்கூட வழியின்றி அதை அடக்கிக் கொண்டாலோ, உனக்கு நெருக்கமானவர்கள் உன்னை நினைக்கிறார்கள், அதை என்னிடம் மறைக்கத்தான் தும்மலை அடக்குகிறாயோ என்று ஊடல் கொள்கிறாள்.
யாரையும்விட நான் உன்னைக் காதலிக்கிறேன் என்கிறான் அவன். அதனைத் தவறாகத் திரித்து யாரைவிட என்னை மிகுதியாகக் காதலிக்கிறீர் என்று ஊடல் கொள்கிறாள்.
இம்மைப் பிறப்பில்-இப்பிறப்பில் உன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று தேற்றுகிறான். அப்படியானால் வரும்பிறவிகளில்-என்றும் பிரியமாட்டேன் என்று சொல்லவில்லையே என்று கண்களில் நீர்நிறைத்துக் கலங்குகிறாள்.
உன்னையே நான் எப்போதும் நினைக்கிறேன் என்கிறான் அவன். நினைத்தல் உண்டானால் மறத்தலும் உண்டுதானே? அப்படியானால் என்னை மறக்கும் கணங்களும் உண்டோ என்று ஊடல்கொள்கிறாள் அவள். இனிய மொழிகள் பேசி, உன் ஊடலைத் தணித்துக்கொள் என்று தலைவன் வேண்டினாலோ, இப்படிப் பல பெண்களிடம் பேசிப் பழக்கமா என்கிறாள் அவள்.
தலைவன் தலைவியிடம் ஊடலில் தோற்றுத்தான் போகிறான். ஆனால் ஊடலில் தோற்றவர் வென்றவரே. ஏனெனில் அது கூடலில்தானே முடியப்போகிறது?
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலில் காணப்படும்.
அவர் எந்த வகையிலும் தவறில்லாதவர் ஆயினும் அவருடன் ஊடுவதில் மகிழ்கிறேன், ஏன்? ஊடல் அதிகமாக அதிகமாகக் காதலை வளர்த்து இன்பம் தரவல்லவர் அவர் என்று தனக்குள் நினைத்துக்கொள்கிறாள் தலைவி.
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர அளிக்கும் ஆறு.
உண்ணும்போது உணவு எவ்வளவு சுவையாக இருக்கிறது? ஆனால் அந்த உணவு செரிக்கவில்லை என்றால் அடுத்தவேளை உண்ணமுடியுமா? உண்பது போன்றது கூடல். உண்பது செரிப்பது போன்றது ஊடல். உணலினும் உண்டது அறல் இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. எனவே ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின் என்று முடிக்கிறார் வள்ளுவர்.
இப்படிக் கற்பு வாழ்க்கையில் இருவர் மனமொத்துப் பழகும் தன்மை இன்பம் அளிப்பதாகும். இவ்வாறு காமத்துப் பாலில் இருவர் அன்புநிலையும் அவர்தம் ஒழுக்கநிலையும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
கற்பியலில் உள்ள 18 அதிகாரங்களிலும் காதலன் காதலியைப் பிரியும் தருணத்தையும், பிரிவையும் நினைத்து ஏற்றும் அனுபவித்தும் காதலர் உறும் துயரத்தையும் துன்பத்தையும் பலவாறாக விளக்குவது பெரும்பாலும் காதலி கூற்றாகவே அமைந்துள்ளது. ஒருதலைக் காதல் இனிக்காது என்று கூறும் வள்ளுவர், 180 பாக்களில் பத்தில் ஒரு பங்கு-18 பாக்கள் மட்டுமே காதலன் கூறுவதாகவும், 160 பாக்களைக் காதலி கூறுவதாகவும் அமைத்துள்ளார். இது பிரிவின் துன்பம் பெண்களுக்கே பெரிது என்று கூறுவதுபோல அமைந்துள்ளது. களவியலில் பெரிதும் பேசுவது காதலனே. 70 பாக்களில் 51 பாக்கள். திருமணத்திற்கு முன் பெரிதும் பேசும் ஆடவன், திருமணத்திற்குப் பின் பேசாமல் இருந்துவிடுகிறான். “திருமணத்திற்குப் பின் ஆடவர் பேச்சுரிமை பறிபோவதற்குத் திருக்குறள் பழமையான சான்றாக நிற்கிறதோ என்னும் கேள்வி எழுகிறது. தந்தைக்குப் பேச வாய்ப்பில்லாததால் மொழியே தாய்மொழியாகி விட்டது போலும்” என்று இதனை அங்கதமாகக் காண்கிறார் ஓர் உரையாசிரியர்.
இன்றைய யதார்த்த நிலையில் குறள் காட்டும் கற்பனை வாழ்க்கையின் சிறப்பு என்ன? “மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்” என்பது வள்ளுவர் கருத்து. அதாவது காமத்தின் உண்மையான இன்பப் பயனை மென்மையாகத் துய்ப்பவர்கள் சிலரே. காதலுக்குக் காலம் வேண்டும். நிறைவான மனம் வேண்டும். தன் வாழ்க்கைத் துணையின் நலங்களைத் தலைவன் விரும்பி மகிழ வேண்டும். அதேபோலத் தன் கணவனின் நிறைவுகளை எண்ணி மனைவி மகிழ வேண்டும். பின்னர் அன்பாக ஆதரவாகப் பேசி மேற்கொள்ளும் உறவில் மனம்நிறைய வேண்டும். காமம் என்பது நிறைவுதான். யாருடைய நிறைவு? நம்முடன் உறவில் இணைபவரின் நிறைவு. எனவே கணவன் மனைவியின் நிறைவையும், மனைவி கணவனின் நிறைவையும் நினைப்பதுதான் காமம். இதற்கெல்லாம் இந்த அவசரக் காலத்தில் நேரம் இருக்கிறதா? ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில் நாம் காலத்தைச் செலவிடுகின்றோமா? வள்ளுவர் கூறிய மூன்றில் முதலையும் இறுதியையும் மறந்துவிட்டோம் அல்லவா? நடுவில்இருப்பதை மட்டும் நாடித்தானே ஓடுகின்றோம்? அப்புறம் வாழ்க்கை எப்படி நிறைவாக இருக்கும்? இவற்றை எல்லாம் சிந்திக்க வைத்து, இல்லற வாழ்க்கையைச் செம்மையாக நடத்துவதற்கு வழிகாட்டுகிறது திருக்குறட் காமத்துப்பால்.

இலக்கியம்