வெள்ளிவீதியார் கவிதைகள்

வெள்ளிவீதியார் கவிதைகள்

(இக்கட்டுரை, திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழாய்வுத் துறையின் பதினோராம் ஆசிரியர் கருத்தரங்கிற்கென எழுதப்பட்டது. 30-09-1997 அன்று அக்கருத்தரங்கில் படிக்கப்பெற்றது.)

1

வெள்ளிவீதியார் அகம் மட்டுமே பாடிய ஒரு சங்கக் கவிஞர். (அவர் பாடியதாகச் சொல்லப்படும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இங்கே கணக்கில் கொள்ளப்பட வில்லை.) அவர் பாடியவையாகக் கிடைத்துள்ளவை:
அகநானூற்றில் இரு கவிதைகள் – 45, 362
குறுந்தொகையில் எட்டுக் கவிதைகள் – 27, 44, 58, 130, 146, 149, 169, 386
நற்றிணையில் மூன்று கவிதைகள் – 70, 335, 348
ஆக 13 கவிதைகள்.
வெள்ளிவீதியார் கவிதைகளில் ஒரே ஒரு உணர்ச்சிதான் ஆழமாக வெளிப்படு கிறது. காதலன் அல்லது தலைவன் கிடையாமை அடிப்படையில் பிறந்த ஆழ்ந்த சோகம். இந்த உணர்வைச் சுருக்கமாக ஆற்றாமை எனலாம். பழைய மரபின்படி, காமமிக்க கழிபடர் கிளவிகள் அவரது கவிதைகள். வேறு எந்த உணர்ச்சியையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தவில்லை.

2

தாம் எடுத்துக்கொண்ட விஷயத்தின் அடிப்படையில் வெள்ளிவீதியார் கவிதைகள் ஒரு பெரும் மீறலைச் சாதிக்கின்றன. ஓர் ஆண் தனது காதலுணர்வை வெளிப்படுத்தலாம், பெண் அவ்வாறு வெளிப்படுத்தல் ஆகாது என்ற சமூகக் கட்டுத்திட்டத்தை உடைத்துக்கொண்டு பிறந்தவை அவை.

காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான. (தொல்காப்பியம், பொருளதிகாரம், 106)

தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழத்திக் கில்லை
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப. (தொல்காப்பியம், பொருளதிகாரம், 116)

ஒரு தலைவி, தலைவன்முன் தன் வேட்கையைக் கிளத்தல் கூடாது; மண்கலத்தில் நீர் உள்ளது எனபதை அதன் கசிவு காட்டுவதுபோல, வேட்கை தலைவியிடம் வெளிப்படவேண்டும் என்னும் பழங்காலக் கோட்பாட்டினை இதன் வாயிலாக அறிகிறோம். பெண்ணின் காமவேட்கையின் சமூகக் கட்டுப்பாட்டுப் பின்னணியே இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படை. அதாவது, ஆண் தனது காம வேட்கையை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம், அதனால் சமூகம் ஒன்றும் கெட்டுப்போகாது; ஆனால் பெண்ணின் வேட்கை வெளிப்பட்டால் சமூகம் கெட்டுப்போய்விடும் என்ற எண்ணம்தான் இந்தமாதிரிக் கட்டுப்பாட்டின் நோக்கம்.

வெள்ளிவீதியார் கவிதைகள் இம்மாதிரிக் கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை. “எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது, பசலை உணீஇயர் வேண்டும், திதலை அல்குல் என் மாமைக் கவினே” எனப் பெண்ணின் உடல்சார்ந்த ஆசையை வெளிப்படையாகப் பேசும் கவிதைகள் இவை. “எமக்கும் பெரும்புலவாகி, நும்மும் பெறேஎம் இறீஇயர் என் உயிரே” என்று பெண் தனது ஆசையினால் வதைபடுவதைக் காட்டுபவை.

இவ்வாறு ஒரு பெண்- சங்ககாலத் தலைவி- தனது வேட்கையை நாணமற்று, மண்கலக் கசிவுபோல அன்றி, வெளிப்படையாக வே காட்டுதல் வெள்ளிவீதியார் கவிதைகளின் தனித்துவம் ஆகும். இது இலக்கணத்தை மீறிய சுதந்திரக் குரல். ஆகவே தமிழ்/இந்தியப் பெண்ணின் ஒரு மூலக் குரலாகவும் இதனைக் காணமுடியும்.

