நம்பிக்கை

பொழுதும் விடியும் பூவும் மலரும்

பொறுத்திருப்பாய் கண்ணா…

இது ஒரு திரைப்படப் பாடலின் பல்லவி. இது காட்டுகின்ற வாழ்க்கை நம்பிக்கை அசாத்தியமானது. கண்ணதாசன் பாடல் என்றே நினைக்கிறேன். கடவுள் அடிப்படையிலான அழகிய நம்பிக்கை இது. மனம் தளர்ந்திருக்கும் ஒரு நாயகனுக்கு நாயகி நம்பிக்கை தரும் பகுதி.

நாளைய உலகை நமக்கெனத் தர ஓர் நாயகன் இருக்கின்றான்… என்று அடுத்த பகுதி தொடங்குகிறது. அவன் நல்லவர் வாழும் இடங்களில் எல்லாம் காவல் இருக்கின்றான். இப்படிப்பட்ட அழுத்தமான நம்பிக்கையை வெளிப்படுத்துபவள் ஒரு பெண். என் தாயிடமும் இம்மாதிரி அழுத்தமான நம்பிக்கை இருந்தது. ஆனால் என் காலத்தில் இந்த நம்பிக்கை பல காரணங்களால் இல்லாமல் ‍போயிற்று என்பது வருத்தத்திற்குரிய உண்மை. என் தாயிடமிருந்து இந்த நம்பிக்கை என் மனைவிக்கு வந்திருக்க வேண்டும். இப்படி வழிவழியாக வாழ்க்கையில் தொடரும் நம்பிக்கை இது. இந்த நம்பிக்கை அழுத்தமாக இருந்தால் வாழ்க்கையில் எதையும் ஜெயிக்கலாமே?

அந்தக் காலத்தில் அதிகமாகப் படிக்காவிட்டாலும் வாழ்க்கையில் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தார்கள். இப்போது அது இல்லை என்பதை நடைமுறையில் பார்க்கிறேன்.


பைத்தியங்கள்

கல்வி கற்றாலும் பல நூல்கள் படித்தாலும் நாம் கண்ணிருக்கும் குருடராகத்தான் வாழ்கிறோம். அப்படி உலகில் வாழுமாறு பழக்கப்படுத்தப்படுகிறோம்.
உலகிலுள்ள பெரும்பான்மையோர் ஏழைகளாகவும் துய்ப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களாகவும் இருக்கும்போது மிகச் சில பேர் மட்டும் வளமாக வாழ்கிறோம். இது முழுச் சுரண்டலன்றி வேறில்லை.
ஆனால் இதைப் பற்றி யெல்லாம் கவ‍ைலைப்படாமல் நம் தனிப்பட்ட வாழ்க்கைகளைப் பற்றி மட்டும் நோக்குமாறு கற்பிக்கப் பட்டிருக்கிறோம், நம் மக்களையும் இதே வழியில் பயிற்றுகிறோம். இவற்றைப் பற்றிப் பேசினால் பைத்தியக்காரன் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.
–ஒரு பைத்தியக்காரன்


உலகின் பெருமை

(இச்செய்தி புதியதல்ல, வள்ளுவர் என்றைக்கோ எளிமையாகச் சொல்லிச் சென்றதுதான்…)

ஓர் ஆசிரியர் தம் மாணவனிடம் கேட்டார். “தம்பீ, அவன் தன் கிராமத்திலேயே முதன்முதலாகப் படித்திருக்கிறான், அவனுக்கும் அவன் ஊருக்கும் அது பெருமை என்றாய் அல்லவா?”

“ஆமாம் சார்”

“அப்புறம், நம் தலைவர் இதைச் செய்திருக்கிறார், அதைச் செய்திருக்கிறார், மிகவும் ‍பெருமையாக இருக்கிறது என்றாய் அல்லவா?”

“ஆமாம் சார்”

“அதுபோல இந்த உலகத்திற்கே மிகப் பெரிய பெருமை ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர், தெரியுமா உனக்கு?”

“இல்லை சார்”

“அப்படியானால் தெரிந்துகொள். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் உலகு என்கிறார் வள்ளுவப் பெருமான்.”

“புரியவில்லை சார்”

“அதாவது, நேற்று ஒருவன் இருந்தான், ஆனால் இன்று பார்த்தால், அவன் இல்லை. அதுதான் இந்த உலகிற்குப் பெருமை என்கிறார் வள்ளுவர்.”

“சார், இது எப்படிப் பெருமையாகும்?”

ஒருவன் ஒரு பொருளைப் படைக்கிறான். அது பெருமை இல்லையா?

“ஆமாம் சார்”

அதை இன்னொருவன் வாங்கிப் பாதுகாப்பாக வைத்திருக்கிறான். அது பெருமை இல்லையா?

“ஆமாம் சார், முன்னதைவிட இது பெருமை.”

இன்னொருவன் அதை அழித்துவிடுகிறான். அது பெருமையல்லவா?

“எப்படி சார்? அழிப்பது எப்படிப் பெருமையாகும்?”

ஓர் ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதை அழித்துவிடுகிறார். அது பெருமையா இல்லையா?

எப்படி சார்? எப்படி அது பெருமை?

அவரால் அதே போல புதிதாக எழுதமுடியுமே. அதனால்தானே அழிக்கிறார்?

“நீ உன் பழைய வகுப்புகளில் படித்த எல்லாவற்றையும் வைத்திருக்கிறாயா?”

“இல்லை சார், நான்தான் அதைத் தாண்டிவிட்டேனே, என்னால் இப்போது புதிதாகவே எழுதமுடியுமே”

அது போலத்தான், இறைவனால் ஒன்றை அழித்தாலும் வேறொன்றை உருவாக்க முடியும். அதனால்தான் அழிக்கிறான். அது பெருமையல்லவா?

ஆமாம் சார்.

அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார், நெருநல் (நேற்று) இருந்த ஒருவன், இன்று இல்லை. அதுதான் உலகிற்குப் பெருமை என்று. ஏனென்றால் உலகினால் புதிது புதிதாக மனிதர்களை அல்லது வேறு ஜீவராசிகளை உருவாக்கவும் வாழ‍வைக்கவும் முடியுமே?

ஆம். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை. அதுதான் இந்த உலகிற்குப் பெருமை. அது வேறு புதிது புதிதாக ஜீவராசிகளை உருவாக்கும். பழையகால டைனோசார்கள் இன்று இல்லாமற்போனாலும் புதிதாக எத்தனையோ இனங்கள்…மனிதர்கள் போன்ற இனங்கள் தோன்றியிருக்கின்றன. ஏனெனில் உலகம் இன்றிருந்தபடியோ, மாறியோ தொடர்ந்து இருக்கும். அது‍போல இன்றுள்ள மனிதர்கள் அவ்வளவு பேருமே இல்லாமற் போனாலும் வேறு புதிய மனிதர்களோ வேறு இனங்களோ தோன்றுவார்கள். இது உலகின் பெருமை யல்லவா? ஆனால் இது மனிதனின் சிறுமையை, இயலாமையை ஞாபகப்படுத்துவது என்பதையும் நினைவில் கொள்.”