3

இன்னொரு வகையிலும் வெள்ளிவீதியாரின் கவிதைகள் ஒரு மீறலை உட்கொண்டுள்ளன என்று மரபுவழி ஆய்வாளர் சொல்கின்றனர். வெள்ளிவீதியும் ஒளவையாரும் – இவர்கள் இருவர் மட்டுமே – தலைவியின் எல்லைமீறிய ஆற்றாமை உணர்ச்சியைப் புலப்படுத்தியவர்கள். இவர்கள், “வாழ்க்கைக் குறிப்பு தந்து காட்டிக்கொடுத்தவர்கள்” என்று அறிஞர் வ. சுப. மாணிக்கம் கூறியிருப்பதாக நினைவு. இது அகப்பாடல் மரபுகளுக்கு எதிரானது என்பது அவரது வாதம். ஆதிமந்தியைப் பற்றிய குறிப்பை வெள்ளிவீதியார் தர, வெள்ளி வீதியார் பற்றிய குறிப்பை ஒளவையார் தர, இருவரும் அகப்பாடல் மரபை மீறி வாழ்க்கையோடு இணைத்துவிட்டார்கள் என்பது வ. சுப. மாணிக்கம் போன்ற மரபுவழி ஆய்வாளர்களின் வாதம்.

மேற்கண்ட கருத்துக்கு இரு மறுப்புகளை நாம் தர இயலும். சங்க அகப்பாடல்கள் யாவும் நாடகத்தன்மை வாய்ந்த தனிப்பேச்சுகள் (டிரமாடிக் மானோலாக்ஸ்) என்பது அறிஞர்கள் கருத்து. அவை நாடகத்தில் நடிப்பவனின் பேச்சுப் போன்றவை. புனைவே அன்றி வாழ்க்கையை உரைப்பன அல்ல. இலட்சியப் படுத்தப்பட்ட, பத்துவிதப் பொருத்தங்களும் தமக்குள் கொண்ட, தலைவனும் தலைவியும் ஊழ்வினையால் எதிர்ப்பட்டு, தாங்களே கொண்ட காதலைச் சொல்வன சங்க அகக் கவிதைகள். இம்மாதிரி உண்மையில் சங்ககாலச் சமூகத்திலும் நடந்திருக்க இயலாது. அதனால்தான் முதல் உரையாசிரியர் இளம் பூரணர், “ஐந்திணை சிறுபான்மை, பெருந்திணை என்பதே நடைமுறையில் அதிகமாகக் கடைப்பிடிக்கப்பட்டது ஆதலின் பெருந்திணை எனப் பெயர் பெற்றது” என்று விளக்கியுள்ளார். இலட்சிய மயப்படுத்தப்பட்ட காதலர் பிம்பங்களே உரையாடுவதால்தான், அவர்கள் பெயரைச் சுட்டக்கூடாது என்ற கட்டுப்பாடும் பிறந்தது.

1. சங்ககால மரபின்படியே, வெள்ளிவீதியார் பாடல்களிலோ, ஒளவையார் பாடல்களிலோ தலைவன் தலைவி பெயர் சுட்டப்படவில்லை. உவமையாகவே வெள்ளிவீதி, ஆதிமந்தி ஆகிய பெயர்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. ஆகவே இது மரபுமீறல் அல்ல. இவ்வகையில் பட்டினப்பாலை செய்த மீறலைக்கூட வெள்ளிவீதியாரின் கவிதைகளும் ஓளவையாரின் கவிதைகளும் செய்துவிடவில்லை.

2. வெள்ளிவீதியையும் ஒளவையையும் சங்க மரபை மீறியவர்களாகக் கருதும் ஆய்வாளர்கள், பிற சங்க அகப்பாக்கள் யாவும் நாடகத்தன்மை வாய்ந்தவை, இலட்சிய மயமாக்கப்பட்ட வாழ்க்கையின் புனைவின் மாதிரிகள் என்று கொண்டு, இந்த ஓரிரு பாக்கள் மட்டும் அவற்றின் மீறலாக, யதார்த்தக் கவிதை களாக, வாழ்ககையில் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்வனவாக அமைந்துவிட்டன என்கின்றனர்.
அவ்வாறு கருத இடமில்லை. எப்போது எல்லாச் சங்க அகப்பாக்களும் நாடகத் தன்மை கொண்ட புனைவுகள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அப்போதே மேற்கண்ட இருவர் கவிதைகளும் புனைவுகளே என்றாகிவிட்டது.

வெள்ளிவீதி யார் காட்டும் தலைவியின் செய்கையை வெள்ளிவீதியார்மீதே ஏற்றிக்காணும் போக்கு தவறானது. நாடகத்தன்மை கொள்ளாத, தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்பவைகூட, கவிஞர்களின் செயற்கையான புனைவுகளே அன்றி, அவர்களது இயல்பான உணர்ச்சி வெளியீடுகள் அவை என்றோ, வாழ்ககை அனுபவக் குறிப் புகள் என்றோ கெள்வது சரியான இலக்கிய நோக்கு ஆகாது.

இவையன்றி, இன்னொரு மறுப்பையும் நாம் கூறலாம். வெள்ளிவீதி, ஆதிமந்தி, ஒருமுலை குறைத்த திருமாவுண்ணி போன்றவர்களை எல்லாம் அக்காலப் புனைவுச்சட்டகத்தின் ஒரு பகுதியாகவே நாம் காணமுடியும். பெயர்சுட்டுவதால் தனிவிளைவு ஏற்படாத அளவுக்கு ஆதிமந்தி கதை, வெள்ளிவீதி கதை, திருமாவுண்ணி கதை போன்றவை தொன்மங்களாக அக்காலத்தில் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இக்கவிஞர்கள் எடுத்தாண்டிருக்க மாட்டார்கள்.

இதற்கு ஓர் உதாரணத்தைத் தரலாம். கல்கியின் சிவகாமியின் சபதம் ஒரு புனைகதை. அதில் வரும் சிவகாமி பாத்திரத்தை வரலாற்றுப் பாத்திரம் என்றே நம்புபவர்கள் இருக்கிறார்கள். கலங்கரை விளக்கம் என்னும் திரைப்படத்தில் இப் பாத்திரம் உண்மையாக இருந்தவள் போலவே பேசப்படுகிறாள். அதனால், உண்மையாகவே சிவகாமி இருந்தாள் என்றாகிவிடுமா? புனைவின் தொடர்ச்சி யான இன்னொரு புனைவு அது. இதுபோலத்தான் ‘காதலர்க் கெடுத்த ஆதிமந்தி’, ‘வெள்ளிவீதி போலப் பேதுற்று உழலுதல்’ போன்றவற்றை அக்காலப் புனைவு களின் தொடர்ச்சியாகவே கருதலாம். இப்படி நோக்கும்போது வெள்ளிவீதியார் கவிதைகளோ, ஒளவையார் கவிதைகளோ மீறல் எதையும் நிகழ்த்திவிடவில்லை என்பது தெளிவு. கவிதை என்பதே ஒரு புனைவு. அதில் வரும் செய்திகளை வைத்து வாழ்க்கை வரலற்று ஆராய்ச்சி செய்வது தவறு.

4

சங்க காலத்தில் வாழ்ந்த எத்தனையோ கவிஞர்களின் பெயர்களைப் போலவே வெள்ளிவீதி என்ற பெயரும் காரணம் அறிய இயலா மறைபொருள் தன்மை கொண்டுள்ளது. வெள்ளிவீதி என்ற பெயரை ஆய்ந்த ஆய்வாளர்கள், சைவர்களாக இருப்பின், அவர் மதுரை வெள்ளியம்பலத் தெருவில் வாழ்ந்தவராக இருக்கலாம். அதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்பர். வெள்ளியம்பல வீதியார் என்னும் பெயர், வெள்ளிவீதியார் என்று ஆகுமா? மேலும் திருவிளையாடற் புராணத்தில் திரும்பத் திரும்பக் குறிக்கப்படும் வெள்ளியம்பலம், சங்ககாலத்தில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இக்காரணம் ஏற்புடையதல்ல.

வெள்ளிவீதியார் கவிதைகளைக் காணும்போது அவர் பெயர் ஒருவேளை காரணப் பெயராக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. தங்கள் தொடரால் பெயர்பெற்ற சங்கப் புலவர்கள் பலர் உள்ளனர். அதுபோலவே, அவர் பாட்டில் இடம் பெறும் ‘வெள்ளைவீததை’ என்ற தொடரினால், ‘வெள்ளைவீததையார்’ என்று அவர் பெயர்பெற்றிருக்கலாம். பிறகு அது ‘வெள்ளிவீதியார்’ என மருவியிருக்கலாம் என்பார் முனைவர் அருளி. வெள்ளைவீததையார் என்ற தொடர் வெள்ளிவீதியார் என மருவுதல் மொழியியல் மாற்றத்தின்படி இயலாது.

வெள்ளிவீதி என்ற சொல், வானத்திலுள்ள வெண்நட்சத்திரங்கள் செறிவாகத் தோன்றும் பாதை போன்ற ஓர் அமைப்பைக் குறிக்கிறது – அதாவது பால்வழி மண்டிலத்தைக் (மில்க்கி  வே) குறிக்கிறது என்று காணமுடியும். அதாவது இன்று நாம் பால்வழி என்று சொல்வதே அக்காலத்தில் வெள்ளிவீதி என்று வழங்கியிருக்கலாம். அப்பெயரை இக்கவிஞருக்கு இட்டிருக்கலாம்.

வெள்ளிவீதியாரின் பாடல்களில் அநேகமாகப் பாடல்தொறும் வரும் ஒரு வண்ணப் படிமம், வெண்மை (அல்லது வெள்ளி – இக்கால வழக்கில் வெள்ளை). அவரது பெயரில் வெண்மை அடைமொழியாகி உள்ளதுபோலவே, அவரது பாக்களிலும் வெண்மை மிகுதியான இடம் பெறுகிறது.