கேள்விகளும் பதில்களும்

இரு மாதங்களுக்கு முன்பு கனடாவிலிருந்து

நண்பர் அகிலன் கேட்ட கேள்விகளும்

அவற்றுக்கு நான் அளித்த பதில்களும்

1. தனிநாயகம் அடிகளார் எழுதிய Nature in Ancient Tamil poetry என்னும் நூலை நிலஅமைப்பும் தமிழ்க் கவிதையும் என்ற பெயரில் மொழிபெயர்த் திருந்தீர்கள். அவர் இறந்து நீண்ட காலத்தின் பின் இவ்வரிய நூலை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் என்ன? தனிநாயகம் அடிகளாரிடம் கல்வி கற்றதன் காரணமாக இம்மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டீர்களா?

முதலில் ஒரு யூகத்தைக் களைந்துவிடுகிறேன். நான் தனிநாயகம் அடிகளாரிடம் கல்வி கற்றவன் அல்ல. அதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் ஒரு வேடிக்கை தெரியுமா? நான் ஏழாம் வகுப்பு படித்தபோதே தனிநாயகம் அடிகளாரின் ஒன்றே உலகம் என்ற (பயண) நூலைப் பரிசாகப் பெற்றேன். அவரது பிற படைப்புகளையும் பின்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியில்தான் நான் நீண்டகாலம்–32 ஆண்டுகள் (1975 முதல் 2007 வரை) கல்லூரிப் பேராசிரியனாகப் பணிபுரிந்தேன். அங்கு தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பை வைத்து நடத்திவருபவர் அருட்திரு. அமுதன் அடிகளார். அவர் தனிநாயகம் அடிகளோடு தொடர்புடையவர். அவர்தான் தனிநாயகம் அடிகளாரின் நூலை மொழிபெயர்த்துத் தருமாறு எனக்குக் கூறினார். அதனை நான் நிறைவேற்றினேன், அவ்வளவுதான்.     

2. ரஷ்ய இலக்கியங்கள் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையிலும் அதிக செல்வாக்குச் செலுத்தின. அத்தோடு தமிழில் ரஷ்ய உருவவாதம் குறித்து வெளிப்படையாக யாரும் பேசாத நிலையில் உங்களின் ‘ரஷ்ய வடிவ வியல்’ கட்டுரை ஈழத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் பழங்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசும் பலர் அண்மைக்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசப்படாமைக்கான காரணம் என்ன?

அண்மைக்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்துப் பேசாமைக்குக் காரணம், அதற்கான தேவையின்றிப் போனதுதான் என்று நினைக்கிறேன். (கலாச்சார மாற்றம்தான் அதற்கான தேவை). எங்கள் சிறுவயதில் டால்ஸ்டாய் ஒரு பெரிய ஆதரிசமாக இருந்தார். ஆனால் தாஸ்தாயேவ்ஸ்கி குறித்து அப்போது அதிகம் கேள்விப்பட்டதில்லை.

நான் அதிகமும் ஈடுபாடு கொண்ட துறை இலக்கியக் கொள்கை. இன்றைய இலக்கியக் கொள்கை பற்றிப் பேச முனையும் எவரும் வடிவஇயல் வாதங்களான அன்றைய மேற்கத்திய வடிவஇயலையும் (Western Formalism) ரஷ்ய வடிவஇயலையும் (Russian Formalism) குறித்துப் பேசாமல் இருக்க முடியாது அல்லவா? மேலும் பக்தின் போன்றோர் அறிமுகப்படுத்திய பலகுரல் தன்மை போன்றவை இன்றைய இலக்கிய அடிப்படைகளாக உள்ளன.     பழங்கால ரஷ்ய இலக்கியத்தில் பூஷ்கின், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி போன்ற பல ஆதரிசங்கள் இருந்தனர். அந்த அளவுக்குப் பின்னால்வந்த ரஷ்ய எழுத்தாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட நோக்கம் கருதி ரஷ்ய நாவல்களையும் படைப்புகளையும் மொழிபெயர்ப் பில் அளித்துவந்த என்சிபிஎச் போன்ற நிறுவனங்களும் அதை நிறுத்திக் கொண்டன என்பது முக்கியக் காரணம்.     

3. தமிழவன், தி.சு.நடராசன், பிரம்மராஜனைப் போன்று கவிதை இலக்கியம் குறித்து தமிழகத்தில் ஆழ, அகலமாக எழுதியவர்களுள் நீங்களும் ஒருவர். தெலுங்கு கவிஞர் வரவர ராவினால் சிறையில் இருந்து எழுதப்பட்ட கடிதங்களை சிறைப்பட்ட கற்பனை என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருந்தீர்கள். ஆயினும் ஒப்பீட்டளவில் கவிதைகள் குறித்தான உங்களுடைய மொழிபெயர்ப்புகள் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

இரண்டு காரணங்கள்: ஒன்று, எனக்கு அடையாளம் பதிப்பகத்திலிருந்து தான் மொழிபெயர்ப்புக்கான நூல்கள் கிடைத்தன. அடையாளம் சாதிக் உரைநடையில் ஆர்வம் காட்டியதுபோல கவிதையில் ஆர்வம் காட்டவில்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் அவர் அளித்த நூல்களையே நான் மொழிபெயர்த்தேன்.  

இரண்டாவது, அன்றைய இலக்கிய நண்பர்கள் சிலர், கவிதை மொழிபெயர்ப்பு மிகவும் கடினமானது, அதைச் செய்யவேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள். (இது பிழையானதொரு கருத்து என்று தெரிந்தாலும், மாற்றிக்கொள்ளவில்லை.)

4. ஆங்கிலத்தைப் போன்று இந்தி மொழியிலும் புலமைத்துவம் கொண்டவர் நீங்கள். ஆயினும் இந்தியில் இருந்து ஒரு சிறந்த மொழிபெயர்ப்பை உங்களால் ஏன் தரமுடியவில்லை?

வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக நான் சந்தை நிலவரத்துக்குக் கட்டுப்பட்டு (அடையாளம், எதிர் போன்ற பதிப்பகங்களின் பார்வையில்) மொழிபெயர்ப்புகளைச் செய்தவன். அவர்கள் எனக்கு நல்ல இந்தி நூல்கள் எதையும் மொழிபெயர்ப்புக்கெனப் பரிந்துரை செய்ய வில்லை. மேலும் என் ஆங்கிலப் புலமை நாடறிந்த ஒன்று. (தமிழ் வகுப்பு களையே ஆங்கிலத்தில் நடத்துபவன் என்று அக்காலத்தில் பேசப்பட்டவன் நான்.) அதனால் இந்தியில் இருந்து மொழிபெயர்ப்பதில் அக்கறை காட்ட வில்லை. அத்துடன், ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியில் அதே அளவு சிறந்த இலக்கியங்கள் இருந்ததாக (இன்றும்!) எனக்குத் தோன்ற வில்லை.  

5. ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகளாக நீங்கள் எதனைக் கருத்துகிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை, ஒன்றே ஒன்றுதான். நேர்மை. அதாவது எந்த விதத்திலும் மூலத்தின் கருத்துகளைப் பிறழ உணர்த்தலாகாது. அதற்கு அடுத்த நிலையில்தான் இலக்கிய அழகு, நடை போன்றவை வருகின்றன. அழகிற்காக, அலங்காரத்திற்காக, நடைக்காகக் கருத்துகளை மாற்றுபவனை மொழிபெயர்ப்பாளன் என்று கூற முடியாது. தழுவலாளன் என்று வைத்துக் கொள்ளலாம்.

6. ஈழத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாட்டின்போது உங்களால் மொழிபெயர்க்கப் பட்ட சாமுவேல் பி.ஹண்டிங்டனின் ‘நாகரிகங்களின் மோதல்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக ஒழுங்கின் மறு ஆக்கமான நாகரிகங்களின் மோதல் குறித்துப் பேசும் இந்நூல் பனிப்போருக்குப் பின்னரான உலக அரசியல் நிலையை தமிழ் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்நூலாக்கத்தின் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவப் பகிர்வை கூறமுடியுமா?

அச்சமயத்தில் இருந்த மனநிலையை இப்போது என்னால் சொல்ல முடிய வில்லை. அதை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரே சந்தர்ப்பம், ஆனந்தவிகடன் பரிசளிப்பு விழாவின்போது. ஆனால் கருத்துரையாளர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மேடை என்பது ஜனரஞ்சகத்துக்கானது, கருத்துகளுக்கானதல்ல. என்னைப் பொறுத்தவரை என்றைக்குமே அமெரிக்காவின் (நாகரிகம் உள்ளிட்ட) ஆதிக்கக் கொள்கைகளுக்கு எதிரானவன். அதற்கு ஓரளவு இந்த நூல் உதவுமோ என்ற எண்ணம்தான் மொழிபெயர்ப்பின்போது எனக்கு இருந்தது. அவ்வாறில்லாமல் போய்விடக் கூடாதே என்ற அச்சமும் இருந்தது.

7. காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் போரினால் அலைக்கழிக்கப்பட்டு நொந்து நொடிந்து வாழும் மக்களின் இயல்பு வாழ்வை நுட்பமாக வரையும் சித்திரமே பஷரத் பீரின் ‘ஊரடங்கு இரவு’ இந்நூலை எச்சூழலில் மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டது?

அன்றல்ல, இன்றுவரை காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரானவன் நான். (இன்றைய பிரதமரின் நோக்கில் காஷ்மீர் துண்டாடப் பட்டு பிரிக்கப்பட்டது, காஷ்மீர்ப் “பண்டிதர்களை” வெளிப்படையாக ஆதரித்து அவர்களுக்காக முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற செயல்களையும் நான் ஆதரிக்கவில்லை. அதனால் திரு. கண்ணன் (காலச்சுவடு) ஊரடங்கு இரவு நூலை மொழிபெயர்க்கமுடியுமா என்று கேட்டபோது உடனே ஒப்புக் கொண்டேன்.

8. 1993இல் புக்கர் விருதைப் பெற்ற மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றே சல்மான் ரூஷ்தியின் நள்ளிரவின் குழந்தைகள். இந்தியா தன்னாட்சி நாடாக சுதந்திரமடைந்த நிலையில் நவீனத்துவத்துக்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் இடையில் போராடும்  சலீம் சினாயின் வாழ்வைப் பிரதிபலித்ததே நள்ளிரவின் குழந்தைகள் நாவல். இந்நிலை இந்தியாவில் இன்னும் தொடர்வதாக நீங்கள் நம்புகிறீர்களா?

கண்டிப்பாக. நான் சிறுவயதில் (ஏறத்தாழ ஐம்பத்தாறு ஐம்பத்தேழு ஆண்டு களுக்கு முன்பு) வேலூருக்கு அருகிலுள்ள விரிஞ்சிபுரம் என்ற ஊரில் வாழ்ந்தேன். இன்றும்கூட அங்கு பஸ்நிலையத்துக்கு மேற்குப்புறம் முஸ்லிம்கள் குடியிருப்பு தனியாக இருப்பதைக் காணமுடியும் என்றே நினைக்கிறேன். மேலும் என் சொந்த ஊர் ஆர்க்காடு. அதற்கு அருகிலேயே விஷாரம் என்ற முஸ்லிம்களின் தனிக்குடியிருப்பு (ஊர்) இருந்தது. உயர்ந்த அடுக்கு மாளிகைகள், குறுகிய, நெருக்கமான தெருக்கள், அழகும் சுகாதாரமும் அற்ற சூழ்நிலைகள் என்பன அவர்களைத் தனியே பிரித்துக் காட்டின. அங்குள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை ஏறத்தாழ சலீம் சினாயின் அனுபவத்தை எனக்கு 1965 வாக்கிலேயே அளித்தது என்று கூறலாம். அக்காலத்தில் (1960-70) அந்த முஸ்லிம்களால் நமது (பொது இந்திய, தமிழக) வாழ்க்கையுடன் ஒட்ட முடியவில்லை என்றே உணர்ந்தேன்.   

9. மாவோயிஸ்ட்கள் குறித்து தன் முன்னே நடந்த, தன்னைப் பாதித்த சம்பவங்களை மையமாகக் கொண்டு அருந்ததிராயால் எழுதப்பட்ட நூலே  ‘புரோக்கன் ரிபப்ளிக்’. இதனை ‘நொறுங்கிய குடியரசு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருந்தீர்கள். இந்நூல் வெளிவந்து சில காலத்துக்குள்ளேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிந்தேன். இந்நூலை மொழிபெயர்க்கும் போதே இந்நூல் அமோக வரவேற்பினை பெறும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களா? இவ்வாறான சூழலில் பதிப்பகங்கள் உங்களுக்கு றோயல்டி தருகின்றதா?

பொதுவாக அருந்ததிராயின் எழுத்துத்திறனில் எனக்கு நம்பிக்கை அதிகம்.

அதனால் அந்த நூலை மொழிபெயர்த்தேன். அது நல்ல வரவேற்புப் பெறும் என்பதற்கான அறிகுறிகள் முன்னரே தெரிந்தன. ஆனாலும் காலச்சுவடு கண்ணன், அந்த நூலைப் பற்றிய அருந்ததி ராயுடனான விவாதங்களில் எனக்கு இடமளிக்காமல் வேறு எவ்வெருக்கோ வாய்ப்பளித்தார். (அதனால் ஏற்பட்ட கசப்பில் பிறகு அவருக்காக எந்த நூலையும் நான் மொழிபெயர்க்க வில்லை.)