வெண்கோட்டு யானை, இலங்கு வெள்ளருவி – அகம். 362.
வெண்டலைச் சிதவலர் – குறு. 140.
வெண்ணெய் உணங்கல் போல – குறு. 58.
வால் வெள்ளெயிறு – குறு. 168
வெண்மணல் – குறு. 386.
வெள்ளாங்குருகு – நற். 70

போன்ற தொடர்களைப் பாருங்கள். மேலும், திங்கள், விண்மீன், பால் போன்ற வெள்ளிய பொருள்களும் அவரது பாக்களில் மிகுதியாக இடம் பெறுகின்றன. பொதுவாக வெள்ளி என்பது எட்டாத் தன்மை, அறியாமை, இன்மை, களங்கமற்ற தன்மை போன்ற பண்புகளுக்கு உருவகமாக இயங்குவது.
வீதி என்ற சொல் நடத்தல், அடிக்கடி புழங்குதல், இன்னும் தீவிர எல்லையில் உழத்தல் ஆகிய சொற்களோடு தொடர்புகொண்டது. வழங்குதல், உழத்தல், நடத்தல், பெயர்தல், தேடுதல் போன்ற நேரடியான, வீதி தொடர்புடைய சொற்க ளும் அதனோடு மறைமுகமாகத் தொடர்புகொண்ட அலத்தல், உழத்தல், புலம்புதல், உயவுதல் போன்ற சொற்களும் இவருடைய கவிதைகளில் மிகுதி. ஆகவே வெள்ளி என்பதன் தன்மையும், வீதி என்பதன் தன்மையும் புலப்பட வெள்ளிவீதி என எவரேனும் பெயரளித்திருக்கலாம்.

ஆனால் சங்கப் புலவர்களுக்குப் பிற்காலத்தில் பெயர் வைத்தவர்கள் இத்தகைய அருவப்படுத்தலைக் கொண்டு பெயரிடவில்லை. மேலும், இவருடைய பெயரே இன்னொருவர் கவிதையில் எடுத்தாளப்படுகிறது என்பதைப் பார்க்கும்போது இது பிற்காலத்தில் இடப்பட்ட பெயரல்ல.

வெள்ளிவீதியார் பாக்களின் ஒரே தன்மை ‘தலைவன் கிடைக்கப்பெறாத ஆற்றாமை உணர்வு’ என்பது முதலிலேயே சொல்லப்பட்டது. ஒருவகையில் வெள்ளி என்பது வானத்திலுள்ள கோள். வீதி என்பது மக்கள் பூமியில் உழலும் ஒரு தெரு. இரண்டும் ஒருபோதும் ஒன்றுசேர முடியாது. பொதுவாகக் கவிதைகளில் வானம் என்பது ஆணையும், பூமி என்பது பெண்ணையும் குறிக்கும் உருவகங்கள். ஆக ஒன்றுசேர முடியாத தலைவன் தலைவி என்ற என்றைக்குமான காவியக் காதல் பிம்பங்களை இச்சொல் குறிப்பதாக இன்றைய நோக்கில் நாம் காணமுடியும். சுருங்கச் சொன்னால், இப்பெயரே, நிறைவேறாக் காதலைக் குறிப்பதாகிறது.

5

வெள்ளிவீதியாரின் கவிதைகள் யாவுமே ஆற்றாமை உணர்வை முழுவீச்சில் வெளிப்படுத்துபவை.
‘அஞ்சுவரு நோயடு துஞ்சாதேன்’, ‘அலந்தனென் உழல்வேன் கொல்லோ’
‘நசைதர வந்த நன்னராளன்’, ‘வறுவியன் பெயரின்’, ‘இன்று இப்பொழுதும் யான் வாழலனே’
என்ற அகநானூற்றுத் தொடர்களைப் பாருங்கள்.

நற்றிணை 70, ‘இறைநெகிழ் பருவரல்’ (துன்பத்தைச்) செப்பாத வெள்ளாங்குருகினைத் தலைவி கடிந்துகொள்வதாக அமைகிறது.

நற்றிணை 335, ‘காமம் பெரிதே, களைஞரோ இலரே’ என்று உழல்கின்ற தன்மையைக் காட்டுகிறது.

நற்றிணை 348, ‘உலகமொடு பொருங்கொல் என் அவலமுறு நெஞ்சே’
எனத் தலைவி துடிப்பதைக் காட்டுகிறது.

சில குறுந்தொகைப் பாக்களுக்கு இக்கூற்றினை ஏற்பதில் சிலருக்குத் தயக்கம் ஏற்படலாம். காரணம், அவற்றிற்கு வரன்முறையாகச் சொல்லப்பட்டு வரும் கூற்றுகள் மாறுபட்டவை.

சான்றாக, குறுந்தொகை 44. ‘காலே பரிதப்பினவே’ எனத் தொடங்கும் இப்பாடல் இடைச்சுரத்துச் செவிலி கூற்றாகவே காலங்காலமாகக் கொள்ளப்பட்டுவருகிறது. இப்பாடலின் பொருளை ஊன்றி கவனித்தால், காதலனை எதிர்பார்த்து நெடுநாள் காத்திருந்த ஒரு தலைவி, பிறகு அவனைத் தேடியலையும்போது கூறிய கூற்றாகக் கொள்ள இடம் தருகிறது. இந்தத் தலைவி, ஆதிமந்தி போலப் பேதுற்று அலைவேன் கொல்லோ என்று இன்னொரு அகப் பாட்டிலும் சொன்னவள். ஊரின் ஊரின், நாட்டின் நாட்டின், குடிமுறை குடிமுறை தோறும் தேடினால் நம் காதலர் கிடைக்காமலா போவார் என்று ஒரு குறுந்தொகைப் பாட்டிலும் கூறியவள். இவற்றை உட்கொண்டால், மேற்கண்ட பொருள்கொள்ளல் முறை சரியானதாகவே தோன்றும்.

குறுந்தொகை 58, ‘இடிக்கும் கேளிர்’ என்று தொடங்குவது. இதுகாறும் கழற்றெதிர்மறையாகவே கருதப்பட்டு வந்துள்ளது. அதாவது ஒரு பாங்கன், தலைவனைக் கடிந்துகொள்ளும் போக்கில் இப்பாடற்பொருள் கொள்ளப்படு கிறது. இப்பாடலையும் தலைவி கூற்றாகவே கொள்ளமுடியும். இடிக்கும் கேளிர் என்பது தலைவன் வரும்வரை, அடங்கியிருக்குமாறு கூறும் உறவினரைத் தலைவி விளிப்பதாகக் கொள்ளமுடியும். தலைவனைத் தேடும் தலைவியின் செயலை ஒப்புக்கொள்ளாத தோழி, செவிலி முதலிய தமரை நோக்கித் தலைவி கூறுவது என்று கொண்டால் இந்த அர்த்தம் ஏற்புடையதாகும். இதன் தொடர்ச்சியே, தலைவி தனது உறவினர்கள் கூற்றைப் புறக்கணித்துச் சென்று, தலைவ னைத் தேடும்போது ‘காலே பரிதப்பினவே’ எனப் புலம்பும் பாடல் எனலாம்.

குறுந்தொகை 146, பிரிந்தோரைப் புணர்க்காமல், ‘நன்று நன்று’ என்று தலைய ஆட்டிக் கொண்டு செல்லும் முதுமாக்களைக் கேலிசெய்கிறது. இதன் அடியிலும் காணப்படும் உணர்ச்சி ஆற்றாமைதான். இந்த மாக்கள், தன்னைத் தன் தலைவனோடு சேர்த்து வைக்கச் சக்தியற்றவராக உள்ளனரே என்னும் ஆற்றாமை.

குறுந்தொகை 149, வெளிப்படையாகவே காமம் நெரிதரக் கைந்நில்லாத நாணத்தை அனுதாபத்தோடு நோக்குகிறது.

குறுந்தொகை 169, தலைவி, நேராகவே தலைவனை அல்லது தலைவனின் உருவெளித்தோற்றத்தைப் பார்த்துக் கூறுவதுபோல அமைந்திருக்கிறது. “நும்மும் பெறேஎம் இறீஇயர் எம்முயிரே”.

குறுந்தொகை 386, மாலை புலம்புடைத்தாகிய தன்மையை எடுத்துரைக்கிறது.

ஆகவே வெள்ளிவீதியார் பாடிய ஒரே உணர்ச்சி ஆற்றாமைதான். சோகம், கையற்ற நிலை, காமத்தால் வருந்தும் காதல் நெஞ்சத்தின் அவலம்.

6

வெள்ளிவீதியார் பாடல்களில் இருவகை அமைப்புகள் காணப்படுகின்றன. ஒன்று, குறிய அடிகளை உடைய குறுந்தொகைப் பாடல்களில் காணக்கூடியது. இவற்றில் நேராக ஓர் உணர்வுப்பொருள் புலப்படுத்தப்படுகின்றது. சுற்றிவளைத்துச் சொல்லுதலோ படிமங்களின் மிகுதியோ இல்லை.

இன்னொரு வகை அமைப்பு, நற்றிணை, அகநானூற்றுப் பாக்களில் காணக்கிடப்பது. இப்பாடல்களில் படிமங்கள் மிகுதி. பல்வேறு படிமங்களையும் கூர்ந்து நோக்கும்போது பெரும்பாலும் அவை புணர்ச்சி சார்ந்த படிமங்களாக-குறிப்பாகப், புணர்ச்சி நிறைவைக் குறிக்கின்ற படிமங் களாக அமைகின்றன. ஆனால் அவற்றில் நேராக உணர்த்தப்படும் உணர்வுப்பொருள் அல்லது உரிப்பொருள், புணர்ச்சியின்மையை, காதலர் கிடைக்கப் பெறாமையைக் குறிக்கிறது.