கேரள ராயல்டி மரபு திரு. கண்ணனுக்கு நன்கு தெரியும் என்றாலும் அவர் அதைப் பின்பற்றவில்லை. பொதுவாக எனக்கு தமிழ்ப் பதிப்பாளர்கள் ராயல்டி தருவதில்லை. அந்த நூல்கள் வெளிவந்தவுடனே (அவர்கள் அளவில் தகுதியானது என்று நினைக்கின்ற, பல சமயங்களில் சிறிய) ஒரு தொகையினைத் தந்துவிடுவார்கள். அவ்வளவுதான். அதற்குப் பிறகு நூலுக்கும் நமக்கும் தொடர்பில்லை. கேரளாவில் முறையான ராயல்டி தரும் மரபு இருக்கிறது. அதைப்பற்றி அடையாளம் சாதிக்-உடன் விவாதித்தும் இருக்கிறேன். அங்கே நூல்கள் விற்பனை அதிகமாக உள்ளது, இங்கு தமிழ்ச் சூழலில் நூல்கள் விற்காதநிலை-தேக்கம்தான் உள்ளது என்று அவர் காரணம் சொல்வார்.

10. ‘டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்’, ‘பேற்றுச்செவிலியர் கையேடு’ , ‘இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம் ‘,‘தலைமுடி இழப்பு-மருத்துவம்’, ‘மூல வியாதி’, ‘ஐம்பது உடல்நலக் குறிப்புகள்’ என அதிகளவான மருத்துவநூல்களை மொழிபெயர்க்கும் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களை இலக்கிய வெளி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பெரும்பாலும் நான் மொழிபெயர்க்கவேண்டிய நூல் எந்தத் துறையைச் சேர்ந்ததோ, அந்தத் துறையில் அடிப்படை நூல்களைப் படித்துவிடுவது எனது வழக்கம். அதனால் எனக்கு எந்தத் துறையிலும் மொழிபெயர்ப்பது எளிதாகவே இருந்தது. சிரமங்கள் என்று குறிப்பாக எதுவும் ஏற்பட்ட தில்லை. (இன்னும் இது பற்றிப் பேசவேண்டுமானால் விரிவான களம் வேண்டும்.) எனது மொழிபெயர்ப்பின் அடிப்படை, என் பரந்த படிப்பு. நான் படித்த துறைகள் மிகுதி. அநேகமாக கலையியல், மனிதவியல், அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு.

கலைச்சொல் உருவாக்கலில் பல சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதில் எனக்கு அக்காலக் கலைக்கதிர் பத்திரிகை, திரு. ஜி. ஆர். தாமோதரன் மேற்பார்வை யில் வெளிவந்த கலைச் சொல் உருவாக்க நூல்கள், மணவை முஸ்தபா வின் கூரியர் இதழ் போன்றவை ஊக்கமளித்தன. நானாகவும் நிறையச் சொற்களை மொழிபெயர்த்தேன். பொதுவாக, கலைச் சொல்லாக்கத் துறையில் எனக்கு முன்னர் இருந்தவர்கள் நல்ல பாதையை எனக்குச் செப்பனிட்டுத் தந்திருந்தார்கள் என்றே நினைக்கிறேன். குறிப்பான கலைச்சொல்லாக்கத்தைவிட, எடுத்துக் கொண்ட நூலின் கருத்து வாசகர்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில்தான் எனது அக்கறை. தமிழ் பயின்றவன் என்பதைவிட அடிப்படையில் நான் ஓர் அறிவியல் மாணவன். பி.எஸ்சி இயற்பியல் எனது தலைமைப்பாடம். அதைப் படிக்கும்போதே விரிவாக அறிவியல்துறையில், குறிப்பாக மருத்துவத் துறையில் பல நூல்களையும் நான் படித்திருந்தேன்.

11. ‘கீழையியல் தத்துவம்’, ஸ்டீவ் புரூஷீன் ‘சமூகவியலின் அடிப்படைகள்’, ‘பின்நவீனத்துவம்’ ‘உலகமயமாக்கல்’, டிலான் இவான்சின் ‘உணர்வெழுச்சி ‘, டேவீட்எஃப் ஃபோர்டுவின் ‘இறையியல்’ என கோட்பாட்டு நூல்களை அதிகளவில் மொழிபெயர்த்து தந்த சிறந்த ஆளுமைகளில் நீங்களும் ஒருவர். இது தவிர கோட்பாட்டியல் சார்ந்து நிறையக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து எழுதியுள்ளீர்கள்.அவ்வாறு மொழிபெயர்க்கும்போது சாதாரண தமிழில் பயின்று வராத சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்படும். அவ்வாறு உங்களால் உருவாக்கப்பட்டு இன்று தமிழில் வழக்கத்தில் உள்ள கலைச்சொற்கள் குறித்து உங்கள் அனுபவப் பகிர்வுகளை எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? அடையாளம் பதிப்பகத்துக்காகவே இந்நூல்களை அதிகம் மொழிபெயர்த்திருந்தீர்கள் இது எதனால் விளைந்தது?

அடையாளம் பதிப்பத்துடனான என் தொடர்பு ஏறத்தாழ 2006இல் ஏற்பட்டது. முதன்முதலில் அவர் உலகமயமாக்கல் நூலை மொழிபெயர்த்துத் தர முடியுமா என்று கேட்டார். நான் இசைந்து மொழிபெயர்ப்புச் செய்தேன். அதிலிருந்து பல்வேறு துறைகளிலும் எனது மொழிபெயர்ப்புகள் அடையாளம் பதிப்பகத்துக்காகத் தொடங்கின. அடையாளம் பதிப்பகத்துடனான என் தொடர்பு, என் மொழிபெயர்ப்பு, கலைச்சொல் லாக்கப் பாதையில் ஒரு மைல்கல். பின்னர் சில நூல்களை எதிர் வெளியீட்டிற்காகவும் மொழிபெயர்த்தேன்.

முதன்முதலில் குளோபலைசேஷன் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்துவதி லேயே ஒரு சிக்கல்- இதை உலகமயமாதல் என்பதா, உலகமயமாக்கல் என்பதா? “குளோபலைஸ்” என்ற சொல்லை ஆராயும்போது அது வேண்டு மென்றே (சிலரால்) செய்யப்படும் முன்னெடுப்பைத்தான் காட்டுகிறது. தானாக எதுவும் ‘குளோபலைஸ்’ ஆக முடியாது. எனவே உலகமயமாதல் என்பதைவிட உலகமயமாக்கல் என்பதே பொருத்தமாக இருக்கமுடியும். அதேபோல வெப்பமயமாதலா, வெப்பமயமாக்கலா? இம்மாதிரிச் சிறு சொற்கள் தொடங்கி, மிகத் துல்லியமான கலைச் சொற்களை உருவாக்குவது வரை பல நிலைகளில் சந்தேகங்கள் ஏற்படும். அவற்றை விரிவாக ஒரு நூலாகத் தான் எழுத முடியும்.

முதன்முதலில் நான் ஸ்ட்ரக்சுரலிசம் நூலைத் தமிழில் அளித்தபோதே (1990) நிறையக் கலைச் சொற்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த நூலிலேயே நூற்றுக்கணக்கான கலைச் சொற்களை நான் உருவாக்கியிருப்பதை நீங்கள் காண முடியும். தமிழவன் எந்தச் சிரமமும் படாமல் ஸ்­ட(?)ரக்சுரலிசம் என்றே தன் நூலுக்குப் பெயரிட்டிருந்தார். நான் (பொருள் அடிப்படையில்) அமைப்புமையவாதம் என்று அதைக் கையாண்டி ருந்தேன். பிறகு அச்சொல் அமைப்புவாதமாகி, இன்று அமைப்பியம் என்ற சொல்லாகியிருக்கிறது. இதிலிருந்தே, நான் பொருளை உணர்ந்து அதற் கேற்பச் சொல்லை உருவாக்குபவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இனிமேல்தான் நான் எந்தஎந்தச் சூழ்நிலையில் எந்தெந்தக் கலைச்சொற் களை என் நூல்களில் உருவாக்கியுள்ளேன் என்பதை ஆராய வேண்டும். இதை நானே செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை.  

முதன்முதலில் அமைப்புமைய வாதம், தொடர்பியல் கோட்பாடுகள் என்ற நூல்களை 1990இல் எழுதிய போதே கலைச்சொல் உருவாக்க முயற்சிகள் என்னிடம் தோன்றிவிட்டன. எவ்வளவு கலைச் சொற்களை நான் உருவாக் கியிருக்கிறேன், அது பற்றிய முறையான எனது நோக்கு என்ன என்பதைத் தனியாகத்தான் ஆராய வேண்டும்.

(வேறு செல்வாக்கு மிகுந்த ஆளாக இருந்தால் இதை ஆய்வு மாணவர்கள் இந்நேரம் செய்திருப்பார்கள்!)

பெரும்பாலும் எனது உள்ளுணர்வையும் என் அடிப்படையான அறிவுசார் நோக்கையும் நம்பியே நான் கலைச்சொற்களை உருவாக்குகிறேன். இதற்கு எனக்கு முன்னோடிகள் இல்லை.     

நான் உருவாக்கிய பலசொற்கள் இப்போது பொதுப் பயன்பாட்டில் உள்ளன. உதாரணமாக 1980இல் நான் உருவாக்கிய சொல் பின்னூட்டம் (Feedback) என்பது. இன்று அச்சொல் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது. நான் உருவாக்கி, இன்று பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்கள் பற்றி எனக்குக் கணக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி நான் மிகுதியாக அக்கறை கொள்ளவும் இல்லை. நம் நாட்டில் இண்டெக்ஸ் (Index-பொருளடைவு) என்பதை நூல்களில் சேர்க்கும் வழக்கம் இல்லை. என் நூல்கள் ஒவ்வொன்றுக்கும் அப்படி இண்டெக்ஸ் சேர்த்தால் நான் உருவாக்கிய சொற்களை எளிதாகவே கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

12. சமஸ்கிருதத்திலும் இந்திய ஆய்விலும் முனைவர் பட்டம் பெற்ற சமய வரலாற்று அறிஞர் வெண்டி டோனிகர் எழுதிய “இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு”  நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். இந்தியாவில் இந்நூலை ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட போது இந்நூலை தடை செய்யவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் வழக்குத் தொடுத்த சம்பவப்பின்னணி யையும் இதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியநிலையும் ஏன் ஏற்பட்டது என்பதை எமக்கு கூறமுடியுமா?

வெளியான நூல்கள் தடைசெய்யப்படுவது போன்ற அரசியல் விஷயங் களில் நான் அதிகமாக அக்கறை காட்டியதில்லை. ஆங்கிலத்தில் நிறைய நல்ல நூல்களுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். அதனால் அவற்றின் பிராபல்யமோ, மொழிபெயர்ப்புத் தன்மையோ குறைந்ததில்லை.

இம்மாதிரிச் சோதனைகள் எல்லாம் முடிந்தபிறகுதான் எதிர் வெளியீடு அனுஷ் இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு நூலுக்கான உரிமையை வாங்கி, என்னை மொழிபெயர்க்குமாறு சொன்னார். நூலை மொழிபெயர்க்கும் முன்பு அதை ஒருமுறை படித்துப் பார்ப்பது இயல்புதானே? அம்மாதிரி அந்த நூலைப் படிக்கும்போது அதைச் சிறப்பாக மொழிபெயர்த்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் ஏற்பட்டது. அப்போது அந்த நூல் பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். இதுபோலவே அடையாளம் பதிப்பகத்திற்கான ஒரு மதசம்பந்தமான நூலை மொழிபெயர்க்கும்போதும்  அனுபவம் ஏற்பட்டது. மொழிபெயர்ப்புக்கான நூல்களைப் பதிப்பகத்தினர் அளிக்கும்போதே இந்தப் பிரச்சினைகள் தீர்ந்தபிறகு அனுமதி வாங்கித்தான் செய்கிறார்கள். எனவே இதில் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. இருந்தால் பதிப்பகத்துக்குத் தான் இருக்கமுடியும்.

13. நவீன அரசியலின் இடர்பாட்டை விளக்கி நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்றே உங்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஹெரால்டு ஜே.லாஸ்கியின் ‘அரசியலின் இலக்கணம்’. இன்றைய சூழலில் அரசு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் முக்கியத்துவம் குறித்து இந்நூல் விளக்கிச் செல்கிறது. லாஸ்கியின் சிந்தனைகள் இந்திய அரசியலிலும் தமிழ்நாட்டிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறதே இக்கருத்தின் உண்மைநிலை குறித்து கூறமுடியுமா?

லாஸ்கியின் சிந்தனைகள் இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் இதனை அன்றிருந்த, இன்றுள்ள அரசியல்வாதிகள் பலரும் படித்திருந்தால் இந்தியாவில் அரசியலின் போக்கே வேறுவிதமாகத்தான் இருந்திருக்க முடியும்.

அல்லது அரசியல்வாதிகள் படிப்பது வேறு, நடப்பது வேறு என்று காரணம் சொல்வீர்களா? அல்லது கட்சிகளின் கருத்தியல்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பீர்களா?

அறிஞர் அண்ணா இந்த நூலைப் படித்திருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அவரது சமகாலத் தோழர்கள் (பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோர்) இதைப் படித்திருக்கலாம். பின்னர் வந்த “அறிஞர்கள்” (இருபதாயிரம் நூல்களைப் படித்திருப்பதாகப் பெருமையடித்துக் கொண்ட ‘அறிஞர்கள்’ உட்பட) எவரும் இந்த நூலைப் படித்திருப்பர் என்று எனக்குத் தோன்றவில்லை.    இன்றைய நிலையில் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பேராசிரியர்கள், அறிஞர்கள் சிலர் வாங்கிச் சென்று மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது என்று எழுதினர். அது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

14. கேரள எழுத்தாளர் மனுஜோசப் எழுதிய சீரியஸ்மென் நாவலை ‘பொறுப்பு மிக்க மனிதர்கள் என்ற பெயரில் தமிழாக்கம் செய்திருந்தீர்கள். இப்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் சுதிர் மிஸ்ரா ஒரு திரைப்படத்தை வெளியிட்டார் என அறிய முடிகிறது. அது குறித்து ஏதேனும் கூறமுடியுமா? மற்றும் இந்நாவலை மொழிபெயர்த்தமைக்காக சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை 2016 ஆம் ஆண்டு பெற்றிருந்தீர்கள். வண்ணதாசனுக்கும் உங்களுக்கும் ஒரேகாலப்பகுதியில் இவ்விருது கொடுக்கப்பட்டது. அது குறித்த நினைவுகளை எம்மோடு இரமீட்டிப் பார்க்க முடியுமா?