இவ்விதமாக, படிமங்கள் மூலமாகப் புணர்ச்சிநிறைவும், உரிப்பொருள் மூலம் இன்மையும் குறிக்கப்படுவது இவரது பாக்களின் தனித்தன்மை. மேலும் புணர்ச்சி நிறைவு என்பது படிமங்கள் மூலமாக மட்டுமே உணர்த்தப்படும் நிலை, அது கனவுத்தன்மை சார்ந்த ஒரு விருப்ப நிறைவேற்றம் (விஷ் ஃபுல்ஃபில்மெண்ட்) என்பதைக் காட்டுகிறது. பலகாலமாக ஒரு பொருளைக் குறித்து ஏங்குபவர்கள், கனவில் அப் பொருள் கிடைத்துவிட்டதாகக் கருதி நிறைவு பெறுவது உளவியலுக்கு ஒத்ததே ஆகும்.

வெள்ளிவீதியாரின் அகநானூற்று, நற்றிணைப் பாக்களிலும், நிஜத்தில் கிடைக் கப் பெறாத தலைவன், படிமங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுவதாக நினைக்கும் தன்மை காணப்படுகிறது.
சான்றாக, அகநானூறு 362ஆம் பாடலைக் காண்போம். இதில் முதல் படிமம், “பாம்பு உடை விடர, பனிநீர் இட்டுத் துறைத் தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே” என்பது. இது ஒரு பாலியல் படிமம். புணர்ச்சி நிறைவினைக் குறிக்கும் படிமம்.

இரண்டாவது படிமம், “வெண்கோட்டு யானை, பொருத புண்கூர்ந்து, வைங்கண் வல்லியம் கல்லளைச் செறிய, முருக்கரும்பன்ன வள்ளுகிர் வயப்பிளவு கடிகொள வழங்கார் ஆறே” என்பது. இதுவும் ஒரு பாலியல் படிமமே.

மூன்றாவது படிமம், “நம் இடைமுலைச் சுணங்கு அணிமுற்றத்து ஆரம் போலவும், சிலம்புநீடு சோலைச் சிதர் தூங்கு நளிர்ப்பின் இலங்கு வெள்ளருவி போலவும், நிலம் கொண்டனவால் திங்களம் கதிரே” என்பது. இதுவும் பாலியல் படிமமே.

இவை அனைத்தும் புணர்ச்சியைக் குறிக்கின்றன. ஆனால் வெளிப்படையாகக் கூறப்பெறும் செய்தியோ, “நன்னர் ஆளன் நெஞ்சு பழுதாக வறுவியன் பெயரின் இன்று இப்பொழுதும் யான் வாழலனே” என்பது. மேற்கண்ட மூன்று படிமங்களின் கருத்துக்கும் இது எதிர்நிலையில் நிற்கிறது.

இதுபோல, நற்றிணை 348ஆம் பாடலையும் காண்போம். இங்கும் “நிலனே, நீல்நிற விசும்பின் பல்கதிர் பரப்பிப் பால்மலி கடலின் பரந்து பட்டன்றே; ஊரே, ஒலிவரும் சும்மையடு மலிதொகுபு ஈண்டிக் கலிகெழு மறுகின் விழவு அயரும்மே; கானே, பூ மலர் கஞலிய பொழிலகம் தோறும் தாம் அமர் துணையோடு வண்டு இமிரும்மே;”  என வரும் அடுத்தடுத்த மூன்று படிமங்கள், புணர்ச்சி நிறைவினைக் குறிப்பனவாக அமைகின்றன. ஆனால் இங்கும் வெளிப்படையாகச் சொல்லப்படும் பொருள், “யானே, புனையிழை நெகிழ்த்த புலம்புகொள் அவலமொடு கனையிரும் கங்குலும் கண்படையிலனே” என்பது. இதிலும் மேற்கண்ட அகநானூற்றுப் பாடல் போன்றே, பாலியல் நிறைவும் இன்மையும் எதிரெதிர் நிலைகளில் காட்டப்படுகின்றன.

7

இனி ஒரேமாதிரியான இரு பாக்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். சங்கப் பெண்பாற் புலவர்களில் வெள்ளிவீதியாரும் ஒளவையாரும்தான் ஆற்றாமை உணர்ச்சியை மித மிஞ்சிப் பாடியவர்கள். ஒளவையார் காட்டும் தலைவியும் ஆற்றாமை மீதூர, “முட்டு வேன் கொல், தாக்குவேன் கொல்” என்று துடிப்பவளே. ஆகவே இருவரையும் ஒப்பிடுவது சிறப்பானது. அதிலும் ஒரேமாதிரிப் பாக்களை ஒப்பிடுவது இன்னும் சிறப்பாகும். எனவே அகநானூற்றில் வெள்ளிவீதியாரின் 45ஆம் பாடலையும், ஒளவையாரின் 147ஆம் பாடலையும் ஒப்பிடலாம்.

வெள்ளிவீதியாரின் 45ஆம் அகப்பாடலில் “நோய்கூர்ந்து, ஆதிமந்திபோலப் பேதுற்று அலந்தனென் உழல்வேன் கொல்லோ” என்ற தொடர் இடம்பெறுகிறது. ஒளவையாரின் 147ஆம் அகப்பாட்டில், “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவயர்ந்திசினால் யானே” என்னும் தொடர் வருகிறது. இந்த ஒற்றுமை கருதியே இவை இங்கு நோக்கப்படுகின்றன.

இரண்டுமே பாலைத்திணையில் அமைந்தவை. இரண்டுமே தோழிக்குத் தலைவி கூறுவன. ஒன்றில் வற்புறுத்தும் தோழி என்றும், மற்றொன்றில் செலவுணர்த்திய தோழி என்றும் தோழியின் செயல்கள் கூறப்பட்டுள்ளன. இரண்டிலுமே தோழியர், தத்தம் தலைவியரைப் பிரிவினால் கலங்காமல் இருக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

வெள்ளிவீதியாரின் பாடலோடு ஒப்பிடும்போது ஒளவையாரின் பாடல் சிக்கலற்றது. ஒளவையாரின் பாட்டில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில், ஓர் ஆண்புலி, பெண்புலியின் அன்பு வாழ்க்கை சொல்லப்படுகிறது. பெண்புலி, குருளைகள் மூன்றினை ஈன்று, வேட்டையாடச் செல்லஇயலாத நிலையில் உள்ளது. அதற்காக ஆண்புலி வேட்டையாடி உணவு கொண்டுவந்து தரும் அன்பு வாழ்க்கை. இரண்டாவது பகுதியில், தலைவி தன்னை நொந்துகொண்டு, தலைவன் பிரிந்தபின் தன் அழகு குலைந்து, வருத்தமிகுதியுடன், வேறு எவ்வித மருந்துமின்றி இருக்கும் நிலை சொல்லப்படுகிறது. மூன்றாவது பகுதியில், தலைவி, ‘யான் வெள்ளிவீதியைப் போல செலவு அயர்ந்திசின்’ எனக்கூறுதல் காணப்படுகிறது.

வெள்ளிவீதியார் பாட்டின் முதற்பகுதியும் சற்றேறக்குறைய ஒளவையார் பாட்டின் முதற்பகுதி மாதிரியாகவே அமைகிறது. இங்கும் ஒரு புலி. ஒரு குன்றுப் பகுதியில் நீரற்ற வழியில் ஒரு யானையைக் கொல்கிறது. ஒளவையாரின் பாட்டில் புலி மானைக் கொன்றது, தன் துணைக்காக வேண்டி. இப்பாட்டில் புலி யானையைக் கொல்வது துணைக்காக அல்ல. “இப்படிப்பட்ட கொடிய காட்டுவழியில் சென்றாரே காதலர்” என்று தலைவி கவலைப்படுமுகமாகவே இந்தப் படிமம் இடம்பெறுகிறது. முன் படிமம், விலங்குகளின் அன்பு வாழ்க்கையை உணர்த்த, இந்தப் படிமம், கொடுமை யைச் சுட்டிக்காட்டுகிறது. (புலியின் கொடுமை மட்டுமல்ல, தலைவனின் கொடுமை யையும்தான்.) ஒரே மாதிரிப் படிமங்கள் போல் தோன்றினாலும், வெவ்வேறு பண்பு களை உணர்த்துகின்றன இவை.

வெள்ளிவீதியாரின் பாட்டில் அடுத்துவரும் படிமங்கள் இவை:

அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப் புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் இன்னிசை ஆர்ப்பினும்,

என்னைப் பற்றிய அலர் பெரிதாக உள்ளது என்று தலைவி நினைக்கிறாள். இது ஒரு நீண்ட காப்பிய உவமை (எபிக் சிமிலி). இவ்விதக் காப்பிய உவமைகளை ஒளவையார் கையாளவில்லை.

இன்னொரு காப்பிய உவமையையும் வெள்ளிவீதியார் இதே பாட்டில் கையாள்கிறார்.

பொலந்தார்க் கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல் வானவரம்பன் அடல்முனைக் கலங்கிய உடைமதில் ஓரரண் போல,

நான் தூங்கவில்லை என்று தலைவி நினைக்கிறாள். பிறகு இறுதிப்பகுதி வருகிறது: “யானே, காதலர்க் கெடுத்த சிறுமையடு நோய்கூர்ந்து ஆதிமந்திபோலப் பேதுற்று, அலந்தனென் உழல்வேன் கொல்லோ” என்று தலைவி நினைக்கிறாள்.