சுதீர் மிஸ்ரா சீரியஸ் மென் என்ற தலைப்பிலேயே இந்தியில் இந்தப் படத்தை இயக்கி வெளியிட்டார் (2020) என்பதும், அவர் பல படங்களைச் சிறப்பாக இயக்கியவர் என்பதும் தெரியும். மற்றப்படி அதற்கு மேல் எனக்குச் செய்தி எதுவும் தெரியாது. அந்தப் படத்தைக் காணும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும், நல்ல வரவேற்புப் பெறும் என்பது எனக்கு அந்த நாவலை மொழிபெயர்த்தபோதே தெரியும்.   வண்ணதாசனுக்கும் எனக்கும் விருதுகள் ஒரேசமயத்தில் தரப்படவில்லை. எனக்கு மொழிபெயர்ப்புக்கான விருது அகர்தாலாவில் தனியாக அளிக்கப் பட்டது. அவருக்கு தில்லியில் அளித்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அக்காலப்பகுதியே குழப்பமானதாக இருந்தது. ஏன் என்று எனக்கு இப்போது நினைவில்லை.

15. அண்மைக்கால மொழிபெயர்ப்புகள் பல குறைபாடுகள் உடையதாகவே வருகிறது. குறிப்பாக வியாபாரச் சந்தைகளை மையப்படுத்தி இம் மொழிபெயர்ப்புக்கள் செய்யப்படுவதால் தரமான மொழிபெயர்ப்புகளை வாசகர் கண்டடைய முடியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு உண்மையே என்பதை அனுபவத்தில் என்னால் உணர முடிகிறது. குறிப்பாகச் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகச் சந்தை நிகழும்போது இது பெரிய வேதனையையே ஏற்படுத்துகிறது. கிழக்கு போன்ற பெரிய பதிப்பகங்கள் பல தாறுமாறாக மொழிபெயர்ப்பு நூல்களை, அவற்றின் தேவை தரம் தகுதி பற்றிய எண்ணம் எதுவுமின்றி வெளியிடுகின்றன. விற்கும் என்று தெரியவந்தால் போதும், வெளியிட்டு விடுவார்கள்! இன்றுள்ள மோசமான நிலைக்குப் பதிப்பகங்களே காரணம்.

மொழிபெயர்ப்பாளர்கள் பதிப்பாளர்களை நம்பியே வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஒரு நல்ல நூலை மொழிபெயர்த்தால்கூட, இது மார்க்கெட்டில் நன்றாகப் போகுமா என்று “ஆராய்ந்து தெளிந்த” பிறகே பதிப்பாளர்கள் எங்களிடமிருந்து பிரதியைப் பெறுகின்றார்கள். அல்லது

சந்தையை முன்வைத்து, இந்தக் குறிப்பிட்ட நூலை மொழியாக்கம் செய்யமுடியுமா என்றுதான் பதிப்பகத்தினர் எங்களைக் கேட்கிறார்கள். சந்தையில் விற்காவிட்டால் நாங்கள் ஏன் வெளியிட வேண்டும் என்பது அவர்களின் கேள்வி. நூலின் தற்காலத் தேவை பற்றியோ, தரம் பற்றியோ அவர்களுக்கு அக்கறை இல்லை.    அண்மையில் இந்த நிலை மாற வாய்ப்பில்லை என்பதுதான் என் கருத்து. ஒரு நூலைப் பதிப்பித்தல் என்பது அதிகமாகப் பணம்போட்டு, விற்கும் என்ற எதிர்பார்ப்பை நம்பிச் செய்யப்படும் ஓர் ஊகவணிகம். இதில் மொழிபெயர்ப்புக்குச் சாதகமான நிலை நிலவவில்லை என்பது உண்மை.


பூச்சியமும் ஒன்றும்

Nothing and Being

மனித வாழ்க்கை என்பது என்ன அதன் அர்த்தம் என்ன என்றெல்லாம் பெரிய அறிஞர்கள் விவாதித்திருக்கிறார்கள். பல மதங்களும் அதைப் பற்றிப் பேசுகின்றன.

என்னைப் பொறுத்தவரை

மனித வாழ்க்கை என்பது

பூச்சியத்திலிருந்து தொடங்கி ஒன்று ஆகி பிறகு மீண்டும் பூச்சியமாகவே ஆகிப் போவது. அவ்வளவுதான்.

குழந்தை பிறக்கும்போது பூச்சியமாக இருக்கிறது. மிருகங்களைப் போலத் தன் உண‍வைத் தேடவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்கூட இயலாமல் இருக்கிறது. பிறகு ஒன்று ஆகிறது, ஒன்றாகிறது. காலப் போக்கில் மீண்டும் தேய்ந்து ஒன்று என்ற நிலையிலிருந்து கீழே குறைந்து சாவில் பூச்சியமாகிறது.

அவ்வளவுதான் மனித வாழ்க்கை. இதில் எதற்கும் அர்த்தம் இல்லை. ஒன்று என்பது ஒரு இழிவான பணிபுரியும் தொழிலாளியாகவும் இருக்கலாம், மந்திரம் ஓதித் தன்னைப் பெரிய அறிவாளியாகக் காட்டிக் கொள்ளமுயலும் உயர்சாதியினனாகவும் இருக்கலாம். எல்லாம் ஒன்றுதான். மீண்டும் அனைவரும் பூச்சியத்தை நோக்கிய பயணத்தைச் சற்று முன்னாலோ பின்னாலோ தொடங்கிவிடுகிறார்கள் என்பது நிதரிசனம். இதில் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் கற்பித்துக் கொண்டு தன்னைப் பெரியவன் என்றோ மிகச் சிறியவன் என்றோ கருதிக்கொள்பவர்களைப் பார்த்து பூச்சியம் சிரிக்கிறது.