வெள்ளிவீதியின் பாட்டுமுழுவதும் வரும் படிமங்கள் – இவை காவிய உவமைகள் வாயிலாக வருகின்றன – தலைவன் தலைவி முரண்பாட்டைக் குறிக்கின்றன. ஒளவையாரின் பாட்டில் வருவதுபோல தலைவன் தலைவியின் அன்பான இல்லற வாழ்க்கையைக் காட்டவில்லை. இந்த முரண், முக்கியமான இறுதிப்பகுதியிலும் வெளிவருகிறது.

வெள்ளிவீதியார் பாட்டில், பேதுற்று, அலந்தனென், உழல்வேன் என்னும் துயரச் சொற்களோடு கொல்லோ என்ற ஐயச் சொல் நிற்கிறது. ஒளவையாரின் பாட்டிலோ, ‘வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால்’ என இறுதிப்பகுதி அமைகிறது. நன்றும்-செலவு-அயர்ந்திசின் என்னும் மகிழ்வில் முடியும் தொடர்கள். ஆல் என்ற அசை, உறுதிப்பாட்டை உணர்த்துகிறது. அயர்தல் என்பதும் (விழவு அயர்தல் என்பதில் போல) இன்பநிறைவில் ஏற்படும் அயர்ச்சி என்றே பொருள்படும். இங்கு தலைவனோடு மகிழ்வுறச் செல்வதைச் சுட்டிக்காட்டுகிறது எனவே கொள்ளமுடியும்.

இவ்வாறு நோக்கும்போது, இவையிரண்டும் பலவிஷயங்களில் ஒத்ததன்மை கொண்டவை போலக் காணப்படினும், ஒளவையார் பாட்டில், தலைவி, தலைவனை விட்டுப் பிரிந்திருந்தாலும், அதனால் ஏற்படும் வருத்தத்தைப் புலப்படுத்தினாலும், தன் தலைவனைத் தேடிச் செல்வதாகக் கூறினாலும், அவள் ஓர் இன்ப இல்லற வாழ்க்கைக்குரியவள், அவளது தேவை நிறைவேறும தன்மையது என்ற மகிழ்நோக்கு உள்ளது. வெள்ளிவீதியார் பாட்டிலோ, தலைவனுடன் தலைவி இன்புற்று வாழ்ந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. இவள் தன் தலைவனைத் தேடிப் பேதுற்று, பித்துப்பிடித்து, அலைந்து உழலவேண்டியவளே என்ற துயர்நோக்கு காணப்படுகிறது. இவள் ஆசை நிறைவேறுமா என்பது ஐயப்பாட்டிற்குரியது.

இவ்வேறுபாடுகள், வெளிப்படையாக இப்பாட்டுகளில் சொல்லப்படவில்லை. தொனிப் பொருளாகவே உணர்த்தப்படுகின்றன.

இதுவரை, வெள்ளிவீதியாரின் கவிதைகளின் தலைவியிடம் காணப்படும் பண்புகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஒளவை யாரின் தலைவியுடன் ஒப்பிட்டும் காட்டப்பட்டன. அவரது பாட்டுகளில் ஒரு மீறல் இருப்பதாக இக்கட்டுரைத் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் உண்மையில் அது மீறலே அல்ல. காரணம், “வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” என்னும் சங்ககாலக் கருத்துச்சட்டகம் இவரது கவிதைகளில் உடைக் கப் பெறவில்லை. காதலனது இருப்புக்காகவே காதலி வாழ்பவள் என்னும் சங்ககாலக் கருத்தாக்கம், அனைவரது பாக்களிலும் போலவே இவரது பாட்டுகளிலும் வெளிப்படவே செய்கிறது. இக்கருத்தாக்கம், ஆணுக்கு மிகவும் இன்பம் தரும் ஒன்று. வரன்முறையான கருத்தமைவுக்கு உட்பட்டு வாழும் பெண்ணுக்கும் இன்பம் தரும் ஒன்று. இருப்பினும் இது இன்று உடைக்கப்படவேண்டியது என்பதும் தெளிவு.

இலக்கிய நுகர்ச்சி என்பது ஓர் எதிர்நிலையை உள்ளடக்கிய செய்கை. கவிதையின் ஆதாரமான சொற்களின், சொற்களை மீறிய அமைவுகளின் அழகும், அச்சொற்கள் வெளிப்படுத்துகின்ற கருத்துருவமும் என இம்முரண் அமைகிறது. வெள்ளிவீதியார் கவிதைகள் மட்டும் இப்பொதுத்தன்மைக்கு விலக்காகுமா?