இயற்கையை நேசியுங்கள்

1964ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்-இடம் ஒருமுறை "நீங்கள் நாளை இறந்துபோகப் போவதென அறிந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள். அவர் பதில்: "ஒரு மரம் நடுவேன்".  மரம் வாழ்வின் குறியீடு.  "நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப் பாறுவார்கள்" என்கிறது ஒரு பழமொழி. சீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: "நிழல்தர மரமில்லையா? சூரியனைக் குற்றம் சொல்லக்கூடாது, உன்னைத் தான் சொல்லவேண்டும்". மரங்கள் இயற்கையின் பகுதி, மனிதனின் ஊட்டத்தின் மூலப் பொருள். ஆனால் இயற்கை மரங்கள் மட்டுமல்ல, அதற்கு மேலும்தான். ஞாயிறு, நிலவு, நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ள வானம்; கடல்கள், ஏரிகள், ஆறுகள், ஓடைகள், அருவிகள்; மலைகளும் குன்றுகளும்; நாம் வசிக்கும் இந்த மண்; நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று; நம்மிடையே வாழும் உயிரினங்கள்-இவை யாவும் நாம் வாழ்வதை அனுமதிக்கின்ற, நம் வாழ்க்கையைத் தொடரவிடுகின்ற இயற்கைக் கூறுகள். ஆகவே இயற்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் நம் மற்றும் நம் எதிர்காலச் சந்ததி களின் வாழ்க்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் போன்றதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாக, நம்மை எவ்விதம் மாற்றிக்கொள்வது என்று அறிவதற்கு முன்னா லேயே இன்று நம்மில் பலர் மிகவேகமாக இயற்கைச் சூழலை மாற்றிவிட்டார்கள். இயற்கைக்கு அழகாக இருக்க நம் உதவி தேவையில்லை, நமக்குத்தான் இயற்கையின் உதவி தேவை. நாம் வாழும் இந்த உலகமாகிய கிரகத்தின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால், ஒரு பறவையைப் பிடிப்பதற்கு முன்னால், ஒரு குன்றினைத் தரைமட்டமாக்குவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்கவேண்டியது இது: "இயற்கை தான் நமது வாழ்க்கை".         
ஒரு நாட்டின் தலைவர் ஒருமுறை கூறினார்: "மனிதன் நிலவுக்குப் போய்விட் டான், ஆனால் ஓர் எரிநிறப்பூக்கொண்ட மரத்தையோ, ஒரு பாடும் பறவையையோ எப்படி உருவாக்குவதென்று இன்னும் அவனுக்குத் தெரியாது. இதே மரங்களையும் பறவைகளையும் எதிர்காலத்தில் அவாவுவதற்குக் கொண்டுசெல்கின்ற, மாற்ற முடி யாத தவறுகளை நாம் செய்யாமல் நம் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்". 
மனித உறவுகளைப் போல, இயற்கைமீதான நமது நேசமும் ஆழமாகவும் காலங்காலத்துக்குத் தொடர்வதாகவும் இருக்கவேண்டும். இங்குதான் நாம் ஆஸ்திரே லியப் பழங்குடி இனத்தவர்களிடமிருந்து-அவர்கள்தான் உலகின் மிகப் பழமையான மிக நீண்ட கலாச்சாரத்தை உடையவர்கள்-கற்கவேண்டி யிருக்கிறது. ஞானத்திலும் ஆழ்நோக்கிலும் வளமான ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அவர்கள், அந்தப் பழங்குடியினர், இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்க மான தொடர்பின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்-"நாங்கள் மரங்களை வெட்டுவ தில்லை, பட்ட மரங்களைத்தான் பயன்படுத்துகிறோம்." 

“விண்ணுலகும் பூமியும் நானும் ஒன்றாய் வாழ்கிறோம்” என்று ஒரு டாவோ பொன் மொழி சொல்கிறது. டாவோ போதனையின்படி, இயற்கையின் எல்லாக் கூறுகளுக் கிடையிலும் ஒருங்கிசைவு வேண்டும். அதனால்தான் சீன நிலத்தோற்ற ஓவியங்களில் நாம் ஆறுகளையும் ஏரிகளையும் மலைகளையும் மட்டுமே காணமுடிகிறது, மனிதர்கள் அதற்குள் ஆதிக்கம் செய்வதில்லை.

இயற்கையை நேசி, அதனுடன் ஒருங்கிசைவுடன் வாழ், அதைப் பாழாக்கவோ அழிக்கவோ செய்யாதே.

வாழ்க்கை என்பது என்ன? அது இரவில் ஒளிரும் ஒரு மின்மினிப்பூச்சியின் ஒளிவீச்சு...குளிர்காலத்தில் ஓர் எருமை விடும் மூச்சு...சூரியமறைவின்போது புல்லின் மீது விரைந்து சென்று மறையும் ஒரு நிழல்.

-அமெரிக்க இந்தியப் போர்வீரர்.


இயற்கை

பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, ஒவ்வொரு நோயை குணப்படுத்தவும் ஒரு மூலிகை இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது.

-அமெரிக்க இந்திய முதியவர் ஒருவர்

நீரற்ற பாலை, நோய், பனிப்பொழிவுச் சரிவுகள், இன்னும் ஆயிரம் கடுமையான, வீழ்த்தக்கூடிய புயல் வெள்ளங்களிலிருந்தும் இந்த மரங்களைக் கடவுள் பாதுகாத்திருக்ஆறார், ஆனால் முட்டாள்களிடமிருந்து அவரால் காக்க இயல வில்லை. 

-ஜான் மூர்

இயற்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை; நம்மை நாம்தான் எப்போதும் ஏமாற்றிக்கொள்கிறோம்.

-ரூஸோ

காடுகளில் விலங்குகள் குறைந்துவருகின்றன. ஆனால் அவை நகரங்களில் அதிகரித்துக் கொண்டுள்ளன.

-மகாத்மா காந்தி

பூமியின் அழகைப் பற்றிச் சிந்திப்பவர்கள், தங்கள் உயிர் இருக்கும்வரை நீடிக்கக் கூடிய வலிமை இருப்புகளைக் கண்டறிகிறார்கள்.

-ரேச்சல் கார்சன்


தீபாவளி

“நான் சிரித்தால் தீபாவளி” ஆம், பலபேருக்கு, அவர்கள் சிரிக்கின்ற–மகிழ்ச்சியோடிருக்கின்ற ஒரு நாள் எதுவாக இருப்பினும் அதுதான் தீபாவளி.

நான் தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமில்லை. உண்மையில் தீப-ஆவளி, அல்லது தீப வரிசை என்றால் இன்னும் சில நாட்கள் கழித்துவரப்போகும் கார்த்திகை தீபம்தான். கார்த்திகையைச் சங்ககாலத்திலிருந்தே கொண்டாடி வருகிறோம். இடையில் “நான்தான் தீப வரிசை” என்று எந்தக்காலத்தில் இந்த வடநாட்டு தீபாவளி புகுந்தது என்று தெரியவில்லை. அநேகமாக நாயக்கர் காலத்தில்தான் நிகழ்ந்திருக்கக்கூடும்.

நரகாசுரன் என்பதையும் நான் நம்புவதில்லை. நம் கண்ணெதிரே ஆயிரம் நரகாசுரர்கள் இருக்கும்போது கற்பனையில் ஒரு நரகாசுரன் எதற்கு? நரக அசுரன் என்றால் அப்புறம் சுவர்க்க அசுரன் ஒருவன் இருந்தானா?

இதை வடநாட்டவர்கள் தாண்டிராஸ் என்று ஐந்துநாள் கொண்டாடுகிறார்கள். என்ன என்ன கட்டுக்கதைகளோ அதன் பின்னால்.

என்னைப் பொறுத்தவரை வருடத்தில் ஒருநாள் நான்கரை ஐந்து மணிக்குள் குளித்துவிட்டு ஏழரை மணிக்கு போளி வ‍டை தோசை என்று சாப்பிடுவது நன்றாகத்தான் இருக்கிறது. இனிப்புகள் வாங்குவது பெரும்பாலும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்களுக்காக, நண்பர்கள் உறவினர்கள் வந்தால் தருவதற்காக.

என் சின்ன வயதில் எங்கப்பாவும் நாங்களும், அவர் இரு தம்பியர் குடும்பத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடிய பல தீபாவளி தினங்கள் ஞாபகம் இருக்கின்றன. அந்தக் கூடுகை, சிரிப்பு, மகிழ்ச்சி இருந்ததே, அதுதான் தீபாவளி. ஆனால் தீபாவளி என்றாலே பெரும்பாலும் மழையும் சேர்ந்தே ஞாபகம் வரும். நான் கொண்டாடிய மழையற்ற தீபாவளிகள் குறைவு. எல்லாரும் பட்டாசு வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக்கொண்டிருப்போம்.

ஹ்ம்…ம்…இதெல்லாம் பழைய காலம். நான் பெரியவனாகி சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு குடும்பத்தோடு, என் தம்பி தங்கையரோடு கொண்டாடிய தீபாவளிகள் மிகவும் குறைவு. காரணங்கள் பல.

தீபாவளி என்றாலே ஜாலி என்றுதான் அர்த்தம்! தீபாவளி கொண்டாடக்கூடாது என்று தமிழ்நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்…ஆனால் இந்தக் குதூகலம், சிரிப்பு, மகிழ்ச்சி, ஒன்று சேர்தல் இதற்காகக் கொண்டாடுங்கள் ஐயா…ஏன் நரகாசுரனை நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு இந்துப் பண்டிகையாக தீபாளியை ஒரே ஓர் ஆண்டுகூடக் கொண்டாடியதில்லை. என் வீடும் அப்படித்தான். அது ஒரு மகிழ்ச்சித் திருநாள், அவ்வளவுதான். பிள்ளைகள் பட்டாசு வெடிக்க, மத்தாப்பு கொளுத்த, இல்லாதோர் புத்தாடை உடுத்த, ஆண்டில் ஒருநாளாவது பலபேர் இனிப்புகள் ருசிக்க…

திருச்சியில் இருந்தவரை தீபாவளிக்கு முன்னாட்களில் ஒரு நாள் சின்னக் கடைத் தெருவுக்குச் சென்று வருவோம். கூட்டம் தள்ளும். தப்பிப் பிழைத்துவருவது கடினம். (சென்னை ரங்கநாதன் தெரு அனுபவம் எனக்கு இல்லை.) ஒவ்வொன்றாக ஆண்டுகளும் அனுபவங்களும் கடந்து செல்கின்றன…

இப்போது 73 முடிந்துவிட்டது. இன்னும் எத்தனை தீபாவளிகளைப் பார்க்கப் போகிறேனோ நான்… மீண்டும் சொல்கிறேன், கட்டுக் கதைகளை, புராணங்களை விட்டு விடுங்கள்…”நாம் அனைவரும் சிரிக்கும் நாளே தீபாவளி!”


பூரணச்சந்திரன் அறக்கட்டளை – மூன்றாம் நாள் பயிலரங்கம்

முதலில் தமிழ்க் கவிதை பற்றிப் பேரா. இராமசாமியின் உரை சிறப்புற அமைந்தது.

பிறகு இன்றைக்குத் தேவையான எழுத்து என்ற குழு விவாதம் நடைபெற்றது. இதில் திரு. கிராமியன், பிஎச்இஎல் பொறியாளர் திரு. விவேக், திரு. விக்டர் ஆல்பர்ட் மூவரும் பிறரும் சிறந்த முறையில் பங்கேற்றனர்.

பிறகு சமகாலத் திரைப்படம் பற்றியும் அதை நோக்கும் விதம் பற்றியும் திரு. இராமசாமி சுவையாக எடுத்துரைத்தார். இடையில் மாணவர்கள் நேற்று எழுதிவந்த கவிதைகளையும் மதிப்பீடு செய்தார்.

மதிய உணவுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரிப் பேராசிரியர் ராமராஜ் மாணவர்களைத் திறம்பட நடிக்க வைத்துத் தம் நாடகத் திறனை வெளிப் படுத்தினார். அகஸ்ட் போவாலின் கருத்துகள் அடிப்படையில் (இன்விசிபிள் தியேட்டர்) அந்த நாடக ஆக்கம் அமைந்தது சிறப்பாகும்.

தேநீருக்குப் பிறகு நிறைவு விழா. முதல்வர் வர இயலாததால் தமிழ்த்துறைத் தலைவர் திரு. இராஜ்குமாரே மாணவர்களுக்குப் பரிமாற்ற முறையில் சான்றிதழ்களை வழங்கினார். திரு. சிவசெல்வன் நன்றிகூற மூன்றுநாள் படைப்பாக்க நிகழ்ச்சி நன்கு நடந்தேறியது.

மூன்று நாள் அமர்வுகளையும் சிறப்புற ஏற்பாடு செய்தவர் பேரா. சாம் கிதியோன். உணவு உட்பட, உட்காரும் இடங்கள், அறைகள் உட்பட கவனித்துக் கொண்டார். அவருக்குத் துணையாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உதவி செய்தனர். திரு. சாம் கிதியோனுக்கும் அவருக்குத் துணையாக அமைந்த பேராசிரியர்களுக்கும் தனிப்பட நமது நன்றிகள் உரியன.


பூரணச்சந்திரன் அறக்கட்டளை – இரண்டாம் நாள் பயிலரங்கம்

முதல் அமர்வில் முதல் உரையாகப் பேரா. பூரணச்சந்திரனின் “உரைநடைப் புனைவின் அடிப்படைகள்” என்பது அமைந்தது.

பின்னர் இலக்கியத்தில் உள்ள நுண்அரசியலைப் பற்றி, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களும் பெண்களும் எவ்விதம் படைக்கப்படுகின்றனர் என்பது பற்றிப் பேராசிரியர் காசி. மாரியப்பன் நகைச்சுவை படப் பேசினார்.

அடுத்து காலையில் தமிழ் நாவலைப் பற்றியும் மாலையில் தமிழ்ச் சிறுகதை பற்றியும் திரு. இராமசாமி பேசினார். இடையில் மாணவர்களின் சில படைப்புகளை வாசித்துக் கருத்துரை அளித்தார்.

நேற்று மாணவர்களுக்குத் தந்த பணி சிறுகதை எழுதுவது. அதைச் சிலர் செய்திருந்தனர். ஆனால் சிறுகதை வடிவம் பொதுவாக மாணவர்களுக்குச் சிக்கல் தருவதாகவே அமைந்திருந்தது. பலரும் ஐம்பதாண்டு நிகழ்ச்சிகளை, வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களை எல்லாம் சிறுகதை என எழுதினர்.

அவற்றைப் பூரணச்சந்திரன் விமரிசனம் செய்து எப்படி எழுத வேண்டும் என எடுத்துரைத்தார். திரு. இராமசாமி, ஐந்து தலைப்புகளை அளித்து அவற்றை மறுநாள் கவிதையாக்கி வருமாறு மாணவர்களுக்கு வேலையளித்தார்.